• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நானில்லாக் காலம்

வசி வரன்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
12
1
3
Srilanka
நான் இல்லா காலம்


வீட்டுக்குள்ள எங்கையோ பாத்திரம் உருளுற சத்தம் கனகலிங்கத்தின் தூக்கத்தை குழப்பியது .
சீ … ஒரு நாளும் நிம்மதியா நித்திரை கொள்ள ஏலாது இந்த வீட்டில் விடிஞ்சா பொழுதுபட்டா சத்தம் சத்தம்.இராவு ராவா டீவி சத்தம்.ஒரு நாலு மணிபொழுதில தான் கனகரை நித்திராதேவி அரவணச்சவா.
அந்த நித்திரையிலயும் ஆரோ மண்ணள்ளி போட்டுட்டினம். நேரம் என்னவா இருக்கும் எண்ணியவாறு எழும்பி நேரத்தை பார்த்தார். அது ஆறு நாற்பத்தி ஐந்தைக் காட்டியது.
"அட கந்தா நல்லா படுத்திட்டன் இன்டைக்கு .
அய்யோ வான் (van)வாற நேரமாகிட்டு சின்னவன் வெளிக்கிட்டானோ தெரியாது" என்றவாறு அவசர அவசரமாக தன்ரை காலைக்கடன்களை முடிச்சவர் வீட்டுக்கு உள்ள வரேக்க மணிக்கூடு ஏழைத்தாண்டி ஐந்து நிமிடத்தையும் தனக்குள்ள விழுங்கியிருந்து.

"கெட்டுதுகுடி நேரம் போய்ட்டுது பிள்ளை சத்தம் போடப்போறா "ஒரு காலத்தில இவரைக் கண்டு இவரின் பாடசாலை நடுநடுங்கும் ஹம்ம் இப்போ இவர் மருமகளுக்கு பயந்து பம்மி பேரனின் அறைக்கு போறார்.

ஓம் அறை தான் நாலு வயசு பொடிசுக்கு தனியறை.
சின்னவன் ஆதி ஏதோ தனக்கு தெரிஞ்சா மாதிரி உடுப்பை போட்டுக்கொண்டு காலுறையை தன்ர‌ குட்டி காலுக்குள்ள நுழைக்கிற நேரம் கனகரை கட்டுண்டு முகத்தை திருப்பி தன் கோபத்தை வெளிப்படையா காட்டினான்.
"என்ர செல்லம் கெட்டிக்காரன் அப்பப்பாவை பார்த்து
கொண்டிருக்காமல் வெளிக்கிட்டார்."என்று பேரனுக்கு ஐஸ் வைத்தார்.வழமையாக ஆதியை நித்திரையால எழுப்பி குளிக்க வைச்சு பள்ளிக்கு செல்ல ஆயத்தம் செய்யும் பொறுப்பு கனகருடையதே.

தன்னை அப்பப்பா பாராட்டியதை பற்றிக் கொண்டு கோபத்தை கைவிட்ட ஆதி "நான் உண்மையில அச்சாப் பிள்ளையோ அப்பு . அம்மா சொன்னா அண்ணா தான் அச்சாப்பிள்ளையாம் நான் சோம்பேறியாம் நேரத்துக்கு எழும்பேல்ல என்டு விடிய அடிச்சவா"என்றவாறு கலங்கிய கண்களுடன் தன் கையை காட்டினான்.
ஆதியின் கையில் மயூரியின் அடி சிவப்பாய் வரியோடி இருந்து .

"என்ர கந்தா என்ன இது .கரண் டே தம்பி கரண் இஞ்ச வாடா" என்று தன் மகனை விரைந்து அழைத்தார்.அவனோ" அப்பா எங்களுக்கு நேரம் போய்ட்டுது நாங்கள் வெளிக்கிடுறம் .உங்களால சின்னவங்கள் பள்ளிக்கூட வானை தவற விட்டுட்டாங்கள்.நேரத்துக்கு எழும்பி இவங்களை வானுக்கு விட ஏலாதே..ஆட்டோக்கு சொல்லிட்டேன் வரும் இவங்களை கொண்டுபோய் விட்டுட்டு வாங்கோ.இனி இப்பிடி நடக்காமல் பாருங்கோ சரியோ " என்றவாறு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றிருந்தான்.
கனகரின் மூன்றாவது மகன் தான் கரண்.பிரதேச செயலகத்தில உத்தியோகத்தர்.அவன் மனைவி மயூரியும் அதே அலுவலகத்தில தான் பணிபுரிகிறாள்.
இரண்டு பேரும் காலமை எட்டு மணிக்கு போனால் பின்னேரம் நாலரை தாண்டி தான் வீடு வாறது.அது வரைக்கும் பேரப்பிள்ளைகள் இரண்டு பேரும் கனகரின் பொறுப்பு.
இரண்டு பேரையும் பள்ளிக்கூடத்தாலை கூட்டி வந்து சாப்பாடு குடுத்து டியூசன் கூட்டிக் கொண்டு போய்வாறது எல்லாம் அப்பப்பா தான்.
ஒரு நாலு மாசத்துக்கு முதல் இரா படுக்கையும் அப்பப்பா அப்பம்மாக்கும் இடையில் தான்.நாலு மாசத்துக்கு முன்னம் ஆதின்ர அண்ணா அரவிந்தன்ர ஆறாவது பிறந்தநாளுக்கு வந்த மயூரின்ர சினேகிதி பிள்ளைகளுக்கு தனி ரூம் இல்லையோ என்டு கேட்டதால் பிள்ளைகளுக்கு தனி ரூம் கொடுக்க வேண்டிய நிலையில் அப்ப்பாவையும் அப்பம்மாவையும் வெளி கொட்டிலுக்கு அனுப்பி ஆச்சு.

