• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 25)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
புது மஞ்சள் கயிற்றின் வாசம் காற்றில் வீச... அதிர்ச்சியின் உச்சத்தில் நின்றிருந்தாள் ஆரபி; பக்கத்தில் ஆரவ்; முன்னால் அவளின் தோழிகள் ரேஷ்மா மற்றும் ப்ரியா.
ஆரபிக்குக் கண்கள் குளமாக, அதைக் கண்ட ப்ரியா பதைபதைத்து... 'ஆரா என்னாச்சு? ஏன் இப்போ அழுற?'

'என்ன காரியம் பண்ணிட்ட ப்ரியா? காவ்யா இதை எப்பிடி எடுத்துப்பானே தெரியல. நாங்க ரெண்டுபேரும் ரூம்ல தனியா மாட்டிட்டோம்தான். ஆனா அதுக்காக இப்பிடியா வற்புறுத்திக் கல்யாணம் பண்றது? நான் இதைக் கொஞ்மும் எதிர்பார்க்கல. காவ்யா வேற இதை எப்பிடி எடுத்துப்பானே தெரியலயே.

'நீங்க தான் ஆரபியை உள்ள தள்ளிக் கதவை மூடினதா?' கோபக்கனல் தெறிக்க வெளிவந்தது ஆரவ்வின் குரல்.

'ச்ச ச்ச நாங்க எதுக்கு இப்பிடிப் பண்ணப் போறம்? உங்களைக் காப்பாத்திக் கதவைத் திறந்துவிட்டா... நீங்க எங்க மேலயே பழியைப் போடுறீங்களா? சாமி சாட்சியா எங்க ஆராவைக் கல்யாணம் பண்ணிருக்கீங்க... அவளைக் கண்கலங்காமப் பாத்துக்கோங்க. இல்லனா நடக்கிறது வேற' என சற்று எச்சரிக்கையாவே கூறினாள் ப்ரியா.

ப்ரியா.... ஆராவின் நண்பர்களிலேயே மிகவும் தைரியமானவள் அவள்தான். அவள் ஒரு ஆம்பிளைக்கு எச்சரிக்கை விடுவிப்பதொன்றும் புதிதல்ல. ஆண்களிடத்தில் மரியாதை, பயம் நிமித்தம் விலகிச் செல்லும் பெண்கள் மத்தியில்... இவள் தனித்துவமானவள். நியாயம் இருந்தால் யாரையும் தட்டிக் கேட்பாள். அவள் தலைமையில் நடந்த கல்யாணம்தான் இது.

இரு மணித்தியாலங்கள் முன்பு....
ஆரபியின் ஐடியாவைக் கேட்ட ரேஷ்மாவிற்கு இருப்பே கொள்ளவில்லை. தனது நண்பியின் வாழ்க்கை முக்கியமெனக் கருதி அந்தக் காரியத்தை செய்ய நினைத்தாலும் அவளுள் ஏதோ இனம்புரியாத பதைபதைப்பு இருந்தது. எனவே தான் தனது நண்பியும், துணிச்சல்காரியுமான ப்ரியாவின் உதவியை அவள் நாடியது. இதனிடையில் ஆரபி தன்னை அழைத்து வேறு ஏதேனும் விபரீதமாகச் சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில்தான் அவள் தனது ஃபோனை ஆஃப் செய்து வைத்தது. ரேஷ்மா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ப்ரியா, 'ப்ச் என்ன ரேஷ்மா, ஆரா தான் அறிவில்லாம ஏதோ சொல்றாள்னா... நீயும் அதுக்கு சரினு சொல்லிட்டு வந்து நிக்கிற. எப்பிடி அவளுக்கு இப்பிடிலாம் கீழ்த்தரமா யோசிக்கத் தோணுது. கண்டிப்பா இது காவ்யாக்குத் தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சிருந்தா விடமாட்டா. ஆராவோட ஆள் யாருனு உனக்குத் தெரியுமா முதல்ல? ஆரவ்னு பேர் மட்டும்தான் தெரியும். எப்பிடி நீ இதுக்கு ஓகே சொன்ன? சரி நீ ஒண்ணு பண்ணு'

'சொல்லு ப்ரியா. நீ சொல்லும்போதுதான் எனக்கே எவ்ளோ பெரிய தப்பைச் செய்றன்னு தோணுது. ஆராக்கு அவளோட காதல் வேணும்னு நினைச்சதாலதான் இப்பிடி யோசிச்சிருக்கா.'

