• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 16.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai

ஹாய் ப்ரண்ட்ஸ்,

என் கதைகளை, என் குரலில் ஆடியோ நாவலாக கேட்க, என் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்துக்கோங்க.

https://www.youtube.com/@infaasnovelworld5379

இன்றைக்கு "அகலாதே உன் நினைவு" கதையை அப்லோட் செய்து இருக்கிறேன். கேட்டுவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

https://www.youtube.com/watch?v=TPsA2bGVlcE

நன்றி!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
பகுதி – 16.

ஒரு வருடம் கடந்து...

வைஷாலி ‘மால்’லின் திறப்புவிழா ஏற்பாடுகளைச் செய்ய அத்தனை தீவிரமாக ஓடிக் கொண்டு இருந்தாள். மூன்று வருட ப்ராஜெக்ட், விடாத இருபத்துநான்கு மணிநேர உழைப்பால் ஒன்றரை வருடங்களில் நிறைவடைந்து இருந்தது.

இந்த மால் வளர வளர, அங்கே வைஷாலியின் பங்கும் நிறைய இருந்தது எனச் சொன்னால் மிகையில்லை. பணம் பத்தும் செய்யும் என அவளுக்குத் தெரியும். ஆனால் சர்வஜித்திடம் இருக்கும் பணம் பதினொன்றையும் செய்தது.

முதல் மூன்று மாதங்கள் வரைக்கும் கன்னியாகுமரியில் தனியாக ஒரு ஹாஸ்டலில் மறைவாகத் தங்கி அவன் சொன்ன வேலையைச் செய்து கொண்டிருந்தாள். ஆனால் விடாமல் கண்காணிக்கும் கோபாலின் கண்களில் இருந்து அது தப்புமா என்ன?

வைஷாலி தனியாக ஒரு காரில் அடிக்கடி அங்கே வந்து செல்வது அவரது அடிபொடிகள் மூலம் அவருக்குத் தெரிய வந்திருந்தது. முதலில் அதற்கு வாய்ப்பே இல்லை என அவர் மறுத்தார். ஆனால் அவளது புகைப்பட ஆதாரத்தோடு அவர்கள் பேச மனிதர் கொதித்துவிட்டார்.

வைஷாலி தன் தகப்பனுக்கு மறைத்து எதையும் செய்யவில்லை என்பதால், பைரவன் அதிர்ந்துவிடவில்லை. “எனக்கு வேற வழி இல்லைப்பா, நான் இதைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என அவள் சொன்னபொழுது அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

விஷயத்தை கோபாலிடம் கொண்டு வந்து, இரண்டாவது மகா யுத்தத்தை பைரவன் துவங்கி வைக்கத் தயாராக இருக்கவில்லை. மகள் தான் சமாளித்துக் கொள்வதாகச் சொல்ல, அவர்களுக்கு விஷயம் தெரியும் வரைக்கும் செல்லட்டும் என அமைதி காத்தார்.

சொல்லப்போனால் பைரவனுமே ‘தன் மகளுக்கு ஒரு விடிவுகாலம் வந்துவிடாதா?’ என்றுதானே காத்துக்கொண்டு இருக்கிறார். வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் நிச்சயம் இருப்பான் என அவர் உணர்ந்த தருணம் அது.

‘சர்வா நல்லவன் என அவரும் நினைக்கவில்லை. அவனும் கெட்டவன்தான், ஆனால் எந்த அளவுக்கு?’ என்பதில் உள்ள வித்தியாசம்தான் அது. இத்தனை வருடங்களாக கோபாலோடு இருக்கிறார். அவர் மூலமாக, இவருக்கும் பலரைத் தெரியும் தானே.

அந்த பலத்தை உபயோகித்து சர்வாவைப் பற்றி அவரும் தீர விசாரித்தார். அவன் வளர்ந்துவரும் தொழிலதிபன் என்ற ஒரு தகவலைத் தவிர வேறு எதையுமே அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை.

திரை மறைவில் எதுவும் இருக்குமோ என அடியாட்களை வைத்தும் தீர விசாரித்துவிட்டார். அவன் கோபக்காரன், தன் தொழிலை வளர்க்க எதையும் செய்வான். பணம் அவனுக்கு தண்ணீர் பட்ட பாடு என்பன போன்ற தகவல்கள் மட்டுமே கிடைத்தன.

அவனது பெர்சனல் வாழ்க்கையைப்பற்றி விசாரிக்கையில் சிகரெட் மட்டுமே புகைப்பான், மது, மாது என்ற எந்த கெட்டப் பழக்கங்களும் கிடையாது எனத் தெரியவர கொஞ்சம் ஆச்சரியம் கூட கொண்டார்.

