• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

துளி துளியாய் துரோகம் 20

kkp5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
125
99
28
Thanavur
துளி துளியாய் துரோகம் 20


உலகம் மிகவும் அழகானது. இயற்கை நீர், நெருப்பு, நிலம், ஆகாயம் மற்றும் காற்று எனப் பஞ்சபூத சக்திகளைக் கொடையாய் மனிதனுக்கு அளித்துள்ளது. ஐம்பூதங்களும் பிரபஞ்சத்தை இயக்குகின்றன.

ஆனால் சில மனிதர்களின் பேராசை காரணமாக ஊழல், கலப்படம் என வெகுவாக மனிதனே மனிதக் குலத்தை அழிவை நோக்கி நகர்த்துகிறான். ஒரு குழந்தை பிறப்பில் கூட கலப்படமும் ஊழலும் செய்யும் அளவு சிலர் மனம் கல்லாகி உள்ளது.

வர்ஷாவை காட்டிலும் சுந்தரிக்குத் தான் அளவு கடந்த கோபம். காரணம் தான் ரகசியமாகப் பல வருடங்களாகச் செய்யும் மோசடி வியாபாரத்தால் கோடிகளில் லாபம் கிட்டுகிறது.

அந்த ரகசியம் வெண்பா வழியே வெளியே தெரிந்தால் என்ன ஆவது? மிகப் பெரிய பிரச்சனையும் தலைகுனிவும் ஏற்படும். அதனுடன் நஷ்டமும் ஏற்படும்.

சுந்தரி தனக்கென்று சட்டம் காவல் போன்ற மிக முக்கிய துறைகளில் ஆட்களை வைத்துள்ளார். கோடிகளில் பணம் கேட்டும் கேட்காமலும் அவர்களுக்குக் கொடுப்பதால் யார் மூலமும் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடலாம். அரசியல் செல்வாக்கும் உள்ளது.

இவை அனைத்தையும் தாண்டி ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் என்னாவது என சுந்தரிக்குத் தடுமாற்றம் மெல்லத் தலை தூக்கியது. மற்றும் ஒரு காரணம், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் இந்த கல்லூரியை விலைக்கு வாங்கப் போவதாகக் கசிந்த தகவல் இன்னும் கலக்கத்தை அதிகப்படுத்தியது.

சுந்தரி பிரபல தனியார் மருத்துவமனையில் பகுதிநேர மகப்பேறு மருத்துவராக பணியாற்றினார். இப்படி பணியாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இந்த வேலை எவருக்கும் தன் மேல் சந்தேகம் எழாமல் இருக்க வேண்டும். இது ஒரு கண்துடைப்பு நாடகம். அதன் பிறகு தானே தனியார் மருத்துவமனையைக் கட்டிக் கொண்டார்.

சுந்தரி கருத்தரிப்பு மையத்தையும்த் தனியே நடத்துகிறார். இது அவர் முதன் முதலில் தொடங்கியது. அவரின் கருத்தரிப்பு மையத்தில் முறைகேடாகப் பெண்ணின் கருமுட்டையைச் சேகரித்து. அதை வியாபாரம் செய்து பல கோடிகளில் லாபம் பார்க்கிறார்.

பணம் சம்பாதிக்க யாருக்குத்தான் ஆசை இல்லை? கோடிக் கணக்கில் பணம் வைத்துள்ள நபர். தமக்கு இனி பணம் வேண்டாம் என்று கூறுவாரா?

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் இனி படங்களில் பணம் வாங்காமல் இலவசமாக நடிக்கப் போகிறேன் என்று கூறுவார்களா?

அப்படிதான் சுந்தரியின் பணத்தாசை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. அதுவும் அறம் இல்லா வழியில். சுந்தரி மட்டுமல்ல இந்த சதியில் அவருடன் இன்னும் இரண்டு மகப்பேறு மருத்துவர்களும் உள்ளனர்.

சுந்தரி இந்த வியாபாரத்தில் தானே நேரிடையாக தலையிட மாட்டார். அவருக்கு அடுத்து ஒரு முக்கிய உதவியாளர். அடுத்து இரண்டு அடுக்கு அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே பல பிரிவுகளில் பலர் பணிபுரிகின்றனர். அவர்கள் பல குழுவாகச் செயல்படுவார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் தனித் தனி வேலைகள் ஒதுக்கப்படும். ஒரு குழுவில் இரண்டு அல்லது மூவர் இருப்பர்.