'காதல் வேணும்னா இப்பிடித்தான் யோசிப்பாளா? அதான் சொல்றாளே.... ஆரவ்வும் தன்னை லவ் பண்றான். தனக்காக காலேஜ்கெல்லாம் வந்திருக்கான்னு. அப்பிடிப்பட்டவன் தன்னால வந்து லவ் சொல்ல மாட்டானா? இப்பிடி ஃபோஸ் பண்ணித்தான் லவ்வ சொல்ல வைக்கணுமா?'

'அப்பிடி இல்லை. அவனுக்குள்ள ஏதோ தயக்கம் இருக்குதாம். ஆனா இப்பிடி ஒண்ணு நடந்திட்டா... தன்னோட மானம் போகக் கூடாதுனு ஓகே சொல்லிடுவானாம். அப்புறம் தாங்க ரெண்டுபேரும் எந்தத் தயக்கமும் இல்லாம லவ் பண்ணலாமாம். காவ்யா வேற அடிக்கடி சொல்லுளாம்; சீக்கிரம் ஆரவ்வோட முடிவ சொல்லச்சொல்லி. ஆரவ் லவ்வ சொன்னதும் அவனைக்கூட்டிப் போய் காவ்யாட்டக் காட்டணுமாம். இதுவரைக்கும் லவ் சொல்லிக்காததால காவ்யாட்டயும் ஒண்ணும் ஷெயார் பண்ண முடியலயாம்'னு புலம்பினா. அதான் பாவமேனு ஹெல்ப்...' சொல்ல வந்தவள் ப்ரியாவின் முறைப்பைக் கண்டு அடங்கினாள்.

'உனக்கு அறிவே இல்லையா? இவ்வளவு யோசிக்கிறவள் தானாப் போய் லவ்வ சொல்ல வேண்டியதுதான. எதுக்கு இடையில இன்னொராளக் கூப்பிட்றா? அவ ரொம்ப நல்ல பொண்ணுதான் ரேஷ்மா; நான் இல்லைனு சொல்லல. ஆனா லவ்குள்ள மூணாவது மனுசங்கள இழுக்கிறது சரியில்லை. லவ் சொல்லத் தைரியமில்லாதவ எதுக்கு லவ் பண்ணினா? கோபமா வருது எனக்கு.'

'சாரிடி. அவள்ட சொன்னாப் புரிஞ்சுப்பா. நீ என்னை ஏதோ செய்யச் சொன்னல? சொல்லு, நான் என்ன பண்ணணும்?'

'நீ ஒண்ணுமே பண்ணாம இரு. அது போதும். இப்போ வா, அவளை என்னனு கேட்டிட்டு வருவம்.'

'இப்போ கிளாஸ் தொடங்கிருக்கும்டி; அவ கிளாஸ்ல இருப்பா.'

'ச்ச உன்னால இன்னைக்கு கிளாஸும் கட் பண்ண வேண்டியதாப்போச்சு' சலித்துக் கொண்டாள் ப்ரியா.

'ம்கும். அப்பிடியே கிளாஸ் அட்டெண்ட் பண்ணி எல்லாத்தையும் பாஸ் பண்ணிட்டாலும். ஏற்கனவே நாலைஞ்சு அரியர்ஸ் வச்சிருக்குத் தூங்குமூஞ்சி.' மனதுக்குள் பொருமினாள் ரேஷ்மா. மனதுக்குள் தான்; வெளியே சொல்லி, ப்ரியாவிடம் வாங்கிக்கட்ட ரேஷு தயாராக இல்லை.

அவள் என்ன யோசிப்பாளெனப் புரிந்து கொண்ட ப்ரியா திரும்பி, 'நீ மட்டும் எல்லாம் பாஸ் பண்ணிட்டியா என்ன?' என்று கேட்க, அச்சச்சோ மைண்ட் வாெய்ஸ்னு நினைச்சு வெளிப்படையா உளறீட்டமோனு ரேஷு திகைக்க, 'அதெல்லாம் மைண்ட்ல தான் நினைச்ச, ஆனா உன் மங்குனி மனசு என்ன நினைக்கும்னு எனக்குத் தெரியாதா? சரி வா; போய்க் காத்து வாங்கிட்டு வருவம்.' என்றாள்.

