• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்... (பாகம் 2)

Sri Durga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 20, 2021
39
8
8
Jaffna, Sri Lanka
அதிகாலை 5 மணி....
அண்ணா..... உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிட்டன் பாத்ரூம் லைட்டை மாத்த சொல்லி.. பாரு எப்பிடி விட்டு விட்டு எரியுதுனு எனக் கத்தியபடி வந்த ஆதிராவுக்கு 26 வயது. மாநிறம் , சற்றே நீள்வட்ட முகம், மண்ணிற கருமணி கொண்ட அழகிய விழிகள், இடது புறம் சற்றே உயர்ந்த நேர்த்தியான அழகிய புருவங்கள், மெல்லிய வளைவுள்ள அழகிய பிங்க் நிற உதடுகள். மொத்தத்தில் ஒரு முறை பார்த்தால் மறுமுறை திரும்பி பார்க்க வைக்கும் அழகுப்பதுமை அவள்.

ஆமாம், அந்த லைட் நீ குளிக்கப் போகும் போது மட்டும் தான் மக்கர் பண்ணுது. நாங்க எல்லாம் அதே பாத்ரூம் தானே யூஸ் பண்றம். அது ஒழுங்காத் தான் வேலை செய்யுது. நீ தான் சரியா இல்லை. உனக்கு அந்த அகரனை மாப்பிள்ளையாப் பாத்ததில இருந்து ஒரே ரோதனையாப் போச்சு. திடீர் திடீர்னு சிரிக்கிற, சாப்பாட்டுத் தட்டில கோலம் போடுற, தூக்கத்தில அம்மா உன் கூடத்தான் இருக்கன் செல்லம்னு உளர்ற.... ஏன்டி கல்யாணமே இன்னும் ஆகல, அதுக்குள்ள குழந்தையா? இப்போ பாத்ரூம்ல லைட் விட்டு விட்டு எரியுது என்டா என்ன அர்த்தம்? நீ பாட்டுக்கு அந்த அகரன் பயலை நினைச்சு கண்ண மின்னிக் கிட்டிருந்திருப்ப...... அது லைட் விட்டு விட்டு எரியுற மாதிரி இருந்திருக்கும்னு ஆதிராவைச் செல்லமாகக் கடிந்தார் அவளது தாய் கலைவாணி.

'அண்ணா பாருண்ணா அம்மாவ' எனக்கூறி தமையனின் தோளில் ஆதரவாகச் சாய்ந்து கொண்டாள் ஆதிரா. ஆனால் இனியனுக்கோ இவை எதுவும் கருத்திலேயே ஏறவில்லை. அவனது மனம் தாயார் சொன்ன முதல் வார்த்தைகளிலேயே லயித்திருந்தது. ஆதிரா போகும் போது மட்டும் அந்த லைட் விட்டு விட்டு எரியுதாமா? அவளும் இந்த ஒரு மாதமாகவே சொல்கிறாள் தான் லைட்டை மாத்தச் சொல்லி.... ஆனால் இனியன் செல்லும் போது லைட் நன்றாக வேலை செய்வததாலும் அவனது ரூமில் அவனுக்கென தனி பாத்ரூம் இருப்பதால் அவன் மற்றைய அறையை அவ்வளவு பயன்படுத்துவதில்லை என்பதாலும் அவள் கூறியதே மறந்து விடும். அதன் பின் இனியன் வேலை பிஸியில் இதைப்பற்றி நினைப்பதுமில்லை. ஆனால் இப்போது இது பெரிய விஷயமாகவல்லவா இருக்கிறது. பொதுவாக அமானுஷ்யம் நிறைந்த இடத்தில் உள்ள மின்குமிழ்கள் அடிக்கடி சுட்டுப்போகுமாம். ஒரு வேளை இதுவும் அதன் பிரதிபலிப்புத்தானோ? இவ்வாறு யோசித்துக்கொண்டிருந்த அவனுக்கு சட்டென ஒன்று உறைத்தது. அவனுக்கு கனவு வருவது மற்றும் ஆதிரா லைட் பிரச்சினை சொல்வது இரண்டும் இந்த ஒரு மாத காலமாகத்தான். அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவனது கனவுக்கும், நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆனால் என்னவாக இருக்கும் என யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம்.

