• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

துளி துளியாய் துரோகம் 7

kkp5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
58
72
18
Thanavur
துளி துளியாய் துரோகம் 7


வர்ஷா அலுவலகத்தில் தன் தோழிகளான சிந்து பைரவியுடன் அன்றைய காலை நேரத்தை செலவிட்டாள். தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தவளின் முகத்தை கண்டு சிந்து பைரவி எதுவும் கேட்கவில்லை.

தன் தந்தையின் பி.ஏ.வை அழைத்து அவரிடம் காபி எஸ்டேட் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டாள்.

அலுவலக வேலைகள் வர்ஷாவை மொத்தமாக தனக்குள் இழுத்துக் கொண்டது. வர்ஷா மதிய உணவு இடைவேளையில் சிந்து பைரவியை தன்னோடு உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள். சற்றே பேசியபடி உணவு உண்ண வேண்டும் என மனம் ஆசைப்பட்டது. சிந்து பைரவி மறுபேச்சின்றி காரில் ஏறினர்.

உணவகத்திலும் வர்ஷா முகத்தில் சிந்தனை ரேகை தென்பட்டதைக் கண்டு பைரவி சிந்துவிடம் “எதாவது பிரச்சனையா?” என கிசுகிசுத்தாள்.

“வாயை மூடிட்டு சாப்பிடு” எனச் சிந்து கண்டித்தாள்.

“வாயை மூடிட்டு எப்படி சாப்பிடறதாம்” எனப் பழங்கால ஜோக்கைக் கேட்க

சிந்து பதில் சொல்லாமல் முறைத்தாள்.

வர்ஷா “நாம கூர்க் போக போறோம்” என்றாள்.

“வாவ் .. கிரேட்” என பைரவி மகிழ்ச்சி பொங்கக் கூவினாள்.

“இது அபீஷியல் டிரிப்” என வர்ஷா கூறிய அடுத்த நொடி

பைரவி முகத்தில் எண்ணை வழியாத குறை

பின்பு வர்ஷா “ஹே ரிலாக்ஸ் .. இது போத் அபீஷியல் அண்ட் நான்-அபீஷியல் … கொஞ்ச வேலைதான். ஜஸ்ட் எ கப்புள் ஆப் டேஸ் .. ஓகே வா.. அது முடிஞ்சதும் நாம ப்ன் பண்ணலாம்” எனப் பைரவியைப் பார்த்து புன்னகையுடன் சமாதான தொனியில்க் கூறி அவள் தோளைத் தட்டிக் கொடுத்தாள்.

சிந்து “வர்ஷா ஒண்ணும் பிரச்சனை இல்லை. எப்ப கிளம்பணும் சொல்லு .. நம்ம மூணு பேருக்கும் ஆரேஞ்மென்ட்ஸ் செய்றேன்” கடமையே குறியாகக் கேட்டாள்.

“சிந்து மூணு இல்ல நாலு பேர் போக போறோம்” வர்ஷா கூற

“யாரது?” என கண்களால் மற்ற இரு பெண்களும் வர்ஷாவை நோக்க

“துஷ்யந்த்” என்றாள் வர்ஷா. அவன் பெயரைக் கூறுகையில் அவள் வதனத்தில் ஏற்பட்ட மாறுதலை இருவரும் கவனித்தனர்.

துஷ்யந்தை காலாவதியான மனிதன் என்று இருவரும் நினைத்திருந்தனர். அப்படியிருக்க இப்போது மீண்டும் வர்ஷா அவனை குறிப்பிடுவது எதில் கொண்டு போய் முடியப் போகிறதோ என இருவரும் எண்ணினர்.

துஷ்யந்த் மனதில் வர்ஷா இல்லை என்பது அனைவரும் அறிந்த ரகசியம். துஷ்யந்த் காதலித்த பெண் வெண்பா. ஆனால் ஒரு விபத்தில் வெண்பா இறந்துவிட்டாள். அந்த அதிர்ச்சியிலிருந்து துஷ்யந்த் மீளவில்லை அப்படியிருக்க அவனை அழைத்துக் கொண்டு செல்வது சரி வருமா? என இருவரும் குழம்பினர்.

இருப்பினும் வர்ஷா கூறிவிட்டாள். இனி அதில் மாற்றுக் கருத்து இல்லை.

