• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 13)

Saunthu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 20, 2021
52
16
8
Jaffna, Sri Lanka
காவியன்பட்டு. அந்தக் காலை வேளையில் அமைதியாக இருந்தது. கிராமத்துக்கே உரித்தான அழகும் அமைதியும் கொண்டு கம்பீரமாக நின்றிருந்தது. அக் கிராமத்தின் சற்று ஒதுக்குப் புறமிருந்த பழம்பெரும் வீட்டின் முன் நின்றிருந்தது கார். காரின் ஓசை கேட்டு வீட்டினுள் இருந்து வெளியே வந்திருந்தார் ஒரு பெண்மணி. கிட்டத்தட்டக் கலைவாணியை ஒத்த வயது. காரிலிருந்து இறங்கிய அவ்விருவரையும் பார்த்து அவரது புருவங்கள் கேள்வியாய் உயர்ந்தன.

'வணக்கம். நான் மித்ரன். இவங்க ஆதிரா. (ஒரு தடவ மனைவினு சொல்லி டோஸ் வாங்கினதே போதும் 😢). இங்க பக்கத்தில இருந்த பூர்வீகா குடும்பத்துக்குச் சொந்தக்காரங்க. அமைதியை விரும்பி இங்க வந்திருக்கோம். அவங்க இருந்த இடத்திலேயே ஒரு வீடு கட்டி வாழலாம்னு தோணுது. அந்த இடத்தை நாங்க வாங்கணும். அதோட பத்திரம் யார்கிட்ட இருக்குனு தெரியுமா?'

'கண்டிப்பாத் தம்பி. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி அந்த இடம் அவ்வளவு நல்லா இல்ல இப்போ. ஒரே பனங்காடா மண்டிக் கிடக்கு. கிணறு கூடப் பாவனைல இல்லாம ரொம்பத் தூர்ந்து போய்டிச்சு. ஆனா சில சில திருத்த வேலைகள் செஞ்சா ஓகே ஆகிடும். அங்க சொல்லக் கூடிய மாதிரி நல்லதா இருக்கிற ஒண்ணுனா ஒரு மாமரம் மட்டும் தான். இங்க இருந்து கொஞ்ச தூரம் தான். வாங்க நான் இடத்தைக் காட்டுறன். அதைப் பாத்துட்டு முடிவ சொல்லுங்க. உங்களுக்கு ஓகேனா மத்த விபரங்களைப் பேசலாம்.'

'இல்லங்க கண்டிப்பா நாங்க அந்த இடத்தை வாங்கணும். இது ஆதிராவோட அம்மாவின் ஆசையும் கூட. ஏன்னா பூர்வியும் அவங்களும் ஃபிரண்ட்ஸ். பூர்வி இருந்த இடம் கண்டிப்பாப் பாவனைல இருக்கணும்னு விரும்புறாங்க.சோ எங்களுக்கு அந்த இடம் நிச்சயம் வேணும்.'

'ஓ அப்பிடியா? பூர்வி அக்கா பத்தி அம்மா சொல்லித்தான் எனக்குத் தெரியும். அம்மாவோட அவங்க ரொம்ப நல்ல மாதிரி. பூர்வி அக்கா... உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் தானே? பூர்வி அக்கா இப்போ உயிரோட இல்ல. எங்கம்மாவும் தான்' என்று பெருமூச்செறிந்த அவர் தொடர்ந்து கேட்டார். 'இவ்ளோ காலமில்லாம இப்போ எதுக்கு அந்த இடத்தைக் கேக்கிறீங்க?'

இந்தக் கேள்வி ஆதிராவுக்கு எரிச்சலூட்டியது. 'இவ்வளவு நாளில்லாம இப்போ தானே அந்தப் பிசாசு எங்களைத் தேடி வந்திருக்கு' என்று சொல்ல வேண்டுமென்றிருந்தது. கடினப்பட்டு மனதை அடக்கிக் கொண்டாள்.

'ஓ ரொம்பவும் சாரிங்க பாட்டி தவறிட்டாங்களா? எங்களுக்குத் தெரியாது. ஆராவோட அம்மாக்கு முதல்ல இருந்தே இந்த இடத்தை வாங்கணும்னு ஆசை இருந்திச்சு. எங்களுக்குத் தான் நேரம் கைகூடி வரல. இப்போதான் கொஞ்சம் ஓகேவாச்சு. அதான் உடனே கிளம்பி வந்திட்டோம்.'

