• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 2.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
பகுதி – 2.

வைஷாலி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் அவளது அலைபேசி இசைத்து அவளைக் கலைத்தது. அழைப்பது யாராக இருக்கும் என அவளுக்குப் புரிந்தாலும் அந்த அழைப்பை ஏற்பதா? வேண்டாமா? என உள்ளுக்குள் ஒருவித மனப் போராட்டமே எழுந்தது.

அழைப்பு நின்று, மீண்டும் அழைப்பு வர வேறு வழியின்றி அழைப்பை ஏற்றாள். “சொல்லுங்கம்மா...” சற்று சோர்வாகவே குரல் கொடுத்தாள்.

“நீதான் சொல்லணும், எப்போ கிளம்பி ஊருக்கு வர்ற?” சற்று கடுமையாகவே அவளிடம் கேட்டார்.

“ம்மா... படிச்சு முடிச்சதும் நான் என்ன சொன்னேன்? ஒரு ரெண்டு வருஷம் என்னை இப்படியே விடுன்னு சொன்னேனா இல்லையா? அப்படியும் ஃபோனைப் போட்டு இப்படி எதுக்கு என் நிம்மதியைக் குலைக்கறீங்க?” சற்று கோபமாகவே கேட்டான்.

“என்னடி வாய் ரொம்ப நீளுது? நான் உன் நிம்மதியைக் குலைக்கிறேனா? எல்லாம் உன் அப்பன் கொடுக்கற தைரியம்தான் உன்னை இப்படியெல்லாம் பேச வைக்குது. என் எதிர்ல இருந்து இப்படி பேசுவியா? நீ அங்கே இருந்து வேலை தேடிக் கிழிச்சது எல்லாம் போதும். ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு கிளம்பி வா” அவளை விட அதிகமாக கத்தினார்.

“அம்மா இன்னும் கொஞ்ச நாள்ம்மா...” கிட்டத்தட்ட கெஞ்சினாள்.

“உனக்கு நான் மாப்பிள்ளை பார்த்தாச்சு. லேட் பண்ணாமல் வந்து சேருற. இல்ல... நான் என்ன செய்வேன்னே தெரியாது” குரல் உச்சமாக வந்தது.

‘என்னது மாப்பிள்ளையா?’ அவள் அதிர்ந்து போனாள். அந்த அதிர்விலோ என்னவோ அலைபேசியை கட் செய்ய வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை.

“என்ன ரத்னா? யார்கிட்டே இவ்வளவு கோபமா பேசிகிட்டு இருக்க? வைஷாலி கிட்டேயா? ஃபோனை என்கிட்டே கொடு” என்ற பைரவன் அலைபேசியை மனைவியிடமிருந்து கைப்பற்றுவது புரிந்தது.

“நீங்க இன்னும் வெளியே போகலையா?” ரத்னா கத்த, அதையெல்லாம் பைரவன் கண்டுகொள்ளவே இல்லை.

“எனக்கு எப்போ வெளியே போகணும், எப்போ வீட்ல இருக்கணும்னு தெரியும். நீ சமையலைப் பார்க்கப் போகாமல் இங்கே என்ன பண்ற? அதுவும் காலங்கார்த்தாலே பொண்ணுக்கு ஃபோனைப் போட்டு இப்படி பேயாட்டம் போடலைன்னா தான் என்ன?” பைரவன் கோபமாக பேச, அதைக் கேட்ட வைஷாலிக்கு அடுத்து நடக்கப் போவது இன்னது எனப் புரிந்து போனது.

அப்படியும் அலைபேசியை வைத்துவிடலாம் என்றால், ஒரு வேளை அம்மா சொன்ன ‘மாப்பிள்ளை’ யாராக இருக்கும் என அவர்கள் பேச்சில் வெளிப்படுமோ என்ற எண்ணத்தில் அமைதி காத்தாள்.

அவள் பயந்தது போலவே, “என்ன நான் பேயாட்டம் போடறேனா? என் அப்பன் வீட்டு சொத்தில் உட்கார்ந்து சாப்ட்டுட்டு என்னையவே குத்தம் சொல்லுவீங்களா? உங்களுக்கு எவ்வளவு திணக்கம் இருக்கணும்? இருங்க நான் என் அண்ணனுக்கு கூப்பிடறேன்” ரத்னா கூச்சலிட வைஷாலிக்கு கண்கள் கலங்கிப் போனது.

