• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் வாழும் நாள் மட்டும்! 13

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 13

"வெற்றி! நம்ம டீலர் அண்ணே வந்திருக்காங்க பாரு! சாப்பிட வச்சு அனுப்பு!" என சக்திவேல் சொல்ல,

"இந்தா போறேன் ண்ணே!" என்ற வெற்றி சக்திவேல் கூறியவர் நின்ற திசை நோக்கி நடந்தான்.

"கூட்டம் எதிர்பார்த்தத விட அதிகமா தெரியுதே!" முணுமுணுவென்று சொல்லி கூட்டத்தை பார்த்து புருவத்தை தேய்த்துக் கொண்டு சக்திவேல் நிற்க,

"ரொம்ப பொறுப்பான பையன்ல நீங்க! இப்ப தான் நியாபகம் வருது!" என அருகில் இருப்பவள் சொல்லவும் திரும்பி அவளைக் கண்டான்.

"அங்க போய் என்னனு ஒரு எட்டு பார்த்துட்டு வர வேண்டியது தான? இங்கயே நின்னு எட்டி எட்டி பார்க்கிங்க?" என்றாள் சக்திவேல் மனைவி தேன்மலர்.

திருமணம் முடிந்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது. வந்தவர்கள் எல்லாம் வாழ்த்துக்கள் சொல்லி சாப்பிட்டு மணமக்களுடன் புகைப்படம் எடுத்து உறவினர்களுடன் பேசி என அத்தனை பரபரப்பும் பேச்சுக்களும் என திருமண வீடு நிறைந்து இருக்க, நேரம் ஆக ஆக கூட்டம் குறைந்தபாடில்லை.

ஏற்கனவே தங்கதுரையை அழைத்து சக்திவேல் காலை ஏற்பாடு செய்திருந்த டிபன் போதாதோ என கேட்டிருக்க,

"நாங்க தான் இருக்கோம்ல சக்தி! நீ இங்கன கவனிச்சுக்கோயா. வாரவகள எல்லாம் நாங்க பாத்துக்குறோம். அதான் வெற்றி, ஜெகதீஸன் மாப்பிள்ள எல்லாம் இருக்காக இல்ல?" என சிரிப்புடன் சொல்லி சென்றுவிட்டார் அவர்.

ஆனாலும் சக்திவேலிற்கு அங்கே என்ன செய்வார்களோ என எண்ணம் தான். எல்லாமே அவன் பார்த்து தான் வழக்கம். இப்படி பக்கத்தில் கூட்டத்தின் அருகில் நின்றும் சும்மா நிற்கவும் முடியாமல் என அவன் பார்த்துக் கொண்டிருக்க, தேன்மலர் கூறவும் சிறு புன்னகை அவனுக்கு.

"நான் அங்க போனா இங்க நீ தனியா நின்னுடுவியா? அதுவும் இப்போ?" என சின்ன முறைப்புப்புடன் அவன் சொல்ல,

"தெரியுது இல்ல? பொம்மை மாதிரி என்னை நிக்கவிட்டு உங்க கவனம் முழுக்க அங்க இருந்தா நான் எதுக்கு இங்க?" என்றாள் தானும் பதிலுக்கு முறைத்து.

"பொம்மைனு தான் நினச்சேன். ஆனா இந்த வாய் இருக்கே... " என்றவன் திரும்பிக் கொள்ள, புருவங்களை சுருக்கியவள் விழிகள் திருதிருக்க, மீண்டும் அவள் எண்ணம் எங்கோ சென்று வந்தது.

"அப்பத்தா!" என அருகில் நாற்காலியிட்டு அமர்ந்திருந்த புஷ்பத்தை அருகில் சக்திவேல் அழைக்க,

"குடிக்க எதுவும் வேணுமா ய்யா?" என்றார் அவர். திருமணம் முடிந்த கையோடு முதல் ஆசிர்வாதம் அவரிடம் தான். மனதார வாழ்த்தி மனம் நிறைந்த மகிழ்வில் சக்திவேல் அருகேயே அமர்ந்துவிட்டார் புஷ்பம்.

