• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு 10

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
789
597
93
Chennai
அத்தியாயம் 10

"ஹெலோ!" என்ற தூக்க கலக்கத்தினாலான குரலில் முதலில் தயங்கிய யசோதா மீண்டும் கிருஷ்ணன் "ஹெலோ! ஹூ இஸ் திஸ்?" என்று கேட்கவும்,

"நான் தான் அத்தான் யசோ!" என்று சொல்லவும் முழுதாய் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான்.

"யசோ! என்ன இந்த நேரம்? அங்க எல்லாரும் நல்லாருக்காங்க தானே? தாத்தா ஓகே தானே?" என கிருஷ்ணன் கொஞ்சம் பதறி கேட்க,

"அய்யோ அத்தான்! அதெல்லாம் ஒண்ணுமில்ல எல்லாரும் நல்லா இருக்காங்க. இப்ப உங்களுக்கு நைட் டைம் இல்ல. நான் தான் மறந்து கால் பண்ணிட்டேன்!" என்று யசோதா சொல்ல, யோசனையானான் கிருஷ்ணன்.

"அத்தான்! ஹெலோ! கேட்குதா?" என யசோதா கேட்க,

"ஹ்ம் சொல்லு யசோ!" என்றான்.

"இல்ல த்தான் நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்!" என்றதும் சிறு அமைதி அவன் கொடுக்க,

"அண்ணா அண்ணி அவங்களை பத்தி கொஞ்சம் பேசணும் த்தான். நான் உங்ககிட்ட சொல்றது சரியா தப்பானு எல்லாம் எனக்கு தெரியல. இது ப்ரோப்லேமா இல்ல நான் தான் அதிகமா நினைக்குறேனானும் தெரியல!" என்றாள்.

ஏற்கனவே கிருஷ்ணன் கூட அந்த சந்தேகத்தில் தானே இருக்கிறான். உடனே புரிந்து கொள்ள முடிந்தது யசோதாவை.

"என்ன ப்ரோப்லேம் யசோ? அக்கா மாமா.. யார் பிரச்சனை பன்றாங்க? விஷயம் சீரியஸ்னா நான் கிளம்பி வரணும் அதனால தான் கேட்குறேன்!" என்றான் கிருஷ்ணன்.

"நீங்க வர்ற அளவுக்கு பிரச்சனை இல்லை தான். ஆனா சின்ன பிரச்சனையும் இல்லை" என்றவள் இன்னுமே தயங்கினாள் தன் அண்ணனை என்னவென்று சொல்வது என.

"யசோ!" என்று அழைத்தபடி அவளறைக்கு வெளியில் நின்று லதா அழைக்க,

"அண்ணி கூப்பிடுறாங்க! நான் அப்புறமா பேசுறேன் த்தான்!" என்று மொபைலை கட் செய்ய போக,

"யசோ ஒரு நிமிஷம்!" என்று தடுத்தவன்,

"கட் பண்ண வேண்டாம். அக்கா போகவும் நீ சொல்லு!" என்றான்.

மீண்டும் யசோ என்ற அழைப்போடு லதா உள்ளேயே வந்திருக்க, யசோதாவும் மொபைலை பார்த்தவள் அப்படியே கட்டிலில் வைத்துவிட்டு,

"சொல்லுங்க அண்ணி!" என்றாள்.

"பேசிட்டு இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" என கேட்க,

"ச்சே ச்சே! அதெல்லாம் இல்ல. பிரண்ட் தான். நீங்க சொல்லுங்க. வெளில கிளம்பிட்டீங்களா அண்ணி? இவ்வளவு காலைலேவா?" என்றும் யசோதா கேட்க, இவர்கள் பேச்சையும் ம்யூட்டில் போட்டு கேட்டுக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.

"ம்ம் ஆமா யசோ! தாத்தாவை பார்க்க போகணும். அதான் உன்னை பார்த்துட்டு போலாம்னு!"

"நானும் வரணுமா அண்ணி?"

"இல்ல யசோ! உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்!" என்று சொல்லவும் கலவரமாகியது யசோதாவிற்கு. மொபைலை திரும்பிப் பார்த்தவள்,

"என்ன அண்ணி?" என்று கேட்க,

"நீ சின்ன பொண்ணு! உனக்கு புரியுமா தெரியல. ஆனா எனக்கு வேற வழி தெரில யசோ! எனக்கு உன் ஹெல்ப் வேணும்!" என்றாள்.

