• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நாட்டுப்புறக் கைவினைப் பொருட்கள் வகைபாடு

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
918
481
93
Tirupur
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைக் கலைப் பொருட்கள் உலகமே கண்டு வியந்து பாராட்டும் சிறப்புப் பெற்றவையாகும். அவற்றுள்
ண்பாண்டப் பொருட்கள், சுடுமண் சிற்பங்கள், மர வேலைப்பாடுகள், ஓலைப் பொருட்கள், பின்னல் பாய்கள், காகிதப் பொம்மைகள், சப்பரம், தேர், தெய்வ அலங்காரங்கள், தஞ்சாவூர்த் தட்டு, நெல்மணி, ஏலக்காய் மாலைகள் போன்ற கைவினைக் கலைப் பொருட்கள் குறிப்பிடத் தக்கவையாகும்.

பல தரப்பட்ட இக்கைவினைக் கலைகளை வகைப்படுத்தி அறிவதன் வாயிலாகப் பல்வேறுபட்ட கலைப் பொருட்களையும் அவற்றின் சிறப்புகளையும் நன்கு உணர்ந்து கொள்ளலாம். நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் எவையெவை என்பதை இங்கு விளக்கி அறிவோம்.

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்'

மண்சார்ந்த கலைகள்

மரம்சார்ந்த கலைகள்

ஓலைசார்ந்த கலைகள்

காகிதம்சார்ந்த கலைகள்

பிற கலைகள்

6.2.1 மண் சார்ந்த கலைகள்

தமிழகத்தின் மண்பாண்டக் கலை மிகவும் பழைமை வாய்ந்ததாகும். கைத்திறனுடன் வண்ணம் கூட்டி மண்பாண்டம் செய்வதே ஒரு கலையாக மாறிவிட்டது என்று கூறலாம். அகழ்வாராய்ச்சியில் (Archaeology) தோண்டி எடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள் மண்ணால் செய்யப்பட்டவையே என்பது இங்கு அறியத் தக்கதாகும். மண்சார்ந்த தொழில்களை மேற்கொள்வோரை மணிமேகலைக் காப்பியம் ‘மண்ணீட்டாளர்’ என்று குறிப்பிடுகிறது.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று


(குறள் : 407)

என்று வேளார்களின் கலை நுட்பத் திறனைச் சிறப்பிக்கின்றார் வள்ளுவர்.

தமிழகத்தில் மண்ணாலான புழங்கு பொருட்கள், தெய்வ உருவங்கள், குதிரைகள் போன்றவற்றைக் கலைத் திறனோடு செய்யும் கைவினைஞர்கள் வேளார், குயவர் என அழைக்கப்படுகின்றனர். மண் சார்ந்த தொழில்களே இவர்களது பூர்வீகமான குலத் தொழிலாகும். வேளார் இன மக்கள் அடுப்பு, மண் சட்டி, பானை, குளுமை (தானியங்களைப் பாதுகாக்கும் மட்கலம்) போன்ற பொருட்களை அன்றாடம் செய்து விற்றுத் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். மேலும், தோண்டி, குடம், கலையம், விளக்கு, முகூர்த்தப் பானை, தாளப் பானை, கடம், பூத்தொட்டி, அகல் என்று பலவகையான பொருட்களையும் கலைத் தன்மையோடு உருவாக்கி வருகின்றனர்.

பானைகள் ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டியாக விளங்கி வருகின்றன. மண் பாண்டத்தில் சமைப்பதும், மண் பானைச் சோறும் மருத்துவப் பயன்பாடு மிக்கவை ஆகும். கைவினைக் கலைஞர் ஒருவர் மண்ணிலேயே நாகசுரத்தை உருவாக்கி இசையோடு வாசித்தும் காட்டிச் சாதனை செய்துள்ளார் என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.

சுடுமண் சிற்பங்கள்

சிற்பக் கலைக்குரிய பத்துச் செய்பொருட்களில் மண்ணும் ஒன்று என்பதைத் திவாகர நிகண்டு,

கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிலுக் குறுப்பாவன


என்ற பாடலின் வாயிலாக எடுத்துரைக்கிறது.

