• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேடல் 1

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
ரகசியத் தேடல்

தகித்திடச் செய்யும் நினைவுகளை விலக்கிட நினைத்து,
என் மனம் செய்த சதியை விந்தை செய்து விரட்டிட நினைக்கையில் ஏனோ மரணம் மேலென்று தோன்றுகிறது..
என்னவளுக்கான என் தேடலும் தொடர்கிறது..


திரைச்சீலையைத் தாண்டி வந்த மெல்லிய சூரியக் கதிரின் ஒளி பட்டு கண்களை சுருக்கியவள் வழக்கம் போல விரலால் அருகில் இருந்த தொலைபேசியை தட்டி இன்றைய வெப்பநிலையைப் பார்க்க சலிப்பானது.

முப்பது பாகை செல்சியஸ்.

போர்வையை விலக்கி விட்டு திரும்பியவளுக்கு இவ்வளவு நேரமும் இருந்த எரிச்சல் நீங்கி உதட்டில் ஓர் கீற்றுப் புன்னகை.

ஐந்து வயதேயான குழந்தை.
அப்படியே அவள் கணவனைப் போல முகஜாடை என்று நினைத்த மாத்திரமே நெஞ்சில் ஊசி தைத்தாற் போன்ற வலி. தன்னை அழுத்தும் பாரத்தில் இருந்து தப்பிக்க கடந்த ஐந்து வருடங்களாக போராடுகிறாள். பயன் என்னவோ பூச்சியம் தான்.

இனியும் வாழ்க்கையில் பிடித்தமும் நம்பிக்கையும் இல்லை என்ற விரக்தி நிலைக்கு வந்து விட்டாள்.

தான் உயிருடன் வாழ வேண்டுமா..? என்ற ஏடாகூடமான எண்ணம் வந்தாலும் சாகும் அளவுக்கு அவளொன்றும் கோழை இல்லை.

யாருக்காக இல்லாவிட்டாலும் இதோ தான் பத்து மாதங்கள் கருவில் சுமந்தெடுத்த பிள்ளைக்காக சரி உயிர் வாழ வேண்டுமே..!
அவளுக்கென்றிருக்கும் ஓர் உறவு...!

தன்னைப் போலவே அழுத்தத்துடன் இருக்கும் தன் மகனைப் பார்க்கும் போதெல்லாம் கண்கள் தானாக கலங்கி விடும்.

அவளும் அப்படித் தானே, தன் ஆசைகள் ஆர்வத்தைக் கூட வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள்.

ஏன் மற்றவர்களுக்காக சிரிக்க வேண்டும்? என்ற கோட்பாடு உடையவள். அதனால் எப்போதும் அவளில் ஓர் அழுத்தம் இருக்கும்.
அதற்கு இந்த உலகம் வைத்த பெயர் திமிர்...

தன் மகனின் களைந்திருந்த கேசத்தை தடவி விட்டவளுக்கு என்றும் போல மனதில் எழும் கேள்வி,
"உன்னப் பார்க்க கூட உன் அப்பா வரலயே கண்ணா...?"

அவளுக்குமே அதற்கான விடை தெரியும். இப்படி ஒரு மகன் தனக்கிருப்பது கூட அவளவனுக்கு தெரியாதல்லா.. தெரிந்தாலும் அவன் அதனை பொருட்படுத்தப் போவதில்லை என்பது வேறு கதை.

அவனுடன் அவள் வாழ்ந்தது மூன்றே மூன்று மாதங்கள் தான். அந்த குறுகிய காலத்தில் தான் எத்தனை எத்தனை அனுபவங்களும் வலிகளும்.. நினைக்கையில் இப்போதெல்லாம் பெருமூச்சு மட்டுமே வந்தது...!!

அன்று சனிக்கிழமை என்பதால் மகனிற்கு பள்ளிக் கூடம் இருக்கவில்லை.

அதனால் அவனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அவனை எழுப்ப மனமில்லாமல் அந்தப் பிஞ்சின் கன்னத்தில் முத்தம் வைத்தவளுக்கு இன்னும் அவனில் பால் மணம் மாறாமல் இருப்பது போல் ஓர் விம்பம்.

