• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 14.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai

பகுதி – 14.

அடுத்து வந்த நான்கு மாதங்கள் மின்னல் வேகத்தில் கடந்து இருந்தது. வைஷாலியும், ரூபியும் வேலையில் சேர்ந்து முழுதாக மூன்று மாதங்கள் முடிந்து இருந்தது. குவாலிட்டி இஞ்சினியரிங் போஸ்ட்... அந்த பெயின்ட் கம்பெனியோடு மட்டுமல்லாது, அருகே இருந்த வேறு சில நிறுவனங்களும் அவர்கள் பொறுப்பில் விடப் பட்டு இருந்தது.

பெண்கள் இருவருமே உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால், மிகவும் சந்தோஷமாகவே அந்த வேலைகளைச் செய்தார்கள். இருவரும் ஒரே இடத்தில் இருந்தும் வேலைகளைச் செய்வார்கள், இல்லையா இருக்கும் வேலைகளைப் பிரித்துக் கொண்டும் செயல்படுவார்கள்.

இந்த நான்கு மாதங்களில் நடந்த இடைத் தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி பெற்று கோபாலின் புகழை சற்று மங்கச் செய்து இருந்தது. எப்பொழுதுமே குறிப்பிட்ட தொகுதிகளில் அவரது ஆட்சி தான் இருக்கும்.

அவரை மீறி யாராலும் எதுவும் எப்பொழுதுமே செய்ய முடிந்தது இல்லை. இந்த முறை அவருக்கு அடுத்தடுத்து பலமான அடி விழுந்து இருந்தது. இப்படியான சறுக்கல்கள் எல்லாம் அவருக்கு வந்ததே இல்லை.

அப்படியே ஒரு சின்ன சலசலப்பு இருந்தாலும், அது வெளியே தெரியும் முன்பாக அடக்கி விடுவார். அப்படி இருக்கையில், இப்பொழுது தனது தீம் பார்க்கை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என முயன்றார். ஆனால தேர்தல் நேரம் என்பதால் அதில் முழுதாக கவனம் செலுத்த முடியவில்லை.

ஒன்று போய் அடுத்த பிரச்சனை வந்தால் சமாளித்து இருப்பார். ஆனால்... அவர் ஒரு பிரச்னையை முடிக்கும் முன்பே அடுத்து, அதற்கு அடுத்து... அதற்கும் அடுத்தது என தொடர்ந்து அடி விழ கோபால் விழி பிதுங்கிப் போனார்.

தெளிய வைத்து, தெளியவைத்து அடித்தால் பரவாயில்லை. தெளிய விடாமலே அடித்தால் அவரும் என்னதான் செய்வார்?

சாதாரண நேரமாக இருந்திருந்தால் இரண்டே வாரங்களில் தீம் பார்க்கை திறந்திருப்பார். பணம் கொடுத்து, பத்திரிக்கைகளின் கண்ணைக் கட்டி, அவ்வளவு ஏன் எதிர்கட்சிக்கே கூட தண்டம் அழுது இருப்பார்.

ஆனால் இடைத்தேர்தல் வந்துவிட்டதால், பத்திரிகை மட்டுமல்லாது, பொதுமக்கள், எதிர்கட்சிகளின் பிரச்சாரத்துக்கு இவை எல்லாம் வலு சேர்த்துவிட்டது. அதைவிட, அந்த ‘மால்’ விஷயத்தால் தொழிற்சங்கங்கள் அனைத்தும் பணம் தராமல் கை விரித்து விட்டார்கள்.

அவர்களது ஆதரவும் இல்லாமல் போக, அவரிடம் இருந்த பணத்தை இறக்கி ஆக வேண்டிய கட்டாயம். முதலமைச்சரும் நிதி வழங்க மறுக்க, தன் கௌரவத்தை நிலைநாட்ட வேண்டி அவரே பணத்தையும் இறக்க வேண்டிய சூழல் உருவானது.

அப்படி சென்ற பணங்களும், தேர்தல் அதிகார சிறப்பு படைப்பிரிவில் சிக்கிக் கொண்டது. அதில் கோடிக்கணக்கான பணம் நஷ்டம் என்பதை விட, பத்திரிக்கைகளில் எல்லாம் முதல் பக்கத்தில் அவரது பெயர் நாறிப் போனது.

அடிமேல் அடி என்பதுபோல், பிரச்சாரத்துக்குச் சென்ற தொகுதிக்கு உள்ளேயே செல்ல முடியவில்லை. அங்கே இருந்த மக்கள் அனைவரும் அந்த வேட்பாளரை துரத்தி அடித்தார்கள். முதலமைச்சரே அழைத்து, விட்டுவிடுமாறு சொல்லிவிட்டார்.

அந்த அளவுக்கு முதலமைச்சர் வரைக்கும் பிரஷர் போக, கோபாலுக்கு அத்தனை தலையிறக்கமாகப் போயிற்று. அப்படியும் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என முயன்றார். ஆனால் டெப்பாசிட் கூட கிடைக்காமல் அவரது கட்சி ஆள் தோற்றுப் போனான்.

கோபால், அவரது மூன்று மகன்கள் என அனைவரும் கொதித்துப் போனார்கள். அந்த மால் கட்டி எழுப்பப்படாமல் இருக்க, எத்தனை குடைச்சல் கொடுக்க முடியுமோ அத்தனையும் முயன்று பார்த்தார்கள். ஆனால் அது ஒரு தனித் தீவாகவே செயல்பட்டுக் கொண்டு இருந்தது.

