• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு 17

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
789
597
93
Chennai
அத்தியாயம் 17

நீலகண்டன் முன் அமர்ந்திருத்தனர் கண்ணபிரான் விசாலாட்சி இருவரும்.

நீண்ட மௌனம். அந்த மௌனமும் வந்திருந்தவர்கள் முகமும் தான் எதுவோ பிரச்சனை என்று கூறியிருந்தது பெரியவருக்கு.

அவர் அருகே நின்றிருந்த பேத்தியானவள் இதுவரை வாயே திறந்திருக்கவில்லையே!

வந்ததும் நீலகண்டனைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு அறைக்குள் சென்று புகுந்தவள் இப்பொழுது இவர்கள் வந்து பின் தான் வெளியே வந்திருக்கிறாள் சுவர்ண லதா.

"அவரை எங்க? நீ மட்டுமா வந்த? கேரளா ல இருந்து எப்ப வந்திங்க?" என்ற நீலகண்டனின் மொத்த கேள்விக்கும்,

"அவங்களுக்கு முக்கியமான வேலை தாத்தா. அதான் நான் மட்டும் வந்தேன். உங்களை பாக்கணும்னு இருந்துச்சு!" என்பது தான் பதில் லதாவிடம்.

இப்பொழுதும் வந்து நல விசாரிப்புகளோடு கண்ணபிரானும் விசாலாட்சியும் அமைதியாகி இருக்க, லதா அவர்கள் அருகிலேயே செல்லாமல் நிற்க என கண்ட பின் தான் என்னவோ என்ற யோசனையுடன் பார்த்தார் நீலகண்டன்.

அவர்களே பேசட்டும் என நீலகண்டனும் அமைதி காக்க,
ரமா ஆச்சி வந்தவர் காபி கொடுத்துவிட்டு சென்றார்.

"ஹனி பாப்பா எப்படி இருக்கா லதா?" எதாவது பேச வேண்டுமே என கண்ணபிரான் கேட்க,

"ம்ம் பாப்பா நல்லா இருக்கா!" என்ற லதா உறவுமுறை வைத்து அழைக்காதது காபியை கீழே வைக்க வைத்தது விசாலாட்சியை.

"லதா!" என்று எழுந்து அவள் அருகில் செல்ல,

"யசோதா வரலையா? நேத்து வர்றேன்னு சொல்லிட்டு போனா?" என்று நீலகண்டன் கேட்க,

"இன்டெர்வியூ போயிருக்கா.. முடிச்சுட்டு இங்க தான் வருவா!" என்று அவருடன் பேச ஆரம்பித்தார் கண்ணபிரான்.

"அம்மாடி லதா! உன்கிட்ட நான் என்ன சொல்ல? மன்னிப்பு கேட்கவா நன்றி சொல்லவா?" என்றார் தனியே வந்து அவள் கைகளை பிடித்தபடி.

"இவன் இப்படி எல்லாம் நடந்துப்பான்னு நான் நினைக்கல டா!" என்றும் சொல்ல, லதா பார்த்தபடி இருந்தாள்.

"கண்ணா வந்து நடந்ததை சொன்னான்!" என்று சொல்லவும் தான் அவளுக்கு மனம் என்னவோ கொஞ்சமாய் நிம்மதி கொண்டதாய் தோன்றியது.

இவர்களிடம் அவனுக்கு பகிர தோன்றியதே! அதுவரை நல்லவன் தான் என்பதை போன்ற நிம்மதி.

"நான் சொன்னா கேட்பான்னு நம்பி தான் நான் இவ்வளவும் செஞ்சேன். என் மேல இருக்க மரியாதைக்கு கல்யாணத்தை பண்ணிட்டு உன்னை காயப்படுத்துவான்னு நான் நினைக்கவே இல்ல டா!"

"அவனுக்கு நல்லது கெட்டது தெரியலைன்னாலும் சொன்னா புரிஞ்சுப்பான்னு நினச்சேன்!" என்று விசாலாட்சி.

