• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நினைக்க மறந்தாய் நெஞ்சாத்தியே -01

kkp37

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
14
12
3
Tamilnadu
அத்தியாயம் -01


நினைக்க மறந்தாய்
தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தாய்
தனித்துப் பறந்தேன்

மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகச்சிறை இருப்பாயோ



இருந்து விருந்து
இரண்டு மனம் இணைய

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்



ஏதேதோ செய்தது அந்தக் குரலும் இசையும் அவனை. கண்களை மூடி லயித்திருந்தவனை சூரியக் கதிர்கள் தான் எழுப்பி விட்டது.



கண்களை சுருக்கி இடது கையின் புறப்பகுதியால் தேய்த்தவன் எழுந்தமர்ந்தான்.




"ண்ணா கீழே அவங்க வந்தாச்சு!" என்ற குரலில் நிமிர அங்கே ஒருவன் நின்றிருந்தான்.



"அவங்க னா...?" குரல் கடினமாகி இருந்தது அவனுக்கு.



"அப்பா அம்மா !!"என்று தயங்கிட," பத்து நிமிஷத்தில் வர்றேன் போ "என்றபடி அந்த மொட்டை மாடியின் ஓரத்தில் இருந்த கழிவறைக்குள் புகுந்து கொண்டான்.



காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தவன் , சூரியனை பார்த்தபடி நெட்டி முறிக்க, அவள் காதருகினில் பேசினாள்.



"நெட்டி எல்லாம் அடிக்கடி முறிக்கப்படாது தெரியாதா உங்களுக்கு?" என்று கேட்க



'ஏய் மாமி காலையிலேயே படுத்துறடி!' என்று முணுமுணுத்தபடி கீழிறங்கினான்.



"என்ன காலையிலேயே...?" என்றபடி வந்தமர ,ஆடவன் ஒருவன் கோப்பையை நீட்டினான்.



அவனை ஓர் பார்வை பார்க்க ,"காஃபி ல சர்க்கரை கம்மியா டிக்காஷன் தூக்கலா போட்ருக்கேன் ண்ணா" என்று சொல்ல," ம்ம்ம் "என்றபடி காஃபியை உறிஞ்சினான்.



"அநாமத்தா குடிக்கிறேளே...? சுட்டுடப் போறது. சித்த பொறுமையா தான் குடிங்கோளேன் "மீண்டும் அவள் குரல் காதில் ஒலிக்க , மெல்லிய முறுவல் அவனிடத்தில்.



"காமாக்ஷி அவன் கிட்ட பேச வேண்டியதை சீக்கிரம் பேசிடு" என்று எதிரில் இருந்தவர் கூற



"இவ்வளவு தூரம் வந்தவர், சொல்ல வந்த விஷயத்தையும், சொல்லிட வேண்டியது தானே இதுக்கு ஒரு ஸ்பீக்கர் வேறயா ?"என்றான் நிறுத்தி நிதானமாக காஃபியை அருந்தியபடி.




"என்னவோ நான் சொல்ற பேச்சை அப்படியே கேட்டுடுறதுப் போல பேசுற "ஆத்திரமாக சத்தமிட்டார் அவர் .



"ஏன் இவ்வளவு சத்தம்.? கொஞ்சம் பொறுமை "என்று அவன் சொல்ல அங்கிருந்த அவனின் ஆட்கள்,' பொறுமையை பத்தி நம்ம அண்ணா பேசுறார் பாரேன்' என்று சிரிக்க," டேய்!" என்ற அதட்டலில் அடங்கினர்.



"இப்படியே எல்லாரையும் மிரட்டறதால தான் உன் கிட்ட பேசவே பயமா இருக்கு" என்று கூற , அவனோ தன் தந்தையைப் பார்த்து நகைத்தான்.




"சிரிக்காதடா எனக்கு கோபம் தலைக்கேறுது. "



"ப்ப்ச், இப்ப என்னப்பா உங்களுக்கு?, எதுக்கு வந்தீங்கனு விஷயத்தை சொல்லாம "என அலுத்துக் கொண்டான்.



"உனக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணி இருக்கோம் "என்றார் பட்டென்று.



"ஸோ?" என்று இழுக்க



"கொஞ்சமாவது பொறுப்பா பேசுடா... வயசு முப்பத்தி ஒண்ணை தாண்டி போகுது. "என்றார் கடுப்பாக.



