துளி துளியாய் துரோகம் 17
வர்ஷா தனக்கு மிக மிக நம்பகமான காவல்துறை அதிகாரி மூலம் இனியாவை பற்றிய தகவல்களைச் சேகரிக்க எண்ணினாள். காவல்துறை நிச்சயமாகத் துருவித் துருவி விசாரணை செய்யும் அப்படிச் செய்கையில் ஒருவேளை தன் அன்னை பற்றிய ரகசியம் வெளி வந்தால் என்ன செய்வது? அப்படி நடந்தே தீரும் என்றில்லை. ஆனால் நடந்தாலும் நடக்கலாம்.
நம்பகமான காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் வாழ்க்கையில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை. ஆதலால் அவர்களால் வேறு வகையில் நெருக்கடி ஏற்பட்டால் என்ன செய்வது? எனக் குழம்பினாள்.
நேற்றுவரை சிந்து மற்றும் பைரவி தனக்கு எத்தனை நெருக்கமான நட்பு வட்டத்தில் இருந்தனர். ஆனால் இன்று நிலைமையே வேறு. இப்படி இருவரும் உனக்கு எதிரி ஆவார்கள் என்று யாரேனும் முன்பு கூறியிருந்தாள். நிச்சயமாகக் கைகொட்டிச் சிரித்திருப்பேன் என தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
தனக்கு என்ன தேவையோ அதை மட்டும் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும். அதற்கு தனக்கு நம்பகமான துப்பறியும் நிறுவனத்தைப் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தாள். வர்ஷாவின் ஒரு சொடுக்கிற்கு ஆயிரம் நிறுவனங்கள் வரும். ஆனால் அவை ஆதாயம் தேடும் ஓநாய்களாக இருக்க மிகுந்த வாய்ப்பு உள்ளது.
ப்ரீத்தி வர்ஷாவின் நெருங்கிய தோழி. ப்ரீத்தியின் தம்பி துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறான். சேற்றில் மலர்ந்த செந்தாமரை. அவனுக்கு சுயமாகத் துப்பறியும் வேலை செய்து முன்னேர ஆசை. ஆனால் அவனை வீட்டில் அனைவரும் தண்டச்சோறு என்றே திட்டி வருகிறார்கள்.
அவனைப் பயன்படுத்த வர்ஷா திட்டமிட்டாள். வர்ஷாவின் தோழி என்றால் கோடிஸ்வரியாகதானே இருக்க வேண்டும். இந்த தோழியும் அப்படிதான். வறட்டு ஜம்பம், கர்வம், கௌரவம் என அனைத்து பொருத்தங்களும் கச்சிதமாகக் கொண்டவள்.
புகழ் பெற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தினால் தன் குடும்பத்துக்கு நிச்சயம் ஏதேனும் ரூபத்தில் பிரச்சனை வரலாம். இவனைப் போன்று முன்னேறத் துடிக்கும் துடிப்பான இளைஞர்கள் தாம் தேவை. அவர்கள் வேலையில் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.
இவனைப் பயன்படுத்தினால் பிரச்சனை வருவது அரிதிலும் அரிது. அப்படியே வந்தாலும் எளிதில் சமாளிக்கலாம். இவன் பக்கம் நிற்க யாரும் இல்லை எனப் பலவாறு சிந்தித்தாள் வர்ஷா.
எப்பொழுதோ அவன் கொடுத்த விசிடிங் கார்ட்டை தேடினாள். சிந்துவிடம் சொன்னாள் ஒரு நொடியில் வேலை முடிந்துவிடும் என மனதின் தராசு முள் அவள் பக்கம் சில நிமிடங்கள் சாய்ந்து மீண்டது.
அன்று மதியம் அலுவலகத்தில் மோகனுடன் தனியே வர்ஷா பேசுகையில் வர்ஷாவிடம் தனிப்பட்ட உதவியாளரை அமர்த்திக் கொள்ள மோகன் வற்புறுத்தினார். ஆனால் வர்ஷா சிந்துவைப் போல இனி யாரும் கிடைக்கமாட்டார்கள். மூன்றாம் நபர் மேல் நம்பிக்கை வைக்கவும் முடியவில்லை. அதனால் இனி தானே தன் வேலைகளைக் கவனித்துக் கொள்வதாகக் கூறிவிட்டாள்.
