• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 15)

Saunthu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 20, 2021
52
16
8
Jaffna, Sri Lanka
மறுநாள் காலையிலேயே வீடு பரபரப்பாக இருந்தது. எல்லோரும் சந்திரன் சொன்ன காட்டுக்குச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அதே நேரம் இனியனும் கலைவாணியும் ஆதிராவைப் பார்ப்பதற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.
காலை ஆறு மணியளவில் ஊரின் ஒதுக்குப் புறமிருந்த காட்டில் நின்றிருந்தனர் மித்ரன், ஆதிரா, சந்திரன், பூரணி நால்வரும். சந்திரன் சொன்னது போலவே அழகான அமைதியான இடம். பறவைகளின் கீச்சொலியும், பூத்துக் குலுங்கி காற்றில் எங்கெங்கும் வாசனை பரப்பிக் கொண்டிருந்த மலர்களும், மெல்லிய ஓசையுடன் ஓடிக் கொண்டிருந்த அருவியும், அடர்த்தியாக வளர்ந்திருந்த மரஞ்செடிகெடிகளும் மனதினுள் பரவசத்தை ஏற்படுத்தின. மித்ரனுக்கும் ஆதிராவுக்கும் தனிமையை அளித்து, தம் காதலை வளர்த்துக் கொள்ள மெல்ல நழுவிக் கொண்டனர் பூரணியும், சந்திரனும். ஆதிராவும் மித்ரனும் மெல்லிய இடைவெளி விட்டு நடந்து கொண்டிருந்தனர். ஆதிராவுக்கு இயல்பிலேயே நல்ல ரசனை உண்டு. சுற்றியுள்ள இயற்கையும் அவளின் விருப்பத்திற்கேற்ப இருக்கவே தன்னிலை மறந்து ரசித்திருந்தாள் பெண்ணவள். மித்ரனுக்கும் இயற்கை ரசனை அதிகமுண்டுதான். அதனாலேயோ என்னமோ அவனோட ரசனை முழுக்க இயற்கை அன்னையின் கொடையான ஆராவின் மேல் இருந்தது. அவனும் தன்னிலை மறந்து பெண்ணவளை ரசித்துக் கொண்டிருந்தான்.
எத்தனை பேரழகு இவள்? வெறும் உடலழகு அழகல்ல. அவனது ரசனை அவள் உடலிலும் இல்லை. மாறாக மனது. தன்னவன் என ஒருத்தனை நினைத்திருந்தாள். அவனை உருகி உருகிக் காதலித்தாள். அப்போது ஒருவிதமான அழகு. அவனைப் பிரிந்தபின் இன்னொருவன் தன் கிட்டவும் விடாமல் விலகி நிற்கிறாள். இப்போது இன்னொரு விதமான அழகு. ஆராவைப் பார்க்க அவ்வப்போது மித்ரனையும் அழைத்துச் செல்வான் அகரன். அப்போதெல்லாம் எவ்வளவு அழகாகச் சிரிப்பாள். அதில் ஒரு வெட்கமும் கூட இழையோடும். மித்ரனுக்குக் கூடத் தோன்றும்; தனக்கென்றும் ஒருத்தி இருந்து, அவளும் அவனுக்காக அப்படிச் சிரிக்க வேண்டும்; அவனை வெட்கத்தோடு பார்க்க வேண்டும், எதிர்பாரா முத்தங்கள் வழங்க வேண்டும், ஊடல் கூடலென காதலில் மூழ்கித் திளைக்க வேண்டும், இவ்வாறு எத்தனையோ எண்ணங்கள். ஆனால் ஆதிராதான் அவன் மனைவி என்ற நோக்கில் என்றுமே பார்த்ததில்லை. ஏன் நண்பர்கள் என்று கூடப் பழகியதில்லை. சும்மா தெரிந்தவர்கள் என்று கூறுமளவுதான் இருந்தது அவர்களது உறவு. தன்னவனுடன் நேரத்தைச் செலவழிக்க மித்ரனைக் கழட்டி விட மாட்டாள் ஆதிரா. அதே நேரம் மித்ரனோடு அளவுக்கதிகமாகப் பேசவும் மாட்டாள். அளவான பேச்சோடு நிறுத்திக் கொள்வாள். என்றாவது அகரனுடன் மித்ரன் வரும் சமயம், ஆதிராவோடு அபியும் வந்திருந்தால்.... அபியுடன் மித்ரன் இருக்க... ஆதிராவும் அகரனும் தனியாகச் சென்று இருப்பதுண்டு. எதேச்சையாக அவர்கள்புறம் திரும்பினால் அவர்கள் ஏதோ கதைப்பதும் சிரிப்பதும் நன்றாகத் தெரியும். ஆனால் அநாகரிகமாக அவர்களையே தொடர்ந்து பார்த்ததில்லை. ஆனாலும் தோன்றும்; எல்லோரும் இருக்கும் போது அமைதியாகவும் பண்பாகவும் நடந்து கொள்ளும் பெண்.... தனக்கு நெருக்கமானவருடன் இருக்கும் போது மட்டும் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள்? பொதுவாகப்பெண்களின் இயல்பே இதுதான் போலும். தனக்கு நெருக்கமானவருடன் அளவுக்கதிகமாகக் கதைப்பதும், செல்லச் சண்டைகள் பிடிப்பதும், பிழையென்று தெரிந்தும் வாக்குவாதம் செய்வதும், பின் செல்லம் கொஞ்சி சமாளிப்பதும்.... அப்பப்பா இன்னும் எத்தனை எத்தனை? பெண்ணென்றாலே அழகுதான். காதலிக்கும் போது காதலியாகத் தனி அழகு. மனைவியாகும் போது கணவனுக்கே உரித்தான ஓரழகு. தாயாகும் போது பெண்மைக்கே உரித்தான பேரழகு. மொத்தத்தில் பெண்ணென்பவள் இயற்கை அன்னை அச்சிட்ட ஓர் அழகான புத்தகம். அகரனைப் பார்த்துத்தான் மித்ரனுக்கு காதலிக்கும் ஆசையே வந்தது. ஆதிராவைப் பார்த்துத்தான் தன்னவள் எப்படி எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்ற கனவு வந்தது.
