துளி துளியாய் துரோகம் 19
வெண்பா, மாலினி சொன்னவற்றை அசை போட்டாள். இத்தனை அபாயகரமான மோசடி நடந்துள்ளது. ஆனால் காவல்துறை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தன்னையே கேட்டுக் கொண்டாள்.
காவல்துறைக்கு இதைப் பற்றித் தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் சும்மா இருக்கிறார்களா? எனக் குழம்பினாள். நிச்சயமாக இதில் பெரிய தலைகள் ஊடுருவல் இருக்கும் என்றேத் தோன்றியது.
இப்படியும் நடக்குமா? என்று தான் தோன்றியது. சினிமா மற்றும் செய்திகளில் விசித்திரமான செய்திகளைப் பார்த்தவற்றை இங்கு தனக்கு மிக அருகில் காண்பது அச்சத்தையும் அசூயையும் ஏற்படுத்தியது.
மாலினி சொன்னவற்றை அவளுக்குத் தெரியாமல் தன் அலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்தாள் வெண்பா. அதை மீண்டும் மீண்டும் கேட்டாள்.
உறவினர் இறப்பிற்காக துஷ்யந்த் குடும்பத்துடன் மதுரை சென்றிருந்தான். அவன் வர இரண்டு தினங்கள் ஆகும். அவனிடம் முழு தகவல் சொல்லவில்லை. பதிவு செய்ததை அலைபேசியில் அவனுக்கு அனுப்பவும் மனம் வரவில்லை. அவனை நேரில் காண்கையில் சொல்லாம் என்று விட்டுவிட்டாள்.
வெண்பா விடுதிக்குச் செல்லத் திட்டமிட்டாள். அங்கு ஏதேனும் தடயம் அல்லது தகவல் கிடைக்கலாம் என நம்பினாள்.
ஆனாலும் இதில் ஈடுபடுவது சாதாரண காரியமல்ல. இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் கண்டால் தன்னை நிச்சயம் உயிருடன் விட மாட்டார்கள் என்பது திண்ணமே.
தான் விடுதிக்குச் செல்வது மற்றும் இந்த முறைகேட்டைக் கண்டுபிடிப்பது நிச்சயம் துஷ்யந்திற்கு தெரிய வேண்டும். தனியாக எதுவும் செய்ய வேண்டாம். அதனால் இரண்டு நாள் பொறுமையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
அவள் பொறுமையைச் சோதிக்கும்படி நிகழ்வு நடந்தேறியது. அவள் தோழி “நீ கேட்ட நோட்ஸ் ஹாஸ்டல்ல இருக்கு வெண்பா. போகும் போது நீ வாங்கிட்டு போ” என்றாள்
“ஹாஸ்டலா?” எனத் திகைப்புடன் கேட்டவளிடம்
“ஹாஸடல் தானே? எதோ பேய் பங்களா போற மாதிரி ரியாக்ஷென் தர” எனச் சிரித்தாள்.
“அப்படி இல்ல .. என்னை உள்ளவிட மாட்டாங்க .. சரி நான் வெளில காத்திருக்கேன் நீ நோட்ஸ் கொண்டு வா ..” எனச் சமாளித்தாள் வெண்பா.
“பர்மிஷன் கேட்டு போகலாம். ஒரு மணி நேரம் நீ உள்ள இருக்கலாம்” என்றாள் தோழி.
கல்லூரியை சேர்ந்தது விடுதி. அதனால் சில விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. ஆண்கள் விடுதியை விடப் பெண்கள் விடுதியில் இன்னமும் கெடுபிடி அதிகம்.
வெண்பா வேறு வழி இல்லாமல் அன்று மாலை கல்லூரி முடிந்தவுடன் தோழிகள் உடன் சென்றாள். தன் மேல் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக விடுதியில் வசிக்காமல் இருக்கும் மற்றொரு தோழியான கனகாவையும் அழைத்து அல்ல இழுத்து சென்றாள்.
“நான் எதுக்கு?” என்று கனகா வினவ
“ அட சில்வண்டு சும்மா தான வீட்டுல இருக்கப் போற .. அதுக்கு என்கூட வரலாமே” எனச் சம்மதம் சொல்ல வைத்து அழைத்துச் சென்றாள்.