"நானும் இல்லைனு சொல்லலையே... ?!"



"எல்லாத்துக்கும் விட்டேத்தியா பதில் பேசாதே ருத்ரா.. எங்களுக்கும் வயசாகுது. "என்று வருத்தத்துடன் கூற



"விட்டேத்தியா பதில் சொல்றேனா... ?"என்று அவன் அழுத்தமாக பார்க்க



"ஏங்க நீங்களும் அவனைப் பற்றி தெரிந்து பேசுறீங்க "காமாக்ஷி மனம் தாளாமல் கேட்க



"அதுக்காக இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் போக சொல்றியா...?"அவரும் பதிலுக்கு குதித்தார்.



"இப்படியே மாறி மாறி ரெண்டு பேரும் சண்டை போட்டு என்னைக் கொண்டு போய்..." எனும் போதே



"ம்மா !"என்று ருத்ரனும்



"காமாக்ஷி !!"என்று அவன் தந்தையும் அலறி விட்டனர்.



"வாய்ப் பேச்சுக்கே அலறுங்க ஆனா என் நிலைமையை ரெண்டு பேரும் உணராதீங்க "என்று கத்தி விட்டார் காமாக்ஷி.



"ம்மா இப்போ என்ன என் கல்யாணம் தானே... நடத்திடலாம் விடு. சும்மா இதுக்காக கண்டதெல்லாம் பேசிட்டு இருக்க "என்று கடிந்து கொண்ட ருத்ரசமரன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.



"ஏங்க என் பையன் கல்யாணம் இந்த வருஷம் நடந்திடும் தானே... ?!"ஆவலாக வினவிய காமாக்ஷியை பரிதாபமாக பார்த்தார் ருத்ரனின் தந்தை மேகநாதன்.



*********************



மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி



தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்



அம்மா பாட வந்தோம்….



மோகன ராகத்தில் அழகாய் வீணையை மீட்டிக் கொண்டிருந்தாள் வீணாசாத்விகா.



அதிகாலை புலர்வது இவளின் வீணை இசையை கேட்கத் தானோ என்று தோன்ற வைக்கும் அளவிற்கு இருந்தது அந்த இசை.

"


அடடா அடடா...!! ஷேஷா உன் மகள் கையிலும், நாவிலும் சாட்சாத் அந்த சரஸ்வதி தான் குடியிருக்கா தெரியுமோ...? என்ன பிரமாதமா பாடுறா வாசிக்கறா... "அறுபது வயதில் இருக்கும் பெரியவர் ரசித்துப் பாராட்டினார்.




அவர் கூறியதில் அத்தனை பெருமிதம் அந்தப் பெரிய மனிதருக்கு.

"


பின்னே யாருடைய வாரிசு... சோடை போகுமா என்ன ?,நாமகரணத்திலேயே வீணாசாத்விகா னுல்ல சூட்டியிருக்கேன். "


"


அம்மாடி சாத்வி, பூஜை முடிஞ்சுட்டா சித்த வந்துட்டுப் போடா. மாமா உன்னைப் பார்க்க தான் நெடுநேரமா காத்திண்டு இருக்கார் "என்று குரல் கொடுக்கவும் ,அன்றலர்ந்த மலராய் வெளியே வந்தாள் சாத்விகா.

"


முடிஞ்சுதுப்பா. வாங்கோ மாமா. எப்படி இருக்கேள்? ஆத்துல எல்லாம் எப்படி இருக்கா. ராகவியை அழைச்சுண்டு வந்திருக்கலாமே.?, சித்த இருங்கோ காஃபி கலந்துடறேன். "என்றபடி அடுக்களைக்குள் நுழைய, அவளின் அம்மா முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.


"


என்னம்மா ஏன் இப்படி பாசமா பார்க்கறீங்க... ?"

"


நோக்கு கொஞ்சமாது புத்தி இருக்காடி... ?"

"


ஏன் நான் என்ன செஞ்சேன்...?" புரியாமல் கேட்க

"


அந்த வேணு மாமா வர்றச்ச பாடாதே , வீணையைத் தொடாதேனு எத்தனை முறை சொல்லி இருக்கேன்." என்று கடிந்து கொள்ள

"


நேக்கு அவர் வந்ததே தெரியாதும்மா. நான் தோப்பனாருக்கு வேண்டி பாடினேன் வாசித்தேன். இவர் வந்து நிற்பார்னு கனவா கண்டேன். சரி விடுங்கோ . காஃபி எடுத்துண்டு வரேன் னு சொல்லிட்டு வந்துட்டேன். இப்போ தர்றேளா??" என கண்கள் சுருக்கி கெஞ்ச

"


என் கிட்டே கெஞ்சாதடி கொழந்தே...இந்தா இதைக் கொண்டு குடு. குடுத்ததும் வந்திடணும்" என்று சொல்லியே அனுப்பினார்.



