துளி துளியாய் துரோகம் 8
வர்ஷா அடுத்த நாள் காலை தன் தந்தை மோகனை தங்களின் பிரதான பங்களாவில் சந்தித்தாள். முந்தைய நாள் இரவே வர்ஷா தந்தையிடம் நாம் சந்திக்க வேண்டும் எனக் கூறியிருந்தாள் . சிந்துவும் வர்ஷாவுடன்ச் சென்றாள்.
எந்த பங்களாவை ராகேஷ் அலங்கோலம் செய்தானோ அது இன்று புத்தம் புதிதாய் மிளிர்ந்தது. ஆடம்பரத்தின் உச்சமாகத் திகழ்ந்த பங்களாவின் உரிமையாளர்கள் யாரும் வசிக்கவில்லை. வெறும் பணியாளர்கள் மட்டுமே இருந்தனர்.
மோகன் கல்பனாவுடன் இன்னமும் ரெயின்போ பங்களாவில்தான் வசிக்கிறார். வர்ஷா தன் தோழிகளுடன் சுந்தரியின் பங்களாவில் இருக்கிறாள்.
இன்று தந்தை மகளும் இந்த பங்களாவில் சந்திக்கக் காரணம் தங்களின் உரையாடல் யாருக்கும் தெரியக் கூடாது என்பதுதான். இது தங்களின் குடும்ப விவகாரம் அதை யார் முன்னிலும் பேச அவர்களுக்கு விருப்பமில்லை. முன்பு தந்தையும் மகளும் ஓரே இடத்திலிருந்தனர். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை.
அலுவலகம் மருத்துவமனை போன்ற இடங்களில் தனி அறைகள் இருந்தாலும் கேள்விக் குறியோடு ஆயிரம் கண்கள் இருவரையும் மெய்க்கும். அவர்களின் முகபாவங்களைப் படிக்க முற்படுவர்.
ரெயின்போ பங்களாவில் கல்பனா காதை தீட்டியபடி இருப்பாள். அது வர்ஷாவிற்குப் பிடிக்காது.
சுந்தரியின் பங்களாவிற்கு வர மோகனுக்குத் தயக்கம். இப்படிப் பல காரணங்கள் இருந்ததால் தாங்கள் முன்பு வசித்த பங்களாவில் சந்திப்பை மேற்க் கொண்டனர்.
மோகன் எடுத்த எடுப்பில் “துஷ்யந்துக்கு எதோ ஹெல்த் பிராப்ளம் இருக்கு வர்ஷா .. கூர்க்ல உன்னால அவனை மேனேஜ் பண்றது கஷ்டம்” என்றார் கவலை தேய்ந்த குரலில்.
“அப்பா துஷ்யந்த் முன்ன மாதிரி இல்ல. நெளவ் ஹீ இஸ் டோட்டலி பைன்” நிதானமாகப் புரிய வைக்க முயன்றாள் வர்ஷா
“இல்ல வர்ஷா அவனுக்குக் காதல் தோல்வியால .. எதோ மனப்பிரச்சனையாம். துஷ்யந்த் மென்டலி டிஸ்டர்பிடா இருக்கான். இப்ப அவன் எதுக்கு எனக்கு ஒரு சாலிட் ரீசன் சொல்லு?” விடாப்பிடியாக மோகன்
”அப்பா துஷ்யந்த் நம்ம சொந்தம். அவன் மேல எனக்கு அக்காறை இல்லாம இருக்குமா?” என்று தெளிவான பதில் சொல்ல முடியாமல்ப் பிதற்றினாள்.
இதைப் பற்றி மேலும் பேச வர்ஷாவிற்கு விருப்பமில்லை ஆதலால் காபி எஸ்டேட் பற்றி தனக்கு இருந்த சந்தேகங்களைக் கேட்க தொடங்கினாள்.
அவ்விடத்தில் காபி எஸ்டேட் இன்றைய மார்க்கெட் நிலவரம். தான் கேட்க விரும்பும் தொகை என அனைத்தையும் விளக்கமாகப் பேசினாள்.