எந்த அரசு அதிகாரிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி, யாருமே அந்த மால் விஷயத்தில் ஒரு சின்ன துரும்பைக் கூட நகர்த்த மறுத்தார்கள். எனவே இவர்களே இறங்கி வேலை செய்தார்கள். கட்டுமான பொருட்களை அங்கே செல்ல விடாமல் தடை செய்வது, பொருட்கள் கிடைக்க விடாமல் செய்வது என எத்தனையோ செய்தார்கள்.

ஆனால் அதில் எல்லாம் இவர்களுக்கே ஆட்கள் இழப்பு ஏற்பட்டது. கட்டுமான பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைத் தடுக்க முயன்றால், அவர்கள் எல்லாம் கொஞ்சம் கூட அசராமல் அவர்கள் மீதே வாகனங்களை ஏற்றிச் செல்ல முயன்றார்கள்.

அதை விட மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் அப்படி வரும் லாரிகளில் ஆயுதம் ஏந்திய படை இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியமே. அவர்கள் வெறுமே ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவது எல்லாம் இல்லை. தயவே இல்லாமல், கை, கால், தோள்பட்டை என தடுப்பவர்கள் மீது குண்டுகளை இறக்கியும் இருந்தார்கள்.

‘இதென்ன ஆந்திராவா? இப்படியெல்லாம் இங்கே நடக்குது?’ என கோபாலின் மகன் MLA வேலவன் முதலமைச்சரிடம் சென்று முறையிட்டான்.

ஆனால் அவனுக்கு கிடைத்த பதில் ஒன்றுதான்... “அந்த மால் விஷயத்தில் இருந்து ஒதுங்கி இரு” என முதலமைச்சரே சொல்லி அனுப்பினார். அது வேறு எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது போன்ற எதிர்வினையை மட்டுமே கொடுத்தது.

கன்னியாகுமரி மாவட்டமே பற்றி எரியாத குறைதான். அனைத்து கண்களும் அவர்கள் மீதே இருக்க, எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் கொதித்துக் கொண்டு இருந்தார்கள். அரசியலில் மீண்டும் தங்கள் பலத்தைக் காட்டியாக வேண்டிய நிலை.

ஆனால் இன்னும் எலக்ஷனுக்கு இரண்டு வருடங்கள் இருக்க, அது வரைக்கும் அடங்கி இருப்பதை தவிர வேறு வழி இல்லை. அரசியல் என்பது அவர்களுக்கு வேட்டி போன்றது. தங்கள் மானம், கௌரவம் என அனைத்தும் அதில் இருப்பதாக அவர்கள் நினைத்திருக்க, இந்த தோல்வி அவர்களை அசைத்துப் பார்த்திருந்தது.

அவர்கள் தங்கள் போராட்டத்தில் இருக்க, பெர்சனல் வாழ்க்கையைப் பற்றிய நினைப்பே அவர்களுக்கு இருக்கவில்லை.

“அந்த ஷாப்பிங் ‘மால்’லைக் கட்டுவது எவன்டா? அது எனக்குத் தெரிஞ்சாகணும். எப்படியாவது அதை நாம கையகப்படுத்தியே ஆகணும்” வேலவன் தன் தம்பியிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

“அதைக் கேட்டால் யாருமே சொல்ல மாட்டேங்கறாங்க. நானும் யார் யாருக்கோ பணம் கொடுத்துப் பார்த்துட்டேன். வடக்கே இருந்து வந்த யாரோதான் கட்றதா பேசிக்கறாங்க. ஆனால் யாருக்கும் தெளிவான விவரம் தெரியலை” முத்துப்பாண்டி சொல்லிக் கொண்டிருந்தான்.

“மூணு வருஷ ப்ராஜெக்ட்... வேலை இருபத்திநான்கு மணி நேரமும் நிற்காமல் நடக்குது. மூணு ஷிப்ட் போட்டிருக்காங்க... வேலை நடக்கும் வேகத்தைப் பார்த்தால், ஒன்றரை வருஷத்துக்கு உள்ளேயே வேலை முடிஞ்சுடும்.

“ஏன்னா அத்தனை பேர் வேலை பார்க்கறாங்க... சைட் இஞ்சினியரே நாலு பேருக்கு மேலே இருக்காங்க. பார்க்கிங் பிரச்சனை வரக் கூடாதுன்னு, கட்டிடத்துக்கு கூடவே பார்க்கிங் ப்ளான் பண்றாங்க.

“நான் நம்ம ஆட்கள் ரெண்டு மூணுபேரை அனுப்பி பார்த்துட்டுதான் சொல்றேன். உளவு பார்க்க போறவங்களை எல்லாம் அவங்க தடுக்கறதே இல்லையாம். பிரச்சனை பண்ணப் போறவங்க யாரா இருந்தாலும், அது பக்கமே போக முடியலை.

“போலீஸ் முதற்கொண்டு, தனியார் செக்யூரிட்டி ஃபோர்ஸ் எல்லாம் யூஸ் பண்றாங்க. அவங்களுக்கு துப்பாக்கி வச்சுக்கவும் பெர்மிஷன் கொடுத்து இருக்காங்க. பிரதமர் வரைக்கும் செல்வாக்கு இல்லாமல் இது நடக்க வாய்ப்பே இல்லை” முத்துப்பாண்டி சொல்ல, அவர்களுக்கு முழி பிதுங்கியது.

