நதி - 16
திங்கள் கிழமைதான் வருவாள் என்று எதிர்பார்த்திருக்க சனிக்கிழமை காலையிலேயே கார்த்தியின் ஆஃபிசிற்கு வந்திருந்தாள் அபி.
அவளைப் பார்த்ததும் ஆபிஸ் பையன் குமரன், “என்னக்கா இங்க வந்துருக்கீங்க, உங்க அப்பா எப்படி இருக்கார். அவருக்கு ஒன்னும் இல்லையே,” என்றதும்,
“இல்ல ஒன்னுமில்ல.. நல்லாருக்கார்..” என்றவளிடம்
“வேற எதுவும் முக்கியமான விசயமா?” என படபடவென கேட்க,
“அது அதுவந்து சாரை பார்க்கனும்.” என திணறியவளை யோசனையாக பார்த்தான் குமரன்.
பின் “கார்த்தி அண்ணா பத்து மணிக்குத்தான் வருவார். நீங்க எட்டு மணிக்கே வந்துருக்கீங்க.” என அவளுக்கு மேலே சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தை குறிப்பாக பார்த்தான்.
“ஓ..” என இழுத்தவளுக்கு ஸ்ருதி சுத்தமாக இல்லை. யாருக்கும் சொல்லாமல், முக்கியமாக மனோகரிக்கு தெரியாமல் வர வேண்டும் என்ற பதட்டத்தில் வேகமாக வந்துவிட்டாள்.
இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க, அதை கவனித்த குமரன் “சரிக்கா.. நீங்க இப்படி ஆஃபிஸ் ரூம்ல உட்காருங்க, நான் டீ வாங்கிட்டு வரேன். உங்க முகமே சரியில்ல, அண்ணன் வந்ததும் பார்த்துட்டே போங்க..” என வெளியில் நடக்க,
“இல்ல.. இல்ல டீ எல்லாம் வேண்டாம். நான் வெயிட் பண்றேன்” என்றவளை முறைத்தவன்,
“எதுக்கு கார்த்திண்ணா வந்து என்னை திட்டவா? அன்னைக்கு உங்களாலத்தான் திட்டு வாங்கினேன். இன்னைக்கு அதெல்லாம் முடியாது. நான் டீ வாங்கிட்டு வரேன். எனக்கும் குடிக்கணும்.” என வீம்பாக கிளம்பிவிட்டான்.
“ம்ச்.. நமக்குன்னே ஒவ்வொன்னும் வரும்போல” என சலிப்பாக நினைத்தவள், அந்த அறையை சுற்றிலும் பார்த்தாள்.
அறையில் நடுநாயகமாக சிவனேசனும் பார்வதியும் தம்பதி சகிதமாக இருந்த போட்டோ பெரிதாக மாட்டப்பட்டிருந்தது.
ஒரு ரேக்கில் புத்தகங்களும், மற்றொரு ரேக்கில் ஷீல்டுகளும், கோப்பைகளும், விருது வாங்கிய போட்டோ ஃப்ரேம்களும் அடுக்கப்பட்டிருந்தது.
மேஜையின் ஒரு பக்கம் கார்த்தீசன் MD என்ற பெயர் பலகையும், அதை ஒட்டி ஒரு சிஸ்டமும் இருக்க, அந்த பெயரை பார்த்ததுமே அபிக்கு தன்னால் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
‘அவன் இன்னும் வரவே இல்லை, பார்க்கவுமில்லை, பேசவுமில்லை. அதற்குள் பயத்தில் உடல் நடுங்குகிறதே. அவள் பேச நினைத்து வந்ததை பேசினால்.? அய்யோ.. நினைக்கவே இதயமெல்லாம் தாறுமாறாக துடித்தது அபிக்கு’
யாரிடமும் சொல்லாமல் வந்த தன் குருட்டு தைரியத்தை எண்ணி நொந்து கொண்டே நின்றிருந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை. என்ன செய்யலாம்? இப்படியே அந்த பையன் வரும் முன் ஓடிவிடலாமா? என யோசித்து, அதுதான் சரியென நினைத்து அந்த அறையை விட்டு வெளியில் வரும் நேரம் ஃப்ளாஸ்கை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான் குமரன்.