அடிக்கடி மும்பை செல்வான் என்ற தகவல் கிடைக்க, அவன் அங்கே, எங்கே செல்கிறான்? என்ன செய்கிறான்? என்ற எந்த தகவல்களையும் அவரால் திரட்ட முடியவில்லை. கடந்த ஒரு வருடமாக அவன் சென்னையில்தான் முழு நேரமும் தங்கி இருப்பதும், மும்பைக்கு சில முறை மட்டுமே சென்று வந்ததும் தெரிந்தது.

அந்த ‘மும்பை’ அவரைக் கொஞ்சம் தொல்லை செய்தாலும், விடாமல் அதைப்பற்றி விசாரிக்கச் சொல்லி இருந்தார். இவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது என அவர் முடிவெடுத்தும் கொண்டார்.

அதனாலேயே பைரவன் மகளைத் தடுக்கவும் இல்லை. கோபாலோ, “உங்களுக்குத் தெரிஞ்சுதான் இது நடக்குதா மச்சான்?” என கேட்ட பொழுது, தனக்குத் தெரியாது என முடித்துவிட்டார்.

தனக்குத் தெரியும் எனச் சொல்லி, பிரச்னையை எதிர்கொள்ள அவருக்கும் ஆசைதான். ஆனால் மகள் தன்னை இதில் இருந்து விலகி இருக்கச் சொல்ல அவரும் அதைக் கேட்டுக் கொண்டார்.

அதென்னவோ தனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அதை சர்வஜித் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு அதிகம் இருந்தது. தன்னை இந்த சுழலுக்குள் இழுத்து விட்டவன் அவன்தான். அப்படி இருக்கையில் தன்னை அவன் காப்பாற்றுவான் என எப்படி தான் நம்புகிறோம் என அவளுக்குப் புரியவே இல்லை.

நிஜத்தில் அதுதான் நடந்தது. எப்படியும் தன்னைக் கண்டு கொள்வார்கள் என அவளுக்குத் தெரிந்தே இருந்தது. அது என்றைக்கு என்பதுதான் அவளது சவாலே. அவள் அரசாங்க அலுவலகம் சிலவற்றுக்குச் செல்ல வேண்டிய அவசியம் வர, சீக்கிரமே அவளைக் கண்டு கொண்டார்கள்.

ஆனால் யாராலும் அவளை நெருங்கவே முடியவில்லை. என்றைக்கு தன்னை வந்து இழுத்துச் செல்வார்களோ என அவள் எதிர்பார்த்திருக்க அப்படி ஒன்று நடக்கவே இல்லை. அவளை நெருங்க முயன்ற எந்த மனிதர்களும் அவளது நிழலைக் கூடத் தொட ‘சர்வஜித்’ அனுமதிக்கவில்லை.

அவளைத் தொட அனுமதிக்கவில்லை என்பதற்காக அவள் நிம்மதியாக இருந்தாள் எனச் சொல்வதற்கு இல்லை. தன்னைத் தொடரும் வாகனங்கள், மனிதர்கள் என அவளுக்குத் தெரியும்தானே.

அவ்வப்பொழுது தகப்பனிடம் மட்டுமே பேசும் அவள், மறந்தும் தாயின் அழைப்புகளையோ, மாமன், மாமாவின் மகன்களின் அழைப்புகளையோ எடுக்கவே இல்லை. எடுத்தால் என்ன நடக்கும் என அவளுக்குத் தெரியும்.

எது எப்படியோ... கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்து திறப்புவிழாவையும் பிரதமரை வைத்து ஏற்பாடு செய்துவிட்டான். அவர் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக அதைச் செய்ய, அப்பொழுது அவருடன் இருந்தான் சர்வஜித். அவன் அங்கே இருந்து இயக்க, வைஷாலி இங்கே மூச்சு முட்டிப் போனாள்.

எத்தனையோ விதமான பிரச்சனைகள், குடைச்சல்கள் என அனைத்தையும் கடந்து அதை வெற்றிகரமாக முடிப்பதற்குள் வைஷாலிதான் துவண்டு போனாள். இதற்குமேல் இழக்க சக்தியே இல்லை என்னும் நிலைக்கு வந்துவிட்டாள்.

சரியாக அதே நேரம் முத்துப்பாண்டி அவளைத் தூக்கி இருந்தான். தன்னை யாரும் நெருங்க அனுமதிக்க மாட்டான் என அவள் நினைத்திருக்க, அன்று அது பொய்யாகிப் போனது. தனக்கு இது நேராது என அசட்டையாக அவள் இருக்க, வெகு சுலபமாக முத்துப்பாண்டியின் கரத்தில் அகப்பட்டு இருந்தாள்.