எல்லோரிடமும் அமைதியாக, பண்பாக, விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். ஆனால் தன்னிடம் மட்டும் அடம்பிடிக்க வேண்டும்; அவள் ஆசைப்படுபவற்றை அவன் நிறைவேற்ற வேண்டும்; இவனை உரிமையோடு அதட்டி அவள் காரியம் சாதிக்க வேண்டும்; அவளது குறும்புகளை இவன் ரசிக்க வேண்டும்; காதலில் சில காலம் கழித்து அவளை மனைவியாக்கித் தொடர்ந்து காதல் செய்ய வேண்டும்; மனைவிக்கு ஏற்ற கணவனாக அவன் நடந்து கொள்ள வேண்டும்; காலையில் சண்டை பிடித்தால் மாலையில் சேர்ந்துவிட வேண்டும்; உனது எனதென்ற பிரிவிருக்கக் கூடாது; அவரவர் சுதந்திரம் அவரவர்க்கு இருக்க வேண்டும்; மனைவியாகிய பின் அவளது விருப்பத்துடன் இருவரும் ஒருவராக வேண்டும்; தம்மிருவர் பிள்ளையை அவள் ஒருவளாகத் தாங்கி நிற்கும் போது... 'உனக்கு நானிருக்கிறேன்' என்ற தைரியத்தை அவன் அவளுக்குத் தர வேண்டும்; அவளிடம் அலட்சியமின்றி நடந்து கொள்ள வேண்டும்; சாகும் வரை அவளைக் காதல் செய்ய வேண்டும்; கர்ப்பவதிக்கான வலிகளை அவள் ஏற்றுக் கலங்கி நிற்கும்போது... அவளைத் தூணாய் நின்று காக்க வேண்டும்; குழந்தை பிறந்தவுடன் அவளை விட்டுவிடக் கூடாது; 'எது எவ்வாறு மாறினாலும் உன் மேல் நான் கொண்ட காதல் எப்போதும் அழியாது' என்ற நம்பிக்கையை அவளுக்குத் தர வேண்டும்; குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து, அவர்களுக்கென ஒரு நிலையில் அவர்களை இருக்கவைத்து, இன்னொருவர் கையில் பிடித்துக் கொடுத்து பேரன் பேத்திகளை அவனும் அவளுமாக அள்ளிக் கொஞ்சும் நிலை வர வேண்டும். அவளின் ஒவ்வொரு நிலையிலும் அவளைக் காதல் செய்து... அவன் இறக்க முதலே அவள் இறக்க வேண்டும்; ஏனெனில் அவனில்லாத தனிமை அவளுக்கு என்றும் வலிக்கக்கூடாது; அவன் காதல் இனி இல்லை என்ற எண்ணம் அவளுக்கு வரவே கூடாது... மரணவேதனை அனுபவித்து விடுவாள்; அவள் இறந்த அடுத்த நொடி அவனும் இறக்க வேண்டும்; இப்படிக் கனவுகள் அவனிடம் ஏராளம் இருந்தன. எல்லாக் கனவுகளும் அன்றைய திருமணத்தில் தவிடுபொடியானது உண்மைதான். ஆனால் விதியின் பயனாகக் கிடைத்த மனைவியவளைத் துன்பத்திலிருந்து காக்க நினைத்தான் மன்னவனவன். ஆனாலும் அவள் வெளிவருவதாக இல்லையே.
அகரனிடம் தொடர்பு கொண்டு கதைத்ததில் கூட எந்தவித முன்னேற்றமும் இல்லை. கல்யாணப் பேச்சை எடுத்தாலே குரல் மாறுகிறது. ஆனால் மித்ரன் மேலும் தவறுதான். பின்னே காதல் கைவிட்டுப்போன கொஞ்சக் காலத்திலேயே ஆரா மாற வேண்டுமென்றும், அகரன் திருமணத்திற்கு ஒப்ப வேண்டுமென்றும் நினைப்பது எவ்விதத்தில் நியாயம்? ஆனால் அவன் தனக்காக மட்டும் இந்தத் திடீர் மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கவில்லை. எங்கே ஆரா கிடைக்காத கவலையில் அகரன் ஏதும் செய்துகொண்டு விடுவானோ என்ற பயம். அவன் தாடியும் மாறாட்டமுமாகத் திரிவதும்,எவ்வளவோ எடுத்துக் கூறியும் திருந்தாததாக இருந்ததுமாகக் கூறியது இனியனின் பேச்சு. அவனை எப்படியாயினும் மாற்றிவிட வேண்டுமென்ற எண்ணம் மித்ரனுக்கு.
இவ்வாறு ஏதேதோ எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தவனை நிஜ உலகிற்கு வர வைத்தது ஆராவின் அழைப்பு.

