துளி துளியாய் துரோகம் 10
வர்ஷா போனில் துஷ்யந்த் என்ற பெயர் மிளிரவும் தொண்டைக் குழியில் சந்தோஷம் அடைக்க “ஹலோ” என்றாள்.எத்தனை வருடம் ஆகிவிட்டது. அவனோடு செல்போனில் பேசி அளவளாவி. வெண்பாவின் மறைவுக்கு பிறகு வர்ஷா அவனுடன் பேச செல்போனில் தொடர்பு கொண்ட சமயங்களில் எல்லாம் அவன் தாய் தான் போனை எடுப்பார்.
“துஷ்யந்துக்கு உடம்பு சரியில்ல”
“துஷ்யந்த் இப்ப தான் மாத்திரை எடுத்திட்டு தூங்கறான்” எனப் பதில் வரும். பெரும்பாலும் போன் சுவிட்ச் ஆப் என்றே இருக்கும்.
“அவசரப்படாத வர்ஷா துக்கத்தில் இருந்து வெளிவரக் கொஞ்சம் டைம் கொடு. நீயே மாட்டிவிட்டுடுவ போல” எனச் சுந்தரி கடிந்து கொள்வார்.
அதன் பிறகு ஒன்றிரண்டு முறை போன் செய்துப் பார்த்தாள். அப்போதும் யாரும் எடுக்கவில்லை. என்றேனும் ஒரு நாள் துஷ்யந்த் அழைப்பான் எனக் காத்திருந்தாள்.
நாட்கள் வாரங்களாயின, வாரம் மாதமாயின, மாதம் வருடமாகின ஆனால் அவனிடமிருந்து ஒருமுறைக் கூட அழைப்பு வரவில்லை. துஷ்யந்த் எண் வர்ஷாவின் அலைபேசியில் உறங்கிக் கொண்டிருந்தது.
அதன்பின் தாயின் உடல்நிலை தந்தையின் போக்கு எனப் பல பிரச்சனைகள் அவளைச் சூழத் தொடங்கியது. இதில் துஷ்யந்தின் அழைப்பு பற்றி மறந்தே போனாள்.
இதே இன்று அந்த காத்திருப்பு முடிவுற்றது. அதை நினைக்க நினைக்கக் கண்களில் நீர் கோர்த்தது.
“வர்ஷா .. வர்ஷா .. ஆர் யு தேர்?” துஷ்யந்தின் குரல் குழலையும் யாழையும் விட இனிமையாக ஒளித்தது.
“யெஸ் துஷ்யந்த்” எனத் தன்னை சமன்படுத்திப் பதிலளித்தாள்.
துஷ்யந்த் “வர்ஷா எப்ப கூர்க் கிளம்பணும்?” எதிர்பார்ப்புடன் கேட்டான்.
இத்தனை ஆர்வமா தன்னுடன் பயணிப்பதில் என நினைக்கவே ஆனந்தமாக இருந்தது “நாளைக்கு காலையில் பத்து மணிக்கு உன் வீட்டுக்கு வந்து பிக்அப் செய்துக்குவேன்” என்றாள் வர்ஷா.
“சரி .. அங்க அழகான நீர்வீழ்ச்சி அபே பால்ஸ் இருக்காம். அங்க போகலாமா?”எனக் குதூகலத்துடன் சிறுப் பிள்ளை போலக் கேட்டான்.
“ஷ்யூர் .. நீ எங்க ஆசைப்பட்டாலும் போகலாம் துஷ்யந்த்” மனநிறைவுடன் பதில் அளித்தாள்.
அந்த நொடி வர்ஷா மனதில் மொத்த கூர்கையையும் விலைக்கு வாங்கி தன்னவன் கையில் கொடுத்துவிட வேண்டும் போலத் தோன்றியது.
“அது .. அங்க இருக்கும் அபே பால்ஸ் வெண்பாவுக்கு ரொம்ப பிடிச்ச இடம். அதனால அங்க கண்டிப்பா போகணும். அதான் கேட்டேன்” என்றான். அவன் குரலில் சோகம் இழையோடியது.
இந்த வார்த்தைகள் காதில் விழுந்த நொடி வர்ஷாவை யாரோ மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டது போல உணர்ந்தாள். வெண்பா தன்னை பார்த்து கைகொட்டிச் சிரிப்பது போலப் பிரமையில் உண்டானது. மனம் கூனிகுறுகிப் போனது.