அவர் கூறியபடியே காஃபியை கொடுத்து விட்டு உடனே வந்து விட்டாள்.



எதிரே ஒருத்தி வரவும்," குட் மார்னிங் மன்னி!" என சாத்விகா சிரித்த முகத்துடன் சொல்ல

"


மேலே பட்டுடாம போகத் தெரியாதா நோக்கு. தள்ளி போ குட் மார்னிங் ஒண்ணு தான் இப்போ குறைச்சல் ."என்று சிடுசிடுத்து விட்டுச் சென்றாள் காயத்ரி .



அவள் சிடுசிடுத்ததில் சற்று மனம் சுணங்கினாலும்,' இது எப்போதும் நடக்கும் நிகழ்வு தானே !'என்று கணக்கில் கொள்ளாமல் சென்று விட்டாள்.

"


ஏன் மா இவளை அடுக்களைக்குள்ள விடாதீங்கோனு எத்தனை முறை சொல்றது...? அவளுக்குத் தான் அறிவில்லை. எங்க பார்த்தாலும் ஈஷிண்டு அலையறா "என்று கடிந்து கொண்டே தனக்கான காஃபியை கலந்தாள்.

"


அவ நம்மாத்துப் பொண்ணு காயத்ரி" என்று பத்மஜா சற்று கலக்கத்துடன் சொல்ல, காயத்ரி சட்டென முறைத்தாள்.

"


நம்மாத்துப் பொண்ணா??" என்று ஏளனத்துடன் இதழ் வளைத்துக் கேட்டிட , பத்மஜா வாயை மூடிக் கொண்டார்.

"


நினைப்பு தான் மாமி. என்னவோ போங்கோ" என்று சொல்லியபடி சென்று விட, பத்மஜாவிற்கு சங்கடமாகப் போனது.

"


பத்து டிஃபன் ரெடியா... நாழியாயிடுத்து. இன்னைக்கு சாத்விக்கு கச்சேரி இருக்கு தெரியுமோல்லியோ கொஞ்சம் சீக்கிரம் வாயேன்" என்று ஹாலில் இருந்து குரல் கொடுத்தார் ஷேஷகோபாலன்.

"


ராம் வந்தாச்சா?" என்று பத்மஜா பரிமாறிய கிச்சடியை உண்டபடி கேட்க

"


இன்னும் இல்லை .இப்ப தான் காயத்ரி காஃபி கலந்து எடுத்துண்டு போனா "என்றார் சற்று சுணக்கமாக.

"


என்னடி பத்து உன் குரல் டல்லடிக்கறது மாட்டுப்பொண்ணு வழக்கம் போல பேசிட்டாளா ??"என்று புன்னகைத்தார்.

"


உங்களுக்கு சிரிப்பா படறது. நேக்கு அவ்வளவு சங்கடமாக இருக்குன்னா... நம்ம சாத்வியை பேசுறது நேக்கு பிடிக்கலை போங்கோ" என்றார் வருத்தமாக.

"


எல்லோரும் உன்னைப் போல என்னைப் போல இருப்பாங்களா பத்து. வண்ணங்கள் ரக ரகமா இருக்கறதைப் போல மனிதர்களும் விதத்துக்கு ஒண்ணா இருக்கத் தான் செய்யறா. விடு பத்து அவாளும் ஒரு நாள் புரிஞ்சுப்பா.. புரிஞ்சுக்கலைனாலும் விட்டுடு. நம்ம சாத்விக்குன்னே பிறந்தவன் அவளை புரிஞ்சுண்டு இருக்கானே அது போதாதா ??"என்று மனைவியை சமாதானம் செய்தார்.

"


நம்ம காலத்துக்குப் பிறகு ராம் அவளைப் பார்த்துப்பான்னு நினைச்சேன்னா. ஆனா அது நடக்காது போல" என்று பத்மாவிற்கு மனம் ஆறவில்லை.