துஷ்யந்த் வந்தாலும் பெண்கள் விடுதிக்குள் செல்ல முடியாது. ஆதலால் இன்று சென்று வருவதில் பாதகமில்லை எனச் சென்றாள்.
விடுதிக்குள் சென்றதும் வெண்பாவின் தோழி ரிசப்ஷெனில் அனுமதி கோரினாள். அவர்களும் ஒரு படிவத்தைக் கொடுத்து பூர்த்தி செய்யச் சொன்னார்கள்.
அதில் பெயர், அலைபேசி எண் போன்ற தகவல்கள் நிரப்பப்பட வேண்டும். உள்ளேச் செல்லும் நேரம் குறிப்பிட்டிருந்தது. சரியாக ஒரு மணி நேரத்தில் வெளியேற வேண்டும். வெண்பாவும் அவளின் மற்றொரு தோழி கனகாவும் தனித் தனியே தங்கள் படிவங்களை நிரப்பிக் கொடுத்தனர்.
வெண்பா தோழிகளுடன் உள்ளேச் சென்றாள். ஐந்து தளங்கள் கொண்ட இரண்டு கட்டிடங்கள் உள்ளே இருந்தன. ஒவ்வொரு கட்டிடத்திலும் தீப்பெட்டி போலப் பல அறைகள் இருந்தன.
தோழியுடன் இரண்டாவது கட்டடத்தில் மூன்றாவது தளத்திற்குச் சென்றாள். லிப்ட் வேலை செய்யவில்லை என்பதால் படி ஏறி வந்தனர். மூச்சிரைத்தது மூவருக்கும்.
தோழியுடன் மூன்றாவது தளத்தில் செல்லுகையில் ஓர் அறையில் மாலினி இருந்தாள். கையில் புத்தகம் ஆனால் படிக்கவில்லை. பார்வை விட்டத்தை நோக்கி இருந்தது. முகத்தில் அதே சோர்வு.
வெண்பா பார்வை நாலா பக்கமும் சுழன்றது. வராண்டாவை போன்ற இடங்களில் கயிறு கட்டித் தங்களின் ஆடைகளை உலர்த்தியிருந்தனர். காண வண்ண தோரணம் போல இருந்தது.
சில அறைகளில் சிறியதாய் ரோஜாச் செடி, மணிபிளாண்ட் எனச் சிறிய அளவில் செடி வகைகள் வைத்திருந்தனர். தோழியின் அறை இரண்டு இரும்பு கட்டில்கள் இருந்தன. நடுவே பஞ்சாயத்து செய்ய இரும்பு மேசை இருந்தது. கட்டிலின் கால்கள் பழுதாகி இருக்க அமர்ந்து எழும்போதெல்லாம் கட்டில் அழுதது.
அறையின் மூளையில் ஒரு இன்டக்ஷன் அடுப்பு மற்றும் சில பாத்திரங்கள். மேகி பேக்கெட்டுகள் இருந்தன. சின்ன குடித்தனம் நடத்துவது போலக் குடத்தில் குடிதண்ணீர்.
கல்வி ஒரு தலைமுறையின் போக்கை மாற்றவல்ல சக்திக் கொண்டது. அதை சிரமேற் கற்று சுயமாக நிற்க இப்பெண்கள் எத்தனை பாடுபடுகிறார்கள் எனத் தன் தோழிகளை நினைக்கவே பெருமையாக இருந்தது.
எப்படியும் இங்கிருக்கும் உணவு மற்ற இதர வசதிகள் வீட்டிற்கு இணையானது அல்ல. ஆனால் அனைத்தையும் மனதார ஏற்று இவர்கள் கல்வி பயில்கிறார்கள்.
அதையும் செய்யவிடாமல் சில தீய சக்திகள் இருப்பதை நினைக்க நினைக்க ஆதங்கமானது.
அறை ஜன்னலிருந்து மற்றொரு கட்டிடம் தெரிந்தது. ஐந்து தளங்கள் இங்கு உள்ளது போலவே இருக்க ஆறாவதாக ஒரு தளம் சற்றே உள்ளடக்கி இருந்தது. அது முழுவதுமாக மூடியிருந்தது. அங்கு ஏ.சி. பொருத்தப்பட்டிருந்தது நன்றாகவேத் தெரிந்தது. ஜன்னல்கள் என்று எதுவுமில்லை. காணவே விசித்திரமாக இருந்தது.
