• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 11)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
குழந்தை கூறியதில் அனைவரும் ஸ்தம்பித்துப் போய் இருக்க.... ஆதிராவுக்கோ இப்போதே இந்தப் பூமி பிளந்து தன்னை விழுங்கி விடாதா என்றிருந்தது. அகரனைத் தவிர்த்து இன்னொருவனை மணப்பதா? கனவிலேனும் அது நிகழக்கூடுமா? என்றெண்ணிக் கலங்கியவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அழுகை மட்டுமே பதிலாக வந்தது அவளிடமிருந்து.

நிசப்தத்தைக் குலைத்துக் கணீரென ஒலித்தது அகரனின் குரல். 'இனி ஒரு நொடிப் பொழுதேனும் இங்கிருக்கக் கூடாது. எல்லோரும் கிளம்புங்கள். வெளிக்கிடு ஆதிமா. உனக்கும் எனக்கும் உள்ள காதலை யாராலும் பிரிக்க முடியாது. நீ எனக்குத் தான். எனக்கு மட்டும் தான். உன்னை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன். கண்ட கண்ட பிசாசெல்லாம் கடவுள் சந்நிதியில் நுழைந்தால் இப்படித்தான் ஏடாகூடமாகும். அம்மனும் விட்டு வைத்திருக்கிறார்களே.'

'நிறுத்துங்கள். வயதில் பெரியவராச்சேனு உங்களை விட்டு வைக்கிறேன். நான் பிசாசா? பிசாசு என்ன செய்யும்னு தெரியுமா? நான் ஒண்ணும் அடாவடியா அம்மனோட சந்நிதில நுழையல. அவங்க அனுமதி இல்லனா என்னால இங்க இருக்க முடியாது. அப்புறம் இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ள அம்மா கழுத்தில அப்பா கையால தாலி ஏறணும். இல்ல நீங்க யாரும் உயிரோட இருக்க மாட்டீங்க' என்று தன் தாய் தந்தையையும் இன்னும் சிலரையும் தவிர மற்ற அனைவரையும் சுட்டியது குழந்தை.

'உனக்கு என்ன தான்டி வேணும்? ஏன் இப்பிடிச் சித்திரவதை செய்ற? நான் என்ன தான் பண்ணன் உனக்கு? போன பிறப்புப் பற்றி நீ சொன்னதெல்லாம் உண்மையா இல்லைப் பொய்யானு தெரியாது எனக்கு. ஆனா ஒரு வேளை அது உண்மையா இருந்தா நான் என்னோட ஏழேழு பிறப்பிலயும் செய்த கொடிய பாவம் அதுவாத் தான் இருக்கும். உன்னைப் பெத்தது. ச்சீ நீயெல்லாம் ஒரு குழந்தையா?' என்று கதறினாள் ஆதிரா.

ஆதிரா இயல்பில் சுட்டித்தனமாக இருந்தாலும் குடும்பப் பாங்கான அடக்கமான பெண் தான். அமைதியான பெண்ணென்றில்லை அதே நேரம் அநாவசியமான வார்த்தைகளைப் பேசுபவளும் இல்லை. அப்படிப்பட்ட அவளை அவ்வாறு பேச வைத்தது அகரன் மேலுள்ள காதல் மட்டுமே தான். நியாயம் தானே இத்தனை நாள் தன் கணவனென நினைத்து வாழ்ந்தவனை நொடிப் பொழுதில்.... அதுவும் உண்மை பொய் தெரியாமலேயே விட்டு விடச் சொன்னால் எந்தப் பெண்ணால் இயலும்?