இந்த யோசனைக்கு முடிவு வராமலே ஒரு மாதம் கடந்திருந்தது. அவனுக்கும் கனவு வருவது நின்ற பாடில்லை. ஆதிராவுக்கு வேறு கடந்த மாதம் நல்லவொரு இடமாகப் பார்த்து நிச்சயம் செய்திருந்தனர். இனித் திருமணம் என்கிற நிலையில் அவனும் நிறைய வேலை பார்க்க வேண்டி இருந்தது. இந்நிலையில் ஆதிரா ஒரு நாள் தன் தமையனிடம் சென்று, தான் தனது தோழி அபிநயா வீட்டுக்குச் சென்று பத்து நாள் தங்கி விட்டு வருவதாகச் சொன்னாள். இனியன் சற்றுத் தயங்கிய போதும் கலைவாணி தான், இன்னொரு வீட்டிற்கு வாழப் போகிற பெண்ணப்பா..... அதன் பின் அவள் நினைப்பது போலெல்லாம் இருக்க முடியாதில்லையா? நாம் தான் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டுமென இனியனை சமாதானப் படுத்தி அவளை அனுப்பி வைத்தார்.
அபிநயாவின் வீட்டிற்கு வந்த ஆதிராவுக்கு பொழுது நன்றாகவே கழிந்தது. தோழியுடன் அரட்டை அடிப்பதும், கோயிலுக்கு செல்வதும், சித்திரம் வரைவதும், இயற்கை எழிலை ரசிப்பதுமாக நாட்கள் நன்றாகவே கடந்தன. ஒரு நாள் அபிநயா வீட்டிற்கு அவர்களது ஊர் சாமியார் வந்திருந்தார். அவரை ஆதிராவுக்கு அறிமுகம் செய்தாள் அபிநயா. 'ஆரா! இவர் தான் மார்கண்டேய சாமியார். எங்கள் ஊரில் நல்லது கெட்டது எல்லாம் இவர் தலைமையில் தான் நடைபெறும். சமய சாஸ்திரங்களிலும் வல்லவர். இவரும், அப்பாவும், ஊரிலுள்ள இன்னும் சிலரும் இணைந்து ஊருக்காக நிறையப் பணி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் எமது குடும்பத்திற்கும் நல்ல பழக்கம். சாமியாருடைய ஆசி எங்கள் ஊருக்கு ஒரு வரமாகும்' என முடித்ததும் அவரைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்து வணங்கினாள் ஆதிரா. 'இறையருளால் நலமோடு வாழ்வாய் மகளே' என ஆசி வழங்கினார் பெரியவர். அங்கு சிறிது நேரம் இருந்து உரையாடி விட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்ல நினைத்தவர் மனதை ஏதோ ஒன்று நெருடியது. ஒரு முறை கண்களை அழுந்த மூடித் திறந்தவர் அங்குள்ள ஒவ்வொருவரையும் நிதானமாகப் பார்த்தார். முதலாவது அபியின் அம்மா. சாந்த சொரூபியாக நின்றிருந்த அவரின் முகத்தில் பெரும் அமைதி குடி கொண்டிருந்தது. அருகில் அந்த அமைதிக்கு ஆணி வேரான அபியின் தந்தை. அதன் பின் பெரியவரை நோக்கிப் புன்னகை வீசிக் கொண்டிருந்த அபி , அவளின் கை பிடித்த படி நின்றிருந்த ஆதிரா. எல்லோரையும் அமைதியாக நோக்கியவர், ஆதிராவை அருகே வருமாறு அழைத்தார்.

ஆதிராவைப் பற்றிய சில விடயங்களைக் கேட்டு அறிந்த பின் அவளுடைய தலையை ஆதரவாக வருடிய அவர் எதற்கும் கலங்காதே அம்மா, இறைவன் உனக்குத் துணை நிற்பார் எனக்கூறி அவ்விடம் விட்டு அகன்றார். அங்கிருந்த யாருக்குமே அவரது செயலின் அர்த்தம் புரியவில்லை. குறிப்பாக ஆதிரா அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள். ஒரு வேளை தனக்கிருக்கும் பிரச்சினை .... அது பிரச்சினை தானா? இனம் புரியா உணர்வொன்று அவளுள் தோன்றுவதுண்டு. அதை வீட்டினருக்கு காட்டிக் கொடுக்கக் கூடாதென்று தான் அவள் இங்கு வந்ததே. அவளுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்தவொரு விடயத்தைப்பற்றி அபியின் உதவியுடன் சாமியாரிடம் கூறி அவருடைய ஆலோசனையை கேட்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.

