பகுதி – 16.
ஒரு வருடம் கடந்து...
வைஷாலி ‘மால்’லின் திறப்புவிழா ஏற்பாடுகளைச் செய்ய அத்தனை தீவிரமாக ஓடிக் கொண்டு இருந்தாள். மூன்று வருட ப்ராஜெக்ட், விடாத இருபத்துநான்கு மணிநேர உழைப்பால் ஒன்றரை வருடங்களில் நிறைவடைந்து இருந்தது.
இந்த மால் வளர வளர, அங்கே வைஷாலியின் பங்கும் நிறைய இருந்தது எனச் சொன்னால் மிகையில்லை. பணம் பத்தும் செய்யும் என அவளுக்குத் தெரியும். ஆனால் சர்வஜித்திடம் இருக்கும் பணம் பதினொன்றையும் செய்தது.
முதல் மூன்று மாதங்கள் வரைக்கும் கன்னியாகுமரியில் தனியாக ஒரு ஹாஸ்டலில் மறைவாகத் தங்கி அவன் சொன்ன வேலையைச் செய்து கொண்டிருந்தாள். ஆனால் விடாமல் கண்காணிக்கும் கோபாலின் கண்களில் இருந்து அது தப்புமா என்ன?
வைஷாலி தனியாக ஒரு காரில் அடிக்கடி அங்கே வந்து செல்வது அவரது அடிபொடிகள் மூலம் அவருக்குத் தெரிய வந்திருந்தது. முதலில் அதற்கு வாய்ப்பே இல்லை என அவர் மறுத்தார். ஆனால் அவளது புகைப்பட ஆதாரத்தோடு அவர்கள் பேச மனிதர் கொதித்துவிட்டார்.
வைஷாலி தன் தகப்பனுக்கு மறைத்து எதையும் செய்யவில்லை என்பதால், பைரவன் அதிர்ந்துவிடவில்லை. “எனக்கு வேற வழி இல்லைப்பா, நான் இதைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என அவள் சொன்னபொழுது அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
விஷயத்தை கோபாலிடம் கொண்டு வந்து, இரண்டாவது மகா யுத்தத்தை பைரவன் துவங்கி வைக்கத் தயாராக இருக்கவில்லை. மகள் தான் சமாளித்துக் கொள்வதாகச் சொல்ல, அவர்களுக்கு விஷயம் தெரியும் வரைக்கும் செல்லட்டும் என அமைதி காத்தார்.
சொல்லப்போனால் பைரவனுமே ‘தன் மகளுக்கு ஒரு விடிவுகாலம் வந்துவிடாதா?’ என்றுதானே காத்துக்கொண்டு இருக்கிறார். வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் நிச்சயம் இருப்பான் என அவர் உணர்ந்த தருணம் அது.
‘சர்வா நல்லவன் என அவரும் நினைக்கவில்லை. அவனும் கெட்டவன்தான், ஆனால் எந்த அளவுக்கு?’ என்பதில் உள்ள வித்தியாசம்தான் அது. இத்தனை வருடங்களாக கோபாலோடு இருக்கிறார். அவர் மூலமாக, இவருக்கும் பலரைத் தெரியும் தானே.
அந்த பலத்தை உபயோகித்து சர்வாவைப் பற்றி அவரும் தீர விசாரித்தார். அவன் வளர்ந்துவரும் தொழிலதிபன் என்ற ஒரு தகவலைத் தவிர வேறு எதையுமே அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை.
திரை மறைவில் எதுவும் இருக்குமோ என அடியாட்களை வைத்தும் தீர விசாரித்துவிட்டார். அவன் கோபக்காரன், தன் தொழிலை வளர்க்க எதையும் செய்வான். பணம் அவனுக்கு தண்ணீர் பட்ட பாடு என்பன போன்ற தகவல்கள் மட்டுமே கிடைத்தன.
அவனது பெர்சனல் வாழ்க்கையைப்பற்றி விசாரிக்கையில் சிகரெட் மட்டுமே புகைப்பான், மது, மாது என்ற எந்த கெட்டப் பழக்கங்களும் கிடையாது எனத் தெரியவர கொஞ்சம் ஆச்சரியம் கூட கொண்டார்.
அடிக்கடி மும்பை செல்வான் என்ற தகவல் கிடைக்க, அவன் அங்கே, எங்கே செல்கிறான்? என்ன செய்கிறான்? என்ற எந்த தகவல்களையும் அவரால் திரட்ட முடியவில்லை. கடந்த ஒரு வருடமாக அவன் சென்னையில்தான் முழு நேரமும் தங்கி இருப்பதும், மும்பைக்கு சில முறை மட்டுமே சென்று வந்ததும் தெரிந்தது.