குமரனை பார்த்ததும் திடுக்கிட்டு போனாள் அபிராமி.
அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தை கவனித்தவன் “என்னக்கா” என்றான் யோசனையாக.
“இல்ல ஒன்னும் இல்ல, தனியா இருக்கிறது ஒரு மாதிரி போர் அடிச்சது அதான். அப்படியே சும்மா சுத்தி பாக்கலாம்னு” என இழுத்தவளை, மேலும் கீழும் பார்த்தான் குமரன்.
குமரனின் பார்வையில் ஈ என இழித்தவள், அடுத்து எதுவும் பேசாமல் அமர்ந்துவிட்டாள்.
குமரன் அதை கணக்கில் எடுக்காமல் இருவருக்கும் டீயை ஊற்றிவிட்டு, அவளிடம் ஒன்றை கொடுத்தான்.
டீயை வாங்கிவிட்டாலும் குடிக்காமல் அபி அப்படியே வைத்திருந்ததை பார்த்து, “அக்கா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் கார்த்தி அண்ணா மோசம் இல்லை. உங்க அப்பா செஞ்சதுக்கு அவர் இவ்வளவு அமைதியா இருக்கிறதே பெருசு தெரியுமா.?” என்றதும், அபிக்கு முகம் கன்றி போயிற்று.
ஆக அவளின் தந்தையை பற்றி அவனுக்கும் தெரிந்திருக்கிறது.
சட்டென்று எழுந்தவள், “நான் கிளம்பறேன் குமரா.” என்று முடிக்கும் முன்னே
“அதுக்குள்ள என்ன அவசரம், என்னை பார்க்கத்தான வந்த. இல்ல நான் வரதுக்கு முன்னாடி, உன் அப்பன் வேவு பார்த்துட்டு வான்னு உன்ன அனுப்பினானா.?” என இறுகிய குரலோடு உள்ளே வந்தான் கார்த்தி.
அவனைப் பார்த்ததும் குமரன் வேகமாக வெளியேறிவிட, அபிராமிக்கு முகமெல்லாம் வியர்த்து போனது.
கைகால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பிக்க, ஒரு கையை மற்றொரு கையால் அழுத்தி நடுக்கத்தை குறைக்க முயன்றாள்.
முடிந்தால்தானே! மூளை ஓடிவிடு என்று எச்சரித்தாலும், அவளது உடல் அதற்கும் ஒத்துழைக்கவில்லை. பயத்தில் காலில் நடுக்கம் வேறு அதிகரிக்க, சட்டென்று மீண்டும் அந்த சேரிலேயே அமர்ந்துவிட்டாள்.
அபியின் பயத்தையும், பதட்டத்தையும் கவனித்தபடியே அவளுக்கு எதிரில் வந்து நின்றவன், வெடுக்கென்று அவள் கையைப் பிடித்து வேகமாக தேய்த்துவிட ஆரம்பித்தான்.
கார்த்தி இப்படியெல்லாம் செய்வான் என்று அறியாத அபிக்கு நடுக்கம் குறைவதற்கு பதிலாக கூடத்தான் செய்தது. வார்த்தைகளும் வராமல் போக, அவனை விட்டு தள்ளி வரும் சுரனை கூட இல்லாமல் அதிர்ந்து போயிருந்தாள்.
சில நொடிகளில் அவளின் நடுக்கம் கூடுவதை உணர்ந்தவன், சற்றும் யோசிக்காமல் வேகமாக இழுத்து தன்னோடு அனைத்து முதுகை வருடிவிட்டான்.
அவனின் தொடுகையும் அனைப்பும் அவளுக்கு ஏதோ ஒரு வகையில் தேவையாக இருந்தாலும், மனம் முழுக்க அடுத்து என்ன சொல்வானோ என்ற பயமே வியாபித்திருந்தது.
சில நிமிடங்களில் அவள் தன் கட்டுக்குள் வர, அதை உணர்ந்தவன், அவளை அமர வைத்து அந்த டீயை எடுத்து கொடுத்தான்.
வேண்டாம் என்று சொன்னால் திட்டுவானோ என்ற பயத்திலேயே வாங்கி அவசரமாக குடித்தாள்.
