• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 23)

Saunthu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 20, 2021
52
16
8
Jaffna, Sri Lanka
தன்னருகே கைகளை விரித்து நின்ற குழந்தையைத் தாவி அணைத்துக் கொண்டவள், அதன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமழை பொழிந்தாள். 'கண்ணா! அம்மா மேல கோபமாடா? ரொம்பக் கஷ்டப்படுத்திட்டன்ல என் செல்லத்த? சாரிடா; நீ என்னோட தங்கம் அம்மு. அம்மா கோபத்தில பண்ணிட்டத மனசில வச்சுக்காத கண்ணம்மா' குழந்தையைத் தூக்கித் தன் மடியில் இருத்தி, அவளிடம் மன்னிப்புக் கோரும் தோரணையில் அதன் பிஞ்சுப் பாதங்களைத் தூக்கி முத்தமிட்டாள். கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் தன் பட்டு விரல்களால் துடைத்துவிட்ட குழந்தை, 'இப்பிடிலாம் நீங்க சொல்லணும்னு அவசியமே இல்லம்மா; ரிஷ்விக்கு உங்க மேல கொஞ்சம் கூடக் கோபமில்ல; நான் எதிர்பாத்ததெல்லாம் உங்க பாசம் மட்டும்தான். அதுவும் எனக்கு மனசாரக் கிடைச்சிடிச்சு. நீங்க பிறந்ததில இருந்து உங்களைப் பாத்திட்டிருக்கன்மா; நீங்க எப்போ இங்க வருவீங்கனு எதிர் பாத்திட்டே இருந்தன். நீங்களும் இங்க வந்திட்டீங்க; உங்க பாசமும் எனக்குக் கிடைச்சிடிச்சு. ரிஷ்வி சந்தோசமா இருக்காம்மா. ஆனா அவளோட அப்பா சந்தோசமா இல்ல. நீங்கதான் அவரைச் சந்தோசமாப் பாத்துக்கணும்மா; அப்பாக்கு நீங்கனா உயிர்; உங்களுக்கு ஒண்ணுனாத் தாங்க மாட்டார்; நீங்க சொன்ன வார்த்தைகள் அவரை ரொம்பக் காயப்படுத்தி இருக்கு; நீங்கதான் அவரைச் சமாதானப்படுத்தணும்மா.'

'கண்டிப்பாடா கண்ணா, ஆனாலும் உன்னைச்சின்னப் பொண்ணுனு நினைச்சன். இந்த வயசில இவ்வளவு விபரம் கூடாதுடி உனக்கு.'

'ஆல்ரெடி சொல்லிருக்கன்லம்மா; எனக்கு தோற்றம்தான் இப்பிடி, வயசு உங்களை விடக் கூட.'
குழந்தை சாதாரணமாகத்தான் சொன்னது என்றாலும், ஆராவுக்கு அது மிகவும் வலித்தது. உண்மைதான், எத்தனை எத்தனை வருடங்கள் காத்திருந்திருக்கிறாள். ஆராவையே அம்மாவாக நினைத்துச் சுற்றி வந்திருக்கிறாள். அவளுக்கென ஒரு துணையுமில்லாமல் தனித்து நின்றிருக்கிறாள்.
'உன்னை மாதிரி ஒரு குழந்தையை ஏதோ ஒரு ஜென்மத்தில பெத்தன்னு நினைக்கவே அருவருப்பா இருக்கு, உன்னைப் பாக்கவே பிடிக்கல, நீயெல்லாம் ஒரு பொண்ணா? இந்த மாமரத்தை வெட்டுங்க முதல்ல' இப்படி எத்தனை வார்த்தைகள் பாவித்தாளென நினைக்க அவள் மேலேயே வெறுப்பு வந்தது ஆராவுக்கு.
அவள் மேலும் கலங்குவதைக் கண்ட குழந்தை, 'அப்பாவ நினைச்சுக் கவலைப் படுறீங்களாம்மா? நம்ம மித்து தானே, எல்லாம் புரிஞ்சுப்பார்; நீங்க போய்ப் பேசுங்க அவர் கூட.' தான் எதையோ நினைத்துக் கலங்க எதையோ விளங்கிக் கொண்டு.... தன்னைச் சமாதானப்படுத்தும் குழந்தையை நினைத்து மனம் வெதும்பியள், தன் செல்வத்தைத் தன்னாடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டாள். 'நீங்க சொன்னது சரிதான் மித்து, இப்பிடி ஒரு குழந்தையைப் பெற வரம் வாங்கிட்டு வந்திருக்கணும்' உதடுகள் தாமாகவே முணுமுணுத்தன. கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து அவள் மன்னவனைத் தேடின.
'ரிஷ்விக் கண்ணா!'

