• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 22)

Saunthu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 20, 2021
52
16
8
Jaffna, Sri Lanka
அடுத்த நாள் பொழுது மித்ரனுக்குச் சுகமான விடியலாக இருந்தது. அவனையும் அறியாமல் அவனது சந்தோசம் வெளிப்பட்டுக் கொண்டுதானிருந்தது. மித்ரன் பொதுவாகவே சந்தோசமாக இருப்பவன் தான். அவன் கவலைப்பட்டுப் பார்த்த இருவர் என்றால்.... அது ஆதிராவும் அகரனும் மட்டும்தான். ஆனாலும் அவனது இன்றைய சந்தோசம் வழமைக்கு மாறானதாக இருந்தது. இதை முதலில் கவனித்த பூரணி, ஒருவேளை இருவரும் மனதொப்பித் தமது வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டார்களோ? என எண்ணி, ஆராவைப் பார்த்தால் அங்கே ஒரு பிரதிபலிப்பையும் காணோம். ஏதோ சின்னஞ்சிறுசுகள் சந்தோசமா இருந்தா சரி என்று விட்டுவிட்டார். ஆராவுக்குத்தான் மித்ரனின் இந்த அதீத சந்தோசம் சற்றுச் சந்தேகத்தைக் கிளப்பியது. 'ஒரு வேள இவனுக்கு நைட் நம்ம பண்ணுது தெரிஞ்சிடிச்சோ?' என்று யோசித்தவளுக்கு வெட்கம் பிடுங்கித்தின்ன, அன்று முழுதும் அவன் கண்ணில் படாமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள்.

தோட்டத்திற்கு சென்று பூக்களை ரசித்துக் கொண்டிருந்தவளின் கவனத்தைச் சிதைத்தது மித்ரனின் குரல்.
'மெடம் இங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க?'

'வாய் பாத்திட்டிருக்கேன்'

'அது உங்களுக்கு நல்லா வரும்னு எனக்குத்தான் தெரியுமே. எங்க ஆளையே பிடிக்க முடியல?'

'அது எனக்கு நிறைய வேலை இருந்திச்சு' அவளைப் பிடிக்க முடியாததற்கான காரணத்தை நினைத்து வெட்கத்துடன் வாய்க்குள் முணுமுணுத்தாள்.

'அப்பிடியா? அவ்வளவு வேலையையும் வச்சுக்கிட்டா இங்க வந்து கூலா வாய் பாத்துட்டிருந்தீங்க?'

'உங்களுக்கு இப்போ என்ன பிரச்சினை? உங்களையும் தான் ஆளையே பிடிக்க முடியல. காலுக்குப் பதிலா இறக்கை இருக்கானு யோசிக்கிற மாதிரி.... பறந்திட்டில்ல திரியுறீங்க. பத்தாததுக்கு எங்க போனாலும் என் பின்னாடியே சுத்துறீங்க. சொன்னன்ல நீங்க எனக்கு ஃபிரண்ட் மட்டும் தான்னு.'

அவள் சொன்னது பொய் என்றாலும் அதுவும் மித்ரனுக்குக் கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.
'சந்தோசமா இருந்தா இறக்கை கட்டிப் பறக்கிறது மனிசனோட வழமை தானே?'

'ஓ, அப்பிடி என்ன சந்தோசம் ஐயாவுக்கு?'

'ஆஆஆஆ, லவ் சக்ஸஸ் ஆய்டிச்சு'

'அப்பிடியா? யாரந்தப் பொண்ணு?'

'பொண்ணில்ல..... என் பொண்டாட்டி'

'அடப்பாவி! அப்போ கிஸ் பண்ணும் போது முழிச்சிட்டுத்தான் இருந்தியா? தப்புப் பண்ணிட்டியே ஆரா.' மனதினுள் நினைத்தவள் முகத்தில் புன்னகை கலந்த சிரிப்பு உதிக்க, அவனுக்குத் தெரியக் கூடாதெனக் கடினப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
ஆனாலும் அதைக் கண்டுகொண்ட மித்ரன், 'சிரிப்பை எதுக்கு இப்போ சப்பிச் சாப்பிடுற? சிரிக்கிறதுக்கு உங்களுக்கு பூரண சுதந்திரம் இருக்கு.'

