துளி துளியாய் துரோகம் 23
“வெண்பா .. என் மகள் பேர் வெண்பா” பதற்றத்துடன் கண்ணீர் ததும்ப வெண்பாவின் தந்தை சாரங்கன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
“நேற்று ராத்திரியிலிருந்து என் மக வெண்பாவைக் காணோம்” என்னும் பொழுது அவர் குரல் கம்மியது.
“ பதட்டப்படாதீங்க சார் .. உங்க பொண்ணுக்கு காதலன், பாய் பிரெண்டுனு இப்படி யாராவது?” காவலர் கேள்வியை இழுக்க
“ இல்லை .. இல்லை அப்படி எதுவும் இல்லை” என நடுக்கத்துடன் மறுத்தார்.
“சரி உங்க பொண்ணு போட்டோ கொடுங்க .. அப்படியே பொண்ணு காணோம்னு ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுங்க” என்றார் அதிகாரி.
“304 .. இவர் புகாரை வாங்கிக்க” என மற்றொருவரிடம் அனுப்பி வைத்தார்.
அந்த 304 என்னும் காவல்துறை நபர் “நிதானமா சொல்லுங்க .. காணாமல் போனப்ப என்ன கலர் டிரஸ் போட்டிருந்தாங்க .. நகை ஏதாவது போட்டிருந்தாங்களா? விளக்கமா சொல்லுங்க” என்றார்.
“நேவி ப்ளு கலர்ல சுடிதார்.. இடது கையில் கடிகாரம் கட்டியிருந்தா …” என அவர் கூறிக் கொண்டிருந்தார்.
காவல் நிலையத்தில் ஒருவர் கூட அதை தீவிரமாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. காலை ஏழு மணிக்கு வெண்பாவின் தந்தை குரல் மட்டுமே அங்கு சோகத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. மற்றபடி கொட்டாவி, சோம்பல் முறிக்கும் சத்தம் என வார்த்தையில்லாத ஒலிகளாக எந்த பரபரப்பும் இன்றி தூங்கி வழிந்தது காவல்நிலையம்.
அப்போது தொலைபேசியும் டிரிங் டிரிங் என கொட்டாவி விட்டது. “ஹலோ போலீஸ் ஸ்டேஷன்” என எடுத்துப் பேசினார் சப் இன்ஸ்பெக்டர் “எங்க? எப்ப? இதோ வரோம்” என போனை வைத்தார்.
“ஜீப் எடு” என கட்டளையிட்டார். சட்டென அனைவரும் சுறுசுறுப்பாயினர்.
“ஐயா .. என்னுடன் கொஞ்சம் வாங்க” என வெண்பாவின் தந்தையை சப் இன்ஸ்பெக்டர் அழைத்தார்.
“என் பொண்ணு கிடைச்சிடாளா?”
“நீங்க பார்த்து சொல்லுங்க” என்றார்.
“எங்க? எப்படி?” ஆவலாக வினவினார்.
“சொல்றேன் வாங்க” என்றபடி அவரை அழைத்துச் சென்றனர்.
அந்த ரயில்வே டிராக் அருகே சென்றனர். அங்கே கூட்டம் கூடியிருந்தது. காவலாளிகள் கூட்டத்தை விரட்டினர்.
”ஐயா கஷ்டமான நேரம் தான். விபத்தாகி ஒரு பாடி கிடைச்சிருக்கு இது உங்க பொண்ணானு பார்த்துச் சொல்லுங்க” எஸ்.ஐ. நிதானமாகச் சொன்னார்.
“இல்ல இருக்காது” உடல் நடுங்கியது.
எஸ்.ஐ. ஜாடை காட்ட வெள்ளை துணியால் மூடப்பட்ட சடலம் ரத்த திட்டுக்களுடன் இருந்தது. வெள்ளை துணியை அகற்றியதும் முகம் முழுவதும் நசுங்கிப் போயிருந்தது. உடல் கூடப் பல இடங்களில் ரயிலின் சக்கரங்களில் நசுங்கி பெரும்பாலும் கூழாக ஆகியிருந்தது.
