• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

துளி துளியாய் துரோகம் 16

kkp5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
125
99
28
Thanavur
துளி துளியாய் துரோகம் 16


சிந்து சப்பாத்தியும் பாலக் பன்னீரும் செய்துக் கொண்டிருந்தாள். பாலக் பன்னீர் செய்முறையை யூடுயூபில் மீண்டும் சரிப் பார்த்தாள். தன் வாழ்நாளில் அதிகமாகச் சமையல் செய்ததில்லை. ஓரிரு இடத்தில் செய்ய வாய்ப்பு கிட்டியது. அவளுக்குத் தன் சமையல் அனுபவங்களை எண்ணிச் சிரிப்புதான் வந்தது.

ஆதரவற்றோர் இல்லத்தில் வேளா வேளைக்குச் சோறு என்று ஒரு வஸ்துவை உண்ணக் கொடுப்பார்கள். வாயில் வைக்க முடியாது. ஆனால் அதைத் தவிர சாப்பிட வேற எதுவும் கிடைக்காது. அதனால் கொடுப்பதைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

சுந்தரி தன் மகளுக்காகச் சிந்து பைரவியை அழைத்துச் சென்றார். அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டில் சமையலுக்கென தனியே ஆட்கள் இருந்தனர். அவர்கள் விதவிதமாக சமைத்துக் கொடுத்தார்.

“இந்த அனாதைகளுக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாரு” என அவர்களுக்குள் பேசிக் கொள்வது சிந்து காதில் விழாமல் இல்லை. பைரவி அத்தனை உன்னிப்பாக எதையும்க் கவனிக்க மாட்டாள்.

போக போகத் தான் வர்ஷா விளையாடத் தங்க கூண்டில் இருக்கும் உயிருள்ள பொம்மைகள் தாம் இருவரும் என சிந்து புரிந்து கொண்டாள்.

வேலை ஆட்களும் சுந்தரி மற்றும் வர்ஷா இருக்கையில் இருவரையும் நன்கு கவனிப்பார்கள். அவர்கள் சென்றதும் வேறு மாதிரி இருவரையும் நடத்துவார்கள். அதனால் சிந்து அவ்விடத்தில் வேலையாட்களுக்கு தாங்கள் சும்மா உணவு உண்ணவில்லை என்பதை காண்பிக்க தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து உதவினாள்.

சிறு வயதில் கள்ளம் கபடம் இல்லாத வர்ஷா மொத்த அன்பையும் இருவர் மேல் பொழிந்தாள். வயது ஆக ஆக வர்ஷா ஏதேனும் ஒரு சமயத்தில் மனம் புண்படும் விதமாக நடந்து கொள்ளத்தான் செய்தாள். ஆனால் சிறிது நேரத்தில் சகஜமாக வந்து பேசுவாள்.

அவளைப் புரிந்து அவள் எண்ணம் போல் நடக்க வேண்டியிருந்தது. சிந்து வர்ஷாவின் கட்டளைக்கு அடி பணிந்தாள். ஆனால் பைரவியால் அப்படி முழுவதுமாக இருக்க முடியவில்லை.

சிந்து மற்றும் பைரவி வசிக்கும் வீட்டில் சுந்தரி சமைக்க வயதானவரை நியமித்திருந்தார். அப்போது இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர். தொடக்கத்தில் நன்றாகப் போனது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த பெண்மணி உடல் உபாதையால் அவதிப்பட்டார். அப்போதுதான் சிந்து சிறுக சிறுக சமைக்கத் தொடங்கினாள்.

வயதானவரால் சமைக்க முடியவில்லை எனத் தெரிந்தால் சுந்தரி வேலையைவிட்டு நிறுத்திவிடுவார். பாவம் அவர் குடும்பமே இந்த வருமானத்தை நம்பிதான் உள்ளது. அப்படியான சமயங்களில் சிந்து அவரிடம் சமையல் செய்முறையைக் கேட்டுச் சமைப்பாள். அவரும் சிந்துவுக்கு நன்றி கூறிய தருணங்கள் பல உள்ளன.