‘அதுதானே... அவரோட வேலை முடிந்துவிட்டதே. இனிமேல் என்னை காக்க வேண்டும் என அவருக்கு என்ன அவசியம் வந்தது?’ என எண்ணியவளுக்கு அதைத் தாங்கிக்கொள்வது கொஞ்சம் கடினமாகவே இருந்தது.

அவளை தங்கள் வீட்டுக்கு இழுத்துச் சென்றவன், “எவ்வளவு தைரியம் இருந்தால் நம்ம எதிரிக்கே வேலை பார்ப்ப?” என்றவன் அவளை அடிக்க, ருக்மணி ஓடிவந்து அவளைத் தாங்கிக் கொண்டார்.

“டேய், எதுவா இருந்தாலும் வாய்ல பேசுடா... அதென்ன பெண்பிள்ளையை அடிக்கறது?” அவர் துணைக்கு வந்தார்.

“என்னை மிரட்டித்தான் எல்லாம் செய்ய வச்சார்... சொல்லப்போனால் என்னை எங்கேயும் விடாமல் அடைச்சு வச்சு வேலை வாங்கினார்.

“உங்க ஆட்களே எத்தனையோ முறை என்னை நெருங்க முயற்சி செய்தார்களே, அவர்களால் முடிந்ததா? ஆம்பளைங்க அவங்களாலேயே முடியாத பொழுது, ஒரு பெண் நான் எப்படி அங்கே இருந்து தப்பிக்க?” அவள் சொல்ல, அவளை நம்பாத பார்வை பார்த்தான்.

“நாங்க கூப்பிட்ட பொழுது எங்ககிட்டே சொல்லி இருக்க வேண்டியது தானே...?” முத்துப்பாண்டி கேட்டு வைக்க,

“அது... என் ஃபோன் என்கிட்டேயே இல்லை. எல்லாம் என் கூட இருந்த பிரபு கிட்டே தான் இருந்தது” அவள் சொல்ல, அவளை நம்புவதா? வேண்டாமா? என்ற நிலைதான். ஆனால் தங்கள் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டும் அவன் அனைத்தையும் செய்ய வல்லவன்தான் என அவர்களுக்குப் புரிந்தே இருந்தது.

இதைவிட அவர்களுக்கு மிகப்பெரிய இடி என்னவென்றால், அவர்கள் இருக்கும் ஏரியாவில் யார் சொத்துக்களை விற்றாலும் அவர்களுக்குத்தான் முதலில் சொல்ல வேண்டும். கோபால் வீட்டினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு சொத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுக்கவேண்டும். அது அங்கே எழுதப்படாத சட்டமாகவே இருந்தது.

ஆனால் இவர்கள் வீட்டுக்கு நேர் பின்னால் இருந்த இடத்தில்... கிட்டத்தட்ட ஐந்து கிரவுண்ட் இடம், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு மிகப்பெரும் பங்களாவோடு விலைக்குப் போயிருந்தது. அதுவும் அது சர்வாவின் பெயரில் பதியப் பட்டிருக்க, இது எப்படி நடந்தது என அவர்களுக்குத் தெரியவே இல்லை.

அங்கே திறப்புவிழா நடந்த நேரம், இங்கே வீட்டிலும் புரோகிதர்களை வைத்து கிரகப்பிரவேசத்தை நடத்தி இருந்தான். பத்திரப் பதிவு அலுவலகத்தில் தங்களுக்கு விசுவாசமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவன், இதை முடித்துக் கொடுத்துவிட்டு தன் வேலையை மாற்றிக் கொண்டு சென்றிருந்தான்.

அங்கே இருந்த மற்றவர்களிடம் கேட்டால், அனைவருமே தங்களுக்கு எதுவுமே தெரியாது என சாதித்து விட்டார்கள். மால் விஷயத்தில்தான் தோல்வி என்றால், இந்த பங்களா விஷயம் அதைவிட பெரிய அடியாக இருந்தது.

இந்த வீடு விஷயத்தையும் முடிக்க வைஷாலிதான் அலைந்து திரிந்து முடித்து இருந்தாள். அந்த உண்மை தெரிய வரும்பொழுது என்ன ஆகுமோ என இதயம் கிடந்தது அடித்துக் கொண்டது.

இங்கே இவள் இப்படி சிக்கிக் கொண்டிருக்க, சர்வஜித்தோ மும்பையில் பாந்திரா பகுதியில் ஒரு பங்களாவில் இருந்தான். அந்த பங்களாவில் இருந்த ஒரு அறையில் எட்டு, வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் மிகவும் சோர்ந்து போய் படுத்துக் கிடந்தான்.

