• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு - 2

kkp10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
2
7
3
Tamil nadu
செந்தழல் நிலவே...

நிலவு - 2

குறுநாடன் ஆண்கள், கையில் கத்தி, காதில் கடுக்கன், அணிந்திருக்கும் வேட்டியின் இருமுனைகளையும், சேர்த்துப் பின் பக்கம் தார்பாச்சி போல் உடை அணிந்திருந்தனர்.

பெண்கள் புடவையின் முந்தானையை வலது தோளின் மேற்புறமாக முடிச்சிட்டுக் குறக்கட்டு முறையில் புடவை அணிந்திருந்தனர்.

பெண்கள் ஆண்களைவிட உயரம் குறைந்தவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் மானு மட்டும் அதிசயமாய் அவர்களிடையே தனித்து உயர்ந்து தெரிந்தாள்.

குறுநாடன் மரபினப் பெண்கள் ஆண்களைக் கண்டால் ஒளிந்து கொள்வர். மானுவோ சிறுவயதில் இருந்தே ஆண்கள் வில்வித்தை, சண்டைப் பயிற்சி பயிலும்போது அவர்களுடன் இணைந்து பழகி இறுதியில் அவர்களையே தோற்கடித்தாள்.

அடர் காட்டிற்குள் பெண் குழந்தைகளை அழைத்துச் செல்லாமல் இருந்தபோது, மூன்று நாட்கள் தொடர்ந்து உணவு எடுத்துக் கொள்ளாமல், காட்டிற்குள் நுழைந்தே தீருவேன் என்ற தன் முடிவில் உறுதியாய் நின்றாள்.

அவளின் வைராக்கியத்தைக் கண்டு, மாடன் வேறு வழி இல்லாமல், தன் மகளை தன்னோடு அழைத்துச் சென்றார்.

காட்டில் சுற்றும் போது கைகளில் ஆயுதம் இல்லாமல் செல்ல மாட்டாள். அவளின் நடனத்தை விடிய விடிய ரசித்துப் பார்ப்பர். அர்ப்பணிப்போடு ஆடும் அந்த தெய்வீக நடனத்தைக் கண்டு வியக்காதவர் எவரும் இல்லை.

தனித்தனியே தங்களிடம் இருந்த திறமைகளை எல்லாம் ஒருங்கே பெற்று மிளிரும் மானு அந்தக் காட்டின் அரசியாகவே அறியப்பட்டாள்.

மாடன் குடும்பத்தினர் சற்று தூரம் நடந்து சென்றதும், ஆங்காங்கே மின் விளக்குகள் ஒளிர்ந்ததைக் கண்டனர்.

பெரும் முயற்சி செய்து அரசாங்கத்துடன் போராடி அவர்களின் குடியிருப்புக்கு மின்சாரம் வாங்கி இருந்தனர். அவர்கள் வாழும் வனச்சூழ்நிலையால் கல்வியும், மருத்துவமும் அவர்களை நெருங்குவதற்கு சற்று கடினமாகவே இருந்தது.

அவர்களின் குடியிருப்பை மீறி காட்டை விட்டு வெளியே செல்லும்போது, தாங்கள் கடைபிடித்த மரபு அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் புதுமையை அதிகம் கலக்க விடாமல் பழமையிலேயே வாழ்ந்து வந்தனர்.

அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளி உலகத்தை தொடர்பு கொண்டனர். நெடுந்தூரம் பயணம் செய்து தங்கள் குழந்தைகளை படிக்க அனுப்பவோ, தங்களை விட்டு விட்டு விடுதியில் படிக்க வைக்கவோ தாய்மார்களுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. இவர்களின் எண்ணங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் எவ்வளவோ முயற்சி எடுத்தும், அவர்களை தங்கள் எல்லைக்கு அப்பாலேயே நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்த நவீன காலத்திலும் முற்றிலும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்தனர் அந்த தொல்குடியினர்.

மானு அந்த செயற்கை ஒளியில் நனைய விரும்பாமல், தன் அன்னையிடம், இருளில், சற்று உயர்ந்த இருக்கை போல் இருந்த பாறையை நோக்கி தன் சுட்டு விரலை நீட்டினாள்.

நங்கையோ தன் தலையை அசைத்துக் கொண்டு, "உன் தவத்தை வேகமாக முடித்துவிட்டு வீட்டிற்கு வா!" என்று சலித்தபடி தங்கள் வீட்டிற்கு முன்னேறினார்.

