• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி 24

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 24

வாசு வந்து சேர்ந்த போது தான் திக்ஷிதா மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்திருந்தாள்.

வலது காலை அசைத்துப் பார்த்து முடியாமல் வலி எடுக்கவும் வலியில் முகத்தை சுருக்கிக் கொண்டு திரும்புகையில் அங்கே வந்து நின்றிருந்தான் வாசு.

"வாங்க ண்ணா! இப்ப தான் அண்ணி எழுந்தாங்க!" விஷ்வா கூற, இன்னும் பயம் அடங்காததில் பேச்சே வரவில்லை திக்ஷிதாவிற்கு.

காலில் கட்டு போடப்பட்டிருப்பதை அருகில் சென்று பார்த்தவன் அவளருகே வர, அவன் முகத்தை பார்த்திருந்தவள் கன்னத்தில் வாசுவின் கைகள் அறைந்திருந்தது.

"ண்ணா! என்ன பண்றிங்க நீங்க?" என்று வாசுவை பிடித்துவிட்டான் விஷ்வா.

அடியில் வலி என்பதை விட அடித்தானா என்பதில் தான் அதிர்ந்து விழித்தவள் விழிகள் கலங்கிவிட, கண்ணீர் கன்னம் நனைத்தது.

"எல்லாமே விளையாட்டா போச்சா உனக்கு?" என்றவன் அங்கிருந்த சேரில் தொப்பென விழ,

"இதென்ன பழக்கம் உங்களுக்கு?" என கோபமாய் வாசுவை கேட்ட விஷ்வா, இருவர் முகத்தையும் பார்த்துவிட்டு அறையை சாற்றி வெளியேறிவிட்டான்.

"என்ன டி பண்ணி வச்சிருக்க? என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல? நான் வர்றேன்னு தானே சொன்னேன்? வாசு கேட்க திக்ஷிதா நிமிர்ந்து பார்க்கவே இல்லை அவனை.

"உயிர் போய் வந்து சேர்ந்த மாதிரி இருக்கு.." என்றவனுக்கு இன்னமும் நடுக்கம் குறையாமல் இருக்க, பாதி நிமிர்ந்தவள் பார்வைக்கு அவன் கைகளின் நடுக்கம் அப்பட்டமாய் தெரிந்தது.

"ரொம்ப பயந்துட்டேன் திக்ஷி!" என்றவன் கூறும்போதே எழுந்து வந்து அமர்ந்திருந்தவளை அணைத்திருந்தான்.

"நான் தான் வர்றேன்னு சொன்னேன் இல்ல? ஏன் இப்படி பண்ணின திக்ஷி?" வாசு கேட்க, திக்ஷிதா பதில் கூறவில்லை.

"ரொம்ப வலிக்குதா?" என்றவன் அவள் பாதம் அருகே சென்று அமர்ந்தான்.

லேசாய் தொட்டதுமே ஸ்ஸ் என்ற சத்தத்தோடு கால்களை லேசாக அவள் அசைத்துவிட வலியில் கண்களை இறுக மூடியவள் சத்தமிடவில்லை.

"ப்ச்! என்ன பண்ணி வச்சிருக்க நீ? ஆட்டாம இருக்க மாட்டியா?" என்று மீண்டும் சத்தமிட்டவனால் தான் அவள் கால்களை ஆட்டவே செய்தது.

"தேவையில்லாத தலைவலி.. உனக்கு வரணும்னா என்கிட்ட சொல்ல வேண்டியது தானே? அதுவும் பகல்ல கிளம்பி இருக்க.." என பேச பேச திக்ஷிதா அமைதியாய் இருந்தாள்.

"பேசு திக்ஷி!" என்றவனை நிமிர்ந்து பார்க்க,

"ப்ச்!" என்றவன் முன்நெற்றியில் கைவைத்து நீவிக் கொண்டான்.

"வலிக்குதா?" என்று கேட்க, இல்லை என தலையை அசைத்தவளுக்கு வலி இருக்க தான் செய்தது.