பின் நேரத்தைப் பார்த்தவள் அவனின் தூக்கம் கலையாதவாறு எழுந்து சென்றாள்.

முழு வீட்டு வேலைகளையும் அவளே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். அவளுக்கு அது பழகியும் போய் விட்டது.

குளித்து முடித்து விட்டு வந்தவள் ஒவ்வொன்றாக தன் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டாள்.

மகன் எழுந்தால் முதலில் பால் காய்ச்சிக் கொடுக்க வேண்டும். அது அவன் வழக்கம்..

இயந்திர கதியாக தன் வேலையை செய்து கொண்டிருந்தவளை "ம்மா..." என்ற குரல் கலைத்திருந்தது.

"அடடே கண்ணா எழுந்திருச்சிட்டீங்களா...?" என்றவாறு திரும்ப அங்கே அவளின் மகன் கண்களை கசக்கிவாறு நின்றிருந்தான்.

அருகில் போய் அவனைத் தூக்க அப்படியே தாயின் கழுத்தைச் சுற்றி கட்டிக் கொண்டவன் அயர்ச்சியில் தோள் சாய, அவளிற்கு அப்படியே உருகிற்று...

"யாது குட்டிக்கு அம்மா இன்னைக்கு என்ன செஞ்சிருக்கிறேன் தெரியுமா...?" என்றவாறு அவனுக்காக செய்து வைத்திருந்த உணவை காட்ட நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் பளிச்சிட்டன.

"ம்மா கேசரி...." என்றவன் அதனை எடுக்க எத்தணிக்க "நோ..நோ..மொதல்ல குளிப்பிங்கலாம்..அப்பறம் அம்மாவும் யாதுவும் சாப்பிடுவோமா..." என்றவள் மகனைப் பார்க்க அவனும் சமத்துப் பிள்ளையாக "ஓகேம்மா..." என்றவாறு இறங்கி ஓட அவளும் அவன் பின்னே சென்றாள்.

அரைமணி நேரம் கழித்து அம்மாவும் மகனும் டைனிங் டேபிள் அருகில் வர, அவளே மகனைத் தூக்கி கதிரையில் அமர வைத்தாள். அதில் தாயை பார்த்து சிரித்த குழந்தையின் தலையை தடவி விட்டவள் முதலில் பாலை அருந்தக் கொடுக்க அச்சாப்பிள்ளையாக அருந்தியவனுக்கு பிடித்த கேசரியை தட்டில் வைத்துத் தர, ஒரு கவலத்தை எடுத்தவன் "ம்ம் யம்மி யம்மி.." குதூகலமானான்.

இவர்களின் அரட்டை, சிரிப்பு, பேச்சு வார்த்தை.. எல்லாம் இந்த நான்கு சுவர்களுக்குள் தான். வெளியில் இருவருமே மௌனிகள் தான்.

மகனை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளை கவனித்த யாதவ் அவளுக்கும் ஒரு கவலத்தை நீட்ட, வழமை போல சிரித்துக் கொண்டே வாங்கியவள் தானும் அவனுடன் இருந்து சாப்பிட்டு முடித்தாள்.

அப்படியே மீதிப் பாத்திரங்களையும் உணவையும் கிட்சனுக்குள் எடுத்து சென்றவளின் பின்னே சென்றவன் "ம்மா இன்னைக்கு எங்க போறோம்...?" என்றவனின் கேள்வியே வழமையாக வாரக் கடைசியில் இவர்கள் அதிகம் வெளியிலே தான் நேரத்தை செலவழிப்பது என்பதை பறை சாற்றியது.

"யாது குட்டி எங்க சொல்லுறிங்களோ அங்கேயே போகலாம்..." என்றவள் சமையல் பாத்திரங்களைத் தேய்க்க அருகில் ஸ்டூலொன்றைப் போட்டு அவள் உயரத்திற்கு ஏறி நின்ற மகனிடம் "பார்த்து யாது..." என அவள் கண்டிக்கவும் தவறவில்லை.

அவனுக்கு அது ஒன்றும் பெரிதல்ல போலும். அவன் சிந்தனை முழுக்க எங்கே செல்லுவோம் என்பதிலே சுற்றி வந்து கொண்டிருந்தது..

