• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 19)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
நாட்கள் கடந்திருக்க.... ஆதிரா-மித்ரனின் வீடும் முழுமையுற்றிருந்தது; அதே போல் அவர்கள் நட்பும். இருவரும் கணவன்-மனைவியாக வாழத் தொடங்கா விடினும் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டிருந்தது. மித்ரன், தனது அன்பால் ஆதிராவை ஈர்ப்பதிலேயே குறியாயிருந்தான். மறுபுறம் அகரனுக்குத் திருமணம் செய்து வைப்பதிலும் குறியாக இருந்தான். ஆதிராவை அழைத்துச் செல்லலாமா? கூடாதா என்று தெரியாத நிலையில் அகரனிடமும் சரி, வாணி-இனியனிடமும் சரி, அபியிடமும் சரி... அவன் மட்டும் தான் சென்று வருவதுண்டு. ஆரா, அகரனைத் தவிர மற்றோரிடம் ஃபோனில் மட்டும் தொடர்பு கொள்வதுண்டு. அவ்வாறு கதைக்கும் போது இப்போதெல்லாம் நொடிக்கு நூறுமுறை "மித்ர புராணம்" படிப்பது அவள் வழமையாயிற்று.

'அம்மா'

'சொல்லுடா. நானே கூப்பிடணும்னு நினைச்சன். நீயே கோல் பண்ணிட்ட. எப்பிடிமா இருக்க? புது வீட்டுக்குப் போறதா மித்ரன் சொல்லுச்சு.'

'நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு கூப்பிட்டேன்மா. எதுனாலும் உங்கக்கிட்ட சொல்லியே பழகிடிச்சா.... இப்போவும் மனசு உங்களைத் தான் தேடுது.'

மகளின் மாற்றத்தைக் கலைவாணியும் கவனித்துக் கொண்டுதானிருந்தார். அவளைக் கை நீட்டி அடித்தது அவர் மனதில் நீங்கா ரணமாய் வலித்துக் கொண்டேயிருந்தது. ஆனாலும் ஆரா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது அவருக்கு ஆறுதலைத் தர.... அவளின் இன்றைய வார்த்தைகள் அவருக்குப் பெரும் சந்தோசத்தை அளித்தது.
'சொல்லுடா கண்ணா. அம்மா எங்க இருந்தாலும் உனக்காகக் கண்டிப்பா இருக்கன் செல்லம். சொல்லுடாம்மா, அம்மாகிட்ட என்ன சொல்லணும்?'

'நான் இப்போலாம் ரொம்ப சந்தோசமா இருக்கன்மா. புதுசாப் பிறந்த மாதிரி இருக்கு. எல்லாத்தையும் ரசிக்கத் தோணுது. பழைய ஆராவா மாறுறதாத் தோணுது'

'கேக்கவே ரொம்ப ஹாப்பியா இருக்குடா. ஆனாலும் என்னோட ஆராக்குட்டியோட சந்தோசத்துக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுக்கணுமே.' (எங்கே மித்ரன் தான்னு வாயைத் திறந்து சொல்ல மாட்டாளா என்ற ஏக்கம் அவருக்கு.