தெய்வங்களுக்கு மண் சிலை வடித்து வழிபடுவது தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்துவரும் வழக்கமாகும். சிறுதெய்வக் கோயில்களில் கம்பீரமாக அமைந்துள்ள அய்யனார், முனியப்பன், மதுரை வீரன், மாரியம்மன், முத்தாலம்மன், காளியம்மன், பேச்சியம்மன் போன்ற தெய்வ உருவங்களும், குதிரை, யானை, காளை போன்ற தெய்வ வாகனங்களும் வேளார்களால் கலை நேர்த்தியுடன் செய்யப்பட்டு வருகின்றன.

களிமண்ணை எடுத்து வந்து நன்றாகக் காயவைத்துக் கல், தூசி நீக்கி, நீருற்றிப் புளிக்க வைத்து, ஆற்று மணல், வைக்கோல் சேர்த்து மிதித்துக் குழைத்துப் பெரிய பெரிய தெய்வ உருவாரங்களும் குதிரைகளும் செய்யப்படுகின்றன. பின்பு அவை நெருப்பில் போட்டுச் சுடுமண் சிற்பங்களாக மாற்றப்படுகின்றன. வண்ணங்கள் பூசப்பட்டுக் கோயிலில் நிலைநிறுத்தப்பட்டு வழிபாட்டிற்கு உரியவை ஆகின்றன. குதிரை ஓடுவது போன்றும் நிற்பது போன்றும் அதன்மேல் தெய்வங்கள், அரசர்கள் அமர்ந்திருக்கும் நிலையிலும் சிற்பங்கள் மண்ணாலேயே வடிவமைக்கப் படுகின்றன. மண் சிற்பங்களில் விதவிதமான ஆபரணங்கள் செய்தல், முக பாவங்களை அமைத்தல், உடல் நெளிவு சுழிவுகளை அழகு படச் செய்தல் போன்றவற்றை வேளார்கள் கலை நுட்பத்துடன் செய்து காட்டுகின்றனர்.

கல்லால் சிற்பங்களை வடிப்பதற்கும் மண்ணால் சிற்பங்கள் செய்யப் படுவதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. அதாவது கற்சிற்பங்கள் மேலிருந்து கீழ்நோக்கி உருவாக்கப்படும். ஆனால் மண் சிற்பங்கள் கீழிருந்து மேலாகச் செய்யப்படும். மேலும் கல் சிற்பங்களில் வண்ணங்களைத் தீட்ட இயலாது. மண் சிற்பங்களில் தேவையான வண்ணங்களைத் தீட்டி அழகுக்கு அழகு சேர்க்கலாம்.

மண் சார்ந்த இக்கைவினைப் பொருட்கள் கலைப் பொருட்களாக மட்டுமின்றித் தமிழரின் வாழ்க்கையோடும் வழிபாட்டோடும் பிரிக்க முடியாத கூறாகவும் அமைந்துள்ளன. சுடுமண் கலை வடிவங்களைத் தெய்வங்களுக்கு நேர்த்திக் கடனாக வாங்கி வைத்து வழிபடும் வழக்கம் நாட்டுப்புற மக்களிடம் உள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமடைவதற்குத் தெய்வத்திடம் வேண்டிக் கொள்கின்றனர். நோய் குணமடைந்தவுடன் பாதிக்கப்பட்ட உடல் உறுப்பினைப் போன்று மண்ணால் செய்து அதனைத் தெய்வத்திற்குக் காணிக்கை ஆக்குகின்றனர்.

6.2.2 மரம் சார்ந்த கலைகள்

மரம் சார்ந்த கலைத் தொழிலில் ஈடுபடும் இனத்தினர் கம்மாளர், தச்சர், ஆசாரி போன்ற பெயர்களில் அழைக்கப் படுகின்றனர். இவர்கள் தங்களைத் தேவ லோகத்தில் கலைஞராக விளங்கிய விசுவகர்மாவின் வழி வந்தவர்களாகக் கூறிக் கொள்கின்றனர். பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து ஒரே தொழிலில் ஈடுபட்டு வருவதால் இத்தொழிலில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகின்றனர்.