'மித்ரன்'

மித்ரனுக்கு தலை கால் புரியவில்லை. பின்னே கல்யாணத்தின் பின் ஏறெடுத்தும் பார்க்காதவள் இன்று பெயர் சொல்லி அழைத்தால் புழுகம் வராதா என்ன? ஆனால் அவள் அழைத்தாளா இல்லைப் பிரம்மையா? நிஜம் தான் என்றது ஆராவின் தொடர்ந்த அழைப்பு.

'மித்ரன்ன்ன்'

'சொல்லுமா'

'அங்க பாருங்களேன்'
'என்ன என்னையே பாத்திட்டிருக்கீங்க? அங்க பாருங்க'

அவள் கைகட்டிய திசையில் பார்த்த மித்ரன் ரொம்ப சந்தோசப்பட்டான். அவனுக்கு மிகவும் பிடித்தமான மஜந்தா நிற கோலியாஸ் கொத்துக் கொத்தாகப் பூத்து நின்றிருந்தது. பார்க்கவே அழகாக பூங்கொத்தைப் போல் இருந்தது.
மித்ரன் மனதினுள் 'ஓ! இவளுக்கும் இந்தப் பூ பிடிக்குமா?'
'உனக்கு அந்தப் பூ பிடிக்குமா கண்ணம்மா? ரொம்ப அழகான பூ இல்லையா?'