சிஏ படித்து, தன் அரசியல்வாதி மாமாவின் அனைத்து சொத்துக்கள், நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை பார்க்கும் தன் தகப்பனை தாய் பேசுவது மிகவும் அதிகம் எனத் தோன்றியது.

அதோடு அவளது அப்பா ஒன்றும் வேறு வழியின்றி அவரது மாமாவோடு இருக்கவில்லையே. அவர்கள்தானே இவரை வேறு எங்கும் செல்ல விடாமல், பல மடங்கு பணம் கொடுத்து பிடித்து வைத்து இருக்கிறார்கள். அதை தாய் இப்படி திரித்துப் பேச, கடுப்பாக வந்தது.

அவளுக்கும் கணக்கில் அதிக ஆர்வம் இருந்த பொழுதும், தந்தையைப் போல சிஏ படிக்காமல் போனதும் அதனால்தானே. அவர்களுக்கு இன்னொரு அடிமையாக தானும் சிக்கிவிடக் கூடாது என்பதால் தானே கெமிக்கல் இஞ்சினியரிங் படித்தாள்.

அதைவிட எந்த துறையை தேர்ந்தெடுத்தால், தன் மாமனின் நிழலில் இருந்து வெளியே செல்ல முடியும் என யோசித்தே செய்தாள். இல்லையென்றால் அவர்களுக்கு இருக்கும் எத்தனையோ தொழில்களில் ஒன்றில் அவளைப் போட்டு புதைத்து இருப்பார்களே.

“எங்கே கூப்பிடு பார்ப்போம்... அவனுக இதுவரைக்கும் என்னை என்ன பண்ணிட்டானுக? இனிமேல் என்னை என்ன பண்ணிடப் போறானுகன்னு நானும் பார்க்கறேன்” பைரவன் பேச, ரத்னாவுக்கு உடுக்கை அடித்த நிலைதான்.

“அவங்க ஒன்னும் உங்களுக்கு பயந்துகிட்டு பேசாமல் இருக்கலை. நான் நிம்மதியா சந்தோஷமா இருக்கணும்னு தான் பேசாமல் இருக்காங்க. நான் புருஷன், பிள்ளைன்னு வாழணும்னு தான் உங்களை விட்டு வச்சிருக்காங்க. இல்லன்னா நீங்க எல்லாம் எங்களுக்கு ஒரு ஆளா?” ரத்னா வார்த்தைகளில் விஷம் தோய்த்தாள்.

“நீ நிம்மதியா இருக்கணும்னு தான் என் உயிரை வாங்கறாங்களே, எனக்கு அது தெரியாதா? என் வழியைப் பார்த்துக்க எனக்குத் தெரியாமல் இல்லை” பொதுவாகவே ரத்னா பேசத் துவங்கினால் அமைதியாகப் போய்விடும் அவர், இன்று பேசினார்.

“நல்லா பார்ப்பீங்களே... என்ன பழைய காதலி கூட போய்டலாம்னு நினைப்போ? அவ புருஷனும் போய் சேர்ந்துட்டானே. இனிமேல் என்ன...? பழைய காதலியை சேர்த்துக்கலாம்னு இருக்கோ? விடமாட்டேன்” அத்தனை ஆங்காரமாக பேசினாள்.

“அவளை இப்படி அபாண்டமா பேசாதடி” திருமணம் முடிந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தன் அத்தை மகள் இவள் வாயில் விழுந்து எழுகிறாளே என்று இருந்தது.

“ஓஹோன்னானா... காதலியைப் பேசின உடனே பொத்துகிட்டு வருதோ?” அவிழ்ந்த கொண்டையை அள்ளி முடிந்துகொண்டு கத்தினார் ரத்னா.

“அவ பிள்ளைகளுக்கே கல்யாணமாகி பேரன் பேத்தி எல்லாம் எடுத்துட்டா. ஆனா அவ இன்னும் உன் வாயில் விழுந்து அரை பட்டுகிட்டு இருக்கா பார்” பைரவனுக்கு மனதை என்னவோ செய்தது.

“அவ சாகற வரைக்கும் பேசுவேன்... என்னை நிம்மதியா வாழ விட்டாளா அவ? நீங்க என்ன கேட்கறது? நான் அவளைப் பேசினா உமக்கு வலிக்குதோ?” ரத்னா குத்திப் பேச, பைரவனுக்கு மனதே விட்டுப் போனது.

