கடந்த மூன்று நாட்களாக, இரவு பகல் பாராமல் ஜெயந்தியைத்தான் அவள் பாடாய் படுத்திக்கொண்டு இருந்தாள். இன்றைக்குத்தான் ஜுரம் கொஞ்சம் குறையவே அவள் விளையாடத் துவங்கவே சொன்னார்.
“நானும் அம்மா கூட தூங்கப் போறேன்” என்ற மிதுனாவோ ஜெயந்தியின் கழுத்தை கரங்களாலும், இடுப்பை கால்களாலும் கட்டிக்கொண்டு விட மறுத்தாள்.
“ஏய்... சொல்ற பேச்சு கேட்கவே மாட்டியாடி? எல்லாம் அப்படியே அப்பனாட்டமே பொறந்துத் தொலைச்சிருக்குதுக. அடி வெளுக்கப்போறேன் பாரு... வாடி...” என்ற கோதையின் குரலில் அத்தனை கோபமும், ஆற்றாமையும் ஒருங்கே இருந்தது.
“கோதை...” என ஜெயந்தியும், “நீ இவளை அழைச்சுட்டு போ... நான் பேசிக்கறேன்” என ருக்மணியும் சொல்ல, ஜெயந்தி தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அவள் செல்லவே, “என்ன கோதை இது?” மருமகளை மென்மையாக கடிந்து கொண்டார்.
“என்னை என்ன அத்த பண்ணச் சொல்றீங்க? குமரனைப் பார்க்கறீங்க தானே? என்னால் முடியலை அத்த... அவன் அப்படி இருக்கான்னா, இவ...” என்றவள் குலுங்கி அழத் துவங்கி விட்டாள். ருக்மணிக்கு அவளது கண்ணீரைக் காண முடியவில்லை.
இந்த வீட்டில் இருக்கும் எந்தப் பெண்களும் நிம்மதியாக இல்லை என அவருக்குத் தெரியும். ஆனாலும் எதுவும் செய்ய இயலாத ஒரு கையறு நிலை... அடுத்த தலைமுறையையாவது நல்லபடியாக வளர வேண்டும் என இவர்கள் நினைத்தார்கள்.
ஆனால் கோதையின் மகன் குமரன், அப்படியே தாத்தாவின் வார்ப்பாக இருந்தான். அதே திமிர், அதே அடாவடிப் பேச்சு, அதே அடக்குமுறை, அதே அடங்காத தன்மை. அவனை வளர்த்தது கோபால் ஆயிற்றே, அப்படி இருக்கையில் அவன் வேறு எப்படி இருப்பான்?
வயது பன்னிரண்டுதான்... கோதையின் பதினெட்டாவது வயதில் அவன் அவளது மடியில் தவழ்ந்தான். ஒன்றுமே அறியாத வயது... அவளே குழந்தை, அப்படி இருக்கையில் அவள் எப்படி இன்னொரு குழந்தையை வளர்ப்பாள்?
அவளுக்கு ருக்மணி முழு ஆதரவாக துணையாக இருந்தார் தான். ஆனாலும் குமரனின் உடம்பில் ஓடும் ரத்தம் கோபாலின் மகனுடையது ஆயிற்றே. இந்த வயதுக்கே தாயை மதிப்பது இல்லை. தங்கைமேல் பாசம் இல்லை, எல்லாம் அதிகாரம் தான்.
அவனை அடித்து வளர்க்கலாம் என்றால் கோபால் அதற்கு விட்டதே கிடையாது. “ஆம்பளைப்பிள்ளை அப்படித்தான் இருப்பான்” அவன் காதுபட சொல்லி வளர்த்தால், அவன் எப்படி உருப்படுவான்? தான் செய்வது, பேசுவது எல்லாம் சரிதான் என்ற ஆணவம், செருக்கு அவனுக்கு அப்பொழுதே இருந்தது.
கோதைக்கு மனதே விட்டுப் போனது. அதை எண்ணி அவள் அழ, “நீ உன் மகனைக் கொண்டு மகளையும் அளக்கறது சரி கிடையாது கோதை. கொஞ்சம் பிடிவாதக்காரிதான். ஆனால் எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கறவ அவ.
“சொல்லிக் கொடுத்தால் புரிஞ்சுப்பா. பாசத்தால் அவளை அடக்கு, இப்படி அதட்டிகிட்டே இருந்தால் அவளும் உன்கிட்டே ஒட்டாமலே போய்டுவா” ருக்மணி சொல்ல, கோதை இன்னும் அழுதாள்.