ஏதோ அவள் உடல் இரு முறை குலுங்கியது.
'இ...இல்ல மித்...மித்ரன்.... வேணாம். நான் சும்மா அழகா இருக்கேனு காட்டினன். பறிக்க எல்லாம் வேணாம்.' முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

இவளுக்கு என்னாச்சு? இப்ப தானே நல்லாக் கதைச்சா. அப்புறம் ஏன் இப்பிடி நடந்துக்கிறா? என்று குழம்பித்தான் போனான் மித்ரன். 'சரி அவளுக்குத்தான் பிடிச்சிருக்கே. நாமளே பறிச்சுக் குடுப்பம்'னு நினைத்தான் அவன்.

'ஆராம்மா... இந்தாங்க' காதருகே குரல் கேட்டுத் திரும்பினாள் ஆதிரா. அழகாகச் சிரித்தபடி அப் பூங்கொத்தை நீட்டினான் மித்ரன். அந்த நிகழ்வில் திணறித்தான் போனாள் பெண்ணவள்.
'சா... சாரி மித்ரன். உங்களை நான் கேட்டிருக்கக் கூடாது. திடீர்னு பாத்த சந்தோசத்தில கேட்டிட்டன். எனக்கு அந்தப் பூ ரொம்பப் பிடிக்கும். ஆனா வேணாம்.

'அதுதான் ஏன்?'

ஏன்னா.... ஏன்னா... அகரன் என்கிட்ட அவரோட லவ்வ முதல் முதல்ல சொல்லும்போது அந்தப் பூத்தான் குடுத்தார். அவருக்கு அது ரொம்பப் பிடிக்கும். அப்புறம் தான் எனக்கு ஃபேவரிட்(favourite) ஆச்சு. சாரி உங்கள கஷ்டப்படுத்த சொல்லல. ஆனா நான் வேணாம்னு சொன்னப்பவும் நீங்க விடல. அதான் சொல்ல வேண்டியதாப் போச்சு. என்னோட தப்புத்தான். ரொம்ப ரொம்ப சாரி.'

'பரவால்லங்க. நீங்க வேணாம்னு சொல்லியும் பறிச்சிட்டு வந்தது என் தப்புத்தான். நீங்க கவலைப்படாதீங்க' சொல்லி விட்டு வேறுபுறம் நடந்தான் மித்ரன். அழகாய் நேர்த்தியாய் அடுக்கப்பட்டு அவன் கைகளில் மஞ்சம் கொண்டிருந்த பூங்கொத்து தரையில் விழுந்து கலைந்து சிதறியது.

மித்ரனின் மரியாதைக்குரிய அழைப்பு ஆதிராவுக்கு ஒரு அந்நியத்தை ஏற்படுத்தியதை உணர்ந்தாள் அவள்.

'மித்ரன்'

'கூப்பிட்டீங்களா'

'ஆமா. உங்க கூடக் கொஞ்சம் பேசணும்.'

'சொல்லுங்க?'

'அப்பிடி உட்கார்ந்து பேசுவமா?'

மித்ரன் அமர, சற்றுத் தள்ளி அமர்ந்தாள் ஆதிரா'