"சாப்பாடு போதுமா அப்பத்தா? என்னமோ இப்ப தான் கூட்டம் அதிகமானதாட்டம் இருக்கு?" என சக்திவேல் கேட்க,

"ஆமாய்யா! கொஞ்சம் அதிகம் தான். சக்திவேலு கல்யாணம்ல அதான் ஊருசனம் அம்புட்டும் வந்துட்டு போல!" என பெருமையாய் புஷ்பம் கூறவும்,

"அப்பத்தா! வீட்டுல சமையல் பண்ண அலுத்து அவ்வளவும் இங்க வந்து வாங்கிட்டு போது!" என வாயில் கைவைத்து தேன்மலர் சிரிக்க,

"ஏய் தேனு!" என்ற சக்திவேல் ஒற்றை விரலை ஆட்டி கண்டிக்க,

"சும்மா!" என்றாள் கண்சிமிட்டி.

"வாயாடி! பசிக்கலயா டி உனக்கு?" என்றார் புஷ்பம் தன் பேத்தியை.

"பசிக்குது அப்பத்தா! யாருமே கேட்கலையேன்னு தான் பேசாம இருக்கேன்!" என்று அவளும் சொல்ல,

"யாரு கேட்கணும்? என்கிட்ட சொல்லத்தான நீ?" என்றவர் கோமளத்தை அழைத்து வந்து மணமக்களை சாப்பிட செல்லுமாறு கூறியவர்,

"சக்தி! வெற்றியும் ஜெகதீஸனும் போய் இட்லிக்கு சொல்லிட்டு வந்துட்டாக. இப்ப வந்துரும். யாரும் சாப்பிடாம எல்லாம் போக மாட்டாங்ய்யா. இன்னும் ரெண்டு மணி நேரத்துல மதிய சாப்பாடும் ரெடியாகிரும்!" என்று சொல்லி தான் சாப்பிட அனுப்பி வைத்தார் புஷ்பம்.

"நீங்க வாங்க அப்பத்தா!" என தேன்மலர் அழைக்க,

"எனக்கு கொஞ்சம் நேரமாவனும். நீங்க சாப்பிடுங்க!" என்று சொல்லி அனுப்பி வைக்க, ராதிகாவையும் அவர்களுடன் அமர வைத்தார் கோமளம்.

"அட அண்ணே அண்ணி!" என இலையை கொண்டு வந்து வெற்றி விரித்தவன்,

"எங்க இந்த போட்டோகிராபரை?" என தேடினான்.

"சாப்பிடுற இடத்துல எதுக்கு டா?" சக்திவேல் கேட்க,

"ரெண்டு பேரும் ஊட்டிக்க வேண்டாம்?" என்றவன் சொல்லில்,

"டேய்! அதெல்லாம் வேண்டாம்!" என வேகவேகமாய் சொல்லி மறுத்திருந்தான் சக்திவேல்.

"என்ன ண்ணே நீங்க? இதெல்லாம் நியாபகார்த்தம்!" வெற்றி சொல்ல, தேன்மலர் அடக்கமாட்டாமல் புன்னகைக்க,

"எது ஊட்டிவிடுறதா?" என்று முறைத்தவன்,

"இன்னைக்கே இங்கனயே ஊட்டி விட்டா தான் ஆச்சா?" என்றும் கேட்க,

"சரி விடு வெற்றி ண்ணே! நாளைக்கு நாம மட்டும் தான வீட்டுல! அப்ப ஊட்ட சொல்லி நாம போட்டோ எடுத்துப்போம்!" என்றாள் ராதிகாவும்.

"என்ன வெற்றி! உன் அண்ணே கையால ஒரு வாய் சோறு வாங்க கூட நான் நாளைக்கு வர காத்திருக்கணுமாம்! இது தான் கண் கலங்காம என்னை காப்பாத்துததா?" என தேன்மலர் வெற்றியோடு சேர்ந்து கொள்ள,

"அப்படி கேளுங்க அண்ணி! தாலி கட்டின கையோட வீட்டம்மா ஆசையை நிறைவேத்த வேண்டாமா ண்ணே? நம்ம குடும்பத்து மானம் மரியாதை என்னாகறது?" என்று அவன் பேச, பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பார்வை எல்லாம் இவர்களிடம் தான்.