அவளது முப்பது வயதுக்கு பன்னிரண்டு வயது பையனின் தாய் என அவள் இருக்க, வாழ்க்கை அதிக பயத்தைக் கொடுத்தது. “அத்த, குமரன் அவங்க அப்பா மாதிரி வளர வேண்டாம்...” அவரிடம் கெஞ்சினாள்.
“நாம என்ன செய்ய முடியும் கோதை? போர்டிங் ஸ்கூல் போடலாம், டீச்சர்ஸை வைத்து கண்டிச்சும் பார்த்தாச்சு. அவன் எதுக்குமே அடங்காமல் இருக்கான். எனக்கும் பயமாத்தான் இருக்கு... நம்ம கையை மீறிப் போகும் விஷயத்துக்காக நாம எவ்வளவுதான் கவலைப்படுவது?
“நீ இப்படி அழுதால் எல்லாம் சரியாப் போய்டுமா? வேலவன் என்ன சொல்றான்? அவன்கிட்டே சொல்லிப் பார்த்தியா?” மகன்கள் எல்லாம் அவர் கையை மீறிப் போய் பல வருடங்கள் ஆகி இருக்க, ருக்மணி அனைத்தையும் வேடிக்கை பார்க்கத் துவங்கி இருந்தார்.
“என்மகன் என்னைப்போல்தான் இருப்பான்... நீ உன் வேலையை மட்டும் பாருன்னு சொல்றார் அத்த. அவரோட அரசியல் வாரிசாம், இந்த நெருப்பும், வேகமும் அவனுக்கு வேணும்னு சொல்றார்” என்றவளுக்கு தன் கண் முன்பே, தன் மகன் கெட்டு சீரழிவதைக் காண்பது மிகக் கொடுமையாக இருந்தது.
“என்னால முடியலை அத்த...” என்றவள் இன்னும் அழுதாள்.
‘ஆண்டவா, இந்த கண்ணீரும் கவலையும்தான் எங்களுக்கு விதித்ததா? நாங்க எல்லாம் சந்தோஷமா, நிம்மதியாக வாழத் தகுதி இல்லாதவர்களா? இது மாறவே செய்யாதா? ஏதாவது அதிசயம் நிகழாதா?’ என உள்ளுக்குள் வெதும்பிப் போனார்.
“எல்லாம் சரியாப் போய்டும் கோதை... எந்திரி, அழாதே...” என்றவருக்குத் தெரியாது... எல்லாவற்றையும் சரி செய்யக் கூடியவன் தன் ஆட்டத்தை துவங்கி விட்டான் என. ஆனால் அப்படி சரியாகும் விதம் இதைவிடக் கடினமான கட்டத்தை கடந்தால் மட்டுமே நிகழும் என அவருக்கு யார் சொல்வது?
இங்கே தன் வாழ்வில் நடக்கக் காத்திருக்கும் மாற்றங்கள் எதுவும் தெரியாமல் தோழிக்கு அழைத்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. அவளது அழைப்பை ஏற்றவளோ, “உனக்கு நூறு ஆயுசு ஷாலு. நானே உனக்குக் கூப்பிடணும்னு நினைச்சேன்” அவள் சொல்ல, ஆர்வமானாள்.
“என்னன்னு சொல்லு ரூபி” என்றாள்.
“இல்ல, நீதான் கால் பண்ண, நீ முதல்ல சொல்லு”.
“நிக்சோ கம்பெனியில் இருந்து எனக்கு இண்டர்வியூவுக்கு வந்திருக்கு” அவள் சொல்ல,
“என்ன? உனக்குமா?” என்றால் ரூபி.
“உனக்குமான்னா... அப்படின்னா... ரூபி நிஜமாவா? உனக்கும் வந்திருக்கா?” உற்சாக கூச்சலிட்டாள்.
“ஆமா... நாளைக்கு வரச் சொல்லி இருக்காங்க. உனக்கு...?” என்றாள் ரூபி.
“எனக்கு அதுக்கு அடுத்த நாள் வரச் சொல்லி இருக்காங்க”.
“ஓ... ஆனா நாம ஒரே போஸ்ட்க்கு தானே அப்ளை பண்ணி இருந்தோம்?” ரூபி சந்தேகமும், குழப்பமும் கலந்த குரலில் கேட்டாள்.
“அட... ஆமா... என்னன்னு தெரியலையே...?” வைஷாலியும் குழம்பினாள்.
“எது எப்படியோ... யாருக்கு வேலை கிடைத்தாலும் சந்தோசம் தான் ஷாலு. ஆனா என்ன... நாம ரெண்டு பேரும் பிரிய வேண்டி இருக்குமேன்னு நினைச்சால்தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு” என்றாள்.