மலைஉச்சியில் அமைந்த அந்த ஒற்றை கற்பாறையில் சிலையென சமைந்து இருந்த மானுவின் மேனியில் பௌர்ணமியின் பால் கதிர்கள் பட்டுத் தெறித்து, அவளை வேறு உலகத்திற்கு பயணம் செல்ல வைத்தது. வாடைக் காற்று சில்லென்ற தாள லயத்துடன் நடுங்கவும், சிலிர்க்கவும் வைத்தது.

கால்விரல்கள் அவளின் அனுமதியின்றி மெல்லிய ஐதியைத் தட்டியது. அந்த ஸ்ருங்கார சத்தத்தில் அவளின் செவிகள் குளிர்ந்தது.

அணிந்திருந்த தண்டைகள் இதயத்தின் ஓசைக்கேற்றவாறு கீதம் இசைத்தது.

எதனையோ வரவேற்க அவளின் அனைத்து வாசல்களும் திறந்து கொண்டது.

எங்கிருந்தோ வந்த பரிமளம் கலந்த செண்பக வாசம், அவள் நாசியைத் தீண்டியதும் சட்டென்று அவள் தேகம் விரைத்தது.

எத்தனை எத்தனை வருடங்களாய் அந்த சுகந்தத்தை நுகர்கிறாள். தன்னை மட்டுமே தீண்டும் அந்த வாசத்திற்காகத் தானே அந்தக் கரும்பாறை மீது தவமிருந்தாள்.

அந்தக் காட்டில் எத்தனை முறை தேடி இருப்பாள் செண்பக மரத்தை. தங்கள் குடியிருப்பில் இல்லாத செண்பக மலரின் வாசத்தில் சுகம் கலந்த வேதனையோடு திளைத்தாள்.

கண்களில் வெந்நீர் வழிந்து, இதயத்தின் ஆழத்திலிருந்து ஏதேதோ நினைவுகள் கிளர்ந்தெழப் பார்த்தது.

மார்பின் சுவாசம் தடம்புரண்டு அதிவேகமாகத் துடித்தது. யாரோ தன்னைத் தீண்டியது போன்ற ஸ்பரிசத்தில், கண்களில் சினம் துளிர்த்தது. இடுப்பில் சொருகி இருந்த கத்தியை அவள் விரல்கள் தொட்டதும், சட்டென்று அந்த ஸ்பரிசம் விலகிப் பின் வாங்கியது.

இன்பமும், துன்பமும் ஒருங்கே அவளைத் தாக்கியதில், தரையில் மண்டியிட்டு அமர்ந்து தலையை வான் நோக்கி நிமிர்த்தி, தன்னிரு கைகளையும் நீட்டி, அருகில் இருந்த கற்களை அள்ளிக்கொண்டாள்.

அவள் அழுத்தத்துடன் கைப்பிடிக்குள் இருந்த கற்களை, தூர வீசியதும், அவை மண் துகள்களாய் மாறி தரையில் சிந்தின.

தன்னைத் துரத்தி ஆதிக்கம் செலுத்த முயலும் நினைவுகளுக்கு, அந்த முழு நிலவே சாட்சி என்று அந்த நிலவினை வெறித்துப் பார்த்தாள்.

தணலாய் அனல் வீசும் அவள் பார்வையில், அந்த நிலவுப் பெண்ணும் அமைதி காத்தாள்.

குறிப்பிட்ட சில நொடிகள் கடந்ததும், அவள் மனது தன் இயல்பை மீட்டெடுத்துக் கொண்டது. எப்பொழுதும் நடக்கும் இயல்பான விஷயம் போல், பெருமூச்சுடன் கைகளில் இருந்த மண் துகள்களைத் தட்டி விட்டு நிமிர்ந்தவளின் முகத்தில் மீண்டும் கம்பீரம் குடி கொண்டது.

நாட்கள் அதன் போக்கில் நகர, குளிரும், வெப்பமும் ஒரு சேர தாக்கிய சீதோசனத்தில், ஒருவித மர்ம நோய் அவர்களின் குடியிருப்பை தாக்கியது.

உடல் எங்கும் தகதகவென எரியும் எரிச்சலோடு, சிகப்பு நிறத்தில் திட்டுக்களும், கொப்புளங்களும் தோன்றி, அதீதக் காய்ச்சலுடன் குறுநாடன் மக்கள் அவதியுற்றனர்.

அவர்களின் கை வைத்தியங்களும், பச்சிலை மருந்துகளும் பயனளிக்காமல் சில இறப்புக்களும் நேர ஆரம்பித்தது.