துப்பட்டா அருகில் இருந்தது. “வெண்பா” எனக் கதறி அழுதார் வெண்பாவின் தந்தை.
“சார் உங்கப் பெண்ணா?”
“ஆமா என் பொன்னு தான். இது அவளுக்குப் பிடிச்ச டிரஸ்” எனத் துப்பட்டாவை கையில் பிடித்துக் கொண்டு அழுதார்.
“உங்க பெண் ராத்திரில ஏன் இங்க வந்திருக்காங்க?”
“அது நீங்கச் சொன்னா நம்ப மாட்டீங்க” என விசும்பலுடன் மென்று முழுங்கினார்.
“பரவாயில்ல சொல்லுங்க”
“அவ ஆவி ஆராய்ச்சி பண்றா சமீப காலமா. நான் வேண்டாம்னு சொன்னேன். ஆனா கேட்கல. இப்ப என் மகளைப் பரிக்கொடுத்துட்டேன் ” எனச் சடலத்தைப் பார்த்து அழுதார்.
“இந்தக் காலத்து பொண்ணுங்கள என்ன சொல்றதுனே தெரியல” என அலுத்துக் கொண்டார் எஸ்.ஐ.
“ஐயா இது வெளில தெரிய வேண்டாம்.” எனக் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார் வெண்பா தந்தை.
“சரிங்க நான் பார்த்துக்கிறேன் .. மூணு மணி நேரத்துல போஸ் மார்ட்டம் முடிஞ்சி பாடி கொடுத்திடுவாங்க” எனச் சொல்லிச் சென்றார்.
காவல்துறைக்கும புகார் வந்தவுடனே அதை விசாரித்துக் கேசை முடித்ததில் ஒரு நிம்மதி.
ஆம்புலன்ஸ் வந்து பாடியை அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றது. அவர்கள் சொன்னது போல மூன்று மணி நேரத்தில் கொடுத்துவிட்டனர். வெண்பாவின் தந்தையும் கனத்த மனதோடு எரியூட்டினார். அவருக்கு நண்பர் இருவர் துணையாக இருந்தனர்.
அனைத்தும் முடிந்து வீடு வந்து தலைக்கு குளித்தார். அவருக்காக ஒரு கார் வந்தது. அதில் ஏறி மருத்துவமனையை அடைந்தார்.
வெண்பா தந்தையை மரியாதையாக அஸ்வத் அறைக்கு அழைத்து வந்து அமர்த்தினான் ஒருவன். சில நிமிட காத்திருப்புக்கு பிறகு அறைக்குள் பிரவேசித்தவரை எழுந்து நின்று “மாப்பிளை”என அழைத்தார்.
“சாரி உங்களை இப்படி எல்லாம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கிட்டேன். கொஞ்ச நாளுக்கு வெண்பா இறந்த்தாகவே இருக்கட்டும். இல்லைனா அவ உயிருக்குத் திரும்பவும் ஆபத்து” என்றான் அஸ்வத்
“நீங்கச் சொல்றதும் சரிதான் மாப்பிள்ளை. பாவம் யாரோ ஒரு பொண்ணு என் மகளுக்காக இறந்திருக்கா. அவ ஆத்மா சாந்தி அடையணும்”
“ஆமா ஆச்சரியமான விஷயம் இது. யார் அந்தப் பெண் தெரியலை. நேத்து ராத்திரி இறந்திருக்கா … என் ஆளுங்களை அனுப்பி இருந்தேன். அந்த ரவுடிங்க திரும்ப வந்தாங்களா? நிலைமை என்னனு அப்ப இந்த விபத்து நடந்திருக்கு.”
வெண்பா தந்தை “நீங்கச் சமயோசிதமா யோசிச்சி நல்ல ஐடியா கொடுத்தீங்க” மனதாரப் பாராட்டினார்.
