• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 4.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
பகுதி – 4.

சென்னை...

வைஷாலி, அந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்தின் வருகைக்காக காத்திருந்தாள். முக்கியமான நாளின் தன் வண்டி சதி செய்துவிட்டதில் சற்று எரிச்சலாக வந்தது. தன் அலைபேசியை எடுத்தவள், ரூபிக்கு அழைக்க, அவளது அழைப்பை ஏற்றவள், “சொல்லுடி...” என்றாள்.

“ரூபி எங்கே இருக்க? என் வண்டி கழுத்தை அறுத்துடுச்சு... நீ வந்தால்தான் ஆச்சு” சற்று பதட்டமாக பேசினாள்.

“அதுக்கு எதுக்குடி இவ்வளவு டென்ஷன் ஆகற? மணி எட்டுதான் ஆகுது. பத்து மணிக்குதான் இன்டர்வியூ. நாம தவழ்ந்து போனால் கூட அரைமணி நேரத்தில் அங்கே போய்டலாம். நீயும் டென்ஷனாகி, என்னையும் டென்ஷன் பண்ணாத.

“நான் என் வண்டியில்தான் வரப் போறேன், நீ எங்கே இருக்கன்னு மட்டும் சொல்லு” தோழியின் பதட்டத்தில் கொஞ்சம் கூட பாதிக்கப் படாதவளாக கேட்டாள்.

“நான் வீட்ல இல்லைன்னு எப்படிடி சரியா கண்டு பிடிச்ச?” ஆச்சரியமாகக் கேட்டாள்.

“ம்... உன் வீட்டு கேமராவில் பார்த்தேன். படுத்தாதடி, உன் வீட்டு ஏரியாப்பக்கம் வண்டி வர்றதே அபூர்வம். இப்போ என்னன்னா நீ பேசும்போது பின்னாடி அவ்வளவு வண்டி போற சத்தம் கேட்குது அதை வச்சுத்தான் சொல்றேன். இப்போ சொல்லு... எங்கே இருக்க?” நிதானமாகவே கேட்டாள்.

“ஓ... எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பஸ் ஸ்டாப்ல தான் நிக்கறேன். நீ வா...” பார்வையை இங்கும் அங்கும் சுழல விட்டவாறே சொன்னாள்.

“வண்டி ஸ்டார்ட் ஆகலைன்னு தெரிஞ்ச உடனேயே வீட்லேயே இருந்துட்டு எனக்கு கூப்ட்டு இருக்க வேண்டியது தானே. எதுக்கு இப்போ அவ்வளவு தூரம் நடந்து வந்த நீ?” மென்மையாக கடிந்து கொண்டாள்.

“ரூபி... வீட்ல இருக்கவே முடியலை டி... நிஜமாவே பயங்கர டென்ஷன்” தாய் கொடுக்கும் அழுத்தத்தில் நிஜமாகவே அவளுக்கு அழுகையே வரும்போல் இருந்தது.

“அட ஆண்டவா... என்னடி இது? என்னவோ நீ சம்பாதிச்சுக் கொட்டலைன்னா, உங்க வீட்டில் அடுத்த வேளை சாப்பாடே சாப்பிட முடியாதுங்கற மாதிரி பேசற. இதெல்லாம் ரொம்ப ஓவர் டி” வைஷாலியின் வீட்டின் செல்வநிலை தெரிந்தவள் என்பதால் கேலியாகச் சொன்னாள்.

“அப்படி இருந்தால் கூட இவ்வளவு டென்ஷன் ஆக மாட்டேன் டி. இது வேற... நீ வா...” பேசுகையிலேயே கண்கள் கலங்கும்போல் இருந்தது. தன் தாய் தனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் எனச் சொன்னது அப்படி ஒரு அழுத்தத்தைக் கொடுத்தது.

“என்ன ஷாலு...? என்னடி என்னவோ போல பேசற?” ரூபி அவளது நெருங்கிய தோழிதான் என்றாலும் தன் தாயைப் பற்றி இன்று வரைக்கும் அவளிடம் வைஷாலி சொன்னதே இல்லை. தன் தாய் இப்படிப்பட்டவள் என, தோழியே என்றாலும் அவளிடம் சொல்ல முடியவில்லை.

