பகுதி – 15.
வைஷாலி சென்னைக்கு வந்து சில மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் அவளால் சர்வஜித்தைப் பற்றி யோசிப்பதை கொஞ்சம் கூட நிறுத்த முடியவில்லை. அதுவும் அன்று மாலையில் அவள் மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு எக்கனாமிக் கிளாஸ் டிக்கட் தான் கொடுத்து இருந்தார்கள். அவளுக்கு ஒரு சிறிய பேக், கைப்பை மட்டும்தான் என்பதால் இரண்டையும் தன்னுடனே வைத்துக் கொண்டிருந்தாள். தன் இருக்கையைத் தேடி அமர்ந்தவளுக்கு சர்வஜித்தின் நினைவுதான்.
அவன் எஸ்கலேட்டரில் செய்த அந்த செய்கை... அவன் இடத்தில் வேறு எந்த ஒரு ஆண்மகனாக இருந்திருந்தாலும் ஒன்று, கண்டும் காணாமல் இருந்து இருப்பார்கள், இல்லையா உள்ளுக்குள் ரசித்து சிரித்து இருப்பார்கள், இல்லையா வக்கிரமமாக பார்த்து இருப்பார்கள். ஆனால் அவன் சட்டென அவள் செய்யப் போவதை உணர்ந்து அதைத் தவிர்த்த விதம்... அவளை சற்று உலுக்கியே இருந்தது.
அவளுக்கு அவளது அப்பாவைப்பற்றி நன்கு தெரியும். அவளது அப்பாவைத் தவிர அவளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த மற்ற ஆண்மகன்கள் எல்லாம் வக்கிரம் பிடித்தவர்கள் தான். அதுவும் அவளது மாமன் மகன்களின் மன வக்கிரங்களை நேரிலேயே கண்டவள் அவள்.
முத்துப்பாண்டி அவளிடமே கூட அந்த வக்கிரங்களை காட்டி இருக்கிறான். அப்படி இருக்கையில், மனதளவில் கூட சர்வஜித் களங்கப்படாமல் விலகி நிற்பது அவளுக்கு அவன்மேல் ஒருவித ஈர்ப்பை, தனிப்பட்ட உணர்வைக் கொடுத்தது.
அந்த நொடி, அவனது கோபம் எல்லாம் அவள் கணக்கில் வரவே இல்லை. அதையெல்லாம் நினைத்தவாறே அவள் விமானத்தில் அமர்ந்திருக்க, அவளுக்கு அருகே கைக்குழந்தையோடு ஒரு பெண்மணி வந்து அமர்ந்தாள்.
அந்த குழந்தையோ விடாமல் அழுதுகொண்டே இருந்தது. அதன் தாய் குழந்தையை எவ்வளவோ விதங்களில் சமாதானம் செய்ய முயன்றாள். அவளால் அந்த குழந்தையை பெரிதாக சமாதானம் செய்ய முடியவில்லை.
விமானம் டேக்ஆஃப் ஆனா சிறிது நேரத்தில் அவளுக்கு அருகே ஒரு விமானப் பணிப்பெண் வந்தாள். “நீங்க இருக்கையை மாற்றிக் கொள்ள விருப்பமா இருக்கீங்களா?” நுனிநாக்கு ஆங்கிலத்தில் அவளிடம் கேட்க, கேள்வியாக அவளைப் பார்த்தாள்.
“இவங்க கணவர் அங்கே பிசினஸ் கிளாசில் பயணம் செய்கிறார். அவருக்கு அவரோட மனைவியோடு அமர்ந்து குழந்தையையும் பார்த்துக்கொள்ள விருப்பம். சோ...” அவள் தன்மையாக கேட்க, அருகில் இருந்த பெண்ணோ அவளிடம் “ப்ளீஸ்...” என கெஞ்சவே துவங்கி இருந்தாள்.