அந்த ‘மும்பை’ அவரைக் கொஞ்சம் தொல்லை செய்தாலும், விடாமல் அதைப்பற்றி விசாரிக்கச் சொல்லி இருந்தார். இவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது என அவர் முடிவெடுத்தும் கொண்டார்.
அதனாலேயே பைரவன் மகளைத் தடுக்கவும் இல்லை. கோபாலோ, “உங்களுக்குத் தெரிஞ்சுதான் இது நடக்குதா மச்சான்?” என கேட்ட பொழுது, தனக்குத் தெரியாது என முடித்துவிட்டார்.
தனக்குத் தெரியும் எனச் சொல்லி, பிரச்னையை எதிர்கொள்ள அவருக்கும் ஆசைதான். ஆனால் மகள் தன்னை இதில் இருந்து விலகி இருக்கச் சொல்ல அவரும் அதைக் கேட்டுக் கொண்டார்.
அதென்னவோ தனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அதை சர்வஜித் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு அதிகம் இருந்தது. தன்னை இந்த சுழலுக்குள் இழுத்து விட்டவன் அவன்தான். அப்படி இருக்கையில் தன்னை அவன் காப்பாற்றுவான் என எப்படி தான் நம்புகிறோம் என அவளுக்குப் புரியவே இல்லை.
நிஜத்தில் அதுதான் நடந்தது. எப்படியும் தன்னைக் கண்டு கொள்வார்கள் என அவளுக்குத் தெரிந்தே இருந்தது. அது என்றைக்கு என்பதுதான் அவளது சவாலே. அவள் அரசாங்க அலுவலகம் சிலவற்றுக்குச் செல்ல வேண்டிய அவசியம் வர, சீக்கிரமே அவளைக் கண்டு கொண்டார்கள்.
ஆனால் யாராலும் அவளை நெருங்கவே முடியவில்லை. என்றைக்கு தன்னை வந்து இழுத்துச் செல்வார்களோ என அவள் எதிர்பார்த்திருக்க அப்படி ஒன்று நடக்கவே இல்லை. அவளை நெருங்க முயன்ற எந்த மனிதர்களும் அவளது நிழலைக் கூடத் தொட ‘சர்வஜித்’ அனுமதிக்கவில்லை.
அவளைத் தொட அனுமதிக்கவில்லை என்பதற்காக அவள் நிம்மதியாக இருந்தாள் எனச் சொல்வதற்கு இல்லை. தன்னைத் தொடரும் வாகனங்கள், மனிதர்கள் என அவளுக்குத் தெரியும்தானே.
அவ்வப்பொழுது தகப்பனிடம் மட்டுமே பேசும் அவள், மறந்தும் தாயின் அழைப்புகளையோ, மாமன், மாமாவின் மகன்களின் அழைப்புகளையோ எடுக்கவே இல்லை. எடுத்தால் என்ன நடக்கும் என அவளுக்குத் தெரியும்.
எது எப்படியோ... கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்து திறப்புவிழாவையும் பிரதமரை வைத்து ஏற்பாடு செய்துவிட்டான். அவர் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக அதைச் செய்ய, அப்பொழுது அவருடன் இருந்தான் சர்வஜித். அவன் அங்கே இருந்து இயக்க, வைஷாலி இங்கே மூச்சு முட்டிப் போனாள்.
எத்தனையோ விதமான பிரச்சனைகள், குடைச்சல்கள் என அனைத்தையும் கடந்து அதை வெற்றிகரமாக முடிப்பதற்குள் வைஷாலிதான் துவண்டு போனாள். இதற்குமேல் இழக்க சக்தியே இல்லை என்னும் நிலைக்கு வந்துவிட்டாள்.
சரியாக அதே நேரம் முத்துப்பாண்டி அவளைத் தூக்கி இருந்தான். தன்னை யாரும் நெருங்க அனுமதிக்க மாட்டான் என அவள் நினைத்திருக்க, அன்று அது பொய்யாகிப் போனது. தனக்கு இது நேராது என அசட்டையாக அவள் இருக்க, வெகு சுலபமாக முத்துப்பாண்டியின் கரத்தில் அகப்பட்டு இருந்தாள்.
‘அதுதானே... அவரோட வேலை முடிந்துவிட்டதே. இனிமேல் என்னை காக்க வேண்டும் என அவருக்கு என்ன அவசியம் வந்தது?’ என எண்ணியவளுக்கு அதைத் தாங்கிக்கொள்வது கொஞ்சம் கடினமாகவே இருந்தது.
