• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 6)

Sri Durga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 20, 2021
39
8
8
Jaffna, Sri Lanka
வீட்டிற்குச் சென்ற இனியன் அவர்களுக்கு எதையும் எடுத்துக் கூற வேண்டிய நிலைமை இருக்கவில்லை..... ஏனெனில் அபிநயா இவர்களுக்கும் தகவல் கூறி விட்டிருந்தாள்.... காலையிலேயே அப்பாவின் அலுவலகத்திற்குச் சென்றதும், அங்கு தெரிந்து கொண்ட விஷயங்களும் உடலையும் உள்ளத்தையும் பாடாகப்படுத்த சோர்வுடன் கட்டிலில் விழுந்தான் இனியன்....

மாலை ஆறு மணி போல் சாமியாரிடம் செல்ல நேரமாகிற்று என்று அன்னை எழுப்பும் வரை இனியனுக்கு நல்ல நித்திரை.... தாயாரின் உந்துதலில் பதறி எழுந்தவன் வெகு சீக்கிரமே குளித்து முடித்து ரெடியாகி வந்தான்.... வந்தவனுக்கு ஆச்சரியம்.... சாமியாரிடம் போய் வருவதற்கான ஆயத்தங்கள் மட்டுமின்றி ஒரு பெரிய பூசைக்குத் தேவையான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தன.... மஞ்சள்,விபூதி, குங்குமம், தேசிப்பழம், பட்டு என இன்னும் எத்தனை எத்தனையோ ஆயத்தங்கள்... 'என்னம்மா இதெல்லாம்?' என்று கேட்டபடி வந்தவனிடம்... 'நம்ம ஆராக்கு ஏதோ நேரம் சரியில்லையாம்பா.... இப்போ கல்யாணம் பண்ணக்கூடாதாம்.... நல்லகாலம் நாங்க நாள் எதுவும் குறிக்கல... அபியோட ஊர்ல இருக்கிற அந்த சாமியார் ரொம்பத் திறமையானவராம்.... கூட இன்னொரு சாமியாரையும் கூட்டி வந்திருக்காராம்... பூசை ஒன்னு செய்தா நல்லதாம்... அது தான் இவ்வளவு ஏற்பாடும்' என்று தாயார் முடிக்க ஆதிராவைக் கேள்வியாக நோக்கினான் அண்ணன்.... அவளது கண்ணசைவில் அவனுக்குப் புரிந்தது... பாதி உண்மையும் பாதி பொய்யுமாக தாயாரை சமாளித்து வைத்திருக்கிறாள்... கெட்டிக்காரி தான்... ஆராவிடம் எல்லா விடயங்களையும் விபரமாகச் சொல்லி இருந்ததால் இனியனிடம் அவர்களை அழைத்து வரும்படி மட்டும் கூறி இருந்தாள் அபிநயா... இங்கு எல்லா வேலைகளும் நன்றாகவே நடந்து முடிந்திருந்தன... சரியான நேரத்தில் அகரன் குடும்பமும் வந்து சேர்ந்தது... இரு குடும்பமும் இணைந்து இரண்டு வாகனங்களில் புறப்பட்டார்கள் அபிநயாவின் ஊரை நோக்கி.... அவர்களில் ஒருவருக்கேனும் தெரிந்திருக்கவில்லை... இரு குடும்பமும் இணைந்து செல்லும் கடைசி நிகழ்வு அதுவென்று....