'இதுங்களுக்கு மேல இருக்க டி நீ!' நினைத்து தான் மனைவியைக் கண்டான் சக்திவேல்.

'எப்படி?' என்பதாய் அவள் கண்ணசைக்க,

"அந்த ஆசையை எல்லாம் நான் பாத்துக்குறேன். நீ போய் வந்தவங்களை கவனி!" என மிரட்டி தான் வெற்றியை அனுப்பி வைத்தான் சக்திவேல்.

"அப்ப ஊட்ட மாட்டிங்க?" மீண்டும் தேன்மலர் கேட்க, ராதிகா அதைக் கேட்டு திரும்பாமலே சிரிக்க,

"தேனு..." என்றவன் அழைப்பில்,

"ஹ்ம்ம் பேச்செல்லாம் மட்டும் தேன் தான்.." என்றாள் சாப்பிடபடி அவளும்.

மீண்டும் மேடைக்கு வந்து நிற்க, ராதிகா தோழிகள், தேன்மலர் தோழிகள், வெற்றியின் நண்பர்கள் என இளையபட்டாளங்கள் அதன்பின் தான் அனைவருமே வந்தனர்.

நொடியில் இடமே கலகலவென மாறிவிட, தேன்மலருமே அவர்களோடு இணைந்து கொண்டாள் கொண்டாட்டத்தில்.

"மலரு! கொஞ்சம் அமைதியா நில்லு டி மாப்பிள்ளைகிட்ட! எல்லாரும் உன்னைய தான் பார்ப்பாங்க. கண்ணு பட்டரும்த்தா!" என சந்திரா வந்து தேன்மலரிடம் தனியாய் சொல்லி சென்றார்.

சட்டென ஒரு எண்ணம் ஏழாமல் இல்லை தேன்மலரிடம். இனி இந்த மாதிரி தானே தான் இருக்க வேண்டும் எனும் எண்ணம்.

கல்லூரி வரை இருந்த பெண்ணாய் இனி இருக்க இயலாது. திருமதி எனும் பெயருக்கு ஏற்றபடி தான் நடந்து கொள்ள வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இவர்களிடம் இருக்கும் தானே என நினைத்தபடி நிற்க,

"தேனு.." என்றவன் குரலில் அவன்புறம் திரும்பினாள் அவள்.

"அத்தை என்ன சொன்னாங்க?" சக்திவேல் கேட்க, ஒன்றுமில்லை என தலையாட்டியவளை இரு நொடி அதிகமாய் கண்டவன்,

"என்ன தேனு?" என்றான் அவள் திடீர் அமைதியோடு அவ்வளவு நேரமும் ஆர்ப்பரித்து கொண்டாடிய அந்த கண்களின் அமைதியான பார்வையையும் கண்டு.

"அண்ணே!" என வெற்றி அவன் தோழர்களோடு புகைப்படத்திற்கு வந்து நிற்க, பேச்சுக்களும் மாறிவிட்டது.

அடுத்த சில மணி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டிற்கு அனைவரும் கிளம்பிவிட, காரில் மணமக்களை அழைத்து வந்துவிட்டான் வெற்றி.

ராதிகா ஆரத்தி சுற்றி உள்ளே வரவேற்க, உறவினர்கள் அனைவர்க்கும் அனைத்தும் தயாராய் வைத்திருந்தார் கோமளம்.

இனி மாலை மீண்டுமாய் பெண் வீட்டிற்கு சென்று வர வேண்டும். அதுவரை மணமக்களுக்கு ஓய்வு நேரம்.

"நீ வேணா கீழ அந்த ரூம்ல கொஞ்ச நேரம் உக்காந்துறேன் மலரு! உனக்கும் ஓய்வா இருக்கும்ல?" என கோமளம் கேட்கவும் தேன்மலர் கணவனை திரும்பிப் பார்க்க, இதழ் நிறைந்த புன்னகை அவனிடம்.

"பாரேன்! புருஷன்கிட்ட என்ன செய்யட்டும்னு கேட்குறதை!" என கோமளம் ஆச்சர்யமாய் காட்டி கிண்டலாய் சொல்ல,

"அச்சச்சோ! அத்தை! நான் சும்மா தான் பார்த்தேன்" என்றாள் தேன்மலர் வேகமாய். அதில் சத்தமாய் சக்திவேலும் சிரித்துவிட்டான்.