அவளை தங்கள் வீட்டுக்கு இழுத்துச் சென்றவன், “எவ்வளவு தைரியம் இருந்தால் நம்ம எதிரிக்கே வேலை பார்ப்ப?” என்றவன் அவளை அடிக்க, ருக்மணி ஓடிவந்து அவளைத் தாங்கிக் கொண்டார்.
“டேய், எதுவா இருந்தாலும் வாய்ல பேசுடா... அதென்ன பெண்பிள்ளையை அடிக்கறது?” அவர் துணைக்கு வந்தார்.
“என்னை மிரட்டித்தான் எல்லாம் செய்ய வச்சார்... சொல்லப்போனால் என்னை எங்கேயும் விடாமல் அடைச்சு வச்சு வேலை வாங்கினார்.
“உங்க ஆட்களே எத்தனையோ முறை என்னை நெருங்க முயற்சி செய்தார்களே, அவர்களால் முடிந்ததா? ஆம்பளைங்க அவங்களாலேயே முடியாத பொழுது, ஒரு பெண் நான் எப்படி அங்கே இருந்து தப்பிக்க?” அவள் சொல்ல, அவளை நம்பாத பார்வை பார்த்தான்.
“நாங்க கூப்பிட்ட பொழுது எங்ககிட்டே சொல்லி இருக்க வேண்டியது தானே...?” முத்துப்பாண்டி கேட்டு வைக்க,
“அது... என் ஃபோன் என்கிட்டேயே இல்லை. எல்லாம் என் கூட இருந்த பிரபு கிட்டே தான் இருந்தது” அவள் சொல்ல, அவளை நம்புவதா? வேண்டாமா? என்ற நிலைதான். ஆனால் தங்கள் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டும் அவன் அனைத்தையும் செய்ய வல்லவன்தான் என அவர்களுக்குப் புரிந்தே இருந்தது.
இதைவிட அவர்களுக்கு மிகப்பெரிய இடி என்னவென்றால், அவர்கள் இருக்கும் ஏரியாவில் யார் சொத்துக்களை விற்றாலும் அவர்களுக்குத்தான் முதலில் சொல்ல வேண்டும். கோபால் வீட்டினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு சொத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுக்கவேண்டும். அது அங்கே எழுதப்படாத சட்டமாகவே இருந்தது.
ஆனால் இவர்கள் வீட்டுக்கு நேர் பின்னால் இருந்த இடத்தில்... கிட்டத்தட்ட ஐந்து கிரவுண்ட் இடம், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு மிகப்பெரும் பங்களாவோடு விலைக்குப் போயிருந்தது. அதுவும் அது சர்வாவின் பெயரில் பதியப் பட்டிருக்க, இது எப்படி நடந்தது என அவர்களுக்குத் தெரியவே இல்லை.
அங்கே திறப்புவிழா நடந்த நேரம், இங்கே வீட்டிலும் புரோகிதர்களை வைத்து கிரகப்பிரவேசத்தை நடத்தி இருந்தான். பத்திரப் பதிவு அலுவலகத்தில் தங்களுக்கு விசுவாசமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவன், இதை முடித்துக் கொடுத்துவிட்டு தன் வேலையை மாற்றிக் கொண்டு சென்றிருந்தான்.
அங்கே இருந்த மற்றவர்களிடம் கேட்டால், அனைவருமே தங்களுக்கு எதுவுமே தெரியாது என சாதித்து விட்டார்கள். மால் விஷயத்தில்தான் தோல்வி என்றால், இந்த பங்களா விஷயம் அதைவிட பெரிய அடியாக இருந்தது.
இந்த வீடு விஷயத்தையும் முடிக்க வைஷாலிதான் அலைந்து திரிந்து முடித்து இருந்தாள். அந்த உண்மை தெரிய வரும்பொழுது என்ன ஆகுமோ என இதயம் கிடந்தது அடித்துக் கொண்டது.
இங்கே இவள் இப்படி சிக்கிக் கொண்டிருக்க, சர்வஜித்தோ மும்பையில் பாந்திரா பகுதியில் ஒரு பங்களாவில் இருந்தான். அந்த பங்களாவில் இருந்த ஒரு அறையில் எட்டு, வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் மிகவும் சோர்ந்து போய் படுத்துக் கிடந்தான்.
“ஜீ...” என அவனை அழைத்த ஒரு பெண்மணி, ஹிந்தியில் அந்த சிறுவனைப் பற்றிய விவரங்களை சின்னக் குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த சிறுவனைப் பார்த்த ஹரீஷுக்கு எதுவும் புரியவே இல்லை.