'ஆங் அது சரி. நான் எப்போ உங்ககிட்ட லவ்வ சொன்னன் நீங்க சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடுறதுக்கு?'

'அதெல்லாம் அப்புறமா சொல்றன். இப்போ வா. நாம பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஒண்ணு இருக்கு.'

இருவரும் அருகே இருந்த பெரிய வேப்பமர நிழலில் அமர்ந்து கொண்டனர்.

'சொல்லு மித்து. என்கிட்ட என்ன சொல்லணும்?'

'ஆமா ஆரா. இது கொஞ்சம் சீரியஸான விஷயம். நம்மளோட லைஃப் பத்தினது. குமாரவேல்னு ஒரு சாமியார் இருக்கார். ஒரு வேள நீ கூட அவரைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கலாம்; இல்ல தெரியாமக் கூட இருக்கலாம்.'

'தெரியாது மித்து'

அவளை முறைத்தவன் தொடர்ந்தான். 'பரவால்ல. இப்போ நான் சொல்றதக் கவனமாக் கேளு. குமாரவேல் சாமியார்னு சிலபேர் சொல்லுவாங்க; குமாரவேல் சித்தர்னு சிலர் சொல்லுவாங்க. அவர் அல்லும் பகலும் முருகனைத் தியானித்து வரம் பெற்றவராம். வரம்னா எப்பிடினா.... ஒரு வருஷத்தில ஆறுமாத காலம் அந்தச் சிங்காரவேலனோட காலடில இருந்துக்கிட்டே தவம் செய்வார்; அடுத்த ஆறுமாத காலம் ஊர் உலகத்தை நோக்கிப் பயணப்படுவார். அவர் எதேச்சையாப் போற ஊர்ல... அவர் காணும் ஒவ்வொரு மனிதனையும் அறிந்து அவரவர் இயல்பிற்கேற்ப வழிகாட்டுறதும், அவங்களோட சில தீய குணங்களைத் திருத்துறதும் அவர் வழமையாம். வரம், சாபம்னு எதையும் கொடுக்க மாட்டார். ஏன்னா அது கடவுள் செய்யவேண்டியதுனு சொல்லுவாராம். ஆனாக் கடவுளை அடையறதுக்குத் தன்னால வழிகாட்ட முடியும்னு சொல்லி சில பல உதவிகளைச் செய்வாராம்.
அப்பிடிப்பட்ட மகான் இப்போ வரப்போறது நம்ம ஊருக்கு.'
அவன் கடைசி வரிகளைக் கூறியதும் ஆராவின் உள்ளம் உற்சாகத்தில் குதித்தது. 'நிஜம்மாவா மித்து?' என்று வாயைப் பிளந்தவள், 'நாமளும் அவரைப் பாக்கப் போறமா? நம்மளுக்கும் ஆசி தருவாரா?'

'ஆமா. கண்டிப்பா நாம அவர்கிட்டப் போய் ஆகணும். இங்க நடக்கிறதுக்கெல்லாம் என்ன காரணம்னு தெரிஞ்சுக்கணும். ரிஷ்வியை இந்த நரகத்தில இருந்து விடுவிக்கணும். அவ சந்தோசமா வாழணும் ஆரா.'

'ரிஷ்வி??' கேள்வியாய் அவளது ஒற்றைப் புருவம் வில்லாய் வளைந்தது.