“ஜீ...” என அவனை அழைத்த ஒரு பெண்மணி, ஹிந்தியில் அந்த சிறுவனைப் பற்றிய விவரங்களை சின்னக் குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த சிறுவனைப் பார்த்த ஹரீஷுக்கு எதுவும் புரியவே இல்லை.

சர்வஜித்தோடு சேர்ந்து மொத்தமாக ஐந்து வருடங்கள் ஆகி இருக்க, இன்றுதான் அந்த சிறுவனை அவன் பார்க்கிறான். அவள் சொன்னதில் இருந்து சிறுவன் ‘டெங்கு’ காய்ச்சல் கண்டு, அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறான் எனப் புரிந்தது.

“ஏன் என்கிட்டே சொல்லலை?” சர்வஜித் சற்று கோபமாகவே கேட்டான்.

“நீங்க உங்களை எதற்காகவும் தொல்லை செய்யக் கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க” அவள் சொல்ல, அந்த படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தான்.

‘இந்த புதுக் கேரக்டர் யாருன்னு தெரியலையே. இவரோட மகனா? ச்சேச்சே... அதுக்கு வாய்ப்பே இல்லை. கொஞ்சம் கூட இவரோட ஜாடையே இல்லையே. அதோட பையனுக்கு பத்து வயசாவது இருக்கும்போல” அவன் நினைக்கையிலேயே அந்த சிறுவன் கண் விழித்தான்.

சர்வஜித்தைப் பார்த்த சிறுவன், சில பல நிமிடங்கள் அவனையே பார்த்திருந்தான். “அங்கிள்... நீங்கதானா?” அத்தனை சந்தேகமாகக் கேட்டான்.

‘ஹப்பா... அங்கிள்ன்னு தான் கூப்பிடறான், அப்பா இல்லை’ ஹரீஷ் ஆசுவாசமானான்.

“ஆமா நானேதான்... எப்படி இருக்க ப்ரவீன்?” என்றவன் அவன் தலை கோதினான். அவன் கேட்டுக் கொண்டிருக்க, அந்த சிறுவனோ அந்த அறை முழுவதும் தன் பார்வையால் அலசினான். அவன் கண்களில் அப்பட்டமாக ஒரு ஏமாற்றம் விரவ, அவன் கண்கள் கலங்கிவிட்டது.

“ப்ரவீன்... நோ... அழக் கூடாது. உனக்கு இப்போதான் உடம்பு கொஞ்சம் சரியாகி இருக்கு” என்றான்.

“நீங்க என்னைப் பார்க்க வர்றப்போ, என் அம்மாவை அழைச்சுட்டு வர்றேன்னு சொன்னீங்க?” என்றவன் அழுதுவிட, ஹரீஷுக்கே ஒரு மாதிரியாகிப் போயிற்று.

“உன்னை உன் அம்மாகிட்டே கண்டிப்பா கூட்டிப் போவேன், ஐ ப்ராமிஸ்...” அவன் சொல்ல,

“எப்போ? எனக்கு என் அம்மாவைப் பார்க்கணும். அவங்க ஃபோட்டோவாவது காட்டுங்களேன். அவங்க ஏன் என்னை குப்பைத் தொட்டியில் போட்டுப் போனாங்க? அவங்களுக்கு ஏன் என்னைப் பிடிக்கலை? இப்போ மட்டும் எப்படிப் பிடிக்கும்?” அடுக்கடுக்காக அவனிடம் கேள்விகளைத் தொடுத்தான்.

“உங்க அம்மா ரொம்ப நல்லவங்க ப்ரவீன். நீ இருக்கறதே அவங்களுக்குத் தெரியாது. அவங்களை ஏமாத்திட்டாங்க” சர்வஜித் தன் மொத்த கோபத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு பேசுவது ஹரீஷுக்குப் புரிந்தது.

“எனக்கு அம்மா வேணும்...” சிறுவன் கொஞ்சம் குரல் உயர்த்த,

“ப்ரவீன்...” சர்வஜித் அவ்வளவுதான் சொன்னான். மறு நிமிடம் தன் வாயை இறுக மூடிக் கொண்டான். ஒரு மாதிரி தேம்பித் தேம்பி அழத் துவங்கினான். அதை சர்வஜித்தால் பார்க்க முடியவில்லை. அவனை எப்படி சமாதானப்படுத்த என்றும் தெரியவில்லை.

“நான் என்ன சொல்லி இருக்கேன் ப்ரவீன்?” இறுக்கமாகவே கேட்டான்.

“நான் தைரியமா இருக்கணும்னு சொல்லி இருக்கீங்க. நான் அழலை...” என்றவன் தன் கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்டான்.