மரம் சார்ந்த கலைகள் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளன. வீட்டுக்கு வேண்டிய நிலை, கதவு, உத்திரம், பயணத்திற்கு வேண்டிய வில் வண்டி, கூட்டு வண்டிகள், பந்தயத்தில் பயன்படுத்தும் தட்டு வண்டிகள், தெய்வ ஊர்வலங்களுக்கான தேர்கள், சப்பரம், உட்காரும் நாற்காலி, கட்டில்கள், உழவுக் கருவிகள் இவையெல்லாம் தச்சர்களின் கைவண்ணங்களே. மேலும் இசைக் கருவிகளான வீணை, மத்தளம், மேளம், நாகசுரம், மரப்பாச்சிப் பொம்மைகள், மீனவர் பயன்படுத்தும் கட்டு மரங்கள், படகுகள், வள்ளம், தோணிகள் ஆகியனவும் இவர்களின் படைப்புகளே ஆகும்.

பழங்கால அரண்மனைகளிலும், கோயில் தேர்களிலும் (திருவாரூர் தேர், ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்), செட்டிநாட்டு மாளிகைகளிலும், வீட்டு நிலைகளிலும் நேர்த்தியான கைத்திறன் மிக்க மர வேலைப்பாடுகளைக் காணலாம். பல ஊர்களில் உள்ள தெய்வங்கள் மரப் பொம்மைகளாகவே உள்ளன. குழந்தைகள் விளையாடுவதற்கெனக் குதிரை, யானை, ஆண், பெண் வடிவங்களில் மரப்பாச்சிப் பொம்மைகள் செய்யப்படுகின்றன.

மரப்பாச்சி

மரப்பாச்சி
என்பதற்கு மரப் பொம்மை, மரப் பாவை என்பது பொருளாகும். கோயில்களுக்கு அருகில் உள்ள கடைகளில் மரப்பாச்சி பொம்மைகள் விற்கப்படுவதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். குழந்தைகள் குறிப்பாகப் பெண்குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளின் மேல் மிகுந்த விருப்பம் கொண்டு வாங்கி, விளையாடி மகிழ்கின்றனர்.

பொம்மைக்கும் பொம்மைக்கும்
கல்யாணமாம் - நம்ம
பூலோகமெல்லாம் கொண்டாட்டமாம்



என்று பொம்மைக் கல்யாணம் செய்து வைத்துக் குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்வதுண்டு. இந்த இனிய அனுபவத்தை உங்கள் மூத்தோரிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்வார்கள். மரப்பாச்சிகள் அழகிய வேலைப்பாடுகளோடு மிக நேர்த்தியாகச் செய்யப்படுகின்றன. வண்ணம் பூசப்பட்டும், வண்ணம் பூசப்படாமலும் மரப்பாச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

நம்பிக்கைகள்

பெண்ணிற்கு நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகவில்லை என்றால் ஒரு சோடி மரப்பாச்சி பொம்மைகள் வாங்கி வந்து அவற்றிற்குத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. அவ்வாறு செய்தால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

6.2.3 ஓலை சார்ந்த கலைகள்

ஓலைகள் எளிய வீட்டு உபயோகப் பொருட்களாகப் பண்டைக் காலந்தொட்டு இன்றுவரை மக்கள் வாழ்வில் பயன்பாட்டில் உள்ளன. இதற்குப் பனை ஓலை சார்ந்த பொருட்களே சான்றாகும். தமிழகத்தின் நாட்டுப்புறப் பண்பாட்டிற்கும் மரபிற்கும் சிறப்புத் தரும் தொழிலாகப் பனை ஓலைத் தொழில் விளங்குகிறது. மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் பனை ஓலைகளால் விசிறி, வண்ணக் கொட்டான், சுளகு, கூடை, ஓலைப் பெட்டி போன்றவை செய்யும் கைவினைத் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.

பனைமரத்தின் பயன்

நாட்டுப்புறப் பாடல் ஒன்று பனைமரத்தின் பயன்களைப் பட்டியலிடுவதைக் கேளுங்கள்.


பனைமரமே பனைமரமே
ஏன் வளர்ந்தாய் இத்தூரம்
நான் வளர்ந்த காரணத்தை
நாட்டாரே சொல்லுகிறேன்



எழுதுகிற பிள்ளைகளுக்கு
எழுத்தோலை நானாவேன்
அழுகின்ற குழந்தைக்குக்
கிலுகிலுப்பை நானாவேன்


வண்ணக்கொட்டான் நானாவேன்
சின்னக்கொட்டான் நானாவேன்
நீரிறைக்கக் கயிறாவேன்
நிழல்தரும் குடிலாவேன்


இப்பாடலை இசையோடு பாடிக் குழந்தைகளுக்குப் பனைமரத்தின் பயன்களை எடுத்துச் சொல்லுங்கள்; இயற்கை நமக்கு வழங்கும் கொடைகளை உணரச் செய்யுங்கள். செய்வீர்களா?