அவர்கள் குறி வைத்த பெண்கள் ஊர்விட்டு ஊர் வந்தவர்கள். அதிகம் நட்பு வட்டம் இல்லாத கிராமத்து ஏழைப் பெண்கள். அஞ்சிய சுபாவம் கொண்டவர்கள். பிரச்சனை என்றால் எதிர்த்து கேள்வி எழுப்பாமல் அச்சத்துடன் தன் துன்பத்தை மென்று விழுங்கும் பெண்களையே தேர்ந்தெடுப்பது வழக்கம்.

கிராமத்திலிருந்து வரும் இளம் பெண்களில் சிலர் தங்களின் நடை உடை பேச்சு வழக்கம் போன்றவற்றால் நகரத்தாருடன் சட்டெனக் கலக்க மாட்டார்கள். அவர்களுக்குள் சிறு தயக்கம் இருக்கும். அது தடையை ஏற்படுத்தும்.

நகரத்து பெண்கள் எனில் காதல் தோல்வி இன்ன பிற பிரச்சனையால் தனிமையை நாடும் பெண்கள். யாருடனும் ஒன்றாமல் தனித்து இருக்கும் பெண்கள் தான் இவர்களின் இலக்கு.

அந்த குழுவில் உள்ளவர்கள் எப்படியேனும் விடுதியில் வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள். மேலிடத்து உதவி இருக்கும். ஒருவருக்கு மற்றவரைத் தெரியதது போலவேக் காட்டிக் கொள்வார்கள். குழுவில் இருப்பவர்களுக்குக் குறிப்பிட்ட பெண்ணைப் பற்றிய தகவல்களும் கொடுக்கப்படும்.

அடுத்து அவர்களின் இரையான பெண்களின் வயது வரம்பு பதினாறு முதல் இருபத்தேழு வயதுக்குள் இருக்கும்.

மென்மையான சிறு புன்னகையோடு அறிமுகம் ஆவார்கள். எடுத்த எடுப்பில் அதிகம் பேச மாட்டார்கள்.

மெல்லிய நட்பு உருவானதும் அப்பெண்களுக்குச் சின்ன சின்ன உதவிகள் செய்து தன் பக்கம் இழுப்பது என மிகச் சரியாக காய்களை நகர்த்துவார்கள்.

தனம் என்னும் பெண்ணுக்கு இரையானவள் நிலா. நிலா கிராமத்துப் பெண். நட்புகள் அதிகம் இல்லை. கட்டுக்கோப்பான குடும்பம்.

“போற இடத்துல படிப்பில் மட்டும் தான் கவனம் இருக்கணும்” என ஆயிரம் முறை புத்திமதி கூறி அனுப்பி உள்ளார் அவள் அம்மா. நிலா தந்தை சிறுவயதில் இறந்துவிட்டார். தாய் தான் குடும்பத்தைத் தாங்கும் இரும்பு பெண். நிலாவிற்குத் தங்கை உள்ளாள்.

குழு எதிர்பார்க்கும் அனைத்து பொருத்தங்களும் உள்ள பெண் நிலா.

“நிலா சாப்டியா? நல்லா படி .. பரீட்சை எப்ப? உனக்காக கோவில்ல வேண்டினேன்” என அன்பாக வலையை விரித்தாள் தனம்.

“அம்மா கூட பேசினியா? தங்கை எப்படி இருக்கா?” என மிகவும் அக்கறையுடன் வினவினாள்.

அடுத்தாக வேண்டுமென்றே திட்டமிட்டு வேறொருவர் மூலம் இடித்து கீழே விழப் போனவர்களை இவர்கள் உதவி செய்து காப்பாற்றுவது போன்ற நாடகங்கள் அரங்கேறும்.

“பார்த்து மா அடிபட்டிருக்கா? வா டாக்டர் கிட்டப் போகலாம்” என்பது.

அப்பாவி பெண்கள் மனதில் “இவர்கள் நல்லவர்கள்” என்ற நம்பிக்கை என்னும் விதையை முழுமையாக விதைத்துவிடுவர். அன்பிற்குச் சக்தி அதிகம் அதனால் விதை வேகமாக விருட்சமாகிறது.

