• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேடல் 4

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
ஒரு வாரம் கடந்திருக்கும். வழமை போல அதாஹ்வும் யாதவை அழைத்துக் கொண்டு பார்க் வந்து விட்டாள்.

இந்த இடைப்பட்ட நாட்களில் அதாஹ்வின் கவனிப்பில் யாது முன்பைப் போல தேறி விட்டான். இருந்தும் வேகமாக ஓட வேண்டாம், சூ அணிய வேண்டும், அம்மாவை விட்டு விட்டு தனியே எங்கும் செல்லக் கூடாது என ஆயிரம் கண்டிப்புகள் அவளிடத்தில்.

அனைத்தையும் அச்சாப்பிள்ளையாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான் அந்தக் குட்டிப் பையன்.

அவன் தலையை ஆட்டிய தினுசில் அதாஹ்விற்கு சிரிப்பு வந்தாலும் வேண்டுமென்று அவனிடம் அழுத்தமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

தூரத்தில் பார்த்துக் கொண்டு வந்த சித்துவிற்குமே சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்து விட்டது.

ஹா..ஹா என்ற அவனது சிரிப்பு சத்தத்தில் சங்கவி என்னவென்று கேட்க "அங்க பாருங்க மாம்.. அந்த வாண்டு எவ்வளவு அழகா அவ சொல்லுறத எல்லாம் மண்டையை உருட்டி கேட்டுட்டு இருக்கான். அவன் அன்னைக்கு விழுந்ததுக்கு தான் இவ ஆயிரம் பத்திரம் சொல்லிட்டு இருக்கானு நான் நினைக்கிறேன்..." என்று அவளை சரியாக புரிந்து கொண்டவனாக மீண்டும் சிரித்தான்.

அதற்குள் அவர்கள் அதாஹ்வை நெருங்கியிருந்தனர்.

இன்னும் இவர்கள் வந்ததை அவர்கள் இருவரும் உணர்ந்திருக்கவில்லை.

தலையை ஆட்டிக் கொண்டே திரும்பிய யாதவ் தான் முதலில் சித்துவை பார்த்திருந்தான்.

"ஐஐ.. அங்கிள்..." என்றவன் பாய்ந்து இறங்க அதாஹ்விற்கு காதில் புகைவராத குறை.

"யாதுது..." என இரண்டு கையையும் மடக்கியவள் மூக்கு விடைக்கத் திரும்ப, அங்கே அதற்குள் சித்துவின் கையில் தாவியிருந்தான் யாதவ்.

தன்னை யாதவ் நினைவில் வைத்திருப்பான் என சித்து சர்வ நிச்சயமாக நினைத்திருக்கவில்லை. இன்றைய அவனின் ஒட்டுதலில் இன்பமாக அதிர்ந்தான் ஆடவன்.

அதாஹ்வும் இவர்களை இந்த நேரத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆனால் காலையில் இந்தப் பார்க்கினுள் நுழைந்ததுமே அவளது கண்கள் என்னவோ சித்துவையும் சங்கவியையும் தான் தேடின. காணவில்லை என்றதும் உதட்டை பிதுக்கி விட்டு கல் பெஞ்சில் வந்து தாயும் மகனுமாக அமர்ந்தனர்.

அதன் பின்னரே அவளின் அன்புக் கட்டளைப் பத்திரம் வாசிக்கப்பட்டது. காது கொடுத்து கேட்டு விட்டு தலையை உருட்டியவன் சித்துவை கண்டதும் பட்டென அஜாக்கிரதையாக அனைத்தையும் மறந்து விட்டு பாய்ந்து சென்றதும், புஷ் என்றிருந்தது அவளுக்கு.

அதனாலே இந்த முறைப்பு.

"ஹாய் அங்கிள்..." என அவனது முகம் பார்த்து சிரித்தவனை இன்னும் பிடித்துப் போனது சித்துவிற்கு.

"ஹாய் யங் மேன். வட்ஸ் அப்...?" என்றதும் யாதுவோ "நத்திங் அங்கிள். மம்மி அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாங்களா, நானும் கேட்டுட்டு இருந்தேன்.." என்றான் மழலைச் சிரிப்புடன்.

அவன் பெரிய மனுஷன் போல் கூறிய தோரணையில் மூவருக்குமே முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

சங்கவியோ "எப்படிம்மா இருக்க..? பையனுக்கு இப்போ எப்படி இருக்கு..?" என்றார் வாஞ்சையாக.

யாதுவை பார்த்துக் கொண்டிருந்தவள், இவரது கேள்வியில் இவரைப் பார்த்து புன்னகைத்தவளாக "நல்லா இருக்கேன்மா. யாதுவும் ஓகே ஆகிட்டான்..." என்றாள் மென்மையாக.