மரண பீதியில், தொல்குடி மக்கள் அரண்டு போயினர். ஊர் மந்தையில், இதற்கு முடிவெடுக்க மாடன் தலைமையில் அனைவரும் ஒன்றாகக் கூடினர்.

தங்கள் கைமீறிய செயல் என்பதால் அனைவரும் மௌனம் காத்தனர்.

அவர்களின் அமைதியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது மானுவின் குரல்.

" இனியும் நேரம் கடத்துவது நல்லதல்ல. நமது குடியிருப்புக்கு நல்ல மருத்துவரை வெளியில் இருந்து அழைத்து வரவேண்டும்" என்று கட்டளைப் போல் ஆணையிட்டாள்.

"முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரைத் தவிர யாருக்கும் இல்லை. நாம் வணங்கும் ஸ்ரீ நீலாயதாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தால், அவளின் மனம் குளிர்ந்து, நம்மை பிடித்திருக்கும் இந்த பிணிகள் எல்லாம் நீங்கிவிடும்" என்றான் கடம்பன்.

ஆண்கள் அனைவரும் கடம்பன் கூறுவதை ஆதரித்து தலையசைத்தனர். பெண்களோ கன்னங்களில் தங்கள் கைகளை தாங்கிக் கொண்டு சோகமே உருவாய் அவர்கள் கூறப்போகும் முடிவிற்காய் காத்திருந்தனர்.

" நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்த அனைத்து மருத்துவ முறைகளும் தோல்வி அடைந்த நிலையில், நம் தொல்குடியினரின் உயிரைக் காப்பாற்ற அந்த அம்மனிடம் உதவி கேட்பது போல், வெளி உலகத்தாரிடமிருந்தும் உதவி கேட்கலாமே" தன் வாதத்தில் பிடிவாதமாய் நின்றாள் மானு.

" அதற்கு நம் அம்மன் ஒரு காலமும் சம்மதம் தர மாட்டாள்" கடும் அதிர்வுடன் வந்தது கடம்பனின் வார்த்தைகள்.

" சரி! அப்படி என்றால் முடிவை அந்த அம்மனிடமே கேட்டுப் பார்க்கலாம்" என்றாள் மானு.

சிறு குழந்தைகளும் அந்த நோயின் தாக்கத்தில் அவதியுருவதைப் பார்த்த மாடன், முடிவை அம்மனின் பாதத்தில் சமர்ப்பிக்கலாம் என்று முன் வந்தார்.

அனைவரும் ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் குகை முன்பு, வேதனையுடனும், கண்ணீருடனும் நின்றிருந்தனர்.

இரண்டு சிறு வாழை இலைகளில் ஒன்றில் அடர் சிவப்பு நிற வெட்சிப் பூவும், மற்றொன்றில் வெண்மை நிற வெட்சிப் பூவும் மடித்து அம்மனின் பாதத்தில் வைத்திருந்தனர்.

" மானு! என்றைக்கும் வெற்றி உன் பக்கம் தான் என்று நினைக்காதே! நம் தந்தைக்குப் பிறகு தலைவர் பதவி எனக்குத்தான். ஆண்களின் முடிவை ஏற்று நடக்கப் பழகு" அடிக்குரலில் கடம்பன் தன் தங்கையை மிரட்டினான்.

உதட்டுச் சுழிப்பில் ஏளனத்தை சிதற விட்டு, "எங்களுக்கு நீ ஒரு நல்வழியை காட்டியே தீர வேண்டும்!" என்று அந்த அம்மனை தீர்க்கமாய் பார்த்தாள்.

சிறு குழந்தை ஒன்று மடித்து வைத்த அந்த வாழை இலைகளில் ஒன்றினை எடுத்து மாடன் கையில் கொடுத்தது. பயபக்தியுடன் அதை கையில் பெற்றுக் கொண்ட மாடன், கண்மூடி அந்த அம்மனை பிரார்த்தித்து விட்டு அனைவர் முன்னிலையிலும், மடித்து வைத்த அந்த வாழை இலையைப் பிரித்தார்.