'ரிஷ்வி... ரிஷ்விகா. போன பிறப்பில நம்மளோட பொண்ணு. எனக்குத் தெரியும்; நீ அவளை உன் பொண்ணா ஏத்துக்கலனு. ஆனா எனக்கு அவளை ரொம்ப ரொம்பப் பிடிக்கும் ஆரா. தங்கமான பொண்ணு அவ; அவளை மாதிரிக் குழந்தை பெத்துக்க எல்லாம் வரம் வாங்கிட்டு வரணும். உனக்கு சொன்னாப் புரியாது ஆரா. அவளுக்கு நீனா அவ்ளோ இஷ்டம். ஆனா ஏன் அவ உன் முன்னால வரல, உனக்கு அவளோட பாசத்தை புரிய வைக்க முயற்சி பண்ணலனு தெரியல. ஆனா உன்னோட உயிருக்கு ஆபத்துனு இரவு பகலா உன்னை எந்தக் கெட்ட சக்தியும் நெருங்காமப் பாதுகாத்துட்டு வர்றா. யாருமே இல்லாம அநாதையான நிலைமையை ஃபீல் பண்ணிருக்கியா நீ? அதோட வலி புரியுமா உனக்கு? அந்த வலியை தினம் தினம் அனுபவிக்கிறா நம்ம பொண்ணு. அகரன் உனக்குக் கிடைக்கலனு யோசிச்சுக் கவலைப்பட்ற நீ, கொஞ்சமாவது நடுநிலைமையா நின்னு யோசிச்சுப் பாரேன், ஒரு வேள அவளில கூட நியாயம் இருக்கலாம்னு. இதுக்கு மேல உன்னோட விருப்பம் ஆரா. நான் ஃபோர்ஸ் (force) பண்ண மாட்டன்.'

'எனக்கு அவளைப் பிடிக்காதுனு இல்ல மித்து. முதல்ல கோபம் வெறுப்பு எல்லாம் இருந்தது என்னமோ உண்மைதான். ஆனா இப்போ கோபம் குறைஞ்சிருக்கு, வெறுப்பு சுத்தமா இல்ல. ஆனா நம்ம பொண்ணுனு யோசிக்க முடில. ஏன்னா உங்ககூட அப்பிடி வாழ்க்கை என்னால நினைக்க முடியல. அகரன் நிர்க்கதியா நிக்க, நான் மட்டும் இன்னொருத்தனைக் கைபிடிச்சு, அவனை லவ் பண்ணி, குடும்பம் குழந்தைனு சந்தாேசமா இருக்கிற மாதிரிக் கற்பனை பண்ணிக் கூடப் பாக்க முடியல என்னால. ஏன்னா நான் அந்தளவுக்கு சுயநலவாதி இல்ல. என்னையே உருகி உருகிக் காதலிச்சவர், என்னை நினைச்சே ஏங்கிட்டிருக்கும்போது அவர் கஷ்டப்படக் காரணமான ஒருத்தரை என் குழந்தைனு கொஞ்சவா? உங்களால எப்பிடி முடியுது? சரி அந்த டொபிக் ( topic) விடுவம். என்னதான் கோபமிருந்தாலும், ஒரு குழந்தை எப்பிடினாலும் போகட்டும்னு நினைக்கிற அளவுக்கு ஆதிரா ஈவிரக்கம் இல்லாதவளில்லை. கண்டிப்பா அவர்ட போவம். குழந்தை நிம்மதியா அடுத்த பிறப்பு எடுக்கிறதுக்கு நாம ஏதாவது செய்யணும்னாக் கூடக் கண்டிப்பா செய்வம். அப்பிடியே அகரனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவும், ஏதாவது உதவி செய்ய முடியுமானு வேண்டிக் கேட்டுக் கொண்டு வருவம்.'

'சரி ஆரா. அவர் இங்க வந்ததும் கண்டிப்பா எனக்குத் தெரிய வரும். நீ எதுக்கும் ரெடியா இரு. அடுத்த பத்து நாளுக்குள்ள எதிர்பார்க்கலாம்.'

'ம்ம் சரிடா.'

