• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 18)

Sri Durga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 20, 2021
39
8
8
Jaffna, Sri Lanka
ஆதிராவுக்கு அன்று ஏனோ மனம் கவலையுற்றிருந்தது. அவள் தனது தாய், தந்தை இல்லாமல் வருந்தியதாக ஒருநாளும் அறியாள். ஆனால் அது கூட அவளுக்காக நடிக்கப்பட்ட நாடகமல்லவா? அம்மா அவ்வளவு பெரிய வேதனையை தங்களுக்காக மறைத்தார் என நினைக்க நினைக்க வேதனை கூடியது அவளுக்கு. அம்மாவுக்குத் தான் ஆறுதலாக ஒருநாள் கூட இருந்ததில்லையே என மனம் வெதும்பியது. இதுவரை எப்படியோ? இனிமேல் அவர் சந்தோசமாக இருக்கும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டுமென முடிவு செய்து கொண்டாள். அவரது சந்தோசம் பிள்ளைகள் இருவரது வாழ்க்கையும் சந்தோசமாக அமைவது தானே. இனியன் சரியாகத்தான் இருக்கிறான். அவனுக்கென ஒரு வேலை, வேலை செய்யுமிடத்தில் ஒரு பெண்ணை விரும்புகிறான். அந்தப் பெண்ணை அகரன்-ஆதிரா நிச்சயம் நடக்க முன்னரே நிச்சயித்தாகி விட்டது; ஆதிராவின் திருமணம் முடிந்த பின்னரே அவர்களது திருமணம் என்ற பரஸ்பர புரிந்துணர்வுடன். அப் பெண்ணும் நல்ல குணவதி. இனியனின் குணத்திற்கேற்ற காதலி.... நினைக்கும் போதே நெஞ்சு நிறைந்தது ஆதிராவுக்கு. 'கடவுளே! அவனுக்காவது அவன் நினைத்த வாழ்க்கை சந்தோசமாக அமைய வேண்டும்' மானசீகமாக மனதினுள் வேண்டிக் கொண்டாள்.
'மித்ரனும் நல்லவன் தான். தாலி கட்டிய அந்த ஒரு நொடியைத் தவிர என்னைத் தொட்டதே இல்லை. ஏன், பார்வையளவில் கூடச் சிறு தவறிழைத்ததில்லை. இத்தனைக்கும் ஒரே அறையில் இருக்கிறோம். ஒன்றாகத் தூங்கி எழுகிறோம். எனக்கு என்ன தேவையென்பதைத் தானாகவே யோசித்துச் செய்கிறான். இப்படிப்பட்ட கணவர் எத்தனைபேருக்கு அமையும்? சிறு வயதிலிருந்து அன்பிற்காக ஏங்கியிருக்கிறான். தன்னை வளர்த்த குடும்பம் கொடுத்த அன்பைக் காட்டிலும் மிகையான அன்பைத் தன் மனையாளிடம் எதிர்பார்த்திருக்கிறான். எனக்காகக் காத்திருக்கிறான். நான் ஏன் அவனுக்காக மாறக் கூடாது? அவனிடம் என்னை நெருக்க விடாமல் செய்வது என்ன? அகரன் மேல் நான் கொண்ட காதல். இப்போது நான் நிதர்சனத்தைப் புரிந்து கொண்டாலும், அகரனுக்கென ஒருவள் வந்து, அவன் அவளை மணமுடித்துக் கொண்டால் அவன் நிம்மதியாக, சந்தோசமாக இருப்பான்; அப்போதுதான் அவனுக்கு வாழ்வின் அர்த்தம் புரியும். மித்ரனிடம் கதைத்து இதற்கொரு தீர்வு காண்போம். பிறகு மித்துவுக்கும் எனக்கும் இடைவெளி இருக்காது.' நினைவிலேயே சிரித்துக் கொண்டாள் ஆரா. அவளை அறியாமல் அவள் மனம் மித்ரன்பால் சார்வதை அவ்வப்போது உணர்ந்து கொண்டுதானிருந்தாள்.

நாட்கள் கடந்து கொண்டிருந்தன.
அன்றொரு நாள் மித்ரன் வேலையால் வரத் தாமதமாகி விட்டது. முதலில் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவளுக்கு, நேரம் செல்லச் செல்ல மனம் பதறத் தொடங்கியிருந்தது. சந்திரனும் பூரணியும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தம் பிள்ளைகளோடு சில காலம் இருந்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றிருந்தனர். ஆதிராவுக்கு மிகவும் பயமாக இருந்தது. மித்ரனுக்கு ஏதேனும் ஆகி இருக்குமோனு யோசித்து ஒருபுறம்; அன்று பூர்விகாவுக்கு நடந்ததை நினைத்து மறுபுறம். மித்ரனின் ஃபோன் வேறு சுவிட்ஜ் ஆஃப் ஆகி இருந்தது. அவளையும் மீறி அழுகை பீறிட்டது. சிறிது நேரம் தன்னை அடக்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளிக்கிட்டாள். வெளியே பரவியிருந்த கும்மிருட்டை ஆங்காங்கே ஔிர்ந்து கொண்டிருந்த சிறு சிறு மின்விளக்குகள் போக்கிக் கொண்டிருக்க, பாதை சற்று மங்கலாகத் தெரிந்தது. அந்த ஒற்றையடிப் பாதையில், கும்மிருட்டிடையே, சிறு மின்விளக்கின் ஔியுடன், திடீரென ஏதோ உணர்வு வரத் திரும்பியவளைப் பார்த்தால்..... அச்ச அசல் இனியனின் கனவில் வந்ததைப் போலவே இருந்தது. ஆனால் அதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வேக நடையுடன் எட்டி எட்டி நடந்தாள். ஒருவழியாக அவள் சாலையை அடையவும்.... மித்ரனின் கார் சாலை வளைவில் திரும்பவும் சரியாக இருந்தது. தன்னவளைக் கண்டுகொண்டவன், சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு இறங்கவும், ஆதிரா ஓடிச் சென்று அவனது கைகளைப் பிடித்துக் கொள்ளவும் சரியாக இருந்தது.
'என்ன ஆராமா இதெல்லாம்? வீட்லயிருந்து நடந்தே வருவியா? உனக்கு ஏதாவது ஆனா நான் என்னடீ பண்ணுவன்?' என்றவன் அவளை அணைக்க ஏங்கிய கைகளை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