ஒன்று அவளிடம் அதைச் சொல்ல வேண்டிய தேவை இதுவரைக்கும் அவளுக்கு வந்ததில்லை. இரண்டாவது தோழியே என்றாலும், அவளிடம் தன் தாயை அப்படி விட்டுக் கொடுத்துவிட முடியவில்லை. இன்று வரைக்கும் தன் தகப்பனே தன் தாயை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத பொழுது, அவள் மட்டும் எப்படி அதைச் செய்ய?

“அது... நீ நேர்ல வா சொல்றேன்” தன்னை மீட்டுக் கொள்ள முயன்றாள். நிஜத்தில் தன் வீட்டில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை நினைத்தாலே அடி மனதுக்குள் அப்படி ஒரு கலக்கம் சூழ்ந்தது.

‘முத்துப்பாண்டி’ என்ற பெயரை நினைக்க கூட பிடிக்காதவளுக்கு, அவனைத் தனக்கு மாப்பிள்ளையாக்க தாய் பார்க்கிறார் என்பதை நினைத்தாலே வாந்தி வரும்போல் இருந்தது.

அவள் அதை நினைத்தவாறு நிற்க, “நீ ஃபோனை வச்சால்தான் நான் வர முடியும். பேசிகிட்டே வா வான்னா எப்படி முடியும்?” அவள் ஒரு மாதிரி கலங்கி நிற்பது தெரிய அவளிடம் சொன்னாள் ரூபி.

“ஆமால்ல... நீ வா... நான் ஃபோனை வைக்கறேன்” என்றவள் அழைப்பை துண்டிக்கப் போனாள்.

“ஷாலு... ஆர் யூ ஓகே? சமாளிச்சுப்பியா?” தோழி அப்படிக் கேட்கவே, வைஷாலிக்கு கண்கள் கலங்கியே போனது.

“ம்...” என்றவளின் குரலில் அழுகை அப்பட்டமாகத் தெரிய, பதறிப் போனாள்.

“ஷாலு... லூசே அழறியா? எதுக்குடி இப்போ அழற? இப்போ என்ன உனக்கு வேலை கிடைக்கணும் அவ்வளவு தானே? நீ இன்டர்வியூவுக்கே போகலைன்னா கூட உனக்கு அந்த வேலை கிடைக்கும் போதுமா?” ‘ஒரு வேலைக்காக இத்தனை கலக்கமா?’ எனத் தோன்றினாலும் தோழியை ஆறுதல்படுத்த முயன்றாள்.

“ஏய்... இதெல்லாம் ரொம்ப ஓவர் டி...” குரல் இன்னும் தெளியவில்லை என்றாலும் தன் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள்.

“நீ முதல்ல ஃபோனை வை... உன்னை வந்து மந்திரிக்கறேன். ரெண்டு நாளா நீ சரியே இல்லை. கேட்டாலும் சொல்லாமல் இப்போ அழற? உன்னை வந்து வச்சுக்கறேன். தயவு செய்து இப்போ பப்ளிக்ல நின்னு அழாதே. சுத்தி இருக்கறவங்க பார்த்தால் என்ன நினைப்பாங்க?

“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்னு நினை ஷாலு. கொஞ்ச நேரத்துக்கு எதைப்பத்தியும் யோசிக்காமல் வேடிக்கை பார்ப்பியாம். சரி... பக்கத்தில் யாரும் சிகரெட் பிடிக்கலையா என்ன? அப்படி பிடிச்சாங்கன்னா அவங்க பக்கத்தில் போய் நின்னுப்பியாம், நான் இப்போ வந்துடுவேனாம்” குழந்தைக்குச் சொல்வதுபோல் சொல்ல, நிஜத்தில் சிரித்துவிட்டாள்.

“ரூபி...” கொஞ்சம் சிணுங்கவும் செய்தாள்.

“நான் என்ன பொய்யா சொல்றேன்? உனக்குத்தான் சிகரெட் வாசனை, பெட்ரோல் வாசனை, மண் வாசனை எல்லாம் பிடிக்குமே” தோழியின் மனநிலையை மாற்ற வேண்டியே பேசினாள்.

“அதுக்கு... இப்படி சொல்லுவியா?” கோபம் கொள்ள முயன்றாலும் அது அவளால் முடியவில்லை.

“குட், இப்படியே இரு... இப்போ வந்துடறேன்” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டு வண்டியைக் கிளப்ப முயன்றாள்.

அந்த நேரம் அவள் வீட்டுக்குள் இருந்து, அலுவலகம் செல்ல வேண்டி வெளியே வந்த அவளது அப்பா ராமராஜன் மகளைப் பார்த்துவிட்டு ஆச்சரியமானார்.

“ரூபி... அப்போவே இன்டர்வியூ போறேன்னு கிளம்பி வெளியே வந்த. இன்னுமா போகாமல் இருக்க? ரிசல்ட் இப்போவே தெரிஞ்சுடுச்சே...” அவர் கேலி பேச, அப்பாவை முறைத்தாள்.

“அப்பா... எனக்கு இப்போ பேச நேரம் இல்லை, உங்களை வந்து கவனிச்சுக்கறேன்” என்றவள் தன் வெஸ்பாவை கிளப்பிச் சென்றாள். அவள் செல்லவே, அந்த ஓசையில், அவளது அம்மா தேவியும், அக்கா சித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“ரூபியா போறா?” தேவி பெரிய மகளிடம் கேட்க, “அப்படித்தான் தோணுது. இவ்வளவு நேரம் வெளியே என்ன பண்ணிட்டு இருந்தாளோ?” என்றாள் சித்ரா.

“ஒரு வேளை வண்டியை துடைச்சுட்டு இருந்திருப்பா” தேவி சொல்ல, அவள் அப்படித்தான் என்பதால் சித்ராவும் அதை ஏற்றுக் கொண்டாள்.

தன் வண்டியில் சென்ற ரூபியோ விரைவாகவும், லாவகமாகவும் வண்டியைச் செலுத்தினாள். செல்லும் வழி எங்கும் அவளுக்கு வைஷாலியின் நினைவுதான். அவள் சொன்ன இடத்துக்கு வந்து சேர, பதினைந்து நிமிடங்கள் பிடித்தது.

வைஷாலி இவளைப் பார்த்துவிட்டு அவள் வண்டியின் அருகே வரவே, “என்னடி போகலாமா?” அவளிடம் கேட்டாள்.

“ம்... போகலாம்...” என்றவள் அவள் பின்னால் அமர,

“ஷாலு, சட்டிஃபிகேட், ஐடி ப்ரூப் எல்லாம் எடுத்துட்ட தானே? பழைய கம்பெனியோட எக்ஸ்பீரியன்ஸ் சட்டிஃபிகேட், ரிலீவிங் ஆர்டர் எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்து வச்சு இருக்கியா?” வண்டியைக் கிளப்பியவாறே கேட்டாள்.

“ஆமா நேத்து நைட்டே எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன்” என்றவள் அமைதியானாள்.

”இன்டர்வியூவுக்கு ஏதாவது பிரிப்பேர் பண்ணியா? ஓபன் இன்டர்வியூ இது, எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியலையே. கும்பல்ல நசுங்கி சாகப் போறோமா? இல்லன்னா ப்ராப்பர் அரேஞ்ச்மென்ட் எதுவும் செஞ்சாங்களான்னு தெரியலை” கொஞ்சம் புலம்பலாகவே சொன்னாள்.

“நான் அதைப்பத்தி யோசிக்கவே இல்லையே. ரொம்ப கூட்டமா இருக்குமா?” இப்படிக் கேட்ட தோழியை ரிவர்வியூ கண்ணாடி வழியாகப் பார்த்தாள்.

‘இவ என்ன யோசனையில், இல்ல குழப்பத்தில், இல்லன்னா கவலையில் இருக்கான்னே தெரியலையே... கேட்டாலும் சொல்ல மாட்டேங்கறா?’ இவளுக்குள் யோசனை ஓடியது.

“சாப்ட்டியா ஷாலு?” சற்று கவலையாகவே கேட்டாள்.

“சாப்ட்டேன்...” என்றவள், உள்ளுக்குள்... ‘நான் சாப்பிடலைன்னா உடனே வேலைக்காரக்கா என் அப்பாவுக்கு கால் பண்ணி சொல்லிடுவாங்களே’ என எண்ணியதை வெளியே சொல்லவில்லை.

“ஷாலு... பெட்ரோல் கொஞ்சம் கம்மியா இருக்கு. பெட்ரோல் போட்டு போகலாமா?” அவளிடம் கேட்டாள்.

“சரி...” அவள் சொல்ல, சிட்டியில் பரபரப்புக்கு வெளியே இருந்த அந்த பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்தினாள். வைஷாலி இறங்கிக் கொள்ள, தானும் இறங்கியவள் பெட்ரோல் போட வேண்டி சீட்டை உயர்த்திவிட்டு, மூடியைத் திறந்தாள்.

வைஷாலி நகம் கடித்தவாறு நிற்க, அவள் டென்ஷனாக இருப்பது இவளுக்குப் புரிந்தது. “ஷாலு, கர்ச்சீப் வச்சிருக்க?” அவளை நெருங்கியவள் மெதுவாகக் கேட்டாள்.

“எதுக்குடி இப்போ கர்ச்சீப்?” என்றவள் தன் கைக்குட்டையை அவள் பக்கம் நீட்டினாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
“இல்ல... கொஞ்சம் பெட்ரோலை அதில் ஊத்தித் தர்றேன், அதை மோப்பம் பிடிச்சுகிட்டன்னா உனக்கு இருக்கும் இந்த டென்ஷன் குறையும்னு நினைக்கறேன்” அவள் சொல்ல, முதலில் புரியாமல் குழம்பி, பிறகு அவள் சொல்ல வருவது புரிய, அவளை அடிக்க கை ஓங்கினாள்.

தன்னை அவள் அடிக்கப் போவது புரியவே, வேகமாக ரூபி நகர்ந்து கொள்ள, வைஷாலியும் அவள் பின்னால் நகர, சரியாக அந்த நேரம் அந்த விபரீதம் நடந்தது.

அவர்களுக்குப் பின்னால் வண்டியில் பெட்ரோல் போட நின்று கொண்டிருந்த பெண்மணியின் வண்டியை, கட்டுப்பாடு இன்றி வந்த ஒரு கார் இடித்துத் தள்ளியது. நல்ல வேளையாக இவர்கள் இருவரும் நகர்ந்து சென்றதால் அந்த விபத்தில் இருந்து இவர்கள் தப்பினார்கள்.

விபத்து ஏற்படுத்திய கார்காரனோ, வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி ஓடியே போனான். அந்த பெண்மணிக்கோ தலையில் சரியான அடி. மண்டை பிளந்து ரத்தம் கடகடவென வழியத் துவங்கியது.

அந்தே நேரம் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த பையனோ, சின்ன காயத்தோடு தப்பி இருக்க, அந்த நேரம் அந்த பெட்ரோல் பங்கில் மூவர் மட்டுமே இருந்தார்கள்.

“ஐயோ... ஷாலு... அவங்களைப் பார்...” ரூபி பதற, வேகமாக அந்த பெண்மணியின் அருகே ஓடினாள் வைஷாலி. தன் கையில் இருந்த கைக்குட்டையைக் கொண்டு அந்த பெண்மணியின் தலையில் வைத்து அழுத்தினாள்.

நொடியில் அந்த கைக்குட்டை நனைத்து போக, “அண்ணே... என்ன பார்த்துட்டு இருக்கீங்க? கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. யாராவது ஆம்புலன்சுக்கு கால் பண்ணுங்க” வைஷாலி, அதிர்வில் நின்ற அந்தப் பையனிடம் சொன்னாள்.

“நான் 108க்கு கால் பண்றேன்...” ரூபி கொஞ்சம் தெளிந்தவள் சொன்னாள். அவர்களின் இதயமும் எகிறிக் குதித்துக் கொண்டிருக்க, கை கால் எல்லாம் வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தது. இவர்கள் கொஞ்சம் நகர்ந்து நிற்காமல் போயிருந்தால் நிச்சயம் அவர்களுக்கும் நல்ல அடி பட்டிருக்கும்.

அந்த பெண்மணியின் குருதி நிற்காமல் வழிய, “ரூபி... ஆம்புலன்ஸ் வர்ற வரைக்கும் நமக்கு டைம் இருக்குமான்னு தெரியலை. அண்ணே... யாராவது வண்டியை எடுங்களேன்” வைஷாலியின் கை, உடை என மொத்தமும் குருதியால் நனையத் துவங்கியது.

“இங்கே வண்டி எதுவும் இல்லைம்மா... அதோட பங்கை விட்டு போக முடியாது. நாங்க ஆம்புலன்ஸ் வரச் சொல்றோம்” அவர்கள் சொல்ல, வைஷாலிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.

தான் சுடிதாருக்கு மேலே போட்டிருந்த ஷாலைக் கழட்டி அந்த பெண்மணியின் தலையைச் சுற்றி கட்டினாள். அங்கே பெட்ரோல் போட வந்த சிலரும், அங்கே நடந்திருக்கும் விபத்தைப் பார்த்துவிட்டு விலகிச் சென்றார்களே தவிர உதவ முன்வரவில்லை.

அந்த ஏரியாவும் சிட்டிக்கு வெளியே என்பதால் கனரக வாகனங்கள் அனைத்தும் விரைந்து கொண்டிருக்க, வேறு எந்த வண்டிகளும் வரவில்லை.

“ரூபி... ரோட்ல ஏதாவது வண்டி வருதா பாரு...” வைஷாலி படபடத்தாள்.

“எல்லாம் பெரிய வண்டியா வருது...” அவளுக்கும் என்ன செய்வது எனத் தெரியாமல் புலம்பினாள். அங்கே இருப்பவர்கள் உதவலாம், ஆனால் செய்யாமல் நிற்பவர்களை என்ன செய்ய?

“அண்ணே... இவங்க காயத்தைக் கொஞ்சம் அழுத்திப் பிடிச்சுக்கோங்க” என்ற வைஷாலி, விரைந்து எழுந்து ஓடியவள், கிட்டத்தட்ட ரோட்டுக்கு நடுவில் சென்று நின்றுவிட்டாள்.

சரியாக அந்த நேரம் ஒரு லாரி அவளை விருட்டென கடந்து செல்ல, “ஷாலு...” ரூபி கத்தினாள். அந்த லாரிக்குப் பின்னால் விரைந்து கொண்டிருந்த அந்த ரேன்ஜ்ரோவர் ப்ளேக் கார், மின்னல் வேகத்தில் முளைத்த அவளைக் கொஞ்சமும் எதிர்பாராமல், சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.

இன்னும் ஒரு இன்ச் என்றாலும் அவளை இடித்து தள்ளி இருக்கும் நிலை. ரூபி மட்டுமல்ல, வைஷாலியுமே இப்பொழுது தன் கரத்தால் முகத்தை மூடி இருந்தாள். அடுத்த நிமிடம் காருக்குள் இருந்து புயல் வேகத்தில் இறங்கினான் சர்வஜித்.

“ஏய்... அறிவில்ல... இப்படித்தான் நடு ரோட்ல வந்து நிப்பாங்களா? அடிச்சுத் தூக்கி இருந்தேன்னா இந்நேரம் பரலோகம் போயிருப்ப. சாவறதுக்கு என் வண்டிதான் கிடைச்சதா?” அவன் கேட்டுக் கொண்டு இருக்கையிலேயே அவன் பின்னாலேயே இறங்கி ஓடி வந்தான் ஹரீஷ்.

அவர்களுக்குப் பின்னால் வந்து நின்ற கறுப்பு நிற XUV700 வண்டியில் இருந்து நால்வர் இறங்க முயன்றார்கள். சர்வஜித் தன் வலக்கை விரலை நீட்டிய அடுத்த நொடி, அவர்கள் வண்டியை கிளப்பிக் கொண்டு முன்னால் சென்று நின்றார்கள்.

அவர்கள் அனைவரின் பார்வையும் இவர்கள் மீதே இருக்க, அந்த செய்கைகள் எல்லாம் மற்றவர்கள் யாருக்கும் தெரியவே இல்லை.

“சார் நீங்க போங்க, நான் பார்த்துக்கறேன்” ஹரீஷ் சொல்ல, இப்பொழுது சர்வஜித்தைப் பார்த்தால் யாராலும் அடையாளம் கண்டுகொள்ளவே முடியாது. அவனது அடையாளம் கூட சென்னையில் ‘சர்வா’ என மாறித்தான் இருந்தது.

“ஹையோ... சாரி சார்... ரியலி சாரி... ஒருத்தங்களுக்கு அடி பட்டுடுச்சு. அவங்களை உடனே ஹாஸ்பிட்டல்ல சேர்க்கணும். அதுக்கு உதவி கேட்கத்தான் இவ்வளவு அவசரமா வந்துட்டா. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க...” ரூபி அவர்கள் அருகே ஓடி வந்து சொன்னாள்.

அவளைப் பார்த்த ஹரீஷ் தன் முகத்தில் சிறு அதிர்வை வெளிப்படுத்தினான். அதே நேரம் அவனை அங்கே சுத்தமாக எதிர்பாராத ரூபியும் ஒரு நொடி திகைத்தாலும், மறு நொடி தன்னை மீட்டுக் கொண்டாள்.

இவர்கள் கார் நின்ற உடனேயே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவர் ஒன்று சேர்ந்து அடிபட்ட பெண்மணியை தூக்கிக் கொண்டு சர்வஜித்தின் வண்டிக்கு அருகே வந்துவிட்டார்கள். அந்த பெண்மணியின் முகம் முழுக்க ரத்தத்தில் குளித்திருந்தது.

“என்ன பண்றீங்க?” ஹரீஷ் அவர்களைத் தடுக்க முயலும் பொழுதே, வைஷாலி கார் கதவைத் திறந்து விட்டிருந்தாள்.

“உள்ளே படுக்க வைங்க... ரூபி வா... வந்து வண்டியில் ஏறு. சார்... சார்... கொஞ்சம் வண்டியை சீக்கிரம் எடுங்க, ஹாஸ்பிடல் போகணும்” தானும் உள்ளே ஏறிய வைஷாலி, தோழியையும் உள்ளே அழைத்தாள்.

அவளுக்கு ஹரீஷ் இருக்கும் வண்டிக்குள் ஏறவே கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் தோழி அழைக்கையில் அவளை அப்படி ஒன்றும் தனியாக அவளால் அனுப்ப முடியாது. அதே நேரம் மற்றொருவன் வந்து அவர்களது பொருட்களை எல்லாம் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

“சாரி சார்...” நடந்துவிட்ட எதையும் தடுக்க முடியாத நிலையில் நின்றுவிட்ட தன் முட்டாள்த்தனத்தை நொந்தவாறு, ஹரீஷ் அவனைத் தயக்கமாக அழைத்தான். சர்வஜித் அவனைப் பார்த்த அந்த பார்வையில் நெருப்பு பறந்தது.

“சார்... வந்து காரை எடுங்க ப்ளீஸ்...” வைஷாலிதான் கத்திக் கொண்டிருந்தாள். ரூபிக்கு நிஜமாகவே ஒரு மாதிரி அதிர்வுதான். ரூபி ஹரீஷை இரண்டு வருடங்களுக்குப் பிறகு காண்கிறாள். அதுவும் இப்படி ஒரு விலை உயர்ந்த வண்டியில் இருந்து அவன் இறங்கியது எல்லாம் அவளுக்குள் ஒரு மாதிரி குடைந்தது.

“சார், நீங்க வேணா...” மற்ற வண்டியில் அவனை அனுப்பி விடலாம் என ஹரீஷ் நினைக்க, சர்வஜித் வேகமாக வந்து காரில் ஏறிக் கொண்டான். அவன் டிரைவர் இருக்கையில் அமராமல் போகவே, வேகமாக வந்து காரை எடுத்தான் ஹரீஷ்.

அவர்களது கார் அருகே இருந்த இருபத்திநான்கு மணி நேர மருத்துவமனைக்குச் செல்லத் துவங்கியது. அந்த நேரம் சர்வஜித் மற்றவனை நோக்கி கை நீட்ட, அவன் கரத்தில் சிகரெட்டையும் லைட்டரையும் கொடுத்தான் ஹரீஷ்.

அவன் சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழ்ந்து இழுக்க, ஹரீஷுக்கு இதயம் திக்கென அதிர்ந்தது. அதுவும் அவன் பெண்களை ஓரவிழிப் பார்வையாக கவனித்த விதம், எதுவோ நடக்கப் போகிறது என அவனுக்குச் சொன்னது.

சர்வஜித் அந்த சிகரெட்டின் புகையை அத்தனை நிதானமாக மொத்தமாக வெளியேற்ற, அந்த காருக்குள் சிகரெட்டின் நெடி நிறைந்தது. ரூபிக்கு அந்த புகை ஒரு மாதிரி ஒவ்வாமையைக் கொடுக்க, வைஷாலிக்கு அது பிடித்தது.

ஐந்தே நிமிடப் பயணத்தில் அந்த மருத்துவமனை இருக்க, முன்னால் சென்ற செக்யூரிட்டி வாகனம் வழி காட்ட, ஹரீஷும் காரை அங்கே செலுத்தி நிறுத்தினான். அடுத்த நிமிடம் ஸ்ட்ரெட்சர் வர, அதில் அந்த பெண்ணை கிடத்திக்கொண்டு சென்றார்கள்.

வைஷாலியும், ரூபியும் தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு அந்த பெண்மணியின் பின்னால் செல்லப் போக, இரண்டு ‘கார்ட்’களால் தடுக்கப் பட்டார்கள்.

‘இதென்ன? இது யார்?’ என்பதுபோல் இரு பெண்களும் பார்க்க, அவர்கள் கையில் இருந்த கைப்பை, ஃபயில், மொபைல் என அனைத்தும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு சர்வஜித்தின் வசம் ஒப்படைக்கப் பட்டது.

அவன் அந்த கார்ட்களைப் பார்க்க, அவர்கள் சென்றுவிட, “சார்... ஒரு ஹெல்ப் கேட்டோம் அதுக்காக...” பெண்கள் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே, சர்வஜித் தன் பர்சில் இருந்து தனது விசிட்டிங் கார்ட் ஒன்றை உருவி எடுத்தான்.

அதை அவர்கள் பக்கம் விசிறி அடித்தவன், ஹரீஷைப் பார்க்க, அவனோ காரைக் கிளப்பிக்கொண்டு சென்றான். ஹரீஷ் இப்பொழுது அதைச் செய்யவில்லை என்றால் சர்வஜித் என்ன செய்வான் என்றே தெரியாது என்பதாலேயே அவ்வாறு செய்தான்.

சர்வஜித் தன்னை ஏதாவது செய்தால் கூட பரவாயில்லை. மாறாக அந்த கோபமும் அந்த பெண்கள் மீது திரும்பிவிடக் கூடாதே என்பதாலேயே அவ்வாறு செய்தான். இந்த மருத்துவமனைக்கு முன்னால் வைத்து எதுவும் தவறாகப் போய்விடக் கூடாதே என கவனமானான்.

அவர்களது வண்டி புழுதியைக் கிளப்பிக்கொண்டு பறந்து செல்ல. பெண்கள் இருவரும் உறைந்துபோய் ஒருவரை மற்றவர் பார்த்தவாறு அப்படியே நின்றுவிட்டார்கள்.

பகை முடிப்பான்....
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
122
34
28
Deutschland
ஹீரோ சாருக்கு இம்புட்டு கோவம் ஆகாது சாரே.
 

Rampriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 13, 2022
39
41
18
Otteri, Chennai
நைஸ் எபிசோட் 🤩🤩
சிகரெட் வாசனை பிடிக்கும் என்ற ஒன்று தான் ஹீரோ ஹீரோயின் இடையே இருக்கும் பொருத்தம் போல 😕😕😕
 

Malarthiru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 15, 2023
150
7
28
VILLUPURAM
அப்போ இவங்க இரண்டு பேருக்கும் முன்னாடியே தெரியும் போல 🤔🤔🤔🤔
அடேய் சர்வா என்னடா பண்ண போற 🤔🤔🤔🤔🤔