துளி துளியாய் துரோகம் 13
அடுத்த மூன்று நாட்கள் வேகமாக உருண்டன. வர்ஷா மற்றும் சிந்து காபி எஸ்டேட்டை நாராயணன் உடன் சுற்றிப் பார்த்தனர். வர்ஷாவிற்கு அந்த இடமும் சூழலும் மிகவும் பிடித்துப் போனது.
நாராயணன் உலகிலேயே தன் காபி எஸ்டேட் மட்டுமே ஆகச் சிறந்தது என்பதைப் போலக் கதை அளந்தார். வர்ஷா மற்றும் சிந்துவுக்கு இது நன்றாகவேப் புரிந்தது.
பின்னர் அந்த எஸ்டேட் சம்பந்தமாக ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என தன் வழக்கறிஞர் மூலம் சரி பார்க்கச் சொன்னாள் வர்ஷா.
அனைத்தும் சரியாக இருக்கவே எந்த இடையூறும் இன்றி பத்திரப் பதிவும் நடந்தது. பேசிய தொகையை விட மிகவும் குறைவான விலைக்கு எஸ்டேட்டை வாங்கினாள் வர்ஷா.
நாராயணின் பல கோடி சொத்துகளில் இது பிரமாதம் இல்லை என்பதால் அவரும் விலையைப் பற்றி கவலை கொள்ளவில்லை.
மூன்றாம் நாள் இரவு நாராயணன் வர்ஷாவிற்காக மிகப் பெரிய விருந்தை ஏற்பாடு செய்தார். அவர் விருந்துக்கு மேலும் பல நண்பர்களை அழைத்திருந்தார். இந்த மூன்று நாட்களும் வர்ஷா துஷ்யந்தை மறந்தே போனாள்.
நாராயணன் விருந்தில் “ வர்ஷா இனி மோகனுக்குக் கவலை இல்லை. நீ அவனுடைய பிசினசை பார்த்துப்ப .. உனக்கு நல்ல திறமை இருக்கு” எனப் பாராட்டினார்.
“தேங்க்ஸ் அங்கிள்” என புகழாரம் தாங்காமல் புன்னகை விரிந்தது.
“நான் சீக்கிரமா கிளம்பறேன் மா. இந்த பங்களாவை இன்னொரு நண்பர் பாதுகாப்பதா சொல்லி இருக்கார். நீ எத்தனை நாள் வேணாலும் இங்க இருக்கலாம். வேலையாட்கள் இங்க இருப்பாங்க” என்றார்.
தானும் மறுநாளே இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என எண்ணினாள். ஏனோ இங்கிருக்கப் பிடிக்கவில்லை.
நாராயணன் தன் நண்பர்களை வர்ஷாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவளை அனைவர் முன்னும் புகழ்ந்தார்.
வர்ஷா தன்னால் இனி எதையும் சாதிக்க முடியும். தான் வைத்தது தான் சட்டம் என மனப் போக்கு அவளுள் நாகமென ஆடியது.
தன் தந்தைக்கு போனில் செய்தியைக் கூறினாள்.
“கன்கிராட்ஸ மை கேர்ள்“ என மனதார பாராட்டினார் மோகன்.
“உங்க பிசினஸ் வாரிசா என்னை சொல்லிடுங்க .. இனிமே எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.” என்றாள் கர்வத்துடன்.
“சரி நீ வந்ததும் ஸ்பெஷல் போர்ட் மீட்டிங் வைத்து சொல்லிடறேன்” என்றார். தன் மகளை நினைத்து பெருமிதம் கொண்டார்.
இனி மோகன் குரூப் ஆப் கம்பெனிஸ் தன் கையில் என்ற எண்ணம் தோன்றவும் துஷ்யந்துடன் திருமணம் அடுத்து கல்பனா ராகேஷை வெளியேற்றுவது என தான் செய்ய வேண்டிய வேலைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டாள்.
