துளி துளியாய் துரோகம் 14
வர்ஷா முகம் கோபத்தில் சிவந்தது. தன் கல்யாண கனவுகள் சிதைந்து நொறுங்கியதை ஏற்க முடியவில்லை. “துஷ்யந்த்” என ஆத்திரத்துடன் கத்தியபடி அவன் சட்டையைப் பிடித்து இழுத்தாள்.
அவன் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தாள். மேஜை மீது இருந்த கேன்டில் லைட் மற்றும் அழகிய அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் கீழே தள்ளினாள்.
கீழ் விழுந்து உடைந்த கண்ணாடி கோப்பையின் பாகத்தை எடுத்து துஷ்யந்த் இதயத்தில் சரக் சரக்கென ஏற்றியதும் குருதி குபு குபுவென வெள்ளமாய்ப் பாய்ந்து அவள் கையை ரத்த கறை ஆக்கியது. துஷ்யந்த் அப்படியே சரிந்தான்.
வர்ஷா கண்ணை அழுத்தமாக மூடித் திறந்தாள். இவை அனைத்தையும் தன் மனதில் செய்தாள். நிஜத்தில் செய்ய விருப்பம்தான் ஆனால் அதன் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேரிடும். அதனால் தன் தாப ஏக்கம் ஏமாற்றம் கோப உணர்வுகளை எச்சிலோடு விழுங்கினாள்.
மனதில் நினைத்ததைச் செய்தால் உணவகத்தில் உள்ளவர் கைப்பேசிகளுக்கு இரையாகி அடுத்த நாள் டிரெண்டிங் ஆகிவிடுவாள். தன் தந்தை எழுப்பிய தொழில் சாம்ராஜ்ஜியம் சரிந்துவிடும். தான் ஒரு காட்சிப்பொருளாக வேண்டாம் என்று எண்ணியவள். எதுவும் சொல்லாமல் ஆக்ரோஷத்துடன் எழுந்து சென்றுவிட்டாள்.
வர்ஷா அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள் சண்டையிடுவாள் என எதிர்பார்த்த துஷ்யந்துக்கு கவலையாக இருந்தது. அடிபட்ட நாகம் ஆபத்தானது என்று உள்ளுணர்வு எச்சரித்தது.
“நீ பத்திரமா இருக்கணும் இனியா” என அவளைக் கவலையுடன் பார்த்தான்.
“நீங்க கவலைப்படாதீங்க துஷ்யந்த்” என ஆறுதல் அளித்தாள் இனியா.
“சிந்து … சிந்து” எனச் சத்தம் போட்டபடி நாராயணன் பங்களாவை வந்து அடைந்தாள் வர்ஷா.
வேலையாள் அவசரமாக அவள் முன் ஆஜர் ஆனான்.
“சிந்து எங்க?” எனக் கர்ஜிக்காத குறையாகக் கேட்டாள்.
“சினிமா போயிருக்காங்க” என்றான்.
“வாட்?” தன்னிடம் அனுமதி கோராமலா? என யோசித்தாள்
“வேற ஒரு பொண்ணு வந்தாங்க .. அவங்க கூட போனாங்க” என்றான் கொசுறு செய்தியாக.
கண்டிப்பாக அது பைரவியாகத்தான் இருக்கும் என்று எண்ணியவளாக தன் அறை பக்கம் செல்ல முயன்றவளிடம்
“உங்களுக்குச் சாப்பிட” என அவன் தயங்க
“எதுவும் வேண்டாம்” என்றாள்.
“இன்னொரு விஷயம் ..”
என்னவென்பதாய் பார்த்தாள்.
“நாராயணன் சார் வெளிநாடு கிளம்பிட்டார். உங்க்கிட்ட சொல்லச் சொன்னார் ” என்றுவிட்டு தன் பக்கம் போய்விட்டான் அவன்.
அறைக்குள் சென்றவளுக்கு அங்கு இருக்கும் அத்தனை பொருட்களையும் வீசி எரிந்து உடைக்க வேண்டும் போல ஆத்திரம் எழுந்தது. ஓவென சத்தமிட்டு அழ வேண்டும் எனவும் தோன்றியது. ஆனால் இது நாராயணன் பங்களா. இங்கு எதுவும் செய்ய முடியாது என படுக்கையில் அமர்ந்தவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
தற்சமயம் மட்டும் துஷ்யந்த் அல்லது இனியா அருகில் இருந்தால் கொலையே செய்துவிடுவாள் அத்தனை வன்மம் அவர்கள் மீது இருந்தது.
