துளி துளியாய் துரோகம் 18
வெண்பா, துஷ்யந்த் அறியாமல் அவனை நோட்டமிட்டாள். பின்பு மீண்டும் துஷ்யந்த் சென்றுவிட்டானா? என எட்டிப் பார்க்க அங்கு அவனும் வெண்பாவை போலவே எட்டிப் பார்த்தான். இருவரும் மற்றவர் தன்னை பார்த்துக் கொண்டிருப்பர் எனக் கனவிலும் எண்ணவில்லை.
“அச்சோ” என நாணத்துடன் வெண்பா உதட்டை கடித்து தன் சிறுபிள்ளைத் தனத்தைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் சற்று தவித்துப் போயினர். துஷ்யந்த் தனக்குள் சிரித்துக் கொண்டான். விரைவாக இடத்தைவிட்டு நகர்ந்தான். வெண்பா அப்படியே நின்றாள். மீண்டும் ஒருமுறை தன் செயலை உள்ளத்தில் ஓடவிட்டு ரசித்தாள்.
அன்று மாலை கல்லூரியிலிருந்து கிளம்புகையில் லேசான மழை தூவத் தொடங்கியது. துஷ்யந்த் தன் பைக் பார்க் செய்த இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான். அங்கே வெண்பா தன் பைக்குடன் போராடிக் கொண்டிருந்தாள்.
பெரும்பாலும் பெண்கள் ஸ்கூட்டி ஓட்டிப் பார்த்தவனுக்கு வெண்பா பைக் வைத்திருந்தது. சற்றே வித்தியாசமாகத் தெரிந்தது. ஒருசில பெண்கள் பைக் வைத்திருப்பதைக் கேட்டுள்ளான். ஆனால் இன்றுதான் முதல் முறையாகப் பார்க்கிறான்.
“எதாவது பிரச்சனையா?” அவள் அருகே சென்று கேட்டான்.
“ஆமா ஸ்டார்ட் ஆகலை” என்றாள். வந்தது யாரென அவள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. முழுக் கவனமும் பைக்கில் இருந்தது.
“விடு வெண்பா நான்ப் பாக்றேன்” என்றான்.
“யார் தன் பெயரைச் சொல்லி அழைத்தது?” என நிமிர்ந்தவள் அருகில் நின்றிருந்தான் துஷ்யந்த். அவன் பார்வை பைக்கை ஆராய்ந்தபடி இருந்தது.
‘இவனுக்கு தன் பெயர் எப்படித் தெரியும்? இவன் பெயர் என்ன?“ எனச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் அவன் என்ன ஜாலத்தைச் செய்தானோ தெரியவில்லை. பைக் சில நிமிடங்களில் சரியாகிவிட்டது.
“இப்ப வண்டிய ஸ்டார்ட் செய்து பார்” என துஷ்யந்த் சொன்னான்.
“தேங்க்ஸ்” என இவள் பதிலுக்கு கூற .. இவள் குரலையும் தாண்டி
“துஷ்யந்த்” என பின்னிருந்து வேறொரு பெண் குரல் கேட்டது.
துஷ்யந்த் யாரெனத் திரும்ப வர்ஷா நின்றிருந்தாள். அவளுக்கு பின்னே சிந்து மற்றும் பைரவி.
“என்னோடு கார்ல வந்திடு துஷ்யந்த் மழை பெருசாகிடும் போல இருக்கு” என வர்ஷா கூறினாள்.
“தன்னிடம் இல்லாத காரா?” என நினைத்தவன் “இட்ஸ் ஓ.கே. தேங்க்ஸ் வர்ஷா” என நட்பு புன்னகையுடன் பதிலளித்தான். அவன் எப்பொழுதும் பைக்கில்தான் வருவான். அது அவனுக்கு மிகவும் பிடித்தமும் கூட.