"என்கிட்ட நீயாவது சொல்லி இருக்கலாமே டா. அவன் சரி இல்லை எதுவோ பன்றான் உங்க வாழ்க்கை எப்ப சரியாகும்னு நினச்சு அவர்கிட்ட புலம்பினேன். இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்க மாட்டேன் டா!" என்று சொல்ல சொல்ல பொறுமையாய் கேட்டவளுக்கு அதற்கு மேல் பொறுமையாய் இருக்க முடியவில்லை.

"அவங்க செஞ்சது தப்பு தான். ஆனா நீங்க செஞ்சது?" என்று கேள்வியாய் லதா நிறுத்தவும் அவர் அதிர்ந்து விழிக்க,

"அத்தை மனசு கஷ்டப்பட கூடாதுன்னு அவர் கல்யாணம் பண்ணினார். அவர் மாறிடுவார்னு நீங்க கல்யாணம் பண்ணி வச்சீங்க. ஆனா என்னை என்னனு யாருமே நினைக்கல" என்று சொல்லவும்,

"அய்யோ! லதா அப்படி எல்லாம் இல்ல டா.." என்று விசாலாட்சி மறுக்க வர,

"உங்களை நான் தப்பு சொல்லல. என்னோட இடத்துல இருந்து பார்த்தா அப்படி தானே தோணும்" என்றாள் புரியும்படி.

"என்னோட தேவை தாத்தாவோட இடம் அவங்களுக்கு போகணும். அதுக்காக தானே நானும் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்?"

"என்ன லதா என்னென்னவோ பேசுற? அதெல்லாம் ஒரு காரணம். எப்படியாவது நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கனும்னு தான் அப்படி பேசினது!"

"இருக்கலாம். ஆனா நானும் என்னோட தேவைக்காக கல்யாணம் பண்ணினதை இல்லைனு சொல்ல முடியாதே!"

"எனக்கு பயமா இருக்கு லதா! ரெண்டு பேரும் மாறி மாறி என்னென்னவோ சொல்றிங்க. எல்லாம் பேசிக்கலாம். நீ வந்துடு லதா. நீ வா. நாங்க இருக்கோம். நாங்க பாத்துக்குறோம்!" விசாலாட்சி பதட்டத்தோடு சொல்ல,

"இப்பவும் உங்களுக்காக மட்டும் வர சொல்றிங்களே!" என்ற கேள்வியில் செய்வதறியாமல் பார்த்தார் அவர்.

"சில கேள்விகளுக்கு தான் பதில் இருக்கு எங்க வாழ்க்கைல. சில கேள்விகளுக்கு பதில் இல்ல. பல கேள்விகள் புரியவே இல்ல" என்ற லதா,

"உங்களோட அவரும் வந்திருந்தா நான் உங்ககூட வந்திருப்பேனோ என்னவோ. ஆனா..." என்றவள் சொல்லாமல் விட்ட வார்த்தைகள் அடிக்காமல் வலி கொடுத்தது விசாலாட்சிக்கு.

வாவென்றோ வந்து தான் ஆக வேண்டும் என்றோ தான் அழைக்கும் நிலையில் இல்லை என்று தெளிவாய் புரிய வைத்து லதா நிற்க, அவள் வர போவதில்லை என்ற உண்மையில் விசாலாட்சியின் உள்ளம் சுருண்டுவிட்டது தன் தவறில்.

கிருஷ்ணன் அழைப்பில் நேர்முகத் தேர்வை முடித்துக் கொண்டு வேகவேகமாய் நீலகண்டனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் யசோதா.

நீலகண்டன் கண்ணபிரான் பேசிக் கொண்டிருக்க, அவர்களிடம் லதாவைக் கேட்டு உள்ளே வந்த போது விசாலாட்சி லதா இருவரும் பேசி முடித்து நின்றிருந்தனர்.

"வா யாசோ!" என இன்முகமாய் லதா அழைத்தாலும் கண் கலங்கி இருப்பது பார்த்ததும் புரிந்தது.

"அண்ணி!" என்ற யசோதா விசாலாட்சி முன் பேச முடியாமல் தயங்கி நிற்க, அவளுக்கு தெரியாது என்று நினைத்த விசாலாட்சி,

"நான் வெளில இருக்கேன் டா!" என்று சொல்லி கண்களை துடைத்துக் கொண்டு கிளம்பினார்.