மோகனும் சில நுணுக்கங்களைக் கூறினார். அடுத்த ஒரு மணி நேரம் முழுவதும் வியாபார யுக்திகளைப் பற்றியே இருவரின் பேச்சும் இருந்தது.
பின்பு சிந்துவிடம் கூர்க் எடுத்துச் செல்ல வேண்டிய பத்திரங்கள் பற்றியும் மோகன் விளக்கினார். இதுவரை எத்தனையோ முறை வர்ஷாவும் சிந்துவும் சேர்ந்த இப்படியான அலுவலக வேலையைச் செய்துள்ளனர்.
ஆனால் மோகன் ஒவ்வொரு முறையும் இப்படி வகுப்பு எடுப்பார். வர்ஷா “எனக்கு எல்லாம் தெரியும்” என்று கூறாமல் அமைதியாகக் கேட்டுக் கொள்வாள். சிந்துவும் அவ்வாறே தன் தோழியை பின்பற்றுவாள்.
மூவரும் ஒன்றாகச் சேர்ந்து காலை உணவை உண்டனர்.
“வர்ஷா உனக்கு மாப்பிள்ளை பார்த்து வெச்சிருக்கேன். நீ கூர்க்ல இருந்து திரும்பியதும் மாப்பிள்ளை பையனுடைய தகவல்களை அனுப்புறேன் நீயே பார். உனக்குச் சீக்கிரமா கல்யாணம் முடிக்கணும்” என்றார்.
வர்ஷா சற்று மௌனம் காத்தாள். முகம் கோபத்தில் கனன்றது மனதிலோ “என்னிடம் கேட்டா கல்பனாவை கல்யாணம் செய்தீங்க?” எனக் கேட்கத் தோன்றியும் நாக்கை அடக்கி. பின்பு “எனக்கும் துஷ்யந்துக்கும் கல்யாணம் செய்து வெச்சிடுங்க” எனப் படக்கெனக் கூறிவிட்டாள்.
இதை எதிர்பார்த்த மோகனுக்கு எந்த அதிர்வும் இல்லை. “என்னோட இந்த பிசினஸ் சாம்ராஜ்யத்துக்கு ஒரு நல்ல வாரிசு வேணும் வர்ஷா. உனக்கு அப்புறம் இதை யார் காப்பாத்த போறாங்க. துஷ்யந்தால தகப்பன் ஆக முடியுமா? சொல்லு” நிதானமாகக் கேட்டார்.
”அப்பா அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல. கூர்க்ல இருந்து வந்ததும் இதைப் பத்தி பேசலாம்” என அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.
மோகன் இதற்கு மேல் அவளிடம் பேச எதுவும் இல்லை என விட்டுவிட்டார். குழப்ப மனநிலையில் காணப்பட்டவர் சுந்தரியைக் காண மருத்துவமனைக்குக் கிளம்பினார். ஒருசில மணி நேரம் சுந்தரியுடன் இருந்து அவளை நன்கு கவனித்துவிட்டு அலுவலகம் சென்றார்.
தனக்கு ஒன்றுக்கு மூன்று திருமணம் ஆனால் திருமண வயதில் இருக்கும் மகளுக்கு இன்னும் திருமணம் முடிக்கவில்லை என்ற குற்ற உணர்வு மோகனை வாட்டியது.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என தனக்குத் தானே சொல்லிச் சிரித்துக் கொண்டார்.
வர்ஷா தன் தந்தையின் மனதில் உள்ளதை நன்றாக அறிவாள். கூர்க் சென்று வந்தபின் துஷ்யந்தை திருமணம் செய்து கொள்ள முன்பே முடிவெடுத்திருந்தாள்.
ஆனால் யாரிடமும் பகிரவில்லை. துஷ்யந்துடன் சில நாட்கள் நட்பாக தனிமையில் பழக வேண்டும் பின்பு இங்கு வந்ததும் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
துஷ்யந்தை கவர அவள் எடுக்கப் போகும் அஸ்திரம் வெண்பா. அந்த மந்திரச் சொல்லை பயன்படுத்தி அவனை வீழ்த்தி திருமணம் செய்ய வேண்டும். அவன் வாரிசைச் சுமக்க வேண்டும் எனப் பல கற்பனைக் கோட்டைகளைக் கட்டியிருந்தாள்.