“அப்பா பிரெண்ட் நாராயணன் அங்கிள் தெரியும்ல?” வர்ஷா கேட்கச்

சிந்து தெரியுமெனத் தலையசைத்தாள்.

”அவருடைய காபி எஸ்டேட் தான் வாங்கப் போறோம். சோ அவங்க பங்களாலதான் ஸ்டே” வர்ஷா சொன்னபடி அதனோடு காபி எஸ்டேட் பற்றியும் சிந்துவுடன் கலந்தாலோசனை செய்தாள்.

பைரவி மனம் எதிலும் லயிக்கவில்லை “போச்சு சத்தமா பேசி சிரிக்கக் கூட முடியாது அந்த ஸ்டிரிக்ட் ஆபீசர் நாராயணன் பங்களால” எனப் புலம்பினாள். “நாம மட்டும் என்ஜாய் செய்ய நினைச்சா இந்த துஷ்யந்த் வேற” என பெரு மூச்செறிந்தாள். “வேற வழி போய்தானே ஆகணும்.”

“நாராயணன் அங்கிள் அவங்க சொத்தை எல்லாம் வித்துட்டு லண்டன்ல இருக்கிற அவங்க பையனோடு செட்டில் ஆகப் போறாங்களாம். அவரே அவசரத்துல இருக்கார். சோ என்ன விலை கேட்டாலும் கொடுத்திடுவார். அவரோடு போன்ல சும்மா பேசிப் பார்த்தேன்” என்றாள் வர்ஷா.

சிந்து பொறுமையாக அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு “அப்ப பத்திரப் பதிவு முடிச்சிட்டுதான் வருவோம் .. ரைட்?” எனக் கேட்க

“ஆமா” இது வர்ஷா

“துஷ்யந்த் வர சம்மதிச்சிட்டாரா?” சிந்து கேட்டாள்

“இல்ல இன்னிக்கு ஈவினிங்தான் பேசணும்” வர்ஷா சொன்னதுதான் தாமதம்

“கடவுளே அவன் வர மாட்டேனு சொல்லணும்” என அவசரமாகப் பைரவி வேண்டுதல் வைத்தாள்.

மாலையில் சிந்துவிற்கு அலுவலக வேலை இருந்தது. அதனால் வர்ஷா மற்றும் பைரவி துஷ்யந்த் வீட்டிற்குச் சென்றனர்.

துஷ்யந்தின் தந்தை சபாபதி சுந்தரிக்குச் சகோதர முறை ஆக வேண்டும். அவரும் பணக்கார குடும்பம். சபாபதி கமலா தம்பதியினருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் தாமோதரன், துஷ்யந்த் மற்றும் தரூண்.

முதல் மகனான தாமோதரனுக்குத் திருமணம் முடிந்து ஐந்து வயதில் மகள் உள்ளாள். துஷ்யந்த் தன் காதலை வீட்டில் சொன்னதும் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் மகன் மேல் உள்ள பாசத்தால் வேறு வழியில்லாமல் சம்மதித்தனர். அதிலும் அவனின் தாய் கமலாதான் மன்றாடி சம்மதம் பெற்றுத் தந்தார்.

ஆனால் அப்படியான சமயத்தில் வெண்பா இறந்து போனாள். இதை துஷ்யந்தால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தனி அறையில் பித்துப் பிடித்தவன் போல இருந்தான்.

வெண்பாவின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்கவில்லை. உயிராய் ஊனாய் நினைத்தவளை உயிரற்ற சடலமாய் காணும் சக்தி அவனுள் இல்லை.

ஆனால் துஷ்யந்த் தாய் கமலா தன் அருமை மகனை அப்படியே விட்டுவிடவில்லை. அவனை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்வது. இன்னமும் அர்த்தமுள்ள வாழ்க்கை உள்ளது என்று பேசி மெல்ல மாற்றினார். மாறுதலை வரவழைத்தார். அத்தனை சுலபம் இல்லை என்றாலும் மூன்று வருட விடாமுயற்சி சிறிது பலன் அளித்தது.

இப்பொழுதும் வெண்பா நினைவு வந்தால் அப்படியே முடங்கிப் போய் விடுவான்.

துஷ்யந்த் வீட்டைப் பைரவியும் வர்ஷாவும் இரவு ஏழு மணி போல அடைந்தார்கள்.

“வா வர்ஷா” என முகம் மலர வரவேற்றார் கமலா. மாமாவும் “வா மா” என அழைத்தார். பைரவியையும் வரவேற்றனர்.