'கொஞ்சமாவது அறிவிருக்கா ப்ரியா உனக்கு'

'அதை நீ கேக்கிறியா?'

'இப்போ போக, மிஸ் பாத்திட்டா என்ன பண்றது?'

'நாம அந்தப் பக்கம் போகப்போவதில்லை மங்குனி அமைச்சரே; இக்கிடிச் சூடு'

இருவரும் சேர்ந்து வரும்போதுதான் ஆராவின் ஃபோன் குறிப்பிட்ட ஒரு அறைக்கு வெளியே விழுந்திருப்பதைக் கண்டனர். அதைக் கண்டெடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போதுதான் அந்தக் குரலைக் கேட்டனர். 'யாராவது இருந்தா ஹெல்ப் பண்ணுங்க பிளீஸ். நாங்க உள்ள மாட்டிக்கிட்டோம்.'

அந்த நேரம் பார்த்து முதலாம் பாட நிறைவுமணி ஒலிக்க, இரண்டாம் பாடமாக கணினி வகுப்பைக் கொண்டிருந்த மாணவர்கள் அவ்வழியே வரவும், இவர்கள் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது. அதில் நின்றிருந்த அத்தனை மாணவரும் இவர்களைப் பார்த்திருக்க, ஆராவுக்குக் கொஞ்சம் அவமானமாகப் போயிற்று. 'ச்ச இதையா ஒரு பிளானா வச்சிருந்தோம்?' என தன்னைத்தானே கடிந்து கொண்டவள், வேகமாக அங்கிருந்து செல்ல முற்பட 'என்ன ஆரா, இவர்தான் உன்னோட லவ்வரா? பிறகென்ன நல்ல புளியங்கொப்பாத் தான் பிடிச்சிருக்க' என்றொரு குரல் கேட்க... மற்ற மாணவர்களும் சற்று கேள்விக்குறியாகப் பார்க்க... ஆரா இன்னும் கூனிக்குறுகிப் போனாள். இது இவ்வளவு அவமானமாக இருக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. நினைத்திருந்தால்தான் அப்படியொரு முட்டாள்தனமான முடிவை எடுத்திருக்க மாட்டாளே. ஆரவ்விற்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை. 'நீங்க எல்லாம் மனுசங்கதானே? ஒரு பொண்ணு ஒரு ஆணோட தனியா இருந்தாலே அவ தப்பாகிடுவாளா? எந்தக் காலத்தில இருக்கீங்க நீங்க? உங்க அக்காவாப் பார்க்கவேண்டிய பொண்ணை இப்பிடித்தான் கேவலமாப் பார்ப்பீங்களா? நீ வா ஆரா. இவனுங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க.' அவன் கூறிவிட்டு ஆராவைக் கூட்டிக் கொண்டு கிளம்ப, மாணவர்கூட்டம் கணினி வகுப்பை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

'நில்லுங்க நீங்க எங்க போறீங்க?' என்றபடி வந்தாள் ப்ரியா.

'ஆராவை அவ கிளாஸ்ல விட்டுட்டு என் வேலையைப் பாக்கப் போறேன்.'

'அப்புறம்?'

'அப்புறம் என்ன?

'பாருங்க மிஸ்டர், நீங்க இவ்ளோ நேரம் ஒரு பொண்ணு கூடத் தனியா இருந்திருக்கீங்க. ஆரபி அம்மா அப்பா இல்லாத பொண்ணு. அவ பேர் இப்போ கெட்டிடுச்சு. மற்றவங்க பாக்காம... நானும் ரேஷ்மாவும் மட்டும் பாத்திருந்தாப் பிரச்சினை இல்ல. இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சு அவளைப் பற்றித் தப்பா நினைச்சிருப்பாங்க.'

'நீங்களுமா? இப்பிடி மற்றவங்க அது சொல்லுவாங்க இது சொல்லுவாங்கனு வாழுறத எப்போ விடப் போறீங்க? அதோட நாங்க அவ்ளோ நேரமாலாம் இருக்கல.'

'அது நீங்க சொல்லுவீங்க. எல்லாரும் ஏத்துப்பாங்களா? ஆராவுக்குனு நாங்கதான் இருக்கோம். அவளுக்கு ஒண்ணுனா நாங்க கேப்போம்.'