சிறுவயதில் இருந்து தான் ஆசைப்பட்ட அனைத்தும் அடுத்த நொடி தன் கண்முன் இருக்கும். ஆனால் துஷ்யந்த் மட்டும் அதில் விதிவிலக்கு.
இதை தன் தாயிடம் எப்படிச் சொல்ல? மனம் ரணமானது. வேதனையில் துடித்துக் கலங்கினாள்.
அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை வர்ஷா திறக்க இனியா நின்றிருந்தாள்.
“ஹாய்” என்றாள் மெல்லிய புன்னகையுடன்
“எதுக்கு வந்த?” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் வர்ஷா.
“அடுத்த இருபதாம் தேதி நீங்க பீரியா?” குரலில் மெல்லிய நடுக்கம். வர்ஷாவை கண்டு பயந்து நடுங்கினாள்.
“எதுக்கு?” கண்ளளாலேயே எரித்துவிடும் அளவு துவேஷம் வர்ஷா பார்வையில்
“எனக்கும் துஷ்யந்துக்கும் நிச்சயதார்த்தம் ..” என்று சொல்லி முடிக்கும் முன் வர்ஷா கைகள் இனியாவின் கழுத்தைப் பிடித்திருந்தது.
“ஐயோ உங்களுக்கு என்ன இத்தனை கோபம் வருது .. உடம்புக்கு நல்லதில்ல வர்ஷா” என திக்கித் திணறி கூறினாள். அவளின் நடுக்கம் பயம் அத்தனையும் நடிப்பு என வர்ஷாவிற்குப் புரிந்தது.
இனியா வர்ஷாவின் கைகளைச் சற்று பலமாகவே தட்டிவிட்டாள். அதன் விளைவால் இரண்டடி பின்னே போனாள் வர்ஷா.
இனியா அறைக்கு உள்ளே வந்து கதவை மூடினாள்.
“என்ன மேடம் உங்களால் இத்தனை வருஷமா முடியாததை நான் இரண்டே நாள்ல நடத்திக் காட்டிடேன்னு வயிற்றெரிச்சலா” என மிகப் பெரியதாகச் சிரித்தாள் இனியா. அவள் பேச்சு நடை அனைத்திலும் மாற்றம்.
“ நான் துஷ்யந்தை காதலித்ததா உன்கிட்ட சொன்னது யார்? எனக்கு அவன் தேவையில்லை” எனப் பற்களை நறநறவென கடித்தபடி வர்ஷாச் சொன்னாள் .
“சிந்து சொன்னாளே நீ துஷ்யந்தை உயிருக்கு உயிரா காதலிக்கிற அவனுக்காக எது வேணா செய்வ” ஒவ்வொரு வார்த்தையிலும் நீ என்னிடம் தோற்றுவிட்டாய் என்ற எள்ளல்.
“அந்த நாய்…” எனக் கெட்ட வார்த்தையை வர்ஷா பயன்படுத்த
“ஸ்டாப் இட் வர்ஷா .. சிந்து உன் குடும்பத்தை சேர்ந்தவ .. சொத்தில் உனக்கும் இருக்கும் உரிமை அவளுக்கும் இருக்கு .. இது அவளுக்கும் தெரியும்” என இனியா கூற
“உளறாத .. உங்களை எல்லாம் எறும்பை நசுக்கிற மாதிரி என்னால நசுக்கி இந்த உலகத்தில் இல்லாமல் ஆக்க முடியும்” வர்ஷா சீறினாள்.
அவள் சொன்னதை இனியா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
இனியா “நான் சொன்னதில் உனக்கு நம்பிக்கை இல்லைனா உங்க அம்மாவை கேள் … ” என்றாள்.
தன் தாயைச் சொன்னதில் இன்னமும் கோபம் அதிகமாக “வெளியில் போடி” என வர்ஷா சத்தமிட்டாள்.
“ அட இருமா சும்மா கத்திட்டு .. வந்த விஷயத்தை மறந்துட்டேன் பார் .. உனக்கு ஒரு குறும்படம் காட்ட வந்தேன்” என இனியா தன் செல்போனை எடுத்து நிதானமாகத் தேடி வீடியோவை ஓடச் செய்து வர்ஷாவின் முன் காட்டினாள்.
வர்ஷா அவள் சொன்னதை தான் ஏன் செய்ய வேண்டும் என போன் பக்கம் முகத்தைக் கூட திருப்பவில்லை. ஆனால் அதிலிருந்து வந்த குரல் அவளை தன்னை மறந்து பார்க்க வைத்தது.