'அது..... அது வந்து.... எனக்கு மித்துவை ரொம்பப் பிடிச்சிருக்கும்மா. எனக்காக நிறைய நேரம் செலவழிக்கிறார். என்னைச் சந்தோசமா வச்சுக்கணும்னு நிறைய முயற்சி பண்றார். எனக்குப் பிடிச்சது என்ன? பிடிக்காதது என்ன? எல்லாம் பாத்துப் பாத்துப் பண்றார். ரெண்டு நாளைக்கு முன்னால கீழ விழுந்து கால் சுளுக்கிடிச்சு. 'பாத்து வரமாட்டியா?' னு என்னை அதட்டீட்டு அவரே காலைப் பிடிச்சு சுடுதண்ணி ஒத்தடம் குடுத்தார். அவர் அதட்டும் போது, நீங்க எங்க மேல இருக்கிற பாசத்தில கோபப்படுவீங்கல... அந்த மாதிரி இருந்திச்சும்மா. அப்புறம் அன்னைக்குப் பின்னேரமே ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்து.... கோபப்பட்டதுக்கு சாரி சொன்னார்.
எனக்கு என்னலாம் சாப்பிடப் பிடிக்குமோ... அதெல்லாம் நாளுக்கொரு ஐட்டமா இங்க வருது.
அப்புறம் நான் வீட்ட தனியா இருந்தா போரடிக்குமேனு இங்க ஒரு பெரிய தோட்டம் போட்டுக் குடுத்திருக்கார். தோட்டத்தைப் பாத்துக்க ஆள் இருக்கு. என்னோட வேலை அவங்களக் கண்காணிக்கிறது. "உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை" எண்டு சொல்லுவாங்களாம்; நான் கண்காணிக்கிற விதத்திலதான் தோட்டத்தோட பராமரிப்பு எப்பிடி இருக்கும்னு தெரியுமாம். அவர் ஒவ்வொரு மாதக் கடைசிலயும் வந்து பாக்கும் போது தோட்டம் எப்பிடி இருக்குங்கிறதப் பொறுத்து எனக்கு சன்மானம் தருவாராம். சன்மானம்னா நான் என்ன கேட்டாலும் தருவாருங்கிறாரும்மா உங்க மருமகன். ஒரு வேளை தோட்டம் நல்லா இல்லனா, தான் கேக்கிறத நான் குடுக்கணுமாம். டீல் நல்லாருக்கேனு ஓகே சொல்லிட்டன். பொழுதும் அப்பிடியே போகுது.
அப்புறம் இப்போ ஒரு கொஞ்ச நாளுக்கு முன்னால இங்க இருக்கிற காட்டுக்குள்ள நான் போயிருந்தன். பூரணிமாவும் ஊர்ல இருந்து வந்திருக்கல. மித்துவும் வேலைக்குப் போய்ட்டார். தனியா இருக்க போரடிக்குதேனு ஒரு மனநிம்மதிக்காகக் காட்டுக்குப் போனன். அது காடுனு சொல்றது தான்மா. ஆனா பயமாலாம் இருக்காது. அமைதியான அழகான ஒரு இடம். அங்க நம்ம அம்மாவோட சந்நிதி ஒண்ணும் இருக்கு. காட்டோட அழகை ரசிச்சிட்டு நின்னதில நேரம் போனதே தெரியல. அப்பிடியே அம்மாவோட சந்நிதிக்கும் போனன். அப்பிடியே அவங்க காலடில கண்ணை மூடிட்டிருந்தனா... நேரம் போனதே தெரியல. அப்பிடியே தூங்கிட்டன். திடீர்னு யாரோ முகத்துல லைட் அடிச்ச மாதிரி இருந்திச்சு. திடுக்கிட்டு எழும்பிப் பாத்தா.... அம்மன் கோயில்ல இருந்த தன்னிச்சை விளக்கு ஔிர ஆரம்பிச்சிருந்தது. இவ்ளோ நேரம் யோசிக்காமத் தூங்கிட்டியே ஆரானு படக்குனு புறப்படுவம்னு திரும்பினனா.... அம்மன் கோயிலைத் தவிர அத்தனை இடமும் கும்மிருட்டா இருந்திச்சு. மித்துக்கு வேற நான் இங்க வந்தது தெரியாது. ஒரே பயமாப் போச்சு ஆராவுக்கு. இரவில தான் காடுனு தெரிஞ்சுது. ஒரு பொட்டு வெளிச்சம் கூட இல்ல. அம்மாவே வழிகாட்டுவானு அவங்க கிட்டவே இருந்திட்டன். ஒரு அரை மணி நேரத்தில மித்து வந்தார். வேர்த்து விறுவிறுத்து ஆளுக்கு முகமே சரியில்ல. கண்ணெல்லாம் கலங்கி பாக்கவே ஒரு மாதிரி இருந்தார். ஓடி வந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டு சின்னக் குழந்தை மாதிரி கண்ணுல தண்ணிலாம் வர ஆரம்பிச்சிடிச்சுமா. நிறைய நேரம் என்னைத் தேடி இருக்கார். அந்தக் குட்டிப் பொண்ணு இருக்குல? (சொல்லும் போது குரலில் சுருதி இறங்கியது.) அதுதான் நான் கோயில்ல இருக்கிறதா சொல்லி... அப்புறம் என்னைத் தேடிக்கிட்டு வந்திருக்கார். அவர் நிதானமாவே இருக்கலம்மா. அவ்ளோ பயந்து போய் இருந்தார். ஒரு மாதிரி சமாளிச்சுக் கூட்டிப் போறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டிச்சு... ஆனா... அம்மா! மித்து அழுது நான் பாத்ததே இல்லம்மா. அவங்க அம்மா,அப்பா பத்தி என்கிட்ட சொல்லும்போது மட்டும் கண் கலங்கிப் பாத்திருக்கன். அன்னைக்கு என்னைக் காணம் எண்டதும் அழுதிட்டார்னா அவரோட மனசில நான் எவ்ளோ தூரம் இருக்கன்னு புரிஞ்சுக்க முடியுதும்மா. அவருக்கு நான் குடுத்த கஷ்டம்லாம் போதும். அவர் நினைக்க முடியாத சந்தோசத்தை அவருக்குக் குடுக்கணும்னு எனக்குத் தோணுது. அவருக்கு இன்னொரு அம்மாவா, அப்பாவா இருந்து அவரைக் கண்ணுக்குள்ள வச்சுப் பாத்துக்கணும்னு தோணுதும்மா. இவ்ளோ பாசமிருந்தாலும் அவரோட சுண்டுவிரல் கூட என்மேல அநாவசியமாப் பட்டதில்லை. எனக்காக மட்டும் தான்மா. எனக்காக என்ன வேணாலும் செய்ற அவருக்காக நானும் கொஞ்சம் மாறலாம்னு முடிவு பண்ணிட்டன்மா. எனக்கு அவரை ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனாலும் அகரனுக்குக் கல்யாணம் நடக்காம மித்து கூட என்னால சேர்ந்து வாழ முடியாதும்மா. அகரன் மனசு மாறட்டும். இது என்னோட வாழ்க்கைக்காக மட்டுமில்ல. அகரனோட வாழ்க்கைக்காகவும் தான். அவர் மனசு மாறுற வரை எனக்காக மித்துவும், மித்துவுக்காக நானும் வெய்ட் பண்ணிட்டிருப்போம்.
அம்மா கேக்குறீங்களாம்மா?'