"எதுல விளையாடுறதுன்னு இல்லையா? எதாவது ஆகி இருந்தா.. நினச்சுப் பார்க்கவே முடியல.." என்றவன் தலையில் கைவைத்து உலுக்கிக் கொண்டு,

"நான் எப்படி இங்க வந்து சேர்ந்தேன்னே எனக்கு தெரியல.. எப்ப கிளம்பின நீ? நேத்து பேசும் போது ஏன் சொல்லல? காலையில போன் பண்ணினேன் ஏன் எடுக்கல.. கல்யாணம் ஆனதுல இருந்து ஏதாவது ஒரு டென்ஷன்லேயே தான் வச்சிருக்கீங்க என்னை!" என்றவனை அவள் நிமிர்ந்து முறைக்க, அதை உணராதவன் பேசிக் கொண்டே அவளை பேசிக் கொண்டே இருந்தான்.

விஷ்வா மெதுவாய் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தவன் கையில் காபியோடு குளிர் பானமும் இருந்தது.

"இருவரையும் பார்த்தவன், "இன்னுமா நீ நார்மல் ஆகல.. என்ன வேணும்னா செய்வாங்க?" என்ற விஷ்வா காபியை அண்ணனிடம் நீட்ட,

"அவளுக்கு குடு..ஜூஸ் இப்ப வேண்டாம்.. பயத்துல வேற இருக்கா ஜுரம் வந்துட போகுது" வாசு மெதுவாய் கூற,

"பயந்திருப்பாங்கன்னு தெரிஞ்சே இவ்வளவு பண்றீங்க நீங்க.. ஏற்கனவே பயத்துல இருக்கவங்களை இப்படி தான் பயமுறுத்துறதா?" என்று கேட்க, வாசுவிற்கு அவன் அடித்ததே மறந்திருந்தது அந்த நேரம்.

"இதை குடிங்க அண்ணி! உங்களுக்கு ஒன்னும் இல்ல.. எதுக்கும் டாக்டர் இன்னொரு டைம் வந்து பார்த்துட்டு சொல்லட்டும்.. நாம கிளம்பிடலாம்" என்று விஷ்வா கூற,

"டாக்டர் ரூம் எங்க?" என்றான் வாசு.

"எதுக்கு? அதெல்லாம் நல்லா தான் நான் கேட்டேன்.. வேற எந்த பிரச்சனையும் இல்லை.. அப்படி இல்லைனாலும் இன்னொரு வாட்டி வருவாங்க இல்ல.. அப்ப கேட்டுக்கோங்க" என்றான் விஷ்வா.

"ஹ்ம்!" என்றவன் திக்ஷிதா அருகே கட்டிலில் அமர, அவனுக்கு முதுகுக்காட்டி படுக்க முயன்றவளுக்கு முயல தான் முடிந்தது திரும்பிட முடியவில்லை.

"ஸ்ட்ரைன் பண்ணாத திக்ஷி! இப்படியே படுத்துக்கோ!" என்றவன் தலையணையை சரித்து வைக்க, நகராமல் படுத்தவள் கண்களையும் மூடிக் கொண்டாள்.

விஷ்வா கொடுத்த மாத்திரையின் வீரியத்தில் சில நிமிடங்களில் உறங்கியும் இருந்தாள்.

வாசு வந்து சேர்ந்து இரண்டு மணி நேரம் கடந்து வந்திருந்தனர் உமா, சிவகாமி, கதிர், ரத்தினம் என குடும்பமாய் அனைவரும்.

"விஷ்வா!" என்று வாசு அழைத்து தயங்க,

"நான் யார்கிட்டயும் எதுவும் சொல்லல.. ஆனா இன்னொரு டைம் இந்த மாதிரி நடந்துக்காதீங்க.." என்றுவிட்டு வெளியேற, அலுப்பாய் தலையை அசைத்துக் கொண்டான் வாசு.

"என்ன டி அம்மு! உனக்கெதுக்கு இந்த வேலை?" என சிவகாமி கண் கலங்க,

"இப்ப எப்படி இருக்கு டா?" என அவளின் தலையில் கைவைத்தார் உமா.

"நீ அந்த டாக்டரை காட்டு!" என விஷ்வாவை அழைத்து சென்றிருந்தார் ரத்தினம்.

"எந்த ஜென்மத்துல யார் செஞ்ச புண்ணியமோ எதுவும் ஆகல.. சாமிக்கு வேண்டுதல் வச்சு பூஜை செஞ்ச அப்புறமும் இப்படி நடந்தா மனசு என்னவோன்னு இருக்கு" என்று சிவகாமி பேசிக் கொண்டே இருந்தார்.