“என்னவோ உனக்கு மறைச்சு உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டது மாதிரி பேசற? இப்படியெல்லாம் அபாண்டமா பேசாத, நாக்கு அழுகிப் போய்டும்” தன் வாழ்க்கையில் இந்த ரத்னா விளையாடிய விளையாட்டுகள் எல்லாம் அவருக்கு கண்முன் விரிந்தது.

“என்னய்யா சொன்ன? என் நாக்கு அழுகிப் போய்டுமா? அவதான் அழுகிப் போய்டுவா. பீத்த சிறுக்கி, என்ன மாய்மாலம் பண்ணாளோ, இப்ப கூட அவளுக்கு பரிஞ்சுகிட்டு வர்றியே. உன்னை நம்பி என் பொண்ணை வீட்ல உக்காத்தி வைக்கச் சொல்றியா? நடக்காதுய்யா... அதுக்குத்தான் அவளை வீட்டுக்கு வரச் சொல்றேன்” மனைவி பேச, அப்பொழுதுதான் மகள் தொடர்பில் இருப்பதே அவர் நினைவுக்கு வந்தது.

அதே நேரம், தாய் தான் பயந்த விஷயத்தை தொட்டுவிட்டது புரிய, வைஷாலி தன் செவிகளை தீட்டிக் கொண்டாள். கூடவே தாய் பேசிய அந்த பேச்சுகள் அவளையும் என்னவோ செய்தது.

கையில் இருந்த அலைபேசியை அவர் பார்க்க, மகள் இன்னும் இணைப்பில் இருப்பது தெரிந்தது. அதைப் பார்த்த உடனே மனம் ஒரு மாதிரி கசங்கிப் போனது.

இத்தனை வருடங்களில், மனைவி வாயைத் திறந்து வேறு மாதிரி பேசத் துவங்கினாலே அவர் பேச்சை நிறுத்தி விடுவார். இரு கை தட்டினால் தானே ஓசை வரும்? ஒரு கை மட்டும் வீசினால் ஓசை வருமா என்ன?

இன்று மகள் எதிரில் இல்லாமல் போகவே, அவரும் மனம் தாளாமல் பேசிவிட்டார். ஆனால் இப்படியான பேச்சுக்கள் மகளின் மனதை எந்த அளவுக்கு பாதிக்கும் என அவருக்குத் தெரியாதா என்ன?

அலைபேசியை எடுத்துக்கொண்டு வேகமாக மாடிக்குச் சென்றுவிட்டார். “பாப்பா...” அவர் மெதுவாக குரல் கொடுத்தார்.

“அப்பா... எப்படிப்பா இருக்கீங்க?” மகள் கேட்க, தான் அவளிடம் கேட்க வேண்டிய கேள்வியை மகள் தன்னிடம் கேட்க, அந்த மனிதருக்கு கண்கள் பனித்தது.

“எனக்கென்னம்மா? நான் நல்லா இருக்கேன். நீ எப்படிம்மா இருக்க? நீ வேலைக்குப் போகணும்னு அவசியமே இல்லை, கொஞ்ச நாள் அங்கேயே நிம்மதியா இருந்துட்டு வாம்மா” அவர் சொல்ல, அவளுக்கு அழுகை முட்டியது.

‘அப்பா எத்தனை பாசமான மனிதர், அவருக்குப் போய் தன் தாயைப் போன்ற பெண் ஒருத்தி மனைவியாக வாய்த்திருக்க வேண்டாம்’ என அவளுக்கு விவரம் வந்த பொழுது நினைத்த அதையே இப்பொழுதும் நினைத்துக் கொண்டாள்.

அவளுக்குத் தெரியும், தன் தகப்பன் இத்தனை அவமானங்களையும், ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டு ரத்னாவோடு வாழ்வதே அவளுக்காகத்தான். அவளுக்கு பன்னிரண்டு வயது இருக்கும், அப்பொழுதும் கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை.

ஏதோ ஒரு பெண்ணோடு தன் அப்பாவையும் தொடர்பு படுத்தி தாய் பேசுகிறாள் என அவளுக்கு புரிந்த நாள் அது. இதற்கு முன்னரும் தகப்பனை தாய் கரித்துக் கொட்டிக் கொண்டேதான் இருப்பாள். அது எதனால் என அவளுக்குப் புரிந்ததே இல்லை.