“எனக்கு வேற ஒரு கால் வருது அப்புறமா பேசறேன்” என போனை கட் செய்தாள். சீற்றத்துடன் போனை தூக்கி எறிந்தாள். அது சுவரில் பட்டுப் பல பாகங்களாக வர்ஷாவின் இதயத்தைப் போல உடைந்து நொறுங்கி கீழே விழுந்தன.
சத்தம் கேட்டுச் சிந்து ஓடி வந்தாள். வர்ஷா இருக்கைகளால் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள். போன் ஒரு பக்கம் உடைந்து கிடந்தது.
“வர்ஷா” என அருகில் வந்தவளை
“லீவ் மீ அலோன் சிந்து” எங்கே தான் இருக்கும் கோபத்தில் அருமை தோழியைக் காயப்படுத்தி விடுவேனோ என்ற பயத்தில் வர்ஷா சிந்துவை விலகிவிடச் சொன்னாள்.
சிந்துவும் நிலைமையைப் புரிந்து செல்போனின் உதிர்ந்த பாகங்களை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.
துஷ்யந்த் தன் மார்பில் வெண்பா சாய்ந்தபடி அபே பால்சை ரசிப்பது போல தன் கைவண்ணத்தால் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தான்.
இதை நாளை வர்ஷாவிடம் காட்ட வேண்டும். அவள் மிகுந்த மகிழ்ச்சியடைவாள் என எண்ணினான். தனக்காக வர்ஷா எத்தனை உதவிகள் செய்கிறாள் எனப் பூரித்துப் போனான். தனக்கு ஒரு தங்கை இருந்தால் அவளைப் போலத்தான் இருப்பாள் என எண்ணியவன் முகத்தில் புன்னகைப் பூத்தது.
****
பைரவி கூர்க்கின் அழகில் சொக்கிப் போனாள். திரும்பிய இடமெல்லாம் பச்சை பசேல் எனக் கண்ணுக்கு குளுமையாக விருந்தளித்தது.
சென்னையின் வேகம், வெயில், அலுவலக வேலை எனச் சூழன்றுக் கொண்டிருந்த பரபரப்பான வாழ்க்கை முறையிலிருந்து சில நாட்கள் விடுமுறை.
அலுவல் வேலை இருந்தாலும் சென்னை போல இல்லை. வர்ஷா வந்து கவனித்துக் கொள்வாள். கூர்க்கின் அழகை ரசித்தபடி இருந்தவளின் மனம் இளவம் பஞ்சு போல இதமாக இருந்தது.
பார்த்தவற்றை எல்லாம் தன் செல்போனில் படம்பிடித்தபடி இருந்தாள். சிந்து தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. தன் போனில் படம் பிடித்தவற்றை வாட்சப்பில் சிந்துவுக்கு அனுப்பினாள்.
வர்ஷா சொல்லியிருந்த மருத்துவரைக் காணச் சென்றாள். அவர் தன் வீட்டுக்கே பைரவியை வரச் சொல்லி இருந்தார். அவரின் உதவியாளன் பெயர் விகாஸ்.
எப்பொழுது வேண்டுமென்றாலும் அவனை தொடர்பு கொண்டு எந்த உதவியும் கேட்கலாம் என்றிருந்தார்.
காலையின் மிதமான வெயிலை ரசித்தபடி பைரவி மருத்துவர் வீட்டை அடைந்தாள். பிரதான கிளீனிக் வேறு இடத்திலிருந்தது. வீட்டில் அவசர சிகிச்சை மற்றும் முக்கியஸ்தர்களை தவிர யாரையும் பார்க்க மாட்டார் என்னும் கொசுறு தகவலும் இனாமாகக் கிடைத்தது.
விகாஸ் “வாங்க மேடம் உட்காருங்க .. டாக்டர் இப்ப வந்திடுவார். ஒரு எமர்ஜென்சி கேஸ் .. போன் வந்தது ” என்று பைரவியை வரவேற்றான். பின்பு அவன் தன் வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டான்.
மருத்துவர் வீட்டின் முன்னே சிறிய கிளீனிக் போன்ற அமைப்பு இருந்தது. அங்குதான் பைரவி காத்திருந்தாள். நோயாளிகள் யாரும் இல்லை.