“இவன் பெயர் துஷ்யந்த்” என வெண்பா மனதில் உளிக் கொண்டு செதுக்கிக் கொண்டாள்.
“வெண்பா என் பைக்ல பெட்ரோல் இல்ல எனக்கு லிப்ட் கொடுக்க முடியுமா?” என துஷ்யந்த் கேட்டான்.
மழை இன்னுமாய் அடுத்த நிலைக்கு எந்த நொடியும் மாறும்படி இருந்தது.
“வாங்க” என்றவள் ஏறி அமர்ந்து பைக்கை உதைக்க அதுவும் சொன்ன பேச்சைக் கேட்கும் சமர்த்து பிள்ளையாய் ஸ்டார்ட் ஆனது.
துஷ்யந்த் பின்னே அமர்ந்தான். அவளின் வாசம் அவனை ஏதோ செய்தது. வெண்பா லாவகமாக வண்டியை ஓட்டினாள். துஷ்யந்த் கண்கள் வெண்பாவை துளைத்துக் கொண்டிருந்தான்.
பெண்களுக்கே உரிய நளினம், கொடி இடை, நீண்ட கூந்தல் இது எதுவும் வெண்பாவிடம் இல்லை.
ஹெல்மட்டை தாண்டி கொத்தமல்லி கற்றாய் கூந்தல் காற்றில் அல்லாடியது. வலிமை கொண்ட தோள்கள், அண்டாவைத் திருப்பிப் போட்டது போன்ற இடை. இதுவே வெண்பா. எந்த அலங்காரமும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று அவள் பக்கம் அவனை ஈர்த்தது.
அவளை ரசித்தவன் முகத்தில் அவன் ஆணையை மீறி புன்னகை மிளிர்ந்தது.
வெண்பா பைக்கின் கண்ணாடி மூலம் துஷ்யந்த் தன்னை ஆராய்வதைக் கண்டாள். வெட்கம் பிடுங்கித் தின்றது. நல்லவேளையாக ஹெல்மட் அவளின் முக உணர்வுகளை மறைத்தது.
வெண்பா அவனைத் திசைதிருப்ப வேண்டுமென்றே சாலையிலிருந்த பள்ளத்தில் வண்டியை இறக்கி ஏற்றினாள். துஷ்யந்த் அதில் தடுமாறி அவளின் இரு தோள்களையும் பற்றினான்.
பின்பு சுதாரித்து “சாரி” என்றான் கையை எடுத்து.
“எங்க இறக்கிவிடணும் சீனியர்?” என்று கேட்டவளிடம் “இப்படியே வாழ்க்கை முழுக்க பயணிக்கவேண்டும் உன்னோடு” என உள்ளத்தில் ஒலித்த குரலை “அமைதி அமைதி” என சமாதானம் செய்தான்.
“என் வீட்டுல” என்றவன் அப்படியே விலாசத்தையும் கூறினான். அவளும் தகுந்தபடி சாலையில் வண்டியைத் திருப்பினாள்.
மழை வலுத்தது அடுத்த இரண்டே நிமிடத்தில் இடைக் கால நிவாரணமாய் ஓய்ந்து விளையாட்டுக் காட்டியது. இருவருமே மழையில் நன்றாக நனைந்திருந்தனர்.
அப்பொழுது வெண்பா சட்டென வண்டியை நிறுத்தினாள். அவளுக்குத் தெரிந்த கல்லூரி மாணவி தெருவில் மயங்கிக் கிடந்ததைப் பார்த்தாள். அவள் தன் தோழியின் தோழி. அவள் பெயர் கூட வெண்பாவிற்குத் தெரியாது. அங்கே இங்கே என கல்லூரியில் பார்த்திருக்கிறாள் அவ்வளவே.
அவசரமாக வண்டியை ஓரம்கட்டி இறங்கினாள். துஷ்யந்தும் அவளைக் கண்டான். இருவரும் இறங்கி மாணவி அருகே சென்றனர்.