'நீங்க என்னை எவ்வளவு லவ் பண்றீங்கனு எனக்குத் தெரியல மித்ரன். ஆனா என்னோட மனசில நீங்க இல்ல. இதை உங்களை கஷ்டப்படுத்தனும்னு சொல்லல. என்னோட மனசில இருக்கிறத சொல்றன். அகரனும் நானும் அப்பிடி இருந்தோம் மித்ரன். ஏதோ ஒரு றீசனுக்காகப் பிரிஞ்சிட்டம்னு அவரைத் தூக்கிப் போட்டுட்டு இன்னொருத்தரை மனசளவில ஏத்துக்க நான் தயாரா இல்ல. உங்க மனைவி பற்றி உங்களுக்குள்ள என்ன எதிர்பார்ப்பு இருந்திச்சுனு எனக்குத் தெரியல. நீங்க யாரையாவது விரும்பி... என்னால அவங்க கூடச் சேர முடியலனா உண்மையாவே அதுக்கு நான் வருந்துறன். ஆனா நீங்க என்மேல காட்டுற அக்கறையும், பாசமும் அப்பிடி இருக்காதுனு நினைக்க வைக்குது. அதோட அகரனும் உங்களுக்குனு ஒராள நீங்க தேர்ந்தெடுத்திருக்கிறதா என்கிட்ட சொல்லல. சோ உங்களுக்குனு இதுக்கு முதல் ஒரு லவ் இருக்கலனு நம்பிறன்.'