ஆனால் அவள் வார்த்தைகளின் வலி அந்தக் குழந்தையின் நெஞ்சத்தில் ஈட்டியைப் பாய்ச்சியது போலும். 'அப்பிடிச் சொல்லாதீங்கம்மா.... உங்க வாயால இப்பிடியான வார்த்தைகளை என்னால் கேக்க முடியவில்லை. நீங்க பாத்துப் பாத்துச் செல்லம் கொஞ்சி வளர்த்த குழந்தைம்மா நான். ரொம்ப வலிக்குது எனக்கு. உங்க அரவணைப்பு, பாசம் எதுவுமே இல்லாம ஆன்மாவா அலைஞ்சிட்டிருக்கன்மா. ஏன்மா இப்போலாம் என்னை உங்களுக்குப் பிடிக்க மாட்டேங்குது? நீங்க தானேம்மா சொன்னீங்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கு அப்பா தான் வேணும்னு. இப்போ அவரை அடையாளம் காட்டிக் கூட வேணாம்னு சொல்லுறீங்களே. எனக்குப் புரியுதும்மா. உங்களுக்கு எதுவுமே ஞாபகமில்லை. ஆனா நான் சொல்லுறதும் உண்மையா இருக்கலாமேனு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன். அப்பா உங்களை ரொம்ப நல்லாப் பாத்துப்பாரும்மா. பிளீஸ்மா அவரை வேணாம்னு சொல்லி அழிஞ்சிடாதீங்க. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்.'

இதுவரை அமைதியாக இருந்த மித்ரன் பேச ஆரம்பித்தான். 'பாரு பாப்பா! நீ சொல்லுறதை உண்மைனே நாங்க ஏத்துக்கிறோம். ஏதோ ஒரு பிறப்பில உங்கம்மாவுக்கு கணவனா, உனக்கு அப்பாவா நான் இருந்திருக்கலாம். ஆனா இப்போ நிலைமை வேற. எல்லாருக்கும் ஏழேழு ஜென்மத்திலயும் ஒரே கணவன் தான் அமையுறதுனு இல்லையே. அதுவுமில்லாம அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க. அவங்க சேர்றது தான் நியாயம். ஆதிராவை எனக்கு ஒரு தோழியா வேணும்னா பிடிக்கலாம். அப்பிடித் தோழினு சொல்லிக்கிற அளவுக்குக் கூட நாங்க பழகலனு நினைக்கிறன். அப்பிடி நானும் அவங்களும் தான் சேரணும்னா நாங்க ரெண்டு பேரும்ல லவ் பண்ணிருக்கணும்? அப்பிடி நடக்கலையே. சோ அவங்கள ஃபோஸ் பண்றத விட்டுட்டு நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.'

குழந்தையின் குரலில் கடுமை எகிறியது. 'நான் சொன்ன அஞ்சு நிமிஷம் முடிஞ்சு ரொம்ப நேரமாச்சு. உங்க யாருக்கும் நான் எந்த விளக்கமும் தர வேண்டியதில்லை. எடுத்துக் கட்டுங்க தாலியை'
குழந்தையின் உத்தரவைக் கேட்டு எல்லோருமே அதிர்ந்து போயினர். ஏதேதோ சொல்லிச் சமாளிக்க இது ஒண்ணும் மனித உயிர் இல்லையே. ஆத்மா.

'நீ எப்பிடிடீ என் வயித்துல பிறந்து தொலைச்ச? உங்கம்மா, சரி அது நானாவே இருக்கட்டும்; செஞ்ச பாவத்துக்கு சீரழிஞ்சு செத்தன். ஆனாலும் அதை விடப் பெரிய பாவம் உன்னைப் பெத்தது. உனக்கெல்லாம் எப்பிடி மோட்சம் கிடைக்கும். ஆத்மாவா அலையும் போதாவது நல்லது செய்ய யோசிக்கிறியா? கடவுள் எதுக்குத் தான் உன்னைப் படைச்சாரோ?' ஆதிராவின் கதறல் வேறு யாரை உலுக்கியதோ இல்லையோ குழந்தையை ஆட்டிப் படைத்தது. பெற்ற தாயின் வாயால் இவ்வாறான வார்த்தைகளை யாரால் தான் கேட்க முடியும்? குழந்தை விக்கி விக்கி அழ ஆரம்பித்தது.
அந்த அழுகை ஆதிராவைக் கூட ஏதோ செய்ததுதான். ஆனாலும் யாருக்காகவும் அவள் வாழ்க்கைத்துணையை விடத் தயாராக இல்லை. குழந்தையின் அழுகையைக் கலைவாணியாலும் தாங்க முடியவில்லை. என்ன தானிருந்தாலும் அவருயிர்த் தோழியின் மகளல்லவா?