'இப்போ என்னை என்ன செய்யச் சொல்றீங்க? இதெல்லாம் ஒரு விசயமே இல்ல. சும்மா பெரிசுபடுத்தாதீங்க பிளீஸ்.'

'ஆமா, உங்களுக்கெல்லாம் இது ஒரு விசயமே இல்லை; ஏன்னா நீங்க ஆம்பிள. எங்க வேதனை எங்களுக்குத்தானே தெரியும்.'

'முடிவா என்ன சொல்ல வாறீங்க?'

'என் கூட வாங்க ஆராவைக் கூட்டிக்கிட்டு'

வெளியே இருந்த அம்மன் கோயிலுக்குக் கூட்டிவந்தவள்.... 'இது அம்மனோட சந்நிதானத்தில எப்பவுமே பூஜைல இருக்கிற தாலி. குடும்பத்தில ஒத்துக்காத காதலை ஏற்று வாழ வேண்டியவங்க இங்க வந்து அம்மன் அருளோட கல்யாணம் பண்ணிப்பாங்க. அதனால சதா பூஜைல ஒரு தாலி இருந்திட்டே இருக்கும். ஆரா கழுததில இதைக் கட்டுங்க.'

'வாட் நான்சென்ஸ். ஒண்ணுமில்லாத விசயத்தைப் பெரிசுபடுத்தி இப்பிடி நீங்க செய்றது கொஞ்சமும் நல்லா இல்ல. மிஸ்'

'அப்புறம்? நீங்க போய்டுவீங்க. நாங்க எங்க ஃபிரண்டை என்ன நம்பிக்கைல வச்சிருக்கிறது? நீங்க இப்பவே முரண்டு பிடிக்கிறீங்க. போனாத் திரும்பி வருவீங்களோ என்னமோ?' ப்ரியா கேட்க, ஆராவுக்குக் கண்களை முட்டிக் கொண்டு இப்பவோ அப்பவோ என்று கொண்டு நின்றது கண்ணீர். ஈனக்குரலில்.... 'ப்ரியா பிளீஸ். யாரையும் கஷ்டப்படு்த்த வேணாம்.' சிரமப்பட்டு உதிர்த்த வார்த்தைகள் அங்கொன்றும் இங்காென்றுமாக வந்து விழுந்தன.

'நீ சும்மா இரு ஆரபி. உனக்கொன்னும் தெரியாது. இவருக்கு உன்னைக் கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா இல்லையா?'

'நீங்க இப்பிடிலாம் பண்றது உங்க பிளானாேனு தோணுது எனக்கு' ஆரவ்விடம் வார்த்தைகள் தெறித்தன.
ஆராவிற்குத் தூக்கிவாரிப் போட்டது. மொத்தமும் அவள் பிளானல்லவா?

'உங்களைத் தாலிகட்டச் சொன்னேன்.'

'என்ன மிரட்டுறீங்களா?'

'இருக்கலாம்.'

'நான் மாட்டன்னு சொன்னா?'

'ஆரா வாழ்க்கை நாசமாப் போறதுக்கு நீங்க காரணமா இருப்பீங்க.'
பக்கத்தில் நின்ற ஆரா வேறு அழுதபடி இருக்க, அதைத் தாங்க மாட்டாதவன் மறுபேச்சின்றித் தாலியை வாங்கி மூன்று முடிச்சுப் போட்டான். அதன் பின் அவள் கையைப் பிடித்தவன்... 'ஆரபி கவலைப்படாத; நான் இருக்கன்' என்று கூறியவன் அவள் கையைப்பிடித்துக் கூட்டிச் செல்ல ஆரம்பித்தான்.

அதைப்பார்த்த ப்ரியா, 'நில்லுங்க; ஆராவை எங்க கூட்டிட்டுப் போறீங்க?'