'சொல்லு அம்மு'

'அம்மா, அப்பாவ ஒரு எட்டுப் போய்ப் பாத்திட்டு வந்திடவா?'

'நீ ஐஸ் வைச்சுக் கூப்பிட்டவே நினைச்சன், உன் புருஷன் விஷயமாத்தான் இருக்கும்னு. போ போய்ப் புதுப் பிரச்சனையைக் கொண்டுவராம, எல்லாத்தையும் சோல்வ் பண்ணிட்டு வா'

'என்னடி, சட்டுனு மரியாதையைக் குறைச்சிட்ட?'

'எனக்கு ரொம்பப் பிடிச்சவங்கள அப்பிடிக் கூப்பிடத்தான் பிடிக்கும் எனக்கு. அப்போதான் ரொம்பக் கிளோசா இருக்கிறமாதிரி இருககும். அதோட சொன்னன்ல, எனக்கு உன்னை விட வயசு கூட'

' உன்னோட வாய் இல்லனா, நாய் கொண்டு போய்டும்டி உன்ன'

அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும்போதே மித்ரன் வாசலில் நின்று கதவைத் தட்டினான்; கண்கள் எங்கோ வெறித்தன. இங்கிதம் தெரிந்த பெரிய மனுஷி ரிஷ்வி எழுந்து நாகரிகமாக வெளியே சென்று கொண்டார்.

'வா மித்து; இதென்ன புதுசாக் கதவெல்லாம் தட்டிட்டு?'

'கொஞ்சம் நாகரிகம் தெரிஞ்சு நடக்கணும்ல, பொம்பிள இருக்கிற அறை. நீங்க என்ன நிலைல இருக்கீங்கனு தெரியாம டக்குனு உள்ள வரக் கூடாதில்ல.'
அவன் நிற்கும் போது, தான் தனது உடையைச் சரி செய்தது அவனுக்கு எந்தளவுக்கு வலித்தது எனப் புரிந்தது ஆராவுக்கு. கலங்கிய கண்கள் அவனது வலியைப் மேலும் பறைசாற்றின.

'சாரி மித்து, நான் வேணும்னு பண்ணல; டக்குனு அப்பிடிப் பண்ணும்போது.... நான் உண்மையாவே அதை எதிர்பாத்திருக்கல... அதோட அப்போ நான் அந்தக் கனவு....' ஏதோ சொல்ல வந்தவளைக் கையசைவில் தடுத்தான் மித்ரன்.

'நான் இப்போ வந்தது முக்கியமான விசயம் ஒண்ண சொல்றதுக்கு ஆதிரா.'

'நானும் முக்கியமான விசயம் ஒண்ணு உன்கிட்ட சொல்லணும் மித்து; வை த வே (by the way ) நீ அப்போத ஏதோ முக்கியமா சொல்லணும்னு ஓடி வந்தியே, அதத் தான் இப்போ சொல்லப் போறியா?'

வெற்றுப் புன்னகை ஒன்றை உதிர்த்தவன்,' அது அப்போ ஆதிரா, அந்த விசயத்துக்கு இப்போ முக்கியமில்லாமப் போய்டிச்சு.'

'சாரி மித்து, நான் வேணும்னு பண்ணல, உங்கள எவ்வளவு கஷ்டப்டுத்திருக்குனு புரியுது; ஆனாலும்....'