வெண்பா அருகே சென்று அப்பெண்ணை ஆராய்ந்தாள். பாதி மயக்கத்திலிருந்தாள். கண்கள் உதவிக்கு அல்லாடியது. துஷ்யந்த் பக்கத்துக் கடையில் குடிதண்ணீர் வாங்கிக் கொடுத்தான். வெண்பா அவளை அமர்த்தி சற்று நீரைப் புகட்டினாள்.
“ஆர் யு ஓகே?” துஷ்யந்த் கேட்க
மெல்ல தலையாட்டினாள்.
“உனக்கு என்ன ஆச்சி?” வெண்பா அக்கறையுடன் வினவினாள். அந்த பெண் பதில் ஏதும் கூறவில்லை.
“வா பக்கத்துல டாக்டர் கிளீனிக் இருக்கு போகலாம்” என அவளை மெல்ல எழுப்பினாள்.
“காலையில சரியா சாப்பிடலை அதான் மயங்கிட்டேன். நான் ஹாஸ்டல் போயிடுவேன். பிரச்சனை இல்ல, டாக்டர் வேண்டாம்” என்றாள் படபடப்பாக.
“நாங்க பத்திரமா கூடிட்டு போறோம்” என இரண்டு மத்திம வயது பெண்கள் வந்தனர்.
“நீங்க யாரு?” துஷ்யந்த் கேட்க
“ஹாஸ்டல்ல வேலை செய்றோம். நாங்க இவளை கூடிட்டு போயிடுவோம் தேங்க்கஸ்” என்றனர். சொல்லி வைத்தார் போல எங்கிருந்தோ ஒரு ஆட்டோ வந்து நின்றது.
அப்பெண்களில் ஒருவர் “ஏறு” எனச் சொல்லவும் மயங்கிய மாணவி மெல்ல ஆட்டோவில் ஏறினாள். அவள் ஏறும் போது வெண்பாவை சோகமாக ஒரு பார்வை பார்த்தாள்.
அதன் பொருள் அப்போது வெண்பாவிற்குப் புரியவில்லை. ஆட்டோவில் அவர்கள் சென்றதும் “எனக்கு அந்த லேடீஸ் மேல சந்தேகமா இருக்கு” என்றாள் வெண்பா.
“எனக்கும் அப்படிதான் தோணுது” துஷ்யந்தும் ஆமோதித்தான்.
“அந்த ஆட்டோவை பாலோ பண்ணவா?” வெண்பா ஆர்வமாகக் கேட்டாள்.
அதிர்ந்தவனாக “வேண்டாம் உன் வேலையை மட்டும் செய் .. என்னை வீட்ல டிராப் பண்ணு” என்றான்.
இருவர் மனதிலும் மயங்கிக் கிடந்த பெண் ஆக்கிரமித்திருந்தாள். அதனால் காதல் காவியம் எல்லாம் பறந்து போனது.
துஷ்யந்த் வீட்டின் முன் இறக்கிவிட்டாள். “உள்ள வா வெண்பா” என துஷ்யந்த் அழைத்தான். மழை சட்டென வலுத்தது. ஆனாலும் வெண்பா தயங்கினாள். அவள் தயக்கம் புரிந்தவனாக
துஷ்யந்த் உள்ளே சென்று சில நொடிகளில் வெளி வந்தான். அவன் கையில் குடை இருந்தது அவளை மழையிலிருந்துக் காக்க. அவனுடன் அவன் தாயாரும் வந்தார்.
“உள்ள வாமா மழை நின்றதும் போகலாம்” என்றார்.
வெண்பா துஷ்யந்த் வீட்டிற்குள் சென்றாள்.