“இல்ல இதைச் சொன்னது உங்க பொண்ணு வெண்பா தான். இந்த நிலைமைலயும் அவங்க ஸ்திரமா சிந்திக்கிறாங்க”
“இப்ப வெண்பா எப்படி இருக்கா?” கவலையுடன் கேட்டார்.
“நீங்களே வந்துப் பாருங்க” என அழைத்துச் சென்றான்.
வெண்பா முகத்தில் கட்டுடன் படுத்திருந்தாள். வலது பக்க முகத்தில் சில இடங்கள் மற்றும் கழுத்துப் பகுதியிலும் சில இடங்கள் ஏசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டிருந்தது. அதனுடன் கையால் முகத்தைத் தடுக்க முற்பட்டதால் கையில் தான் அதிக காயம்.
அவள் விழிகள் பாதிக்கப்படவில்லை. அவள் ஐசீயூவில் படுத்திருந்தாள். அருகிலிருந்த மற்றொரு அறையில் துஷ்யந்த் படுத்திருந்தான்.
அவனுக்கு இடது காலிலும் இடது கையிலும் எலும்பு முறிவு. அதனுடன் ரத்தமும் அதிகமாக வெளியேறி இருந்தது. அவனும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டான்.
ஐசீயு அறைக்கு வெளியே வெண்பாவின் தந்தை சோகமே உருவாக மகளைப் பார்த்தார். அவளைக் காண வேதனையாக இருந்தது. இனி இவள் எதிர்காலம் என்ன ஆவது? மாப்பிள்ளை இப்போது திருமணத்திற்கு சம்மதிப்பாரா? அவள் படிப்பைத் தொடர முடியுமா? இப்படி ஆயிரம் கேள்விகள் மனதைக் குடைந்தன.
“உயிருக்கு ஆபத்து இல்ல”
“அவளோட பேசலாமா?”
“ராத்திரி சரியா உறக்கமில்ல மாத்திரை கொடுத்திருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்துல முழிச்சிடுவா. நீங்கப் பேசலாம்”
மகளுடன் பேசக் காத்திருந்தார்.
அஸ்வத் மோகனின் முதல் மனைவி மகன். அவன் தற்செயலாக வெண்பாவின் தரிசனத்தைப் பெற்றான். ஒரு நாள் சாலையில் ஒரு முதிய தம்பதியினர் சாலையைக் கடக்க வெண்பா உதவினாள்.
யாரோ ஒரு ஆட்டோ காரன் பெண்ணிடம் தகராறு செய்ய வெண்பா வந்து பேசிச் சமரசம் செய்து வைத்தாள். நாய்க்குட்டி ஒருவரின் வாசல் கேட்டில் தலையை நுழைத்து மாட்டிக் கொண்டது. வெண்பா மெல்ல பேசிக் கொஞ்சி அதனை விடுவித்தாள்.
அவள் குரலைப் பலமுறைக் கேட்டு ரசித்துள்ளான். இப்படி மூன்று முறை அவளைத் தற்செயலாகத் தான் கண்டான். அவள் மேல் சொல்ல முடியாத ஈர்ப்பு உண்டானது.
யார் இந்தப் பெண் என அவளைத் தொடர்ந்துச் சென்று அவள் கல்லூரி மற்றும் வீட்டைக் கண்டறிந்தான்.
அதன் பின்னர் வெண்பா தந்தையிடம் முறையாகப் பெண் கேட்டான். அவருக்கு அஸ்வத் தன்ப் பெண்ணின் பின்னால் காதல் கீதல் என்று சுற்றாமல் தன்னிடம் வந்து கேட்டது பிடித்திருந்தது.
ஆனால் அவன் மோகனின் மகன் என்பதில் சிறு உறுத்தல் இருந்தது. பெரிய தொழிலதிபரின் மகனை எப்படி? எனத் தடுமாறினார்.