அபி தலையை நிமிர்த்தாமல் டீயிலேயே கவனம் இருப்பது போல் குடிக்கும் நேரம், அவளை மேலிருந்து கீழாக நிதானமாக நோட்டம்விட்டான் கார்த்தி.
அன்று போல் இன்றும் சுடிதார் தான் அணிந்திருந்தாள். ஆனால் ஷாலை இரு பக்கமும் கவனமாக பின் செய்திருந்தாள். அதை கவனித்தவனுக்கு உடல் முழுவதும் ஒரு ரசவாதம் தோன்றியது. இதழ்கள் கூட அழகாக விரிந்தது. தலையை அழுந்த கோதி அந்த உணர்வை அடக்கியவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாக தோன்றியது.
நிச்சயம் அவளுக்குள்ளும் ஒரு பாதிப்பு வந்திருக்கிறது என்று. சற்றுமுன் அவளை அனைத்து தன் கைகளில் வைத்திருந்த நேரம் தோன்றாத உணர்வுகள் எல்லாம், இப்போது தோன்றி பேயாட்டம் போட்டது.
எங்கே நடந்த பிரச்சினைகளைப் பற்றி பேசாமல், அவளிடம் விளக்காமல் விபரீதமாக நடந்து கொள்வோமோ என்ற பயமே வந்துவிட்டது கார்த்திக்கு.
அபியைப் பார்த்ததும், தறிக்கெட்டு ஓடும் தன் மனதை அடக்க முடியாத கோழைத்தனத்தை எண்ணி அவன் மீதே அவனுக்கு எரிச்சலும், கோபமும் வந்தது.
அதற்கு காரணம் அவள்தான் என்று நினைத்து, அந்த கோபத்தையும் அவளிடமே காட்டினான்.
“உனக்கு இப்போ ஓக்கேவா. நாம பேசலாமா.?” என பழைய இறுகிய குரலிலேயே கேட்கவும், அபிக்கு மீண்டும் இதயம் ரயிலின் வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது.
அதை பார்த்தவன் “ஹேய் என்னை பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது.? இப்போ உன்னை நான் என்ன செஞ்சிட்டேன், இல்ல செஞ்சிடுவேன். என்னமோ நீ மட்டும் தான் பத்தினி ரேஞ்சுக்கு சீன் போட்டுட்டு இருக்க.” என கடுப்பாகி கத்திவிட, அபியின் விழிகள் அதிர்ச்சியில் தெரித்து விழுந்துவிடும் அளவிற்கு பெரிதாகிப்போனது.
“ச்சை. என்னைக்கு உன்னை பார்த்தேனோ, அன்னைக்கு ஆரம்பிச்சது எனக்கு பிரச்சினை.” என மீண்டும் எரிந்து விழுந்தவன், “உன் அப்பன் உங்கிட்ட எதாச்சும் சொன்னானா? இல்ல அப்படியே அவன் என்ன சொன்னாலும் கேளுன்னு அனுப்பி வச்சானா.?” என ஆத்திரமாக கேட்க,
“சொன்னார்.. ஆனா பணத்தை அவர் எடுக்கலன்னு..” என திக்கித் திணறி சொல்லி முடிக்கும் முன்னே,
“ஹேய்..” என அவளுக்கு முன்னே வேகமாக வந்துவிட்டான். கார்த்தியின் வேகத்தை பார்த்த அபிக்கு பயத்தில் உடலெல்லாம் மீண்டும் நடுங்க ஆரம்பித்தது.
அபியின் பயத்தை கவனித்தவன் “ரொம்ப தைரியமான ஆளைத்தான் அனுப்பி வச்சிருக்கான். அவன் எதுக்காக உன்னை அனுப்பி வச்சிருக்கான்னு தெரியுமா.?” என இப்போது கார்த்தி பேசிய குரலில் நக்கல் நர்த்தனம் ஆடியது.