“அவங்களுக்கு இங்கே பயணம் செய்வது பிரச்சனை இல்லையென்றால் எனக்கு ஓகே தான். ஆனாலும்... இங்கே இருந்து அங்கே...?” கொஞ்சம் தயங்கினாள். இவள் இருப்பது எக்கனாமிக் கிளாஸ், அவன் இருப்பது பிசினஸ் கிளாஸ் என்பதால் யோசனையாகவே சொன்னாள்.
“என்னால் இவனை தனியா சமாளிக்க முடியலை, நீங்களே பார்க்கறீங்க தானே. இவன் அவங்க அப்பாகையில் கொஞ்சம் அமைதியாக இருப்பான். எங்களுக்காக...” குழந்தையின் தாய் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே அவளது கணவன் வந்துவிட்டான்.
“மிஸ் ப்ளீஸ்...” அவனும் அவர்கள் சொன்னதையே சொல்லத் துவங்க, இருக்கையில் இருந்து எழுந்துவிட்டாள். அவள் தன் லக்கேஜை எடுக்க முயல,
“என்னோட லக்கேஜ் அங்கே இருக்கு... சோ...” அவளால் அவளது லக்கேஜை அங்கே வைத்துக்கொள்ள முடியாது எனச் சொல்ல, அங்கிருந்து விமானப் பணிப் பெண்ணோடு அங்கே சென்றாள். அங்கே சென்றவளுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது.
அவளது வலப்பக்கம் இருந்த தனி இருக்கையில் சர்வஜித் அமர்ந்து இருந்தான். அவனுக்குப் பின்னிருக்கையில் ஹரீஷ் இருக்க, இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவர்கள் இருவருக்கும் வைஷாலி அங்கே நிற்பது தெரிந்தாலும் கண்டுகொள்ளவே இல்லை.
“இதுதான் உங்க இருக்கை மேம்...” என்ற பணிப்பெண் அவளது இருக்கையை சுட்டிக் காட்ட, அதில் அமர்ந்து கொண்டாள். சர்வஜித் தன் மடிக்கணினியில் எதையோ உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க, ஹரீஷ் அவனது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்துவிட்டு, கண்டுகொள்ளாமல் தன்னிருக்கையில் அமர்ந்துகொள்ள அவளால் முடியவில்லை. “குட் ஈவினிங் சார்...” அவள் சர்வஜித்திடம் தயக்கமாகச் சொல்ல, அவளைப் பார்த்தவன் மெல்லிய தலையசைப்பைக் கொடுத்தான் அவ்வளவே.
வைஷாலிக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. ‘அவர்கிட்டே இருந்து வேற என்னதான் எதிர்பார்க்கற?’ எனக் கேட்ட மனதுக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
விமானம் அப்பொழுதுதான் உயரத் துவங்கிய நேரம் என்பதால், அனைவரும் அவரவர் இருக்கையில் ஓய்ந்து இருந்தார்கள். சில நிமிடங்களில் இங்கும் அங்குமாக மக்கள் நடமாடத் துவங்கினார்கள். அந்த பரபரப்பும் அடங்க, வைஷாலி சர்வஜித்தைத்தான் அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனைப் பார்க்கப் பார்க்க மனம் அவன்பக்கம் சாயத் துவங்கி இருந்தது. என்னவோ விசைக்கு கட்டுப்பட்டதுபோல் அவள் நினைப்புகள் மொத்தமும் அவன்பால் ஈர்க்கப்பட, அதை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
‘ஹையோ ஆண்டவா என்ன இது? என் புத்தி ஏன் இப்படிப் போகுது?’ மனதுக்குள் புலம்பினாலும் அவளால் தன் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நேரம் அவனது பண பலம், அவனது உயரம் என எதுவும் அவள் நினைப்பில் கூட வரவில்லை.
அவனோ, அக்கம் பக்கம் பாராமல், யாரைப்பற்றிய நினைப்பும் இல்லாமல் அவன் தன் உலகில் மூழ்கி இருப்பது புரிந்தது. அந்த நேரம்தான் அது நடந்தது. அவனது இரண்டு இருக்கைக்கு முன்னர் ஒரு மிகப் பிரபலமான ஹிந்தி நடிகை அமர்ந்து இருந்தாள்.