' பரவால்லத் தம்பி. அம்மா தவறி இப்போ வருஷக் கணக்காச்சு. நித்திரேலயே நிம்மதியான சாவு. எத்தனை பேருக்குக் கிடைக்கும் சாெல்லுங்க.அப்பிடீனா சரி தம்பி. அந்தக் காணி எங்களோடது தான். பூர்வி அக்கா இங்க வரும்போது நிர்க்கதியாகத் தான் நின்னிருக்காங்க. அதனால தான், அவங்களால முடிஞ்சளவுக்கு ஒரு குடிசையைப் போட்டு வாழ்றதுக்கு அம்மா அந்த இடத்தைக் குடுத்தாங்க. உங்களுக்கு அந்த இடம் நிரந்தரமா வேணும்னா எழுதிக்கலாம். பிரச்சின இல்ல. நாங்க முதல் வெளியூர்ல இருந்தோம். ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால அம்மா தவறிட்டாங்க. அப்போ இங்கே வந்தோம். இவருக்கும் இங்கயே வேலை மாற்றலாகிட்டதால இப்போ இங்கயே இருக்கோம். எனக்கு ஒரு மகன். ஒரு மகள். ரெண்டு பேருமே வெளியூர்ல தான் இருக்காங்க. வேலை பாத்திட்டிருங்காங்க. நானும் கணவரும் தான் இங்க எண்டதால காணியை சரியாப் பாக்க முடியல. ரொம்ப சாரி தம்பி'

'பரவால்லங்க. நாங்க பாத்துக்கிறோம். இங்க வேலைக்கு எங்க ஆள் கிடைப்பாங்கனு சொன்னீங்கனா அவங்களைப் பிடிச்சு உடனே வேலையை ஆரம்பிச்சிடலாம்.'

'கண்டிப்பாத் தம்பி. உனக்கு இந்த இடத்தை வாங்கிறதில இஷ்டம் இல்லையாமா? வந்ததுலேருந்து முகமே சரியில்லை.'

அவர் கேட்கத்தான் ஏதோ சிந்தனையிலிருந்த ஆதிரா தன்னிலை பெற்றாள்.
'ச்ச ச்ச... அப்பிடி ஒண்ணுமில்லம்மா. எங்க ஊருக்கும் இந்த ஊருக்கும் நிறையாாாா தூரமா? அதான் லைட்டாக் களைப்பா இருக்கு'
அவள் விழி விரித்துச் சொன்ன அழகில் மயங்கித்தான் போனான் மித்ரன். அவளை அதுவரை அப்படிப் பார்வை பார்த்ததில்லை அவன். ஆனால் இனி? அவள் அவன் சொத்தல்லவா? நினைக்க நினைக்கவே மனதின் ஓரத்தில் அகரன் எட்டிப் பார்த்தான். எனவே தற்காலிகமாக தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டான் மித்ரன்.

'என்னைச் சொல்லணும். வந்த உங்களை வாசல்ல வச்சே பேசிட்டிருக்கன். உள்ள வாங்க ரெண்டு பேரும். காணி வேலை முடிச்சு உங்க வீடுனு நீங்க போற வரைக்கும் இதுதான் உங்க வீடு.' என்று கூறி மனதார உபசரித்தார் அப்பெண்மணி.
பின்னேரம் ஆனதும் அவரது கணவனும் வந்து சேர்ந்துவிட நல்லாவே சென்றது பொழுது. அவர்களிருவரும் இவர்களிருவரையும் தமது சொந்தப் பிள்ளைகளாகவே பார்த்துப் பழக ஆரம்பித்து விட்டனர். அடுத்த இரு வாரங்களில் காணி கைக்கு வந்து திருத்த வேலைகளும் ஆரம்பித்து விட்டன. திருத்த வேலைகள் ஆரம்பித்ததும் இடையிடையே அவ்விடம் சென்று வேலையாட்களின் வேலையைப் பார்ப்பது ஆதிராவின் வழக்கம். அவ்வாறு தான் அன்றும் நடந்து கொண்டிருந்தது. வேலைகளைப் பார்வையிட்ட படி நின்ற ஆதிரா திடீரென வேலையாள் ஒருவரை அழைத்தாள்.
'அண்ணா இங்க வாங்க'

'சொல்லுங்கம்மா'

'இது ஏன் இங்க இருக்கு? வெட்டுங்க. வெட்டி மொத்தமா எல்லாத்தையும் சுத்தம்
பண்ணுங்க.'

