• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் வாழும் நாள் மட்டும்! 19

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 19

இரவு மனைவி அறைக்கு வரவும் நடந்ததை சக்திவேல் அவளிடம் சொல்ல,

"அப்ப அது நிஜமாவே திருநெல்வேலி பிரியாணியா?" என கண்களை விரித்தாள் தேன்மலர்.

"ப்ச்! ஞாயிற்றுக் கிழமைன்னு மறந்தே போச்சு தேனு! அதுவும் கடையை பார்த்ததும் உன் நியாபகம் மட்டும் தான் வந்துச்சு. நீ தான அடிக்கடி பிரியாணியை பேசி வச்ச? அந்த நியாபகத்துல ஒண்ணு மட்டும் வாங்கிட்டு வந்துட்டேன்.. நல்லவேளைக்கு வீட்டுக்கு வரவும் நியாபகம் வந்துச்சி!" சக்திவேல் சொல்லியவன்,

"அப்பத்தா சித்தி எல்லாம் ஒண்ணும் நினைச்சிக்க மாட்டாங்க தான். ஆனா வெற்றி ராதிகா சின்ன பசங்க இல்ல? தப்பா எதுவும் நினைச்சிர கூடாதே!" என்றான் அவன் நினைவில்.

"என்னனு தப்பா நினைப்பாங்க?" கிண்டலாய் அவள் கேட்கவும் அவள் மடி சாய்ந்தவன்,

"தப்பான்னா என்ன? என்ன டா அண்ணே நமக்கு வாங்கலையேனு தோணும் தானே?" என்றான் சேட்டையை தொடங்கி.

"ஆனா மாமா! பரவால்ல நீங்க! வேலையா போனாலும் என்னையும் நியாபகத்துல வச்சிருக்கீங்க இல்ல?" தேன்மலர் சொல்ல,

"அது இல்லாமலா இன்னைக்கு மாட்டிக்கிட்டு முழிக்கப் பார்த்தேன். இனி கொஞ்சம் சூதனமா தான் இருக்கனும். ரொம்பவே ஆட்டி வைக்குற என்னை நீ!" என்றான் அவளை மொத்தமாய் வாரிக் கொண்டு.

அத்தோடு முடிந்ததாய் மட்டும் சக்திவேல் நினைத்திருக்க, அது அடுத்த நாள் தொடரும் என அறியாமல் விட்டுவிட்டான்.

காலை தோட்டத்திற்கு சென்றுவிட்டு எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட வீட்டிற்கு வந்தான் சக்திவேல்.

வாசலில் வந்து இறங்கியவன் அங்கேயே தேன்மலர், வெற்றி, அப்பத்தா என நிற்க கண்டு,

"என்ன பண்ணுதீங்க எல்லாரும்?" என்றான் வெற்றி கிளம்பி நிற்பதையும் கண்டு.

"இன்னைக்கு நேரமாகிட்டு வெற்றிக்கு. எப்பவும் போற பஸ்ஸு கிளம்பிருக்கும். அதான் பார்த்து போக சொல்லிட்டு இருக்கேன்!" என்றார் புஷ்பம்.

வீட்டு கேட் அருகே "சக்தி!" என்ற சத்தம் கேட்கவும் அனைவருமாய் திரும்ப, சக்திவேல் அதிர்ந்து தான் விழித்தான் அவரைப் பார்த்து.

"அண்ணே!" என சக்திவேல் அவர் அருகே செல்ல போக,

"என்ன பரமசிவம்? அவே இப்ப தான் சாப்பிட வந்திருக்கான்!" என்று கூறிவிட்டார் புஷ்பம்.

"ஒன்னுமில்ல ஆச்சி! நேத்து பிரியாணி சாப்பாடு எப்படி இருந்துதுன்னு கேட்க தான் கூப்பிட்டேன்" என்றார் பரமசிவம்.

வெற்றிக்கு அவன் பையில் சாப்பாடு தண்ணீர் என எடுத்து வைத்ததை அவனுக்கு கொடுத்தபடி நின்றாள் தேன்மலர்.

"ஆ ஆ! நல்லா தான் இருந்துது. நீயும் இருந்தியோ அவன் வாங்கும் போது? நீ வாங்கினியா இல்லையா?" புஷ்பம் கேட்க,

"அண்ணேனும் வாங்கிச்சு அப்பத்தா! நீங்க உள்ள போங்க!" சக்திவேல் சொல்ல,

"சக்தி தான் வாங்குவோம்னு உள்ள கூட்டிட்டு போச்சு. நான் ஒண்ணு சக்தி ஒண்ணுன்னு தான வாங்குனோம்!" என சொல்லியே விட்டார் அந்த பரமசிவம்.

"ஒண்ணு ஒண்ணு வாங்குனீங்களா? சக்தி எங்க உன்னை கூட்டிட்டு போனான்?" என்றார் சுத்தமாய் புரியாத புஷ்பம் கூடவே வெற்றியும் வேறு பார்க்க,

தேன்மலருக்கு புரிந்துவிட்டது சக்திவேல் மாட்டிக் கொள்ள இருப்பது. சக்திவேல் கண்கள் பேசிய பாஷையில்,

"அப்பத்தா! இட்லியை எடுக்க சொல்லி தரேன் சொன்னிங்களே! வாங்க! நீ கிளம்பு வெற்றி" என தேன்மலர் அழைத்துக் கொள்ளப் பார்க்க, பரமசிவம் உள்ளேயே வந்துவிட்டார் கதை பேச.