“அது என்ன இடம்?” வெண்பா தோழியைக் கேட்டாள்.
“அங்க ஹாஸ்டல் ஸ்டாப் (hostel staff) ஸ்டே (stay) பண்றாங்க” என்றாள்.
“நீ உள்ள பாத்திருக்கியா?”
“இல்ல அங்க யாருமே போகக் கூடாது” என்றாள்
‘அப்ப கண்டிப்பா போகணும்” என மனதில் குறித்துக் கொண்டாள்.
“இந்த பில்டிங் மேலையும் அதே மாதிரி இருக்கா?”
“ஆமா இருக்கு”
சற்று நேரம் அரட்டை அடித்தனர். “இங்க ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு?” என எழுந்தாள் வெண்பா. கட்டில் முனகியது.
‘நேரா போய் வலது பக்கமா போ” என்றாள்.
“சரி” எனச் சென்றாள்.
“நான் வரவா?”
“இல்ல நானே பாத்துக்கிறேன்”என நடந்தாள். அவள் சொன்னபடி செல்ல அங்கு ரெஸ்ட் ரூம் இருந்தது. அங்கிருந்து படிகள் பக்கமாக இருந்தது.
முதலில் சீ சீ கேமரா உள்ளதா எனப் பார்த்தாள். எங்கும் இல்லை. ஐந்தாவது தளத்தை அடைந்தாள். அதோடு படிகளும் நிறைவடைந்தது.
ஆறாவது தளத்திற்குச் செல்ல தனியே லிப்ட் இருந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பிறகு சீசீ கேமராக்கள் இருந்தன. அதனால் அவளால் முன்னேறிச் செல்ல முடியவில்லை.
தனியே அங்குச் செல்வது புத்திசாலித்தனமல்ல எனத் திரும்பினாள். ஏமாற்றமாக இருந்தது. அவள் இறங்கி வருகையில் சட்டெனக் கண்ணில் பட்டது. உடைந்த சுற்றுச்சுவர்.
மற்றொரு கட்டிடத்தில் பின்னே சுற்றுச்சுவர் உடைந்திருந்தது. அங்கே சில கல்லூரியில் பயிலும் காதல் பறவைகள் தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டாள். இங்கு வந்ததில் இது ஒன்றேனும் தெரிந்ததே என நிம்மதி அடைந்தாள்.
உள்ளே வர எந்த பிரச்சனையும் இல்லை. பின் வழியே சுலபமாக வந்துவிடலாம். பெண்கள் விடுதியிலும் இந்த உடைந்த சுற்றுச்சுவர் வழியே ஆண்கள் தங்கள் காதலியை யாருக்கும் தெரியாமல்ப் பார்க்க வருகிறார்கள். இதோ கண் முன்னே சாட்சி.
தன்னால் தோழிக்குப் பிரச்சனை வரக் கூடாது என மீண்டும் தோழியின் அறைக்குச் சென்று சிறிது நேரம் பேசிவிட்டு நோட்சை வாங்கிக் கொண்டு திரும்பினர்.
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமே திரும்பிவிட்டனர் வெண்பாவும் அவள் தோழியும்.
அடுத்த இரண்டு தினங்களில் துஷ்யந்த் திரும்பிவிட்டான். ஆனால் அவனைச் சந்திக்க முடியவில்லை. அவனுக்குத் தேர்வுகள் பிராஜெக்ட் எனக் கழுத்தை நெறிக்கும் வேலை இருந்தது.
வெண்பாவும் தன் ஜேம்ப்ஸ் பாண்ட் வேலையைச் சற்றே தள்ளி வைத்துவிட்டு பாடத்தில் கவனம் செலுத்தினாள்.
கல்லூரி சார்பில் பெங்களூரில் இருந்த ஒரு தொழில்நுட்ப பூங்காவிற்கு வெண்பா வகுப்பில் உள்ளவரைச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனர். வெண்பா ஆவலாக அந்த நாளுக்காக காத்திருந்தாள்.
சுற்றுலா செல்லும் முன் துஷ்யந்தை சந்தித்தாள். அவன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவளைக் கண்ட மகிழ்ச்சியில் இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.