விளையாட்டுப் பொருள்கள்

குழந்தைகள் விளையாடும் கிலுகிலுப்பை பனை ஓலையாலேயே செய்யப் படுகிறது. ஓலையில் சின்னஞ்சிறு கூடுபோல் முடைந்து உள்ளே சிறிய சிறிய கற்களைப் போட்டு வண்ணமிட்டுப் பயன்படுத்தப்படுகிறது. கிளி, மயில், பூனை, யானை போன்ற உருவ பொம்மைகளும் குழந்தைகள் விளையாடி மகிழ ஓலையால் உருவாக்கப்படுகின்றன. இதில் பல வண்ணங்களில் சேர்க்கையும் பல வடிவங்களின் அமைப்பும் நெஞ்சை ஈர்க்கும் வகையில் விளங்கும்.

விற்பனை

பனை ஓலையால் பின்னிச் செய்யப்பட்ட தொப்பிகளை வெளிநாட்டவர்கள் விரும்பி வாங்கி அணிகின்றனர். இராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், வேளாங்கன்னி போன்ற கடற்கரைச் சுற்றுலாத் தலங்களில் பனை ஓலைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

கைவேலை

பனை ஓலைகளைக் கொண்டு பொருட்கள் செய்யும் கைவேலை குறிப்பிடத் தக்கதாகும். இயற்கை பனை ஓலைகளுக்குத் தந்துள்ள உறுதியும் குளிர்ச்சியும் சுகாதாரமும் பனைப் பொருட்கள் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாய் அமைந்துள்ளன. பனை நாரால் முடையப்படும் பெட்டி, கயிற்றுக் கட்டில் போன்றவை பல வருடங்கள் உழைக்கும் உறுதி பெற்றவை. பனை நாரின் மேல்பகுதி வழுவழுப்புத் தன்மையுடன் இருப்பதால் எளிதில் தண்ணீர் பட்டு அறுந்து போவதில்லை: இதனால் நீண்ட நாட்களுக்கு அது பயன்படுகிறது.

கோரைப் பாய்

பாய் பின்னும் தொழில் பல தலைமுறைகளாகத் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் தயாரிக்கப்படும் கோரைப் பாய்கள் உலகப் புகழ் பெற்றவை. பத்தமடையில் வாழும் இஸ்லாமியர்கள் பாய் தயாரிக்கும் தொழிலில் பெரிதும் ஈடுபட்டுள்ளனர். பாயில் போடப்படும் டிசைன்கள் வண்ணங்கள் இவற்றையெல்லாம் தம் முன்னோரிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர்.

பாயில் படங்கள் வரையவும் எழுத்துகள் எழுதவும் தனித் திறமை வேண்டும். கோரைப் பாயில் ஒற்றைப் பல் பாய், இரட்டைப் பல் பாய், பட்டுப் பாய் (திருமணப் பாய்). தடுக்குப் பாய், பந்திப் பாய் எனப் பல்வேறு அமைப்பில் பாய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

திருமணக் காலமான தை, மாசி, பங்குனி, வைகாசி போன்ற மாதங்களில் திருமணப் பாய்கள் அதிகமாக விற்பனையாகின்றன. தைப்பொங்கல் விழாவின் போது புதிய பாய்கள் வாங்கும் வழக்கம் நாட்டுப்புற மக்களிடம் காணப்படுகிறது.

உடல் நலம்

கோரைப் பாயில் படுத்து உறங்குவது உடல் நலத்திற்கு நல்லதாகும். கோரையினை இரண்டாகக் கிழித்துப் பார்த்தால் அதன் உள்ளே ஒருவகையான பஞ்சு போன்ற பகுதி இருக்கும். இதில் சிறுசிறு துளைகள் காணப்படும். இது வெப்பத்தினைத் தணிக்கும் தன்மை கொண்டதாகும். இதனால் உடலின் வெப்பம் சீராக்கப்படுகிறது; உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது. குறைந்த விலைக்கு இக்கோரைப் பாய்கள் கிடைக்கின்றன.