"சக்தி திருநெல்வேலி வந்துச்சே அப்பத்தா? நான் அங்க தான் உரமருந்து வாங்கிட்டு வெளில பஸ்ஸுக்கு நின்னேன். தம்பிய பாத்ததும் வாங்கனு கூப்பிட்டுச்சு. அது கூட தான் வீட்டுக்கு வந்தேன். வர்ற வழில திருநெல்வேலில ஒரு கடைல தம்பி பிரியாணி நல்லாருக்கும்னு வாங்கிச்சு. நானும் ஒண்ணு வாங்குனேன். என் பய சாப்பிட்டு ரொம்ப நல்லாருக்குன்னு வச்சு வச்சுல்ல தனியா சாப்பிட்டான்!" என சொல்லியே விட, புஷ்பம் பேரனைப் பார்க்க வெற்றியின் பார்வை புருவங்களை ஏற்றியபடி அண்ணனிடம் சென்று நின்றது.

"கூட கூட்டிட்டு வந்ததுக்கு அவரால என்ன பண்ண முடியுமோ! நல்லா பண்ணி விட்டுட்டாரு!" தேன்மலர் முணுமுணுக்க,

"அந்த கடைய பார்த்து வச்சுட்டேன். இனி வாங்கிக்கலாம் பாருங்க! அதான் ஒண்ணு தான் வாங்கிச்சே பத்திச்சான்னு கேட்டேன்!" என்ற பரமசிவம்,

"சரி வாரேன் ஆச்சி! பார்ப்போம் சக்தி!" என்று அவர் சொல்லி கிளம்பிவிட, நிஜமாய் சக்திவேலிற்கு அங்கே நிற்கவே முடியவில்லை.

"அப்போ நான் சொன்னது சரி தான்! அண்ணி சாப்பிட்டது திருநெல்வேலி பிரியாணியே தான்!" வெற்றி அழுத்தம் கொண்டு சொல்ல,

"வெற்றி நேத்து லீவு நாள்னு உன் அண்ணே மறந்துட்டாக போல! வீட்டுக்கு பக்கத்துல வரவும் தான் நியாபகம் வந்திருக்கு!" தேன்மலர் கணவனுக்காக குரல் கொடுக்க,

"ஓஹ் அதனால ஏதோ ஒண்ணு பிரியாணினு எங்களுக்கு போனா போகுதுன்னு வாங்கியிருக்குல்ல? அப்போ உங்களுக்கும் தெரியும்?" என தேன்மலரையும் வெற்றி பார்க்க, அவளுமே இப்பொழுது விழித்தாள்.

"அப்பத்தா! நிசமாவே இதுங்க லீவுன்னு மறந்து போச்சு அப்பத்தா!" என அத்தனைக்கு தடுமாறி சக்திவேல் சொல்ல,

"எய்யா சக்தி! அதென்ன மென்னு முழுங்குத? பொண்டாட்டிக்கு வாங்கிட்டு வந்தா நாங்க எதுவும் சொல்லுவோம்னா? ஏன் சக்தி! நீ தாராளமா அவளுக்கு வாங்கி குடு! அதை பார்க்க தான நாங்க எல்லாம் இருக்கதே! இதுக்கு போய் நீ இப்படி நிக்கணுமோ அதுவும் இவன் முன்னுக்க" என புஷ்பம் வெற்றியை காட்டி சொல்ல,

"ண்ணே! நான் சும்மா சொன்னேன் ண்ணே! நீ நேத்து எங்களுக்கு வாங்கலைனா கூட மூக்கு பிடிக்க மீன் குழம்ப குடிச்சிருப்போம். இப்ப பாரு அப்பத்தா எவ்வளவு கட்டி வச்சிருக்கு மதியத்துக்கு!" என வெற்றியுமே சிரித்தான்.

ஆனாலும் மனது கேட்கவே இல்லை சக்திவேலுவிற்கு. இப்படி மாட்டிக் கொண்டதற்கு தானே சொல்லி இருந்தால் கூட இவ்வளவு கவலை இருந்திருக்காது அவனுக்கு.

"அட விடு ய்யா! இன்னும் உன் முகம் தெளியல. வேணும்னா இன்னைக்கும் அவளுக்கு மட்டும் வாங்கியாந்து குடு. எவன் கேட்குறான்னு நான் பாக்குறேன்!" புஷ்பம் சொல்லி வெற்றியைப் பார்க்க,

"அதான! அண்ணி நான் இன்னைக்கு மட்டன் பிரியாணி வாங்கிட்டு வரவா உங்களுக்கு?" என்றான் வெற்றியும்.