இவர்கள் இங்கே இந்த ஆராய்ச்சியில் இருக்க, அதனாலோ என்னவோ வைஷாலி நிம்மதியாக இருந்தாள். அவளைப்பற்றிய பேச்சே அங்கே இருக்கவில்லை. பைரவனுக்கு அந்த ‘மால்’ யாருடையதாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்த பொழுதும் அவர் அதை கோபாலிடம் சொல்லவில்லை.

தங்களது தீம் பார்க் சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் ‘சர்வா’ என்றவன் இருக்கிறான் எனத் தெரிய வந்த பிறகும், அவர்களால் மேற்கொண்டு அவனை நெருங்க முடியவில்லை. கடந்த நான்கு மாதங்களாக அவனைப்பற்றியும் ஏதாவது தெரிய வருமா? என முத்துப்பாண்டி தேடவே செய்தான்.

தேடலின் முடிவிலும் அவனைப்பற்றிய எந்த விவரமும் கிடைக்காமல் போக, ‘ஒரு வேளை குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இருக்குமோ?’ என எண்ணிக் கொண்டான். திரை மறைவில் இருந்து கொண்டு அவர்களை ஆட்டி வைப்பது அவன்தான் என அவர்களுக்குத் தெரியாமலே போனது.

வைஷாலியும் சர்வா என்ற ஒருவனை கிட்டத்தட்ட மறந்து போய்விட்டாள். அந்த நேரம்தான் அவளது மேலதிகாரி அவளை அழைத்து, அவசர வேலையாக மும்பை போகச் சொன்னார். அவள் தனியாகப் போக அவ்வளவு தயங்கினாள்.

அவர்களது அந்த மும்பை ப்ராஞ்சில் இருந்தவனுக்கு ஆக்சிடென்ட் ஆகிப் போக, அந்த இடத்துக்கு உடனடியாக யாராவது சென்றாக வேண்டிய நிலை. ரூபியை அனுப்பலாம் என முயன்றால், அவளுக்கு ஹிந்தி சுத்தமாகத் தெரியாது என அலறிவிட்டாள்.

வைஷாலிக்கு ஹிந்தி நன்றாகவே தெரியும். எழுத படிக்க கூட அவளுக்குத் தெரியும் என்பதால் அவள்தான் சென்றாக வேண்டிய கட்டாயம். அதுவும் இரண்டே நாட்களில் கிளம்ப வேண்டும் எனச் சொல்லிவிட, அவளால் மறுக்கவும் முடியவில்லை.

பைரவனிடம் சொன்னவள், விஷயத்தை பெற்றவளிடம் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாள். ரத்னாவுக்குத் தெரிந்தால் தன்னை உடனடியாக வேலையை விட்டு கிளம்பி வரச் சொல்வார் என்பதால் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாள்.

நிம்மதியாக சென்றுகொண்டிருக்கும் தன் வாழ்க்கையில் எந்தவிதமான குழப்பத்தையும் அவள் ஏற்படுத்திக் கொள்ள தயாராக இருக்கவில்லை.

“அங்கே தனியா சமாளிச்சிடுவியா ஷாலு?” ரூபி சற்று கவலையாகவே கேட்டாள்.

“ஒரு மாசம்தானே ரூபி... அங்கே தங்கறது, திங்கறது... ட்ரான்ஸ்போர்ட் எல்லாத்தையும் அவங்களே பார்த்துக்கறாங்க. பிறகு நமக்கு என்ன கவலை... விடு... இதுவும் ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்” என்றாள்.

தனியாகச் செல்வதில் உள்ளுக்குள் ஒரு சின்ன உதறல் இருந்தாலும், எதையும் எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கையும் அதிகம் இருந்தது. கொஞ்சம் ஆர்வமாகக் கூட இருந்தது எனலாம். அவளது வேலை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றால், தன்னை அவர்கள் தேர்வு செய்திருக்கவே மாட்டார்களே.

அதுவும் ஒரு மிகப்பெரும் வெளிநாட்டு கம்பெனி, ஒரு பெண்ணான அவளது திறமையை இனம் காண்பது எல்லாம் மிகப்பெரிய விஷயம் ஆயிற்றே. எனவே அந்த வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என நினைத்தாள்.

சென்னையில் இருந்து மும்பைக்குச் செல்ல அவளுக்கு விமான டிக்கெட் வழங்கப் பட்டது. வைஷாலி அங்கே சென்று இறங்குகையில், அவளை அழைத்துச் செல்ல வாகனமும் தயாராகவே இருந்தது.

அன்றைக்கே அவள் அலுவலகம் செல்ல வேண்டி இருக்க, அவன் காட்டிய கெஸ்ட்ஹவுசுக்குச் சென்று கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு மதியமே அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டாள். அங்கே சென்று தான் வந்திருக்கும் காரணத்தைச் சொல்ல, சிலர் அவளை வித்தியாசமாக பார்ப்பதுபோல் தோன்றியது.