ஆனால் அன்று ரத்னா பேசியது அப்பட்டமாக அவளுக்குப் புரிய, மகளின் முன்னால் மனைவி இப்படி பேசவே அவமானமும், கோபமும் போட்டி போட, பைரவன் மனைவியை எதிர்த்து பேசிவிட்டார்.

இத்தனை வருடங்களாக தன் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசி இராத கணவன் இன்று பேச, அவ்வளவுதான், ரத்னாவுக்கு எங்கே இருந்துதான் அத்தனை ஆத்திரமும் ஆங்காரமும் வந்ததோ, அவரை கை நீட்டி அடித்துவிட்டாள்.

மனைவி இதுவரை வாய்க்கு வந்தபடி பேசுவதை தாங்கிக் கொண்டவருக்கு இந்த அவமானம், அதுவும் தான் பெற்ற மகளின் முன்பாகவே நடந்துவிட அவரால் தாங்க முடியவில்லை. அடுத்த நிமிடம், தன் உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டவர் வீட்டை விட்டு வெளியேறப் போனார்.

அதைப் பார்த்த ரத்னாவோ, “நீ எங்க போனாலும் இங்கேதான் வந்து நின்னாகணும். அது உனக்கும் தெரியும்னு நினைக்கறேன்” அவள் பேச, நின்று நிதானமாக அவளைப் பார்த்தார்.

“நான் எங்கே இருக்கேன்னு தெரிஞ்சா தானே மறுபடியும் என்னை இங்கே வர வைப்ப? அந்த வாய்ப்பையே நான் உங்களுக்கு கொடுக்கப் போறதில்லை” அவர் சொல்ல, அங்கே கிடந்த சோபாவில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

அழுகையோடு தகப்பன் வெளியே செல்லப் போகிறான் என்பதைக் கண்ட வைஷாலி ஓடிபோய் தகப்பனைக் கட்டிக் கொண்டாள். தகப்பனின் கூனி குறுகிய தோற்றமும், அவமானம் சுமந்த முகமும் அவளை என்னவோ செய்தது. தாய் அடித்த அவரது கன்னத்தை தன் கரத்தால் வருடிக் கொடுத்தாள்.

அது அவரை இன்னுமே உடைத்துப் போட, அதில் ஒரு மிகப்பெரும் ஆறுதலையும் உணர்ந்தார்.

“என்னையும் உங்களோட அழைச்சுட்டு போய்டுங்கப்பா. என்னை இங்கே தனியா விட்டுப் போயிடாதீங்கப்பா. எனக்கு பயமா இருக்குப்பா. நீங்களும் இல்லன்னா நான் செத்துப் போய்டுவேன்ப்பா” வைஷாலி அவரைக் கட்டிக்கொண்டு அழ அப்படியே நின்றுவிட்டார்.

தன் மகள் செத்துப் போவேன் எனச் சொல்வதா? அவர் இத்தனை காலம் ரத்னாவோடு வாழ்ந்ததே தன் மகளுக்காகத்தானே. அப்படி இருக்கையில் மகள் செத்துப் போகிறேன் எனச் சொன்னால் அவர் நிலை என்னவாகும்?
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
அந்த நொடி முடிவெடுத்தார், தன் மகள் அவளது சொந்தக்காலில் தனியாக நிற்கும் வரைக்கும் அவளுக்காக மட்டுமே வாழ்வது என உறுதியானார். “பாப்பா... என்ன பேசற நீ? செத்துப் போறதா? அதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை பாப்பா, அப்படியெல்லாம் பேசக் கூடாது.

“உனக்கு இந்த அப்பா இருக்கேன். எதுவா இருந்தாலும் இந்த அப்பா பார்த்துப்பேன். நான் எங்கேயும் போகலை பாப்பா, இங்கேயே இருக்கேன்” என்றவர் அதற்குப் பிறகு எத்தனையோ விதமான துன்பங்கள், பேச்சுக்கள் வந்த பொழுதும் பொறுமை காத்தார்.

ரத்னாவுக்கு கணவன் மகளுக்காக எனப் பார்ப்பது புரிந்து போக, தேள் கொடுக்காக இருந்த அவளது நாக்கு, பாம்பின் விஷமாக மாறிப் போனது.