"ம்மா சித்து வீட்டுக்கு போவோமா...?" என்றவனிடமிருந்து இது தான் வெளிவரும் என்று தெரிந்திருந்தவளும் மெல்ல நகைத்து தலையாட்ட "ஐஐஐ ஜாலி ஜாலி..." என தாயின் கன்னத்தை எச்சில் பண்ணி விட்டே பறந்து விட்டான்.

இவர்கள் இருப்பதோ சிங்கப்பூரில் ஜூரோங் ஈஸ்டில். எல்லாம் இவளின் திட்டப்படி துரித கதியிலேயே நடந்தது.

உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இடங்களில் ஒன்றான சிங்கப்பூர் ஓர் உலகளாவிய நிதி மையம்.

"இன்ஸ்டன்ட் ஆசியா" என்றழைக்கப்படுகின்ற சிங்கப்பூரிலோ உலகின் அனைத்து பகுதிகளிலுமிருந்தும் மக்கள் குடியேறியிருக்க, ஆசிய கலாச்சாரங்கள் மொத்தத்தையும் இங்கே காணக் கூடியதாக இருக்கும்.

மேலும் வேல்ட் க்ளாஸ், சிட்டி விமான நிலையமும் அங்கே தான் அமைந்துள்ளது. அத்துடன் ஆடம்பரமான ஏர் கண்டிஷனிங் கொண்ட மால்கள் தரம் வாய்ந்த பொருட்களை விற்கவென பரந்தளவில் வியாபித்து காணப்படுகின்றன.

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜூரோங் ஈஸ்ட் சிங்கப்பூரின் வினோதமான சுற்றுப்புறம். இது சில அற்புதமான சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்ற இடமும் கூட. பொழுதுபோக்கிற்கென எக்கச்சக்க இடங்கள் அற்புதமாக அமையப்பெற்ற இடம் தான் இந்த சிங்கப்பூர்.

முதலில் தன் மனநிலையையும் உடல்நிலையையும் கருத்திற் கொண்டு வெளிநாடு சென்றே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தவள் நண்பி ஒருத்தி மூலமே சிங்கப்பூரின் இந்த இடத்தைப் பற்றி அறிந்து கொண்டாள். அன்றிருந்த மனநிலையில் எதையும் சிந்திக்காது தனியொருத்தியாக வந்த பின்னே இந்தச் சூழல் அவளை கவர்ந்திருந்தது.

எப்படியும் இனி தனியாகத் தானே காலத்தை தள்ள வேண்டும் என்ற விரக்தியில் வந்தவளை மாற்றியது இந்த சூழல் எனலாம்.

இரண்டு வருடங்களாக தனிமையில் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தவள் மகனின் பிறப்பிற்குப் பின்னர் அவனுக்காக தன்னை மீட்டெடுத்துக் கொண்டாள்.

இந்தியர்கள் ஓர் சிலரே அந்தப் பகுதியில் வசிக்கின்றர். அப்படி ஒரு நாள் பார்க் சென்று வந்து கொண்டிருந்தவளுக்கு பழக்கமானவன் தான் இந்த சித்து என்ற சித்தார்த் வர்மன்.

வயது நான்கை நெருங்கிக் கொண்டிருந்த குட்டி யாதவ்வை விளையாட விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை தொடர்ந்தது அவன் பார்வை.

டஸ்டி பிங் கலரில் கரண்டை வரையான சாதாரண மிடி ட்ரெஸ்ஸில் நின்றிருந்தவள் பார்க்க அத்தனை வனப்பாக இருந்தாள். ஒரு குழந்தைக்கு தாய் என்றால் நம்புவோர் இல்லை..

விடுமுறை நாளென்றால் தன் தாயுடன் இங்கே வந்து விடுவான். அவனுக்கென்றிருக்கும் ஒரு உறவு அவர். தந்தை இரண்டு வருடங்களிற்கு முன் தவறி இருக்க தாயின் மனநிலையை மாற்ற எங்கேயாவது அழைத்து செல்வதுண்டு.