அபிக்கே இப்போது கதிரவன் மனதில் வேறெதுவும் திட்டம் இருக்குமோ என்று யோசனை வந்தது. அய்யோ அந்தாளை பற்றி தெரிந்தும் வந்து மாட்டிக்கொண்டோமே, இவன் பேசுவதை பார்த்தால் பெரிய பிரச்சினைதான் போல, இப்போது எப்படி தப்பிப்பது’ என மூளையை கசக்கி யோசித்தபடி, பயத்துடன் அவனையே பார்க்க,
“என்ன இன்னுமா புரியல, இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா.?” என மேலும் வார்த்தைகளில் நக்கலை தூக்கலாய் போட்டு கேட்க,
“எனக்கு நிஜமாவே புரியல, அவர் சொன்னது எல்லாம் பொய்ன்னு இப்போ புரியுது. நான்.. நான் என்ன செய்யனும். அவர் என்ன செஞ்சார்.?” என வரண்டு போன குரலில் கேட்க,
“ஹா ஹா.. நீ என்ன செய்யனுமா.? நீதான் செய்யனும். வேறவழியே இல்லையே. உன் அப்பன் செஞ்சதுக்கு உன்னை வச்சுத்தான் என் பணத்தை வாங்க முடியும்.” என்றவன் தன் மொபைலை எடுத்து அதில் ஒரு வீடியோவை அவளிடம் ஓட்டிக் காட்டினான்.
அந்த வீடியோவில் இருந்தது ஒன்று, கதிரவன் முதல்நாள் சொன்னது ஒன்று. அதை நினைக்க நினைக்க அபிக்கு உடலெல்லாம் தீயாய் எரிந்த உணர்வு.
அவரை நம்பாதே நம்பாதே என மனோகரி அத்தனை முறை சொல்லியும் கேட்காமல், நம்பினாளே. தன் நம்பிக்கையை கொன்றுவிட்டாரே, அய்யோ இப்போது என்ன செய்வது என மனதுக்குள் கதறியவள், வெளியில் பலியிட காத்திருக்கும் ஆட்டைப் போல அவனை பரிதாபமாக பார்த்திருந்தாள்.
“என்னைக்கு உன்னை அனுப்பி காரியத்தை சாதிக்கனும்னு நினைச்சானோ, அன்னைக்கே அவனுக்கு என் வழியிலே பாடம் கத்துக்கொடுக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். உன் அப்பனோட வேசம், திருகுதாளம், நடிப்பு, பணத்துக்காக அவன் எந்தளவுக்கு இறங்குவான்னு எதுவும் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா.? இல்ல உன் அப்பன் நினைச்சிட்டானா.?” என காட்டமாக கேட்டவனை அதிர்ச்சி குறையாமல் பார்த்தாள் அபி.
அவரைப்பற்றி தெரிந்தும் ஏன் கூடவே வைத்துக்கொண்டான் ஏன்? ஏன்? என கேள்வி மூளையை குடைய,
அதை உணர்ந்தவன் “என்ன என்ன அப்படி பார்க்குற? உன் அப்பனைப்பத்தி எல்லாம் தெரிஞ்சும் ஏன் கூட வச்சிக்கிட்டேன்னா.? ஹான் பூனையை மடியில கட்டிட்டு யாராவது சகுணம் பார்ப்பாங்களா.? அவனோ, இப்போ நீயோ எங்கிட்ட வரல. நான் உங்களை வர வச்சிருக்கேன்.” என்றதும் அபிக்கே சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை. ஆனால் ஏதோ பெரிதாக ஒன்றை கதிரவன் செய்திருக்கிறார் என்று மட்டும் புரிந்தது.
அபியின் குழம்பிய முகத்தை அவதானித்தபடியே, “வழக்கம்போல உனக்கு புரியல இல்லையா.?” என நக்கலாக கேட்டவன், அவள் அவமானத்தில் பட்டென்று தலையை குனிந்துகொள்ள,
“எந்த பக்கமும் தப்பிக்க வழியே இல்லாம, உங்களை நான் என் இடத்துக்கு வர வச்சிருக்கேன். இப்போ புரியுதா.?” என்றவன்,
“உன் அப்பனுக்கு பணம் இருந்தா போதுமாமே. பணத்துக்காக எந்த அளவுக்கும் இறங்குவானாம். இப்போ உன்னை எங்கிட்ட அனுப்பினமாதிரி..” என கர்ஜனையாக கூற
“என்ன என்ன..” என அவன் கூறியதை உள்வாங்கியவள், அது கொடுக்கும் தகிப்பை தாங்க முடியாமல் “இல்ல.. இல்ல அப்படியெல்லாம் நான் இல்ல..” என கதறியபடியே எழுந்துவிட்டாள்.