கனகருக்கு மனக்குறை தான் கட்டின வீட்டில் கடைசி காலத்தில் தனக்கும் மனைவி பார்வதிக்கும் இடமில்லாமல் போய்விட்டதை எண்ணி அதை பார்வதியிடம் வெளிப்படுத்தினார்.

"இஞ்சர் உப்பிடி ஆட்டுக் கொண்டிலுக்க உம்மை இருக்கவைச்சிட்டன் என்று குறை நினைக்காதையும் நாங்கள் இனி இங்க இருக்க வேண்டாம் . லண்டனில இருக்கிற வருண்ட்ட சொல்லி வேற வீடு பார்த்து போவம் என்னம்மா .. இந்த இரவு தான் இங்க கடைசி .வர வர‌ இங்க எங்களுக்கு மதிப்பில்லை மதியாதார் முத்தம் எங்களுக்கு வேண்டாம் என்னப்பா ஓமே "என்று சொன்னவரின் முகத்தை மலர்வோட பார்த்த பார்வதி தனது கடைசி இரவை அந்த ஆட்டுகொட்டில்லையே முடிச்சு கொண்டுட்டா.
பார்வதியின் இழப்பு கனகரையும் பேரப்பிள்ளைகள் இரண்டு பேரையும் தான் பாதிச்சது. மயூரி மாமியார் இல்லாததால வீட்டு வேலைக்கு ஆள் இல்லாமல் சிடுசிடுத்தவாறே வீட்டு வேலை செய்வாள்.

பார்வதி அடிக்கடி கூறும் நானில்லா காலம் தெரியும் உங்களுக்கு என்ற சொல்லின் பொருளை அவர் இயற்கை எய்திய நாளிலிருந்து உணர்கிறார்.
கனகரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் தான்.பென்சன் எடுக்கும் வரை வீட்டு நிலை தெரியாதவர் பார்வதி தான் தாலி கட்டின வேலைகாரி போல தனக்கு தேவையான காரியம் எல்லாம் செய்வித்தார்.காலமை நாலு மணிக்கு எழும்பி தன்ரை நாளைத் தொடங்கும் பார்வதியின் நாள் இரவு பதினோரு மணி வரை நீளும்.

கனகருக்கு பிள்ளைகளுக்கு என்று யோசிச்சு யோசிச்சு அவான்ர காலம் போய்ட்டுது.

வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து போடுவார்.பணக்கணக்குக்கும் பார்வதி அம்மாக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.இயந்திரமாய் உழைத்தவரின் கருத்துக்களைக் கூட கேட்பார் இல்லாமல் தன் கடைசிவரை வாழ்ந்து மறைந்தவர்.

ஓய்வு பெற்ற பின்னர் தான் வீடு மற்றும் மனைவி என்று நேரத்தை செலவிட்டார்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப்போல மனைவியின் விருப்பங்கள் கேட்டு நிறைவேற்ற பார்த்தார்.பலன் பூச்சியமே.காரணம் கணவன் பிள்ளைகள் என்றிருந்தேன் தன் விருப்பத்தை என்றோ மறந்திருந்தார்.
கனகருக்கு நான்கு பிள்ளைகள் மூன்று ஆண் மக்கள் ஒற்றை பெண் பிள்ளை . கரணைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் ஐரோப்பிய நாட்டில வாழும் வாழ்க்கை போதும் என்டு அங்கே தங்கிட்டினம்.பார்வதியின் மரணச்சடங்கிற்க்கு வந்து தங்கள் பணத்தை வாரி இறைச்சு சடங்கை நடத்தி முடிச்சுப்போட்டு அவர் அவர் பாட்டில போய்ட்டினம்.

அம்மாவோட இருந்த இணக்கமான உறவு அப்பாவோட இருக்கேல்ல .விளைவு கனகர் தனிச்சு போனார்.
கரண்ட பிள்ளைகளை பராமரிக்கிற சம்பளமில்லாத ஒரு ஆள்.பார்வதி சொல்லும் நானில்லா காலம் தெரியும் உங்களுக்கு என்ற சொல்லின் பொருள் என்ன என்று கனகருக்கு இப்ப விளங்கியது….
 
  • Like
Reactions: Joss uby