அவள் சொன்னதைக் கேட்ட வேலையாள் அதிர்ந்தார்.
'என்னம்மா சொல்றீங்க? இந்த மாமரத்தையா வெட்ட சொல்றீங்க. அது நல்லாத் தானே இருக்குங்கம்மா. நாங்க வேலை செய்யும் போது ஐயாவ (மித்ரன்) கேட்டு பழம் பறிச்சு சாப்டுவோம். அப்பிடி ஒரு சுவையான பழத்தை நாங்க சாப்பிட்டதே இல்ல. ஐயா, நாங்க வீட்ட போகும் போது எங்க புள்ள குட்டியளுக்கும் பறிச்சிட்டுப் போக சொல்லுவாங்க. அதை சாப்பிட்ட எம் பையன் தினமும் பழம் கேக்குறான். நீங்க சாப்பிட்டா இப்பிடி சொல்ல மாட்டீங்கம்மா. ரொம்ப அருமையான பழம். இருங்க நான் பறிச்சுத் தாறேன்' என்று மாமரத்தை நோக்கிச் சென்ற அவரை இடைநிறுத்தியது ஆதிராவின் அதட்டலான குரல்.

'நில்லுங்க'

அவர் திடுக்கிட்டுத் திரும்பினார்.
'சொல்லுங்கம்மா. கூப்பிட்டீங்களா?'

'ஆமா. இது என்னோட இடமா இல்ல உங்களோட இடமா? என்னோட இஷ்டத்துக்கு நீங்க வேலை செய்றதுன்னா செய்ங்க. இல்லனா கிளம்புங்க இங்கருந்து.'

அவரின் முகம் கறுத்து விட்டது. ஒரு மாமரம் அதுவும் நல்ல ஒரு மாமரத்தை வெட்ட சொல்லுவதும், நிதர்சனத்தைப் புரிய வைக்க முயன்ற தன்னை அதட்டி அடக்குவதும் ஏனென்று சத்தியமாகப் புரியவில்லை அவருக்கு.

அவர் பதில் சொல்லு முன்னரே அவ்விடம் வந்தான் மித்ரன். 'தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணே. வீடு கட்டும் போது அந்த மரம் தடையா இருக்குமோன்னுதான் அவங்க அப்பிடிக் கேட்டுட்டாங்க. மற்றபடி ஒண்ணுல்ல'

'ஓ அப்பிடீங்களாய்யா? வீட்டுக்கு ஓரமாத் தான் மரம் இருக்கும். வீட்டை எந்த விதத்திலயும் பாதிக்காது பயப்பிடாதீங்க. அஸ்திவாரம் போடும் போது புரியும் உங்களுக்கு.'

அவரது பதிலை ஆதிரா கண்டுகொள்ளாத போதிலும் தனது பதிலைத் திருப்தியாகக் கொடுத்த நிம்மதியில் வேலையை மீண்டும் ஆரம்பித்தார் அவர்.
ஆதிராவைச் சற்றுத் தொலைவில் கூட்டிச் சென்றான் மித்ரன்.