'நீங்க நினைக்கிறது சரிதான் ஆதிரா. எனக்குனு ஒரு காலகட்டத்துக்கப்புறம் நான் எதையும் ஆசைப்பட்டதில்லை. ஏன்னா அதுக்கு முதல் நான் ஆசைப்பட்ட எதுவுமே எனக்குக் கிடைச்சதில்லை. நான் பிறந்து ஒரு அஞ்சு வயசு வரைக்கும் ரொம்ப சந்தோசமாத்தான் இருந்தன். அம்மாக்கும் அப்பாக்கும் நான் ஒரே பையன். ரொம்பச் செல்லமாப் பாத்துக்கிட்டாங்க என்னை. தினம் அம்மா மடில தான் தூங்குவன். அப்பாவோட கொஞ்சலோட தான் எழும்புவன். கவலைனா என்னனு தெரியாத வாழ்க்கை. அம்மாவும் அப்பாவும் வங்கில வேலை பாத்தாங்க. காலைல ஒரு ஒன்பது மணி அப்பிடிக் கிளம்பிப் போனா சாயந்தரம் வீட்டுக்கு வர ஆறு மணியாகும். அது வரை நான் அபி வீட்ல அபி கூட விளையாடிட்டிருப்பன். அபியும் என்னை "அண்ணா அண்ணா"னு வளைய வந்திட்டே இருப்பா. அபியோட அம்மாவும் அப்பாவும் என்னையும் அவங்களோட பையனாவே பாத்துப்பாங்க. அதனால எனக்கு அங்க அந்நியமாத் தெரியல. ஒரு நாள் வேலைக்குப் போன அப்பாவும் அம்மாவும் திரும்பி வரல. அபியோட அப்பா ஃபோன் பண்ணி விசாரிச்சதுக்கு அவங்க இறந்திட்டாங்க எண்ட செய்தி தான் வந்திச்சு. அவங்களட்டத் தகவல் கேட்டு அவங்க சொன்ன ஹாஸ்பிட்டல் (hospital) போய் விசாரிச்சப்ப தான் தெரிஞ்சுது அவங்க வரும் போது பிரேக் பெய்லியராகி (break failure) அக்சிடெண்ட் (accident) ஆச்சுனு. கடைசி மூச்சைப் பிடிச்சிக்கிட்டிருந்து அப்பா கடைசியா இத சொன்னார், அம்மா கடைசியா அத சொன்னாங்கனு நினைச்சுக்கிட்டிருக்கிறதுக்கு எதுவுமே இல்ல என்கிட்ட. ஏன்னா நான் அவங்களைப் போய்ப் பார்க்கும் போதே அவங்க இந்த உலகத்தில இல்ல. அமைதியான அவங்க முகம் கடைசி நேரத்திலயும் அதே அமைதியோடவே பிரிஞ்சு போய்டிச்சு. இடிஞ்சு போய் உட்காந்திருந்தன். அபியோட அம்மாவும் அப்பாவும் தான் என்னைத் தேத்தி ஆறுதல் சொன்னாங்க. நாதியற்ற எனக்கு எல்லாமாவே இருந்தவங்க அவங்க தான். அவங்க வீட்ல தான் சாப்பாடு தூக்கம் எல்லாமே. அபியும் என்னை அவளோட சொந்த அண்ணனாவே பார்ப்பா. சோ திரும்பவும் எனக்கொரு குடும்பம் கிடைச்சுது. ஆனா அம்மா அப்பா போனதுக்கப்புறம் நான் அவங்க யார்டயும் அது வேணும் இது வேணும்னு கேட்டதில்லை. அவங்க அடிக்கடி கேப்பாங்க என்ன வேணும்னு... நான் எதுவுமேயில்லனு ஒதுங்கிப்பன். என்னை வளர்க்கிறதோட சேர்த்து வேற செலவையும் அவங்களுக்கு வைக்க வேணாம்றது என்னோட எண்ணம். ஆனா அவங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனாலும் சின்னச் சின்ன விருப்பங்களைக் கூட அவங்ககிட்ட சொல்லாம மறைச்சிருக்கன். இப்போ கூட நிறைய இருக்கு சின்ன வயசில நான் ஆசைப்பட்டுக் கிடைக்காத எவ்வளவோ விஷயங்கள். குட்டியா ஒரு சிம்னி விளக்கு, அத திருப்பி விட்டா லைட் எரியும் பார்க்க நல்லாருக்கும்... அந்த விளக்கு; வண்ணத்துப் பூச்சி டிசைன் போட்ட சின்னக் கப் ஒண்ணு கோயில் திருவிழால பாத்தன்... அது; மலைல இருந்து அரிவி கொட்டுற மாதிரி இயற்கைச் சூழலோட கூடின ஒரு அமைப்பு. இப்பிடி ஏராளமா இருக்கு. அவங்க எனக்கு நிறைய வாங்கித் தந்திருக்காங்க விளையாட்டுச் சாமான்லாம். ஆனா எனக்கு என்ன பிடிக்கும்னு நான் சொல்லாம அவங்களுக்குத் தெரியாதுல. ஆனாலும் அவங்க கூட நான் சந்தோசமாத் தான் இருந்தன். இப்போ கைநிறையக் காசு இருக்கு; விருப்பப்பட்டதை வாங்கிற அளவுக்கு... ஆனா விருப்பம் தான் விலை குடுத்து வாங்கிற அளவில இல்ல. (அவன் தன்னைத் தான் சொல்கிறான் என்பது தெளிவாகப் புரிந்தது ஆராவுக்கு) அப்புறம் ஸ்கூல்ல பெஸ்ட் ஃபிரண்ட்டா அகரன் கிடைச்சான். அண்ணன் தம்பி மாதிரிப் பழகினோம். எல்லாத்திலயும் ஒண்ணா இருப்போம்; ஒருத்தரை ஒருத்தர் விட்டு் கொடுக்க மாட்டோம்; அப்பிடி ரொம்பக் கிளோஸ். படிச்சு முடிச்சதுக்கப்புறமும் எங்க நட்பு மாறல. உன்னை விரும்புறதா அவன் முதல்ல என்கிட்டத்தான் சொன்னான். நான் அவனோட வீட்ல கதைச்சு அவங்கள ஒத்துக்கவச்ச பிறகு தான், அவங்க உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டாங்க. அகரனையும் உங்களையும் பார்த்துத் தான் எனக்குக் காதல்ல ஆசை வந்திச்சு. ஆனா நீங்க தான் என் மனைவியா வருவீங்கனு கனவில கூட நினைக்கல. என்னோட மனைவி பற்றி எவ்வளவோ கனவு இருந்திச்சு எனக்குள்ள. அப்பிடி ஒருத்தியத் தேடிக் கண்டுபிடிச்சு அவளுக்கு எல்லாமா நான் இருக்கணும்னு ஆசைப்பட்டன். ஏனோ தெரியல அந்தக் குழந்தையை வெறுக்கத் தோணல எனக்கு. உனக்கு எப்பவும் எல்லாமாவும் நான் இருப்பன். எடுத்துக்கிறதும் எடுத்துக்காததும் உன்னோட விருப்பம். நீ சந்தோசமா இருக்கணும். என்னோட அகரனும் தான். உங்க ரெண்டு பேருக்காக நான் என்ன வேணாலும் செய்வன்.