"தப்பா பேசி இருந்தா மன்னிச்சுடுங்க.." லதா வேகமாய் சொல்ல,

"அதெல்லாம் இல்ல லதா. நீ உரிமையா என்னை கூப்பிடலையேன்ற கவலை தான் எனக்கு. சீக்கிரம் எல்லாம் சரி ஆகணும். வேற என்ன நான் சொல்ல?" என்றவர் அவள் கன்னம் வருடிவிட்டு சென்றார்.

"அண்ணி! என்ன அண்ணி என்னாச்சு? அண்ணா கோவப்பட்டாங்களா? எதுக்காக இங்க வந்திங்க? அதுவும் தனியா?" என்று பதட்டமாய் கேட்டாள் யசோதா விசாலாட்சி செல்லவும்.

சரியாய் அதே நேரம் யசோதா அலைபேசி அழைக்க, கிருஷ்ணன் தான் என எடுத்துப் பார்த்தவள் அணைத்துவிட்டு பேசிவிட்டு அழைப்பதாய் செய்தியும் அனுப்பி வைத்தாள்.

"அண்ணி!" என மீண்டும் லதா அருகில் வர,

"ஒண்ணுமில்ல யசோ. வரணும் தோணுச்சு. வந்துட்டேன். ஆமா உனக்கு யார் சொன்னாங்க?" என்ற கேள்வியில் விழித்தவள்,

"மாமா தான். இன்டெர்வியூ முடிச்சதும் கால் பண்ணினேன். இங்க இருக்குறதா சொன்னாங்க!" என்று சொல்ல,

"ஓஹ்!" என்றாள்.

"அண்ணி! அண்ணா பாவம். ரொம்ப நல்லவங்க!"

"அப்ப நான்?"

"அய்யோ அண்ணி! நீங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க. ப்ளீஸ்! நான் அப்படி சொல்லல!" என்று யசோதா சொல்லவும் புன்னகைத்தவள்,

"போதும் யசோ! சும்மாதான் சொன்னேன்!" என்று புன்னகைத்தாள்.

"ஜீவிதாவை பார்த்திங்களா அண்ணி? அண்ணா பார்த்தாங்களா? என்னாச்சு? ஏன் நம்ம வீட்டுக்கு நீங்க வரல?" என்றாள் மீண்டுமாய்.

அங்கே நடந்ததை கூறியவள், "உங்க அண்ணா பேசினதை பார்க்கணுமே! என்கிட்ட மட்டும் தான் ஆக்ரோஷமா பேச வரும் போல. அங்க குரலே வெளி வரல. கடைசியா என்னென்னவோ போட்டோ எடுத்துட்டு அந்த ஜீவிதாவையும் போட்டோ எடுத்துட்டு தான் வந்தாங்க"

"ஏன் அண்ணி?"

"என்கிட்டலாம் சொல்லுவாங்களா யசோ? அவ தான் அப்ராட் போராளே! நியாபகார்த்தமா எடுத்தாங்களோ என்னவோ?"

"நிஜமாவா?" என்று பாவமாய் யசோதா கேட்க, சிறிதாய் புன்னகைத்தவள்,

"விடு யசோ! இனி அவங்க பாடு! அடுத்து என்னனு பாக்கலாம்!"

"என்ன அண்ணி பண்ணனும்?" உடனே கேட்டாள் யசோதா.

"இனி நீயோ நானோ பண்ண என்ன இருக்கு? உன் அண்ணா தான் முடிவு பண்ணனும். வாயடைச்சு போனவர் அவர் தான். அவங்க எந்த முடிவுக்கும் நான் சம்மதம் சொல்லி தான் ஆகணும்".

"அண்ணி!"

"பிடித்தத்தை எல்லாம் கட்டாயத்துல கொண்டு வர முடியாது யசோ! எனிவே உன்னால தான் எனக்கு இப்ப ஒரு நல்லது நடந்திருக்கு. உனக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும். என்ன! இதை முன்னாடியே செஞ்சிருந்தா உன் அண்ணாவும் என்கிட்ட இருந்து தப்பிச்சிருப்பார்!"