மகளுக்காக என்றே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார். மனைவியோடு எந்த பேச்சுக்களும் வைத்துக் கொண்டதே இல்லை. அவள் பன்னிரண்டாவதை முடித்த உடனே, மனைவியின் எதிர்ப்பையும் மீறி அவளை சென்னைக்கு அனுப்பி படிக்க வைத்தார்.

ரத்னா எத்தனையோ வழிகளில் முயன்ற பொழுதும் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

அவள் படித்து முடித்த உடனே திருமணம் என குதித்த மனைவியை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் மகளை வேலைக்கு அனுப்பினார். அவர்களுக்கு சென்னையில் சொந்தமாக ஒரு வில்லா இருக்கவே, மகள் அங்கேதான் தங்கி வேலைக்குப் போய்க்கொண்டு இருந்தாள்.

ஆனால் திடுமென வைஷாலி வேலைக்குச் சென்ற கம்பெனியில் ஆள் குறைப்பு செய்யப்பட, எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி சிலரது வேலை பறிக்கப் பட்டது. அதில் இவளும், இவளது தோழி ரூபியும் ஒருத்தி.

கணவனின் பிடிவாதத்துக்காக மகளை வேலைக்கு அனுப்பிய ரத்னா, மகளுக்கு வேலை பறிபோய்விட்டது எனத் தெரிந்தது முதலே அவளை நச்சரிக்கத் துவங்கி விட்டார். அவளை உடனடியாக வீட்டுக்கு கிளம்பி வரச் சொல்லி, அவளுக்கு உடனே திருமணத்தை முடிக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றார்.

எனவேதான் விடிந்தும் விடியாத நேரத்தில், மகள் என்றும், கணவன் என்றும் பாராமல் அத்தனை பேச்சுக்கள் பேசினார்.

வைஷாலி தகப்பனின் பேச்சைக் கேட்டு மெல்லியதாக விசும்ப, “பாப்பா, அழறியா? ஏன் பாப்பா?” மனிதன் இந்தப் பக்கம் பதறினார்.

“நான் உங்களை பிடிச்சு வச்சிருக்கக் கூடாதுப்பா. என்னால்தான் உங்களுக்கு நிம்மதி என்பதே இல்லாமல் போச்சு” அழுகையினூடே புலம்பினாள்.

“பாப்பா... என் வாழ்க்கை இப்படி ஆனதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது பாப்பா. அதை நீ முதல்ல புரிஞ்சுக்கணும். பாப்பா இப்போ அழுகையை நிறுத்தப் போறியா இல்லையா?” அவர் கொஞ்சம் குரல் உயர்த்தி அதட்டவே, அவளது அழுகை மட்டுப்பட்டது.

“என் மொத்த சந்தோஷமும் நீதான் பாப்பா. நீ இப்படி பேசலாமா?” அவர் வருத்தமாக கேட்க, தான் தகப்பனை வருத்தப்படுத்தி விட்டது புரிந்தது.

“என்னை மன்னிச்சுடுங்கப்பா, இனிமேல் இப்படி பேசலை” வேகமாகச் சொன்னாள்.

“நீ அங்கே நிம்மதியா, சந்தோஷமா இருக்கணும்னு தானே நான் ஆசைப்படறேன். அதை விட்டு நீ இப்படி அழுதால் எப்படி பாப்பா?” அதென்னவோ அந்த மகளுக்காகவே வாழும் அவருக்கு அவளது கண்ணீரைக் காணும் தைரியம் இருக்கவில்லை.

“இல்லப்பா... நான் அழலை... அழலை... ஈ... ஈ... ஹி... ஹி... பாருங்க சிரிக்கறேன்” தகப்பன் வருத்தப்படுவது தாளாமல் முயன்று சிரித்தாள்.

“சரி பாப்பா... நீ எதுக்கு அவ ஃபோன் போட்டா எல்லாம் எடுக்கற? அதுவும் காலையிலேயே ஃபோனைப் போட்டிருக்கா?” ஆற்றாமையாக கேட்டார்.

“என்னை என்னப்பா செய்யச் சொல்றீங்க? ஃபோனை எடுக்கலைன்னா, எடுக்கற வரைக்கும் கால் பண்ணிகிட்டே இருப்பாங்க. அது இன்னும் கடுப்பாகும்” அவள் புலம்ப, அவருக்கு ஒரு பெருமூச்சு எழுந்தது.