மோகன் மகளுக்காக மிகவும் வருந்தினார் “வர்ஷா எங்களோடு வந்திடு மா .. நீ தனியா இருக்கிறதைப் பாக்க கஷ்டமா இருக்கு. சிந்து பைரவி முன்ன இருந்தாங்க பிரச்சனை இல்லமா இருந்தது. ஆனா இப்ப நீ தனியா இருக்க”
“எனக்கு யோசிக்கக் கொஞ்சம் டைம் கொடுங்க அப்பா ..” என்றாள்.
“சீக்கிரமா சொல்லு நாம எப்பவும் போலப் பெரிய பங்களால சேர்ந்து இருக்கலாம்” என்றார் வாஞ்சையோடு தலையை தடவியபடி.
அப்படியே அவர் மடியில் படுத்து அழுதுவிடலாம் போல தோன்றியது.
தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
இரவு சுந்தரி பங்களாவில் எப்படியோ தானே தேடி துழாவித் துப்பறியும் நிறுவன அலைபேசி எண்ணை எடுத்துப் பேசினாள். அவனை உடனே தன் இருப்பிடத்திற்கு வரச் சொன்னாள்.
அடுத்த ஒருமணி நேரத்தில் வர்ஷா முன்பு ஆஜர் ஆனான்.
“கிலாட் டு சீ யூ மேம்” என பணிவாக நின்றான். அவளும் வரவேற்பது போலச் சிறு புன்னகையுடன் தலையசைத்தாள்.
அவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். துருதுருவென அலைபாயும் கண்கள். இன்னமும் விளையாட்டு புத்தி போகவில்லை. நெடுநெடுவென ஒல்லியாக இருந்தான். சற்றே நீண்ட தலைமுடி.
அவள் கண்கள் தன் முடிமேல் நிலைத்ததைப் புரிந்து “தோனி ஹேர் ஸ்டைல்” என்றான் சிறுப் புன்னகையுடன்.
“உட்கார் .. உன் பேர்? போன்ல என்ன சொன்ன?”
“பரத்” என்றபடி எதிர் சோபாவில் அமர்ந்தான்.
தன் தோழி கூறிய வார்த்தையை மெய்ப்பிக்கும் வகையில் தான் இருக்கிறானா?.
அவனைப் பற்றிப் புரிந்து கொள்ள பேசத் துவங்கினாள்.
“எப்படி போகுது உன் துப்பறியும் நிறுவனம்?” வர்ஷா விசாரிக்க.
“சொல்லிக்கிற அளவு இல்லை … ஜஸ்ட் கல்யாணத்துக்கு முன்னை மாப்பிள்ளை வீட்டுக்குப் பெண் பற்றி .. பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை பற்றி துப்பறியணும். இதுதான் இப்ப நடக்குது” என்றான் விரக்தி புன்னகையுடன்.
“அகதா கிரிஸ்டி, ஜேம்ஸ் பாண்டு, ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரி அவுட் ஸ்டான்டிங் கேஸ்சை சால்வ் பண்ண ஆசைதான். ஆனா ஆபீசுக்கு ஜாதக கட்டுதான் வருது. ” என அலுத்துக் கொண்டான்.
அவன் முன் தன் கம்பீரம் குறையக் கூடாது என்பதால் வர்ஷா தன் சிரிப்பை அடக்கிக் கொண்டாள். பார்க்க பாவமாகத்தான் இருந்தது.
“என் கேஸ்சை நீ சால்வ் பண்ணு .. நீ நினைச்ச இடத்தை அடைய நான் உதவுறேன்” என்றாள்.
“கண்டிப்பா சால்வ் பண்றேன் மேம்”
வர்ஷா தொடங்கினாள் “ எனக்கு இனியா என்ற பெண் பற்றி முழு தகவல் வேண்டும்”
“இனியா எங்க இருக்காங்கனு கண்டுபிடிக்கணுமா?”
“ இல்ல .. இனியா என் ஆபீஸ்ல தான் வேலை செய்யறா”
“ஐ சீ” ஆச்சரியமாகப் புருவத்தை உயர்த்தினான்.
“எனக்கு இவளுடைய கடந்த காலம் தெரியணும். இது எல்லாம் அவளுடைய சர்டிபிகேட்ஸ் அண்ட் போட்டோ” என அனைத்தையும் கொடுத்தாள்.
சோபாவின் நுனியில் அமர்ந்து வர்ஷா காட்டிய சான்றிதழ்களை மற்றும் இனியா புகைப்படத்தையும் ஒவ்வொன்றையும் கவனமாக எடுத்துப் பார்க்கத் தொடங்கினான்.