‘ஒரு வேளை நான் பேசும் ஹிந்தி அப்படி இருக்கு போல?’ என தன்னையே சமாதானம் செய்து கொண்டாள். திடுமென ஒரு பெண் வந்து தங்களை அதிகாரம் செய்வதை எந்த ஆண்கள்தான் விரும்புவார்கள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
அதுவும் அது ஒரு ப்ரொடக்ஷன் கம்பெனி என்கையில், ஷிப்ட் போட்டு வேலைகள் நிற்காமல் நடக்கும். அது ஒரு இன்டர்நேஷனல் பெயின்ட் கம்பெனி. அப்படி இருக்கையில் தரத்தில் எல்லாம் ஒரு சின்ன குளறுபடி வந்தாலும் அது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

‘ஒரு பெண், அதுவும் எங்கிருந்தோ வந்தவள் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டுமா? எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதா?’ என்ற மெத்தனம்தான். அவள் தரத்தை சோதித்து, இவை இந்த அளவில்தான் இருக்க வேண்டும் எனச் சொன்னதை எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

“எங்களுக்குத் தெரியும் மேடம்...” எனச் சொல்லி அவர்கள் வழக்கமாக செய்வதையே செய்தார்கள். ஆனால் அது எக்ஸ்போர்ட் ஆர்டருக்குச் செல்ல, அவர்கள் அனுப்பிய மொத்த சரக்கும் அப்படியே ரிட்டன் வந்தது.

அது சர்வஜித்தின் பார்வைக்கு வர கொதித்துப் போனான். ஆம் அந்த சாம்ராஜ்யம் மொத்தமும், சென்னை ப்ரேஞ்ச் உட்பட மொத்தமும் அவனுடையதே. அந்த கம்பெனி கைமாறிய விஷயம் எல்லாம் வெளி உலகத்துக்குத் தெரியாமலே போயிருந்தது.

கிட்டத்தட்ட மூன்று கோடிக்கும் அதிகமான ஆர்டர் அது. அது அத்தனையும் திருப்பி அனுப்பி வைப்பது என்றால், தாங்கள் தரத்தில் எங்கேயோ கோட்டை விட்டிருப்பது சர்வஜித்துக்கு சர்வ நிச்சயம் தெரிந்து போனது.

உடனடியாக அனைவரையும் அழைத்து உண்டு இல்லை என செய்துவிட்டான். “இதற்கு யார் காரணம்? எனக்குத் தெரிந்தாக வேண்டும்” அவன் சொல்ல, அப்பொழுது வைஷாலியும் அங்கேதான் இருந்தாள்.

‘சர்வஜித்... சர்வா...’ என அவளது இதழ்கள் சன்னமாக முணுமுணுத்தது. அவனது கண்களில் குளிர்கண்ணாடி இருக்க, அவன் யாரைப் பார்க்கிறான் என அவளுக்குத் தெரியவில்லை. எனவே அவள் விடாமல் அவனையே அதிர்வாகப் பார்த்திருந்தாள்.

‘இவர் இந்த கம்பெனியோட முதலாளியா? அப்போ சென்னையில் நான் வேலைபார்க்கும் கம்பெனியோட முதலாளியும் இவரா? நிஜமாகவா? இது எப்போ இருந்து?’ வைஷாலிக்கு மூளைக்குள் வண்டு குடையும் உணர்வு.

கூடவே, ‘இவர்கிட்டேயா மறுபடியும் சிக்கி இருக்கிறேன்? ஆண்டவா... இது என்ன சோதனை?’ அவளது இதயம் முரசு கொட்டியது.

‘இத்தனை மாசமா யார்கிட்டே சம்பளம் வாங்கறோம்? யார்கிட்டே வேலை பார்க்கறோம்னு தெரியாமலேயா இருந்திருக்கேன்?’ எண்ணியவளால் அங்கே நிற்க முடியவில்லை. ஆனால் சூழ்நிலை தனக்கு சாதகமாக இல்லை என அவளுக்கு நொடியில் புரிந்து போனது.

அனைவரும் அங்கே இருந்த வைஷாலியை கை காட்ட, சர்வஜித் தன் நெற்றிக் கண்ணை திறக்காதது ஒன்றுதான் குறை. “என்ன விளக்கம் சொல்லப் போறீங்க மிஸ்... மிஸ்...” என அவன் அவளையே துளைக்கும் பார்வை பார்த்தான்.

அவனது கண்கள் நேரடியாகத் தெரியவில்லை என்றாலும், அவனது முக இறுக்கம் அவளை நடுங்கச் செய்தது. “வை...வைஷாலி சார்...” திணறியவாறு பதில் கொடுத்தாள். அதுவும் அவன் பேசிய ஹிந்தி அத்தனை கச்சிதமாக இருக்க, உள்ளுக்குள் பிரமிப்பு.

“ஆன்சர் மீ வை...வைஷாலி...” அவன் உறும, அவளுக்கு தேகம் நடுங்கியது. அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஆண்கள், அவள் மட்டுமே பெண். அப்படி இருக்கையில் அனைவரின் பார்வையும் அவள்மீதுதான் இருந்தது.

“அது சார்...” அவள் துவங்க,

“இவங்க சும்மா டெம்பரவரியா இங்கே வந்திருக்காங்க சார். இதைப் பார்க்கும் முனிலால்க்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. இவங்களுக்கு அந்த அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது. சீரியஸ்னஸ் தெரியாமல், சும்மா வந்துட்டு போறாங்க” அவளுக்கு கீழே, நேரடியாக இருப்பவன் அதிரடியாகச் சொன்னான்.

வைஷாலிக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. அதென்னவோ எதிரில் இருப்பவன் அனைவருக்கும் சர்வஜித் என்றாலும், அவளுக்கு சர்வாவாகவே தெரிந்தான். அவனிடம் ஒருமுறை பட்ட கஷ்டம் கண்முன் நிழலாட, நிஜத்தில் அவ்வளவு பயந்தாள்.

அன்று அவனது கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் கறை ஆக்கியதற்கே தன்னை அந்த பாடு படுத்தியவன். இன்று கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் என்கையில் தன்னை சும்மா வெறுமே விடுவான் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை.