'நடந்ததைப் பத்திப் பேசி எந்தப் பிரியோசனமும் இல்ல ஆதிரா. அதை விடுவம். அதோட நீங்க சாரி சொல்றதுக்கு இதில ஒண்ணுமே இல்ல. என் தப்புத்தானே, உரிமையில்லாத ஒண்ணைத் தொட்டது? ஒரு பொண்ணா ஒரு காதலியா நீங்க ரொம்பச் சரியா இருந்தீங்க அண்ட் இருக்கீங்க ஆதிரா... அகரனுக்கு'

அந்த இறுதி வார்த்தையின் அழுத்தம் ஆதிராவுக்கு தூக்கி வாரிப் போட்டது. என்ன சொல்ல வருகிறான் இவன்?

'நீங்க அன்னைக்குச் சொன்னதுதான் ஆதிரா சரி. நம்ம பிரியுறதுதான் முறை. எனக்குப் புரியுது, உங்களால அகரன மறக்க முடியல. அது எனக்குப் புரிஞ்சும் அவனோட உங்கள சேர்த்து வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது என் தப்பு. நாளைக்குக் குமாரவேல் சாமியார் நம்ம ஊருக்கு வாறார். அவர்கிட்டப் போய்.... நம்ம பொண்ணு, சாரி சாரி என் பொண்ணு ரிஷ்விக்கு மறுவாழ்வு கிடைக்கணும்னா என்ன பண்ணணும்னு கேட்டுத் தெரிஞ்சு கொண்டு அதைச் செய்து முடிப்பம். அப்புறம் எந்தத் தடங்கலும் இருக்காது. அது வரைக்கும் மட்டும் கொஞ்ச நாள் என்கூட இருங்க. இது உங்க நல்லதுக்கும்தான் சொல்றன். ஏன்னா ரிஷ்வி இருக்கிற வரை எங்களப் பிரிய விடமாட்டா. உங்களுக்கு மணவிலக்குத் தர எனக்கு முழுமையான சம்மதம். இத்தனை நாள் உங்களுக்கு விடுதலை தர யோசிக்காததுக்கு ரொம்பவும் சாரி. எல்லாம் மாறும்; என்னோட ஆரா என்னை ஏத்துப்பானு நினைச்சன். ஆனா அவ எப்பவுமே அகரனோட காதலி தான்னு யோசிக்க மறந்திட்டன். எனக்கு உங்கள ரொம்ப ரொம்பப் பிடிக்கும் ஆதிரா. எனக்கு நீங்க வேணும்னு நினைச்ச நான், உங்களுக்கு என்ன வேணும்னு நினைக்கல. எவ்வளவு பெரிய சுயநலவாதி நான்! நடந்ததப் பேசிப் பிரியோசனமில்லை. நாளைக்கு இதுக்கொரு முடிவு தெரியும். இந்த வீட்டுல தாராளமா இடமிருக்கு. இனி நான் என் பொண்ணோட தூங்கிக்கிறன். அப்போ உங்களுக்குத் தோணாதில்ல, தூங்கும் போது இவன் என்னத்த நினைச்சிட்டிருப்பான்னு? நாம டிவோர்ஸ் பண்ணிக்கலாம்.' கடைசியாக அந்த வார்த்தைகளைக் கூறும்போது, வந்த கண்ணீரை வலுகட்டாயமாக அடக்கிக் கொண்டான். 'ஆனாலும் இந்தக் காதல் ரொம்பப் பொல்லாதது ஆதிரா. இப்போதான் உங்க ரெண்டுபேரோட வலி எனக்கு முழுசாப் புரியுது. அவனோட அம்மா அப்பா சாகும்போது கூட மற்றவங்க முன்னால ஒரு சொட்டுக் கண்ணீர் விடல மித்ரன். தனிமைல நிறைய அழுதிருக்கன். அது மற்றவங்களுக்குப் புரியாதில்ல, எல்லாரும் சொல்லுவாங்க, 'இரும்பு நெஞ்சுடா உனக்கு, அம்மா அப்பா செத்தாக்கூட அழ மாட்டியானு?' ஆனா அவங்கலாம் யாரு, அவங்க முன்னால நான் அழுறதுக்கு? அவங்க என்ன எனக்காகக் கவலைப்படவா போறாங்க? எங்க அழுகைக்கு எங்க மதிப்பிருக்கோ அங்க மட்டும்தான் அழணும். அபியோட வீட்ல நான் அழுதா, அவங்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி வரும்.... அவங்க என்னை நல்லாப் பாத்துக்கலயோனு, அதனால அவங்க முன்னால அழுததில்ல. அகரன்ட அழுதிருக்கன்; ஏன்னா அவனை மாதிரி என்னை உயிரா நினைக்கிற ஒரு தோழன் இல்லை; ஆனா நான் ஏன் இங்க அழுறன்னு தெரில ஆதிரா. ஆம்பிளைங்க அழவே கூடாதுனு நினைக்கிற ரகம் நான். அதையும் மீறி.... அம்மா மடில படுத்துக் கத்தி அழணும்னு தோணுது; உங்களவுக்கு நேசிக்க எனக்கு இங்க யாருமில்லை, தயவு செய்து என்னை உங்ககூடக் கூட்டிப்போய்டுங்கனு அவங்க காலைப் பிடிச்சுக் கெஞ்சணும் போல இருக்கு. ரொம்ப வலிக்குது எனக்கு. அன்னைக்கு நீங்க கிடைக்காமப் போனப்போ என்னோட அகரனுக்கும் இப்பிடித்தானே வலிச்சிருக்கும்? என்ன வேதனைனாலும் என்கிட்டத்தான் சொல்லுவான். பக்கத்தில நானுமில்லாம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்? இதே வலி தான, அவளோட காதல் கிடைக்கலனும்போது என்னோட மனைவிக்கும் இருந்திருக்கும்? வேணாம் இதுக்கு மேல யாரும் கஷ்டப்பட வேணாம். நாளைக்கு ஒரு முடிவு தெரிஞ்சிடும் ஆதிரா. காலைல ஆறுமணிக்கு ரெடியா இருங்க. நானே பிக்கப் பண்ணிக்கிறன். சாமியார்கிட்ட முடிவு கேட்டுத் தெரிஞ்சதுக்கப்புறம்.... இந்த நரக வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டிடலாம். உங்கள அகரன் கூடவே உங்களைச் சேர்த்து விட்டிர்றன்.