“எப்படி இருக்கீங்க அத்தை? மாமா?” என்றபடி புன்னகையுடன் வர்ஷா சென்றாள்.

மோகனின் திருமணம் பற்றி அத்தை மாமா ஓரிரு வார்த்தைகள் மட்டுமே விசாரித்தனர். சுந்தரி இருக்கும் நிலைமையைப் பார்க்காமல் மோகன் திருமணம் செய்து கொண்டது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் திருமணத்திற்கு வரவும் இல்லை. வெவ்வேறு விஷயங்களைச் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். சுந்தரி உடல்நிலை பற்றி அதிகம் பேசினார் மாமா. தனக்குத் தெரிந்த மருத்துவர்கள் பெயர்களை சொல்லி முடிந்தால் ஆலோசிக்கும்படி அறிவுறுத்தினார்.

கமலா பைரவி நலனையும் மற்றும் சிந்துவை பற்றியும் விசாரித்தார். பைரவியும் சிரித்த முகத்துடன் மரியாதையாகப் பதிலளித்தாள்.

பின்பு வர்ஷா மற்றும் பைரவியை இரவு உணவு இங்குதான் உண்ண வேண்டும் என அன்பு கட்டளை இட்டார். வேறுவழியின்றி இருவரும் சம்மதித்தனர்.

அத்தை மாமாவிடம் பேசியபடி இருந்தவள் “வீட்ல மத்தவங்க எங்க அத்தை?”

“தாமு மனைவிக்கு ரெண்டாவது பிரசவம் .. அம்மா வீட்ல இருக்காள் அதனால தாமுவும் கூடவே இருக்கான். தரூண் பிரெண்ட்ஸ் கூட வெளியில போயிருக்கான்”

இதெல்லாம் வர்ஷாவிற்கு தேவையே இல்லை. அவள் துஷ்யந்தை மனதில் வைத்துக் கேட்டாள்.

இறுதியாக “துஷ்யந்த் மாடில அவன் ரூம்ல இருக்கான்”என்றார்.

“ நான், சிந்து பைரவி கூட கூர்க் போறேன். காபி எஸ்டேட் வாங்க அப்பா ஆசைப்பட்டார். அதைப் பார்த்துட்டு அப்படியே ஒரு ஹாலிடே டிரிப் மாதிரியும் இருக்கட்டும்னு” என அத்தை மாமாவிடம் மெல்லத் தொடங்கினாள்.

“அப்படியா மா .. நல்லா சந்தோஷமாப் போயிட்டு வாங்க” என மாமா சொன்னதும்

“மாமா துஷ்யந்தையும் கூட கூடிட்டு போகட்டுமா?” சட்டெனக் கேட்டுவிட்டாள்.

முதிய தம்பதியினர் இருவரும் அதிர்ந்து ஒருவரைப் பார்த்துக் கொண்டனர்.

“இல்லமா அது சரிவராது” என மாமா கூறிவிட

“அப்பாடா” என பைரவி மனம்.

“சரி .. நான் துஷ்யந்தை பார்க்கலாமா?” வர்ஷா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு இருவரிடமும் கேட்டாள்.

“இது சரியில்லையே” எனப் பைரவி மைண்ட்வாய்ஸ்

”மாடியில் அவன் ரூம்ல தான் இருக்கான் போய் பாரும்மா” என்றார் அத்தை

அடுத்த நொடி கடகடவென மாடிப்படிகளில் ஏறினாள். அவளின் கம்பீரம் சற்றும் குறையவில்லை அவளின் வேகத்துக்கு அலைபாய்ந்த விரிந்த கூந்தல் கொள்ளை அழகை மிகைப்படுத்திக் காட்டியது.

துஷ்யந்த் இந்த நொடியே வர்ஷாவை திருமணம் செய்துவிடக் கூடாதா எனத் தோழி மனம் ஏங்கியது. வர்ஷா உயிருக்கு உயிராய் துஷ்யந்தை காதலிக்கிறாள் என அறியாதவளா தோழி? ஏனோ மனம் கணத்தது.

கதவை தட்டியபடி “துஷ்யந்த்” என அழைத்தாள்.

“ஹே வர்ஷா வாட் எ சர்பிரைஸ்..” என துஷ்யந்த் புன்னகையுடன் வரவேற்றான்.