விகாஸ் கணினியைப் பார்ப்பது ஏதோ தாள்களில் குறிப்பெடுப்பது. பின்பு கணினியில் டைப் செய்வது எனப் பரபரப்பாக வேலையில் மூழ்கியிருந்தான்.
பைரவியும் சுவர்க் கடிகாரம், ஆங்காங்கே பெயிண்ட் உரிந்த இடம், ஓட்டியிருந்த இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் அளவீடுகள், மருத்துவர் பெற்றிருந்த இரண்டு விருதுகள் என ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பின்பு தன் முகநூல், இன்ஸ்டாகராம், யூடியூப் என எல்லாவற்றிலும் வளம் வந்தாள். அடுத்து உலகச் செய்திகள், தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை, பங்கு சந்தை நிலவரம் என அதையும் பார்த்தாகிவிட்டது. இனி எதிலும் மேய ஒன்றுமில்லை. ஏதேனும் பிரேக்கிங் செய்திகள் வந்தால் மட்டுமே உண்டு.
எத்தனை நேரம் பார்த்தாலும் கடிகார நேரம் தவிர மற்றவை எல்லாம் மாற்றமே இல்லாமல் இருந்தது. அவளின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து கொண்டிருந்தது.
இந்த விகாஸ் வேறு ஆயிரம் நோயாளிகள் இருப்பதைப் போல வேலை செய்து கொண்டே இருந்தான். ஒருமுறை கூட பைரவியை நிமிர்ந்துக் கூடப் பார்க்கவில்லை.
பைரவிக்கு “யாருமே இல்லாத கடையில் யாருக்கு டா டீ ஆத்தற?” எனக் கேட்க வேண்டும் போல இருந்தது.
தான் கூட இத்தனை மெனக்கெடுதலுடன் வேலை செய்ததில்லை எனக் குற்றவுணர்வு ஏற்படும் வகையில் தீயாய் வேலைச் செய்து கொண்டிருந்தான்.
இதற்கு மேல் முடியாதென்று வர்ஷா ரிசப்பெஷன் மேசை அருகே சென்று விகாசிடம் "டாக்டர் எப்ப வருவார்?”
’10 – 15 நிமிஷத்தில் வந்திடுவார்” என்றான். வேலை செய்தபடி
“இதையே தான் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்ன சொன்னீங்க”என்றாள் பொறுமை இழந்தவளாக.
“மேபி எமர்ஜென்சி கேஸ் முடியலை போல இருக்கும் மேடம்” என்றான்.
“போன் பண்ணிக் கேட்கலாமே?”
“பேஷண்ட் அடெண்ட் செய்யும் போது போன் எடுக்க மாட்டார். நீங்க வந்த உடனே அவருக்கு மெசேஜ் பண்ணிட்டேன். இன்னும் அவர் அதைப் பார்க்கல.”
“நோயாளிக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பதால் போனை பார்க்கவில்லை” எனத் தானே பில் இன் த பிளாங்க்ஸ் செய்துக்கணுமா விகாசு என மனதில் ஓடியது பைரவிக்கு.
பின்பு கிளீனிக் உள்ளே இருந்து வெளிவரை இரண்டு முறை கேட்வாக் செய்தாள்.
அவள் வெளியே நடந்ததும் விகாஸ் வாயைப் பொத்தி சிரித்துவிட்டான். அவனுக்கே அவளை பார்க்கப் பாவமாக இருந்தது. அவன் வேலை செய்தாலும் அவளை ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
பைரவி சிந்துவுக்கு போன் செய்ய இரண்டு ரிங்கில் போன் கட் ஆனது. “வில் கால் யூ லேட்டர்” என மெசேஜ் கிளிக் என வெளிவந்தது.
பைரவி மெல்ல நடந்து உள்ளே வந்தாள் “எத்தனை வருஷமா இங்க வேலை செய்றீங்க?” பொழுது போகணுமல
“டூ இயர்ஸ் மேம்” என்றான்
“இது உங்க சொந்த ஊரா?”
“இல்ல மேம்” என்றவன் உள்ளிருந்த அறைக்குச் சென்றான். வெளி வருகையில் இரண்டு புத்தகங்கள் அவன் கையில் இருந்தன. அவளிடம் கொடுத்தான்.
ஒன்று ஆன்மீக மலர் மற்றொன்று சுட்டி விகடன். அதைப் பார்த்தும் அவள் முகம் போனப் போக்கைப் பார்த்து “சாரி இதுதான் இருக்கு” எனத் தலை சொரிந்தான்.