இன்று இங்கே வந்திருக்க மகனின் பார்வை சென்ற திக்கில் பார்த்தவருக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

"என்னப்பா அப்படி பார்க்குற..?" என்றவரைப் பார்த்து புன்னகைத்தவன் "அழகா இருக்காள்லம்மா...?" என்றான்.

ம்ம் என்றவர் அவளைப் பார்த்துக் கொண்டே "என்னப்பா லவ் பண்ணுறியா...?" என்றவருக்கு மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசை. அவன் பிடி கொடுத்தான் இல்லை.

இங்கே இருக்கும் கலாசாரத்தில் வளர்ந்தவன் எனினும் அவனுக்கு திருமணம் என்பதில் சற்றும் உடன்பாடிருக்கவில்லை.

அவனோ "மூன்றரை வயசுப் பையன்ட அம்மாவ லவ் பண்ணுற அளவுக்கு நான் ஒன்னும் மோசமானவன் இல்லம்மா..." என்றவன் அழகாக இடைப்பல் தெரிய சிரிக்க அவனின் கூற்றில் அதிர்வது அவனது தாய் சங்கவியின் முறையானது.

"என்னம்மா அப்படி பார்க்குறீங்க..?" என்றவனிடம் "பார்க்க சின்னப் பொண்ணு மாதிரி லட்சணமா இருக்கா..." என்றார்.

அவனும் அதனை ஆமோதித்தான்.

சற்று நேரத்தில் யாதவ் அவளிடம் ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்ள தூக்கி இரு கன்னத்திலும் முத்தமிட்டவளுக்கு தன் சிப்பி உதட்டை குவித்து உதட்டில் பதில் முத்தமிட்டிருந்தான் குட்டி யாதவ்.

அவளும் அவனைத் தூக்கி அரைச் சுற்று சுற்றி கட்டிக் கொள்ள பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு முகத்தில் நிறைந்த புன்னகை.

தன் தாயை பல நாட்கள் கழித்து சித்தார்த் இப்படிப் பார்க்கின்றான். அதற்காகவே அவளிடம் அறிமுகமாக வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவன் தாயை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

அப்படியே ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் அவளை மறந்திருந்தான் என்று தான் கூற வேண்டும்.

அவனிற்கு இருக்கும் வேலையில் இங்கே பார்க், பீச் என சுற்றுவதே பெரிய விடயம் தான்.

இருந்தும் 'பணமில்லையே வாழ்க்கை அதற்கு அப்பாற்பட்ட ஒன்றும் இருக்கின்றது தானே' என்பதை உணர்ந்தவனும் இயன்றமட்டில் இப்படி தாயுடன் நேரத்தை செலவழிப்பான். இப்படி இருப்பவன் வாழ்க்கையில் தனக்கொரு துணையைத் தேட மட்டும் நாடவில்லை.

உயரத்திற்கேற்ப உடற்கட்டு கொண்டிருப்பனின் முகத்திலோ எப்போதும் ஓர் உறைந்த புன்னகை குடிகொண்டிருக்கும்.

அதனாலே இவனுக்கு நட்பு வட்டாரம் என்பது சற்று அதிகம் எனலாம். பெண்களை கேட்கவும் வேண்டுமா..?

சற்று வெண்ணிறமானவன். பரந்த நெற்றி, கூர் நாசி, அந்தப் புன்னகை என்பன பார்க்க அப்படியே அடுத்தவர்களை தன் பக்கம் ஈர்த்து விடும். அப்படி பல பெண்கள் வந்து காதல் சொல்லியும் தன் அக்மார்க் புன்னகையுடன் கடந்து விடுவான். அதனாலே சில நேரங்களில் அவனிடம் எதிர்த்து தர்க்கம் செய்ய இயலாமல் போய் விடுகிறது.

இவர்களின் பூர்வீகம் இந்தியா என்றாலும் இவன் என்னவோ சிங்கப்பூர் வாசி தான்.