அகமும் முகமும் மலர தன்னவனின் உருவத்தைக் கண்ணுக்குள் பூட்டிக் கொண்டாள். முன்பை போலவே அவன் இப்பொழுதும் அவளை ஈர்த்தான். சற்று இளைத்திருந்தான். அவன் புன்னகையில் உயிர்ப்பு இல்லை. கண்களில் சோகம்.

இவனின் இந்த நிலைக்கு தானே காரணம் என் மனம் குற்றம் சாட்டியது.

நொடியில் மனம் பழைய நினைவில் ஆழ்ந்தது . அன்று சுந்தரி “வெண்பா உயிரோடு இல்லனா உன்னைக் கல்யாணம் செய்துப்பான் தானே?” எனக் கேட்டதும்

“அம்மா” என அதிர்ந்தாள் வர்ஷா

“வெண்பா இறந்தா கொஞ்ச நாள் தேவதாஸ் மாதிரி இருப்பான். அப்புறம் உன் பின்னாடி வந்துதானே ஆகணும்” எனச் சுந்தரி சொல்லி நகைத்தது மனக் கண்ணில் தோன்றி மறைந்தது.

“சிந்து பைரவிக்குக் கூடத் தெரியாம வேலையை முடிக்கிறேன் பார்” கையை சொடுக்கு போட்டார் சுந்தரி.

“அம்மா பயமா இருக்கு?” வர்ஷா குரல் நடுங்கியது.

“நமக்கு ஒண்ணு வேணும்னா அதுக்கு என்ன வேணா செய்யலாம் அது தப்பில்ல வர்ஷா.”

“போலீஸ் கேஸ்னு வந்தா?” அச்சத்துடன் வினவினாள்.

“எதையும் நடத்திக் காட்ட நம்மகிட்ட பணம் இருக்கு வர்ஷா” என மகளுக்கு தவறான விஷயத்தை உபதேசித்தார்.

காதல் தோல்வியில் துவண்டிருந்த வர்ஷாவின் மனதில் தாய் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கல்வெட்டில் செதுக்கியது போல மனதில் பதிந்தது. தவறு செய்யத் துணிந்தாள்.

ஆனால் நினைத்தது நடந்ததா???

பழைய நினைவிலிருந்து தன்னை கட்டுப்படுத்தியபடி “ இப்ப என்ன பண்ற துஷ்யந்த்?” என வர்ஷா ஸ்நேகமாக கேட்டாள்.

“ஹேவ் எ லுக்”என அவன் அறையின் ஒரு பக்கமாகக் கையைச் சுட்டிக் காண்பித்தான்.

கண் எதிரே உயிர் ஓவியமாய் வெண்பா தெரிந்தாள். பல வண்ணங்களைக் கொண்டு தன் கைவண்ணத்தால் வெண்பாவை வரைந்திருந்தான்.

அந்த அறை சற்று பெரியதாகவே நீண்டது. அதில் வெண்பா சிரித்தபடி, வெட்கத்துடன், சிறு கோபத்துடன் பல உணர்வுகளுடன் மலை, நீர்வீழ்ச்சி, மாளிகை, ஆறு எனப் பல இடங்களில் அழகே உருவாய் இருந்தாள்.

வர்ஷாவின் உயிரை உடலிலிருந்து அப்படியே யாரோ பிடித்து உருவுவது போல உணர்ந்தாள். அவளின் மொத்த சந்தோஷமும் வடிந்து வறட்சியானது.

மனக்குமுறலை மறைத்து “கிரேட்” என புருவத்தை உயர்த்தி பாராட்டினாள். தன் கட்டைவிரலில் தம்ஸ்அப் காட்டினாள்.

“இது உன் ஹாபியா? (hobby)” கேட்டவளிடம்

“நோ புள் டைம் ஜாப்” என்றான் அவன் முகத்தில் தெரிந்த வேதனை அவளிடமும் தொற்றிக் கொண்டது.

பேச்சை மாற்ற “நான், சிந்து பைரவி மூணு பேரும் கூர்க் போறோம் .. நீயும் வரியா?” ஆசையாகக் கேட்டாள்.

“இல்ல வர்ஷா என் வாழ்க்கை முடியும்வரை இந்த ரூம், என் வெண்பாவை விட்டு நான் எங்கேயும் வர மாட்டேன்” என்றான் தீர்க்கமாக

“கூர்க்ல இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் நிறைய இருக்கு. அதை நீ பார்த்தா அப்படி அழகான இடத்துல வெண்பா இருக்கும் மாதிரி வரையலாமே” என்றாள்.