“இனியா உண்மையாகவே இந்த ஸ்கூல் காலேஜ்ல தான் படிச்சாளா? இந்த அட்ரஸ்ல இருந்தாளா? எனக்கு எல்லாமே தெரியணும்” எனக் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தாள்.
“ஷ்யூர் மேம். எனக்கு டென் டேஸ் டைம் வேணும்”
“ டேக் யூர் ஓன் டைம் .. பட் பரத் இது ரொம்ப ரகசியமா இருக்கணும்.”
“கண்டிப்பா மேம்” உறுதியளித்தான்.
அவள் ரொக்கமாக ஒரு தொகையை அவனிடம் நீட்டினாள். அதைப் பார்த்தவன் கண்கள் விரிந்தன.
“இது அட்வான்ஸ் தான் .. நீ எல்லாத்தையும் கண்டுபிடி.. நினைத்துப் பார்க்காத அளவு பணம் தரேன். இது ரகசியமான வேலை அதனால் கேஷ் டிரான்சாக்ஷன் தான். என்னை ஆபீஸ்ல வந்து பாக்காத. இங்கயும் வேண்டாம். போன்ல மட்டும் பேசினா போதும். ” என்றாள்
“மொத்த கேஸ்க்கும் இது போதும்” என்று அதில் பாதி தனியே அவள் பக்கம் வைத்தான்.
தனக்கான பணத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டான்.
புருவத்தை உயர்த்திப் பார்த்தவள் “இம்ப்ரெஸ்ட்” என தனக்குள் சொல்லிக் கொண்டாள். ஆனால் எதுவும் சொல்லவில்லை.
“தேங்க்யூ” என்று சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் கிளம்ப ஆயத்தமானான்.
வர்ஷா தலையசைத்து விடை கொடுத்தாள்.
கேஸ் முடிந்ததும் மீதி பணத்தை அன்பளிப்பாகக் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.
*****
இரவு பத்து மணி இனியா வேலைகளை முடித்துவிட்டு உறங்க ஆயத்தமானாள். பைரவி காதில் போன் ஒட்டிக் கொண்டிருந்தது. சிந்து அலுவலக பணியில் மூழ்கியிருந்தாள்.
இனியா உறங்க முயல அதுவோ வர மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்தது. காரணம் மனப் பாரம். அன்று தன் தந்தையின் மூன்றாவது வருட இறந்த தினம். கண்ணீரை எத்தனை முறை துடைத்தாலும் கங்கை நதி போலப் பிரவாகம் எடுத்தது.
வெண்பா மனதில் தன் அன்பான தாய் நல்லம்மை மற்றும் தந்தை சாரங்கன் முகம் நிழலாடியது. இருவரும் தங்களின் ஒரே செல்ல மகள் வெண்பாவின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருந்திருந்தனர்.
சாரங்கன் சென்னையில் தனியார்ப் பள்ளியில் தமிழ் ஆசிரியர். அவருக்குத் தமிழில் இலக்கணம் மிகவும் பிடித்தது. அதனால்தான் மகளுக்கு வெண்பா எனப் பெயர் சூட்டினார். தாய் குடும்ப நிற்வாகி.
ஒரே மகள் என்பதால் வெண்பாவை பாச மழையில் நனைத்து மூச்சுமுட்டச் செய்வார்கள். அவளும் பாசத்தைப் பெற்று அதை இரடிப்பாக்கிக் கொடுப்பாள். கொடுப்பதிலும் பெறுவதிலும் அலாதி சுகம் கண்டாள்.
சிறுவயதிலிருந்தே வெண்பாவிற்குக் குற்றச் செயலில் ஈடுபடும் நபர்களைத் தண்டிக்கும் காவல்துறை மீது ஒரு அலாதி மரியாதை. அவர்களைக் கண்டு பிரமித்துப் போவாள்.
சமுதாயத்தில் குற்றங்களைத் தடுத்துத் திருத்த வேண்டும் என்ற ஆசை அவளுள் விதையாக விழுந்து புதைந்தது. அவளின் பெற்றோரும் அவளின் விருப்பத்திற்குச் செவிசாய்த்தனர்.
அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருந்த தருணம். அவளின் தாய் நாகம்மை நோய்வாய் பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் பல நாட்கள் இருந்தார்.