கேட்டவற்றிற்கு பதிலும் தலையசைப்புமாய் இருந்தாள் திக்ஷிதா.

"எவ்வளவு ஆசையா உன்னை பார்க்க கிளம்பினா தெரியுமா டா?" என்று வாசுவை சிவகாமி பார்க்க, வாசு திக்ஷிதாவை முறைக்க, அப்போது தான் ஜூஸை கையில் எடுத்திருந்தவள் அவன் அவளை முறைக்கவும் திரும்பி இருந்து கொண்டாள்.

"ரொம்ப திட்டிட்டானா திக்ஷி?" என்று கேட்ட சிவகாமி,

"அவன் அப்படி தான்!" என்றுவிட்டு மகனிடமும் அப்படி செய்யாதே என்று கூறி வைத்தார்.

மருத்துவர் வர இரண்டு மணி நேரம் இருக்க, அனைவரும் உடன் இருந்தனர்.

திக்ஷிதாவை உடன் கூட்டி செல்லும் எண்ணம் இருந்தாலும் உமா கேட்பதெப்படி என அமைதியாய் இருந்தார்.

வாசு என்ன சொல்லுவானோ என்பதோடு மகளுமே விரும்பி அல்லவா கிளம்பி இருந்தாள் என்று எண்ணியபடி இருக்க,

"ரெண்டு பேரோட ஜாதகத்தையும் ஒருவாட்டி பார்த்துடுவோமா உமா?" என்று கணவர் கேட்க திடுக்கென்று ஆனது உமாவிற்கு.

"என்னங்க?" உமா பாவமாய் கேட்க,

"அவசரத்துல கல்யாணத்தை நடத்திட்டோம் ஆனா.." என்று கதிருமே தயங்க,

"ஜாதகத்துல ஒன்னு கிடக்க ஒன்னு சொல்லிட்டா?" என்றார் கலக்கமாய் உமா.

"அப்படி எதுவும் நினைச்சுக்காத.. நல்லதே நினச்சு பார்ப்போம்" என்று கதிரவன் கூற, சமாதானம் ஆக முடியவில்லை உமாவால்.

மருத்துவர் வந்து பார்த்து காலை அசைக்க வேண்டாம் நீரில் நனைக்க வேண்டாம் என வேண்டியவை வேண்டாதவை சொல்லி செல்ல, கவனமாய் கேட்டுக் கொண்டார் உமா கூடவே வாசுவும்.

"சரிங்க! நாம இவளை நம்ம கூட கூட்டிட்டு போவோம்.. அவன் லீவுல வந்து பார்த்துக்கட்டும்.. நீ இப்ப எங்களோட வர்றியா டா?" என உமாவிடம் ஆரம்பித்து வாசுவிடம் முடித்தார் சிவகாமி.

"ம்ம்ஹும்! நான் வர்ல!" என்றதும் திக்ஷிதா அவனை நிமிர்ந்து பார்க்க,

"அவளும் உங்களோட வர்ல!" என்றான் அவளைப் பார்த்தபடியே.

"என்ன விளையாடுறியா? அவளால நடக்கவே முடியாது.. நீ பாட்டுக்கு ஆபீஸ்ல போய் இருந்துகிட்டா அவளை யாரு பாக்குறது?" சிவகாமியே கேட்க, உமா அமோதிப்பதாய் நின்றார்.

"ப்ச்! அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் ம்மா.. நீங்களும் வேணா எங்களோட வாங்க" என்றவன் உமாவையும் சேர்த்தே பார்த்து வைக்க,

"வாசு! பிடிவாதம் பிடிக்காத.. இங்க வேலையெல்லாம் அப்படி அப்படி போட்டுட்டு வந்து எப்படி உடனே தங்க முடியும்?" தாய் கேட்க,

"சரி அப்ப போய்ட்டு ரெண்டு நாள் கழிச்சு கூட வாங்க நான் மேனேஜ் பண்ணிப்பேன்.." என்றவன்,

"எல்லாம் எடுத்துட்டு வாங்க நான் பில் பே பண்ணிட்டு வர்றேன்" என்று நகர்ந்துவிட்டான்.

தொடரும்..