கார் ஹாரன் வெளியே கேட்டது. டாக்டர் வந்துவிட்டதற்கான அறிகுறி. தலைத் தெறிக்க விகாஸ் ஓடினான்.
“இவன் டாக் வந்ததுக்காக ஓடறானா? நம்மகிட்டயிருந்து எஸ் ஆக ஓடறானா?” என பட்டிமன்றம் நடத்தும் அளவு சந்தேகம் ஏற்பட்டது பைரவிக்கு.
பைரவி தன்னிடத்தில் போய் அமர்ந்தாள். டாக்டர் சொட்டை தலை வெள்ளை சட்டை சாம்பல் கால்சட்டை இன் செய்திருந்தார். சுமாரான உயரம். வயது அறுபது இருக்கலாம் என எடை போட்டாள்.
மருத்துவர் பைரவியைப் பார்த்துத் தலையசைத்தபடி உள்ளேச் சென்றார். பின்னே விகாஸ் பூனைக் குட்டி போலத் தொடர்ந்தான்.
ஐந்து நிமிடத்தில் “டாக்டர் வந்துட்டாங்க. நீங்கப் போகலாம்” என்றான் விகாஸ்.
“ என்ன கண்டுபிடிப்பு? எனிவே தேங்க்ஸ்” என்றபடி பைரவி மருத்துவரைக் காண அவர் அறைக்குச் சென்றாள்.
“வாங்கப் பைரவி உட்காருங்க” என்றார்.
எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“சாரி ஒரு எமர்ஜென்சி கேஸ்” என டாக் சொல்ல
“பரவாயில்ல டாகடர் .. இது பேஷண்ட் ஹிஸ்ட்ரி” என துஷ்யந்தின் கோப்பை நீட்டினாள்.
அவர் வாங்கி துஷ்யந்தின் உடல் பிரச்சனைகள் அதன் தீவிரம். மற்றும் தற்பொழுது அவன் எடுத்துக் கொள்ளும் மருந்துகள். அவன் உடல் எந்த வகையான மருந்துகளை ஏற்காது. அதாவது அலர்ஜி மெடிசன் என அனைத்தையும் கவனித்து படித்தார்.
“பேஷண்ட்டுக்கு பெரிசா பிரச்சனை எதுவும் இல்லை. ரெகுலரா மெடிசன் எடுத்தாலே போதும்.”
பைரவி “சப்போஸ் எதாவது பிரச்சனைனா? கூடவே யாராவது இருந்தா பெட்டரா இருக்கும்னு வர்ஷா பீல் பண்றாங்க” என வர்ஷா கேட்க சொன்னதைக் கேட்டுவிட்டாள்.
“ கார்டியோ நியூரோனு பெரிய பிரச்சினையா இருந்தால் அசிஸ்டுக்கு ஆள் போடலாம். இந்த பேஷண்ட் மென்டலி சந்தோஷமா இருந்து மெடிசன் சரியா எடுத்தால் போதும். இவருக்கு சிவியரா பிரச்சினை இல்ல. மூர்க்கமா நடந்துகிறதும் இல்ல .. ஜஸ்ட் அதிர்ச்சியினால் அவருக்கு இப்படி ஆகியிருக்கு. ஹிஸ்டரிபடி நவ் பேஷண்ட் சீம்ஸ் பைன்” என்றார்.
“இல்ல டாக்டர் நாங்க ரிஸ்க் எடுக்க விரும்பலை .. யாராவது எமர்ஜென்சினா” என இழுத்தாள்.
டாக் சிந்தித்தபடி “எத்தனை நாளுக்கு?”கேட்டார்.
“பத்து நாள்”
“எப்ப வராங்க”
“இன்னிக்கு ராத்திரி வராங்க .. நாளைக்கு காலையில் இருந்து ஆள் வேணும்”
பெல்லை அழுத்தவும் விகாஸ் உள்ளே வந்தான்.
பைரவியிடம் “ விகாஸ் பேஷண்ட் கூட இருப்பான். ஆனா இவனுக்கு பேசிக் ப்ர்ஸ்ட் எய்ட் அந்த நிலையில் தான் தெரியும் ப்ரொபஷனலா தெரியாது. உங்களுக்கு நர்ஸ் வேணும்னா ஒரு இரண்டு மூணு நாள் ஆகும். உடனே கிடைக்கிறது கஷ்டம்.” என்றார்.