“உனக்கென்ன அத்தனை திமிர் .. என்னை மீறி உன்னால் என்ன செய்ய முடியும்?” என வெண்பாவை கேட்ட சுந்தரி குரல்
அந்த வீடியோவில் இரண்டு அடியாட்கள் வெண்பாவை பிடித்திருந்தனர். சுந்தரி ஆசிட்டை வெண்பா முகத்தில் வீசினார்.
வெண்பா அதன் எரிச்சல் தாங்காமல் “ஐயோ காப்பாத்துங்க .. காப்பாத்துங்க எரியுது எரியுது” என மண்ணில் விழுந்து புரண்டு துடித்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் வெண்பா மயங்கிச் சரிந்தாள்.
“இவளை ரயில்வே டிராக்குல தூக்கி போடுங்க சாவட்டும். சரியா இவ முகம் ரயில்வே டிராக்ல இருக்கணும் .. ஆசிட் வீசினது தெரிய கூடாது.” எனச் சுந்தரி கட்டளையிட்டார்.
பின்பு “நீங்க இரண்டு பேரும் ஆறு மாசத்துக்கு இந்த பக்கம் வராதீங்க. பணம் உங்க கைக்கு வந்திடும்.”
சுந்தரி அருகில் வர்ஷா நின்று கொண்டிருந்தாள். வெண்பாவின் வலியை ரசித்தபடி.
வீடியோ முடிந்தது. வர்ஷா சிலை என அதிர்ச்சியில் நின்றிருந்தாள்.
இவளுக்கு எப்படி வீடியோ கிடைத்தது? யார் வீடியோ எடுத்தது? அடுத்து என்ன செய்ய போகிறாளோ? என்ற அச்சம் ஆட்டிப் படைத்தது.
“என்ன வர்ஷா அதிர்ச்சியா?“ என நக்கலாக இனியா வினவ
வர்ஷா முடிந்தளவு தன் அச்சத்தை மறைத்து இனியாவை நோக்கினாள்.
“ நான் யார் தெரியுமா?” இனியா கேட்க
பேசக் கூட திராணி இல்லாமல் தெரியாது என இடமும் வலமுமாகத் தலையாட்டினாள் வர்ஷா.
“நான் தான் வெண்பா” என்றாள்.
வர்ஷா இதயம் துடிப்பு அவள் காதுக்கே கேட்டது. “நீ எப்படி?”
“அந்த நிமிஷம் நான் எப்படி துடிச்சேன் தெரியுமா?”
வர்ஷாவால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை.
”அந்த வலி வேதனை. உனக்குப் புரியாது வர்ஷா. ஆனா நான் புரிய வைப்பேன்” என இனியா என்னும் வெண்பா வர்ஷா கழுத்தைப் பிடித்தாள். இதைச் சொல்கையில் அவள் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அந்த வலி இன்னமும் உள்ளத்தில் தங்கியிருந்தது.
வர்ஷா உடல் நடுங்கியது.
பின்பு அவளை விடுவித்த இனியா “ ப்ளாஸ்டிக் சர்ஜரி நல்லா செய்திருக்காங்களா?” என தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கேட்டாள். அடுத்த நொடி இனியா சகஜமாகப் பேசினாள்.
வர்ஷா பார்வை இனியாவின் சொல் செயலில் மட்டுமே இருந்தது. அவளின் கேள்விகளை உள்வாங்கி பதில் சொல்லும் திறனை இழந்திருந்தது.
“உன்னைக் கொலை செய்ய மாட்டேன் வர்ஷா பயப்படாத. நீயும் உன் அம்மாவும் அணு அணுவா சாகணும். வாழவும் முடியாம சாகவும் முடியாம நீங்க இரண்டு பேரும் படும் அவஸ்தையைப் பார்த்து நான் ரசிக்கணும்” என்றாள்.
அச்சத்தில் எச்சிலை விழுங்கினாள் வர்ஷா.
“உனக்கு மட்டும் தான் நான் வெண்பானுத் தெரியும் வேற யாருக்கும் தெரியாது. மத்தவங்களுக்கு நான் இனியா”
“வர்ஷா நீ பெரிய சுழல்ல மாட்டி இருக்க. அது உனக்கே தெரியாது. சீக்கிரமே உன்னை விழுங்க காத்திருக்கு” என்ற இனியா
மேலும் “நான் உயிரோடு இருக்கேன் அதனால கொலைப் பழி இல்லனு நினைக்காத. உன் அம்மா சுந்தரி இரண்டு கொலை செய்திருக்காங்க. அது மட்டும் இல்ல சட்டத்துக்கு புறம்பான வேலையும் நிறையவே செய்திருக்காங்க. அதுக்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு” என்றுச் சென்றுவிட்டாள்.