எதைச் சொன்னால் வியாபாரம் நடக்கும் தன் பொருட்களை விற்கலாம் எனத் தெரிந்த வர்ஷாவிற்கு துஷ்யந்த் மனதை மாற்றுவது ஒரு பொருட்டே இல்லை.

துஷ்யந்த் கண்கள் அகல அவளைப் பார்த்தான். “இதுவரை வெண்பாவை மறந்து வாழ சொன்னவங்கதான் என்னைச் சுத்தி இருந்தாங்க. நீதான் முதல் ஆளா வெண்பாவை நல்லவிதமா சொன்னது. கண்டிப்பா உன்னோடு நான் கூர்க் வரேன்” என்றான் நெகிழ்ச்சியுடன்.

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தவள் துஷ்யந்தை நட்பாக அணைத்து விடுவித்தாள். “தேங்க்ஸ் எ லாட் துஷ்யந்த். இதை நீயே உன் அம்மா அப்பாகிட்ட சொல்லு” என்றாள்.

சட்டென அறையை விட்டு வெளிவர நினைத்தவன் நொடிப் பொழுதில் தயங்கி நின்றான்.

“என்ன?” அவள் கேட்க

ஒன்றுமில்லை எனத் தலையசைத்து அவளுடன் படிகளில் இறங்கினான்.

கீழிருந்த ஆறு கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தது. அழகான ஜோடி இறங்கி வருவதைப் பார்க்க மனதில் நிம்மதி அடைக்கலமானது.

“நீயே சொல்” என வர்ஷா ஜாடை செய்ய

“அப்பா நான் கூர்க் போகலாம்னு இருக்கேன்” என்றான் தயக்கத்துடன்

“தாராளமா போயிட்டு வா துஷ்யந்த்” எனக் கமலா அவசரப்பட்டார். அவர் மனம் துரிதமாக சில கணக்குகளை போட்டன.

மனைவியின் கணக்கைப் புரிந்து கொண்ட சபாபதி என்ன சொல்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் சில நொடிகள் தடுமாறினார்.

“தேங்க்ஸ் மாமா நீங்க நோ சொல்லல” என வர்ஷா அவர் மௌனத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டாள்.

இதற்குப் பிறகு பேச எதுவும் இல்லை என மாமா மௌனமாக இருந்தார். இரவு உணவை அனைவரும் சேர்ந்து உண்டனர்.

வர்ஷாவும் பைரவியும் லொட லொடவென பேசி சிரித்தபடி சாப்பிட்டனர். சில சமயங்களில் துஷ்யந்தை பேச்சில் இழுத்தாள். அவனும் சிரித்தபடி பதில் கொடுத்தான்.

எத்தனை காலத்திற்குப் பிறகு வீட்டில் எல்லோருமாய் சேர்ந்து அமர்ந்து மகிழ்ச்சியாக உணவு உண்பது. துஷ்யந்த் பெற்றோர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்க்க லாவகமாக மறைத்தனர்.

கமலா வர்ஷாவை தனியே அழைத்து “அவன் இன்னமும் வேளா வேளைக்கு மாத்திரை எடுக்கணும்” அதோடு அவனை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார்.

“அத்தை நீங்க கவலைப்படாதீங்க துஷ்யந்தை நான் கண்ணுக்குள்ள வெச்சி பாத்துப்பேன் இது சத்தியம்” என்றாள் வர்ஷா.

கூர்க் செல்லும் ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத் தானே வந்து துஷ்யந்தை அழைத்துச் செல்வதாக வர்ஷா கூறினாள்.

இறுதியில் மாபெரும் வெற்றி வாகையுடன் வர்ஷா அங்கிருந்து கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்தவள் போனில் மோகனிடம் அடுத்த இரண்டு தினங்களில் கூர்க் செல்வதைப் பற்றிக் கூறினாள். காபி எஸ்டேட் வாங்கிவிடுவேன் எனவும் பெருமையாகக் கூறினாள்.

மோகன் ”அந்த துஷ்யந்த மட்டும் கூர்க் டிரிப்ல வேண்டாம் வர்ஷா” என்றார் தன் மகளிடம்.



துளிகள் தெறிக்கும் …















 
  • Love
Reactions: Vathani and januma