"என்ன அண்ணி ஹெல்ப்னு எல்லாம்? என்னனு சொல்லுங்க!" என்றாள் யசோதா அருகில் வந்து.

ஒரு பெருமூச்சோடு தான் சொல்ல வந்ததை கூற தயாரான லதா, "ஜீவிதா!" என்று சொல்ல, மூச்சைடைத்து வந்தது யசோதாவிற்கு.

தானே கிருஷ்ணனிடம் சொல்ல நினைத்தது தான் என்றாலும் என்னவோ இப்பொழுது லதா சொல்ல அதை கிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதில் மனம் அடித்துக் கொண்டது.

இதில் அண்ணி வேறு என்ன சொல்ல போகிறார்களோ என்ற பயமும்.

"ஜீவிதா உன் அண்ணனோட பாஸ்ட்னு நீ சொன்ன இல்ல? உனக்கு தெரிஞ்சது அவ்வளவு தான். அது கன்டின்யூ ஆகுது!" என்று சொல்ல, கண்களை நம்ப முடியாமல் விரித்தாள் யசோதா.

"நீ என்னை நம்ப வேண்டாம். உன் அண்ணாகிட்டயே கேட்டாலும் எனக்கு பிரச்சனை இல்ல. இது என்னோட வாழ்க்கையும் இருக்கு இல்லையா? சோ நான் தானே சில விஷயங்களை முடிவு பண்ணனும்?" என்றெல்லாம் பேச, அங்கே கிருஷ்ணன் நிலைமை தான் மோசமானது.

லதா சொன்னதை புரிந்து கொண்ட கிருஷ்ணன் அதிர்ச்சியில் அமர்ந்திருக்க, யசோதா அடுத்தடுத்த பேச்சில் அதிர்ந்து சில நிமிடங்கள் கிருஷ்ணன் இணைப்பில் இருந்ததையே மறந்திருந்தாள்.

"உனக்கு ஜீவிதா தெரியும். லாஸ்ட்டா கேரளால இருந்தது வரை தெரியும். எனக்கு சில விஷயங்கள் தெரிய வந்தது. அதாவது ஜீவிதா ஃபாரின் போயிருக்கான்னு" என்று சொல்ல,

"ஆமா அண்ணி! அங்க வேலைக்கு ட்ரை பண்றதா பிரண்ட் சொன்னா. அவங்க சிஸ்டர் சொன்னாங்களாம்" என்றாள் ஜீவிதா.

"இப்ப அங்க தான் இருக்காங்களா?"

"இல்லையே! நாம கூட அன்னைக்கு பார்த்தோமே அண்ணி! கிருஷ் அத்தான் கிளம்பின அன்னைக்கு. அவங்க ஃபாரின்ல ஜாப் ட்ரை பண்ணினாங்க. பட் செட் ஆகலைனு அவங்க பிரண்ட்கிட்ட சொல்லி இருக்காங்க. நான் பேசினது இல்ல. ஆனா அண்ணாக்கு இப்படி ஒரு தாட் இருந்தப்ப நான் பிரண்ட்கிட்ட கேட்டேன். அப்ப தான் தெரியும் அவங்க பேமிலியோட கேரளால செட்டில் ஆகிட்டாங்கனு. இப்ப எதுக்கு இங்க வந்தாங்கன்னு எல்லாம் எனக்கு தெரியாதே!" என்றாள்.

"ஹ்ம்!" என்றவள் நீண்ட சிந்தனையில் இருக்க,

"இப்ப என்ன அண்ணி பிரச்சனை? அண்ணா உங்ககிட்ட எதாவது தப்பா..?" என்றதும் உதடு வளைத்து லதா புன்னகைக்க,

"சொல்லுங்க அண்ணி!" என்றாள்.

"பேசினா தானே யசோ பிரச்சனை வரும். உன் அண்ணா என்கிட்ட பேசி பல நாள் ஆச்சு" என்று சொல்ல, அது இன்னும் அதிர்ச்சி.