"வேற வேலை இருக்கா என்ன..?" என திடீரென கேட்ட சங்கவியை புரியாமல் பார்த்தவள் தயக்கத்துடனே "இ..இல்லை..." என்றதும் அவரும் "அப்போ வாம்மா இருந்து பேசலாம்..." என்றார்.

அவரது வயதை நினைத்தவள் சம்மதமாக தலையாட்ட, சங்கவி செல்ல முற்பட அதாஹ்வோ சித்துவிடம் எப்படிக் கேட்பதென தயங்கியவளாக "யா..யாது...?" என கையை நீட்டினாள்.

சித்துவோ அவளை பார்த்துக் கொண்டே "நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நானும் பையனும் அப்படி ஓரமா போய் நின்னு விளையாடுறோம்.." என்று யாதுவைப் பார்த்து கண்சிமிட்ட, அவனும் தன் முட்டைக் கண்ணை விரித்து டக்கென தலையாட்டினான்.

அவள் இன்னும் போகாமல் இருக்க சங்கவி "என்னம்மா...?" என்றும் சித்துவோ "டோன்ட்வொரி, அவன் என் பொறுப்பு. அவனுக்கு சின்னக் காயமும் படாம நான் பார்த்துக்கிறேன்...நம்பிக்கையில்லன்னாநீயே அழைச்சிட்டுப் போ" என்றான் தன் அக்மார்க் சிரிப்புடன்.

அவளின் ஒவ்வொரு அசைவையும் அவன் சரியாக உள்வாங்குகின்றான்.

அவன் ஒருமையில் அவளை அழைக்கிறான். ஆனால் அவளுக்கு கோபம் வரவில்லை. மாறாக ஏதோ தனக்கென ஓர் உறவு கிடைத்த நிம்மதியுடன் லேசாக இதழை விரித்து "பார்த்துக்கோங்க.. நான் இவங்க கூட இருக்கேன்..." என்றாள் தெளிவாக.

அவள் தன்னை நம்புகிறாள் என்பதே சித்துவிற்கு போதுமானதாக இருந்தது. அதற்காகவே யாதுவை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அவனை கைகளில் ஏந்திக் கொண்டு சென்றான்.

இந்த உறவும் நாளை நிலைக்குமா, என்பது அதாஹ்விற்கு சந்தேகம் தான். ஆனால் தன்னை நம்புபவர்களை இலகுவில் சித்து கைவிடமாட்டான் என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.

அதாஹ்வும் சங்கவியுடன் வந்து விட்டாள்.

ஏற்கனவே சித்து சொல்லி வைத்ததைப் போல அவளது வாழ்க்கையைப் பற்றியும், அந்த வாழ்வில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது பற்றியும் சங்கவி அவளிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை.

ஆம், சித்து தான் கூறி இருந்தான். அவளுடன் பேசிப் பழகுமாறு கூறியவன் அவளாக சொல்லும் வரை அவளது சொந்த வாழ்வில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று சங்கவியை தடுத்திருந்தான்.

ஆனால் அவளாக அதனை சொல்லப் போவதில்லை என்பதையும் அவனே பிடிவாதமாக அவளிடம் கேட்கப் போவதையும் இந்த சித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சங்கவியுடன் சற்று ஒட்டுதலில்லாமலே அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

அவர் தன்னைப் பற்றிக் கேட்காதது அவளுக்கு பெருத்த நிம்மதியாக இருந்தது.

அதன் பின்னர் சகஜமாக பேசினாள் என்று தான் கூற வேண்டும்.

"எங்கம்மா இருக்க...? உன் வீட்டு அட்ரஸ் என்ன...?" என பேச்சை வளர்த்தார் சங்கவி.

"அது..." எனத் தயங்கியவளிடம் "உன் வீட்டு அட்ரஸ் தர விருப்பமில்லைனா, எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போயேன்டா..?பக்கத்துல தான் இருக்கு..." என கனிவாக பணித்தார்.

அவர் அப்படிக் சொன்னதும் அவளுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. உடனே "அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுனு இல்லைம்மா.. * இது தான் என் வீட்டு அட்ரஸ்.." என்றவளின் பதிலைக் கேட்டு பின்னாலிருந்து மெல்ல சிரித்தான் சித்தார்த்.

இது தானே அவனுக்கு வேண்டும்.

ஒன்று அவளை தங்கள் வீட்டிற்கு வரவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவளது வீட்டிற்கு அவர்கள் செல்ல வேண்டும்.