6.2.4 காகிதம் சார்ந்த கலைகள்

காகிதங்களைக் கொண்டு பொம்மை, முகமூடி, கூடுகள் செய்யும் கைவினைக் கலை தமிழகத்தில் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. நாட்டுப்புற நிகழ்த்து கலைகளான (Folk Performing Arts) பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், புலியாட்டம், பொம்மையாட்டம் போன்றவற்றில் குதிரை, மயில், காளை, பொம்மை, இவற்றின் கூடுகளை ஆட்டக் கலைஞர்கள் சுமந்து கொண்டு ஆடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இக்கூடுகள் எல்லாம் காகிதங்களைக் கொண்டு உருவாக்கப் படுபவை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

கூடுகள்

களிமண் கொண்டு கூடுகளுக்கான அச்சுகள் உருவாக்கப்படுகின்றன. அதன்மேல் காகிதங்கள், துணிகள் ஒட்டப்பட்டுப் பின் வண்ணங்கள் தீட்டப் படுகின்றன. இத்தகைய கூடுகள் கலையழகுடன் செய்யப்பட்டு ஆட்டங்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஆட்டக் கலைஞர்கள் கூடுகளைச் சுமந்து கொண்டு வெகுநேரம் ஆட வேண்டி இருப்பதால் அவை அதிகக் கனமின்றி இருக்கக் (light weight) காகிதத்தாலேயே இக்கூடுகள் செய்யப்படுகின்றன. அலங்கரிக்கப் பட்ட கூடுகளை ஆட்டக் கலைஞர்கள் சுமந்து கொண்டு ஆடும் பொழுது உண்மையான குதிரையின் மீது அமர்ந்து சவாரி செய்து வருவது போன்றும், மயிலே நம் முன்னால் தோன்றி நடனம் ஆடுவது போன்றும் தோற்றமளித்துப் பார்வையாளர்களைப் பரவசப் படுத்தும். இத்தகைய தோற்றத்திற்குக் காரணம் கைவினைக் கலைஞர்களின் கலைத் திறனே ஆகும்.

தசரா முகமூடிகள்

தசரா முகமூடிகளை உருவாக்கும் கலைஞர்கள் பாணர் என அழைக்கப் படுகின்றனர். முகமூடி செய்வதைத் தங்கள் பரம்பரைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். முகமூடிக்கான அச்சுகளைப் பாணர்கள் களிமண் கொண்டு செய்கின்றனர். களிமண் அச்சின் மீது காகிதங்களை ஒட்டி, வண்ணமிட்டு முகமூடிகள் தயாரிக்கின்றனர். புராண மாந்தர்கள் (பிரம்மன், விஷ்ணு, விநாயகர், ஆஞ்சநேயர், இராவணன்) ஆண், பெண், தெய்வங்கள் (காளி, சுடலை மாடன்), மனிதர்கள் (கிழவன், கிழவி, காவலர்) விலங்குகள் (புலி, குரங்கு, கரடி, மாடு) போன்ற முகமூடிகள் தசரா விழாவிற்காகப் பாணர்களால் செய்யப்படுகின்றன.

இவ்வாறாகக் காகிதம் சார்ந்த கலைப் பொருட்கள் நிகழ்த்து கலைகளிலும் வழிபாட்டிலும் சிறப்புப் பெற்று விளங்குகின்றன.

6.2.5 பிற கைவினைக் கலைகள்

பிற கைவினைக் கலைகள் என்னும் பகுதியில் கொம்பு சார்ந்த கலைப் பொருட்கள், பச்சை குத்துதல், கோலம் ஆகியவை விளக்கப் படுகின்றன.

கொம்பு சார்ந்த கலைப் பொருட்கள்

நாடோடி வாழ்க்கை நடத்தும் தொம்பர் இன மக்கள் மூங்கிலினால் உருவாக்கப்பட்ட பொருட்கள், மரச் சீப்புகள், மாட்டுக் கொம்பு ஆகியவற்றால் உருவாக்கப்படும் கலைப் பொருட்கள் செய்வதைத் தங்களது பரம்பரைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்கள் சல்லிக் கட்டுக் காளைகளின் கொம்புகளைச் சீவிக் கூர்மைப்படுத்துதல், காடுகளில் தாமாக இறந்து போன காட்டு எருமைகளின் கொம்புகள், அவற்றின் எலும்புகளைச் சேகரித்துப் பக்குவப் படுத்திக் கலைப் பொருட்கள் செய்தல் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயில் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