"என்ன ண்ணி சொல்றிங்க?"

"இந்த கல்யாணத்தை தான் சொல்றேன். பிடிச்ச பொண்ணு உண்மையா இல்ல. கல்யாணம் பண்ணின பொண்ணை பிடிக்கல. பாவம் தான் உன் அண்ணா" என்றவள்,

"ஓகே இனி இதை நாம பேசி எதுவும் ஆக போறதில்ல. பாத்துக்கலாம் யசோ! நீ கிளம்பு!"

"அப்போ நீங்க?"

"அது என் கையில இல்ல டா. வேற எதுவும் கேட்காத ப்ளீஸ்!" என்று சொல்ல, எதுவும் பேச முடியாத நிலை யசோதாவுக்கு.

கண்ணபிரான் விசாலாட்சி இருவரும் யசோதாவுடன் கிளம்பியிருக்க,

"நான் இங்க இருக்கேனே தாத்தா!" என்ற லதா எந்த காரணமும் சொல்லாமல் எத்தனை நாள் என்றும் சொல்லாமல் விட, அவரவர் விருப்பப்படி அவர்கள் விழியில் விட்டிருந்தார் நீலகண்டன்.

"சின்ன பசங்க எல்லாம் வளந்துட்டிங்க.. இனி உங்க பேச்சை தானே நான் கேட்கணும்!" நீலகண்டன் சொல்ல,

"தாத்தா! நான் இங்க தங்குறது உங்களுக்கு பிடிக்கலையா?"

"நீ தனியா வந்து அதுவும் புருஷனோட ஊருக்கு போய்ட்டு நேரா இங்க வந்து தாங்குறேன்னு சொல்றியே! இதுக்கு நான் சரினு சொல்லலாமா லதா?" என்றவர்,

"ஆனா நீ விவரம் தெரிஞ்ச பொண்ணு. நல்லது கெட்டது உனக்கே தெரியும்" என்று சொல்லியவர் அதன்பின் எதுவும் கேட்கவில்லை.

யசோதாவும் உடனே கிருஷ்ணனுக்கு அழைத்து தெரிந்ததை சொல்ல,

"உன் அண்ணா என்ன சொல்வாங்க? அப்போ அக்கா லைஃப்?" என்றான் அவள் முடிவை கூறியதை கேட்டு.

"அத்தான்...."

"எவ்ளோ சாதாரணமா சொல்ற யசோ, அக்கா இப்படி சொன்னாங்கனு. இதோட சீரியஸ்னஸ் புரியுதா உனக்கு? அப்ப உன் அண்ணா வேண்டாம்னு சொன்னா?" என்று சொல்ல,

"அப்படி எல்லாம் நடக்காது த்தான். அண்ணா அப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க!"

"சொல்லிட்டா?" என்றவன் சத்தத்தில் மீண்டுமாய் ஒரு அழுகை வெடிக்கப் பார்த்தது யசோதாவிற்கு.

"என்ன மனுஷன் அவரெல்லாம்? அக்கா அவ்வளவு சாதாரணமா அவருக்கு. இங்க பாரு யசோ! எனக்கு அக்காக்கு அப்புறம் தான் யாரா இருந்தாலும். உன் அண்ணா மட்டும் எதாவது தப்பா முடிவெடுக்கட்டும் அப்ப தெரியும் நான் யாருன்னு!" என்றவன் சொல்லாமல் சட்டென வைத்துவிட, அண்ணனின் வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் கிருஷ்ணனின் இந்த கோபம் அதிகமாய் பாதித்தது யசோதாவை.

சில நாட்களாய் தனக்கே ஒரு குழப்பம் தான் என கிருஷ்ணனை நினைத்திருந்தவளுக்கு இந்த நேரம் தன் விருப்பம் என்ன என புரிய, அது புரிந்த நேரம் இப்படி அமைந்ததில் அதிகமாய் பாதித்தது அவளை.

தொடரும் நிலா..