அன்று நண்பகல் போல கிளம்பி விட்டிருந்தனர் வாணி குடும்பத்தினரும், அபி குடும்பத்தினரும். இனியனின் திருமணத்திற்கு தேதி குறிக்கும்படி மறக்காமல் சொல்லி அனுப்பினாள் ஆரா.
பூரணியும் சந்திரனும் கூடத் தமது பூர்வீக வீட்டிற்கு சென்றிருந்தனர். அவர்கள் இருவரும் இல்லாமல் இவர்களுக்கும், இவர்கள் இருவரும் இல்லாமல் அவர்களுக்கும் பொழுது போகவில்லை. ஆனாலும் ஒருவரை ஓருவர் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது எனும் மனநிலையில் யாரும் யாரிடமும் எதுவும் கூறிக் கொள்ளவில்லை. அத்துடன் ஆராவும் மித்துவும் தனியாக இருந்தால்தான் அவர்களிடையே ஓர் அன்னியோன்னியம் ஏற்படுமென்று பூரணியும் அவர்களது தனிக்குடித்தனத்தையே விரும்பினார். ஆனாலும் இடைப்பட்ட நேரங்களில் இரு குடும்பங்களும் ஒன்றாகி அளவளாவுவதுண்டு. அதொன்றும் அவ்வளவு பெரிய மைல் தொலைவுகளில் உள்ள வீடுகளில்லையே.

இது இவ்வாறிருக்க இடைப்பட்ட எட்டுநாட்களில் ஆதிரா-மித்ரனின் அன்னியோன்னியம் கூடித்தானிருந்தது. இருவரும் தங்களுக்கான இடத்தையும், நெருக்கத்தையும் மற்றவரிடத்தில் உணர்ந்திருந்தனர். அனைத்திற்கும் வில்லனாக வந்தது ஒன்பதாம் நாள்.
அன்று அகரன் வேலைக்குச் சென்றிருக்க, வழமை போலவே தோட்டத்தில் உலவச் சென்றிருந்தாள் ஆரா. தோட்டத்தைப் பராமரிக்கும் தோட்ட வேலைக்காரரும் அன்று வராமல் போக, சரி பூரணிமாவிடம் போய் வருவோம் என நினைத்து அவர்கள் வீட்டிற்குச் சென்றவளை வரவேற்றது வாசலில் தொங்கிய பெரிய பூட்டு. அப்போதுதான் உறைத்தது, அவர்கள் ஊருக்குப் போய் வருவதாகக் கூறியது. 'இருந்த ஒரு சந்தோசமும் போச்சா?' என்று அலுத்துக் கொண்டு வீடு திரும்பியவள், என்ன செய்யலாமென யோசிக்கக் கண்ணில்பட்டது, மித்ரன் பரிசளித்த ட்ராயிங் ஷீட். அதைக் கையிலெடுத்தவள் தன் மனதில் தோன்றியதை வரைய ஆரம்பித்தாள். இத்தனைக்கும் இவள் செல்லுமிடமெல்லாம் "குட்டி போட்ட பூனை" மாதிரியே சென்று வந்தது குழந்தை. அது அவளின் கண்ணில் படவில்லை எனினும், "ஒரு தாயின் பாசத்திற்காக ஏங்கும் குழந்தை" என்பதை மனதில் உருவகித்து அதையும் ஒரு படமாக வரைய ஆரம்பித்தாள். இவ்வாறு படங்கள் வரைவதில் சில மணி நேரங்கள் கழிய... ஆராவைத் தூக்கம் தழுவியது. 'சரி, மித்து வருவதற்குள் ஒருமுறை தூங்கி எழுந்துவிடுவோம்' எனத் தூங்கியவளுக்கு என்றுமில்லாதவாறு அந்தக் கனவு வந்தது.
பின்னிரவு நேரம். புத்தகம் படித்துவிட்டு தூங்க ஆயத்தமாகிறாள் ஒரு பெண். அந்நேரத்தில் தடார் தடார் எனக் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. இவள் பயத்தில் மூலையோடு ஒண்டிக் கொள்கிறாள். 'கதவைத் தொறடி', காட்டமாக ஒலித்தது ஆண் குரலொன்று. அதைக் கேட்ட அவளுக்குச் சர்வமும் நடுங்கியது. அவர்களுக்குச் சிரமம் வைக்காத கதவு சில தட்டல்களில் அடியோடு பெயர்ந்து விழுந்தது. சட சடவென உள்ளே நுழைந்தன மூன்று சோடிக் கால்கள். தனது இயலாமையை நினைத்து விசும்பியவாறே மூலையில் ஒடுங்கி இருந்த அவளை, நெருங்கிய ஒரு ஆணின் அறை, பலமாக அவள் கன்னத்தில் விழுந்தது. 'ஏன்டீ எத்தனை தடவ கூப்பிட்டாலும் திறக்க மாட்டியா கதவ?'
பதிலுக்கு விசும்பல் மட்டுமே எழுந்தது அவளிடத்திலிருந்து.
'மகாராணி பதில் பேச மாட்டீங்களோ?'

'இல்லண்ணா, இரவு எண்டதால பயமா இருந்திச்சு. யார்னு தெரியல, அதான் பயந்திட்டேன்.' விசும்பலிடையே பதில் வந்தது.

'இப்போ யார்னு தெரிஞ்சிடிச்சில்ல?பயம் போய்டிச்சோ?'
மறுமுனை நிசப்தம்.
'இது சரிப்படாது மச்சி; நீ வேலையை ஆரம்பி. டக்குனு முடிச்சிட்டுப் போய்டுவம்.'

'அண்ணெ, சொன்னன்ல? ஒரு குட்டிப் பொண்ணும் கூட இருந்திச்சுனு. அது உள்ள தான் எங்கயாவது இருக்கும். அதை என்ன பண்ணுவம்?'

'குட்டிப் பொண்ணு தான? அதுக்கு ஒண்ணும் புரியாது. பேசாம விட்டுடுவம். ஒரு வேள வளந்திச்சுனா..... அப்பவும் நமக்கு நல்லம் தானே. அம்மா எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறடி பாய மாட்டா?' அருவருக்கத்தக்க சிரிப்பொன்று சிரித்தான்.

அந்த நேரத்தில் அப் பேதைப் பெண்மனம் என்ன வேண்டிக் கொண்டதோ தெரியவில்லை. கரங்கள் கூப்பி இருக்கக் கண்கள் மட்டும் குழந்தை தூங்கிய அறையைத் தொட்டுத் திரும்பின.

ஒருத்தன் நெருங்கி அவள் தோளில் கை வைக்க, டக்கெனக் கையைத் தட்டியவள் கன்னத்தில் பளாரென விழுந்தது மற்றொரு அறை.

'வேணாம்; பிளீஸ். கெஞ்சிக் கேட்டுக்கிறன். விட்டுடுங்க'

'விட்டுட்டுப் போறதுக்கா இவ்வளவு தூரம் தேடி வந்தோம்? இவன் சொன்னதை விட நூறு மடங்கு அழகுடி நீ. புருஷனை இழந்தவ இவ்ளோ அழக எதுக்கு மெய்ன்டெய்ன் பண்ற?' அடுத்துக் கேட்கப்பட்ட கேவலமான கேள்வியைச் சகிக்க இயலாது காதைப் பொத்திக் கொண்டாள் அவள்.
அவளது உதடுகள் மட்டும் அவர்களைக் கெஞ்சிக் கொண்டிருந்தன. அவள் விசும்பலும், கெஞ்சும் குரலும், அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவள் சேய்க்குக் கேட்டிருக்க வேண்டும். திடுக்கிட்டு எழும்பியது. எழும்பிய குழந்தை பதற்றத்துடன் தாய் இருந்த அறைக்கு ஓடியது. தனது தாய் எவனோ ஒருத்தனோட காலைப் பிடிச்சுக் கெஞ்சிட்டிருந்ததையும், அவனோட கை தனது அம்மாவோட தோளை இறக்கமாப் பிடித்திருந்ததையும் கண்டு கோபம் கொண்டது. அந்தக் குழுவிலிருந்த ஒருத்தனை அதற்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அதன் பார்வையில் அதிர்ச்சி தெரிந்தது. 'விடுங்கடா என் அம்மாவ' என்று கத்திக்கொண்டே அவர்களுக்குக் கிட்டச் சென்றது. குழந்தையை அந்நேரத்தில் அங்கு எதிர்பார்த்திராத தாயின் கண்ணில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது. 'ரிஷ்வி உள்ள போ' அதட்டல் குரலாக வெளிவந்தது அவளிடத்திலிருந்தது. ஆனாலும் குழந்தை போகவில்லை. அதுக்கு என்ன நடக்குதென்றும் புரியவில்லை. அவள் மறுபடியும் அவன்கிட்டக் கெஞ்ச ஆரம்பித்தாள்.
'எங்கள விட்டிடுங்கண்ணே.... நாங்க எங்கயாவது போயிட்றோம்.... உங்க கண்ணுலயே பட மாட்டோம்....' இப்பிடி அவள் கெஞ்ச, அவன் 'நீ எங்க கண்ணில பட்டிருக்கக் கூடாது பேபி.... இனிக் கண்ணில பட மாட்டன்னா எப்பிடி? சும்மா சொல்லக்கூடாது உம் புருஷன் ரொம்பக் குடுத்து வச்சவன் தான்... இப்பிடி அழகான பொண்ணுக்குப் புருஷனா இருக்கிறவன் தன்னோட வீட்டுக்கு ஒழுங்கான கதவு போட்டிருக்க வேணாமா? தட்டினோன விழுது.... பாவம் அவனும் அல்ப ஆயுசுல போய்ச் சேந்துட்டான்ல... அப்பறம் அண்ணானு சொல்லாத.... நம்ம உறவுக்குப் பேர் அதில்ல.... நாளைல இருந்து வேணும்னா எங்கயாவது போ..... இல்லனாக் காணாமக்கூடப் போ.... அதப்பற்றி எங்களுக்கு அக்கறை இல்ல... பட் இன்னைக்கு ஃபுல்லா எங்க கூட இரு' என்று கூறி அவளது சேலையை இழுத்தான். அதன்பின் நடந்தது எந்தப் பெண்ணும் தன் வாழ்வில் பார்க்கக் கூடாத காட்சி. குழந்தை அவர்களிடையில் சிக்கிக் கொண்டு, தன்னுடைய பலம் கொண்ட மட்டும் அவர்களிடம் போராடித் தோற்றது. கடைசியில் அதன் தாய் அதனை வெறித்தபடியே இறந்தகாட்சியைத் தான் காண முடிந்தது.
திடுக்கிட்டு எழுந்தாள் ஆரா. 'ச்சை என்ன கனவு இது? அவள் பூர்வீகா, அந்தக் குழந்தை ரிஷ்வி. மனது வலித்தது ஆராவுக்கு. கனவில் கண்ட தன்னாலேயே தாங்க முடியவில்லையே, நேரில் கண்ட குழந்தையின் நிலை?
'ச்சை என்ன மனிதர்கள் இவர்கள்? ஒரு பெண்ணின் மனதை விட உடல் தான் முக்கியமென்று.... ஒரு சாவைக் கூட எளிதில் செய்யக் கூடியவர்களா? அது சரி எல்லாருமே மித்ரனா, அகரனா, இனியனா இருந்திட முடியுமா? அதுவும் என் புருஷன், தொட்டுத் தாலி கட்டின மனைவியைக் கூட அவள் விருப்பமில்லாமல் தொடக் கூடாதென்று, இன்றுவரை என்றுமே அவர் தனக்கான உரிமையை எடுத்துக் கொண்டதில்லை.'
என்று தூக்கக் கலக்கத்தில் அவள் ஏதோ யோசித்தபடி இருக்க, எங்கிருந்தோ ஓடி வந்த மித்ரன்.... 'ஆரா! ஆரா! உன்கிட்ட ரொம்ப சந்தோசமான விசயம் ஒண்ணு ஷெயார்(share) பண்ணணும்' என்றபடியே அவளைக் கட்டிக் கொள்ள... ஏற்கனவே கனவு கண்ட அதிர்ச்சியிலிருந்து மீளாதிருந்தவளுக்கு, என்றுமே தொட்டுப் பேசாதவன் இன்று அணைத்துக் கொண்டது எதிர்பாராததாக இருக்கத் தன்னையறியாமலே கத்தத் தொடங்கினாள்.
'ச்சீ மித்ரன், நீங்க இவ்வளவு ச்சீப்பா விகேவ் பண்ணுவீங்கனு நினைக்கவே இல்ல. இப்போ கொஞ்சம் முதல்தான் உங்களப் பத்திப் பெருமையா நினைச்சிட்டிருந்தன். ஆனா அதுக்கெல்லாம் உங்களுக்குத் தகுதியே இல்ல. இவ்வளவு நாள் உங்க கூட ஒண்ணா இருந்தத நினைக்கவே அருவருப்பா இருக்கு. அப்பவும் இப்பிடித்தானே எதிர்பாத்திட்டு இருந்திருப்பீங்க. ஆம்பிளைங்களுக்கு, பொம்பிளைங்க மனசுலாம் ஒரு விஷயமே இல்லையா? வெறும் சுகம் மட்டும்தானா?'
ஏதேதோ கத்தியவளைக் கண்டு பேசத் திராணியில்லாமல் நின்றிருந்தான் மித்ரன். அவனுக்கு எதுவுமே புரியவில்லை. அவனுடைய ஆதிரா அவனைப் பார்த்து என்னவெல்லாம் கேட்டுவிட்டாள். அவளது சந்தோசத்திற்காகத்தானே தூங்கும் போது கூட தன் கை அவள் மீது படக்கூடாதென உறுதியாய் இருந்தான். குழந்தை, ஆரா அவனுக்கு முத்தம் கொடுத்ததாகச் சொன்னதிலிருந்துதான், அவளைத் தொடவும் தனக்கு உரிமை உண்டென நினைத்திருக்கிறான்; ஆனால் அதையும் அவள் அனுமதியின்றி எடுத்துக் கொள்ள அவனொன்றும் அரக்கனில்லையே? எவ்வளவு ஆவலாக, சந்தோசமாக வந்தான் அந்த இனிய செய்தியைக் கூறுவதற்கு. அந்த சந்தோச மிகுதியில்தானே அவளைக் கட்டியணைத்தது கூட. ஆனால் அவனது ஆரா அவனை இப்படிக் கேவலமாக நினைப்பாளா? ஒரு வேளை அவன் இதுவரை கண்டதெல்லாம் வெறும் கனவு தானோ? ஆரா அவனை நண்பனாக மட்டும்தான் பார்க்கிறாளோ? சிறு குழந்தை கூறியதை நினைத்து அவன் உரிமை எடுத்துக் கொள்ள நினைத்தது தவறோ? ஆரா கூறிய வார்த்தைகள் அவனை அணுஅணுவாகச் சிதைக்க, தன் மேலேயே வெறுப்பு வந்தது அவனுக்கு.