சிந்து பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தாள். உணவு உண்ணக் கூட நேரமில்லை. பைரவி இருந்தால் உதவியாக இருந்திருக்கும்.
வர்ஷாவின் போக்கு முற்றிலும் மாறிப் போயிருந்தது. சிந்துவிடம் எரிந்து விழுந்தாள். பைரவி மேல் உள்ள கோபத்தைச் சிந்துவிடம் காட்டினாள். நாராயணன் வைத்த இரவு விருந்துக்குச் சிந்துவை வரக் கூடாது என்றுவிட்டாள் வர்ஷா.
ஆனால் பைரவி வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.
முதல் நாள் பைரவி வர்ஷாவிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தவுடன் விகாசிடம் போனில் பேசினாள். பின்னர் அவன் இருக்கும் அபே பால்சை அடைந்தாள்.
அங்குச் சென்ற போது துஷ்யந்த் அபே பால்ஸ்க்கு சற்று அருகே தோதான இடத்தில் நின்று உலகையே மறந்து வெண்பாவை தனது காகிதத்தில் உருவகப் படுத்திக் கொண்டிருந்தான். பைரவி வந்ததைக் கவனிக்கவில்லை.
விகாஸ் பைரவியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான். “ஹாய்” என விகாஸ் அருகில் நின்றாள். அவளைச் சற்று கூட்டம் அதிகமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றான். பெரிய மரத்தின் நீண்ட கடினமான வேர்கள் அமர ஏற்றதாய் இருந்தது. இருவரும் அருகருகே அமர்ந்தனர். அதனோடு துஷ்யந்தின் பேக்பேக் (backpack) தன்னுடன் பத்திரமாக வைத்துக் கொண்டான்.
அபே நீர்வீழ்ச்சியைப் பைரவி கண்டு ரசித்தாள். கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
‘நீங்க இரண்டு பேரும் அபே பால்ஸ்க்கு வந்தது மட்டும் வர்ஷாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்” என்றாள்
“சொன்னாதானே தெரியப் போகுது” தோளைக் குலுக்கிப் பதிலளித்தான்.
“அடப்பாவி” எனச் சிரித்தாள் பைரவி.
காலையை விட தற்பொழுது அவள் முகம் சற்று தெளிவடைந்து காணப்பட்டதை கவனித்தான் விகாஸ்.
“உன் பிரச்சனை முடிந்ததா?” கேட்டான்
“ஆமாம் இல்லை” என்று சிரித்தாள்.
“இதென்ன பதில்?” எனப் புருவத்தை உயர்த்தியவனிடம்
“ஒரு பிரச்சனை முடிந்தது அடுத்த பிரச்சனை தொடங்கியாச்சி”
இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் முறைத்தான்.
நீரின் தன்மை மலையில் இருக்கும் போதும் கர்வம் இல்லை. கீழே விழுந்தாலும் அதன் பெருமை குறைவதில்லை. மனிதனைச் சுற்றி உள்ள அனைத்தும் மனிதனுக்குப் பாடம் கற்பிக்கிறது. ஆனால் அவன் தான் எதையும் கவனிப்பதில்லை.
மேலிருந்து கீழே விழும் அருவி சில்லென்று காற்று உள்ளத்தைக் கவர்ந்திழுத்தது.
தேன்நிலவு ஜோடிகள், குழந்தைகளுடன் பெற்றோர், வயதானவர்கள் என அனைத்து வயது மக்களும் மகிழ்ச்சியாக நீர்விழுச்சியை கண்டு ரசித்தனர்..
சில கல்லூரி மாணவர்களும் அதில் அடக்கம். வயதின் ஆதிக்கத்தால் தங்களுக்கே உரியப் பாணியில் கிண்டல் கலாட்டா செய்தபடி இருந்தனர்.