சர்வஜித்தைப் பார்த்தவள், இருக்கையில் இருந்து எழுந்து ஒரு நளின நடையோடு அவனை நெருங்கினாள். அவன் இப்பொழுது உலக அளவில் அறியப்படும் ஒரு மல்ட்டி மில்லியனர், ஒரு பிசினஸ் மேன். அப்படி இருக்கையில் பிரபலங்கள், செலிபிரட்டிகள் அவனை வட்டமிடவில்லை என்றால்தான் ஆச்சரியம்.
“ஹாய் சர்வஜித்... ஹௌ ஆர் யூ...?” என்றவாறு விட்டால் அவன் மடியில் கூட அமர்வேன் என்பதுபோல் கொஞ்சிப் பேசினாள். தன் அங்க வனப்புகளைக் காட்டி அவனை மயக்கவும் முயன்றாளோ? அதைப் பார்த்த வைஷாலிக்கு பிபி எகிறியது.
என்னவோ தன் கைப்பொருளைக் களவாட வந்ததைப்போல மனம் கிடந்தது அடித்துக் கொண்டது. சர்வா தன் இருக்கையை நன்றாக நீட்டிப் போட்டு, கால் நீட்டி அமர்ந்து இருக்க, அவன் காலுக்கு அருகே அமர்ந்தும் விட்டாள்.
அவள் அமர்ந்த பிறகுதான், வைஷாலியால் சர்வஜித்தின் முகம் காண முடிந்தது. ஹரீஷ் அவள் வந்த உடனேயே இருக்கையில் இருந்து எழுந்துவிட, சர்வஜித் தன் இடக்கையை உயர்த்தவே அப்படியே நின்றுவிட்டான்.
“சென்னை ட்ரிப்பா?” அவள் குழைந்து பேச, சர்வஜித் இருக்கையில் நன்றாக தலையை சாய்த்துக் கொண்டு அவளையே பார்த்திருந்தான். அவன் என்ன நினைக்கிறான் என அவனது கண்களைப் பார்த்து அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் அவனது அந்த உடல்மொழி, ஒரு மாதிரி விறைப்பாக இருக்க, அவளை, அவளது பேச்சுக்களை அவன் ரசிக்கவில்லை என வைஷாலிக்குச் சொன்னது. அது என்னவோ மனதுக்கு ஒரு மாதிரி ஆறுதலைக் கொடுக்க, அதிர்ந்து போனாள்.
‘எனக்கு ஏன் இப்படியெல்லாம் ஆகுது?’ வைஷாலியால் தன் நினைப்பு போகும் விதத்தை எல்லாம் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
“நான் கரீஷ்மா... உங்களுக்கு தெரியும்தானே? சென்னையில் தாஜ்லதான் தங்கறேன். டைம் கிடைக்கும்போது வாங்களேன்... ஒரு டேட் போகலாம்...” அவள் வெளிப்படையாகவே அழைப்பு விடுக்க, வைஷாலிக்கு இதயம் தாறுமாறாக துடித்தது.
‘அவன் என்ன சொல்வானோ?’ என நினைத்தவாறே அவன் முகம் பார்க்க, அவனிடம் அதே உடல்மொழியும், ஒருவித அழுத்தமும் நிலவியது. அந்த கரீஷ்மா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், இன்னுமே பேசிக்கொண்டே இருக்க, அவள் சொன்னதற்கும் சரி, கேட்டதற்கும் சரி அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அவள் அவனது கால் பக்கம் இருந்து மேலே நகர்ந்து அமர்ந்தவள், அவன் தேகத்தை தொட முயல, அவன் விரலை அசைத்த விதத்தில் ஹரீஷ் செயல்பட்டு இருந்தான். “மேம் ப்ளீஸ்...” என வார்த்தைகளில் பணிவைக் காட்டியவன், குரலிலோ, செய்கையிலோ அதைக் கொஞ்சமும் காட்டவில்லை.