அபியின் ஊர் சென்று அவளின் குடும்பத்தையும் அவர்களுடன் நின்றிருந்த மித்ரனின் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு சாமியாரின் இடத்திற்குப் போய் சேர இரவு எட்டு மணியாகிற்று... சாமியார் இருவரும் தயாராகவே இருந்தனர்.... இவர்கள் சென்றதும் அவர்களை அழைத்துக் கொண்டு சற்றுத் தொலைவிலிருந்த துர்க்கை அம்மன் ஆலயத்துக்குச் சென்றனர்.... அங்கே கம்பீரமாகவும் அதே சமயம் புன்னகை ததும்பும் சாந்த முகத்துடனும் கம்பீரமாக வீற்றிருந்தார் அன்னை ஸ்ரீதுர்க்கா... எவ்வேளையிலும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் மென்னகை வீசிய அந் நங்கையைக் காணக் கண் கோடி வேண்டும்... எல்லோரும் மெய்மறந்து நிற்க... சாமியார் இருவரும் வேண்டிய ஆயத்தங்களைச் செய்து விட்டிருந்தனர்.... அம்மனுக்கு முன்னால் மிகப் பெரிய சக்கரமொன்று வரையப்பட்டிருந்தது... அவர்கள் கொண்டு சென்றிருந்த பட்டும் பூமாலையும் அம்மனுக்குச் சாத்தப்பட்டு தமது பிறவிப் பெரும்பலனை அடைந்திருந்தன... தேசிக்காயில் மஞ்சள் தடவப்பட்டிருந்தது.... விபூதி, குங்குமம் அம்மனுக்குச் சாத்தப்பட்டிருந்தது... இவ்வாறு அவர்கள் கொண்டு சென்றிருந்த அத்தனை பொருட்களும் தத்தம் வேலைகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தன.... நேரம் இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்க வந்திருந்த புதிய சாமியார் நேரமாகி விட்டதை ஜாடை செய்ய எல்லோரும் அம்மனைத் தரிசித்து விட்டு பூசைக்கு ஆயத்தமாகினர்... சாமியார் இருவரும் அம்மனைப் பூக்களால் அர்ச்சித்தபடி கண்களை மூடியிருக்க அவர்களது அதரங்கள் எதையோ முணுமுணுத்த வண்ணம் இருந்தன... மொத்தக் குடும்பமும் அவர்களையும் அம்மனையும் பார்த்து வழிபாட்டில் லயித்துப் போய் இருந்தனர்...
நேரம் ஆக ஆகப் புகை மண்டலமாய் ஏதோ பரவியது... சாமியார் இருவரது இதழ்களும் புன்னகையில் விரிந்தது... ஆனாலும் ஜெபிப்பதை நிறுத்தவில்லை... சற்று நேரமானதும் பரவிய புகைமண்டலம் சிறிது சிறிதாக ஒடுங்கிச் சக்கர நடுவே சிறு பெண்குழந்தையொன்று தோன்றியது... அப்பெண்குழந்தை முகத்தில் எந்த மாசுமருவும் இல்லை.... வடித்த சிலையென அமைதியாக நின்றிருந்தது.... அந்தக்குழந்தை முகத்தில் கோபமென்ற ஒன்று சிறிதும் தோன்றக்கூடுமா என்பது சந்தேகம் தான்... என்ன நடக்கிறது என சிலர் குழப்பத்திலும் சிலர் அதிர்ச்சியிலும் பார்த்துக் கொண்டிருக்க அங்கு உச்ச பட்சத்தில் அதிர்ந்தது ஆதிராவும் இனியனும் தான்.... சந்தேகத்திற்குச் சிறிதும் இடமின்றி அது அந்தக்குழந்தையே தான்... காவியன்பட்டில் இறந்த அதே குழந்தை... அதன் கழுத்தில் கிருஷ்ணமூர்த்தி பார்த்த அதே தங்கச் செயினும் ஆதிராவின் சிறுவயது ஃபோட்டோவுடன் கூடிய டொலரும்.... குழந்தை சற்றுத் தூரத்தில் நின்றிருந்ததாலும் அங்கு நடப்பதைச் சரிவர புரிந்து கொள்ள முடியாததாலும் இனியனைத் தவிர வேறு யாரும் அதனைக் கவனிக்கவில்லை.... ஆலயத்தினுள் ஆத்மா நுழைய முடியுமா என்ற கேள்வி ஒருபுறம் துளைத்தெடுத்தது...

புதிய சாமியார் பேச ஆரம்பித்தார்.... 'சொல்லு பாப்பா உனக்கு என்ன வேணும்?'

'பாப்பாவா? ஹஹஹா... நாலு கொலை செஞ்சிருக்கன்.... நான் பாப்பாவா? ஆங்காரமாக ஒலித்தது குழந்தையின் குரல்.... சற்றுமுன் அதிர்ந்து பேசத் தெரியுமா என அங்கிருந்தவர்கள் யோசித்த அதே குழந்தை...'

சாமியாரே திடுக்கிட்டுத் தான் போனார்... 'நாலு கொலையா? என்ன வயசு பாப்பா உனக்கு... உயிரோட முக்கியத்துவம் தெரியுமா உனக்கு? யாரைக் கொலை பண்ண? ஏன் கொலை பண்ண? எதுக்கு இவங்கள தொந்தரவு பண்ற?'