அபியின் கதறல் எதுவும் அவன் மனதை இளக்கவில்லை.
“நான் அப்படியெல்லாம் இல்ல, ப்ளீஸ். எனக்கு இதெல்லாம் தெரியவே இல்லை. அவர் பணத்தை தொலைச்சிட்டேன். அதுக்கு என்ன செய்றதுனு தெரியலன்னு சொன்னார். ஆனா இப்படியெல்லாம்.. இப்படியெல்லாம்..” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழ, அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை கார்த்தி.
“ப்ச்..” என சலித்தவன், “எனக்கு இந்த ட்ராமாவை பார்க்க எல்லாம் நேரமில்ல. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆளுங்க வர ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்குள்ள என் பணத்துக்கு ஒரு முடிவை சொல்லிட்டு கிளம்பு..” என நிர்தாட்சன்யாமாக சொல்ல,
“பணம்.. பணமா? அவ்ளோ பணம். எங்கிட்ட இல்லையே. அப்பா அவர்கிட்டத்தான் கேட்கனும். நான் முரளிக்கிட்ட கேட்கனுமே..” என அவனுக்கு பதில் சொல்வது போல, தனக்குத்தானே பேசிக்கொள்ள,
“அது உன் பிரச்சினை. எனக்கு இப்போ இங்க பணம் வரணும். நாற்பது லட்சம்..” என்றான் அதிகாரமாக.
“அவ்ளோ பணமா..” என அதிர்ச்சியில் விரைத்தவள், “இன்னைக்கே இப்பவே எப்படி முடியும். டைம் கொடுக்க முடியுமா.?” என தன்னிலை இரங்கி கெஞ்ச,
“கொடுக்கலாம். இன்னைக்கு ஒருநாள் டைம். நைட் எட்டு மணிக்குள்ள என் பணம் எங்கிட்ட வந்துருக்கணும். இல்லைன்னா எட்டு ஒன்னுக்கு உன் வீட்டுல போலிஸ் வந்துடும். உன் அப்பனை மட்டும் அள்ளிட்டு போகமாட்டாங்க. உன்னையும் சேர்த்துதான் தூக்குவாங்க.” என இரக்கமே இல்லாமல் பேச,
“ப்ளீஸ்.. அப்படியெல்லாம் பண்ணாதீங்க. நான் அப்பாக்கிட்ட கேட்குறேன். அவர் கொடுப்பார். போலிஸ் எல்லாம் வேண்டாம் ப்ளீஸ்..” என்றவளுக்கு இந்த உயிர் ஏன் இன்னமும் இருக்கிறது என்றுதான் தோன்றியது.
“தாராளமா உன் அப்பன்கிட்ட கேட்டு வாங்கிட்டு வாம்மா. அதுதான் எட்டு மணிவரை டைம் இருக்கே..” என எகத்தாளமாக பேசியவன், “அப்படி பணம் கிடைக்கலன்னா என்ன செய்யலாம் சொல்லு. போலிஸுக்கு வேண்டாம்னா வேற என்ன ஆப்சன் இருக்கு. அதையும் நீயே சொல்லேன்..” என்றவனைப் பார்க்க பார்க்க அபிக்கு அவள் உயிர் உடலை விட்டு பிரிவது போல வேதனை கொண்டது.
அவள் அதிர்ந்து நிற்பதை கணக்கில் கொள்ளாமல், தன் பேக்கட்டில் இருந்த ஒரு சாவியை எடுத்து அவளிடம் நீட்டியவன் “இது போடி மெட்டுல இருக்குற என்னோட கெஸ்ட்ஹவுஸ் கீ. அங்க வந்துடு.. எல்லாத்துக்கும் தயாரா வந்துடு..” என்றவன் அவள் முகத்தில் தெரிந்த வேதனையை கண்டு தோளைக் குழுக்கியபடி வெளியில் சென்றுவிட்டான்.
Last edited: