துளி துளியாய் துரோகம் 9
வர்ஷா மற்றும் சிந்து தங்கள் வசிப்பிடமான சுந்தரி பங்களாவிற்கு வந்துவிட்டார்கள். இருவரும் சேர்ந்து உணவு உண்டனர். பைரவி கூர்க் கிளம்பிவிட்டதால் சிந்து மிகவும் தனிமையாக உணர்ந்தாள்.மோகன் அலுவலகத்தில் அனைத்தையும் கவனித்துக் கொள்வார் என்று வர்ஷா அறிவாள். அடுத்தடுத்த காபி எஸ்டேட் தொடர்பான வேலையில் மூழ்கியிருந்த வர்ஷா அலுவலகம் செல்லவில்லை.
பின்னர் வர்ஷா சிறிது நேரம் ஓய்வெடுக்க முனைந்தாள். உள்ளம் ஏனோ ஒரு நிலையில் இல்லாமல் குழம்பி இருந்தது.
தன் தந்தை துஷ்யந்தைப் பற்றிப் பேசியது நெருஞ்சி முள்ளாகக் குத்தியது. அவர் கூறியதை மறக்க முயன்றாள் ஆனால் மனம் சொன்னதைக் கேட்காமல் அடம்பிடித்தது.
துஷ்யந்தைப் பார்த்துப் பேச வேண்டும் போல இருந்தது. அவன் தோளில் சாய்ந்து ஆறுதல் பெற நினைத்த மனதைக் கட்டுப்படுத்தினாள். கைக்கு எட்டும் தொலைவில் காதலன் இருக்கிறான். ஆனால் காதல் கதை பேசவோ சிரித்து மகிழவோ முடியாது என்பதை நினைக்க மனம் கனத்தது.
எண்ணங்களைத் திசைதிருப்ப கூர்க் எடுத்துச் செல்ல வேண்டிய தன் உடைமைகளைத் தேர்வு செய்யத் தொடங்கினாள். அப்போது சில புகைப்படங்கள் கையில் தட்டுப்பட்டது. அது தாங்கள் படித்த கல்லூரி ஆண்டு விழாவில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் கல்லூரியில் கோவாவிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களும் இருந்தன.
அவற்றை எடுத்து வைத்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள். ஒவ்வொரு புகைப்படத்தையும் உற்று நோக்கியபடி இருந்தாள். கடந்த காலத்தை எண்ணியவள் உதட்டில் புன்னகை அரும்பியது.
இளமை துள்ளலுடன் பலர் புன்னகைத்துக் கொண்டிருந்தாலும் வர்ஷா கண்கள் என்னவோ சில புகைப்படங்களில் வெண்பாவும் துஷ்யந்தும் கைகளைக் கோர்த்தபடி நின்றிருப்பது .. இருவரும் அருகே அருகே அமர்ந்தபடி பேசுவது போன்றவற்றில் தான் நிலைத்து நின்றன. இருவரும் சுற்றியிருப்பவரை மறந்து தங்கள் உலகில் இன்பமாய் சஞ்சரிப்பதைக் காண்கையில் சற்றே நெருடலாக இருந்தது.
அவளுக்கு தன்னையும் அறியாமல் ஏக்கம் கோபம் ஒருவித இயலாமை எனப் பல உணர்வுகள்ப் பொங்கி எழுந்தன. தன்னிடம் இத்தனை சொத்து, அழகு, அறிவு என அனைத்தும் இருந்தும் ஏன் துஷ்யந்த் தன்னை நேசிக்கவில்லை.
வெண்பா அழகு, நிறம், அந்தஸ்து என அனைத்திலும் வர்ஷாவை விட ஒரு படிக் கீழே இருக்கிறாள். இருப்பினும் ஏன் தன்னால் துஷ்யந்தை கவர முடியவில்லை.
தான் எந்த இடத்தில் வெண்பாவிடம் தோற்றோம் என சிந்தித்தபடி இருந்தாள். வெண்பாவை இந்த உலகத்திலிருந்தே அனுப்பியாகிவிட்டது. ஆனால் இன்னமும் அவளின் தாக்கம் ஆட்சி செய்கிறது என்பதை வர்ஷாவால் ஏற்கவே முடியவில்லை.
துஷ்யந்த வெண்பாவை ஏன் மறக்கவில்லை? என்ன மாயம் செய்தாள் அந்த வெண்பா?
சிந்து சில காகிதங்களைக் கையில் சரிபார்த்தபடி வர்ஷா அருகில் வந்து “வர்ஷா காபி எஸ்டேட்க்கு தேவையான பேப்பர்ஸ் தயாரா இருக்கு.” என அவளிடம் நீட்டினாள்.
வர்ஷா அவற்றை வாங்கிப் பார்த்தாள் எதுவும் கருத்தில் பதியவில்லை இருந்தாலும் “எல்லா சரியா இருக்கு சிந்து” என அவற்றை திருப்பிக் கொடுத்தாள்.
சிந்து காகிதங்களை வாங்கியபடி “நாம இங்கேயிருந்து பிரைவேட் ஜெட்ல கூர்க் நேரடியா போயிடுவோம். அங்க ஏர்போர்ட் இல்லை. ஒரு கூர்க் ரிசார்ட்ல ஹெலிபேட் இருக்கு. அவங்ககிட்ட பெர்மிஷன் வாங்கியாச்சு. எல்லா லீகல் வொர்க் முடிச்சிட்டேன்”
“ஓ.கே. .. பைரவி கூர்க் ரீச் ஆகிட்டாளா?”
“பைரவி சென்னையிலிருந்து பெங்களூர் பிளைட்ல போனாள். பெங்களூர் டூ கூர்க் கார். பைரவி போனதும் மெசேஜ் செய்வா. நாளைக்கு காலையில் டாக்டரை பார்க்க போவதா பிளான்” என அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினாள்.
“குட்”
சிந்து கண்கள் புகைப்படத்தைத் தழுவின பின்பு தயக்கத்துடன் “ வர்ஷா நான் கொஞ்சம் பேசணும்” என்றாள்.
“சொல்லு சிந்து என்ன தயக்கம்?” எனச் சிந்து கையை பிடித்து தன் அருகில் இருந்த வேறொரு நாற்காலியில் அமர்த்தினாள்.
“நிச்சயமா நான் சொல்லப் போற விஷயம் உனக்கு பிடிக்காமல் போகலாம். ஆனா நான் உனக்கு நல்ல வாழ்க்கை அமையணும் ஆசைப் படறேன். துஷ்யந்த்தை நீ கல்யாணம் செய்தா … நீ வர்ஷாவா இல்லாமா வெண்பாவா துஷ்யந்துக்கு கண்ணுக்கு தெரிவனு எனக்கு தோனுது ”
“அப்போ வர்ஷா நிலைமை என்ன? நீயே உன்னை மறந்து மறைக்கணும். எந்த முடிவா இருந்தாலும் நல்லா யோசிச்சி செய். நீ உன் வாழ்க்கையில் சந்தோஷமா இருக்கணும் இது மட்டும்தான் என் ஆசை” என்றாள் மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.
“தேங்க்ஸ் சிந்து இது ஒரு கஷ்டமான தருணம். இந்த வர்ஷாவை துஷ்யந்த் காதலிக்கல என்ன செய்ய?” விரக்திப் புன்னகையைச் சிந்தியவள் ”வெண்பா செத்தும் இன்னும் என் காதலுக்குத் தடையா இருக்கா பாரேன்” எனச் சொல்கையில் கண்ணீர் எட்டிப் பார்த்து நுனி மூக்கு சிவந்தது.
சிந்து அருகில் அமர்ந்து வர்ஷா கண்களை ஆராய்ச்சி பார்வையுடன்ப் பார்த்தவள் “கண்டிப்பா துஷ்யந்த் உன் வாழ்க்கைக்கு வேணுமா? நீ இன்னும் காதலிக்கிறயா?”
“ஆமா என்னால அவனைத் தவிர யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது சிந்து” வர்ஷா மனக்குமுறலுடன் பதிலளித்தாள்.
பெருமூச்சுடன் “ஆல் தி பெஸ்ட்” என்றபடி சிந்து சென்றுவிட்டாள்.
வர்ஷா மனதில் அன்று வெண்பா சொன்னதுதான் சட்டென நினைவிற்கு வந்தது “நீ என்ன செஞ்சாலும் துஷ்யந்த் மனசில் இருந்தது .. இருக்கப்போவது வெண்பா வெண்பா வெண்பா மட்டும் தான். அவன் மனசில் என்னைத் தவிர யாருமே இல்லை” எனக் கரகரப்பான அழுகை குரல் வெடிக்க வெண்பா கூறியது அப்படியே தெளிவாக நினைவிருந்தது.
பதிலுக்குச் சீற்றத்துடன் “துஷ்யந்தை நான் கல்யாணம் செஞ்சி காட்றேன்” எனச் சவால் விட்டாள் வர்ஷா.
அதற்கு பெரியதாக நகைத்த வெண்பா “நீ கல்யாணம் செய்யலாம் ஆனா அவன் உன்னை வெண்பாவாகத்தான் பார்ப்பான். வர்ஷா நீர்த்துக் காணாமல் போவாள்” என்ற நொடி வர்ஷா அவள் கன்னத்தில் மாறி மாறி ஆத்திரம் தீர அரைந்தாள்.
வெண்பாவின் இரு கைகளையும் சுந்தரியின் அடியாட்கள் அழுத்தமாகப் பிடித்திருந்தனர். வெண்பாவிற்கு உடல் வலியுடன் உள்ளமும் வலித்தது. வலியால் துவண்டு மயங்கிச் சரிந்தாள்.
அன்றுதான் வர்ஷா தனக்கு தானே சங்கல்பம் செய்து கொண்டாள். தன் வாழ்க்கையில் துஷ்யந்தை திருமணம் செய்தே தீருவேன் என்று.
இப்போதும் துஷ்யந்த் மேல் காதல் உள்ளதா? எனத் தன்னை தானே கேட்டுக் கொண்டாள். அதற்குச் சரியான பதில் இல்லை.
இந்த திருமணம் காதலுக்கா? அல்லது சவாலில் ஜெயிக்கவா?
எனில் உண்மையான காதல் எங்கே? எனக் குழம்பினாள்.
ஒரு நொடி வர்ஷாவிற்கு அனைத்தையும் தூக்கி எரிந்துவிட்டு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடலாமா? என்று கூடத் தோன்றியது.
ஆனால் வெண்பாவுடனான சவாலில் தோல்வி அடைய வேண்டிவரும் என மனசாட்சி குற்றம் சாற்றியது. வெண்பாவே உயிரோடு இல்லை. இனி வெற்றி என்ன? தோல்வி என்ன? என அதற்கும் பதில் எங்கிருந்தோ வந்தது.
“இல்லை இல்லை தான் போகும் பாதை தான் சரி” என தனக்குள் உத்வேகத்தை வரவழைத்துக் கொண்டாள். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது. இனி வேறு எதையும் சிந்திக்கக் கூடாது என்ற அந்த புகைப்படங்களை வைத்துவிட்டு தன் ஆடைகளைத் தேர்வு செய்தாள்.
அடுத்து கூர்க் பயணத்திற்கான மற்ற ஏற்பாடுகளைச் சரியாக உள்ளனாவா என ஆராய்ந்தாள். அலுவலகத்தில் தான் இல்லாத நாட்களில் பணியாளர்கள் முடிக்க வேண்டியவற்றை இமெயில் அனுப்பினாள்.
தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தாள்.
நடுநிசி இரவு ஒரு மணி ராகேஷ் இன்னமும் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தான். மற்ற மூவரும் வெகு நேரம் சீட்டு விளையாடியபடி மது அருந்தினர். இப்போது மூவரும் மட்டையாயிருந்தனர்.
ராகேஷ் ஒற்றை கண்ணைத் திறந்து மெல்ல உடலை அசைத்தான். மூவரும் அவன் செயலால் கவரப்பட்டு எழவில்லை. மூவரும் மது அருந்தியதால் உறக்கமா? மயக்கமா? எனத் தெரியாத நிலையில் இருந்தனர்.
தலைவன் மயக்கமருந்தை ராகேஷ் நாசி அருகே கொண்டு வருகையில் அவன் மூச்சை இழுத்து பிடித்துச் சுவாசிக்கவில்லை. ஆனால் மூர்ச்சையானதை போல நடித்தான்.
இப்படிப் பல தருணங்களை அவன் சந்தித்து இருந்ததால் சூழ்நிலையைச் சமாளிப்பது பெரிய காரியமில்லை.