ஆதிராவுக்கு எதுவுமே புரியும் நிலையில் இல்லை. நேற்றுவரை என்னோட காதலுக்காக ஏங்கிட்டிருந்த மித்ரன், என்னை வேணாம்னு சொன்னாக்கூடத் தாங்கிப்பனோ என்னவோ? எவ்வளவு துரிதமாக இன்னொருவரிடம் தாரை வார்க்கிறேன் என்கிறார்? 'உனக்குப் புரியலயா மித்து, உன்னோட கண்ணீர் ஏன் எனக்கு முன்னால வெளிப்படுதுனு? நான் உன்னோட பாதிடா. உன்னோட கண்ணீருக்குத் தெரிஞ்ச என்னோட ஸ்தானம் உனக்குப் புரியலயா? என்னை நீங்க வாங்க போங்கனு..... அவ்வளவு அந்நியமாப் போய்ட்டனா நான்? ரிஷ்வி நம்ம பொண்ணுடா. அவளை நான் ஏத்துக்கிட்டதையும், என்னோட காதலையும் உன்கிட்ட சொல்லணும்னு எவ்வளவு ஆசையா வந்தன்? என்னைப் பேசவே விடலயே நீ. ஆனா அவளுக்கும் உனக்கும் என்னவொரு ஒற்றுமை, அவளும் உரிமை இல்லாம போ வானு கதைக்க மாட்டா, நீயும் அப்பிடித்தான். நான் என்ன சொல்ல வர்றன்னு கேட்டியா? அப்போத நான் பண்ண தப்பத்தான இப்போ நீ பண்ணிட்டிருக்க. என்னோட காதலை ஒருநாள் கூடவா நீ உணரல? உனக்கு அம்மா மடி வேணும்னா... அதுக்கு நான் இருக்கன்டா. அகரன் எனக்குக் கிடைக்காதப்போ வெறும் வலி இல்ல, உயிரே போச்சு. ஆனா அந்தக் காலத்த நான் கடந்து வந்திட்டேன்டா. மறுபடியும் அந்த வலியை எனக்குத் தரப்போறியா நீ?'
அவளது மனக்குமுறல் வெளிப்படும் முன்னரே வெளிச்சென்றிருந்தான் மித்ரன்.