சுந்தரியின் உடல்நிலை மற்றும் தன் தந்தையின் திடீர் திருமணம் போன்றவைதான் அவளை இத்தனை நாள் தடுத்தது. இனி தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க வேண்டிய கட்டாய சூழலில் உள்ளாள் வர்ஷா.
மோகன் எந்த நொடியும் கல்பனா பக்கம் சாயலாம். சுந்தரி இருக்கும் நிலையில் இனி அவரால் தனக்கு உதவ முடியாது.
கூர்க் பயணம் மூலம் தான் நினைத்ததை முடிக்க எண்ணினாள்.
சிந்துவுடன் மற்ற அலுவலக வேலைகளைப் பேசிவிட்டு கூர்க் செல்ல ஏற்பாடுகளையும் செய்யத் தயாரானாள்.
பைரவியிடம் கூர்க் முன்னமே செல்ல கட்டளையிட்டாள். காபி எஸ்டேட் உரிமையாளரான நாராயணனிடம் அங்குள்ள மருத்துவ வசதிகளைப் பற்றி கேட்டு அவற்றை உறுதி செய்யவே பைரவியை அங்கு முதலில் அனுப்புகிறாள்.
துஷ்யந்த்திற்கு எந்த பிரச்சனையும் நேரக் கூடாது அப்படியே நேர்ந்தாலும் அவசர உதவிக்கு மருத்துவர்கள் தேவை என்பதால் இந்த ஏற்பாடு. இங்கிருந்து மருத்துவரை அழைத்துச் செல்லலாம் என எண்ணினாள். ஆனால் நம்பிக்கையாக யாரும் இல்லை. அதுவும் சிந்து பைரவி போல ரகசியத்தைக் காப்பாற்றும் ஆட்கள் கிடைக்கவில்லை.
அன்று மதியம் பைரவி கூர்க் கிளம்பினாள்.
*****
ராகேஷ் சீட்டியடித்தபடி நடந்து கொண்டிருந்தான். மோகன் சொல்லி விடுவிக்கப்பட்ட இடத்திலிருந்து கிளம்பியிருந்தான்.
அந்த ஏரியாவில் ஆட்கள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது.
தான் எங்கு உள்ளோம் என்றேத் தெரியவில்லை. இன்னமும் முழுமையாகப் போதை தெளியவில்லை. அவன் நண்பர்கள் சிட்டாகப் பறந்துவிட்டனர்.
அருகில் ஒரு கார் வந்து நின்றது அதிலிருந்து ஒருவன் “ப்ரோ இந்த விலாசம் எங்க இருக்கு?” என ராகேஷை கேட்டான். ராகேஷ் அந்த விலாசத்தைப் படிக்க முற்பட்டான். எழுத்துகள் தெளிவில்லாமல் மங்கலாகத் தெரிந்தன. அதை உற்று பார்த்த நொடிகள் கரைந்தன.
காரிலிருந்து மெல்ல இறங்கிய மற்றொருவன் ராகேஷ் பின்னாலிருந்து கைக்குட்டையை அவன் முகத்தில் வைக்க இரண்டு நொடிகளில் மயங்கினான்.
அவனை அப்படியே காரில் போட்டுக் கொண்டு கிளம்பினர். இரண்டு மணி நேரத்திற்குப் பின்பு அவனுக்கு நினைவு வந்தது.
ராகேஷ் அறை ஒன்றில் நாற்காலியில் அமர்த்தப்பட்டு அவன் கைகள் பின்னால் சேர்த்து கட்டப்பட்டிருந்தன. கால்களும் பிணைக்கப்பட்டிருந்தன. அறை முழுவதும் தேவையற்ற பொருட்கள் கிடந்தன. பல நாட்களாக பயன்படுத்தப்படாத அறை எனப் பார்த்த மாத்திரத்தில் புரிந்தது.
சுற்றிலும் மூன்று பேர் இருந்தனர். ராகேஷ் அனைத்தையும் கவனித்தான்.