“அவ பேச்சை விடு பாப்பா, நீ சொல்லு... எப்படி இருக்க? ரூபி எப்படி இருக்கா? அவளுக்காவது வேலை கிடைச்சுதா? உனக்கு பணம் வேணும்னா கேளு பாப்பா, அனுப்பி விடறேன். நீ சந்தோஷமா இருக்கணும், இந்த அப்பாவுக்கு அது மட்டும்தான் வேணும்” அவர் சொல்ல, அவள் உள்ளம் நெகிழ்ந்து போனது.

“அதெல்லாம் அக்கவுண்டில் நிறையவே இருக்குப்பா” என்றாள். மாதம் பிறந்தால் அவளது அக்கவுண்டுக்கு ஆறிலக்க அளவுக்கு பணம் அவர் போட்டு விட்டுவிடுவாரே.

“நான் இவ்வளவு செய்யறது எல்லாம் உனக்காகத்தான் பாப்பா” அவர் சொல்ல அவளுக்கு மட்டும் அது தெரியாதா என்ன? தனக்கு ஒரு குடும்ப அமைப்பை, தாயை, தந்தையை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தானே அவர் இத்தனை அடங்கிப் போகிறார்.

“நானும் ரூபியும் நல்லா இருக்கோம்ப்பா. நாங்க கெமிக்கல் இஞ்சினியரிங் படிச்சதுக்கு, கம்பியூட்டர் இஞ்சினியரிங்கே படிச்சு இருக்கலாம். எங்கேயாவது ஒரு சின்ன கம்பெனியிலாவது வேலை கிடைச்சிருக்கும். இப்போ என்னன்னா...” அவள் புலம்ப,

“பாப்பா...” சிறு கண்டனமாக குரல் கொடுத்தார். அவள் அதைப் படித்திருந்தால் என்னவாகி இருக்கும் என அவருக்குத் தெரியுமே.

“முடிவு எடுக்க முன்னாடி யோசிக்கணும் பாப்பா. முடிவு எடுத்த பிறகு அதுக்காக வருத்தப்படுவது முட்டாள்த்தனம். இப்போ இந்த படிப்புக்கு என்ன குறைஞ்சு போச்சு? அதெல்லாம் நல்ல வேலையாவே கிடைக்கும்” அவர் சொல்ல, தகப்பனின் பேச்சில் அமைதியாகிவிட்டாள்.

பைரவனின் இந்த குணம் தானே அவரை எடுத்த முடிவில் இன்னும் உறைத்து நிற்க வைத்திருக்கிறது. இன்று வரைக்கும் ரத்னாவை தான் திருமணம் செய்திருக்கவே கூடாது என அவர் எந்த இடத்திலும் சொன்னதே இல்லை.

தன் இரண்டு தங்கைகளில் திருமணம், அவரைப் பெற்றவர் விட்டுச் சென்ற கடன், அதுவும் தாயின் புற்றுநோய் சிகிச்சைக்கு என தன் சக்தியையும் மீறி பைரவனின் அப்பா மனைவிக்கு என செலவு செய்தார். அப்படியும் மனைவியை அவரால் காப்பாற்ற முடியவில்லை.

மனைவி போன துக்கம், கடன் சுமை அனைத்தும் சேர, பைரவனின் அப்பா தற்கொலை செய்துகொண்டார். பெற்றவர்கள் நிம்மதியாக போய் சேர்ந்துவிட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இருந்த கடன் சுமை, தங்கைகளின் பொறுப்பு பைரவனின் தலையின்மேல் விழுந்தது. அந்த காலத்திலேயே சிஏ படித்தவர் அவர்.

அவரது அத்தை மகளை அவர் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அவள்மேல் அத்தனை ஆசை கொண்டிருந்தார். அவளுக்கும் அப்படித்தான். ஆனால் பைரவனின் மீது ரத்னாவின் பார்வை விழ, அனைத்தும் தலைகீழாகிப் போனது.

அவர்கள் ஊரிலேயே யாரும் படிக்காத படிப்பு, அழகு, திறமை எல்லாம் சேர்ந்தவரை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினாள். அவர்மேல் ஒருவித வெறியே கொண்டிருந்தாள். அதுவும் இவர்கள் திருமணத்துக்கு கேட்டு, பைரவன் மறுத்த பொழுது வெறிபிடித்த மனநிலைக்கே சென்றுவிட்டாள்.

ஏனென்றால் தன் தோழிகளிடம் எல்லாம் ‘அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். அவர் எனக்குத்தான்’ என சவால் விட்டிருக்க, அதில் தோற்பதா என்ற மனநிலை ரத்னாவுக்கு.

விளைவு... அரசியல்வாதியான அவளது அண்ணன் கோபால், பைரவனின் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கினார். அப்படியும் பைரவன் தன் அத்தை மகளைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாகச் சொல்லி போராடினார்.

இரு குடும்பங்களுக்கும் ரத்னாவின் அண்ணன் கோபால் கொடுத்த அழுத்தம். இறுதியில் பைரவனின் அத்தை மகள் வேறு ஒருவனை அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டு போய்விட்டாள்.

அவள் அப்படிச் செய்யவில்லை என்றால், அவளைக் குடும்பத்தோடு அழித்துவிடுவோம் என மிரட்ட அவளுக்கும் வேறு வழி இருக்கவில்லை. குடும்ப சூழல், தங்கைகளில் வளமான எதிர்காலம், கடனில் இருந்து விடுபட, பைரவன் தன்னை இந்த வாழ்க்கைக்குள் கொண்டு வந்தார்.

அவரால் தன் படிப்பை வைத்து சுயமாக நின்று, வேலை பார்த்து அனைத்தையும் பார்த்துக்கொள்ள முடிந்து இருக்கும். ஆனால் அதற்கு சில காலங்கள் ஆகி இருக்கும். தங்கைகளுக்கு இப்பொழுது இருக்கும் வளமான வாழ்க்கை இருந்து இருக்காது.

அதையெல்லாம் பார்த்துதான் நிலைமையின் தீவிரம் தெரிந்தே இந்த வாழ்க்கைக்குள் நுழைந்தவர். அப்படி இருக்கையில் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கையில் தன்னை முழுதாக பொருத்திக் கொள்ளவே முயன்றார்.

ஆனால் ரத்னாவின் சந்தேக புத்தி அவர்கள் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு இருந்தது. அதையும் கடந்து அதில் வெற்றிபெறவே விரும்பினார். ஆனால் அதை விடாமல் தொல்லை செய்தால் அவரும் என்னதான் செய்ய?

“பாப்பா, வேற ஏதாவது கம்பெனிக்கு அப்ளை பண்ணி பார்க்கறது தானே?” அவளது மௌனத்தை அவரே கலைத்தார்.

“அப்ளை பண்ணி இருக்கேன்ப்பா. இங்கே ஒரு பெயிண்ட் கம்பெனியில் வாக்இன் இன்டர்வியூ போட்டு இருக்காங்கப்பா. இன்னும் ரெண்டு நாளில் அது இருக்கு. அதுக்குப் போகணும். நிறைய போட்டி இருக்கும், அதுதான் யோசனையா இருக்கு” அவள் கவலையாகச் சொல்ல, பொறுமையாக கேட்டுக் கொண்டார்.

“அதுக்கு ஏம்மா சோகமா இருக்க? உனக்குத்தான் அந்த வேலைன்னா, எந்த சூழ்நிலையிலும் அது கிடைக்கும். நம்பிக்கையை தளர விடாமல் போயிட்டு வா. வந்து எனக்கு நல்ல செய்தி சொல்லு” என்றார்.

“சரிப்பா... அப்படியே செய்யறேன். நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க. அப்பா... அம்மா...” சற்று தயங்கினாள்.

“என்னம்மா? என்னன்னு சொல்லு...” அவளது தயக்கம் உணர்ந்து அவளிடம் கேட்டார்.

“அதுப்பா... அம்மா என்னவோ மாப்பிள்ளை பார்த்து வச்சிட்டேன்னு சொன்னாங்கப்பா” தாய் எதையும் விளையாட்டுப் பேச்சாக சொல்ல மாட்டார் என்பதால் அவள் குரலில் அத்தனை கலவரம் தெரிந்தது.