ஆனால் அவனின் பேச்சு நடவடிக்கை வெகுவாகக் கவர்ந்தது. அவனின் ஜாதகத்தை கேட்டு வாங்கினார். தனக்குத் தெரிந்த ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்தார். நன்றாகப் பொருந்தி இருப்பதாக ஜோதிடர் கூறினார். அத்துடன் அஸ்வத் மிகவும் நல்ல குணநலன் கொண்டவனாக இருக்க வேண்டும். அவன் ஜாதகம் அப்படி சொல்கிறது என்றும் போனஸ் தகவலைக் கூறினார்.
நடுத்தர வர்கத்தின் சீ.பீ.ஐ (CBI) ஜோதிடரும் ஜாதகமும் தான். அதனால் அதைப் பரிபூரணமாக நம்பினார்.
அஸ்வத் “நீங்க வெண்பாகிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் கேளுங்க மாமா. அவ சரினு செல்லிட்டா அப்பா வந்து பேசுவார்” என்றான்.
தந்தையும் மகளைக் கேட்க அவளோ படிப்பு முடிய வேண்டும் என்றுவிட்டாள். ஆனால் இப்படி ஆகும் என யாருக்கு தான் தெரியும்.
--------
சுந்தரியுடன் அஸ்வத் மற்றும் அஸ்வினிக்கு நல்ல உறவு இருந்ததில்லை. மாற்றாந்தாய் மனப் போக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால் மோகன் தன் குழந்தைகளைக் கைவிடவில்லை.
சுந்தரியுடன் கசப்பான அனுபவங்கள் தான் அதிகம் இருந்தன. அதனால் அஸ்வத்திற்கு அவளைக் கண்டாலே பிடிக்காது. மோகன் இருக்கையில் ஒரு மாதிரியும் அவன் இல்லாத சமயத்தில் வேறு விதத்திலும் அவனையும் அவன் தங்கை அஸ்வினியும் நடத்தினார் சுந்தரி.
அதைப் புரிந்துக் கொண்ட அஸ்வத்தின் தாத்தா பாட்டி (அம்மாவின் பெற்றோர்) குழந்தைகளைத் தாங்களே வளர்க்கிறோம் என்றனர். சுந்தரி விரட்டிவிட்டால் போதும் எனத் துரத்திவிட்டார்.
சுந்தரியின் கசப்பான ஏச்சும் பேச்சும் குழந்தைகள் மனதில் பசுமரத்தாணியாய் பதிவாகியது. சுந்தரியின் மகள் வர்ஷா தாயை போலவே அவர்களை மதிக்கவில்லை.
அன்று இரவு அஸ்வத் விடுதி வழியாகக் காரில் செல்கையில் அமைதியான இருட்டில் “துஷ்யந்த்” என்னும் வெண்பாவின் குரல் அவனைத் தடுத்தது. அவனுக்கு எங்கிருந்து குரல் வருகிறதென்று புரியவில்லை. காரை நிறுத்திச் சுற்றிலும் பார்த்தவண்ணம் இருந்தான்.
அஸ்வத் அத்தனை தைரியசாலி இல்லை. சிறிது நேரத்தில் அவன் சித்தி சுந்தரி மற்றும் வர்ஷா இறங்கி வந்தனர் பின்னே வெண்பாவை இருவர் பலவந்தமாக இழுத்துச் சென்றனர். இதைப் பார்த்து அதிர்ந்தான்.
சுந்தரியின் செயலில் சந்தேகம் இருந்தது. அதனால் அனைத்தையும் தன் செல்போனில் ரெகார்ட் செய்தான்.
அவர்களைத் தொடர நினைக்கையில் துஷ்யந்த் ரத்த சேற்றில் குளித்தவனாகக் காட்சி அளித்தான். அவன் யாரென்று அஸ்வத்திற்குத் தெரியாது. அவனின் மருத்துவ குணம் துஷ்யந்திற்கு உதவியது.