அடர் சிகப்பு நிற வெட்சிப் பூவை பார்த்ததும், கடம்பனின் முகம் அவமானத்தில், கோபத்தில் அந்தப் பூவின் நிறத்தை பூசிக் கொண்டது. உடன்பிறந்தவளாக இருந்தாலும் ஒரு பெண்ணிடம் தோற்றது அவனுக்கு மிகுந்த அவமானத்தை தந்தது. யாரையும் பார்க்க பிடிக்காமல் விறுவிறுவென அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

மாடனோ, தன் மகளைப் பார்த்து, "என் குலசாமியையே உன் உருவத்தில் பார்க்கிறேன் தாயீ. நம்மை நம்பி இருக்கும் ஜனங்கள் நன்றாக இருக்க வேண்டும். நம் குடியிருப்புக்கு நல்ல மருத்துவரை அழைத்து வர ஏற்பாடு செய்கிறேன்" என்றவர் அதற்கான உத்தரவுகளை அடுத்தடுத்து பிறப்பித்தார்.

"நீயும் எங்களோடு வருகிறாயா தாயீ? " என்றார் தன் மகளைப் பார்த்து.

அப்பொழுது அவளின் பாதங்கள் தரையோடு ஒட்டிக்கொண்டு வேர் விட்டதைப் போல் அடுத்த அடி எடுத்து வைக்க, அசைய மறுத்தது.

தன்னால் இந்த மலையை விட்டு வெளியே செல்ல முடியாது என்பதை உணர்ந்து கொண்டவள், மறுப்பாக தன் தலையை அசைத்தாள்.

தங்கள் மலைப் பகுதியில் இருந்து நகர்ப்புறத்திற்குச் சென்று, தங்களுக்கு அவசர கால உதவி தேவைப்படுவதாக அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்தனர்.

வெகு விரைவில், சிறந்த மருத்துவர் குழுவை அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் கூறினர். உடனடியாக தங்களோடு, ஒரு மருத்துவர் வரவேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.

அவர்கள் மிகவும் பழமை வாய்ந்த, தொல்குடி மரபினர் என்பதால் பிரச்சனை வெளியில் தெரிந்தால் பூதாகரமாக கிளம்பும் என்பதை உணர்ந்து கொண்ட அதிகாரிகள், அவர்களுடன் அனுப்பி வைப்பதற்காக ஒரு மருத்துவக் குழுவை ஏற்பாடு செய்ய ஆரம்பித்தனர்.


நவீன வசதிகள் ஏதும் இல்லாத, அடர் வனத்திற்குள் நுழைய எந்த மருத்துவருக்கும் விருப்பம் இல்லை. அவர்கள் கூறிய அறிகுறிகளை வைத்து அது ஓர் தொற்றுநோய் என்பதை அறிந்து கொண்டனர். மேலும் நோயின் தாக்கம் குறையும் வரை அங்கே தங்க நேரிடும் என்பதை உணர்ந்து கொண்டவர்கள், பல்வேறு காரணங்களை அடுக்கி அதிலிருந்து நழுவப் பார்த்தனர்.

"டீன்! நம் குழுவில் இருந்து எந்த மருத்துவரும், அந்தக் காட்டிற்குள் செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை. அப்படி சென்றால் உயிரோடு திரும்பி வருவோமா என்று அனைவரும் பயப்படுகின்றனர்.
இப்பொழுது நாம் யாரேனும் செல்லவில்லை என்றால் நம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விடுவார்கள். இப்பொழுது நாம் என்ன செய்வது?" என்று தலைமை மருத்துவரிடம், மூத்த மருத்துவர் ஆலோசனை கேட்டார்.

"ஏன் இல்லை? அந்தக் காட்டிற்குள் நுழைய ஒரு திறமையான டாக்டர் நம்மிடையே இருக்கிறான்" என்றார் டீன் சிரித்துக் கொண்டே.

"யாரு டீன்?" ஆர்வம் தாங்காமல் அந்த டாக்டர் கேட்டார்.

தன் முகத்தில் அணிந்திருந்த மூக்கு கண்ணாடியை கழட்டி, உதடு குவித்து காற்றை வெளியேற்றி, கண்ணாடியில் ஒட்டி இருந்த தூசு துகள்களை நீக்கிக் கொண்டே, "டாக்டர் மாறன்!" என்றார் டீன்.

"வாட்?" அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டார் அந்த மூத்த மருத்துவர்.

"எஸ்... டாக்டர். மாறன்!" அழுத்தம் திருத்தமாய் மீண்டும் சொன்னார் டீன்.

"டாக்டர் மாறன் தன்னுடைய சர்வீஸில் பலமுறை மெமோ வாங்கி இருக்கிறார் டீன். இப்போ கூட சஸ்பென்ஷன்ல தானே இருக்கார்" எச்சிலை விழுங்கிக் கொண்டு சொன்னார் அந்த மூத்த மருத்துவர்.