'கண்டிப்பாடா குட்டி. நீ சொல்றத அம்மா கேக்காம இருப்பனா? ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குடா நீ மித்துவ ஏத்துக்கிட்டது. நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா சந்தோசமா இருப்பீங்கடா. மித்துத்தம்பி ரொம்பவே முயற்சி பண்ணி அகரனைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிடடிருக்கு. அகரனும் அவனோட குணத்துக்கு நல்லா இருப்பான்மா.'

'எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கும்மா. அப்புறம் புது வீட்டுக்கு வர்ற திங்கக்கழமை குடி போறோம். மித்து உங்களக் முறைப்படி கூப்பிடுவார். கண்டிப்பா வாங்கம்மா.'

'என்னடாம்மா இதெல்லாம்? நீ கூப்பிட்டா அம்மா ஓடி வர மாட்டேனா? வர்ற சனிக்கிழமை நானும் இனியனும் அங்க இருப்போம்.'

'ரொம்ப சந்தோசம்மா. வாசல்ல கார் சத்தம் கேக்குது. என் புருஷன் வந்திட்டார்னு நினைக்கிறன். நான் உங்கள அப்புறமாக் கூப்பிடவா?'

'சரிடாம்மா. நீ போய்த் தம்பியக் கவனி.' அவள் "என் புருஷன்" என்றதைக் கேட்டுச் சிரித்தபடியே ஃபோனை வைத்தார் கலைவாணி.

'வா மித்து. நிறைய வேலையா? ரொம்பக் களைச்சுப் போய் இருக்க?'

'ஆமாடி. ரொம்ப வேலை. அப்புறம் நம்ம புது வீட்ட ஒரு எட்டுப் பாத்திட்டு வந்திட்றேன். நீ சாப்பாடு செஞ்சு வை. ரொம்பப் பசிக்குது.'
இடைப்பட்ட காலத்தில் அவர்களது உறவு, ஒருவரை ஒருவர் உரிமையோடு அழைப்பதாக மாறி இருந்தது. மித்ரனுக்கும் மனதில் தோன்றித் தானிருந்தது; ஆதிரா தன்னை விரும்புகிறாள் என்று. ஆனாலும் அவளாகச் சொல்லாமல் அவளைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

'சாப்பாடெல்லாம் செய்தாச்சுடா. நீ சாப்பிடு. நாம ரெண்டு பேருமே போய்ட்டு வரலாம் வீட்டுக்கு.'

'எது? எது? புது வீட்டுக்கு நீயா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நானே போய்ப் பாத்துட்டு வர்றேன். நீ திங்கக்கிழமை மட்டும்.... அதுவும் அந்த நேரத்துக்கு வந்தாப் போதும்.'

அவனது பதற்றத்தைக் கவனித்த ஆரா, 'ஏன்டா இப்போலாம் அங்க போகவே விடுறதில்ல? நீயும் கூட்டிப் போக மாட்டியாம். நீ, போக வேண்டாம்னு என்கிட்ட ப்ரோமிஸ் பண்ணதால மட்டும்தான் நான் அங்க போகாம இருக்கன். எனக்கு இது பிடிக்கல'

'ஆரா! மித்து என்ன சொன்னாலும் உன் நல்லதுக்குத் தான்னு புரியுதில்ல. பிளீஸ்டா. உனக்குத் தெரியாமலா? கண்டிப்பா எல்லாம் சொல்றேன்' சொன்னபடியே காரில் போய் ஏறிக் கொண்டான்.

'ஏதோ புதிர் போட்ற. சரி என்னனுதான் பாப்பமே. அது சரி; உதில இருக்கிற வீட்டுக்கு ஏன்டா கார்ல போற?'

'அதுல்லாம் சொல்ல முடியாது. ஐயாக்கு தேவைனா பிளைட்லயும் போவாரு'

'ஓ சரிங்க. ஐயா போய்ட்டு வாங்க.' கைகளைக் கட்டிப் பணிவாகச் சொன்னவளைப் பார்த்து சிரித்தபடியே காரைப் புது வீட்டுக்கு விட்டான் மித்ரன்.
அவன் செய்யும் எதற்கும் அர்த்தம் புரியாமல் போகும் காரையே கேள்வியாய் நோக்கினாள் ஆரா.
 
Top