சாமியார் கேள்விகளைத் தொடுக்கக் கையமர்த்திய குழந்தை.... 'பொறுங்க ஐயா... இத்தனை கேள்வி கேட்டா நான் எப்பிடிப் பதில் சொல்றதாம்.... சின்னப்பாப்பா இல்லையா நான்?' இந்தமுறை மிக அழகாகச் சிரித்தது.... அப்படி ஒரு மென்மை... இதில் எது நிஜம்?

குழந்தையே தொடர்ந்தது...
'முதல்ல என்ன கேட்டீங்க? எனக்கு எத்தனை வயதா? சாகும் போது அஞ்சு வயசு.... உயிரோட இருந்திருந்தா இப்போ கல்யாணப் பொண்ணா இருந்திருப்பேன்... உங்கள மாதிரி.... இல்லையாம்மா?' என்று ஆதிராவைப் பார்த்துக் கேட்டது.... அதன் "அம்மா" என்ற அழைப்பு ஆதிராவின் உயிரைத் தொட்டு வந்தது... கலைவாணிக்குக் கூட அந்தச் சின்னக்குழந்தையை எங்கோ பார்த்த ஞாபகம்.... அந்தக் குழந்தையே இல்லன்னாலும் அதோட சாயல் கொஞ்சம் பழக்கப்பட்ட மாதிரி இருந்தது...
'உங்களுக்கு நினைவிருக்காம்மா நாங்க எப்பிடிலாம் வாழ்ந்தோம்னு... யார் அந்த சந்தோசத்தைக் குலைச்சாங்கனு.... நாம யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணலயேம்மா? அப்புறம் ஏன் இவங்க நமக்கு நல்ல வாழ்க்கையை தரல?' ஆதிராவைப் பார்த்துக் கேட்ட வண்ணம் அம்மனை நோக்கிக் கைகாட்டியது குழந்தை.
பாவபுண்ணியம் ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்ந்து வரும் என்பது தெரியவில்லை அதற்கு.... குழந்தை இல்லையா?

ஆதிராவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.... வார்த்தைக்கு வார்த்தை அம்மானு சொல்ற குழந்தைக்கு 'நான் உன்னோட அம்மா இல்ல' என்று சொன்னாப் புரிஞ்சுக்குமா? ஆனாலும் அதன் "அம்மா" என்ற அழைப்பு அவளை ஏதோ செய்தது மட்டும் நிஜம்...

குழந்தையே தொடர்ந்தது... 'நாலு கொலை செஞ்சது உண்மை தான்... ஆனா ஊருக்கு நல்லது பண்ணி சதா நல்லதே யோசிச்சிட்டிருக்கிற நாலு உத்தமரை நான் கொலை பண்ணல... சமுதாயத்தில இருந்து பிடுங்கி எறியப்பட வேண்டிய நாலு களைகளைத்தான் கொலை செஞ்சன்' என்று கூற ஆரம்பித்தது...

'காவியன்பட்டு... ரொம்ப அழகான ஊர் அது.... ஆனா அது எங்களோட சொந்த ஊர் இல்ல.... நாங்க அங்க தங்கிறதுக்காக வந்திருந்தோம்.... நாங்கனா அப்பா, அம்மா, நான் மூனு பேர்.... எங்க சொந்த ஊர்ல ஒரு பிரச்சினைனு தான் இங்க வந்தோம்... அதனால அங்க எங்களுக்கு சொந்தத்த உருவாக்கிக்கப் பிரியப்படல... அதனால யாரும் தொந்தரவு பண்ணாத மாதிரி, நாமளும் யாரையும் தொந்தரவு பண்ணாத மாதிரி ஒரு இடத்தை தெரிவு செஞ்சு எங்களால முடிஞ்ச அளவில ஒரு வீடு கட்டினோம்.... வீடு ரொம்பச் சின்னது.... ஆனா அம்மாவும் அப்பாவும் எல்லாமே சமாளிக்க கூடியவங்க... நான் குட்டிப் பொண்ணுங்கிறதால எனக்கு வீடு பற்றியெல்லாம் அக்கறை இருக்கல..... அம்மா அப்பா பாத்துப்பாங்க என்ட நம்பிக்கை... அவங்களால முடிஞ்ச அளவுக்கு தோட்டம்லாம் வச்சு சுமாரான வாழ்க்கையா இருந்தாலும் சந்தோசமான வாழ்க்கையா இருந்திச்சு.... அம்மாவும் அப்பாவும் லவ் மரேஜ்.... அவங்க லவ் எப்பவும் குறைஞ்சதில்ல.... அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டே இருப்பா எத்தனை வருஷமானாலும் உங்களுக்குப் பொண்டாட்டியாகணும்னு..... அந்தளவுக்கு அவங்க அன்பு இருந்திச்சு.... அளவான வருமானம்... அளவுக்கதிகமான பாசம் அப்பிடி ரொம்பக் குட்டியான அழகான குடும்பம்.... எங்களுக்கு உறவு இல்லனாலும் அன்பாப் பாத்துக்க ஒரு பாட்டி இருந்தாங்க.... ரொம்பப் பிரியம் என் மேல.... அம்மாக்கெல்லாம் நிறைய ஹெல்ப் பண்ணுவாங்க..... அவங்க கூடவும் சேர்ந்து நாம நாலு பேருமே ரொம்ப சந்தோசமாத் தான் இருந்தோம், அப்பா சாகிற வரை...