"எஸ்..." வெகு இயல்பாய் அதனை ஒப்புக்கொண்டார் டீன்.

"டீன்! அவன்... ம்... க்கும்... அவர் பயங்கரமான கோபக்காரர், அவரின் கை பேசி விட்டுத்தான், வாயே பேசும். பெண்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டார்"

"ம்... வேற..." என்று டீன் மேலே பேசும் படி ஊக்குவித்தார்.

"அது... அது... அவர் நினைத்தால் தான் நோயாளியை பிழைக்க வைப்பார். இல்லையென்றால்...."

" போட்டுத் தள்ளி விடுவார். அப்படித்தானே டாக்டர்!" என்றார் டீன்.

" அது மட்டும் இல்லை. பெண்கள் விஷயத்தில்...."

" ஏன் டாக்டர் மென்று விழுங்குகிறீர்கள். டாக்டர் மாறனின் வசீகரத்தில் பெண்களாகவே அவனிடம் செல்லும்போது, அவனை மட்டும் குறை சொல்லி என்ன பயன்? அவன் ஒரு நல்ல விளையாட்டு வீரனும் கூட. அவன் விளையாடிய பல விளையாட்டு தப்பாகிப் போனது. ஆயக்கலைகளில் அவன் அறியாத கலை எது?" என்றார் டீன்.

" குறுநாடன் மிகவும் கட்டுக்கோப்பானவர்கள். பெண்களை தெய்வமாய் மதிப்பவர்கள். அங்கு சென்று நம் டாக்டர் மாறன் ஏதாவது செய்து வைத்தால்... அவரை அவர்கள் உயிரோடு விடமாட்டார்கள்"

"ஓ... டாக்டர் மாறனை அனுப்பும் வரை தான் நம் பொறுப்பு. அங்கே நிகழ்வதற்கு அவர்கள் தான் பொறுப்பு " என்று தன் நெற்றியில் ஓரத்தில், மாறன் ஏற்படுத்திய காயம் தந்த தழும்பை மெதுவாய் வருடி, வினயமாய் சிரித்தார் டீன்.

"அப்போ டாக்டர் மாறன் தான் போகிறார் என்று முடிவு எடுத்து விட்டீர்களா?"

"ம்..."

" அவருடன் நம் மருத்துவ குழுவில் வேறு யாரும் செல்கிறார்களா டீன்? "

" டாக்டர் மாறன் ஒரு தனிமை விரும்பி. தனியாகவே செல்லட்டும்"

" ஒருவேளை டாக்டர் மாறன் அங்கே செல்ல மறுத்தால்.... "

" அவரின் மருத்துவர் என்ற அங்கீகாரம் ரத்து செய்யப்படும்" என்று கண்கள் மலர சிரித்தார் டீன்.

நிலவு மிளிரும்...
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
அடுத்தது அரசனா அரசியா போட்டி ஆரம்பித்துவிட்டது போலவே 🤭🤭🤭 அடேய் கடம்பா ம், தங்கயிடம் தோற்ற பெருமை உனக்கு வேண்டும் போல🤣🤣🤣

டாக்டர் மாறனின் விவரங்கள் எல்லாம் விவகாரமாக இருக்கின்றதே 🤨🤨🤨. இது அநியாயம் ஆத்தரே, எங்கள் வீரமங்கை மானுவுக்கு இப்படியா ஒருவன் கிடைக்க வேண்டும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

டீன்னிற்கு மாறனை அங்கு அனுப்புவதில் ஏன் இத்தனை ஆர்வமோ 🤔🤔🤔
 
  • Like
Reactions: fajeeha mumthaj

fajeeha mumthaj

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 14, 2023
80
4
18
from; srilanka,
அண்ணனும் தங்கையும் நன்றாக முட்டிக் கொள்கிறார்களே..

என்னப்பா மாறன் கேரக்டரை சொல்லி இப்படி பயம்புறுத்துறீங்க🙄
 
  • Love
Reactions: Shimoni

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
செண்பக வாசம் தீண்டியதும்
செங்கனலாய் கண்ணீர் சிந்தும் நிலாப் பெண்ணே....
சிறந்த கருத்தை முன் நிறுத்தி
செயல் படும் காட்டு ராணி.....
காட்டு ராணியை
களவாட வரும்
காளையரசன்.....மருத்துவன்
மங்கையின் தவிப்பை தீர்ப்பானா இல்லை மீண்டும்
தவிக்க விடுவானா????
 
  • Love
Reactions: Shimoni