மாட்டுக் கொம்பினைக் கொண்டு மயில், கொக்கு, புறா போன்ற உருவங்களைக் கலை நேர்த்தியுடன் செய்கின்றனர். கொக்கு ஒற்றைக் காலில் நிற்பது, தாய்க் கொக்கு உணவினைக் குஞ்சுக்கு ஊட்டுவது, கொக்கு வாயில் மீனைப் பிடித்துக் கொண்டு இருப்பது, பறவைகள் பறப்பது போன்ற வடிவங்களில் கொம்பு சார்ந்த கலைப் பொருட்கள் உருவாக்கப் படுகின்றன. இவற்றை வீட்டு அலங்காரப் பொம்மைகளாகப் பலர் வாங்கிச் செல்கின்றனர்.

பச்சை குத்துதல்

உடலில் பச்சை வண்ணத்தில் ஊசி கொண்டு குத்திப் பல்வேறு வடிவங்களை வரைந்து அழகுபடுத்திக் கொள்வது பச்சை குத்துதல் எனப்படும். மார்பு, மேல் கை, முன்னங் கை, கால் போன்ற உடற் பகுதிகளில் பச்சை குத்தப் படுகிறது. குறவர் என்ற இனத்தைச் சேர்ந்தோர் பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்து அரைக்கின்றனர். அதனை ஒரு துணியில் கட்டி, தீயிலிட்டு எரித்துக் கரியாக்கிக் கொள்கின்றனர். நீர் கலந்து அதனைப் பசையாக்குகின்றனர். கூர்மையான ஊசியினால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் குத்திக் குத்தி எடுத்துத் தேவையான உருவங்களை வரைகின்றனர். பச்சை குத்தப்பட்ட பின் சுடுநீரால் கழுவி அதனைச் சுத்தம் செய்கின்றனர். இப்பொழுது பச்சை குத்திய இடம் அழகாகத் தோற்றம் அளிக்கும். இது எந்நிலையிலும் அழியாது.

தெய்வ வடிவங்கள், கோலங்கள், தேள், பாம்பு போன்ற உருவங்கள், பெயர்கள் போன்றவை பச்சை குத்துதலில் இடம் பெறுகின்றன. குறிப்பாகப் பெண்கள் அழகிற்காகவும் அடையாளத்திற்காகவும் இக்கலையைப் பயன்படுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சின்னங்கள், திரைப்பட நடிக, நடிகையர் படங்களைப் பச்சை குத்திக் கொள்ளும்பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. தற்பொழுது மருதாணிப் பசை கொண்டு இத்தகைய உருவங்கள் அச்சினால் உடலில் வரையப் படுகின்றன. இதனால் பச்சை குத்துதல் கலை இன்று வழக்கொழிந்து வருகிறது. இக்கலை தமிழகத்தில் மட்டுமல்லாது ஆசியாவின் பிற பகுதிகளிலும் அமெரிக்கா, நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானியரின் அக்குபஞ்சர் மருத்துவ முறையானது பச்சை குத்துதல் கலையோடு தொடர்பு படுத்திக் காணத் தக்கதாகும்.

கோலம்

கோலம் என்றாலே அழகு என்றுதான் பொருள். கோலமிடுவதில் பெண்கள் தனித்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பதை அறிவோம். மாக்கோலம், பூக்கோலம், பொடிக்கோலம் என்று அவர்களின் கை வண்ணத்தில் கண்ணைக் கவரும் கோலங்களைக் கண்டு களிக்கலாம். எறும்பு, பறவைகள், அணில் போன்றவற்றிற்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக அரிசி மாவு, தானியப் பொடிகளால் கோலமிடும் பழக்கம் நாட்டுப் புறங்களில் காணப்படுகிறது.

கோவில் விழாக்களிலும் பொங்கல் விழாவின் போதும், பூப்பு, திருமண நிகழ்வுகளிலும் வண்ணக் கோலங்கள் வாசலை அலங்கரிக்கும். சதுரம், பூக்கள், இயற்கைக் காட்சிகள் என்று பல வடிவங்களில் இக்கோலங்கள் அமையும். இத்தகைய கோலங்கள் தெய்வங்களை ஈர்க்கும்; செல்வ வளம் பெருகச் செய்யும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.