தனித்து இருப்பவர்களுக்கு இப்படி யாரேனும் ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசவும் சந்தோஷ மிகுதியால் தங்களைப் பற்றி அனைத்தும் கூறிவிடுவார்கள்.

இறுதிக் கட்டம் மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வர். “நிலா எனக்கு ப்ரீயட்ஸ் பா உன்கிட்ட பேட் இருக்கா? கடைக்குக் கூடப் போக முடியல. என்கிட்ட இல்லை. உன்னைத் தவற யார்கிட்டயும் கேட்க முடியாது” எனப் பதட்டத்துடன் கேட்பது.

இப்படி தன் அந்தரங்கத்தைக் கூறும் அளவு நெருக்கத்தைக் காட்டுவார்கள். “எனக்கு நீ எத்தனை நெருக்கம் பார்” என்று சொல்லாமல் அவர்களுக்கு உணர்த்துவது. இதைக் கேட்டு எந்த பெண்தான் உதவ முடியாது எனக் கூறுவாள்.

பேட் வாங்கிக் கொண்டு சென்ற பின்னர் சிறிது நேரத்திற்குப் பின் திரும்பி “தேங்க்ஸ் நிலா” நெகிழ்ச்சியுடன் நடிப்பது.

பின்னர் அவளுக்கு எப்போது எந்த தேதியில் மாதவிடாய் எனச் சாதாரணமாக்கப் பேசுவது போல அறிந்து கொள்வது. இது தான் அதி முக்கியம். இதைக் கேட்டறிந்து மேலிடத்திற்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

அவர்கள் குறி வைத்த பெண்கள் பணக்கஷ்டத்தில் இருந்தால் “இந்தா இதில் பத்தாயிரம் இருக்கு. என் மகன் ஸ்கூல் பீசுக்காக வெச்சது. படிப்பு எப்ப வேணா படிக்கலாம் ஆனா உயிர் போனா வருமா? நீ ஊருக்கு போயி உங்க அம்மாவை பார்” என கடன் என்ற கிணற்றில் அவளை தள்ளுவது.

இந்த அணுகுமுறையில் பெண்ணுக்குப் பெண் மாறும். குழுவைச் சேர்ந்தவர்கள் பெண்ணின் இயல்பைப் புரிந்து அதன்படி நடக்க வேண்டும். அதற்கு தானே அவர்களுக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுக்கப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு பெண்ணையும் குறி வைத்து அவளை அன்பு என்னும் அஸ்திரத்தால் தங்களுக்கு அடிமை ஆக்கிவிடுவார்கள். அப்பெண்களும் அவர்களை முழுமையாக நம்பி மனதார தங்களுக்கானவர் என்று ஏற்றுக் கொண்டு ஏமாறுவார்கள்.

இறுதியாக “என் ஸ்நேகிதி குழந்தைக்கு பர்த்டே நீயும் வா” எனப் பெண்களைக் கருத்தரிப்பு மையத்திற்கு அருகே அழைத்துச் சென்று ஏதேனும் பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து குடிக்க வைப்பார்கள்.

அப்பெண்ணும் லேசாக மயங்க “இங்க ஆஸ்பத்திரி இருக்கு” எனக் கருத்தரிப்பு மையத்திற்குள் அழைத்துச் செல்வார்கள்.

தனம் நிலாவின் கருமுட்டைகள் முதிர்ச்சியடைய பத்து நாட்களுக்கு முன்பே மருந்துகளை ரகசியமாக உணவில் கலந்து கொடுத்துவிட்டாள்.

பிறகு கருத்தரிப்பு மையத்தில் நிலாவை முழுமையாக மயக்கம் அடைய மருந்து கொடுக்கப்பட்டது. பிறகு பிரத்தியேகமாக உள்ள மெல்லிய ஊசி மூலம் கருப்பையில் உள்ள கருமுட்டைகளை உறிஞ்சி எடுக்கப்படும். இந்த செயல்முறைக்கு சுமார் 20 – 30 நிமிடங்கள் ஆகும். (இன்னமும் சில செயல்முறை உள்ளன. அனைத்தும் சிலபல காரணங்களால் பொதுவெளியில் வெளியிடவில்லை )

கருமுட்டை எடுத்த பெண்களுக்கு எதிர்காலத்தில் குழந்தை பேற்றில் சிக்கல் ஏற்படலாம். கருப்பையில் காயம் அல்லது தொற்றினால் பாதிப்பு ஏற்படலாம்.