அவனின் தாய், தந்தை திருமணத்தின் பின் இங்கேயே வந்து குடியேறி இருக்க அதன் பின் வேலைப்பளு நேரமின்மை காரணமாக இந்தியா செல்வதை நிறுத்தி இருந்தனர். அதிலும் சித்து பிறந்த பின்னர் அவனின் தாத்தா பாட்டி வந்து பார்த்து விட்டு சென்றனரே தவிர சங்கவியும் அவரது கணவரும் இந்தியா சென்றபாடில்லை.

சித்துவிற்கோ இந்தியா என்ற நாடு தொழில் சம்பந்தமாக அறிமுகமானதே தவிர மற்றப்படி அவனின் தாய் நாடு சிங்கப்பூர் தான்.

இதோ இன்று எப்படி சரி அவளிடம் பேச வேண்டும் என்று வந்திருந்தவனின் கண்களில் அவர்கள் படவேயில்லை..

"எங்க காணோம்...?" என கைகடிகாரத்தைப் பார்ப்பதும் தேடலுமாக இருந்தவனின் தேடலை பொய்யாக்காமல் அவன் கண்களுக்கு விருந்தாகினர் தாயும் மகனும்.

இன்று சுடிதார் அணிந்திருந்தாள். தன்னிச்சையாக அவனது வாய் "ஆசம்..." என்றிருக்க சுயத்தையடைந்தவன் தலையில் லேசாக தட்டி விட்டு பிடரி முடியை கோதியவாறே தன்னுள் சிரித்துக் கொண்டான்.

அவனைக் கவனிக்கும் நிலையில் சங்கவி இருக்கவில்லை. அங்கே திரியும் சின்னஞ் சிறு வாண்டுகளை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

"மாம் கொஞ்சம் இருங்க இதோ வந்துர்றேன்..." என்றவன் தாயின் பதிலைக் கூட கேட்காமல் சென்று விட்டான்.

ஒரு வேகத்தில் வந்தவன் அவர்களை நெருங்க நெருங்கவே சற்றுத் தணிந்தான்.

பெண்களிடம் பழகாதவன் இல்லை. எத்தனையோ பெண்களை கடந்து வந்தவனின் பார்வை ஒரு நாள் கூட அவர்களை தவறாக பார்த்திருக்காது.

அது போலத்தான் இவளையும் பார்த்தான். இருந்தும் அவளின் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்றில் பேசத் தயங்கி நின்றான் ஆடவன்.

"இப்படியே வந்த வழி சென்றுவிடுவோமா...?"என்று கூட நினைத்தான்.

ஏமாற்றத்துடனே திரும்பிப் போக எத்தணித்தவனை "அங்கிள்..." என யாரோ அழைப்பது தெரிய, திரும்பியவன் இன்பமாக அதிர்ந்தான்.

ஆம் அது யாதவ் தான். யாதவைப் பார்த்தவன் நிமிர்ந்து பார்க்க அங்கே அவளும் அவர்களை நோக்கித் தான் வந்து கொண்டிருந்தாள்.

வந்தவள் யாதவின் கையைப் பிடித்து குனிந்து "யாது என்னப்பா...?" என வினவியவளிடம் "ம்மா போல்... (Ball)" என அங்கே மரத்தின் கிளையில் சிக்கி இருந்த பந்தைக் கை காட்ட, அதனை பார்த்தவள் அப்போது தான் இவர்களை வேடிக்கை பார்த்து நிற்கும் சித்துவையும் கவனித்தாள்.

அவளது முகத்திலிருந்து எந்த உணர்வையும் அவனால் படிக்க முடியாமல் தான் போய்விட்டது.

பின்னர் மகனிடம் "அது தான் அம்மா இருக்கேன்ல..என் கிட்ட கேட்டிருக்கலாம்ல...?" என்றவள் மகனின் தேவை உணர்ந்து பந்தை எடுக்க முயற்சிக்க அந்தோ பரிதாபம் அது எட்டினால் தானே.

எட்டி எட்டிப் பார்த்தவள் முடியாமல் போக இடுப்பில் கை வைத்து மகனை பரிதாபமாக பார்க்க, சித்துவிற்கு சிரிப்பு வந்து விட்டது.

அவனின் சிரிப்பில் திரும்பி முறைத்தவளின் பார்வையில் கப்சிப் ஆனவன் யாதவைப் பார்க்க அவன் அழத் தயாராகி உதட்டைப் பிதுக்கிக் கொண்டிருந்தான்.