அவன் முகத்தில் அதிர்ச்சியும் இல்லை கவலையும் இல்லை. “இது இன்னொரு சர்பிரைஸ் பார்ட்டியா?” எனக் கேட்டு சிரித்தான்.
“மாமா நீங்க வேற லெவல்” என வாய்விட்டு மோகனைப் பாராட்டினான்.
அவன் பேச்சு ஒன்றும் புரியாமல் மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
தங்கராசு “நம்ம ஆள்தான் பார்த்து பதமா நடந்துக்க” என்று சொன்னதால் வாயும் கண்ணும் கட்டவில்லை. இல்லை என்றால் இவர்களின் உபசாரம் வேறு விதமாக இருக்கும்.
“இங்க எத்தனை நாள் ஸ்டே?” என ராகேஷ் மூவரில் ஒருவனைப் பார்த்துக் கேட்டான்.
பின்பு “என் கூட வானா வரப்போறேன். இதுக்கு எதுக்கு டா மஞ்சப் பொடியை மூஞ்சியில் தடவினுங்க .. ஓ டிரெண்டிங்கா?” எனவும் கேட்டு வைத்தான்.
“என்ன முழிக்கிற மயக்க மருந்துதான் மஞ்சப் பொடி கோட் வேர்ட்.. இது கூடத் தெரியாதா? .. எங்க டிரைனிங் எடுத்த?” என விடாமல் பேசிக் கொண்டிருந்தான்.
அடுத்து ராகேஷ் “பாத்ரூம் போகணும்” என்றான்
தலைவன் மற்றொருவனுக்கு ஜாடை காட்ட அவன் சலிப்போடு கைகட்டுகளை அவிழ்த்தான்.
ராகேஷ “இது?” என கால்கட்டைக் காண்பிக்க
“அது அப்படியே இருக்கட்டும் வா” என அழைத்துச் சென்றான்.
ராகேஷ் கங்காருவைப் போல தாவித் தாவி சென்றான் “இதுவும் நல்லாதான் இருக்கு”
தலைவன் கடுப்பில் தலையில் அடித்துக் கொண்டு “மெண்டலா?”எனப் புலம்பினான். அருகில் இருந்தவனும் இதையே எண்ணினான்.
தலைவன் தங்கராசு எண்களை போனில் டையல் செய்தபடி அறைக்கு வெளியேச் சென்றான் “அண்ணே பைத்தியமா இது?. இவன் டார்சர் தாங்க முடியலை” என தங்கராசுவிடம் கேட்டான்
“டேய் டேய் அவன் தங்க முட்டை போடுற வாத்துடா” என இதற்கு முன் நடந்த நிகழ்வையும் அடுத்துச் செய்ய வேண்டியவற்றையும் கூறினான். பின்பு வாட்சப்பில் ஒரு புகைப்படத்தை அனுப்பினான்.
“சரி சரி” எனச் சுவாரஸ்யம் இல்லாமல் போனை அணைத்தான்.
தலைவன் அறைக்குள் வர “நான் எங்கேயும் ஓடிப் போக மாட்டேன் .. இதெல்லா எதுக்கு” எனப் பேசிக் கொண்டிருந்த ராகேஷ் கன்னத்தில் பளார் என அறைந்தான் கடுங்கோபத்துடன்.
அறைந்த வேகத்தில் கீழே விழுந்த ராகேஷ் மனதில் முதல் முறையாகச் சந்தேகம் கவ்வியது. ஆனாலும் தானும் ரௌடிதான் என்னும் மோடில் “ யார்டா நீங்க?”என ஆவேசமாகச் சீறினான்.
“மோகனுடைய ஆளுங்க .. உன்னைக் கொலை பண்ண கடத்திருக்கோம்”
“இப்ப என்ன ராகு காலமா? கடத்தின உடனே கொலை பண்ணாம இருக்க? இதிலேயே நீ பொய் சொல்றனு தெரியுது” என்றான் ராகேஷ்
கோமாளி போல இருந்தவன் இத்தனை லாஜிக்காகக் கேள்வி கேட்பான் என எதிர்பார்க்கவில்லை.