அடுத்து சுந்தரி உடல் நலன் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுந்தரியின் ஆணைப்படி பிரதான பங்களா சாப்பாடு. வர்ஷாவுக்கு அருகில் இருக்க வேண்டும் என்பன போலப் பல கட்டளைகள். அங்கும் சமைக்கும் பெண்மணி சிந்துவுக்கு நட்பாகிப் போனார். அவர்தான் ராகேஷ் லீலைகளை போன் செய்து கூறியவர்.

அனைத்து வசதிகளும் உடைய ஏழையாகத்தான் சிந்து மற்றும் பைரவி வாழ்க்கை இருந்தது. அனைத்தும் அனுபவிக்கலாம் ஆனால் உரிமை கொண்டாட முடியாது.

இன்னமும் சிந்து மனதில் வர்ஷா தனியே எண்ணச் செய்வாள்? என்று கவலைப்பட்டாள். என்னதான் வர்ஷா தான் பெரிய அறிவாளி என்றெல்லாம் சொன்னாலும் உண்மையில் தனியே இருப்பதால் சோர்ந்துவிடுவாள்.

அதிலும் தற்பொழுது தாங்களும் இல்லை துஷ்யந்தும் இல்லை என்னும் போதில் நிச்சயம் துவண்டுவிடுவாள்.

அந்த புதிய நபர் தன்னிடம் “சிந்து நான்தான் உன் தாய் மாமன்” என்று அறிமுகப் படுத்திக் கொண்டது இன்னும் பசுமையாய் நினைவில் இருந்தது.

தாய் தந்தையே யாரெனத் தெரியாது இதில் மாமனா? எனச் சிந்து நகர்ந்துவிட்டாள்.

பல நாட்களாக அவர் தொடர்ந்து சிந்துவிடம் பேச முனைந்தார். ஒரு நாள் அவள் தனியே செல்கையில் சட்டென அவள் காலில் விழு எத்தனித்தார் அம்மனிதர்.

சிந்து இரண்டடி பின்னே சென்று “ சார் என்ன இதெல்லாம்?” என முகம் சிவக்கக் கோபத்தில் வெகுண்டாள்.

“நான் பெரிய பாவி என்னை மன்னிச்சிடு சிந்து” என்றார்.

“நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேட்குறீங்க? போங்க” என விரட்டிவிட்டாள்.

“நான் உனக்குத் தாய்மாமா. உன்னை நான் தான் அனாதை ஆசிரமத்துல சேர்த்தேன்.”

“எனக்கு அம்மா அப்பாவே யார்னு தெரியாது. இதுல தாய் மாமாவா?” எனச் சிரித்தாள்.

“உன் அம்மா அப்பாவைக் கொலை பண்ணிட்டாங்க சிந்து. அதுக்கு காரணம் ...” என முழு விவரத்தைக் கூறினார்.

அதைக் கேட்கக் கேட்க நெஞ்சம் வெடித்துவிடும் போல இருந்தது. கண்ணீரைத் துடைத்தவள். என்றோ நடந்தது இனி என்ன செய்ய இயலும் என்று தன்னை முடிந்தவரைத் தேற்றிக் கொண்டாள். இது ரகசியமாக இருக்கட்டும் யாருக்கும் தெரிய வேண்டாம் என முடிவெடுத்தாள்.

மனதில் கோபதாபம் கொட்டிக் கிடந்தாலும் “சரி இனிமே எதுவும் செய்ய முடியாது. செய்யவும் வேண்டாம். அப்படியே விட்டுடுங்க”என்றாள் சிந்து.

“என்ன மா இப்படி சொல்ற?” இதை அவர் எதிர்பார்க்கவில்லை என முகமே தெளிவாகக் காட்டியது.