“ஹரீஷ்... இவனை வெளியே அழைச்சுட்டு போ... இவனுக்கு வேண்டியதை வாங்கிக் கொடு” அவன் சொல்ல, ஹரீஷ் அவனைப் பார்க்க, சிறுவன் தன் கரத்தை அவன் பக்கம் நீட்டினான். ஹரீஷ் அவன் கரத்தைப் பற்றிக் கொள்ள, அவனோடு நடந்துவிட்டான்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
சர்வஜித் அந்த பெண்மணியோடு தனித்து பேச விரும்புவது புரிய, ப்ரவீனை அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்றான். “உனக்கு என்ன வேணும் ப்ரவீன்?” ஹரீஷ் கேட்க,

“எனக்கு எதுவும் வேண்டாம்... என்கிட்டே எல்லாம் இருக்கு” என்று பதில் கொடுத்தான்.

உணவு, உடை... விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் என எதைக் காட்டியும் அவன் எதையும் வாங்கிக் கொள்ளவில்லை. ஹரீஷ் அவனாக இரண்டு ரிமோட் கார் வாங்கிக் கொடுக்க, அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.

ப்ரவீனைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டி அவனிடம் பேச்சு கொடுத்தான். அவனது எந்த ஒரு கேள்விக்கும் ப்ரவீன் பதில் சொல்லவே இல்லை. பதில் என்ன, வாயைத் திறக்க கூட இல்லை. ஆனால் வீட்டுக்கு வந்த உடனேயே ஹரீஷ் கேட்ட கேள்விகளை எல்லாம் அப்படியே சர்வஜித்திடம் சொல்லிவிட்டான்.

அதைக் கேட்ட ஹரீஷ், ‘அடக் குட்டிக் குஞ்சானே... உன்னை சின்னப் பிள்ளைன்னு பார்த்தா, எவ்வளவு பெரிய வேலை பார்த்து விட்டுட்ட?’ என எண்ணியவாறு பெரும் கலவரமாக அவனைப் பார்த்தான்.

ஆனால் சர்வஜித் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை. “நல்லா சாப்பிடு, உடம்பைப் பார்த்துக்கோ... அடுத்த முறை நான் உன் அம்மாவை அழைச்சுட்டு வர்றேன்” அவன் சொல்ல, ப்ரவீன் அமைதியாக கேட்டுக் கொண்டான்.

சர்வஜித்தோடு பெரிய ஒட்டுதல் குழந்தைக்கு இல்லையா? இல்லையென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என சர்வஜித் சொல்லிக் கொடுத்து வளர்த்தானா? என எதுவும் ஹரீஷுக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது... இத்தனை முரடனான, இரக்கமில்லாத அவனுக்குள் இருக்கும் ஒரு மென்மையான பக்கம்.

ஆனால் தன் இளக்கத்தை, மென்மையை வார்த்தைகளில் வெளிப்படுத்த அவனுக்கு சுத்தமாக வரவில்லை. வரவில்லை என்பதை விடத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

‘அங்கே அவ்வளவு பெரிய வேலையைப் பார்த்து வச்சுட்டு, இங்கே இந்த பையன்கிட்டே உருகிக்கிட்டு இருக்கார். இதை அப்படிக் கூட சொல்ல முடியாதே’ என நினைத்தான்.

‘இவருக்குள்ளே இன்னும் எத்தனை மர்மங்களைத்தான் ஒளிச்சு வச்சுகிட்டு இருக்கார்? இதெல்லாம் என்ன கதைன்னு கூட தெரியலையேடா’ ஹரீஷ் நிஜத்தில் உள்ளுக்குள் புலம்பிக் கொண்டான்.

‘இந்தப் பையனோட அம்மா யாரு? அவங்களை இவர் எங்கே இருந்து அழைச்சுட்டு வரப் போறார்?’ நினைத்த ஹரீஷுக்கு தலை வலித்ததுதான் மிச்சம். அந்த நேரம்தான் ஹரீஷின் அலைபேசிக்கு அழைப்பு வர, அழைத்துக் கொண்டு இருந்ததோ பிரபு.

“சொல்லு பிரபு...” அவன் கேட்க, அந்தப்பக்கம் அவன் சொன்னதைக் கேட்ட ஹரீஷ் சற்று கலவரமாகவே சர்வஜித்தைப் பார்த்தான்.

“என்ன... மாமா மருமகளை வீட்டுக்கு கூட்டி போய்ட்டாராமா?” சர்வஜித் ஒரு மாதிரிக் குரலில் கேட்டு வைக்க, ஹரீஷுக்கு அவனைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

‘இதென்ன இவர் சண்டைக்கு வாடாங்கற மாதிரியே பண்றார். என்ன செய்யக் காத்திருக்கார்ன்னும் தெரியலை, என்ன செய்யறார்ன்னும் புரியலை. ஆண்டவா... என்னை சஸ்பென்ஸ்லையே வச்சிருக்காரே’ அவனுக்கு ஒரு பெருமூச்சு எழுந்தது.