தனக்கு நடந்த கொடுமையை உணர்ந்த நிலா ஸ்தம்பித்துப் போனாள். அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் மனநிலையில் கூட அவள் இல்லை. அவள் உடலிருந்து துளி துளியாகக் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டன. அன்பு என்ற பெயரில் துரோகம் இழைக்கப்பட்டது.

“இங்க பார் நிலா. ரத்த தானம் கண் தானம் செய்கிற மாதிரி கருமுட்டை தானம் அவ்வளவு தான். உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நீ பாதுகாப்பா இருக்க” என அவளுடன் இத்தனை நாட்களாக பசப்பு வார்த்தை பேசி மயக்கிய தனம் கூறினாள்.

அவள் கையில் இருபதாயிரம் ரொக்கமாக வைக்கப்பட்டது. தனம் விடுதிக்கு தன்னுடன் பத்திரமாக நிலாவை அழைத்து வந்தாள்.

சராசரியாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே கருமுட்டையைச் சேமிக்கும் முறையை அதாவது வெளியே எடுப்பது செய்யலாம்.

அதிலும் அப்பெண்களுக்குத் தீராத நோய் அல்லது அறுவை சிகிச்சை போன்ற நிலை தள்ளப்பட்டால் அவர்கள் கருமுட்டை சேமிப்பு செய்யலாம். இதற்கு அரசு பல சட்ட திட்டங்களை வகுத்துள்ளது.

பெண்ணின் கருமுட்டையும் ஆணின் விந்தணுக்களும் கலந்து கருவறையில் அழகிய குழந்தை உருவாகிறது. இதில் சில இடங்களில் செயற்கைத் தன்மையை வேண்டுமென்றே புகுத்தி பல முறைகேடுகள் நடந்து வருகிறது.

சுந்தரி கருத்தரிப்பு மையத்திற்கு வரும் தம்பதிகளை ஆய்வு செய்வார். மனைவியின் கருமுட்டையை சோதிக்கும் முறையில் நன்றாக இருந்தாலும் சரியில்லை எனச் சொல்லி தங்களின் கருமுட்டையை பயன்படுத்துவர். அதற்குப் பல லட்சங்கள் வாங்கப்படும்.

தம்பதிகளும் குழந்தை வரம் வேண்டி அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுப்பார்கள்.

விடுதியின் ஆறாம் தளத்தில் சுந்தரி கல்லூரிக்கு தானே முன் வந்து தன் சொந்த செலவில் விடுதியில் வேலை செய்வோருக்கு அறைகள் கட்டிக் கொடுத்தாள். ஒரே ஒரு அறையில் தன் ஆட்கள் ரகசிய வேலையில் ஈடுபட வசதிகள் செய்து தரப்பட்டது. அங்கு நிலா போன்ற பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் வைக்கப்பட்டன.

குழுவைச் சேராத மற்ற விடுதி ஆட்களும் அங்குத் தங்கலாம். ஆனால் எந்த ரகசியமும் வராதபடி பார்த்துக் கொண்டனர். மாணவர்கள் செல்லக் கூடாது. சீ சீ கேமரா எனப் பலப்படுத்தினார் சுந்தரி. கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த சந்தேகமும் எழவில்லை. அப்படி எதாவது கேட்டால் கோடிகள் மௌனமாகிவிடும்.

நிலாவிடமிருந்து நான்கு முறை கருமுட்டைகள் எடுக்கப்பட்டது. அவள் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தால் எதிர்க்கவில்லை.

ஆனால் உடல்வலி வேதனை என துன்பப்பட்டாள். தன்னால் முடியவில்லை காவல்துறையில் சொல்லப்போவதாகக் கூறியவள் மேல் இரண்டு துளி தள்ளியம் (Thallium) என்னும் திரவத்தை தனம் தெளித்தாள்.