வெண்பா பத்தாம் வகுப்பு முடித்திருந்த தறுவாயில் அவள் அம்மா நோயின் தீவிரம் காரமாக இறந்துவிட்டார். உலகமே மூழ்கியது போலத் தகப்பனும் மகளும் ஸ்தம்பித்துப் போயினர்.
உறவுகள் பதிமூனாம் நாள் காரியம் வரை இருந்தது. பிறகு அவரவர் வேலை குடும்பம் எனச் சென்றுவிட்டனர். அவர்களையும் குறை சொல்ல முடியாது.
அதனால் தந்தை “சாதாரண படிப்பு போதும் வெண்பா. போலீஸ் வேலை எல்லாம் வேண்டாம். உன்னை ஒருத்தன் கையில பிடிச்சி கொடுத்திட்டா என் கடமை முடிஞ்சது” என்ற அப்பாகளின் யூனிவர்சல் டைலாக்கை பேசிவிட்டார்.
தந்தை மனதை புண்படுத்தி தனக்கு பிடித்ததைப் படிக்கும் எண்ணம் அவளுக்கு இல்லை. வெண்பா இனி வாழ்க்கையில் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவது மட்டுமே தன் கடமை என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.
வருடங்கள் உருண்டோடின. வெண்பா வளர்ந்து அழகிய மங்கையானாள். ஐந்தடி ஆறு அங்குல உயரம் திடமான உடம்பு. காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே ஆசைப்பட்டவள் ஆயிற்றே .. மனம் நினைத்தால் என்னவோ அதற்கு ஏற்றார் போல உடல்வாகு அமைந்தது.
“வெண்பா இன்னிக்கு காலேஜ் முதல் நாள். அம்மாவை வேண்டிக்கோமா” என்றார் அப்பா .
வெண்பா தயாராகி தன் அம்மா புகைப்படத்திற்கு முன் வந்து நின்றாள். தாயை போலப் பாசம் காட்ட உலகில் வேறு எவரும் இல்லை என்று நினைத்தவளுக்கு துக்க பந்து நெஞ்சை அடைத்தது. கைகூப்பி மனதார வணங்கினாள்.
தந்தையிடம் விடைப் பெற்று கல்லூரி கிளம்பினாள். பள்ளியில் பயிலும் கட்டுப்பாடுகள் கல்லூரியில் இருக்காது. அதிலும் பள்ளிச் சீருடை இல்லை என்பது மிகவும் சந்தோஷம் அளித்தது. வெண்பா சின்ன சின்ன விஷயங்களுக்கும் சந்தோசப்படுவாள்.
வெண்பா கல்லூரியில் முதல் ஒரு வாரம் மிகவும் சாதுவான பெண்ணாகவே இருந்தாள். துஷ்யந்த் இவளுக்கு சீனியர். அவனுடன் படிக்கும் மாணவர்கள் வெண்பாவை ராக்கிங் செய்ய முற்பட்டனர். ஆனால் துஷ்யந்த் வந்து “என்னடா இதெல்லாம்?” என்று அவர்களை விரட்டி வெண்பாவை கண்டு “ நீ போமா” எனக் காப்பாற்றினான்.
உண்மையில் அவர்கள் தான் தன்னிடமிருந்து தப்பிவிட்டனர் என்று வெண்பா தனக்குள் சிரித்துக் கொண்டாள். இப்படி எண்ணியவளின் நடையில் தேக்கம் ஏற்பட அதைப் பார்த்த துஷ்யந்த் “பயப்படாத ..” என்று ஆறுதல் கூறினான் .
நன்றி கூறி தன் வகுப்பிற்குக் கிளம்பினாள். புதியத் தோழிகள் பாடம் என நாட்கள் அழகாய் நகர்ந்தன.
அன்று ஓருநாள் எதிர்பாராமல் துஷ்யந்தை சந்தித்தாள். இருவரும் சிறு புன்னகையுடன் கடந்துவிட்டனர். சற்றுத் துரம் தள்ளிச் சென்றவள். துஷ்யந்த் சென்றுவிட்டானா? எனக் கள்ளத் தனமாக திரும்பிப் பார்த்தாள்.
அவனும் அதே போல அவள் சென்றுவிட்டாளா? எனக் காணத் திரும்பினான் இருவர் விழிகளும் இரண்டற கலந்தன. புன்னகை மொட்டு அவிழ்ந்தது.
இருவரும் தங்களின் அழகான காதல் காவியத்தை எழுதத் தொடங்கினர்.
துளிகள் தெறிக்கும்…