அவள் எப்படியும் தங்களது வீட்டிற்கு அவளாக வரப் போவதில்லை என்பது அவனுக்கு உறுதி. அதனாலே தாயின் மூலம் அவளது வீட்டு அட்ரஸை வாங்க வைத்திருந்தான். (நீ கேடிப்பயடா)

முதலில் அவள் தயங்க "ஏன்டா அம்மாவ அவளிடம் அட்ரஸ் கேட்க வைத்தோம்" என்றிருந்தது ஆடவனுக்கு. அடுத்த அவளது பேச்சில் அப்படியே அந்த எண்ணத்தை தூக்கி டஸ்பினில் போட்டு விட்டான் கொஞ்சமும் சொரணையில்லாமல்.

"இனி என்ன? யாது கண்ணாட வீட்டுக்கு விருந்து சாப்பிட வரலாம் போலயே...?" என பின்னாலிருந்து குரல் கொடுத்திருந்தான் சித்தார்த்.

அதாஹ்வும் சங்கவியும் ஒன்றாக திரும்பிப் பார்க்க, அங்கே யாதுவிற்கு அந்த விருந்தென்ற சொல் விளங்காவிட்டாலும் "சாப்பிட வரலாம்" என்பது புரிந்ததும் சித்துவின் தாடியடர்ந்த கன்னத்தை தன் பிஞ்சு விரல்களால் தாங்கி "எஸ் சித்து.. மாம் நல்லா டேஸ்டியா சமைப்பாங்க.. ஐ லவ் தட்..." என கையை விரித்ததும் சித்து சத்தமாக சிரித்தான் என்றால் அதாஹ்வோ சட்டென தலையைக் குனிந்து கொண்டாள்.

ஆனால் உதடுகள் சிரிப்பில் துடித்தன. தான் சமைப்பதை ஒருவர் புகழ்ந்தால் யாருக்குத் தான் சந்தோஷமாக இருக்காது. அதுவும் தன் பிள்ளையே அதற்கு அடிமை என்பதைப் போலப் பேச ஏனோ ஒரு மாதிரி ஆகி விட்டது அவளிற்கு.

அதனை அவர்களுக்கு மறைக்கவே அவள் குனிந்து கொண்டாள்.

ஆனால் அதனையும் தன் லேசர் கண்ணில் படம்பிடித்து விட்டான் சித்து.
அதில் "இவ சிரிச்சா ரொம்ப அழகா இருக்கா..." என்று மனதுக்குள் கவுண்டர் வேறு.

அது தெரியாதவளோ தன்னை சமப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்.

"ம்ம் அப்போ கண்டிப்பா உன் மம்மி சமைக்கிற சாப்பாட்ட சாப்பிட்டே ஆகனும்.. வீட்டுக்கு வரலாம்ல..?" என்று வினவியவனின் கேள்வி யாதவிடமிருந்தாலும் பார்வை என்னவோ அதாஹ்விடம் தான்.

மறைமுகமாக அவளிடம் அவளது இல்லம் வர அனுமதி கேட்டிருந்தான் ஆடவன்.

மீண்டும் மீண்டும் தன்னை சங்கடத்துக்குள் தள்ளுபவர்களிடமிருந்து எப்படித் தப்பிப்பதென அவளுக்குத் தெரியவில்லை.

அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதில் அவனது மனதை காயப்படுத்த விரும்பாதவள் யாதவ்விடம் "வீ..வீட்டுக்கு வரலாம்னு சொல்லிடு கண்ணா..." என்றவளின் சம்மதமான பேச்சும், தன்னைத் தவிர்த்து தன்னைப் போலவே மறைமுகமாக பேசியவளின் பேச்சும் அவனது கண்களை சிரிக்க வைத்தன.

குழந்தையோ சரியென தலையாட்டி விட்டு "சித்து கம் டு அவர் ஹவுஸ்.." என்றான்.

அவனும் "ஓகே கண்ணா" என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டான்.

இப்போது தான் அவள் சித்தார்த்தின் "கண்ணா" என்ற அழைப்பையும், யாதவின் "சித்து" என்ற அழைப்பையும் கவனிக்கிறாள்.

இருவரும் தங்களுக்குள் பேசி நண்பர்களாகி விட்டனர் என்பது அவளுக்கு புரிந்து போனது.

உடனே "யாது வட் இஸ் திஸ்..? அவரு வயசுல பெரியவர். இப்படித்தான் பெயர் சொல்லி கூப்பிடுவியா...?" என்று அதட்டவும் யாதவ் உதட்டைப் பிதுக்கினான்.

அது சகிக்காத சித்தார்த் "ஹேய் விட்டா என்ன கெழவன்னு சொல்லி முத்திரை குத்திருவ போல..? சில், நான் தான் அப்படி அழைக்க சொல்லி சொன்னேன்.." என்றதும் கலங்கிய கண்களுடன் யாதவ் உதட்டைப் பிதுக்கி தலையாட்டினான்.