மாணவர்கள் விகாஸ் பைரவியைக் கடக்கையில் ஒரு மாணவன் “ஹீடுகி ஜோராகி காண்ஸ்தாளே” என்றான் கன்னடத்தில் ( பெண் அழகாய் இருக்கிறாள்)
விகாஸ் கோபத்துடன் அவர்களை சுட்டெரிப்பது போலப் பார்க்கவும் அவன் நண்பர்கள் அவனை இழுத்து சென்றனர்.
பைரவிக்கு அவன் தன்னை ஏதோ சொன்னான் எனத் தெரிந்தது ஆனால் அதன் பொருள் விளங்கவில்லை. இதற்கு முன் அவள் உணவகத்தில் தங்கும் விடுதியில் ஆங்கிலமும் சிறிது தமிழும் அவர்களுக்குத் தெரிந்தது.
கூர்க் கர்நாடக மாநிலத்தில் உள்ள சுற்றுலா தளம் என்பதால் கன்னட மொழி பெரும்பான்மையாகவும் மற்றும் வேறு பல மொழிகள் பேசுபவர்களும் இருந்தனர். அதனால் எப்படியோ சமாளித்துவிட்டாள்.
“அவன் என்ன சொன்னான்?” பைரவி கேட்க
“நீ அழகா இருக்கியாம்” என்றான் முகத்தில் கடுகடுவென கோபம்.
“தேங்க் யூ” என அவர்கள் பக்கம் கை அசைக்க முனைந்தாள். சட்டென விகாஸ் அவள் கையை பிடித்து அடக்கி “பைத்தியமா நீ? அவங்களே தண்ணி அடிச்சிட்டு சுத்திட்டு இருக்காங்க” எனக் கடிந்தான்.
“அவன் என்னை தானே சொன்னான் உனக்கு ஏன் கோபம் வருது?” விஷமமான புன்னகையுடன் கண்சிமிட்டிக் கேட்டாள்.
“ என் வருங்கால பொண்டாட்டியை எவனோ சைட் அடிச்சா சும்மா இருக்கவா முடியும்?” அவன் இயல்பாகப் பேசிவிட்டான். மனதில் உள்ளது அப்படியே வெளிவந்துவிட்டது.
ஒரு நொடி தான் பேசியதை ரீவைண்ட் செய்து பார்த்தவனுக்குப் பக்கென்றது. பைரவி என்ன நினைப்பாளோ எனத் தயக்கத்துடன் “அது .. வந்து …” வார்த்தைகள் தந்தியடிக்க
“உன் வருங்கால மனைவிக்கு அம்மா அப்பானு யாருமே இல்லாத அனாதையா இருந்தாலும் ஏத்துப்பியா?” கண்ணோரம் நீர் தளும்பி விழவா என அவளிடம் அனுமதி கேட்டு நின்றது. முகத்தில் சொல்ல முடியா வேதனை.
“ ஐ லவ் யூ பைரவி .. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என அவளுக்கு விடையளித்தான்.
“உங்களுக்குச் சரி உங்க அம்மாவும் தங்கையும் என்னை அவங்க வீட்டு மருமகளா ஏத்துபாங்களா?” ஏக்க தொனியில் கேட்டாள்.
“நிச்சயமா ஏத்து பாங்க. என் விருப்பம் தான் அவங்க விருப்பமும்” ஆறுதலாகப் பேசியவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
பைரவி தான் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்தது. சிறு வயதில் வர்ஷாவுடனான சந்திப்பு. சுந்தரியின் உதவி பின் அது எப்படி தங்களுக்கு விளங்கானது. முன்தினம் வர்ஷா சொல்லிய கடுஞ்சொல். இன்று ராஜிநாமா என தன்னை பற்றி அனைத்தையும் சொல்லிவிட்டாள்.
இத்தனை சிறுவயதில் எத்தனை துன்பங்கள் இவளுக்கு என அவன் கண்கள் கலங்கியது. அவள் தலையை வருடினான். அவனை நேருக்கு நேர் பார்த்தவள் கண்கள் குளமானது.