'சாரி ஆரா; நான் வேணும்னே பண்ணல. ஒரு சந்தோசத்தில, மனைவி தானேனு நினைச்சு.....'

'நிறுத்துங்க; என்னைக்காவது என் புருஷன்கிற ஸ்தானத்தை உங்களுக்குக் குடுத்திருக்கனா? இல்ல அப்பிடி நடந்திருக்கனா? முதல்ல வெளில போங்க. முன்னால நிக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு.' கூறியவள் இல்லை இல்லைக் கத்தியவள், ஏதோ நினைவு வரவும், உடனேயே தனது உடைகளைச் சரி பார்த்தாள்.'

அதைப் பார்த்த மித்ரனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. 'உன்னை நான் அப்பிடி ஒரு எண்ணத்தில பாத்ததே இல்லயே கண்ணம்மா, அவ்வளவு கேவலமாவா என்னை நினைச்சு வச்சிருக்க?' கேட்கத் தோன்றிய மனதை சிரமப்பட்டு அடக்கியவன்; கண்களில் நீர் வழிய வெளியேறினான்.

அவன் சென்று அரைமணி நேரம் கழிந்த பின்னே தன் சுய நினைவுக்கு வந்த ஆரா, அப்போதுதான் உணர்ந்தாள்; உணர்ச்சி மிகுதியால் தான் உரைத்த வார்த்தைகளின் வீரியத்தை. அதை எண்ணியவளுக்குக் கண்கள் கலங்கியது. 'என்னோட மித்து என்றைக்குமே என்னை அப்பிடிப் பாத்ததில்லையே? ஏன் இப்பிடிப் பைத்தியம் மாதிரி நடந்துக்கிட்டேன்? அந்தக் கனவு, அது தான் காரணம். அவங்க செய்த ஒவ்வொரு சித்திரவதையும் எனக்குச் செய்த மாதிரியே இருந்திச்சே. மித்து இதெல்லாம் சொன்னா நீங்க புரிஞ்சுப்பீங்களா? ரிஷ்வி நம்மளோட குழந்தைதான் மித்து. அவளைக் கூப்பிட்டு நான்தான் உன்னோட அம்மானு சொல்லிக் கொஞ்சணும். அவ அனுபவிச்ச வேதனை, பூர்வியா இருந்தப்போ நான் அனுபவிச்ச வேதனைலாம் எனக்கு இன்னைக்குத் தான் புரிஞ்சுது.
நீங்க சொன்னீங்கல, அவள் ஏன் எனக்கு முன்னால இப்போ வர்றதில்ல, அவளோட பாசத்தை எனக்குப் புரிய வைக்கலனு உங்களுக்குத் தெரியலனு. எனக்குத் தெரியும் மித்து, ஏன்னா அவளை எனக்கு முன்னால வரவேணாம்னு சொன்னதே நான்தான். அன்னைக்கு நம்ம கல்யாணம் முடிஞ்சப்போ என்னோட வாழ்க்கையே முடிஞ்சதா நினைச்சன். அன்னைக்கே நாம இங்க வர வேண்டியதாப் போச்சு. எல்லாரும் புறப்பட்ற வேலைல இருந்ததால என்னைக் கவனிக்கல. கொஞ்ச நேரம் என்கூட ஆறுதலா இருந்த அபியும் உங்களுக்கு உதவி செய்ய வந்திட்டா. அந்த இடைல நம்ம பொண்ணு என்னைத் தேடி வந்தா. 'அம்மா! நான் இதை உங்க நல்லதுக்குத்தான் பண்ணன்'னு ஏதோ சொல்ல வந்தா. எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்ல. அன்னைக்கும் இப்பிடித்தான், "ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு" எண்ட மாதிரி நடந்துக்கிட்டன்.
'ச்சீ நீயெல்லாம் ஒரு குழந்தையா? நான் அழ அழப் பொருட்படுத்தாமப் பொருந்தாத கல்யாணத்தை செய்து வச்ச நீ..... அதுவும் என்னோட அகரனைப் பணயம் வச்சு... உன்னைப் பாக்கவே அருவருப்பா இருக்கு. அப்பிடி என்ன என்னோட உயிரைக் காப்பாத்தினியா இந்தக் கல்யாணத்தை செய்து வைச்சு? அதுதான் நீ செய்த நல்லதுனா, அப்பிடிப்பட்ட உயிர் எனக்குத் தேவையே இல்ல. ஏதோ பாசம் பாசம்னு சொல்றியே, அந்தப் பாசம் கொஞ்சமாவது உனக்கிருந்தா, இன்னொரு தடவ என்முன்னால வராத; இந்த மூஞ்சிய நான் வாழ்க்கைல பாக்கக் கூடாது.' இப்பிடிலாம் தாறுமாறாக் கத்தினன். ஆச்சர்யம் என்னனா நான் கூப்பிடு தொலைவில இருந்து கதைச்ச எதுவும் உங்க காதில விழாததுதான். அதுவும் அவ வேலை தான். ஆனாலும் நம்ம பொண்ணு ரொம்ப அழுத்தக்காரி தான் மித்து, அவ அம்மா மாதிரியே; சொல்லி இத்தனை நாளா என்னைப் பாக்க வரவே இல்ல. ரிஷ்விமா நான் உன்னைப் பாக்கணும்டா; நீ என்னோட குழந்தை. உன்னோட பிஞ்சுப் பாதத்தைத் தொட்டு அம்மா மன்னிப்புக் கேக்கணும்டா.' வாய்விட்டுப் புலம்பியவள், தன்னருகே நிழலாட மித்ரன் தானோ என்று நினைத்து நிமிர, அவள் அணைத்துக் கொள்ளும் வண்ணம் கைகளை விரித்து நீட்டியபடி, கண்கள் குளமாக நின்றிருந்தது ரிஷ்வி.