'அவ இப்போ என்னோட மனைவி. அவளை எங்க கூட்டிப்போகவும் எனக்கு உரிமை இருக்கு. தேவையில்லாம யாருக்கும் பதில் சொல்லணும்கிற அவசியம் எனக்கில்லை.' ப்ரியாவை பாராமலே கூறியவன், கல்லூரிக்குச்சென்று தனது காரில் அவளை ஏற்றிக் கொண்டு கிளம்பினான். அவர்களது கார் கம்பவுண்டைத் தாண்டும்போது ப்ரியாவும், ரேஷ்மாவும் உள்ளே ஓடிவருவது தெரிந்தது. அவர்கள் யாரையோ நோக்கி ஓடிவர, திரும்பிப்பார்த்த ஆரா கதிகலங்கிப்போனாள். ப்ரியா மற்றும் ரேஷ்மாவை நோக்கிக் கண்ணில் கண்ணீரோடு ஓடி வந்து கொண்டிருந்தாள் காவ்யா. அவள் இருந்த நிலையிலும், ஆரா காரினுள் இருந்ததாலும் காவ்யாவிற்கு ஆராவைத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் காவ்யாவைப் பார்த்த ஆரபிக்கு வேதனை தாங்க முடியவில்லை. அவளுடைய இந்தப் பிளான் இவ்வளவு பெரிய விசயமாகுமென்று அவள் நினைக்கவில்லை. ப்ரியா மட்டும் நடுவில் வந்திருக்காவிடில் பிரச்சினை இருந்திருக்காதோ என்று கூடத் தோன்றியது.

ப்ரியாவும் முதலில் ஆராவின் பிளானை செயல்படுத்த வேண்டாமென்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் ஏற்கனவே அந்தப் பிளான் அரங்கேறிவிட்டது அவளுக்குத் தெரியாது. அதன்பின்னும் இருவருக்கும் அறிவுரை கூறி அனுப்பியிருந்திருப்பாள், வேறு யாரும் அவர்களைப் பார்க்காதிருந்திருந்தால். ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப் போய்விட்டது. இன்று ஆரபியை விட்டால்.... கண்டவர்களுக்கும் கேலியாகிவிடும் என்ற காரணத்தினாலும், இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியதாலும்தான் அவள் இந்த முடிவுக்கு வந்தது. இனிமேல் ஆரா அவனது மனைவி. யாராலும் தவறாக ஒரு வார்த்தை பேச முடியாது. ஆனால் இவள் எடுத்த இம்முடிவு எவ்வளவு பெரிய விபரீதத்திற்கு வழிவகுக்குமென அவள் அப்போது அறிந்திருக்கவில்லை. ஆரவ்வின் கார், ஆரபியின் ஊருக்கு வெளிப்புறத்தில் வெகுதொலைவில் நின்றிருந்தது. ஆராவால் நடந்ததெல்லாம் நிஜமென்று நம்ப முடியாத நிலைமை. காவ்யா எவ்வளவு தூரம் புரிந்து கொள்வாள்? ஆராவை ஏற்றுக் கொள்வாளா? என்றெல்லாம் நினைத்துக் குழம்பியவள், 'சரி எதுக்கும் அவகூட ஃபோன் பண்ணிக் கதைப்பம். என்னோட காவ்யா என்னைப் புரிஞ்சுப்பா' என நினைத்து ஃபோனைத் தேடியவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது, தனது ஃபோன் ரேஷ்மாவிடமென்று. எதிர்பாராத் திருமணம் அடிவயிற்றில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்க, ஃபோனின் ஞாபகமே வரவில்லை ஆராவுக்கு. 'ச்ச' அலுத்துக் கொண்டவள், சரி ஆரவ்விடம் கேட்டுக் கோல் பண்ணுவம்னு நினைத்து அவனிடம் சென்றால் அவனோ கட்டிலில் படுத்து உறங்கியிருந்தான். இப்படியெல்லாம் எதிர்பாராது நடந்த பின்னும் ஒருவரால் இவ்வாறு நிம்மதியாக உறங்க முடியுமா? ஒரு வேளை அது தன்னைக் கைபிடித்த சந்தோசத்தில் தான் நிம்மதியாக உறங்குகிறானோ? இவனைப் பற்றி ஒன்றுமே தெரியாது; ஆனால் இந்த நிமிடம் அவள் அவன் மனைவி. பிடித்தவனைக் கைபிடித்ததை எண்ணி மகிழவா? எதிர்பாரா திருப்பத்தால் கலங்கவா? எனத் தெரியாது நின்றவள், அவனைக் குழப்ப வேண்டாமென நினைத்து அவ்விடம்விட்டு அகன்றாள்.