“என்ன? அப்படியா சொன்னா? நீ அதைப்பத்தி எல்லாம் யோசிக்காதம்மா. எல்லாம் இந்த அப்பா பார்த்துக்கறேன். நீ நிம்மதியா இரு, நல்லா சாப்பிடு, உடம்பை பார்த்துக்கோ. அப்பா வச்சுடவா?” என்றவர் அலைபேசியை வைத்துவிட்டார்.

உள்ளுக்குள் பைரவனுக்கு அப்படி ஒரு யோசனை ஓடியது. ‘மாப்பிள்ளை பார்த்துட்டாளா? அது யாரா இருக்கும்?’ என எண்ணியவருக்கு எதுவும் புரியவில்லை. அதே நேரம் மனைவி பார்த்திருக்கும் மாப்பிள்ளை அப்படி ஒன்றும் நல்லவனாக இருக்க வாய்ப்பே இல்லை எனத் தோன்றியது.

‘இதை இப்படியே விட்டுடறதா? இல்லன்னா அவகிட்டே கேட்கறதா?’ அவருக்குள் அத்தனை குழப்பமாக இருந்தது. எவ்வளவு நேரம்தான் மாடியிலேயே இருக்க முடியும்? அவர் கீழே இறங்கி வர, ரத்னா கிச்சனுக்குள் கத்திக் கொண்டிருப்பது கேட்டது.

‘இவ யாரையுமே நிம்மதியா இருக்க விடவே மாட்டாளா?’ அவருக்கு ஒரு பெருமூச்சு எழுந்தது.

காலையில் எழுந்தவுடன் டீ காபி எல்லாம் மனைவி கையால் குடித்த நினைவே அவருக்கு இல்லை என்பதால், டீ குடிக்க வேண்டி வெளியே செல்ல முயன்றார்.

மனைவியின் அலைபேசியை அங்கே இருந்த டேபிள்மேல் வைத்தவர் அங்கிருந்து செல்ல முயல, “ஒரு நிமிஷம்...” மனைவியின் குரல் அவரைத் தேக்கியது.

‘என்ன?’ என்பதுபோல் நின்று அவர் பார்க்க,

“இன்னைக்கு எங்க அண்ணா வீட்ல இருந்து இங்கே வராங்க” ஒரு மாதிரி குரலில் ரத்னா சொல்ல, அவரது புருவம் முடிச்சிட்டது.

‘அதுக்கு? இதென்ன புதுசா? இவ அண்ணன் என்ன இங்கே இவளைப் பார்க்க வந்ததே இல்லையா?’ என்ற பாவனையோடு மனைவியைப் பார்த்தார்.

“முத்துப்பாண்டிக்கு வைஷாலியை பிடிச்சிருக்காம். பொண்ணு கேட்டு வராங்க. அவளுக்கு முத்துப்பாண்டிதான் மாப்பிள்ளைன்னு நான் முடிவு பண்ணிட்டேன். விரும்பறவனுக்கு பொண்ணைக் கொடுத்தால்தான் என் பொண்ணு சந்தோஷமா இருப்பா” ரத்னா சொல்லிக் கொண்டே போக, பைரவனின் மனதுக்குள் இடி இறங்கியது.

பகை முடிப்பான்.....
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
Nice
heroine soft pola
antha terror hero ku ipadi ouru jodiya

மிக்க நன்றி!

இப்படி முரட்டு ஆட்களுக்கு, இப்படிப்பட்ட பெண் தானே அமையுது என்ன செய்ய?
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
122
34
28
Deutschland
பணத்தால அனைத்தையும் வாங்கலாம் என்று நினைக்கிறாங்க ரத்னா.
அப்பா ,மகள் ரொம்ப கஷ்டப்படணும்போலவே.
ரத்னா ,முத்துபாண்டியிடம் இருந்து இவங்க எப்படி தப்ப போகிறாங்க.
 
  • Like
Reactions: Rampriya

Rampriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 13, 2022
39
41
18
Otteri, Chennai
அருமையான பதிவு 🤩🤩
இந்த ரத்னா சரியான சொர்ணாக்கா வா இருக்கே 😮😮😮
 
  • Like
Reactions: Thani

Malarthiru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 15, 2023
150
7
28
VILLUPURAM
பாவம் அப்பாவும் பொண்ணும் 😔😔😔😔😔
முத்துப்பாண்டி யா அது யாருடா
இவன் எப்படியோ 🤔🤔🤔🤔🤔
வைஷு 🤗🤗🤗🤗