கள்ளத்தனமாக லாரியில் பல பயணங்களை மேற்கொண்டுள்ளான். அதனால் இது ஒரு விஷயமே இல்லை.
ராகேஷ் அப்பொழுதே பாத்ரூமினுள் எதிர்பாரா விதமாகக் கண்ட கண்ணாடி துண்டை தன் பின் பக்க கால்சட்டை பேக்கெட்டில் போட்டுக் கொண்டான். அதை அவனுடன் பாத்ரூம் அருகே நின்ற மற்றொருவன் கவனிக்கவில்லை.
தலைவன் ராகேஷை மயக்கமடையச் செய்தான். அவன் மயக்கமாக உள்ளான் என நினைத்த மற்ற மூவரும் இவன் பக்கமே திரும்பவில்லை. பாவம் ஆஸ்கர் அவார்ட் வாங்க வேண்டியவன் ராகேஷ்.
அவர்களைத் திசை திருப்பவே ராகேஷ் அத்தனை பேச்சும் கேள்விகளும் கேட்டான்.
இத்தனை நேரம் மயக்கமாக இருப்பது போல நடித்து கையை கட்டியிருந்த கயிற்றை கண்ணாடித் துண்டைக் கொண்டு அறுத்துவிட்டான். நிதானமாக தன் கால் கட்டையும் அவிழ்த்தான்.
தலைவன் மயக்க மருந்து கலந்த கைக்குட்டையை வெளியே அலட்சியமாக வைத்திருந்தான். ராகேஷ் மெல்ல அதை எடுத்து ஒவ்வொருவராக மூவர் நாசியிலும் வைத்து அழுத்தி மேலும் மயக்கமடையச் செய்து அங்கிருந்து லாவகமாகத் தப்பித்தான்.
மூவரின் செல்போன், கைக்கடிகாரம் மற்றும் அவர்களிடமிருந்த சொற்ப பணம் எனச் சிக்கிய அனைத்தையும் லவட்டினான். அதோடு அவர்கள் வைத்திருந்த சிகரெட், பீடி மற்றும் தீப்பெட்டி என அனைத்தையும் எடுத்துக் கொண்டான். ராகேஷின் செல்போன் தலைவன் சட்டை பாக்கெட்டில் இருந்தது. அதையும் எடுத்தான். மது பாட்டிலில் சிறிது மது மீதமிருந்தது அதை கடகடவென குடித்தான்.
அறைக்கு வெளியே வந்தவன் அறைக் கதவைச் சாற்றி. கதவின் தாழ்ப்பாளில் அருகிலிருந்த பெரிய தடியை எடுத்துச் சொருகி வைத்தான். அது வெகு நாட்களாக யாரும் பயன்படுத்தாத வீடு போல இருந்தது.
“மவனே நீங்க எப்படி வெளில வரீங்கன்னு பாக்குறேன்டா” எனக் கருவக் கொண்டான். மூவரின் செல்போனையும் ஆப் செய்தான்.
அடுத்து அங்கிருந்து வேகமாக வெளியேறினான். இருட்டில் எங்குப் போவதென்றேத் தெரியவில்லை.
ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டே இருந்தான். அப்போது ஒரு ஆட்டோ எதிர்ப்பட்டது.
“சார் எங்க போவணும்” ஆட்டோகாரன் கேட்டான்.
அதில் ஏறுவதா வேண்டாமா என்ற குழப்பம்.
“இது எந்த ஏரியா? … இருட்டுல வழித் தெரியாம வந்துட்டேன்” என்றான் வேண்டுமென்றே ராகேஷ்
ஆட்டோக்காரன் “வில்லிவாக்கம்” என்றான்.
வேளச்சேரியில் ராகேஷிற்கு நம்பகமான ஆள் இருக்கிறான். ஆனால் அந்த இடத்திற்கு போய் இறங்காமல் சற்று முன்னால் ஒரு இடத்தை குறிப்பிட்டான்.
“ஐநூறு ஆகும் சார்” ஆட்டோகாரன் சொல்ல
லவுட்டிய பணம் அதிகமாகவே இருந்ததால் “சரி” என ஏறிக் கொண்டான்.
ஆட்டோவும் அமைதியான இரவு வேளையில் தட தட தட வென சத்தத்துடன் சென்றது.