இதை சற்றும் எதிர்பார்த்திராத வெண்பா சில நொடிகள் திகைத்துப் போனாள். அவன் அணைப்பை அவன் முத்தத்தைத் தடுக்கக் கூட இயலாத வகையில் அத்தனை விரைவாக அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
துஷ்யந்தும் தான் செய்ததை உணர சில நொடிகள் பிடித்தன. மிடறு விழுங்கியவன் போல விழித்தான்.“சாரி” என்னும் வார்த்தை தொண்டையில் சிக்கியது. அதைக் கேட்க தனக்கு தகுதி உள்ளதா? என மனசாட்சி குற்றம் சாட்டியது.
அவன் கண்ணை நேருக்கு நேர் சந்திக்கத் திராணி இல்லாதவள் தலை குனிந்தபடி அங்கு நிற்க இயலாமல் ஓடிவிட்டாள்.
“என்னடா செஞ்சி வெச்சிருக்க?” என தன்னை தானே நோந்து கொண்டு அருகிலிருந்த மரத்தில் ஓங்கிக் குத்தினான்.
“சாரி இனி உன் விருப்பம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டேன்” என்று ஆயிரம் முறை கையால் எழுதி வேறொரு தோழி மூலம் அவளிடம் சேர்த்தான்.
அதைப் பிரித்துப் பார்த்தவள் முகம் நாணத்தால் சிவந்தது. அவனுக்கு மறுநாள் சந்திப்பதாக வாடசப்பில் செய்தி அனுப்பினாள்.இதை எழுதி அவன் கை எத்தனை வலித்திருக்கும் என நினைக்க மனம் கனத்தது.
வெண்பாவைக் கண்ட துஷ்யந்த் அதிர்ந்து போனான். காரணம் அவள் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தாள். துஷ்யந்த் முகம் குற்ற உணர்ச்சியில் சுருங்கிப் போனது.
“ச்சே நான் மட்டமா பிஹேவ் பண்ணிட்டேன். சாரி வெண்பா” என அவளிடம்க் கொரானா கால இடைவெளியைப் பின்பற்றினான்.
அவள் கலகலவென சிரித்தபடி தன் மாஸ்கை விலக்கினாள். “இட்ஸ் ஓகே ப்ரீயா விடு சும்மா விளையாடினேன்” என்றாள் பரிதாபமாக அவனைப் பார்த்து.
“முதல் முத்தம் மறக்க முடியாததா இருக்கணும். ஆனா நான் அதை ..” எனத் தவித்தான்.
“சரி அப்ப ரெண்டாவது முத்தத்தை மறக்க முடியாததா மாத்திடலாம்” எனக் கொஞ்சி கொஞ்சி கோவை பழ உதட்டுடன் பேசியவளைக் கண்டவனுக்குக் குழப்பமாகியது.
“நீ என்னை வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே” அவன் கேட்கவும் அவள் அருகில் வந்து அவன் கழுத்திற்கு தன் கைகளை மாலை ஆக்கினாள். பின்பு கண்ணடிக்கவும் செய்தாள்.
அவளே முத்த மழையைத் தொடங்கினாள். அவன் பொறுமையாகப் பெற்றுச் சுவைத்து மீண்டும் கொடுத்தான். இருவரும் தங்களை மறந்த மோன நிலையில் சில நிமிடங்களை கழித்தனர்.
இந்த காட்சியைக் கனல் கக்கும் விழிகளுடன் வர்ஷா பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருந்த இடத்திலிருந்து சில பல அடிகள் தள்ளி நின்றிருந்தாள். அடர்ந்த மரங்களும் செடிகளும் வர்ஷாவின் இருப்பை அரணாக நின்று காத்தது.
அன்று கல்லூரி விடுமுறை ஆனால் பிரக்டிகல்ஸ் வகுப்பு இருந்தது. தேவையானவர்கள் மட்டும் வரலாம். வெண்பா மற்றும் துஷ்யந்த் காதலிக்க வந்தனர்.
அங்கிருந்து சிறிது தொலைவில் லேப் உள்ளது. வர்ஷா லேப்பிற்கு செல்லத்தான் போய்க் கொண்டிருந்தாள். ஆனால் துஷ்யந்த் குரல் கேட்டதும் தேடி வந்தாள்.