“உன் பேர் என்ன?” சர்வஜித் டேபிளை பட்டென தட்டி பேசியவனிடம் கேட்க, அவனுக்கு வார்த்தை வரவில்லை. பதில் சொல்லவில்லை என்றால் என்ன ஆகும் என அவனுக்குத் தெரியும் என்பதால், “மோ...மோதிலால் சந்த்...” என்றான்.

“வை... வைஷாலி இல்லையே... அப்போ அவங்க பேசுவாங்க. எக்ஸ்பீரியன்ஸ் இல்லை என்றால் என்ன? அவங்க வேலையில் திருப்தி இல்லை என்றால் அவங்களை இங்கே அனுப்பியே இருக்க மாட்டாங்க தானே?” அவன் கேட்க, மோதிலால்க்கு உதறல் எடுத்தது.

சர்வஜித் இந்த தொழிலை டேக்ஓவர் செய்த பிறகு, உயர் பதவிகளில் இருந்த பலரை வேலையை விட்டு அனுப்பி இருந்தான். அதுவும் புவர் பெர்ஃபார்மென்ஸ் எனச் சொல்லி அனுப்பி இருக்க, தன்னையும் அப்படி அனுப்பி விடுவானோ என பயந்தான்.

அதே நேரம் வைஷாலிக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. தன்னிடம் எந்த விளக்கத்தையும் கேளாமல், ஒருதலைப்பட்சமாக முடிவை எடுக்கப் போகிறான் என அவள் நினைத்தால், மற்றவனின் மூக்கை உடைத்து விட்டானே.

சர்வஜித் தன் பதிலுக்காக காத்திருப்பது புரிய, தான் அவர்களிடம் சொன்னதையும், அதை அந்த மோதிலால் கண்டு கொள்ளாததையும் சொல்லிவிட்டாள்.

அவள் அவ்வாறு சொல்லவே, “நோ சார்... பொய்... பொய் சொல்றாங்க. இவங்க அப்படியெல்லாம் எதுவும் சொல்லவே இல்லை. அப்படிச் சொல்லி இருந்தால் நாங்க சரியாக ப்ரொடக்ஷன் பண்ணாமல் போயிருக்கவே மாட்டோம்” மோதிலால் வேகமாகச் சொன்னான்.

“எனி ப்ரூப்...?” சர்வஜித் அவளையே பார்த்தான்.

“ஒரு நிமிஷம் சார்...” என்றவள், தன் கையில் இருந்த டேபை திறந்து, தான் செக் செய்த விஷயங்கள், அதில் குறைவது, தான் சேர்க்கச் சொன்னது என அனைத்தையும் அவனிடம் காட்டினாள்.

கூடவே, “அன்னைக்கு என் ரூமுக்கு கூப்பிட்டுதான் இவர்கிட்டே பேசினேன்... அதுக்கு இவர் ஹார்ஷா பதில் சொன்னார்” அவள் சொல்ல, அவன் கரத்தை உயர்த்தி விரலை அசைத்தான்.

அடுத்த பத்தே நிமிடங்களில் ஹரீஸ் அவனிடம் ஒரு பென்ட்ரைவைக் கொண்டுவந்து சர்வஜித்தின் முன்னால் இருந்த கணினியில் பொருத்தினான். அதில் வைஷாலி சொன்னது உண்மை எனப் புரிய, சர்வஜித்தின் முகம் கோபத்தில் கொதித்தது.

“உன் வேலையை நீ சரியாகச் செய்யாமல் போனதால் எனக்கு நஷ்டம் ஐந்து கோடி. இதை யார் திருப்பித் தருவா? நீயா?” ஆங்காரமாக எழுந்து நின்றவன் கேட்க, மோதிலால்க்கு மூச்சடைத்தது.

“சார்... சார்... முனிலால் சார் சொன்னதைத்தான் நான் செய்தேன். எனக்கு வேற எதுவுமே தெரியாது சார்... இந்த ஆர்டர்க்கு இதுன்னு அவர் போட்டுக் கொடுத்ததைத்தான் செய்தேன்” விட்டால் சர்வஜித்தின் காலிலேயே விழுந்து இருப்பான்.

“ஹரீஷ்... வேலையில் அசட்டையா இருந்ததுக்காக உடனே இவங்களை எல்லாம் டெர்மினேட் பண்றேன். நம்ம கம்பெனியில் இருந்து எந்தவிதமான சலுகையும் இவங்களுக்கு கிடைக்காது. நமக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு வேண்டி, இவங்க செட்டில்மென்ட் பணத்தை எல்லாம் சீஸ் பண்ணுங்க...

“நீ போகலாம்... அந்த லால்சந்தும் இனிமேல் இங்கே வர வேண்டாம்” சர்வஜித் சொல்லிக் கொண்டே போக, அங்கே இருந்த யாருக்கும் சத்தமாக மூச்சு விடக் கூட அச்சமாக இருந்தது.

“சார்... சார்... அப்படிப் பண்ணாதீங்க சார்... என் குடும்பமே என் வருமானத்தை நம்பித்தான் இருக்கு” அவன் சொல்லிக் கொண்டே இருக்க, இரண்டு செக்யூரிட்டி ஆட்கள் வந்து அவனை கதறக் கதற இழுத்துச் சென்றார்கள்.

“நீங்க இதை உங்க மேலதிகாரிகிட்டே சொன்னீங்களா மிஸ் வைஷாலி?” சர்வஜித் கேட்க, அவளுக்கு இப்பொழுது பதில் சொல்ல அச்சமாக இருந்தது.