அவரின் போன் நம்பர் விலாசம் போன்றவற்றை வாங்கிக் கொண்டாள். இருவரும் பல நாள் சந்தித்து பேசினார்கள்.

சிந்து கூர்க் சென்ற முதல் நாள் இரவு துஷ்யந்த் தங்கியிருக்கும் ரிசார்ட்டில் தனியறை எடுத்துக் கொண்டு தங்கினாள். அன்று நள்ளிரவு மோகன் போன் செய்தார்.

“ ஹலோ சிந்து வர்ஷா தூங்கிட்டாளா?” என்று ஆரம்பித்தார்.

வர்ஷா நாராயணன் பங்களாவில் இருப்பதையும் தான் இங்கு துஷ்யந்த்காக இருப்பதையும் கூறினாள். இது வர்ஷாவின் திட்டம் என்றாள்.

“இதுவும் நல்லதுக்குத்தான்” என்றவர் “ சிந்து நீ என் தம்பி வெற்றியுடைய பொண்ணுமா” என நா தழுதழுக்கப் பேசினார்.

“உன் மாமா என்னை வந்து பார்த்தார். என்னால முதல்ல நம்ப முடியலை டி.என்.ஏ டெஸ்ட் செய்து பார்க்கச் சொன்னேன். உன் ரூம்ல இருந்து உன் முடியை சாம்பிள்க்கு எடுத்து டெஸ்ட் செய்தோம். உறுதியா நீ எங்க குடும்ப வாரிசுனு தெரிந்துருக்கு. ரொம்பச் சந்தோஷம் மகளே” என்றவர்

தொடர்ந்து “இப்போதைக்கு வர்ஷாகிட்ட சொல்ல வேண்டாம்” என்றார்.

என்ன சொல்வதென்று தெரியாமல் இருந்தவள் “எஸ். சார்” என்றாள்.

“சிந்து வாய் நிறைய பெரியப்பானு கூப்பிடுமா” என்றார்.

அவளும் தயங்கித் தயங்கி “ சரி பெரியப்பா” என்றாள். கண்கள் குளமாயின.

கூர்கில் அடுத்த இரண்டு தினங்களில் வர்ஷா மற்றும் பைரவி மோதல் சிந்துவை வெகுவாக காயப்படுத்தியது.

வர்ஷாவிற்காக எத்தனை செய்தாலும் இறுதியில் அவள் தன் குணத்தை காட்டிவிடுகிறாள் என உள்ளூர கோபம் இருந்தது.

சிந்து வேண்டுமென்றே வர்ஷாவிடம் பணத்தில் நாட்டமில்லை என்றாலும் சொத்தில் பங்கு வேண்டும் என்று பேசினாள். எத்தனை நாட்கள்தான் பொருத்துக் கொள்வது?

சென்னை வந்ததும் மோகன் சிந்துவை வரவேற்றார். பைரவி துஷ்யந்த் இருவருக்கும் இன்ப அதிர்ச்சி.

உண்மையை அறிந்து “வெரி ஹேப்பி பார் யூ சிந்து“ என்றான் துஷ்யந்த் மனப்பூர்வமான வாழ்த்துகளுடன்.

“அடிப்பாவி சொல்லவே இல்ல” எனப் பைரவி பொய்யாக கோபப்பட்டாள். அடுத்த நொடி அணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.

அனைத்தும் அறிந்த இனியா மர்ம புன்னகையுடன் அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தாள். தான் மனதில் நினைத்தது அப்படியே காட்சியாக நடப்பதை எண்ணி ஆனந்தமானாள்.. அதை மற்ற யாருமே அறியார்.

தன் சமையல் தேர்ச்சி மற்றும் பழைய நிகழ்வுகளை எண்ணிக் கொண்டிருந்த சிந்துவைப் பைரவி குரல் நிகழ்காலத்திற்கு இழுத்தது.