அப்பாக்கு டிகிரி முடிச்சிருந்ததால காவியன்பட்டுல வேலை எடுக்கிறது அவ்வளவு சிரமமா இருக்கல.... கை நிறைய சம்பளம்னு இல்லனாலும் எங்க குட்டிக் குடும்பத்தைப் பாத்துக்கிற அளவுக்குப் போதுமான வருமானம்... அப்பிடி ஒரு நாள் வேலைக்குப் போன அப்பா தான், திரும்பி வரவேயில்லை.... அவர் திரும்பி வரப்போவதில்லை என்ற செய்தி தான் வந்தது.... அப்பா நடந்து வந்து முடக்கு ஒண்ணில திரும்பும் போது வேகமா வந்த அம்புலன்ஸ்ஸோட மோதி ஸ்பொட் அவுட்..... இதில ரெண்டு சைட்டுமே தப்புச் சொல்ல முடியல.... ஏன்னா அது அவசரசிகிச்சைக்காக ஒருத்தங்கள ஏத்திட்டு வந்த அம்புலன்ஸ்... இவரும் திரும்பினது முடக்கில..... செய்தி வந்ததும் அம்மா ரொம்பவே உடைஞ்சு போய்ட்டாங்க.... கத்தி அழுதாங்க.... அம்மாவுக்குப் பாட்டியோட ஆறுதல் ரொம்பப் பெரிசா இருந்திச்சு.... அதோட நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு அம்மாவ சந்தோசமா வச்சிருப்பேன் என்னோட வழக்கமான சேட்டைகளால.... அப்போ எனக்கு 'இறப்பு' என்டா என்னனு தெரியாது.... ஆனா அப்பா இனி வரமாட்டார் அவரைப்பார்க்கவே மாட்டம் என்டது ரொம்ப அழுகையா வந்திச்சு..... அப்பாவோட உடல் வீட்டுக்கு வந்ததும் அம்மா கதறிக் கதறி அழுதாங்க..... ரொம்ப கஷ்டமா இருந்திச்சு எனக்கு.... அம்மா அழுது நான் பாத்ததே இல்ல... அன்னைக்கு அப்பிடி அழுதாங்க... ஏதோ எங்களால முடிஞ்ச அளவு கிரியை செய்து முடிச்சம்... அப்பாவோட இழப்பில இருந்து மீண்டுவரக் கொஞ்ச காலம் எடுத்திச்சு.... ஆனா அம்மா எனக்கு எந்தக் குறையும் இல்லாம நல்லாத்தான் பாத்துக்கிட்டாங்க.... அப்பாவோட இழப்புத்தொகை மாதாமாதம் கொஞ்சம் வரும்..... அதை வச்சுத்தான் அம்மா என்னை நல்லாப் பாத்துக்கிட்டாங்க.... கூடவே தோட்டமும் கைகுடுத்திச்சு.... அப்பா இல்லாத வெறுமையைத் தவிர மற்றபடி குடும்பம் நல்லாத்தான் போச்சு..... அவங்க எங்க வாழ்க்கைல வாற வரை....'
 
  • Like
Reactions: Vimala Ashokan