அவன் கண்ணீரைத் துடைத்தவள் “ ஐ லவ் யூ விகாஸ்” என மெழுகைப் போல உருகினாள். தன் பிறவிப் பயனை அடைந்ததைப் போல ஓர் உணர்வு. அடுத்த ஒரு மணி நேரம் தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“எக்ஸ்கியூஸ் மீ” என்ற துஷ்யந்த் குரல் இருவர் இடையே நந்தியாய் நுழைய இருவரும் அசடு வழியச் சற்றே தள்ளி அமர்ந்தனர்.
துஷ்யந்தின் புன்னகை இருவரையும் நெளிய வைத்தது.
“நடத்துங்க நடத்துங்க .. என் பேக் எடுக்க வந்தேன்” என தன் பேக்கிலிருந்து கலர் பேலட்டை எடுத்துக் கொண்டு “உங்களுக்கு எங்கேயாவது போகணும்னா போகலாம். என்னைக் காவல் காக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றான் நட்பாக.
“சரி பைரவி நான் உன்ன எங்க வீட்டுக்கு கூடிட்டுப் போறேன். என் அம்மாவை நீ சந்திக்கணும்” என்றான் விகாஸ்.
கடந்த இரண்டு நாட்களில் தன் வாழ்க்கையில் தான் எத்தனை மேடு பள்ளங்கள் என நினைத்த பைரவிக்கு விகாசின் தாயார் என்ன சொல்லப் போகிறாரோ என அச்சமாக இருந்தது.
“துஷ்யநத் எனக்கு ஒரு உதவி செய்யணும்” விகாஸ் கேட்டான்.
“நீ இருபத்திநாலு மணி நேரமும் என் கூடவே இருந்தனு வர்ஷாகிட்ட சொல்லிடறேன்” என துஷ்யந்த் சிரித்தான்.
“அது இல்ல விஷயம் … நான் சொல்லப் போவது கொஞ்சம் சுயநலமா இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை” எனச் சொல்லிவிட்டான்.
துஷ்யந்த் சிறிது சிந்தித்து நண்பனுக்கு இதைக் கூடச் செய்யாமல் என்ன நட்பு எனச் சம்மதம் தெரிவித்தான்.
அங்கே வர்ஷாவும் சிந்துவும் எஸ்டேட் விஷயத்தில் முழ்கியிருதனர்.
மூன்று நாட்களும் இங்கே விகாஸ் மற்றும் பைரவி தங்கள் காதல் காண்டத்தில் மகிழ்ச்சியாக திளைத்தனர். துஷ்யந்த் தன் ஓவிய உலகத்தில் எந்த இடையூறும் இன்றி கலாரசிகனாக தன்னையே மறந்திருந்தான்.
நாராயணன் கொடுத்த இரவு விருந்தில் கலந்து கொண்ட பின் வர்ஷா களைப்பாக தன் அறைக்கு வந்தாள்.
குளித்து படுக்கையில் விழுந்தாள். இமைகள் மூடிக் கொள்ளத் துடித்த நேரத்தில் போன் விர் விர் என வைப்ரேட் ஆனது. எடுத்துப் பார்த்தாள் அது துஷ்யந்த் எண்.
இந்த நேரத்தில் ஏன்? என அவசரமாக போனை உயிர்ப்பித்து “ஹலோ” என்றாள். சிவமணி டிரம்ஸ் போல இதயம் அடித்தது.
“ஹாய் வர்ஷா எப்படி இருக்க?” எனத் துள்ளலாக அவன் குரல் கேட்டது.
கெட்ட செய்தி எதுவும் இல்லை எனச் சமாதானம் ஆனவள் “ஹாய் எப்படி இருக்க துஷ்யந்த் சாரி உன்னைக் கவனிக்க முடியலை வேலை அதிகம்” எனத் தந்தி போல தன் செய்தியைப் பிரித்துப் பிரித்துக் கூறினாள்.