வேரறுத்த மரமாய் வர்ஷா சரிந்தாள். உறக்கமின்றி தவித்தாள்.
இரவு ஒரு மணி இருக்கையில் கார் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியே வர்ஷா பார்த்தாள். காரில் சிந்து பைரவி மற்றும் விகாஸ் என மூவரும் வந்தனர். சில நிமிடங்கள் சிரித்துப் பேசினர். சிந்து வீட்டுக்குள் வர மற்ற இருவரும் கிளம்பிவிட்டனர்.
தன்னைத் தவிர அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றியது.
வர்ஷா எப்போது உறங்கினாள் என்று அவளுக்கேத் தெரியாது.
காலையில் எழுகையில் இரவில் நடந்த அனைத்தும் கனவாக இருக்கக் கூடாதா? என்றே தோன்றியது.
உடல் அசதியுடன் சோர்வாக இருந்தது. குளித்து வெளி வந்தாள். சிந்து சூடான காபியை அருந்தியபடி கூர்க்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.
வர்ஷா வருவதைக் கண்டதும் “காபி குடிக்கிறயா வர்ஷா?” எனக் கேட்டாள்.
உடலாலும் மனதாலும் துவண்டு போன வர்ஷாவிற்குக் காபி தேவையாக இருந்தது. சரியெனத் தலையசைத்தாள்.
“அண்ணா காபி” எனக் குரல் கொடுத்த சிந்து அமைதியாக அமர்ந்தாள்.
பவ்யமாகக் காபி வர்ஷா முன் வைக்கப்பட்டது. அருந்தினாள்.
கனத்த மௌனம் நிலவியது. சிந்துவின் போக்கில் நிறைய மாற்றங்கள். வர்ஷா அருகில் இருக்கையில் எப்போதும் அவளின் ஆணைகளை ஏற்கத் தயாராக இருப்பாள்.
ஆனால் இன்று நீயும் நானும் சமம் என்னும் ரீதியில் அமர்ந்திருந்தாள்.
“என்ன வர்ஷா அமைதியா இருக்க?” சிந்து தொடங்கினாள்.
வர்ஷா பதில் அளிக்கவில்லை.
“இப்ப நான் ஏன் பைரவி கூட போகலனு தெரிஞ்சிருக்கும். இது என் வீடு” சிந்து சொல்ல
“நீ வேலைக்காரி அவ்வளவுதான். அதுவும் இனிமே நீ வேலை செய்ய வேண்டாம் இப்பவே போ” என்றாள் வர்ஷா
“பார்ரா .. நீ சொன்னா நான் போகணுமா?” நக்கலாகச் சிந்து கேட்க
“அனாதையான உன்னை எங்க அம்மா வீட்டுக்கு கூடிட்டு வந்து படிக்க வெச்சி வேலை கொடுத்து அதுக்கு நீ காட்டும் நன்றி இது தானா?”
”நானும் ரொம்ப வருஷமா இப்படிதான் நினைத்து நன்றிக் கடன் செலுத்தச் சித்தமாயிருந்தேன். ஆனா உன் அம்மா என்னையும் பைரவியை உனக்கு காவலாளியா தான் வெச்சிருந்தாங்க. உனக்குப் பாதுகாப்பு அரண் நாங்க.
வாழ்க்கை பற்றிய புரிதலே இல்லாம நீ வளர்ந்த .. ஒரு விளையாட்டுல கூட நீ தோற்க மாட்டே .. காரணம் நானும் பைரவியும் விட்டுக் கொடுப்போம்.”
“ உன் கை வலிக்காம இருக்க நாங்க உன் ஹோம்வொர்க்ல இருந்து எல்லா செய்வோம். நல்லவேளை பரிச்சையாவது நீ எழுதின. நாங்க உன் பாதுகாப்புல இருக்கிறதனால நாங்க காதலிக்கக் கூடாது கல்யாணம் செய்துக்க கூடாது ஏன் வாழவே கூடாதுனு உங்க அம்மா ஆயிரம் கன்டிஷன் போட்டாங்க. முக்கியமா இது எதுவும் உனக்குத் தெரியக் கூடாதாம்”
“உனக்கு எத்தனை பணம் வேணும்?” வர்ஷா கராராகப் பேரம் பேச சித்தமானாள்.
“ உங்க சொத்தில் பாதி. உங்க குடும்பத்தில் நானும் ஒரு அங்கம்னு அதிகாரப் பூர்வ அறிவிப்பு. இது இரண்டும் வேண்டும்.”