'கொஞ்சம் பாெறு ஆதிரா. ஒன்றுமறியாத பிஞ்சை வார்த்தையாலே கொல்லாதே. அது தாய் தகப்பனில்லாப் பொண்ணு'

ஆதிராவுக்குக் கோபம் தலைக்கேறியது. 'யாரு இது ஒண்ணுமறியாப் பிஞ்சா? நாலு கொலையைப் பண்ணிட்டு இப்போ என்னோட கல்யாணத்தையும் நிறுத்தணும்னு நிக்குது. இதுக்கு ஒண்ணும் தெரியாதா? எல்லாம் உங்களால வந்தது. உங்களுக்கு அந்தப் பூர்வீகாவைத் தவிர வேறு யாருமே கிடைக்கலயா ஃபிரண்ட்னு சொல்லிக்க? உங்க கழுத்தில இருக்கிற இந்தச் செய்னா(chain) பூர்வீகா தந்தது?' என்று கேட்ட படியே கலைவாணி கழுத்திலிருந்த சங்கிலியைப் பிடுங்கி குழந்தையை நோக்கி வீசி எறிந்தாள்.

திடீரென்று தலை பாரமாக, கன்னங்களிரண்டும் கோவைப்பழமாக சிவக்க 'அம்மாஆஆஆஆ' என அலறிய படியே கீழே விழுந்தாள் ஆதிரா. குழந்தையின் செயல் தானோ என அனைவரும் அதைக் கோபமாகப் பார்க்க, 'அம்மா' என்ற விசும்பலுடன் குழந்தை ஆதிராவைப் பார்க்க.... இதுவரைக்கும் தன் செல்ல மகளை அதட்டிக் கூட அறியாத கலைவாணி, அவளை அடித்து விட்டு கண்ணில் கோபக்கனலுடன் நின்றிருந்தார்.

யாராலுமே அதை நம்ப முடியவில்லை. கலைவாணியின் அமைதியான முகமும் அன்பான வார்த்தைகளுமே அனைவருக்கும் பழக்கம். அவர் யாரிடமும் அதிர்ந்து கூடக் கதைத்ததில்லை. அப்படிப் பட்டவருக்கு அவ்வளவு கோபம் வருமா? என எல்லோரும் அதிசயித்து நிற்க.... அபி தான் ஆராவைத் தாங்கிப் பிடித்து ஆசுவாசப் படுத்தினாள். ஆதிரா வேதனையோடு தாயை நோக்க, அவரோ 'எங்க நட்பைப் பத்தி என்னடி நினைச்ச? உங்க எல்லாருக்கும் முதல் கிடைச்சவடி அவ எனக்கு. எனக்கு ஏலாம இருந்தப்போ பெத்த தாய் மாதிரிப் பாத்துக்கிட்டவ. அவளை எவனோ ஒரு தெருப் பொறுக்கி ஏதோ பண்ணினா..... பெத்த பொண்ணு பாத்திட்டிருக்குமா? எனக்கு ஆதங்கமா இருக்குடி அவனை என்னோட கையால கொல்ல முடியலயேனு. ராெம்ப வலிக்குது எனக்கு. என்னோட பூர்வியாேட முடிவு அப்பிடி இருக்கும்னு கனவில கூட நினைச்சதில்லடி. அவ எவ்வளவு ஆசையா வாங்கிக் கொடுத்த கிப்ட்டி(gift) அது. அதை தூக்கி எறிஞ்ச உன்னைக் கொல்லாம விட மாட்டேன்டி' என்ற படி மறுபடியும் அவளை நோக்கி வர மற்றவர்கள் அனைவரும் ஆளுக்கு இரு பகுதியாகப் பிரிந்து தாயையும் மகளையும் ஆசுவாசப் படுத்தினர். குழந்தை கீழே இருந்த சங்கிலியை எடுத்து கலைவாணிக்கு போட்டு விட்டது. கலைவாணி குழந்தையை ஆரத் தழுவிக் கொண்டு முத்த மழை பொழிந்தார்.