வெண்பாமேல் ஏசிட் வீசுகையில் மனம் பதைபதைத்தது. ஆனால் சுந்தரியின் பலம் நன்றாகவே அறிந்தவன். அதனால் உடனேச் சென்றுக் காப்பாற்ற முடியவில்லை.
நள்ளிரவில் வெண்பா மற்றும் துஷ்யந்துடன் தன் மருத்துவமனைக்கு வந்துச் சேர்ந்தான். அவன் மருத்துவர் குழு இருவரையும் கண்காணித்து சிகிச்சை அளித்தது.
துஷ்யந்திற்கு உடனடியாக ரத்தம் ஏற்றினர். வெண்பா முகம் கழுத்து மற்றும் கையை ஆய்வு செய்ததில் அவளுக்கு மோசமான பாதிப்பு இல்லை. காரணம் காலாவதியான ஏசிட்டை தான் அவர்கள் வீசியுள்ளனர்.
அதன் தாக்கம் அத்தனை ஆழமாக இல்லை என்றாலும் ஓரளவு இருக்கத்தான் செய்தது. அவளின் மேல் சருமம் பாதிக்கப்பட்டிருந்தது.
ஒரு மணி நேரத்தில் அவள் கண் விழித்தாள். தான் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தாள்.
சுந்தரி தன் கருமுட்டைகளை எடுக்கதான் இங்கு அழைத்து வந்துள்ளாளா? எனக் குழம்பி தவித்தாள்.
அதிலும் துஷ்யந்த் மரணம் தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியாதாக இருந்தது. எத்தனை கட்டுப்படித்தினாலும் முடியாமல் அழத் தொடங்கினாள். அழுகை சத்தம் வெளி வந்துவிடுமோ எனக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
விசும்பல் சத்தம் கேட்டு அஸ்வத் அவள் அருகே வந்தான். அவனைப் பார்த்ததும் வெண்பா அவன் யாரோ என நினைத்து என்ன செய்வதென்று தெரியாமல் கலங்க
“ஹாய் வெண்பா நான் டாக்டர் அஸ்வத். ரயில் டிராக்ல இருந்து உன்னைக் காப்பாத்தினது நான் தான்” என்றான்.
“தேங்க்ஸ்” என்றாள். அவளால் இயல்பாகப் பேச முடியவில்லை. முகத்திலிருந்த கட்டு அதனுடன் இத்தனை சம்பவங்களால் நேர்ந்த அதிர்ச்சியெனச் சோர்வாக இருந்தாள்.
“உங்க பிரெண்டும் இப்ப பெட்டர்” என இரண்டு அறைக்கு நடுவே இருந்த திரை சீலையை தள்ளித் துஷ்யந்தைக் காண்பித்தான்.
“துஷ்யந்த்” என மகிழ்ச்சியில் அழைத்தவள் “அவன் எப்படி இருக்கான்?” சிரமத்துடன் பேசினாள்.
“அவருக்குப் போன் பிராக்சர் (bone fracture) அண்ட் பிளட் லாஸ் (blood loss) அவ்வளவுதான். அவருக்கு டிரீட்மெண்ட் கொடுத்திட்டு இருக்கோம். பயப்பட எதுவுமில்ல” என்றதும்தான் வெண்பாவுக்கு நிம்மதியானது.
அஸ்வத் அவளுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் பற்றியும் விளக்கினான். இனி தன் முகம் எப்படி இருக்கும் என அவளால் சிந்திக்க கூட முடியவில்லை.
அப்போது அவள் தன் கழுத்து பகுதியைத் தொட்டு “என் லாங் செயின்” எனக் கேட்டாள்.
“பத்திரமா இருக்கு. நான்தான் வெச்சிருக்கேன்” என்றான்.
“அதுல ஒரு கேமரா இருக்கு” என்றாள்.
“அப்படியா? நானும் வீடியோ எடுத்திருக்கேன்” என்றான்.