“இட்ஸ் ஓகே பேபி .. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான்
“பேபியா? என்ன ஆயிற்று இவனுக்கு” என நினைத்தவள் “ சொல்லு என்ன விஷயம்” எனக் கேட்டாள்.
“அதை இப்பவே சொன்னா நல்லா இருக்காது. நாளைக்கு ராத்திரி கேன்டில் லைட் டின்னர்ல நீயும் நானும் மீட் பண்ணப் போறோம். அங்க சொல்றேன்” என்றான் குரலில் வெட்கத்துடன்.
“ஓ மை காட் என்ன சொல்ற கேன்டில் லைட் டின்னரா?” ஆயிரம் வாட்ஸ் பல்ப் முகத்தில்
“ஆமா” எனச் சிரித்தான்
“நாம நாளை காலையில் மீட் செய்யலாம்.” என்றாள். அவளால் நாளை இரவு வரை காத்திருக்க முடியாது.
“ வெயிட் வெயிட் … நான் மைசூரில் இருக்கேன் வர்ஷா”
“மைசூரா அங்க என்ன பண்ற? தனியாவா போன கூட அந்த ஆள் இருக்கானா இல்லையா?” குரல் சூடேறியது.
“அதெல்லாம் நீ அனுப்பின காவல்காரன் கூடத்தான் இருக்கான். நான் மைசூர் பேலசை நேரா பார்த்து டிரா பண்ணனும்னு வந்தேன். இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. நாளைக்கு காலையில் பத்து மணிக்கு இங்க இருந்து கிளம்பிடுவோம்” என விளக்கினான்.
‘சரி பார்த்து சீக்கிரமா வா” என்றாள்.
“நாளைக்கு டின்னர்ல உன் கூட தனியா பேசணும். என் வாழ்க்கையைப் பத்தி பேசணும் அதனால உன் டாம் அண்ட் ஜெர்ரி பிரெண்ட்ஸ் வேண்டாம். நீ மட்டும் தனியா வா” என்றான்.
பெரியதாய் நகைத்தவள் “சரி சரி” என்றாள். “ஜெர்ரி தற்பொழுது தன்னுடன் இல்லை எனவும் நினைத்துக் கொண்டாள்.”
“ குட் நைட் பேபி” எனக் கூறி போனை கட் செய்தான்.
போனை தன் மார்போடு கட்டி அணைத்தாள். தன் இத்தனை வருடப் போராட்டம் நாளை இந்நேரம் முடிந்திருக்கும்.
அவன் தன் காதலைச் சொன்னதும் அவன் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுக்க வேண்டும் என நினைத்தவளுக்கு “சீ இது என்ன எண்ணம்” என நாணினாள்.
உறக்கம் அவளைவிட்டுக் காணாமல் போனது. தொழில் காதல் என இரண்டிலும் வெற்றி. இரட்டிப்பு மகிழ்ச்சியில்த் திளைத்தாள்.
ஏன் துஷ்யந்திடம் இந்த மாற்றம்?
கடந்த மூன்று நாட்களாகத் தனிமையில் இருந்திருக்கிறான். அவனுக்கு தன் நினைவாகவே இருந்திருக்கும் எனப் பலவாறு கற்பனையில் மிதந்தாள்.
உறங்க முற்பட்டாள். அப்பொழுதுதான் நாளை அவன் முன்பாக கருவளையம் இல்லாமல் அழகாக தெரிவோம். கடந்த மூன்று நாட்களாக வேலைப் பளுவினால் முகம் வாடி இருந்தது. சிறிது நேரத்திற்கு பின் உறங்கினாள்.
மறுநாள் காலையிலிருந்து பரபரப்பாகக் காணப்பட்டாள் வர்ஷா. சிந்து எதுவும் கேட்கவில்லை. தன் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினாள்.
நூறு முறை துஷ்யந்துக்கு போன் செய்துவிட்டாள் “எங்க இருக்க? எப்ப கிளம்புவ? சாப்பிட்டையா? காவல்காரன் கூட இருக்கானா?”