“ஹரீஷ், என்ன ஆனாலும் நாளைக்கு அவ சென்னையில் இருந்தாகணும்” என்றவன் அவ்வளவுதான் என்பதுபோல் காரில் சென்று ஏறிக் கொண்டான். சர்வஜித் சொல்லிவிட்டால் மாற்றுக் கருத்தே கிடையாதே.

ஹரீஷ் செய்ய வேண்டியது இன்னதென உடனே பார்க்கத் துவங்கி இருந்தான். ஆனால் அந்தே நேரம் அங்கே... வைஷாலி இனிமேல் வேலைக்கே செல்ல வேண்டாம் என குதித்துக் கொண்டு இருந்தார்கள்.

அதுவும் அவர்கள் வீட்டுக்கு வந்த ரத்னா, “இப்போவே இவங்க கல்யாணத்தை முடிச்சுடலாம். அதுக்கு மேலே இவ எங்கே போறான்னு பார்க்கலாம்” தாய் சொல்ல, இவளுக்கு அடி மனதில் அத்தனை கலவரம்.

“அம்மா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க. எனக்கு கான்ட்ராக்ட் முடிய இன்னும் மூணு மாசம் இருக்கு...” தாயிடம் சொன்னாள்.

“பொல்லாத கான்ட்ராக்ட்... எல்லாத்தையும் தூக்கிப் போட்டு பொண்ணா லட்சணமா கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தற வழியைப் பாரு. நீ எங்கேயும் போகப் போறது இல்லை” தாய் சொல்லச் சொல்ல, அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது.

“அம்மா... அப்படியெல்லாம் வர முடியாது. அப்படி நான் வர்றதா இருந்தால் லட்சக்கணக்கில் நாம நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும்” அதைச் சொன்னால் அவர்கள் கண்டுகொள்ளப் போவது இல்லை எனத் தெரிந்தே சொன்னாள்.

“என்ன பணம் கொடுக்கணுமா? யார் வந்து கேட்பா? அவனா? அவன் வரட்டும், அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். உனக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு, இதுக்கு மேலே என்னால் பொறுமையா இருக்க முடியாது” என்ற முத்துப் பாண்டியின் கண்களில் ஆசையும், காமமும் டன் கணக்கில் வழிந்தது.

அவள் அடிமனதுக்குள் ஒரு பயப்பந்து சுழன்று அவளைச் சுருட்டி அடித்தது. அவனிடம் சொல்லிப் புரிய வைக்கலாம் என்றால், காதுகொடுத்து கேட்கவே அவர்கள் தயாராக இல்லை என்கையில் அவளால் என்ன செய்ய முடியும்?

‘அப்போ எல்லாம் அவ்வளவுதானா? முடிந்ததா?’ என எண்ணியவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

“நீ சொல்லிட்டல்ல ரத்னா... நாளைக்கே வேலைகளை ஆரம்பிச்சுடலாம். நாளைக்கு ஜோசியரை வரச் சொல்றேன். இப்போ நீங்க வீட்டுக்குப் போங்க, பொண்ணை பத்திரமா பார்த்துக்கோங்க” என கோபால் பைரவனை பார்த்தவாறே சொன்னார்.

பைரவனைப் பார்த்து, ‘நீ சொன்ன கதையை நான் நம்பவில்லை’ என அவரது பார்வையே சொன்னது. பைரவனுக்கு உடனடியாக எதையாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம். அதற்கான வேலைகளை அவர் பார்க்கத் துவங்கினார்.

தங்கள் வீட்டுக்கு வந்தவுடன், தன் அப்பாவைக் கட்டிக்கொண்டு கண் கலங்கிவிட்டாள். ”என்னப்பா இது? எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்ப்பா... ப்ளீஸ்ப்பா...” தகப்பனிடம் கெஞ்சினாள்.

“முத்துப் பாண்டிக்கு என்னடி குறைச்சல்? கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனை முந்தானையில் முடிஞ்சு வச்சுக்கறது உன் கையில் தான் இருக்கு. அவன் உன்மேலே உயிரையே வச்சிருக்கான். உன்னை ராணி மாதிரி பார்த்துப்பான்” தாய் சொல்லச் சொல்ல அவளுக்கு அந்த பேச்சே பிடிக்கவில்லை.

“விநாயகம் மாமாவும், வேலவன் மாமாவும் கல்யாணத்துக்குப் பிறகு மாறிட்டாங்கன்னு நீ பார்த்தியா?” வெடுக்கெனக் கேட்டாள்.