கல்யாணத்துக்கு முன்னாடியே லவ் பண்றதை சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொன்னார். ஆனா விதி!" என்றவள் நடந்ததை சொல்லி, அவன் பணம் அனுப்பிய செய்தி, மொபைலில் பேசியது என அனைத்தும் சொல்ல, இது யசோதாவிற்குமே குழப்பம் ஆனது.

"என்ன அண்ணி சொல்றிங்க? அண்ணாவா இப்படி?"

"ஏன் நம்பிக்கை இல்லையா?"

"அய்யோ அண்ணி!" என்று பதறவும் லதா சிரித்தவள்,

"எனக்கு சில விஷயங்கள்ள தெளிவு வேணும் யசோ! இது எனக்கான இடமா இல்லையான்னே அப்ப தான் என்னால முடிவு பண்ண முடியும். அதுக்கு உன்னோட ஹெல்ப் வேணும்!" என்று சொல்ல, அப்பொழுது தான் நியாபகம் வந்து மொபைலை கையில் எடுத்துப் பார்த்தாள் யசோதா.

இன்னும் இணைப்பில் தான் இருந்தான் கிருஷ்ணன்.

"என் வீட்டுக்கோ உன் வீட்டுக்கோ எதுவும் தெரிய வேண்டாம். முதல்ல எனக்கு சில உண்மைகள் தெரியணும். உன் அண்ணா அந்த பொண்ணுக்கு இப்ப வரை உண்மையா இருக்கார்" என்றவள்,

"ஆனா அந்த பொண்ணு அப்படி இருக்குதான்னு எனக்கு தெரியல. அப்படி இருந்தா நான் தான் விலக வேண்டியது. சரி! விலகனும்னா விலகி தான் ஆகணும். ஆனா இப்ப அந்த பொண்ணு மேல எனக்கு சில சந்தேகம். ஏன் சொல்றேன்னா உன் அண்ணா அனுப்பின அமௌன்ட் அவ்வளவு"

"என்னென்னவோ சொல்றிங்க. எனக்கு பயமா இருக்கு அண்ணி! நான் என்ன பண்ணனும்?"

"உன் பிரண்ட்டோட சிஸ்டர்கிட்ட சில விஷயங்கள் கேட்கணும். கேட்க முடியுமா?"

"என்ன அண்ணி?"

"ஜீவிதா எங்க இருக்காங்க? அவங்க அம்மா என்ன பன்றாங்க? இப்ப ஜீவிதா எங்க வேலை பாக்குறாங்க? அவங்க அம்மா எதுவும் மெடிசின்ல இருக்காங்களானு எனக்கு தெரியணும்!" என்று சொல்ல,

"இதோ இப்பவே கேட்குறேன் அண்ணி!"

"வெயிட் யசோ!" என்ற லதா,

"எதுவோ சரி இல்லைனு எனக்கு தோணுது. என்ன விஷயமா இருந்தாலும் நான் இப்ப கேட்ட எதுவும் உன் அண்ணனுக்கு தெரிய வேண்டாம்!" என்று சொல்லவும் யசோதா விழிக்க,

"உன் அண்ணா கெட்டவர் இல்ல. ஆனா..." என்றவள்,

"என் சந்தேகம் சரியானு தெரியலை. அப்படி சரியா இருந்தாலும் நாம சொல்லி எல்லாம் உன் அண்ணனுக்கு புரிய வைக்க முடியாது. சோ என்னை நம்பினா எனக்கு இந்த ஹெல்ப் மட்டும் பண்ணு. நம்ம பேமிலில யாருக்கும் தெரிய வேண்டாம்!" என்றாள் தெளிவாய்.

"எனக்கு புரியுது அண்ணி. இன்னைக்கு ஈவினிங்குள்ள நான் உங்ககிட்ட பேசுறேன். ஆனா அண்ணா நல்லவன் அண்ணி!" என்றாள் கண்ணீர் பொங்க.

"தெரியும் யசோ!" என கன்னம் பற்றி,

"ஆனா.." என்றவள்,

"சரி முதல்ல பேசிட்டு வா!" என்று சொல்லி வெளியேறினாள்.

"ஹலோ!" என்ற யசோதா குரல் கேட்கும் வரை பொறுமை காத்தவன் ம்யூட்டில் இருந்து எடுத்துவிட்டு,

"என்ன யசோ இதெல்லாம்? அவர்கிட்ட நான் இதையெல்லாம் நினைக்கவே இல்ல!" என்ற கிருஷ்ணன் குரலில் கோபமும் வேதனையும்.