பின்பு தன்னை கடத்திய தலைவனின் போனை ஆன் செய்து அவன் யாரிடம் பேசியுள்ளான் எனப் பார்த்தான். தங்கராசு எண்ணை பார்க்கச் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவன் தான் வாட்சப்பில் கல்பனா கை கால் கட்டப்பட்ட புகைப்படத்தை அனுப்பியிருந்ததையும் பார்த்தான்.
பின்பு நிதானமாக சிந்திக்க மோகன் வர்ஷா இருவருக்கும் தங்கராசுவைத் தெரிய வாய்ப்பில்லை. தங்கராசு மிகப் பெரிய ஆட்களோடு சங்காதம் வைக்க மாட்டான்.
மோகன் நினைத்தால் இவனைவிடப் பெரிய தாதாகளை விலைக்கு வாங்க முடியும். அப்படியெனில் இது கல்பனாவின் வேலையாக இருக்குமா? எனச் சந்தேகம் எழுந்தது. கல்பனாவும் தங்கராசுவும் மிகவும் நெருக்கம். ஆதலால் கல்பனாதான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.
அவள் செய்யக் கூடியவள் தான். மோகன் ஆட்கள் துன்புறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் அனுப்பியும் விட்டார்கள். அவர்களுக்குத் தான் தேவை இல்லை. அப்போது கல்பனாதான் தன்னை கடத்தியிருக்க வேண்டும் எனப் பலவாறு சிந்தித்தான்.
அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களில் தான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி அங்கிருந்து நண்பன் வீட்டிற்கு நடந்தேச் சென்றான்.
நண்பனுக்கு போன் மூலம் தகவல் சொல்லிவிட்டான். இது யாருடைய விளையாட்டு என அறிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான். ஆனால் மிகவும் களைப்பாக இருந்தால் எல்லா போனையும் ஆப் செய்துவிட்டு இன்னும் கொஞ்சம் சரக்கை வயிற்றில் நிரப்பி நன்றாக உறங்கிவிட்டான்.
அடுத்த நாள் காலை ஒன்பது மணியளவில் தலைவன் மெல்லக் கண்விழித்தான். தலை விண் என்று வலித்தது. மற்ற இருவரும் எழவில்லை. திரும்பிப் பார்க்க ராகேஷ் நாற்காலியில் இல்லை.
அதிர்ந்தவன் தன் கூட்டாளிகளை எழுப்பினான். அவர்கள் சோம்ல் முறித்தபடி நெளிந்தனர்.
தலைவன் “டேய் அவன் எஸ் ஆகிட்டான்” எனக் கத்தவும் தான். மற்ற இருவரும் தங்கள் நிலையை உணர்ந்து விக்கித்தனர்.
“அண்ணே போன் காசு எதுவும் காணலை” என தன் சட்டை பாக்கெட்டை தடவி விஞ்ஞான கண்டுபிடிப்பை அறிவித்தான் மற்றொருவன்.
மூவரும் கலவரமானார்கள் கதவைத் திறக்க முற்பட அது வெளி பக்கம் மூடப்பட்டுள்ளது புரிந்தது.
“இப்ப என்ன செய்ய?” எனத் தலைவனை அச்சத்துடன் ஒருவன் கேட்க
“உன் மூஞ்சி ஏண்டா ராத்திரி சரக்கு அடிச்ச?” தலைவன் கோபத்தில் கொந்தளித்தான்.
தலைவன் கோபத்தை மடைமாற்ற “அண்ணே கட்டிப் போட்டவன் எப்படி தப்பிச்சான்?” பதில் கேள்வி கேட்டான்.
கீழே கிடந்த கண்ணாடி துண்டு “யாமே காரணம் எனச் சொல்லி எள்ளி நகைத்தது”
“ஐயோ இப்ப தங்கராசுக்கு என்ன பதில் சொல்ல?” தலைவன் தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டான்.
அதே சமயம் தங்கராசுவிடம் போனில் “ ராகேஷை முடிச்சிடு தங்கராசு” என்றாள் கல்பனா.
ராகேஷின் மரணத்தை வைத்து சதுரங்கம் ஆட திட்டமிட்டாள். மோகன் இனி ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்கக் கூடாது எனத் தோன்றவும் வன்மமாகப் புன்னகைத்தாள்.
துளிகள் தெறிக்கும் …