இவளிடம் யாதவை கண்காட்டிய சித்துவிடமிருந்து பார்வையை அகற்றியவள் மகனைப் பார்க்க அதோ அழத் தொடங்கி விட்டான்.

இதில் அவளுக்குமே முகம் சிவக்க, பார்த்திருந்த சித்துவிற்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

குழந்தையை சமாதானம் செய்ய வேண்டியவளும் குழந்தை போல கண்கள் கலங்கி நிற்க ஏதோ போல் இருந்தது அவனுக்கு.

பின் அவளருகில் வந்தவன் "கேன் ஐ ட்ரை...?" என யாதவை பார்த்து அவளிடம் கேட்க அவளிருந்த நிலையில் சரியென்றிருந்தாள்.

ஒரே பாய்ச்சலில் கிளையில் சிக்கியிருந்த பந்தை எடுத்தவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த இருவரின் அருகில் வந்து யாதவின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்து "ஹே யங் மேன், யுவர் போல்..." என நீட்ட முகம் விகசிக்க அதனை வாங்கியவன் சித்துவின் கன்னத்தில் எச்சில் வைக்க இதை எதிர்பாராதவன் சிரிப்பதற்குள் முந்திக் கொண்ட அவனின் தாய் "யாது..வட் இட் திஸ்..?" என்றவாறு சங்கடமாக சித்துவைப் பார்த்தாள்.

அவனோ அதே புன்னகை மாறாமல் "இட்ஸ் ஓகே..." என பதிலுக்கு அவனின் பட்டுக் கன்னத்தில் உதட்டைப் பதிக்க, அவனின் மீசையின் குறுகுறுப்பில் தன் அரிசிப் பற்கள் தெரிய சிரித்த யாதவை அவள் மெய் மறந்து பார்த்திருந்தாள் என்றால், சித்துவிற்கு அவனின் முகவாக்கை எங்கோ பார்த்திருப்பது போல இருந்தது.

திடீரென மின்வெட்டினாற் போன்று அவன் மனக்கண்ணில் அவனது விம்பம்..

"அவர் சிரிச்சா அச்சு அசல் இவன மாதிரித் தான் இருப்பார்..." என தனக்குத் தெரிந்த ஒருவனைப் பற்றி சிந்தித்து சிரித்தவன் தன் சம்பந்தமில்லாத எண்ணப்போக்கை விட்டு தெளிந்தவனாக "யூ சோ க்யூட் மேன்..." என யாதுவின் முடியை கலைத்து விட்டான்.

விளையாடும் ஆர்வத்தில் அவனும் சித்துவிடம் கையசைத்து விட்டு பறந்து விட்டான்.

அதன் பின்னே நிமிர்ந்து அங்கே நின்றிருந்தவளைப் பார்க்க அவளோ ஓடும் மகனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின் எழுந்து நின்றவன் "வட்ஸ் யுவர் நேம்...?" என்கவும் திடுக்கிட்டு திரும்பியவள் அவனை முழுவதுமாக ஆராய்ந்தாள்.

சந்தேகப்படக் கூடியளவு அவனின் தோற்றம் இருக்கவில்லை. அவனைக் குழப்பமாக ஏறிட்டவள், சொல்லுவோமா வேண்டாமா என தன்னுள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க அவன் தான் இப்போது சங்கடமாக உணர்ந்தான்.

அவளது முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளை கவனித்தவன் உதட்டை வளைத்து தலையாட்டிய விதத்தில் அவளுக்குமே ஏதோ போல் இருந்திருக்க வேண்டும்.

அப்போதிருந்த தயக்கம் நீங்கி தெளிவுடன் "அதாஹ்..." என்கவும், எங்கோ கேள்விப்பட்ட பெயர் போல் இருந்தாலும் கண்ணில் சிரிப்புடன் "நைஸ் நேம்..." என்றான்.

ஆனால் அவளோ மருந்துக்குக் கூட உதட்டை விரிக்கவில்லை.

அவள் அதாஹ் ஷர்மா..

தொடரும்…
 
  • Like
Reactions: sivaguru