விட்டால் அவளை கைபிடித்து இழுத்து வெளியே தள்ளுவேன் என ஹரீஷ் நிற்க, வந்தவளின் முகம் அப்படியே அவமானத்தில் சுண்டிப் போனது. அதற்கு மேலே அங்கே நில்லாமல் சென்றுவிட்டாள். வைஷாலிக்கு அதற்குப் பிறகுதான் நிம்மதியாக இருந்தது.
வைஷாலிக்கு சர்வஜித்தின் அந்த கட்டுப்பாட்டைக் கண்டு கண்கள் அகலத் திறந்து கொண்டது. ஒரு பெண்ணே வலிய சென்றும், ‘நீ யார்?’ என்ற பார்வையும், ‘என்னை விட்டு எட்டியிரு’ என்ற உடல்மொழியும்... அவனைக் கட்டிக்கொள்ளத் தோன்றியது.
அந்த பயணம் முழுவதும் வைஷாலி அவனை கவனித்துக் கொண்டே வந்தாள். அங்கே இருந்த பல மக்கள் அவனோடு பேச, புகைப்படம் எடுக்க விரும்பிய பொழுது எல்லாம் சளைக்காமல் ஒத்துழைத்தான். ஆனால் யாரிடமும் ஒரு வரத்தை கூட அவன் பேசவில்லை. அவள் பக்கம் பார்க்கக் கூட இல்லை.
விமானம் தரையிறங்கப் போகிறது என்ற அறிவிப்பு வந்த பிறகுதான், அவன் தன் இருக்கையில் இருந்து அசைந்தான். அவள் தன் எம்ப்ளாயி என்ற ஒரு பார்வை கூட இல்லை. ‘உன்னை எனக்குத் தெரியாதே’ என்ற நடத்தை. அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக கூட இருந்தது.
‘தன்னைப் பார்ப்பானா?’ என அவள் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். விமானம் தரையிறங்க, அனைவரும் பரபரப்பாக இறங்க முயல, சர்வஜித் அசையாமல் அமர்ந்து இருந்தான். கூட்டம் நன்றாக குறைந்த பிறகே அவன் எழுந்து கொள்ள, வைஷாலி தானும் அப்படியே இருப்பதைக் கண்டு தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
அதைப் பார்த்த ஹரீஷ் இதழ் பிரியாமல் சிரித்துக் கொள்ள, அவளுக்கு ஒரு மாதிரியாகப் போயிற்று. சர்வஜித் ‘நான் இரும்பாக்கும்’ என்பதுபோல் முன்னால் நடக்க, அவனது பொருட்களை சேகரித்துக் கொண்டு பின்னால் சென்றான் ஹரீஷ்.
வைஷாலியின் மனதோ சர்வாவஜித்தைப் பார்க்க வெகுவாக ஏங்கிப் போனது. ஆனால் அங்கே இருந்ததோ சர்வா. சர்வஜித்தின் அதே உடல்மொழி, பேச்சு, குரல்... ஆனால் முகம் வேறு, அவன் பெயர் வேறு.
‘சர்வா’ அவர்களது புது முதலாளி என்ற அறிமுகத்தோடு வைஷாலி சென்னைக்கு வந்து சேர்ந்த மறு நாளே அங்கே வந்து நின்றான். அவனுடன் அதே ஹரீஷ்... அவனைப் பார்த்து ரூபிக்கு தலை சுற்றிப் போனது.
‘இவன் என்னை நிம்மதியாகவே இருக்க விட மாட்டானா?’ என உள்ளுக்குள் அத்தனை புகைச்சல். அதை அதிகரிப்பது போன்று, அவளது அறைக்கு வந்த ஹரீஷ் அவளிடம் பேச முயன்றான். அங்கே அப்பொழுது வைஷாலியும் உடன் இருக்க அதை அவன் கவனிக்கவே இல்லை.
வைஷாலியும் ‘வந்திருப்பது சர்வஜித்தானே...’ என்ற பலமான யோசனையில் இருக்க, வந்தவனை கவனிக்கவே இல்லை. ஹரீஷ் தன் பார்வை வட்டத்தில் விழுந்தாலும், அவள் கருத்தில் எல்லாம் பதியவில்லை.