அதைக் கேட்ட வைஷாலிக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று. “நாம அப்படி பிரிய வேண்டாம் ரூபி... எனக்கு இருக்கறது இன்னும் ஒரு வருஷம் தான்... அதுக்குள்ளே இப்படி...?” வைஷாலி சட்டென யாரிடமும் பழகிவிட மாட்டாள்.
பழகத் தெரியாமல் இல்லை... தன்னால் அவர்களுக்கு எந்தவிதமான தொல்லையும் வந்துவிடக் கூடாதே என ஒதுங்கியே இருப்பாள். ஆனால் ரூபியோடான அவளது நட்பு சின்னதாகத் துவங்கி, பெரிதாக வளர்ந்துவிட்டது. ரூபி பெரிதாக எதையும் தோண்டி, துருவி கேட்க மாட்டாள் என்பதாலேயே அவளோடு தாராளமாகப் பழகினாள்.
அப்படி இருக்கையில்... இந்தப் பிரிவு அவளை வேதனைப்படுத்தியது. “என்ன ஷாலு இது? மிஞ்சிப்போனால் கால்மணி நேரத்தில் பார்க்கற தூரத்தில் இருக்கறோம். வீக் என்ட் ஆனால் பார்த்துக்கலாம், பேசிக்கலாம்... இப்படி அப்சட் ஆகாதே” தனக்கும் வருத்தம்தான் என்றாலும் அவளை ஆறுதல் படுத்தினாள்.
“சரி... ரூபி வீட்டுக்கு வர்றியா? இன்டர்வியூவுக்கு கொஞ்சம் ப்ரிப்பேர் பண்ணிக்கலாம்?” அவள் அழைக்க, ரூபியும் அவள் வீட்டுக்கு வந்தாள். அன்று முழுவதும் தோழியர் இருவரும் அந்த கம்பெனியைப் பற்றி ஆய்ந்து, எந்த பொசிஷன் எனத் தெரிந்து அதற்கு ஏற்றவாறு தயார் ஆனார்கள்.
அது ஒரு அமெரிக்கன் பேஸ் கம்பெனி, அவர்கள் பல விதமான தொழில்களில் எல்லாம் ஈடுபடுவது தெரிந்தது. மூன்றாவது தலைமுறை ஆட்கள் அதை நடத்திக் கொண்டிருக்க, அனைத்தையும் ஆய்ந்து தயார் செய்து கொண்டார்கள்.
‘குவாலிட்டி இஞ்சினியர்’ போஸ்டிங் என்பதால், ஏற்கனவே அந்த வேலையைப் பார்த்துக் கொண்டும் இருந்ததால் இரு பெண்களுக்கும் பெரும் நம்பிக்கை இருந்தது.
இருவரும் நேர்முகத்தேர்வை குறித்த நாட்களில் சந்தித்து, இருவருமே நல்லபடியாக, திருப்திகரமாக செய்திருப்பதாகச் சொன்னார்கள்.
‘யாருக்கு அந்த வேலை கிடைக்கும்?’ என இருவரும் குழம்பித் தவிக்க, அடுத்த ஒரு வாரத்தில் இருவரும் தேர்வு செய்யப் பட்டிருப்பதாக மெயில் வந்தது. வேலையில் சேர்வதற்கு முன்பாக, இருவரும் வந்து கான்ட்ராக்டில் சைன் செய்யச் சொல்லி அழைத்து இருந்தார்கள்.
அவர்கள் இருவருக்கும் ஒன்றாகவே அந்த அழைப்பும் வந்திருக்க, இருவரையும் கரத்தில் பிடிக்க முடியவில்லை. அந்த நாளைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
இரண்டு வருட கான்ட்ராக்ட், அதை முறிக்க முயன்றால் பல லட்சங்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும் என ஒரு தொகை குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைப் பார்த்து இரு பெண்களுக்கும் கொஞ்சம் அதிர்ச்சி தான்.
வைஷாலிக்கு ‘இரண்டு வருடங்கள் முடியுமா?’ என்ற சந்தேகம் இருந்தாலும், பணம் கட்ட வேண்டி வந்தால், அப்பொழுது அப்பாவிடம் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்தாள்.
ரூபிக்கு இப்பொழுது உடனே திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை என்பதால் அவள் முழு மனதோடு சம்மதம் சொன்னாள். இரு பெண்களும் சந்தோஷமாக கையொப்பம் இட்டுவிட்டு வெளியே வர, தங்கள் வாழ்க்கையே அந்த கையெழுத்தில் இருப்பது அப்பொழுது அவர்களுக்குத் தெரியவே இல்லை.
பகை முடிப்பான்.........