“ஏன் இத்தனை பதற்றம்?” என துஷ்யந்த் அவளைச் சமாதானப்படுத்தினான். பின்பு இரவு சந்திக்க வேண்டிய உணவகப் பெயரையும் நேரத்தையும் சொன்னான்.
தனக்கு துஷ்யந்த் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல விஷயங்களை மேற்கொண்ட தன் தாயிடம் இவற்றைச் சொல்ல வேண்டும் என்று எண்ணினாள் வர்ஷா.
சுந்தரியைப் பராமரிக்கும் சித்திக்கு போன் செய்து “சித்தி அம்மா எப்படி இருக்காங்க?”
“எப்பவும் போலத்தான் வர்ஷா. நீ எப்ப வருவ?” எனச் சித்தி வினவ
“சீக்கிரமாவே வந்திடுவேன் சித்தி. அம்மாகிட்ட பேசணும்.. வீடியோ கால்ல” என்றாள்
“இதோ போன் தரேன்” என அறைக்குச் சென்று “சுந்தரி உன் பொண்ணு பேசணுமாம்” என போனை அருகில் வைத்தார்.
தாயும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அம்மா …” என்று அழைக்கவும்
சுந்தரி கண்ணீர் வழிய தன் ஆசை மகளைப் பார்த்தார்.
வர்ஷா முதலில் தான் வெற்றியுடன் முடித்த வேலையைப் பற்றிக் கூறினாள். பின்பு மெல்ல துஷ்யந்த் போன் செய்து இன்று இரவு கேன்டில் லைட் டின்னருக்கு அழைத்ததைக் கூறினாள். அவன் தன்னை காதலிப்பதாகவும் கூறினாள்.
சுந்தரி முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் இருந்தது. பேச முடியாதலால் தலையசைத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தார்.
உடல்நலம் குன்றியதிலிருந்து சுந்தரி தனியே செல்போன் வைத்துக் கொள்வதில்லை. செல்போனின் கதிர்வீச்சு சுந்தரிக்கு ஆபத்தை விளைவிக்கும்.
வர்ஷாவிற்கு தன் தாயை இப்படிக் காண வருத்தமாக இருந்தது. ஆதலால் சில நிமிடங்கள் பேசிவிட்டு போனை கட் செய்தாள். மனம் கணத்தது.
இரவு வர்ஷா இத்தனை வருடங்களாகக் காத்திருந்த அந்த அழகிய தருணம் வந்தது.
துஷ்யந்த் வந்தவன் விளையாட்டாக இதயத்தை பிடித்தபடி“யு லுக் கார்ஜியஸ் பேபி” என அவள் அழகை ரசித்தான்.
வெட்க புன்னகையுடன் “கமான் துஷ்யந்த்” என அவனை செல்லமாகக் குத்தினாள்.
இருவரும் சிரித்தபடி தங்கள் டேபிளிலில் அமர்ந்தனர்.அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருந்தது.
அழகான ரூப் டாப் உணவகத்தில் மேலே மையல் கொண்ட நிலவும் நட்சத்திரமும் மிதமான ஒளியும் ஒலியும் என காதலுக்குத் தேவையான பத்து பொருத்தங்களும் பக்காவாக பொருந்திய இடமாக இருந்தது அவ்விடம்.
“சொல்லு துஷ்யந்த் எதுக்காக வரச் சொன்ன” வர்ஷா கேட்டாள்.
“ஐ ம் இன் லவ்” என்றான் மிகவும் மெல்லிய குரலில்.
“ம்ம்” என்றாள் தன் பெயரைக் கேட்கும் ஆவலில்.
துஷ்யந்த் “ இனியா” என்றான். அவன் அருகில் வந்து நின்றாள் இனியா.
அவளைக் காணவும் வர்ஷா இதயம் வீரியம் குறைந்த பேட்டரி போலத் தடுமாறியது.
துளிகள் தெறிக்கும் …