வர்ஷா இதயம் நொறுங்கிப் போனது. சிலர் வெண்பா துஷ்யந்த் காதலைப் பற்றிக் கூற கேட்டு உள்ளாள். ஆனால் அவள் நம்பவில்லை.
இன்று கண்முன்னே கண்டதும் அவளுக்கு ஆத்திரமும் கோபமும் கொழுந்துவிட்டு எரிந்தது. தன் காதலனை எப்படி வெண்பா காதலிக்கலாம் என்று வெண்பாவை பொசுக்கி விடுவது போலப் பார்த்தாள்.
காதல் காவியம் பாடும் நிலையில் வெண்பா மாலினி பற்றி மறந்தே போனாள். இன்னமும் அவனின் கைவளையத்தில் அவள் கொடி இடை இன்ப தாக்குதலில் அனுபவித்திருந்தது.
அவள் கவனம் படிப்பு காதல் சுற்றுலா எனச் சிதறியதால் மாலினி சொன்ன விஷயத்தைக் கிடப்பில் போட்டுவிட்டாள்.
துஷ்யந்திடம் தான் சுற்றுலா செல்லப் போவதைக் கூறினாள். அதற்கு அவன் மென்பொருள் பற்றி விளக்க ஆரம்பித்தான்.
“ஐயோ ஆள விடு டா .. நம்ம லெக்சரர் மொக்கை போடுறதே போதும் நீ வேற …” எனச் சிணுங்கியவளை ஒரு மார்க்கமாக அவன் பார்த்து வைக்க
“போதும் இன்னிக்கு கோட்டா முடிஞ்சது கிளம்பு” என அவனைத் துரத்தினாள்.
அவனும் மனநிறைவுடன் கிளம்பினான்.
வர்ஷா திக்பிரம்மை பிடித்தவள் போல அசைவின்றி நின்றிருந்தாள். சிந்து மற்றும் பைரவி அவளைத் தேடிக் கொண்டு அங்கு வந்தவர்கள் “வர்ஷா இங்க என்னப் பண்ற” எனச் சிந்து கேட்கவும்
“ஒண்ணுமில்ல போகலாம்” என நகர்ந்தனர். அதற்கு மேல் வர்ஷாவால் அங்கு இருக்க இயலாமல் கிளம்பிவிட்டாள்.
சிந்து பைரவி தங்கள் பிளாட்டிற்கு சென்றுவிட வர்ஷா பங்களாவை அடைந்தாள்.
முகம் வாட்டத்துடன் இருந்ததைக் கண்ட சுந்தரி “என்ன வர்ஷா? ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“துஷ்யந்த் வேற ஒரு பெண்ணை லவ் பண்றான்” என கோபமாகக் கூறியவள் கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசினாள். பல பொருட்கள் சுக்கு நூறாக உடைந்தது.
“நிறுத்து வர்ஷா” என சுந்தரி அதட்டவும் அவள் கோபம் சற்று மட்டுப்பட்டது. ஆனால் முழுமையாக ஆத்திரம் தீரவில்லை.
“துஷ்யந்த் லவ் பண்ற பொண்ணு யாரு? பேர் என்ன?”
“வெண்பா .. அவ எந்த கிளாஸ் குரூப்பெல்லாம் எனக்குத் தேவையும் இல்ல .. தெரியாது” என்றாள்.
“துஷ்யந்த் உனக்குத்தான் விடு நான் பார்த்துக்கிறேன்” என்றார்.
ஆனால் வர்ஷாவால் அதை ஏற்க முடியவில்லை.
தன் அறைக்குச் சென்ற சுந்தரி போனை எடுத்து டையல் செய்தார். சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டவர் “ ஆறாவது மாடியை நோட்டம் விட்டதா சொன்னியே அந்த பொண்ணு யாருனு தெரிஞ்சதா?”
மறுமுனையில் “வெண்பா” எனப் பதில் வந்தது.
“மாலினியோடு பேசிய பொண்ணு யாரு?”
“அதுவும் அதே பொண்ணு வெண்பாதான்” எனப் பதில் வந்தது.
சுந்தரி வெறுப்பு சிரிப்புடன் மனதில் அவசரமாகக் கணக்குப் போட்டார். “ரெண்டும் ரெண்டும் பூஜ்ஜியம்” என்று.
துளிகள் தெறிக்கும்…