“சிந்து பசிக்குது” எனப் பைரவி சமையலறைக்குள் புகுந்தாள். வாசனை மூக்கை துளைக்க “வாவ் செம வாசனை .. சீக்கிரமா சோறு போடு தாயி” எனக் கிண்டலாகக் கூறவும். இருவரும் சிரித்தனர்.

பைரவி தனியே ஸ்பூனில் கொஞ்சம் பாலக் பன்னீரை வழித்து ருசிப் பார்த்தாள். “முன்னவிட இப்ப பரவாயில்ல” என மதிப்பெண் கொடுத்தாள். “அடிங்க்க” என்று செல்லமாக அடித்த சிந்து “ நீ கல்யாணம் பண்ற பொண்ணு நீயும் கத்துக்க” என வம்பிழுத்தாள்.

“அதெல்லாம் என் மாமியார் பாரத்துப்பாங்க” என்று பழுப்புக் காட்டினாள்.

சிந்து தனியே இரண்டு படுக்கை அறை கொண்ட பிளாட்டை வாடகைக்கு எடுத்து வசிக்கிறாள். மோகன் சிந்துவுக்குத் தனியே கார் பங்களா வழங்குவதாகப் பல முறை கூறினார். ஆனால் சிந்து அவர் கொடுத்த வேலையே தனக்கு அதிகம் என மற்ற எதுவும் தனக்குத் தேவை இல்லை என மறுத்துவிட்டாள். அவளுடன் பைரவி மற்றும் இனியாவும் வசிக்கின்றனர்.

துஷ்யந்த் தனக்கும் இனியாவிற்கும் வீட்டில் கல்யாணம் முடிவாகும்வரை சிந்துவுடன் இருக்கட்டும் எனக் கேட்டுக் கொண்டான். அவளும் சம்மதித்தாள்.

சிந்து சாப்பாட்டு மேஜையில் சமைத்த உணவைக் கொண்டு வந்து வைத்தாள். பைரவி உதவினாள்.

“இனியா சாப்பிட வா” எனப் பைரவி அழைத்தாள்.

“வரேன் பா பைவ் மினிட்ஸ்” என்ற இனியா சில நிமிடங்களில் அவர்களுடன் இணைந்தாள்.

மூவரும் ஒன்றாக சாப்பிட்டனர்.

வேலை செய்த களைப்பில் இனியா முகம் வாடியிருந்தது “எப்படி பா வர்ஷாவோட இத்தனை வருஷமா குப்பை கொட்டினீங்க?” என கேட்டபடி சாப்பிட்டாள்.

“வௌவாலுக்கு வாழ்க்கை பட்டா தலைகீழா தொங்கிதானே ஆகணும்” என பைரவி சொன்னதும் இனியா குப்பென சிரித்துவிட்டாள்.

பேசி சிரித்து உணவை முடித்தனர். அடுத்து பைரவி சமையலறையைத் துடைத்து சுத்தம் செய்தாள். பின்பு பாத்திரங்களைக் கழுவி வைத்தாள்.

திருமணத்திற்குப் பிறகு எதுவும் தெரியாது என நிற்க முடியுமா?. அதனால் இப்போது பழகிக் கொண்டிருக்கிறாள் பைரவி .

வேலை முடித்தபின் விகாசுடன் பேச ஆரம்பித்தாள் விடிய விடிய இருவரும் பேசுவார்கள்.

இனியா வேண்டுமென்றே அந்த பக்கமாகப் போகையில்

“சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா? என்னவோ மயக்கம்”

“என் வீட்டில் இரவு அங்கே இரவா? இல்ல பகலா? எனக்கும் மயக்கும்” எனப் பாட்டுப் பாடுவாள்.

அதற்குப் பைரவி உதைப்பேன் எனச் செய்கை செய்வாள்.