'நீ எங்க போய்ட்ட மித்து? ஏன் இவ்ளோ நேரம். ஃபோன் வேற ஆஃப் பண்ணி வச்சிட்ட. எனக்கு என்ன செய்றதுனே தெரில. அதான் உன்னைத் தேடி வந்திட்டன்.'

'சாரிடா... ஆஃபீஸ்ல ஒரு மீட்டிங். அதான் லேட் ஆகிட்டு. இன்னுமே முடியல. ஃபோன் எல்லாருமே ஆஃப்ல தான் வச்சிருந்தோம். இடேல சான்ஸ் கிடைக்கும், சொல்லலாம்னு பாத்தா அவங்க விட்டாத் தானே? அப்புறம் நீ வீட்ல இருந்து தனியா வந்திட்டிருக்கிறதக் கேட்டதும் ரொம்பப் பயமாயிடிச்சு. அதான் ஹாஸ்பிட்டல் போகணும்னு பொய் சொல்லிட்டு, பாதியிலேயே ஓடி வந்திட்டன்.'

'வாட்? உனக்குத் தெரியுமா, நான் வீட்ல இருந்து வெளிக்கிட்டது?

பதிலாக அமைதியையே பெற முடிந்தது, ஆதிராவால். எதையோ ஊகித்தவள்... கேட்டாள், 'அது சொல்லிச்சா?'

'ம்ம். நீ ஏன் ஆராமா புரிஞ்சுக்கக் கூடாது? ஒரு வேள இது நம்ம நல்லதுக்காக் கூட இருந்திருக்கலாம்ல. என்னைக் கூட நண்பனா ஏத்துக்கிட்ட நீ, எதுக்கு அந்தக் குழந்தையை மட்டும் அரக்கியாவே பாக்குற? என்ன சொல்றது? உன்ன நான் எங்க வேணாலும் தனியா விட்டுட்டுப் போய் வரலாம். ஏன்னா உன்னைக் குழந்தை மாதிரிப் பாத்துக்க நம்ம பொண்ணிருக்கா'

'யாருக்கு "எது" பொண்ணு? வீட்ல இருந்து கிளம்பும் போதே யாரோ பின்னால வர்ற மாதிரித் தோணிச்சு. இது தான்னு தெரியல. அப்புறம் உங்கள நான் என்னோட நண்பனாத்தானே ஏத்துக்கிட்டேன்? புருஷனா இல்லல? அப்புறம் எப்பிடி எவங்களுக்கோ பிறந்த பொண்ணு நம்ம பொண்ணானா? இந்த மாதிரி இன்னொரு தடவ பேசாதீங்க மித்ரன். அப்புறம் அந்த ஃபிரண்ட்ஷிப் கூட இல்லாமப் போய்டும்.'

சற்றுமுன் "மித்து" என்ற உரிமையான அழைப்பில் வந்த சந்தோசம், இறுதி "மித்ரன்" இல் காணாமல் போயிருந்தது. 'ஏன் ஆதிரா? என்னை உனக்குப் பிடிக்கலயா? சில நேரம் ரொம்பக் கிளோஸா இருக்கிற மாதிரி இருக்கு. சில நேரம் ரொம்பத் தூரமாப் போற மாதிரி இருக்கு. ஏன்டி இப்படி என்னை சாவடிக்கிற?' என மனதினுள்ளேயே புலம்பினான் அவன்.

'சாரி மித்து. உண்மையாவே எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்டா. உன் கூட கிளோஸா இருக்கணும்னு தோணுது. ஆனா ஏதோ ஒண்ணு தடு்க்குது. அதுவும் அந்தப் பொண்ண நீ தூக்கி வச்சுக் கொண்டாட்றது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கல. சாரிடா. ஐ லவ் யூ.' மித்ரனைப் போலவே மனதினுள் புலம்பினாள் ஆதிரா. இவர்கள் இருவரது காதலும் வெளிப்பட முன் இன்னொரு விளையாட்டிற்காகக் காத்திருந்த "விதி", தனக்குள் சிரித்துக் கொண்டது.