“சார்... அது...?” அவள் தயங்க,

“ஓபன் யுவர் மெயில்...” என்றவன் தன்னிடம் இருந்த அவளது டேபை அவளிடம் கொடுத்தான். அவள் கண்டு பிடித்ததை நிச்சயம் மேலதிகாரியிடம் தெரிவித்து இருப்பாள் என அவன் கணித்ததை மெச்சவா? இல்லையென்றால் தன்னால் இத்தனைபேரின் வேலை பறி போவதை எண்ணிக் கலங்கவா எனத் தெரியாத நிலை அவளுக்கு.

அதைவிட அங்கே இருந்த ஹரீஷ் அவளை கவனிக்க வேறு வைத்தான். ‘இது அந்த சர்வாதான்’ அவளது மனம் அப்பொழுதும் பிராண்ட, அதன் தலையிலேயே ஒன்று போட்டு அடக்கினாள்.

“சார்...” அவள் தயங்க, “ஹரீஷ்...” ஒரு குரல்தான் கொடுத்தான். ஹரீஷ் வேகமாக வந்து அவளது கையில் இருந்த டேபை வாங்கிக் கொண்டான். மெயிலை ஓபன் செய்ய, அதில் லாக்கின் ஆகி இருந்ததால் சுலபமாக அவனுக்கு திறந்து கொண்டது. அவன் எதையோ தட்டி, அங்கே இருந்த பெரிய திரையில் அதை கனெக்ட் செய்தான்.

அவளது மெயிலில் அவள் உயர் அதிகாரிக்கு அனுப்பிய மெயில் அவர்களை வரவேற்றது. “சோ...” என்ற சர்வஜித் அந்த உயரதிகாரியைப் பார்க்க, அவருக்கு தன் நிலை இன்னது எனப் புரிந்து போனது.

“இதற்கு நான் முழுப் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன் சார். நானே என் வேலையை ரிஸைன் பண்ணிடறேன்” என்றவர் எழுந்து நின்றார்.

“உங்களுக்கு வேற சாய்ஸ் இருக்குன்னு நினைக்கறீங்களா?” அவள் கோபமாக கேட்க, தலை கவிழ்ந்தார்.

“இந்த நஷ்டத்தை காரணம் காட்டி நாலு மாசம் எல்லோருக்கும் சம்பளத்தை நிறுத்தி வைக்கட்டுமா? ரிட்டன் வந்ததை என்ன செய்யலாம்? ஒரு ஆர்டர் கிடைப்பது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா?

“மார்க்கெட்டில் எத்தனை போட்டி கம்பெனி இருக்குன்னு ஏதாவது ஐடியா இருக்கா இல்லையா?” சர்வஜித் அத்தனை ஆத்திரமாக கேட்க, அவன் பேச்சில் இருந்த நியாயம் அவர்களுக்குப் புரிந்தது.

‘ஐயோ... எல்லார் பணத்திலும் கை வச்சுடுவாரோ?’ வைஷாலி அதிர்ந்து போனாள். அவன் எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்த்தால் நிச்சயம் செய்வான் என்றே தோன்றியது.

“சார்...” தன் கையை மெதுவாக உயர்த்தியவள், தயக்கமாக அழைத்தாள். அவன் இப்படியெல்லாம் கொதிக்கையில் அவன் முன்னால் நிற்கவே அனைவரும் அஞ்சுவார்கள். இவள் என்றால் பேசவே முயற்சிக்கிறாளே என்று அனைவரும் அவளையே பார்த்தார்கள்.

“வாட்....?” என்றான். அவன் கேட்ட வேகத்துக்கு இரண்டு அடி பின்னால் வைத்தாள். தேகம் மொத்தமும் பதறியது. ஆனாலும் பேசினாள்.

“சார் அதையெல்லாம் மறுபடியும் க்வாலிட்டி இம்ப்ரூவ் பண்ணிக்க முடியும்” அவள் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே, அவளை முடிக்க விடாமல் இடையிட்டு கத்தினான்.

“அதற்கான டைம், லேபர் காஸ்ட்... ப்ரொடக்ஷன் காஸ்ட் எல்லாம் யார் கொடுப்பா? கேன்சல் ஆன ஆர்டருக்கு மறுபடியும் அதை மேக்கப் பண்ணி, தலையில் வச்சு கூவிக் கூவி விக்கறதா?” அவன் கேட்டு நிற்க, அவளுக்கு ஹையோடா என்று இருந்தது.

கோடிக்கணக்கான ஆர்டர், அது அப்படியே கேன்சல் ஆகி, ரிட்டன் வேறு வந்திருக்க அவன் கோபத்தில் நியாயம் இருக்கவே செய்தது. நிஜத்தில் சர்வஜித் ஐந்து கோடி என்ன ஐநூறு கோடி நஷ்டம் என்றாலும் அசராமல் சமாளிப்பான்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
அந்த பணம் எல்லாம் அவனது நிழல் உலக வாழ்க்கையின் மூலம் அவனுக்கு வந்தது. அதை எப்படியும் செலவழிக்கவோ, தூக்கிக் கொடுக்கவோ அவன் தயங்கவே மாட்டான். ஆனால் இது... அவன் நேர்வழியில் நடத்தும் நிறுவனம்.

அவன் நியாயமாகச் செய்யும் தொழிலில் ஒரு ரூபாய் நஷ்டம் என்றாலும் அதை அவனால் ஜீரணிக்க முடியாது. வைஷாலி ஒரு மாதிரி திணறிப் போய் நிற்க, “அவுட்...” என்று கத்தினான். மறு நிமிடம் அந்த அறையே காலியாகி இருந்தது.