இன்னும் இரண்டு மாதத்தில் விகாஸ் பைரவி திருமணம் சென்னையில் நடைபெற உள்ளது.

விகாசின் தாயாருக்கும் தங்கைக்கும்ப் பைரவியை மிகவும் பிடித்துவிட்டது. இனியா விகாசின் பக்கத்து வீட்டில் வசிக்கிறாள்.

அன்று துஷ்யந்த் அபே பால்சில் தன்னை காவல் காக்கத் தேவையில்லை. இளம் காதல் ஜோடிகளான விகாஸ் மற்றும் பைரவி ஊர் சுற்றுச் செல்லுங்கள் என்று கூறினான்.

விகாஸ் ஓரிரு நொடி தயங்கிய பின் “துஷ்யந்த் நான் கேட்கிறது கொஞ்சம் சுயநலமாகத்தான் இருக்கும் ஆனாலும் கேட்கிறேன் என்று தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் இனியாவிற்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். அவளுக்கு ஓவியம் வரையத் தெரியும் ஆனால் சில நுணுக்கங்கள் கற்க ஆசைப்படுகிறாள். கற்றுக் கொடுப்பாயா? என்று கேட்டான்.

இனியாவும் ஓவியம் கற்றுக் கொள்வாள் துஷ்யந்தும் தனியாக இருக்க வேண்டியதில்லை என்பதால் கேட்டான்.

துஷ்யந்த் சம்மதித்தான். விகாஸ் போன் செய்து இனியாவை வரவழைத்தான். இனியாவைக் கண்டதும் துஷ்யந்த் அதிர்ந்தான். வெண்பா மீண்டு வந்துவிட்டாள் என்றே நினைத்தான்.

முக அமைப்பு வேறுபட்டு இருந்ததால் துஷ்யந்த் எதுவும் கேட்கவில்லை. பைரவி கூட சந்தேக பார்வை பார்த்தவள் அதை அந்த நிமிடமே மறந்தும் விட்டாள். துஷ்யந்த் மூன்றாம் நபரான இனியாவிடம் பேசுவது போலத்தான் பேசினான்.

வெண்பாவின் நடை உடை பாவனை என்று எதுவும் இனியாவுடன் ஓத்துப் போகவில்லை. ஆனால் ஏதோ ஒன்று இனியாவுடன் வெண்பாவை சேர்ப்பது போல உணர்ந்தான். ஏதோ ஒரு ஈர்ப்பு அவனை அறியாமல் அவளிடம் ஏற்பட்டது.

இனியா துஷ்யந்தை கண்டதும் முதலில் அதிர்ந்தாள். பின்பு தன்னை கட்டுப்படுத்தி துஷ்யந்திடம் பேசத் தொடங்கினாள்.

இரண்டு நாட்கள் பழகியதில் துஷ்யந்த் இனியாவை காதலிப்பதாகக் கூறினான். தனக்கே உரிய துஷ்யந்த் இப்படிக் கூறுகையில் ஆனந்தம் பொங்கியது.

ஆனால் தனக்கு சில கடமைகள் உள்ளதையும் அது முடிந்த பின்னரே திருமணம் எனப் பதிலளித்தாள்.

அதனால் இருவரின் காதல் இன்னமும் வீட்டின் பெரியவர்கள் காதை அடையவில்லை.

இனியா முன்பே மோகன் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள். சரியாக அவளுக்கு வேலையும் கிடைத்துவிட்டது. ஆனால் அவள் விண்ணப்பித்த வேலை வேறு. கிடைத்தது என்னவோ வர்ஷாவுக்கு சாமரம் வீச. பாதகமில்லை என ஏற்றுக் கொண்டாள்.

இனியா தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதுவும் வர்ஷாவை உணவகத்தில் துஷ்யந்த் உடன் சந்திக்கையில் தன் முழு மனதையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அத்தனை சுலபமான காரியமாக இல்லை.