'பாரு ஆதிரா. பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்குக் கிடைக்கல. அந்த வேதனை கோபம் எல்லாம் நிச்சயம் உனக்குள்ள இருக்கும். அதை மதிச்சுத்தான் நான் நீ என்ன பண்ணாலுமே கண்டுக்கிறதில்ல. இதோட நிறுத்திக்க பிளீஸ். அது நம்ம குழந்தை ஆதிரா. எதுக்குனே தெரியல இப்பிடி அலைஞ்சிட்டிருக்கு.' சொல்லும் போதே குரல் உடைந்தது மித்ரனுக்கு.
' தான் தூங்குறதுக்கு இடமில்ல. அந்த மாமரத்தில தூங்குவன்னு சொல்லுது. அதுக்கப்புறம் கூட இரக்கம் வரலயா உனக்கு? இந்த வார்த்தை அது சொல்லும்போது அது என்னோட குழந்தைனு எனக்குத் தெரியாது; ஆனா அப்பவே எவ்ளோ வலிச்சுது தெரியுமா? எனக்கும் உனக்கும் தான் கல்யாணம் நடக்கணும்னு அது சொன்னதுக்கு..... முன்ஜென்மத்தில நீ என்கிட்ட 'உங்களுக்கே எத்தனை பிறப்பெடுத்தாலும் மனைவியா வரணும்'னு சொன்னது மட்டும் காரணமில்லைனு தோணுது எனக்கு. ஒண்ணக் கவனிச்சியா? உன்னோட வெறுப்பான பார்வையை அதால தாங்கிக்கவே முடியல. "அம்மா" "அம்மா" என்று மூச்சுக்கு முந்நூறு தடவ சொல்லுது. உன்னோட அன்புக்கு ஏங்குது. அப்பிடிப்பட்ட குழந்தை நீ எவ்வளவோ கவலைப்படுவனு தெரிஞ்சும் நீ விரும்பாத ஒருத்தனைக் கல்யாணம் பண்ணக் கட்டாயப்படுத்துமா? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா? வாணியம்மா உன்னை அடிக்கும் போது யாருமே, ஏன் உங்கண்ணன் கூட ரெண்டு செக்கன் நேரமெடுத்துத் தான் பிரச்சினையைத் தீர்க்க வந்தார். ஆனா ' எங்கம்மாவை அடிக்காதீங்க'னு அந்தக் குழந்தை கையெடுத்துக் கும்பிட்டு அழுதிச்சுத் தெரியுமா? ஒவ்வொருத்தரையும் கெஞ்சுற மாதிரி, கோபப்படுற மாதிரி, கருணையாேட.... இப்பிடி வித்தியாசமான பார்வை பாத்த அது உன்னை மட்டும் அன்பைத் தவிர வேற பார்வை பார்க்கல. கடைசி வரைக்கும் தன்னோட நிலையைப் புரிஞ்சுக்க மாட்டியானு ரொம்ப ஏக்கத்தோட பாத்திச்சு. எனக்குக் கூட இது கட்டாயக் கல்யாணம் தான் ஆதிரா. உங்க கூடப் பூசைக்கு வரும்போது சத்தியமா ஒரு கல்யாணம் நடக்கும்ன எதிர்பார்ப்போட நான் வரல. அபிக்கோ அகரனுக்கோ ஏதாவது உதவி தேவைப்பட்டா செய்வம்ன நோக்கத்தோட மட்டும் தான் வந்தன். அகரன் உன்னைப் பற்றிச் சொல்லிச் சொல்லி உன் மேல ஒரு விருப்பம் எனக்கு இருந்திச்சு. ஆனா சத்தியமா அது காதலில்லை. காரணமில்லாம உன்னை வெறுக்கிறதுக்கு ஒண்ணுமில்லையே. அப்பிடி ஒரு சாதாரண விருப்பம் தான். ஆனா இப்போ சொல்றன் ஆதிரா. நான் இந்த உலகித்திலேயே என்னோட குடும்பத்தை நேசிக்கிற அளவுக்கு ஒருத்தியை நேசிக்கிறன்னா அது நீ தான். நீ மட்டும் தான். இந்த நிமிஷம் உனக்காக நான் என்ன வேணாலும் செய்வன். அகரன் எனக்கு நல்லவொரு நண்பன் ஆதிரா. அவனுக்குக் கல்யாணம் நடக்குற வரை, நீ என்னைப் புருஷனா முழுசா ஏத்துக்கிற வரை தப்பான நோக்கத்தோட கண்டிப்பா உன்னைத் தொட மாட்டன். ஏன்னா ஒரு பாெண்ணை வெறும் உடம்பா மட்டும் பாக்குற ஈனப்பிறவி இல்ல நான். ஐ லவ் யூ சோ மச். உன்னை மட்டுமில்ல உன்னோட உணர்வுகளையும் சேர்த்துக் காதலிக்கிறன். என்னைக்காவது ஒரு நாள் நமக்கு எல்லாம் புரிய வரும் என்ட நமபிக்கை எனக்கிருக்கு. அப்போ உனக்கும் புரியும் இப்போ நீ செய்ய நினைச்சதெல்லாம் தப்புனு. நீ அதை நினைச்சு வருந்தும் போது.... அப்போ கூட நீ தனிமையில இருக்க நான் விடமாட்டன். நீ ஆதரவா சாய்றதுக்கு என்னோட தோள் எப்பவும் இருக்கும். எவ்ளோ நாளானாலும் பரவாயில்லை. நான் காத்திருப்பன் உனக்காக' என்று முழு மூச்சாகக் கூறி முடித்தவன் வேகமாக அங்கிருந்து புறப்பட..... இதைச் சற்றும் எதிர்பாராத ஆதிரா விக்கித்துப் போய் நின்றிருந்தாள்.