“ விகாஸ் ஓ.கே” என்றாள் பைரவி. ஏனோ அவனை பிடித்துவிட்டது அவளுக்கு. பத்து நாட்கள் அவனுடன் வம்பிழுக்கலாம் என நினைக்கையில் தித்திப்பாக இருந்தது.
ஆனால் விகாஸ் “டாக்டர் இந்த வேலையெல்லாம்?”எனத் தேங்கி நின்றான்.
” மோனா வில் ஹேண்டில்” என்றார்.
அரைமனதாக தலையசைத்தான்.
பைரவி எழுந்து மருத்துவருக்கு நன்றி சொல்லி அறையிலிருந்து வெளி வந்தாள். உடன் விகாசும் வந்தான்.
விகாசிடம் “ நாளைக்குப் பார்க்கலாம்?” என விடைப் பெற்றாள்.
“எங்க பார்க்கலாம்?” என அவன் கேட்கவும்
“பார்ரா”என மனதில் நினைத்தவள் அவனைத் திரும்பிப் பார்க்க
“ஐ மீன் பேஷண்ட்டை எங்க மீட் செய்யணும் கேட்டேன்” தெளிவாக்கினான்.
”மார்னிங் போன் செய்றேன்“ என்றுவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
பைரவி போவதையே ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் விகாஸ். அவள் சட்டெனத் திரும்ப இவனும் அதே வேகத்தில் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். “ஐயோ” எனத் தன்னை தானே நொந்துக் கொண்டான்.
சிந்து பைரவிக்காக விடுதி கார் என எல்லாம் முன்னமே ஏற்பாடும் செய்திருந்தாள்.
பைரவி தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தாள். இதயத்தில் விகாஸ் டெண்ட் போட்டு அமர்ந்துவிட்டான்.
ஆமாம் டெண்ட் தான் நிரந்தரம் இல்லை. வர்ஷாவுக்குத் திருமணம் முடிந்தால் தானே சிந்துவும் பைரவியும் தங்கள் வாழ்க்கையைப் பற்றி கனவு காண முடியும்.
ஆனால் பைரவிக்கு விகாசை விரட்டும் எண்ணம் சிறிதும் இல்லை. இத்தனை வருடங்கள் வர்ஷாவிற்காக வாழ்ந்தாகிவிட்டது. இனி தனக்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.
துஷ்யந்த் மனதில் எப்படியாவது வர்ஷாவை புகுத்த வேண்டும். இனி தன் முழு நேரப் பணி அது ஒன்றுதான் எனத் தீவிரமானாள்.
அப்படியும் துஷ்யந்த் முரண்டு பிடித்தால் இந்த மருத்துவரை துஷ்யந்த் இதயத்தைக் கிழித்து வர்ஷாவின் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவை உள்ளே வைத்துத் தைத்துவிடச் சொல்ல வேண்டும் என நினைத்தாள்.
இது என்ன தான் இப்படி பைத்தியம் போல ஆகி விட்டோம். இது தான் காதல் பைத்தியமா? தன்னை தானே கேட்டுக் கொண்டாள். தனியே சிரித்தாள்.
கண்ணாடியில் தன்னை கண்டவள் முகத்தில் நாணம் எட்டிப் பார்த்தது. மீண்டும் நாளை விகாசை காணப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. நாளை அவனைப் பற்றி முழுவிபரம் அறிய வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டாள்.
பைரவி உடனே அழகு நிலையம் சென்றாள்.
‘நாளைக்கு முக்கியமான ஓருத்தரை சந்திக்கப் போறேன். நான் மட்டும் தான் அவங்க கண்ணுக்கு அழகாத் தெரியணும். என்னவெல்லாம் செய்யணுமோ செய்ங்க” என்றாள்.
அழகு நிலைய பெண்ணுக்கு “இன்னிக்கு ஜேக்பாட் தான்” என்று எண்ணியபடி பேசியல் பெடிக்யூர் மெனிக்யூர் எனத் தொடங்கி ஒரு பெரிய பட்டியலைக் கூறினாள்.
பைரவி பச்சைக் கொடியை ஆட்டி சம்மதம் தெரிவித்தாள்.
அழகு நிலையப் பெண் தன் முழு திறமையும்க் காட்டத் துவங்கினாள்.
துளிகள் தெறிக்கும் …