"நான் இதை தான் த்தான் சொல்ல வந்தேன்!" என்றவளை,

"அப்ப கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு தெரியும் தானே?" என்று அதற்கும் கோபம் கொள்ள,

"சத்தியமா இல்ல த்தான். அத்தையும் மாமாவும் தான் சொன்னாங்க. சரி வராதுன்னு எடுத்து பேசிட்டோம். அண்ணாவும் சரினு சொல்லிட்டதா தான் சொன்னாங்க!" என்றாள் வேகமாய்.

"இப்ப மட்டும் ஏன் உனக்கு என்கிட்ட சொல்ல தோணுச்சு?" கிருஷ்ணன் கேட்க,

"அண்ணி கொஞ்ச நாள் முன்னாடி இதை என்கிட்ட பேசினாங்க. அப்பகூட முடிஞ்சு போனது தானேனு நானும் நினச்சேன். அப்புறம் மறுபடியும் ரீசெண்டா அந்த ஜீவிதா பத்தி கேட்கவும் தான் எனக்கு பயமாகிட்டு. யார்கிட்ட சொல்லனு தெரியல. அண்ணிக்காக யோசிச்சு தான் உங்ககிட்ட சொல்லலாம்னு கால் பண்ணினேன்!" என்றாள் கவலையும் அவன் கோபமாய் பேசியதில் பயந்தும்.

"இப்ப என்ன பண்ண போற?" என மீண்டும் அவனே கேட்க,

"அண்ணி கேட்ட மாதிரி நான் அவங்களுக்கு எல்லாம் கேட்டு சொல்றேன். ஆனா நிஜமா அண்ணா பாவம். ரொம்ப நல்லவங்க!" என்றாள் அவனிடமும்.

"ரொம்ப நல்லவங்க தான்!" என்று பல்லைக் கடித்து கிருஷ்ணன் கூற, கண்ணீர் கலந்தது யசோதாவிற்கு கண்களில்.

"ப்ச்! சரி கட் பண்ணு. நான் ஊருக்கு டிக்கெட் இருக்குதான்னு பாக்கறேன்!" என்று சொல்ல, அதில் பதறியவள்,

"இப்ப தானே அண்ணி சொல்லிட்டு போனாங்க யாருக்கும் தெரிய வேண்டாம்னு?" என்றாள்.

"அதுக்காக சும்மா இருக்க சொல்றியா என்னை?"

"இல்ல த்தான்! நான் பேசி பாக்குறேன். அண்ணி தெளிவா தானே சொன்னாங்க? அந்த பொண்ணு ஜீவிதா தப்பா இருந்தா?"

"இருந்தா? இருந்தா மட்டும்? உன் அண்ணா புரிஞ்சிப்பாரா? ப்ச்! அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருந்தா என் அக்கா. எல்லாம் எனக்காகவும் என் தாத்தாக்காகவும் தான்" என்றவன் லதாவின் நிலை எண்ணி கவலை கொள்ள, பதில் கூறிட முடியவில்லை யசோதாவிற்கு.

"ப்ளீஸ் த்தான்! நான் என்னால முடிஞ்சதை பண்றேன். எனக்கு அண்ணியை ரொம்ப பிடிக்கும். அண்ணா அப்படிலாம் எதுவும்...." என்றவளுக்கு முடிக்க முடியாமல் அழுகை வர, கிருஷ்ணனுமே அதன்பின் தான் நிதானம் வந்தான்.

"சரி பேசிட்டு எனக்கு கால் பண்ணு!" என்று கிருஷ்ணன் வைத்துவிட, உடனே தனது தோழிக்கு அழைத்து வீட்டிற்கு வருவதாய் கூறினாள் யசோதா.

இப்போது வரை ஜீவிதாவை தனக்கு தெரியும் என்று எதுவும் தோழியிடம் காட்டியிருக்கவில்லை.

சாதாரணம் போல தான் விசாரித்து இருந்தாள் திருமணத்தின் முன் தன் மாமா கூறியதை வைத்து. இப்பொழுதும் அப்படி தான் பேச எண்ணி சென்றாள்.

தொடரும் நிலா..