"டேய்! கிளம்பு! லேட்டாச்சுன்னு இன்னும் நின்னு கதை பேசிட்டு நிக்குற!" வெற்றியை கூறிய சக்திவேல்,

"நீ சாப்பாடு எடுத்து வை தேனு!" என உள்ளே சென்றுவிட்டான்.

"இவனை தப்பா நினைச்சிற முடியுமாக்கும். ஒரு சாப்பாடு பொண்டாட்டிக்கு தனியா வாங்கி குடுக்க இப்படி மறுவனுமா?" என சிரித்தபடி கடந்துவிட்டார் புஷ்பம்.

"ச்சோ! தேனு!" என உள்ளே வந்து சாப்பிட அமர்ந்த சக்திவேல் புஷ்பம் எதிர்த்த வீட்டிற்கு செல்வது தெரிந்ததும் மனைவியிடம் தலையில் கைவைத்து முகம் சுருக்கி தன் உணர்வுகளை காட்டிட,

"மாமா! என்ன இது?" என சிரித்த தேன்மலர்,

"சரி சரி ரிலாக்ஸ் மாமா!" என்றாள் சிரிப்பை நிறுத்தி.

தானும் கிண்டல் செய்து சிரித்து அவன் இன்னும் தனக்குள் அதையே நினைத்து கவலையாகிவிடக் கூடாதே.

"நான் தான் இனி பிரியாணி சாப்பிடுறதை நிறுத்தணும் போல! அப்படி பார்த்தா எல்லாம் என்னால மட்டும் தான்!" தேன்மலர் சொல்ல,

"இல்ல தேனு! இது அப்படி இல்ல!" சக்திவேல் சொல்லியவனுக்கு எப்படி அதை விளக்க என தெரியவில்லை.

"சரி மாமா எனக்கு புரியுது. ரொம்பவே பொறுப்பா குடும்பத்தை பார்த்துகிட்ட பையன்ல.. அதான் ரொம்ப யோசிக்குறீங்க. உங்களை மாதிரி எல்லாம் எனக்கு யோசிக்க வராது. ஆனா உங்களை புரிச்சிக்க முடியுது" என்றவள்,

"விடுங்க மாமா! இதை வச்சா உங்களை நீங்க யாருன்னு அவங்க டிசைட் பண்ண போறாங்க? உங்களை தெரியாம போய்டுமா அவங்களுக்கு? நீங்க வளர்த்த பிள்ளைங்க மாமா!" என்றாள் சமாதானமாய்.

"ஹ்ம்! சரி அதை விடு! நீ என்ன சொன்ன? உன்னை நான் வளத்து விடணுமா? எப்படி இன்னைக்கு நைட்டே ஸ்டார்ட் பண்ணிடலாமா?" என்றான் கேலியாய் அவளுக்காக அவள் வருந்துவதற்காக பேச்சை மாற்றிக் கொண்டு.

"ஷ்ஷ்! விடிஞ்சதும் பொறுப்பான பையன் பேசுற பேச்சைப் பாரு! சாப்பிட்டு கிளம்புங்க மாமா!" என்றவள் முகம் குங்குமமாய் சிவந்திருந்தது.

குடும்பத்தினுள் எங்கும் எவருக்கும் புரிதலில் எல்லாம் எந்தவித குறையும் இல்லை எனும் போது அங்கே பிரச்சனைகள் வரும் வாய்ப்புக்களும் குறைவு தானே?

சக்திவேல் குடும்பத்திலும் அப்படியான உறவுகள் தான். தேன்மலர் சமைப்பதில்லை என்பதில் தொடங்கி சக்திவேல் அவளுக்கென எடுக்கும் எந்த முடிவுகளிலும் எவரும் அவர்களை குறை சொல்ல போவதில்லை.

தேன்மலர் விருப்பத்திலும் அவள் எண்ணங்கள் மட்டுமே முதன்மை பெற்றதாய் இருக்கும்படிக்கு தான் பார்த்துக் கொண்டனர்.

அதற்காக சக்திவேல் செல்ல பேரன் என்று பொருளில்லை. அத்தனை கஷ்டங்களுக்கு நடுவில் குடும்பத்தை அன்னை தந்தையை இழந்து தூக்கி உயர்த்தி பிடித்து அந்த வீட்டின் ஆலமரம் அப்பத்தாவிற்கு அவன் தான் முதண்மை வேராய் இருக்கிறான் இத்தனை வருடங்களில்.

தனக்கென எதிலும் ஆசை கொண்டு ஏந்த வழியிலும் செல்லாமல் தம்பியின் வளர்ச்சியிலும் இன்று வரை துணை நிற்பவன். அவனுக்கென அவன் கேட்டது என்னவோ அவன் மனம் கவர்ந்த மலரை மட்டும் தான்.

அதை நன்றாய் மனதில் புரிந்து வைத்திருக்கும் புஷ்பம் முதல் கோமளம் ராதிகா வரை என உறவுகள் எல்லாம் அவன் வழி எதுவோ அதில் தாங்களும் என உடன் பயணிக்கும் துணை வேர்கள்.

ஆணி வேர் ஆட்டம் காணும் என்றால் துணை வேர்கள் வாடுவது தானே இயற்கை?

தொடரும்..