கடுப்பான வெண்பா“ ஏங்க இது என்ன சினிமா சூட்டிங்கா வீடியோ எடுக்கறீங்க வந்து காப்பாத்திருக்கலாமே?” ஆற்றாமையுடன் வினவினாள். பேசப் பேச அவளுக்குப் பேச்சு இயல்பாகத் தொடங்கியது.
“அப்படி இல்ல” என நெளிந்தவன் தன்னால இயலவில்லை என்பதை வெளிப்படையாகக் கூறாமல் “ ஆமா உங்களுக்கும் சுந்தரி சித்திக்கும் என்ன பிரச்சனை?” எனக் கேள்வியை மடைமாற்றினான்.
“சுந்தரி சித்தியா?” சிங்கத்திடமிருந்து தப்பி புலியிடம் மாட்டிக் கொண்டேமா?” என அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவள் எண்ண போக்கைப் புரிந்தவனாகப் புன்னகையுடன் “வெயிட் வெயிட்” என அவளிடம் தனக்கும் சுந்தரிக்கும் உள்ள உறவைக் கூறினான்.
அவன் சொல்வது உண்மையா? என நம்ப முடியாமல் அவனைப் பார்த்தபடி இருந்தாள்.
“நான் மட்டும் உங்களை காபாத்த வந்திருந்தா மூஞ்சில ஊத்தின ஏசிட்டை முழு உடம்புல ஊத்திருப்பாங்க. என் மேல அத்தனை வெறுப்பு” என்றான்.
அப்போது அவனுக்குப் போன் வந்தது. எடுத்துப் பேசியவன் “வாட் .. ஓ மைக்காட்” எனச் சிறிது நேரம் பேசிவிட்டு அவளிடம் வந்தவன் “எந்த ரயில் டிராக்ல உங்களை மயக்கிப் போட்டாங்களோ .. அங்க இப்ப ஒரு விபத்து நடந்திருக்கு. செத்துபோன பொண்ணு உங்க வயசு இருக்குமாம். ஆனா முகம் கூடச் சரியாத் தெரியல” என்றான்.
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“அங்க என்ன நிலவரம்னு பார்க்க என் ஆளுங்கள இருக்கச் சொல்லி இருக்கேன்” என்றான்.
சற்று சிந்தித்தவள் “ விபத்தான பொண்ணு என்ன கலர் டிரஸ் போட்டிருக்கு எல்லா விவரமும் உங்க ஆளுங்ககிட்ட கேட்டு சொல்லுங்க. என் அப்பாவை நாளை காலை நான் காணாம போன மாதிரி கம்ப்ளைண்ட் கொடுக்கசொல்லி அதோட அந்தப் பொண்ணு நான் தான் பிரேம் பண்ணச் சொல்லுங்க” என மளமளவென திட்டத்தை சொன்னாள்.
அஸ்வத் மலைத்து போனான். இந்த நிலைமையில் எப்படி இவளால் சிந்திக்க முடிகிறது என.
அஸ்வத்தும் வெண்பா தந்தைக்கு போன் மூலம் வெண்பா சொன்னதைக் கூறினான்.
வெண்பா தந்தைக்கு மகள் மேல் முதலில் கோபம் தான் வந்தது. குரூப் ஸ்டடி என்று சொல்லிவிட்டுச் சென்ற மகள் செய்த காரியம் இப்படி ஆனதே என வேதனை அடைந்தார். யார் எப்படி போனால் இவளுக்கு என்ன? என்று அங்கலாயித்து.
பின்னர் மகள் சொன்னபடி நடித்தார்.
கல்லூரியில் வெண்பா ரயில் விபத்தில் இறந்துவிட்டாள். காதலி மரணித்த சோகத்தால் அவள் இறுதிச் சடங்கிற்கு துஷ்யந்த் செல்லவில்லை என தகவல் பரப்ப்பட்டது.
இந்த வதந்திகள் இறந்த மற்றொரு பெண்ணை எரியூட்டிய பின்னரே பரப்ப்பட்டது.
துளிகள் தெறிக்கும்…