“ரப்பிஷ்” என தன் முன்னிருந்த மேஜையை பலமாகத் தட்டினாள் வர்ஷா.
சிந்து அசரவில்லை. “நான் சென்னை கிளம்பறேன். அடுத்த வாரம் பைரவிக்குக் கல்யாணம் ஏற்பாடாகி இருக்கு”
எழுந்து நின்ற சிந்து “இப்ப உன்னைவிட்டுப் போறேன். எப்பவும் இல்ல” என்றாள்.
“நான், துஷ்யந்த், இனியா, பைரவி” எல்லாரும் சென்னை கிளம்பறோம்.” என்றபடி அந்த பங்களாவை விட்டு நீங்கினாள்.
சற்று நேரம் வர்ஷா அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் மனதில் பல திட்டங்களைக் கூட்டிக் கழித்து வகுத்தாள்.
தானும் சென்னை கிளம்ப ஆயத்தமானாள். இனி தனக்கு இங்கு என்ன வேலை என்பதாய்?
அங்குச் சென்றதும் சிந்து, பைரவி, இனியா, துஷ்யந்த் இந்த நால்வரையும் உலகத்தைவிட்டு அனுப்புவதே தலையாய கடமை என முடிவெடுத்தாள்.
இவற்றை தன் தாயுடன் பேசியே ஆக வேண்டும். அவர் தனக்காக உடல்நிலை தேறி வர வேண்டும். இனி ஒவ்வொரு நொடியும் மிக மிக முக்கியம்.
தன் அறைக்கு வந்து தன் பொருட்களை எடுத்து வைக்கத் தொடங்கினாள். சிந்து அனைத்தையும் கச்சிதமாக செய்து முடிப்பாள் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. அதற்குத் தன்னையே கடிந்து கொண்டாள்.
அடுத்து சென்னைக்கு எப்படிப் போவது? சிந்து செய்த ஏற்பாடுகள் எதுவும் தனக்குத் தெரியாது.
“இதைச் செய் அதைச் செய்” என்று ஆணையிட மட்டுமே தனக்குத் தெரியும். சொன்னதையும் செய்வாள் சொல்லாததையும் செய்வாள். தான் மறந்தாலும் அவள் ஒருபோதும் மறக்க மாட்டாள்.
தலைவனாக இருப்பதைவிடத் தொண்டனாக இருப்பது கடினம் என்றே தோன்றியது.
வர்ஷாவிற்கு யாருக்கு போன் செய்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஒன்றும் புரியவில்லை. கையறுநிலையாய் உணர்ந்தாள். உண்மையில் தான்தான் சிந்துவிற்கு அடிமையாக இருந்தோம் என்றே தோன்றியது.
சிந்துவை தன் மனதிலிருந்து ரப்பர் கொண்டு அழித்தாலும் மீண்டும் மீண்டும் உதித்துக் கொண்டே இருந்தாள்.
இறுதியாகத் தந்தைக்கு போன் செய்தாள்.
“அப்பா நான் சென்னைக்கு இன்னிக்குக் கிளம்பி வரனும். ஏற்பாடு செய்ங்க.” என்றாள்
“சிந்து பைரவி எங்க?” அவரின் கேள்வி
“அது எஸ்டேட் பார்க்க போயிருக்காங்க” எனச் சமாளித்தாள்.
“அங்க ஒண்ணும் பிரச்சனை இல்லையே வர்ஷா?”
“இல்ல டேட். நீங்கச் சீக்கிரமா ஏற்பாடு செய்ங்க”
“சரி வர்ஷா” என்றார்.
மோகனின் நம்பகமான மனிதர் போன் செய்தார் இரண்டே நொடியில்
“மேடம் நீங்க துஷ்யந்த் சிந்து பைரவி நான்கு பேர் இல்லையா?”
“இல்ல நான் மட்டும் தான்”
“ஆனா சார் நாலு பேர் சொன்னாங்க” என இழுத்தான் அவன்
“டு வாட் ஐ சே” என சத்தமிட்டதும்
“எஸ் மேம்” என ஏற்பாடுகளைத் துரிதமாக செய்தான்.
அடுத்த அரைமணி நேரத்தில் கார் வந்தது. எப்படி அலுங்காமல் குலுங்காமல் கூர்கில் கால் பாதித்தாள். அவ்வாறே இங்கிருந்து சென்னை கிளம்பினாள்.
சென்னையில் வர்ஷாவை வரவேற்கப் பல அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருந்தன.
துளிகள் தெறிக்கும் …