ஆதிரா வீடு.
அன்று விடுமுறை என்பதால் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான் இனியன். நாற்காலியில் ஏறி ஒட்டடைகளைத் தூசு தட்டினான். பூச்சாடிகளைத் துடைத்து பூக்களை ஒழுங்காக அடுக்கினான். தந்தையின் அறையில் நிறையப் பத்திரிகைகள் சேர்ந்திருந்தன. இது அவனுடைய தந்தையாரின் வழக்கம். அவர் பத்திரிகைகளை வாசித்த பின்னரும் பத்திரப்படுத்தி வைப்பார். காரணம் அவர் ஒரு ரிப்போட்டர். திரை மறைவில் நடைபெறும் பல்வேறுபட்ட விடயங்களையும் துணிச்சலாக வெளியுலகிற்கு கொண்டு வந்தவர். அதனாலேயே பற்பல சவால்களையும் எதிர் நோக்கியவர். பெரும்பாலான விடயங்கள் வெறும் தகவல்களாகவே வந்து சேரும். அவர் குறித்த இடத்திற்குச் சென்று மேலும் சில தகவல்களை சேகரிக்க வேண்டும். அதன் பொருட்டு சில தூரப் பயணங்களையும் மேற்கொள்ள வேண்டி இருக்கும். தகப்பனாரைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் தாயார் கூறியதாகத் தான் இருக்கும். அவ்வாறு ஒரு கேஸைத் தேடிச் சென்று விட்டுத் திரும்பும் போது தான் தந்தையார் வந்த வாகனம் மிகக் கோரமான விபத்துக்குட்பட்டது. இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிட்டது. இறக்கும் தருவாயில கூட இனியனின் கை பிடித்து ஏதோ கூற வந்தவர், நினைத்ததைக் கூறி முடிக்காமலே உயிர் நீத்தார். அவர் சிரமப்பட்டு உதிர்த்த இரண்டே வார்த்தைகள்..... அவ நல்லவப்பா..... அநியாயமாக் கொன்னுட்டாங்க......
தந்தையின் நினைவுகளிலிருந்து மீண்ட இனியனின் கண்கள் பனித்தன. அவரைப் போன்ற துணிச்சலான, விவேகமான, பாசமான ஒருவரை இனி எங்கிலும் காண முடியாதே. ஆனால் அவனுக்கு இன்று வரை புரியாத புதிர்.... தந்தை கூறிய கடைசி வார்த்தைகளின் அர்த்தம். யார யார் கொன்னாங்க? நிச்சயம் அது அவர் தேடிச் சென்ற கேஸ் பற்றியதாகத் தான் இருக்கும். பொதுவாக அந்நிலமையில் யாரானாலும் 'அம்மாவை, தங்கையைக் கவனமாப் பாத்துக்கோ, அவர்கள் இனி உன் பொறுப்பு' இவ்வாறு தான் ஏதேனும் கூறுவார்கள். அவர் இறக்கும் போது ஆதிராவுக்கு இரண்டு வயது தான் இருக்கும். அப்பாவின் செல்லக்குழந்தை. அவள் பற்றிக்கூட ஒன்றுமே கூறவில்லை. ஆனாலும் அந்த இரண்டு வா்த்தைகளை சிரமப்பட்டு கூறினார். ஒரு வேளை அதன் அர்த்தம் இனியன் அந்தக் கேஸை , அதில் சம்பந்தப்பட்டிருப்போரை, முக்கியமாக அந்தக் கொலைகாரர்களை வெளிக் கொண்டு வர வேண்டுமென்பதா? அவர் இறக்கும் போது இனியனுக்கு வெறும் பத்து வயது தானிருக்கும். அவனுக்கு அவர் அதை ஏன் தன்னிடம் கூறினார் என்று கூடப் புரியவில்லை. சற்று தெளிவு வந்த போதோ அவனுக்கான பொறுப்புகள் கூடி இருந்தன. அதில் மூழ்கி இருந்தவனுக்கு மற்றையதை யோசிக்க நேரமும் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது மீண்டும் அதே பிரச்சினை. தந்தை இறுதியாக எந்தக் கேஸைப் பற்றி ஆராய்ந்தார்? மேலோட்டமாக இந்தப் பத்திரிகைகளை வாசித்தால் ஏதேனும் தெரியக்கூடுமா? ஆகக் குறைந்தது அவருடைய தேடலின் விளைவு பத்திரிகையில் வராவிடினும் அந்தக் கேஸினுடைய தொடக்கமாவது இவற்றில் ஏதேனுமொன்றில் இருக்கக்கூடுமா? எனப் பத்திரிகையை மேலோட்டமாக நோட்டம் விட்டவனுக்குத் தலையே சுற்றியது. ஒரு பத்திரிகையா இரண்டு பத்திரிகையா? ஏராளமாக இறைந்து கிடந்தன. அதிலும் ஒன்றா இரண்டா சந்தேக வழக்குகள். எதை எடுத்தாலும் எக்கச்சக்கமாக இருந்தன.
புகையிரதம் மோதி வாலிபர் மரணம், பாடசாலை மாணவி தற்கொலை, இளம் பெண் கற்பழித்துக் கொலை, மதுசாரக்கடைக்குப் பெண்களும் அணிவகுப்பு, பட்டப் பகலில் கொள்ளை, இளம் வாலிபர் வாட்டர் டாங்கில் விழுந்து மரணம்...... இவ்வாறு ஒவ்வொரு பத்திரிகையும் சமூகச் சீர்கேடுகளையும், அவற்றின் நடுவே சிற்சில நல்ல விடயங்களையும் ஆங்காங்கே தெளித்து விட்ட மாதிரி காட்டி இருந்தன. புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்குவிப்பு, தேசிய மட்டப் பாடல் போட்டியில் முதலிடம். இவ்வாறு எத்தனையோ தகவல்களை உள்ளடக்கி எத்தனையோ பத்திரிகைகள் இருந்தன.
இனியனுக்கு சலித்துப் போயிற்று. இப்போது ஆதிராவின் விடயத்தைப் பார்ப்போம். பிறகு மற்றையதைப் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து பத்திரிகைகளை ஒழுங்காக அடுக்கியவன், ஆதிராவுடன் தொடர்பு கொள்ளலாமென தன் கைத்தொலைபேசியை எடுத்தான்.
 
Last edited:
  • Like
Reactions: Vimala Ashokan