“மோகனும் வர்ஷாவும் உன்ன கடத்தச் சொன்னாங்க. அவங்க சொல்லும் போது கொலை பண்ணனும்” என்றான் தலைவன். தனக்கு அவ்வளவுதான் தெரியும் என்னும் போக்கில்.
வர்ஷா என்ற பெயர் ராகேசை தடுமாற வைத்தது. அவள் பழிவாங்க வாய்ப்புள்ளது என சிந்தித்தான். மோகனும் அன்று வர்ஷா பக்கம் தானே இருந்தான் என அன்றைய நிகழ்வை அசை போட்டான்.
இதை பார் என தலைவன் தன் செல்போனில் புகைப்படத்தைக் காண்பித்தான். கல்பனா இவனை போல கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தாள். அதைக் கண்டு அதிர்ந்தான் ராகேஷ்.
அவனுக்கு அது ஏஐ தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட போலி புகைப்படம் என தெரிய வாய்ப்பில்லை. மொத்தமாக மௌனமாகிவிட்டான். மற்ற மூவருக்கும் அப்பாடா என்றிருந்தது.
மீண்டும் அவனை நாற்காலியில் அமர்த்தி கைகளைக் கட்டினான் மற்றொருவன்.
அடுத்த ஒரு மணி நேரம் மௌனமாக கடந்தது.
“என்னைக் கொலை பண்ண எத்தனை பணம் தரேன்னு சொன்னாங்க?” ராகேஷ் கேட்டான்.
மூவரும் பேசவில்லை.
“அவங்க சொன்னதுக்கு மேல ஒரு கோடி நான் தரேன். வர்ஷா மோகன் ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளுங்க” என்றான் ராகேஷ்
மூவரிடமும் எந்த மாற்றமும் இல்லை.
“ரெண்டு கோடி”
”-----”
“மூணு”
”------”
“நாலு”
”------”
“ஐஞ்சு”
தலைவனிடம் சிறிய மாற்றம். அவன் கண்களிலும் மனதிலும் சஞ்சலம்.
தலைவன் ராகேஷ் அருகேச் சென்று மீண்டும் கைக்குட்டையை அவன் நாசியில் அழுத்த மூர்ச்சையடைந்தான் ராகேஷ்.
“என் தம்பி இன்னும் இருபத்திநாலு மணி நேரத்துல என் கண்ணு முன்ன வரலைனா .. நீங்க அவனைக் கொலை செய்திட்டதா போலீஸ்ல கம்பிளைட் கொடுத்திடுவேன். மீடியாலையும் சொல்லுவேன்” எனக் கல்பனா கண்ணீர் மல்க உதடு துடிக்க மிரட்டினாள்.
“அவனைக் கடத்தி சித்ரவதையா பண்ணேன்?. என் பொண்ணு பாதுகாப்புக்காக அவனை ரிசாட்ல தங்க வெச்சேன். இப்ப அவனை அனுப்பியாச்சு” மோகன் பதிலளித்தார் எரிச்சலுடன்.
“பொய் வர்ஷாக்காக என் தம்பியைக் கொலை பண்ணிட்டீங்க” என அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
அனைத்தும் தெரிந்தும் மீண்டும் மோகன் பாடிகாடிடம் போன் செய்து கேட்டார்.
”சார் ராகேஷ் அவனோட பிரெண்ட்ஸ் எல்லாரையும் நேத்து ராத்திரியே விட்டாச்சு” என்றான்.
“அங்க எங்கேயாவது ராகேஷ் போதையில் விழுந்து கிடக்கிறானா பாருங்க .. இன்னும் வீட்டுக்கு வரலை” மோகன் சொல்ல
“எஸ் சார்”
“அவனைத் தீவிரமா தேடிக் கண்டுப்பிடிங்க” மோகன் கட்டளையிட்டார்.
“எங்கப் போய் தொலைந்தான்?” என மோகன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்.
கல்பனா நொடிக்கு நொடி தேள் கொட்டுவதைப் போல மோகனை மிரட்டிக் கொண்டிருந்தாள்.
துளிகள் தெறிக்கும் …