வைஷாலியும் அடித்துப் பிடித்துக்கொண்டு வெளியேறியவள், தன் அறைக்கு வந்து வேகமாக மூச்சு வாங்கினாள். அங்கே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீர் அருந்தக் கூட கைகள் நடுங்கியது.

தன் இருக்கைக்கு வந்தவள் முதல் வேலையாக ரூபிக்கு அழைத்தாள். அவள் விஷயத்தைச் சொல்ல, ரூபியுமே அதிர்ந்தாள். “ஷாலு... இன்னுமே உனக்கு அந்த சர்வஜித் கிறுக்கு தெளியலையா? நடுவில் கொஞ்ச நாள் தெளிவாத்தானே இருந்த?” அவளிடம் கேட்டாள்.

“நீ ஏன் என்னை நம்ப மாட்டேங்கற? அந்த ஹரீஸ் கூட அவர் கூடத்தான் இருக்கார். ஒரே ஆள் எத்தனைபேர் கூட இருப்பார்ன்னு நீயே சொல்லு?” அவளிடம் கேட்டாள்.

“லூசே... அவர் கான்ட்ராக்ட் செக்யூரிட்டி ஆள். அவங்க கம்பெனி யார்கிட்டே போகச் சொல்றாங்களோ, அவங்களுக்கு செக்யூரிட்டியா அவர் போவார். இது கூடத் தெரியாமல்...” அவள் சொல்ல, யோசனையானாள்.

“ஆமா... நீ சொல்றதும் சரியாத்தான் படுது” மெதுவாக முனகினாள்.

“நீயும் குழம்பி, என்னையும் குழப்பாதே ஷாலு... தயவு செய்து இப்படி வேற யார்கிட்டேயும் உளறி வைக்காதே. அவர் காதுக்குப் போனால் பெரிய பிரச்சனையாகப் போகுது” அவள் சொல்ல, அதுவும் சரியாகவே பட்டது.

ஆனால் இதே விஷயத்தை அவனிடமே தோழி நேரடியாகச் சென்று உளறி வைப்பாள் என ரூபி கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.

“ரூபி, இங்கே என்ன ஆச்சு தெரியுமா” என்றவள், அங்கே நடந்த விஷயங்களைச் சொன்னாள்.

“கொஞ்சம் பொல்லாதவர்ன்னாலும் அவர் பக்கமும் நியாயம் இருக்கே ஷாலு. அதைவிட உன் பக்கமும் யோசிச்சு இருக்கார், உன்கிட்டே நடந்தது என்னன்னு கேட்டும் இருக்கார். நாம அதையும் பார்க்கணுமே” ரூபி சொல்ல, வைஷாலிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“நீ சொல்றதும் சரிதான்... அப்படி மட்டும் கேட்காமல் போயிருந்தால், இந்த நேரம் என் வேலை போயிருக்கும். வேலை மட்டும் இல்லை, பணத்தை வசூல் பண்ண என்ன செஞ்சிருப்பார்ன்னு நினைக்கவே பதறுது.

“இங்கே இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு... ஆனாலும் அதை எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலை. அந்த லாலை வேற வேலையை விட்டு தூக்கிட்டாங்க, இப்போ என்னை ரிலீவ் பண்ணுவாங்களா? இல்லன்னா இன்னும் கண்டினியூ பண்ணச் சொல்வாங்களான்னு தெரியலை.

“சும்மாவே இவனுக நான் சொன்னா ஒழுங்கா கேட்கவே மாட்டாங்க. இப்போ ஏகப்பட்ட பிரச்சனை வேற ஆகிப் போச்சு. என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு. என் ரூமை விட்டு வெளியே போகவே யோசனையா இருக்குன்னா பார்த்துக்கோ” வைஷாலி புலம்பித் தள்ள, அவளது சூழ்நிலை ரூபிக்கு நன்கு புரிந்தது.

அதே நேரம் அவளது ‘டேப்’பில் ஒரு மெயில் வந்து விழ, வேகமாக அதை ஓபன் செய்தாள். அதில் பார்வையை செலுத்தியவள், “ரூபி... ரூபி... இன்னும் மூணு நாளில் என்னை சென்னைக்கு வந்து ஜாயின்ட் பண்ணிக்க சொல்லிட்டாங்கடி. ஃப்ளைட் டிக்கெட் வேற அனுப்பி இருக்காங்க” அத்தனை ஆசுவாசமாகச் சொன்னாள்.

“வாவ்... வாடி... நீ இல்லாமல் இந்த மூணு மாசமா செம போர் எனக்கு. ஆனாலும் அந்த மனுஷன் உன் சூழ்நிலையையும் கொஞ்சம் யோசிச்சுதான் இருக்கார். சரி... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் பிறகு பேசறேன்” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டாள்.

அந்த மெயில், நிஜமாகவே வைஷாலிக்கு மிகப்பெரிய விடுதலை உணர்வைக் கொடுத்தது. அவளை அங்கேயே தொடரச் சொல்லி இருந்தால் நிச்சயம் மறுத்து இருப்பாள். ஆனால் அப்படி ஒரு சூழ்நிலையை தனக்கு கொடுக்காததே நிம்மதியாக இருந்தது.