சிறிது நேரம் கழிந்ததும் மீண்டும் குழந்தை நச்சரிக்க ஆரம்பித்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில எமகண்டம் ஆரம்பிச்சிடும். நல்ல நேரம் முடியுறதுக்குள்ள சீக்கிரம் திருமணம் நடக்கணும். இம்முறை குழந்தையை எதிர்த்து அகரன் வாய்திறக்க..... இனிப் பேசிப் பிரயோசனமில்லை என உணர்ந்த குழந்தை செயலில் இறங்க ஆரம்பித்தது.
எங்கிருந்தோ திடீரென வந்த கூர்மையான சிறு கத்தியொன்று அகரனின் தொண்டைக்குழியைப் பதம் பார்க்கத் தயாராக இருக்க.... அகரனால் இம்மியளவு கூட நகர முடியாதிருந்தது. எல்லோரும் தலையில் இடியிறங்கியது போல குழந்தையைப் பார்க்க... 'ம்ம் சீக்கிரம். சொல்லு பேச்சுக் கேட்டா யாரையும் எதுவும் பண்ண மாட்டன். இல்ல.. மீறி உங்க விருப்பப்படி நடந்தா ஒவ்வொரு இழவா விழ ஆரம்பிக்கும். எது வசதி?'

சொல்லொணாத் துயரத்துடன் வாய் திறந்தாள் ஆதிரா. ' அவ... அவரை ஒண்ணும் பண்ணிடாத... நா.... நான் மித்...மித்ரனையே க..கல்யாணம் பண்ணிக்கிறேன்.'

'சீக்கிரம் ஆகட்டும்' என்ற குழந்தை சாமியார்களைப் பார்த்து 'சீக்கிரம் சடங்கை ஆரம்பிங்க' என்றது. சிறிது நேரத்தில் சடங்குகள் முடிய அம்மனின் காலடியில வைத்து பூஜை செய்த தாலியை எடுத்து ஆதிராவுக்கு நாணேற்றினான் மித்ரன். அகரனும் அவன் குடும்பத்தினரும் கண்கள் பனிக்க இக் காட்சியைப் பார்க்க... ஆதிரா அகரனை மருந்துக்கும் பார்த்தாளில்லை. குனிந்த தலை நிமிராதிருக்க அவள் கனவுகளனைத்தும் கண் வழியே கண்ணீராய்க் கரைந்து கொண்டிருந்தது. மித்ரன் வேதனையோடு அகரனை நோக்கி கண்களாலேயே மன்னிப்புக் கோர... கலைவாணியோ செய்வதறியாது திகைத்துப் போய் இருந்தார். அபிக்கு யாரை எண்ணி நோவதென்றே தெரியவில்லை. இனியனுக்கும் நடந்தது அனைத்துமே விநோதமாக தெரிந்தது. எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் கலங்கியிருக்க இக் காட்சியை களிப்புடன் கண்டது குழந்தை மட்டும் தான்.

திருமணம் முடிந்ததும் குழந்தை ஆரம்பித்தது. 'அம்மாவும் அப்பாவும் காவியன் பட்டுக்குப் புறப்படுங்க. மற்றவங்க அவங்கவங்க வீட்டுக்குப் புறப்படுங்க. நான் சொல்ற வரைக்கும் நீங்க காவியன் பட்டுல தான் இருக்கணும். நீங்க அங்க போனதும் முதல்ல நாங்க இருந்த இடத்தில ஒரு வீட்டை திரும்பவும் கட்டணும். அதுக்குக் காலமாகும். அது வரை நடந்ததை சொல்லிப் பாட்டி வீட்ல தங்கிக்கோங்க. பாட்டி வீடு பக்கத்துல தான். சோ உங்களுக்கு மனேஜ் பண்ண வசதியா இருக்கும். புறப்படுங்க. இடையில ஏதும் தில்லுமுல்லுப் பண்ண நினைச்சு மாட்டிக்காதீங்க. நான் நாலு கொலை செஞ்சிருக்கன். அப்புறம் என்னாகும்னு உங்களுக்கே தெரியும்.'

குழந்தை சொல்படி எல்லோரும் தயாராக.... ஆதிரா மிதமிஞ்சிய வெறுப்போடு "அதை" நோக்கினாள். குழந்தைக்கு அது மிகுந்த வேதனையளிக்க தாயைக் கெஞ்சும் தோரணையோடு நோக்கியது. அதை அலட்சியமாக உதறித் தள்ளிய ஆதிரா... அம்மனை ஒரு இயலாமைப் பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்ப.... ஒரு வாகனம் காவியன்பட்டை நோக்கியும், ஏனையவை தத்தம் ஊர்களுக்கும் புறப்பட ஆரம்பித்தன.
 
Top