சர்வஜித்தோடு சேர்ந்து மொத்தமாக ஐந்து வருடங்கள் ஆகி இருக்க, இன்றுதான் அந்த சிறுவனை அவன் பார்க்கிறான். அவள் சொன்னதில் இருந்து சிறுவன் ‘டெங்கு’ காய்ச்சல் கண்டு, அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறான் எனப் புரிந்தது.
“ஏன் என்கிட்டே சொல்லலை?” சர்வஜித் சற்று கோபமாகவே கேட்டான்.
“நீங்க உங்களை எதற்காகவும் தொல்லை செய்யக் கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க” அவள் சொல்ல, அந்த படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தான்.
‘இந்த புதுக் கேரக்டர் யாருன்னு தெரியலையே. இவரோட மகனா? ச்சேச்சே... அதுக்கு வாய்ப்பே இல்லை. கொஞ்சம் கூட இவரோட ஜாடையே இல்லையே. அதோட பையனுக்கு பத்து வயசாவது இருக்கும்போல” அவன் நினைக்கையிலேயே அந்த சிறுவன் கண் விழித்தான்.
சர்வஜித்தைப் பார்த்த சிறுவன், சில பல நிமிடங்கள் அவனையே பார்த்திருந்தான். “அங்கிள்... நீங்கதானா?” அத்தனை சந்தேகமாகக் கேட்டான்.
‘ஹப்பா... அங்கிள்ன்னு தான் கூப்பிடறான், அப்பா இல்லை’ ஹரீஷ் ஆசுவாசமானான்.
“ஆமா நானேதான்... எப்படி இருக்க ப்ரவீன்?” என்றவன் அவன் தலை கோதினான். அவன் கேட்டுக் கொண்டிருக்க, அந்த சிறுவனோ அந்த அறை முழுவதும் தன் பார்வையால் அலசினான். அவன் கண்களில் அப்பட்டமாக ஒரு ஏமாற்றம் விரவ, அவன் கண்கள் கலங்கிவிட்டது.
“ப்ரவீன்... நோ... அழக் கூடாது. உனக்கு இப்போதான் உடம்பு கொஞ்சம் சரியாகி இருக்கு” என்றான்.
“நீங்க என்னைப் பார்க்க வர்றப்போ, என் அம்மாவை அழைச்சுட்டு வர்றேன்னு சொன்னீங்க?” என்றவன் அழுதுவிட, ஹரீஷுக்கே ஒரு மாதிரியாகிப் போயிற்று.
“உன்னை உன் அம்மாகிட்டே கண்டிப்பா கூட்டிப் போவேன், ஐ ப்ராமிஸ்...” அவன் சொல்ல,
“எப்போ? எனக்கு என் அம்மாவைப் பார்க்கணும். அவங்க ஃபோட்டோவாவது காட்டுங்களேன். அவங்க ஏன் என்னை குப்பைத் தொட்டியில் போட்டுப் போனாங்க? அவங்களுக்கு ஏன் என்னைப் பிடிக்கலை? இப்போ மட்டும் எப்படிப் பிடிக்கும்?” அடுக்கடுக்காக அவனிடம் கேள்விகளைத் தொடுத்தான்.
“உங்க அம்மா ரொம்ப நல்லவங்க ப்ரவீன். நீ இருக்கறதே அவங்களுக்குத் தெரியாது. அவங்களை ஏமாத்திட்டாங்க” சர்வஜித் தன் மொத்த கோபத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு பேசுவது ஹரீஷுக்குப் புரிந்தது.
“எனக்கு அம்மா வேணும்...” சிறுவன் கொஞ்சம் குரல் உயர்த்த,
“ப்ரவீன்...” சர்வஜித் அவ்வளவுதான் சொன்னான். மறு நிமிடம் தன் வாயை இறுக மூடிக் கொண்டான். ஒரு மாதிரி தேம்பித் தேம்பி அழத் துவங்கினான். அதை சர்வஜித்தால் பார்க்க முடியவில்லை. அவனை எப்படி சமாதானப்படுத்த என்றும் தெரியவில்லை.
“நான் என்ன சொல்லி இருக்கேன் ப்ரவீன்?” இறுக்கமாகவே கேட்டான்.
“நான் தைரியமா இருக்கணும்னு சொல்லி இருக்கீங்க. நான் அழலை...” என்றவன் தன் கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்டான்.
“ஹரீஷ்... இவனை வெளியே அழைச்சுட்டு போ... இவனுக்கு வேண்டியதை வாங்கிக் கொடு” அவன் சொல்ல, ஹரீஷ் அவனைப் பார்க்க, சிறுவன் தன் கரத்தை அவன் பக்கம் நீட்டினான். ஹரீஷ் அவன் கரத்தைப் பற்றிக் கொள்ள, அவனோடு நடந்துவிட்டான்.