அந்தக் குழந்தையை அப்படிப் பார்க்க பாவமாக இருந்தது சித்துவிற்கு. ஆக "டோன்ட் வொரி மேன்.. இப்போ பாரு அம்மா உன்கிட்ட சாரி சொல்லுவா..." என்றவன் கண்களால் சொல்லும் படி சொல்லவும், அதாஹ்வும் அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு "சா.." என்று இழுப்பதற்குள் "நோ... மம்மி சாரி சொல்ல வேண்டாம்.. நான் தான் ராங். ஆனால் இவர சித்துனு சொல்லுறது தான் எனக்கு பிடிச்சிருக்கு.." என்று தலையைத் தொங்க போட்டவனிடம் மறுத்துப் பேச மனம் வரவில்லை அதாஹ்விற்கு.

சரியென்று விட்டு விட்டாள். அதன் பின்னரே யாதவின் சிரிப்பு மீண்டிருந்தது.

இப்படியாக அவர்களுக்குள் அங்கே ஆழ்ந்த உறவொன்றிற்கு யாதவின் மூலம் அத்திவாரமிடப்பட, அதுவோ காலப்போக்கில் அசைக்க முடியாத உறவாக மாறியிருந்தது.

...

அன்றொரு நாள் காலையில் வழக்கம் போல தாயும் மகனும் தங்கள் வேலையில் மூழ்கிப் போய் இருக்க வீட்டு ஹாலிங் பெல் சத்தம் கேட்டது.

"யாரு வந்திருப்பா...?" என்ற யோசனையில் கதவை திறந்தவளின் முன் நின்றிருந்தனர் சித்தார்தும் சங்கவியும்.

வெள்ளை சேர்ட் பாதாம் நிற பேண்ட் அணிந்து நின்றிருந்தவனை அவனது வருங்கால மனைவி பார்த்திருந்தாள் கையோடு டேட்டிங் அழைத்து சென்றிருப்பாள்.

ஆனால் அங்கே நிற்பவளோ சித்துவின் மனதில் சகோதரியாக உருவகிக்கப்பட்டிருப்பவள்.

அசையாமல் சிலை போல் நின்றிருந்தவளின் தோற்றமே தங்களை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை பறைசாற்றியது.

அவள் முன் சொடக்கிட களைந்தவளிடம் "என்ன நின்னுட்டு தூங்குறியா..?" என்றவாறு சிரித்தவனின் பார்வை உள்ளே யாதவ்வைத் தேடியது.

அப்போதும் பேசாமல் நிற்பவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தவன் "உள்ள கூப்பிடமாட்டியா...? அம்மா வாங்க கெளம்புவோம்.." என்று அவளுடன் விளையாட நினைத்தவன் போலிக் கோபத்துடன் திரும்பப் போக, அவளோ சட்டென நிதானத்திற்கு வந்து "அச்சோ அப்படியில்ல.. உள்ள வாங்க ரெண்டு பேரும்..." என்று வரவேற்று முடிக்க யாதவ் வந்து நின்றான்.

சித்துவை கண்டு விட்டு ஆஆஆவென வாயைப் பிளந்தவன் "சித்து...எங்க வீட்ட வந்திருக்கிங்களா...?" என கண்ணை விரித்தான்.

அவனின் இந்த அதிர்ச்சி எதற்கானது என அறியாதவன் குழப்பத்துடனும் அதே நேரம் தன்னை விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்காக சிரித்தவன் "எஸ்.. இது உன் வீடு தானே..? அப்போ உன் வீட்டுக்கு தானே வந்திருக்கோம்.." என கண்சிமிட்டி அவனிடம் கூறியவன் அப்படியே அவனை அலேக்காக தூக்கிக் கொண்டான்.

"அப்போ உள்ள வாங்க..." என்று குதூகலித்தவனிடம் "ம்ம் நீ கூப்பிடத்துக்கா மட்டும் உள்ளே வரேன்..." என்றான்.

அதில் தன்னைப் பார்த்து உதட்டை வளைத்தவளின் குழந்தை முகம் வாடுவது பிடிக்காமல், தாயை அழைக்குமாறு கண் ஜாடை காட்டினான்.

அவளும் "வாங்கம்மா.. எப்படி இருக்கிங்க..? எக்சுவலி உங்கள நான் எதிர்பார்க்கவில்லை. அதனால தான் அப்படியே நின்னுட்டேன்.. நான் ஒரு லூசு..." என தலையில் தட்டிக் கொண்டவளிடம் "அது நீ நின்ன நிலைலயே புரிஞ்சுதுமா..நீ எப்படிமா இருக்க?" என்று சிரித்தார் சங்கவி.

இப்படியே அன்றைய பொழுது கழிய, வரும் போது சித்து கேட்ட கேள்வியில் பதிலின்றி நின்றிருந்தாள் காரிகை