“அவனுக பொண்டாட்டிகளுக்கு என்னடி குறை வச்சிருக்காங்க? ஊருக்குள்ளே முதல் மரியாதை, MLA பொண்டாட்டின்னு பெருமை... இதைவிட வேற என்ன வேணும்?” ஆங்காரமாக கேட்டார் ரத்னா.

“அதெல்லாம் உனக்குச் சொன்னா புரியாதும்மா” சற்று கோபமாகவே சொன்னாள்.

“இவ்வளவு நாளா நீ செய்ததுக்கு எல்லாம், அவங்க உன்னை உயிரோட விட்டு வச்சிருக்காங்களேன்னு சந்தோஷப்படு. என்ன ஒரு நெஞ்சழுத்தம் இருந்தா இப்படியெல்லாம் செய்திருப்ப. இனிமேல் நீ எப்படி ஆடுறன்னு நானும் பார்க்கறேன்” ரத்னா சொல்ல,

“கொஞ்சமாவது அவளுக்கு அம்மா மாதிரி பேசு ரத்னா. இவளுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை, அவனைப் பிடிக்கலைன்னு இவ்வளவு சொல்றா அதைக் கேட்க்காமல் நீ உன் இஷ்டத்துக்கு செய்தால் என்ன அர்த்தம்?” தன் மகள் கண்ணீர் வடிப்பதை பார்க்க முடியாமல் பைரவன் கொதித்தார்.

“ஆமா, இங்கே எல்லாரும் ரொம்ப புடிச்சுதான் வாழ்ந்துட்டு இருக்காங்களாம். எல்லாம் ரெண்டு பிள்ளை பெத்துக்கற வரைக்கும்தான். ரொம்ப பேசாமல் கல்யாண வேலைகளைப் பாருங்க” எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அதைக் கேட்டு அவருக்கு வெறுத்துப் போனது.

வைஷாலி அன்று காலையில் திறப்புவிழாவில் உண்டது. மதியமும் சாப்பிடப் பிடிக்கவில்லை. இரவிலும் பசியில்லை எனச் சொல்லி தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டாள். பைரவன் தான் செய்ய வேண்டியது இன்னதென திட்டமிட்டு அந்த வேலையைப் பார்க்க வேண்டி வெளியே சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் சோம்பலாக கண் விழித்த வைஷாலிக்கு தலைவலி விண் விண் எனத் தெறித்தது. மிகவும் சிரமப்பட்டு அவள் கண் திறக்க முயன்றாள். அது அவளால் முடியவில்லை என்றே சொல்லலாம்.

‘ஓ காட்... ரெண்டு வேளை சாப்பிடாமல், தண்ணி குடிக்காமல் இருந்ததால் இப்படி இருக்கா?’ என எண்ணியவாறே கண்களைத் திறந்தாள். கண் விழித்து தன் அறையைப் பார்த்தவள் முழுதாக அதிர்ந்து போனாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

“என்ன...? இதெப்படி நான் இங்கே?” என எண்ணியவள் தன் கண்களை கசக்கிக் கொண்டாள். பின்னே... கன்னியாகுமரியில் தன் வீட்டில், தன் அறையில் படுத்தவள், கண் விழிக்கையில் சென்னையில் அவளது வில்லாவில், அவளது அறையில் இருந்தால் அதிராமல் என்ன செய்வாள்?

இதயம் ஒரு மாதிரி தாறுமாறாகத் துடிக்க, வேகமாகச் சென்று முகத்தை அடித்துக் கழுவினாள். நேற்று இரவு அணிந்த அதே இரவு உடையில் அவள் இருக்க, வேகமாக ஆடைகளைக் களைந்து தன்னைப் பரிசோதித்தாள்.

தன்னிடம் எந்தவிதமான மாற்றமும் இல்லை, எந்தவிதமான அந்தரங்க பாதிப்பும் இல்லை எனத் தெரிந்த பிறகே நிம்மதியானாள். நேரம் காலை பதினொன்று எனக் காட்ட, ‘எத்தனை மணி நேரமாக மயக்கத்தில் இருந்தேன்? எப்படி இங்கே வந்தேன்? மயக்க நிலையில் எனக்கு ஏதாவது ஆகி இருந்தால்?’ என என்னென்னவோ நினைத்து கலங்கினாள்.

அத்தனை கலக்கத்திலும் எதில் இருந்தோ தப்பிவிட்ட உணர்வு எழுவதையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.

“பாப்பா... நீ எப்போ பாப்பா வந்த? வர்றேன்னு என்கிட்டே சொல்லவே இல்லையே” அருணா கேட்க, தான் வந்தது இவளுக்கு கூடத் தெரியவில்லை என்றால் இது எப்படி சாத்தியம் என அவளுக்குப் புரியவில்லை.

அவளுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், “அக்கா, சூடா ஒரு டீ கொடுங்க...” அவள் கேட்க, அதற்கு மேலே எந்த கேள்விகளையும் அவள் கேட்கவில்லை.

அவள் காலை உணவைச் சாப்பிடும் நேரம், ரூபி அவளுக்கு அழைத்தாள். நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்ததற்கு வாழ்த்து சொன்னவள், அவள் எப்பொழுது சென்னைக்கு வருகிறாள் எனக் கேட்டாள்.

“நான் சென்னையில்தான் இருக்கேன் ரூபி” அவள் சொல்ல,

“என்னடி சொல்ற? சென்னைக்கு எப்போ வந்த? எப்படியும் நீ வர ரெண்டு நாள் ஆகும்னு நினைச்சேன். சரி... ஆபீஸ்க்கு வர்றியா? இல்லன்னா லீவா?” என்றாள்.

“அது...” என்றவளது அலைபேசியில், “ரிப்போர்ட்” என்ற குறுந்தகவல் சர்வஜித்தின் அலைபேசியில் இருந்து வந்து விழுந்தது.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆபீஸ்ல இருப்பேன் என்றவள் அலைபேசியை வைத்துவிட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றாள்.

அவளைப் பார்த்த உடனே, “பரவாயில்லையே... ரொம்ப சின்சியரா கிளம்பி ஆபீஸ் வந்திருக்கீங்க” என அவன் சொல்ல, அவன் தன்னைப் பார்த்து சிரிக்கிறானோ என இருந்தது.

“என்னை எப்படி இங்கே கூட்டி வந்தீங்க? வழியில் எனக்கு ஏதாவது ஒன்று ஆகி இருந்தால்?” உள்ளுக்குள் நிச்சயம் அந்த பயம் இருக்கவே செய்தது.

“அவ்வளவு தைரியம் இங்கே யாருக்காவது இருக்கா என்ன?” என்றவன் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.

“என்னை விட்டுடுங்க ப்ளீஸ்... எனக்கு இதற்கு மேலே போராட தெம்பு இல்லை” ஒரு மாதிரி சோர்ந்து போய் சொன்னாள். உண்மையில் அவளுக்கு இந்த ஒன்றரை வருட ஓட்டம் அத்தனை மனச் சோர்வைக் கொடுத்து இருந்தது.

“அதுக்குள்ள இப்படிச் சொன்னால் எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்கே” அவன் சொல்ல, நிஜத்தில் அவளால் முடியவே இல்லை.

“ப்ளீஸ்... நான் உங்ககிட்டே உங்களைப் பற்றி, கேட்டதையே மறந்துடுங்க, நானும் மறந்துடறேன்” எத்தனையோ முறை அவனிடம் சொன்னதுதான். ஆனால் மீண்டும் ஒருமுறை சொன்னாள்.

“என்னைப்பற்றி நீ ரூபிகிட்டே சொல்லி இருக்க?” என்றவன் புகையை ஆழ்ந்து இழுக்க, அவளுக்கு மூச்சடைத்தது.

“என்ன? இல்ல... இல்ல...” பதட்டத்தில் பயத்தில் படபடத்தாள்.

“ஓகே... ஓகே... ரிலாக்ஸ்... நான் உன்னை நம்பறேன்” அவன் சொல்ல, அந்த குரலில் நிச்சயம் நக்கல், நையாண்டி என எதுவும் இருக்கவில்லை. ஒரு வேளை அவள் விஷயத்தை கோபாலிடம் சொல்லவில்லை என்பதால் எழுந்த நம்பிக்கையோ என்னவோ?

அவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க, அந்த சிகரெட்டின் வாசனை அவளை என்னவோ செய்தது. “நாம அதைப்பற்றி பிறகு பேசிக்கலாம்... இப்போ உன் சீட்டுக்குப் போ...” அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் அலுவலகத்துக்குள் கொலை வெறியில் நுழைந்து கொண்டிருந்தான் முத்துப் பாண்டி.

பகை முடிப்பான்........
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
25
29
13
Vellkovil
ஹரிஷ் உனக்கு மட்டுமா எங்களுக்கும்தான் சஸ்பென்ஸ் தாங்கலை குழந்தையோட அம்மா வைசாலி???
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
ஹரிஷ் உனக்கு மட்டுமா எங்களுக்கும்தான் சஸ்பென்ஸ் தாங்கலை குழந்தையோட அம்மா வைசாலி???

வைஷாலிக்கு குழந்தையா? ஓ காட்... நோ... ஜோ...
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
122
34
28
Deutschland
முத்து உன் கதை இத்துடன் முடிந்தது .