துஷ்யந்தின் தாயார் மற்றும் அவனின் அண்ணி இருந்தனர். துஷ்யந்த் தம்பி பள்ளி சீருடையில் தடதடவென உள்ளே வந்தான். மொத்த சேறும் சகதியும் தன் காலணியால் வீட்டில் கால் வைக்க இருந்தவனை “வெளியில் கால் கழுவிட்டு வா” என மிரட்டினார். அவனும் வெளியே காலை கழுவி வீட்டுக்குள் வந்தான்.
துஷ்யந்த் தாய் சூடாகக் காபி கொடுத்தார். தலை துவட்ட டவல் கொடுத்தார். அந்த குளிர் வேளைக்கு வெண்பாவிற்குத் தேவையாக இருந்தது. துஷ்யந்த் ஆடை மாற்றிக் கொண்டு வந்தான்.
“இவ என் மூத்த மருமகள் .. துஷ்யந்த் ரெண்டாவது மகன் .. தோ உள்ள போனானே அவன் கடைக்குட்டி” என்றார் அவன் தாய். தன் குடும்ப மற்ற உறுப்பினர்கள்ப் பற்றியும் கூறினார்.
“உங்க வீட்ல?” என அவர் கேட்க
“நானும் அப்பாவும். அம்மா இறந்துட்டாங்க” அவளும் நிறையப் பேசினாள். அடுத்த அரை மணி நேரம் மூன்று பெண்களும் பேசிக் கொண்டு இருந்தனர்.
வேலை ஆளிடம் துஷ்யந்த் “காலேஜ்ல என் பைக் இருக்கு மழை நின்னதும் எடுத்திட்டு வந்திடுங்க” என பைக் சாவியைக் கொடுத்தான்.
அதற்குள் வெண்பாவின் தந்தை போன் செய்யத் தான் நண்பர் வீட்டில் இருப்பதாகக் கூறினாள். மழை நின்றதும் வந்து விடுவேன் என்றாள்.
சற்று நேரத்தில் மழை நின்றது. வெண்பா வெளியே வந்து பைக்கை உதைக்க “பிடிச்சிருக்கா?” என மென்மையாகக் கேட்டான்.
“என்ன?” புருவம் சுருக்கிக் கேட்க
“வீடு பிடிச்சிருக்கானு கேட்டேன்” என்று மென்று முழிங்கினான்.
முகம் மலர “வீடும் பிடிச்சிருக்கு .. வீட்ல இருகரவங்களையும் பிடிச்சிருக்கு” என்றுவிட்டு வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டாள்.
அவள் சென்ற திசையை வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளத்தின் உவகை பரிபூரணமாக முகத்தில் தெரிந்தது.
“என்னோடு வா வீடு வரைக்கும் .. என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்” என்ற பாடல் வரிகளை முணுமுணுத்தபடி இருந்தான்.
துஷ்யந்த் மற்றும் வெண்பா கல்லூரியில் சமயம் கிடைத்தபோதெல்லாம் சந்தித்தனர். பேசி பொழுதைக் களிப்பது என நாட்கள் வேகமாகச் சென்றது.
ஆறு மாதம் கடந்த நிலையில் ஒருநாள் மதியம் உணவு இடைவேளையின் போது வெண்பாவின் தோழிகளில் ஒருத்தி “ஹே வெண்பா நிலா இறந்துட்டாளாம்” என தன் செல்போன் லைனை கட் செய்தபடி சொன்னாள்.
“நிலா யாரு?”
தோழி சொல்லவும் தான் வெண்பாவிற்குப் புரிந்தது. அன்று ஆட்டோவில் ஏற்றிவிட்ட பின் அவளைப் பார்க்கவே இல்லை என இப்போதுதான் உறைத்தது.
“என்ன ஆனது அவளுக்கு? அவள் வீடு எங்கே? பெற்றோர் எங்கு உள்ளனர்? என்ற வெண்பாவின் எந்த கேள்விக்கும் பதில் இல்லை.