அடுத்த ஒருகிழமையில் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வீட்டில் வாங்கிக் குவித்திருந்தான் ஆரவ். அத்துடன் ஆரபிக்குத் தேவையான பிரத்தியேகமான பொருட்களை வாங்க அதிகளவான பணமும் தந்து அவளுக்குப் போக்குவரத்திற்கான ஏற்பாடும் செய்தான். ஆனாலும் இருவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. இதனால் ஆரபியாலும் ஆரவ்விடம் ஃபோன் வாங்கி காவ்யாவிடம் கதைக்க முடியாது போயிற்று. இவ்வாறே ஒரு வாரம் ஓடிப்போயிற்று. ஆனால் இன்று எவ்வாறேனும் காவ்யாவிடம் கதைக்க வேண்டுமென நினைத்தவள், தயங்கித் தயங்கி அவனிடம் வர, அவனே ஆரம்பித்தான்.

'ஆரா! நான் உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்.'

'சொல்லுங்க'

'சாரி. நம்ம ரெண்டு பேருக்குமே எதிர்பாராத விதமா இந்தக் கல்யாணம் நடந்திடிச்சு. இதனால நீயும் மனசளவில ரொம்பப் பாதிக்கப்பட்டிருப்ப. இந்த ஒரு கிழமையா நான் உன்கிட்ட சரியாப் பேசலனாலும், தாலிகட்டிக் கூட்டி வரும் போது.... "நான் இருக்கன்" எண்ட நம்பிக்கையைக் குடுத்துத்தான் கூட்டி வந்தன். ஆனாலும் இந்த ஒருவாரமா நான் உனக்கு சரியான நம்பிக்கையைத்தரல. உன்கிட்ட விலகியே இருக்கிறதுக்கு சாரி.'

'இட்ஸ் ஓகே. எனக்குப் புரியுது. உங்களுக்கும் அந்த அதிர்ச்சில இருந்து வெளிவர நேரம் தேவைப்பட்டிருக்கும்.'

'அது மட்டுமில்ல காரணமில்ல ஆரா.' ஆரபி கேள்வியாக நோக்க, ஆரவ்வே தொடர்ந்தான்.'

'என்னை மன்னிச்சிடு. கல்யாணமாகி எந்தப் பொண்ணுமே தன் புருஷன் வாயால இப்பிடி ஒரு வார்த்தை கேக்க விரும்ப மாட்டா. உனக்கு அந்தக் கஷ்டத்தைக் குடுக்கிறதுக்கு சாரி. எனக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சமாயிடுச்சு இன்னொரு பொண்ணுகூட. நான் அவளை ரொம்பவும் லவ் பண்றன். அவளும்தான். இன்னும் ரெண்டு மாசத்தில கல்யாணம்னு இருந்திச்சு.' ஆரபிக்குத் தூக்கிவாரிப் போட்டது. சொல்லாத காதலை நம்பி எவ்வளவு பெரிய மடைத்தனம் செய்துவிட்டாள். ஆரவ் அவளை விழுந்து விழுந்து கவனித்தது வெறும் மனிதாபிமானத்திலா? கல்லூரிக்கு வந்து சென்றது அவளுக்காக இல்லையா? இப்போது அந்த மற்றப் பெண்ணின் நிலைமை? ஊரறியக் கல்யாணம்னு சொல்லிட்டு.... திடீர்னு நிறுத்துவதென்றால் அந்தப் பெண்ணின் வாழ்வு? ஆரபிக்கு இப்போதே இந்தப் பூமி பிளந்து தன்னை விழுங்கிவிடாதா என்று இருந்தது. ஆரவ்வே தெடர்ந்தான்.