அடுத்து ஒரு நாள் மட்டும் அலுவலகம் வந்தவள், அதற்கு அடுத்தநாள் சனிக்கிழமை என்பதால் விடுப்பு எடுத்துக் கொண்டாள். சென்னை அலுவலகத்தில் சனி, ஞாயிறு அவர்களுக்கு விடுமுறைதான். ஆனால இங்கே அலுவலகம் இருக்க, அவள் விடுப்பு எடுக்க வேண்டியதாகப் போயிற்று.

மும்பை வந்த இந்த மூன்று மாதங்களில் அவள் எங்கேயும் வெளியே சுற்றிப் பார்க்கவே போயிருக்கவில்லை. இருந்த ஒரு நாள் விடுமுறையிலும், துணி துவைக்க, அயன் செய்ய என பெர்சனல் வேலைகளே அவளை இழுத்துக் கொண்டது.

அன்று முழுவதும் மும்பையை சுற்றிப் பார்க்க எடுத்துக் கொண்டாள். மறுநாள் மாலையில்தான் விமானம் என்பதால் அன்றும் அவளுக்கு நேரம் இருந்தது. அன்று தன் தோழிக்கு ஏதாவது பரிசுப்பொருள் வாங்க வேண்டும் எனச் சொல்லவே, அந்த ட்ரைவர் அவளை ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் கூட்டிப் போய் விட்டார்.

நுழைவாயிலிலேயே சர்வஜித்தின் மிகப்பெரிய பேனர் இருந்தது. அங்கே அவனது டெக்ஸ்டைல் ஃபேஷன்ஷோ நடப்பதாக அதில் எழுதி இருக்க, ‘அது எங்கே நடக்கும்?’ என்ற யோசனையோடு உள்ளே சென்றாள்.

அதைப் பார்வையிட சர்வஜித் வந்து இருந்தான். அதைத் துவங்கி வைத்துவிட்டு, அவனுக்கு அங்கே வேறு மீட்டிங் ஏற்பாடாகி இருக்க, அங்கே செல்வதாக ஏற்பாடு. முதல் தளத்தில் மத்தியில் கம்பி கட்டி, மேடை போட்டு விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

வண்ண விளக்குகள், மாடல் அழகிகள் என அந்த இடமே கோலாகலமாக இருந்தது. இளவட்டங்கள் அனைவரும் ஒவ்வொரு தளங்களில் இருந்தும் அதைப் பார்த்துக்கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தார்கள்.

‘இவர் இருக்காரா?’ என அனிச்சையாகவே வைஷாலியின் கண்கள் அவனைத் தேடி சுழன்றது. அவன் அந்த கூட்டத்தில் இருக்கையில் இருந்து, ஒரு அழகியிடம் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்தாள். சரியாக அந்த நேரம், அவனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதைப் பார்த்த உடனேயே அவன் சற்று பரபரப்பானான். அவன் எழுந்து பின்னால் நடக்க, ஹரீஷ் அவன் பின்னால் செல்வதும், மேலும் இருவர் அவர்களை பின்தொடர்வதும் தெரிந்தது. அங்கே டிஜேயின் இசை, அறிவிப்பு, ஆரவாரம் என இருக்க, அவனால் சரியாகப் பேச முடியவில்லை.

நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு நேர் எதிராக நடந்தவன், அங்கே ஒரு எஸ்கலேட்டர் கூட்டம் குறைவாக இருக்க, சட்டென ஏறிக் கொண்டான். ஏறும் முன்னர் ஹரீஷிடம் அவன் விரலைச் சுழற்றி ஏதோ செய்கை செய்ய, அவன் நின்றுவிட்டான்.

‘என்னங்கடா இது? விரல் நுனியில் ஆட்டி வைக்கறது என்பது இதுதானா?’ என அவள் நினைத்துக் கொண்டு அப்படியே நின்றுவிட்டாள். அப்பொழுதுதான் அவனைப் பார்த்தவாறே தானும் அவன் பின்னால் வந்துவிட்டது தெரிந்தது.

தன் தலையிலேயே அடித்துக்கொண்டு அங்கிருந்து செல்ல முயல, அப்பொழுது நடந்தது அந்த சம்பவம். அவனுக்கு முன்னால் எஸ்கலேட்டரில் இருந்த ஒரு நவ நாகரீக மங்கை, குட்டைப் பாவாடை அணிந்து இருந்தாள்.

அவளது கையில் இருந்த சின்ன பர்ஸ் நழுவி கீழே விழ, அது படிகளில் உருண்டு கீழே சென்றுவிடக் கூடாதே என்ற பதட்டத்தில் பட்டென குனிந்து அதை எடுத்து இருந்தாள். அவள் அப்படி கவனமின்றி குனிய, அவள் அணிந்திருந்த உள்ளாடை பளிச்சென வைஷாலியின் கண்களுக்கே காட்சிப் பொருளானது.

வைஷாலி பட்டென சர்வஜித்தைப் பார்க்க, அவளுக்குப் பின்னால் நின்றிருந்த அவனோ, பட்டென அந்த பெண்ணுக்கு முதுகு காட்டி திரும்பி இருந்தான். அதைப் பார்த்த வைஷாலி ‘சர்வஜித் இப்படிப்பட்டவனா?’ என ஒரு நொடி திகைத்துப் போனாள்.

பகை முடிப்பான்.........
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
25
29
13
Vellkovil
சர்வா பின்னால போய் இவ என்ன பிரச்சினைய இழுத்துக்க போறாளோ
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
சர்வா பின்னால போய் இவ என்ன பிரச்சினைய இழுத்துக்க போறாளோ

இழுத்துதான் விட்டுப்பா....