"


அவளுக்குத் துணையா பகவான் இருக்கிறார், நீ ஏன் மத்தவா துணையை அவளுக்கு கொடுக்க நினைக்கிற ?"என்றவர் ,"அம்மாடி சாத்வி தயார் ஆகிட்டா போகலாம்டா கொழந்தே" என குரல் கொடுக்க பட்டுப்புடவை சரசரக்க வந்தாள் வீணாசாத்விகா.


"சாட்சாத் சரஸ்வதி தேவியே நேரில் நடந்து வர்றாப்ள இருக்கு. "என்று சிலாகித்தவர் ,"கெளம்பறோம் பத்து. யாரையும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லோரும் நம்மளை புரிஞ்சுண்டு வாழணும்னு நினைக்கிறதும் தேவை இல்லை புரியறதா?" என்றார் அழுத்தமாக.


"


சரின்னா... நீங்க பார்த்து போயிட்டு வாங்கோ ,சாத்வி வழக்கம் போல ஜமாய்ச்சுட்டு வரணும்டி" என்று ஆசிர்வதித்து அனுப்ப இருவரும் கிளம்பி விட்டனர்.


"


உன் தனித்தன்மையை இங்கேயும் பதிவு பண்ணனும்டா சாத்வி. நீ ஜமாய்ச்சிடுவ இருந்தாலும் சொன்னேன் "என்றவரின் பாதம் பணிந்து எழுந்தாள்.

"


ஷேமமா இருக்கணும் "என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.



முதல் வரிசையில் நடுவில் இருந்த நாற்காலிக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்தார் ஷேஷகோபாலன்.



அங்கே முதல் வரிசையில் கம்பீரமாக முறுக்கிய மீசையுடன் உதட்டில் புன்னகை உறைய அமர்ந்திருந்தான் ருத்ரசமரன்.



திரை நீக்கியதும் தெய்வீகத் தோற்றத்தில் அமர்ந்திருந்தவளின் பார்வை ருத்ரனையும், தந்தையையும் தழுவிச் செல்ல இதழில் மலர்ந்தது அழகிய புன்னகை. விழிகள் விரிந்தது சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய்.


"


சாத்விகா காம்போதி ராகம் வீணையை ட்யூன் பண்ணிக்கோ" என்ற குரலில் சுயம் பெற்றவள் மீண்டும் எதிரே பார்க்க ஜனத்திரள் நிரம்பி இருந்தாலும் அவள் எதிர்பார்த்த இருவரும் அங்கில்லை. தந்தையும் எதிரே இல்லை ருத்ரனும் இல்லை. எதிரே அமர்ந்திருந்ததென்னவோ அண்ணி காயத்ரியும் அண்ணன் ராமகோபாலனும் தான். வழக்கமாய் வரும் நினைவுகள் இன்றும் வந்தது அவ்வளவு தான் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள். இறந்து போன தாய் தந்தையை ஆசீர்வதிக்கும்படி மனதார வேண்டிக் கொண்டு.



அவள் மனதில் ஓர் ஏக்கம் மீண்டும் அந்தக் காலம் திரும்பிடாதா என்று. ஆனால் திரும்ப வாய்ப்பிருந்தும் தடைக்கல்லாய் அவளே நின்றால் எங்ஙனம் திரும்ப. மனதின் ஏக்கம் மறைய காம்போதி ராகத்தை வாசிக்க துவங்க மனம் நிம்மதியை நாடியது.



அவள் தேடிய நிம்மதி அந்த வீணை மீட்டிடும் ராகத்திலும் அவளவனிலும் மட்டும் தானே இருக்கிறது. அவனில்லை. ஆனால் ராகம் அவள் இசைக்கும் வீணையில் இருக்கிறதே.



அவள் தேடியவன் அங்கேயே ஓர் ஓரமாக நின்று அவளை ஸ்பரிசித்து விட்டான். ஆனால் அவள்....????.



..... தொடரும்.



 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
அவள் கண்களில்
இவன் பிம்பம்
இவன் காதுகளில்
அவளின் குரல்..... பிரிந்து இருந்தாலும் நினைவால் இணைந்திருக்கும்
இரு உள்ளங்கள்🤩💐💐💐👍🏻💕💕👏
நன்னா இருக்கு 💐💐💐💐
வாழ்த்துக்கள் மா👍🏻👍🏻👏👏👏....
 
  • Love
Reactions: kkp37