'அந்த நிமிஷம் உங்ககிட்ட சொல்லிப் புரிய வைக்கலாம்னு நினைச்சன். விடாப்பிடியா உன் ஃபிரண்ட் இந்தக் கல்யாணத்தைச் செய்து வச்சிட்டா. அதுக்காக உன்னைக் கொடுமைப்படுத்துற ஆள் நானில்லை. அதே நேரம் உன்னை முழுமனதோட மனைவினு ஏத்து வாழவும் என்னால முடியாது. அதுக்குக் கொஞ்சக் காலமாகும். என்னை விரும்பினவளுக்கு ஒரு கல்யாணம் நடந்து அவ சந்தோசமா வாழுறதைப் பார்த்தாலே எனக்குப் போதும்னு இருக்கு. அதுவரைக்கும் நீ வெய்ட் பண்ணுவியா? உனக்கு வேற யாரையாவது பிடிச்சிருந்தாக் கூட சொல்லு, அவர்கிட்டப் பேசி நான் புரிய வைக்கிறன். உங்களை சேர்த்து வைக்கிறன். அன்னைக்கு நீ நிதானமா இருக்கல. அழுதிட்டே இருந்த. எனக்குப் பொண்ணுங்க அழுதாப் பிடிக்காது. அதோட அன்னைக்கு நான் உன்னைக் கைவிட்டு வந்திருந்தா.... நீ அம்மாப்பா இல்லாத பொண்ணு. இவகிட்ட யாரும் எப்பிடி வேணாலும் நடந்துக்கலாம்கிற எண்ணம் கண்டவங்களுக்கும் வரக்கூடாது. ஒரு பொண்ணோட வாழ்க்கைனு பாக்கும்போது என் காதல் பெரிசாத் தெரியல. அவளை யார் வேணாலும் கல்யாணம் பண்ணுவாங்க. அன்பான பொறுப்பான அடக்கமான பொண்ணு. ஆனா உன் பேர் கெட்டதுக்கப்புறம் உன் பிளஸ் யார் கண்ணுக்கும் தெரியாது. உன்னைக் கஷ்டப்படுத்தக் கூடாதுனுதான் கல்யாணம் பண்ணன். ஆனா இப்போ இவ்ளோ பெரிய வலியைத் தர்றதுக்கு சாரி.'

ஆராவிற்குப் பேச நா எழவே இல்லை. எத்தனை பேருடைய வாழ்க்கை பாழாகப் போய்விட்டது? ஆரவ், அவன் விரும்பிய அந்தப் பெண், கூடவே இன்னொருத்தியை விரும்புபவனைக் கணவனாகப் பெறும் பாக்கியம் பெற்ற ஆரபி. விரக்தியில் சிரிப்பு வந்தது அவளுக்கு. உன்னைத்தான் விரும்புறன்னு இவன்கிட்டச் சொல்லவா முடியும்? தட்டுத் தடுமாறிப் பேசினாள்.
'அஅவங்க கிகிட்ட சொல்லிட்டீங்களா நம்ம விசயத்தை?' நடுக்கமாக வெளிவந்தது குரல்.

'நான் சொல்லல. ஆனா அவளுக்குத் தெரிஞ்சிருக்கும்.'

'நீங்க சொல்லாமலேவா?'

'ம்ம்'

'எப்பிடி'

'அவளும் உங்க காலேஜ்தான்.'

'ஓஓ அவங்களைப் பாக்கத்தான் அப்போ அடிக்கடி வந்தீங்களா?'

'அதுவும் ஒரு காரணம். அதோட உங்க கல்லூரிக்கு டொனேஷன் குடுக்கத் தேவைப்படும் போதெல்லாம் வருவன்.'

'ஆனா ஒரு தடவை கூட உங்க பெயரை அங்க கேட்டதில்லையே?'

'டொனேஷன் குடுத்திட்டு அதைச் சொல்லிக் காட்டுறது எனக்குப் பிடிக்காது.'

'இப்போ என்கிட்ட சொன்னீங்களே?'

'உனக்கு ஆல்ரெடி தெரியும்னு எனக்குத் தெரியும்.'

'ம்ம்.'

'உன்னைக் கஷ்டப்படுத்தவே கூடாதுனு நினைக்கிற உன் பிரண்ட்ஸ் ரேஷ்மா, ப்ரியா, காவ்யா மத்தில நான் உனக்குக் கிடைச்சிருக்க வேணாம்.'

'என் பிரண்ட்ஸ் பத்திலாம் உங்களுக்குத் தெரியுமா? எனக்கு அம்மா அப்பா இல்லைனு எல்லாம் எப்பிடித் தெரியும் உங்களுக்கு?'

'காவ்யா சொல்லியிருக்கா.'

'காவ்யாவா? உங்களுக்கு முன்னாடியே அவளைத் தெரியுமா? உங்ககிட்டப் பேசுவாளா?' ஆரபி ஆச்சரியத்தில் விழிவிரித்துக் கேட்க, ஒரு வெற்றுப்புன்னகையை உதிர்த்தவன் கூறினான். 'எனக்குனு நிச்சயம் பண்ண பொண்ணே காவ்யாதான்.'
 
Top