வெண்பா துஷ்யந்திடம் நடந்ததைச் சொன்னாள். “பாவம்பா அந்த பொண்ணு அவளுக்கு யாருமே இல்ல போல .. ஒண்ணு ரெண்டு பிரெண்ட்ஸ் தான் அவ எப்பவும் தனியா தான் கிளாஸ்ல உட்கார்ந்திருப்பா. நெருங்கிய நட்புனு யாரும் இல்ல.” என்றாள்.
“எப்படி இறந்தாளாம்?” துஷ்யந்த் கேட்க
“ஹார்ட் அட்டாக் .. இப்பலா சின்ன வயசிலேயே ஹார்ட் அட்டாக் வருது”
“ஆமா” என்றான்.
சில நிமிடங்களுக்குள் அவளைப் பற்றிய பேச்சும் சமாதி நிலை அடைந்தது.
அதற்கு பிறகு காதல் இருவரையும் தனக்குள் இழுத்துக் கொண்டது.
அடுத்த ஆறு மாத இடைவேளையில் மேலும் ஒரு மாணவி இறந்தாள். அவளும் தனிமையில் இருப்பவள். அவளுக்கும் மாரடைப்பு.
கல்லூரி தங்கள் மாணவிகளின் இறப்புக்கு ஒரு இரங்கல் கூடத் தெரிவிக்கவில்லை என்பது விந்தையாக இருந்தது.
என்னதான் வெண்பா காவல்துறை அல்லாமல் வேறு படிப்பு படித்தாலும். அவள் மூளை காவல்துறையினர் போல வேலை செய்தது.
வெண்பா எந்த ஒரு விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பவள். நுட்பத்துடன் செயலாற்றுபவள். சிறுவயதிலிருந்த காவல்துறை மேலிலிருந்த மோகம் அவளை அப்படிச் செயலாற்றியது.
மரணித்த இரண்டு பெண்களும் தனிமையிலிருந்த தருணத்தில் முகத்தில் சொல்ல முடியாத வேதனை இருந்தது. அவர்கள் இருந்த சொற்ப நண்பர்களிடம் கூட சிரித்துப் பேசி பார்த்ததாக நினைவு இல்லை.
இரண்டு மாணவிகளும் உடல்பருமன் இல்லை. சொல்ல போனாள் மிகவும் மெலிந்தே காணப்பட்டனர். அவர்களுக்கு எப்படி மாரடைப்பு வரும் எனப் புரியவில்லை.
அடுத்ததாக இருவரும் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள்.
வெண்பா இவ்வாறு எண்ணமிட்டபடி கல்லூரியில் நடக்கையில் நூலகத்திற்கு அருகே இருந்த சிமெண்ட் பென்ச்சில் மாணவி ஒருத்தி தனிமையில் அமர்ந்திருந்தாள். அவள் முகம் வாட்டத்துடன் காணப்பட்டது.
அடுத்து இவள் தான் மரணிக்கப் போகிறாளா? என தன்னையே கேட்டுக் கொண்ட வெண்பா “ச்சே என்ன சிந்தனை இது. பாவம் அவள் நன்றாக இருக்கட்டும். இறைவா அவளுக்குத் துணையாக இரு” என வேண்டிக் கொண்டாள்.
ஆனாலும் வெண்பாவால் சும்மா இருக்க முடியவில்லை. அப்பெண் அமர்ந்திருந்த பென்ச்சின் மறுமுனையில் அமர்ந்தாள். அந்த பெண் இவள் பக்கம் கூட திரும்பவில்லை.
“ஹாய்” என வெண்பா நட்பாகப் பேச முற்பட்டாள்.
அந்த பெண் பதில் சொல்லாமல் இஷ்டமில்லா சிரிப்பை உதிர்த்தாள்.
“ என் பேனா எழுதுல உன் பேனா தர முடியுமா? ரெண்டு நிமிஷத்தில் கொடுத்திடறேன்” வெண்பா வேண்டுமென்றே கேட்டாள்.
அவளும் பேனாவை நீட்டினாள். வெண்பா எழுதுவதைப் போலப் பாவனை செய்தாலும் அந்த பெண்ணையே கவனித்துக் கொண்டிருந்தாள்.
அந்த பெண் சுற்றிலும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். வெண்பாவும் அவள் யாரைப் பார்க்கிறாள் என நோட்டம்விட்டாலும் ஒன்றும் கண்டுபிடிக்க இயலவில்லை.
சட்டென அந்த பெண் எழுந்து வேகமாகக் கல்லூரிக்கு வெளியே சென்று கண்முன் வந்த பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டாள்.
இந்த பெண்ணிடம் ஏதோ பிரச்சனை உள்ளது என வெண்பா உறுதியாக நம்பினாள். இவளை எப்படியும் காப்பாற்றியே ஆக வேண்டும் என முடிவெடுத்தாள்.
அடுத்த சில நாட்கள் அந்த மாணவியைக் காணவில்லை. பிறகு அவளைக் கண்டாள் வெண்பா “ஹலோ உன் பேனா” என அழைத்தாள்.
ஆனால் அவள் வெண்பா பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அடுத்து வெண்பா அவள் முன்னே போகாமல் மறைந்திருந்து தொடர்ந்தாள். அவள் அறை எந்த வகுப்பு எனக் கண்டு பிடித்தாள்.
அவள் இல்லாத சமயத்தில் அவள் வகுப்பு தோழிகளிடம் அந்த மாணவியைப் பற்றி விசாரித்தாள்.
அவள் பெயர் மாலினி. அதிகம் யாருடனும் பேச மாட்டாள். விடுதியில் தங்கி இருக்கிறாள் எனச் சொன்னார்கள்.
மாலினியிடம் பேசுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்தாள் வெண்பா.
துஷ்யந்திடம் இந்த தகவல்களைக் கூறினாள். “தனிமையில் இருக்காங்க அதன் விளைவு ஓவர்திங்கிங் அதனால மாரடைப்பு ஏற்படுது” என்றான்.
“இந்த பொண்ணுக்கு ரெண்டு மூணு தடவை கவுன்சிலிங் போனா சரி ஆகிடும்” என்றான்.
வெண்பாவும் துஷ்யந்த் சொல்வதுதான் சரி என நினைத்தாள். ஏன் தான் இப்போதைய சில பெண்கள் பிரச்சனைகளை எதிர்க் கொள்ளாமல் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்கின்றனரோ? என்று தோன்றியது.
மறுநாள் வெண்பாவின் அத்தனை கேள்விக்கும் விடை கிடைத்தது.
கல்லூரியில் பெண்களுக்கான பெரிய கழிவறை இருந்தது. செவ்வக வடிவில் நீண்ட அறை. அதன் இரண்டு பக்கங்களிலும் ஐந்து ஐந்து கழிவறைகள் இருக்கும். நீண்ட அறை முகப்பில் பெரிய கதவு.
உணவு இடைவேளைக்குப் பிறகு மதிய வகுப்புகள் தொடங்கி இருந்தன. மாலினி கழிவறைக்குள் சென்றாள். அடுத்த சில நொடிகளில் வெண்பா உள்ளேச் சென்றாள்.
மாலினியைத் தவிர அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் காத்திருந்தாள்.
மாலினி வெளி வந்தவள் வெண்பாவை கண்டு அதிர்ந்தாள். ஆனாலும் எதையும் பேசாமல் விடுவிடுவென வெளியே செல்ல முனைந்தாள்.
வெண்பா மாலினி கையை இறுகப் பற்றினாள். மாலினியை தன் வழிக்குக் கொண்டு வந்தவள் அவளிடமிருந்து உண்மையைக் கேட்டறிந்தாள்.
அவள் சொல்லச் சொல்ல வெண்பா அதிர்ந்தாள், தலை சுற்றியது.
துளிகள் தெறிக்கும்…