துஷ்யந்த் இனியாவை தன் காதலி என வர்ஷாவிடம் அறிமுகம் செய்து வைத்தான். காரணம் வர்ஷாவின் செயல்களான அதீத கவனிப்பு சந்தேகம் ஏற்படுத்தியது. அதனால் அவள் மேலும் ஆசை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே சொல்லி வைத்தான்.

இனியா வேண்டுமென்றே வர்ஷாவை தனியே சந்தித்துப் பேசி தன்னை பற்றிய முழு உண்மையைக் கூறி வைத்தாள். அவளும் சுந்தரியும் செய்த குற்றங்கள் யாருக்கும் தெரியாது என்ற தைரியத்தில் சுற்றினர்.

தன்னிடம் ஆதாரம் உள்ளது எனக்காட்டி அவளை அச்சத்தில் வைத்திருப்பதே அதன் நோக்கம்.

வர்ஷா அலுவலகத்தில் தன்னால் முடிந்தவரை இனியாவை வேலை வாங்கினாள். வேண்டுமென்றே காபி டீ போன்றவற்றை மேசை மேல் கொட்டி அதைச் சுத்தம் செய்யச் சொன்னாள்.

அனைத்து கோப்புகளையும் தள்ளி விடுவாள் அல்லது மாற்றி வைப்பாள். அதை இனியா சரி செய்ய வேண்டும். கணினியில் டைப் செய்தவற்றை அழித்து மீண்டும் தட்டச்சு செய்யச் சொல்வாள்.

இனியா சளைக்காமல் அனைத்தையும் செய்துவிட்டு “இதெல்லாம் சாந்த சக்குபாய் படத்திலேயே செய்தாச்சி வர்ஷா .. உன்கிட்ட இருந்து இன்னும் பெரிசா எதிர்பார்க்கிறேன்” என்பாள்.

“உன்னைப் பற்றி உண்மையை வெளிக் கொண்டு வரேன் பார்” என்பாள் ஆத்திரத்துடன் வர்ஷா.

“நான் வெண்பானு தெரிய வந்தால் .. அடுத்த நிமிஷம் நீயும் உன் அம்மாவும் கம்பி எண்ணனும். ஞாபகம் இருக்கட்டும்” என இனியா பதிலடிக் கொடுப்பாள்.

தனிமையில் சுழன்று கொண்டிருந்த வர்ஷா இனியாவை தான் தன் பிரதான எதிரியாகக் கருதினாள்.

சிந்து ஒரு பொருட்டே அல்ல. ஒரு துளி கண்ணீர் சிந்துவை பழையபடி வேலைக்காரி ஆக்கிவிடும்.

கல்பனாவை பிறகு பார்த்துக் கொள்ளலாம். பைரவி திருமணம் முடிந்து சென்றுவிடுவாள்.

இனியாவை வீழ்த்துவது அத்தனை எளிதான காரியம் இல்லை. வெண்பாவிற்கு இனியா என்னும் முகமுடி ஏன்? யார் இந்த இனியா? முதலில் அவள் யார் அவள் பின்புலம் பற்றி அறிய வேண்டும் என்று எண்ணினாள்.

இனியா வேலைக்கு விண்ணப்பித்த தகவல்களைப் பார்த்தாள். பிறப்பு படிப்பு என அனைத்தும் மைசூர் என்றிருந்தது. சான்றிதழ்கள் உண்மையானதா? அல்லது போலி சான்றிதழா?

துஷ்யந்த் மைசூர் சென்றது நினைவுக்கு வந்தது. அங்குதான் இருவரின் முதல் சந்திப்பாக இருக்குமா? எனத் தன்னையே கேட்டுக் கொண்டாள்.

வர்ஷாவிற்கு நம்பகமான காவல்துறை அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களிடம் இனியாவை பற்றி விசாரிக்கச் சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

துளிகள் தெறிக்கும்…



























 
  • Like
Reactions: ADC