"இனிமேல் மாலையை கழத்திக்கலாம் தான?" என ஒருவர் கேட்க,

"அந்த மாலையை கழத்தி வாங்கு ராதிகா. இங்கேயே ஆணி இருக்கானு பாக்குறேன்!" என தங்கதுரை சொல்ல, ஏற்கனவே பார்த்து வைத்துவிட்டதை காட்டினார் புஷ்பம்.

இருவருக்கும் மாலையை கழற்றிக் கொள்ளவும், "பார்த்துக்கோங்க சித்தி! நான் வெளில இருக்கேன்!" என்று சொல்லி தேன்மலரிடமும் தலையசைத்து வெளியே கவனிக்க வந்துவிட்டான் சக்திவேல்.

நேரம் சென்றதே தெரியாத வேகத்தில் நகர, தேன்மலருக்கு புதிய இடம் போலெல்லாம் தெரியவே இல்லை. கோமளம், ராதிகா, புஷ்பம், வெற்றி என இத்தனை மாதங்களும் பேசிப் பழகி அத்தனை நெருக்கமாகி இருந்தனர் அவளிடம்.

இப்போதும் ராதிகாவுடன் தான் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் தேன்மலர்.

கதவை தள்ளிக் கொண்டு யாரோ வரும் அரவத்தில் இருவரும் திரும்ப, சக்திவேல் தான் வந்து நின்றான்.

"எதாவது சாப்பிட வேணுமா உங்களுக்கு?" என பொதுவாய் அவன் கேட்க,

"இப்ப தான் ஜூஸ் குடிச்சோம் ண்ணா!" என்ற ராதிகா,

"இதோ வர்றேன் அண்ணி!" என்றுவிட்டு வெளியே செல்ல, புரிந்த இருவருக்குமே புன்னகை.

"என்ன பண்ற தேனு?" என அருகில் வந்து நிற்க,

"அப்பத்தா இவ்வளவு நேரமும் கதை பேசிட்டு இப்ப தான் வெளில போனாங்க!" என்றாள்.

அவ்வளவு நேரமும் அத்தனை சகஜமாய் பேசி சிரித்து இருந்தவள் தான் இப்பொழுது இவனுடன் ஆன தனிமையில் அமைதியாகிவிட, சக்திவேல் கூட பேசிடாமல் நின்றுவிட்டான்.

"ரொம்ப நல்லாருக்கு வீடு!" தேன்மலர்.

"ம்ம்!" என்ற பதில் மட்டும்.

"பாஸ்! படுத்தாதீங்க! என்னால முடியல. மூச்சு முட்டுது! வெளில போய்டுவோமா?" எதுவும் பேசவும் முடியவில்லை அவன் பார்வை வீச்சையும் தாங்க முடியவில்லை என தவித்தவள் சொல்லியே விட, சிரித்துவிட்டவன்,

"வா!" என அழைத்துவந்தான் வெளியே.

இரவு வரை கொண்டாட்டங்கள் தீரவில்லை சிறியவர்களுக்கு. பெரியவர்கள் வேலையும் ஓயவில்லை. ஆனாலும் அத்தனை நிம்மதியும் சந்தோசமும் புத்துணர்வாய் தான் இருந்தனர் அனைவரும்.

மாலையே மறுவீடு அழைத்து சென்று அங்கே சக்திவேல் தேன்மலர் என அவர்களுக்காக தனியாய் சமையல் செய்து சாப்பிட வைத்து ஏழு மணிக்கெல்லாம் சக்திவேல் இல்லத்திற்கு வந்துவிட்டனர் அனைவரும்.

கிளம்பும் நேரம் அன்னையிடம் கிளம்புவதாய் சொல்லிக் கொண்ட தேன்மலருக்கு தந்தையைக் கண்டதும் தான் அழுகை வரப் பார்த்தது.

"எனக்கு கஷ்டமா எல்லாம் இல்ல மலரு. இங்க தான! எப்ப வேணா வந்து பாத்துக்குவோம். சந்தோசமா போய்ட்டு வா!" என அனுப்பி வைத்தார் ஜெகதீஸன்.

தொடரும்..