அது அவளின் இதய செயல்பாட்டை நிறுத்தியது. மாரடைப்பு அதாவது இயற்கை மரணம் என கேஸ் முடியாயிற்று. எந்த உடல்கூறு ஆய்வும் இந்த திரவத்தைக் கண்டுபிடிக்க இயலாது. அதை உட்கொள்ள வேண்டும் என்றில்லை. சருமத்தில் இரண்டு துளி தெளித்தால் போதும். அது ரத்தத்தில் கலந்துவிடும் அபாயமான விஷம்.

ஒரு குறிப்பிட்ட விடுதியில் இரண்டு அல்லது மூன்று பெண்களுக்கு மேல் குறி வைக்க மாட்டார்கள். வேலை முடிந்ததும் அக்குழு பெண்கள் வேலையை விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆறாம் தளத்து அறையில் எதுவும் சிக்காமல் எடுத்துச் சென்றுவிடுவார்கள்.

மாலினிக்கு தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாகக் கருமுட்டை எடுக்கப்பட்டது தெரிந்தும் எதிர்க்காமல் இருந்தாள். தன்னை அங்கு அழைத்துச் சென்ற பெண்கள் இப்போது இங்கு இல்லை என்பதை வெண்பாவிடம் கூறினாள்

சில பெண்கள் வறுமை காரணமாக தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றத் தொடர்ந்து கருமுட்டையை விற்றனர். மாலினி அனைத்தும் தெரிந்தே தன் குடும்பத்திற்காக தியாகம் செய்கிறாள்.

சில பெண்கள் பணத்தாசை மற்றும் உல்லாச வாழ்க்கை வாழ இதற்கு சம்மதித்தனர்.

சுந்தரி வெண்பாவையும் மாலினியையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

முதலில் வெண்பா மரணம் பிறகுதான் மாலினி என்பது அவர் திட்டம். மாலினியை சித்ரவதை செய்து சாகடிக்க வேண்டும் காரணம் ரகசியத்தை வெளியே சொன்னது.

பொன் பொருள் எனத் திருட்டு அனைத்து இடங்களிலும் மலிவாக நடக்கிறது. மனிதனின் உடல் உருப்புகளின் திருட்டு என்பதையும் கடந்த தற்பொழுது இப்படியான திருட்டின் பரிணாம வளர்ச்சிக்கும் உலகம் சென்றுவிட்டது.

தற்பொழுது பெண்ணின் கருமுட்டை திருட்டு என்னும் கொடுமை நிகழ்கிறது. நீங்கள் இதை படித்துக் கொண்டிருக்கும் நிமிடத்தில் கூட ஏதேனும் அப்பாவி பெண்ணின் கருப்பையிலிருந்து கருமுட்டைகள் திருடப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

தன் மகள் வர்ஷாவின் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே சிந்து மற்றும் பைரவிக்கு இவற்றைச் செய்யவில்லை.

மோகன் முதலில் இவற்றை அறிந்திருக்கவில்லை. தன் மனைவி சமூகத்திற்குச் சேவை செய்கிறாள் என்றே நினைத்தாள். ஆனால் ஒரு நாள் அவர் உண்மையை அறிந்து திகைத்துப் போனார்.

சண்டை போட்டார் பிறகு “சுந்தரி இதுவரை செய்தது போதும் இதோடு நிறுத்திடு” எனக் கெஞ்சினார்.

ஆனால் சுந்தரி சொல் பேச்சைக் கேட்கும் ரகம் இல்லை. பிடிவாதம் அதிகம் அதையும் விட “ஏற்கனவே இரண்டு கொலை செய்திட்டேன். என்னை யார் என்ன செய்ய முடியும்?” எனத் திமிராகப் பேசினார்.

வர்ஷா தன் அன்னைக்குப் பணத்தாசை இல்லை எனப் பெருமிதமாய் எண்ணினாள். அவளுக்கு தன் அன்னையின் உண்மை முகம் தெரியாது. தந்தையிடம் என்றுமே தனக்குப் பணம் சொத்து நகை வேண்டும் என்று கேட்டதில்லை என்பதில் தன் அன்னை மேல் மதிப்பும் மரியாதையும் இருந்தது.
அதற்குப் பின்னே இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று வர்ஷா அறிந்திருக்கவில்லை.

தன்னை புதைக்க படுக்குழி தோண்டப்படுகிறது என்பதை அறியாமல் வெண்பா சுற்றுலா சென்று திரும்பினாள்.



துளிகள் தெறிக்கும்…