'ரொம்ப சாரி மித்ரன். "சாரி", இந்த வார்த்தை அடிக்கடி சொல்றன் உங்ககிட்ட. அகரன் உங்களப் பற்றி நிறைய சொல்லி இருக்கார். ஆனா உங்க பெருமைகளை மட்டும் தான் சொன்னார். நான் கொஞ்சம் சென்ஸிட்டிவ் டைப். அதனால சொல்லலயோ தெரில. ஆனா உங்க அன்புக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏத்த ஒரு மனைவி கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். நாங்க முதல்ல ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவம். நல்ல ஃபிரண்ட்ஸா இருப்பம். அப்புறம் காதல்லாம் அதுவா வந்தாப் பாத்துக்கலாம். அப்புறம் அந்தக் குழந்தைக்கு மட்டும் என்கிட்ட மன்னிப்பே இல்ல மித்ரன். ஒரு வேளை "நீங்க கிடைக்க நான் குடுத்து வைச்சிருக்கணும்" எண்ட நினைப்பு எனககுள்ள வந்தாப் பாக்கலாம். அது எங்க போச்சோ தெரில. எங்க கல்யாணத்துக்கப்புறம் கண்ணுல தட்டுப்படவே இல்ல. அது என்னோட முகத்துக்கு முன்னால வரவே கூடாது. (சொல்லும் போதே கண்களில் வெறி ஏறியிருந்தது)

பெருமூச்சு விட்ட மித்ரன்.... 'சரி ஆதிரா. நீ சொன்ன மாதிரி நாங்க ஃபிரண்ட்ஸா பழகுவம். காலப்போக்கில மிச்சத்தப் பாத்துக்கலாம். வா இப்பிடியே போய்ப் பார்ப்பம்... இங்க ஒரு அம்மன் கோயில் இருக்குனு பூரணிமா சொல்லிருக்காங்க.'

இதுவரை இல்பாக இருந்த ஆராவின் முகம் சட்டென்று மாறியது. 'கண்டிப்பாப் போகணுமா?'

'என்ன கேள்வி இது? இவ்வளவு தூரம் வந்திட்டு அவங்களப் பார்க்காமப் போறதா?'

'ம்ம் சரி போவம்'

அடுத்த இரு நிமிடங்களில் துர்க்கை அம்மன் சந்நிதியை அடைந்திருந்தனர் இருவரும்.

ஆதிராவுக்கு ஏனோ கையெடுத்து வழிபடும் எண்ணம் வரவில்லை. அம்மனை ஏதோ ஒருவித கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மிகவும் பிடித்த அன்னையவள். இப்போதும் அவளைப் பிடிக்காது என்றில்லை. விரக்தி; பிடித்ததைக் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கம். அகரனுடன் ஆயிரம் தடவை அவளிடம் சென்று வந்திருக்கிறாள் அவளது ஊர்க் கோவில்களுக்கு. ஆனால் இன்று அவனிடத்தில் வேறொருவன். நிமிர்ந்து பார்த்த ஆரா திடுக்கிட்டாள். மித்ரனின் கைகள் கூப்பியிருக்க கண்கள் கண்ணீரைத் தத்தெடுத்து ஆறாக வழிந்து கொண்டிருந்தது. பாவம், அவனுக்கும் எத்தனை எத்தனை கவலைகளோ? அவள் மனம் அவனுக்காகப் பரிதவித்தது. 'நான் தான் எனது காதலை இழந்து அல்லல்படுகிறேன். அவனாவது சந்தோசமாக இருக்க வேண்டும்' என்று மனதார நினைத்துக் கொண்டாள்; மனம் வைக்க வேண்டியவள் அவள் என்பதை மறந்து.