• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு 23

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
789
597
93
Chennai
அத்தியாயம் 23

லதா தன் கணவனோடு வீட்டிற்கு வந்து பத்து நாட்களுக்கு மேல் கடந்திருந்தது.

உலகமே அழகானதை போல அத்தனை இனிமையான நாட்கள் தான் கடந்த இந்த சில தினங்கள் எல்லாம் லதாவிற்கு.

உள்ளங்கையில் வைத்து தாங்கவில்லை மாறாய் அவள் உள்ளங்கைகளுக்குள் தன் உலகத்தை கொண்டு வந்திருந்தான் கண்ணன்.

எந்த ஒரு விஷயத்தையும் அவளிடம் பகிராமல் முடிவெடுக்க அவன் முனைந்தது இல்லை.

இதோ ஒரு வாரம் கழித்து இப்பொழுது தான் நான்கு தினங்களாக மீண்டுமாய் தன் தாத்தனின் பள்ளிக்கு மீண்டும் கற்று தர செல்ல ஆரம்பித்து இருந்தாள்.

"எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல லதா. கண்ணாக்காக நான் போட்ட கண்டிஷன் அது. இப்ப அவனே உனக்கு இவ்வளவு துணையா இருக்கும் போது வேறென்ன எனக்கு வேணும்? நீ சந்தோசமா போய்ட்டு வா!" என்று சொல்லிவிட்டார் விசாலாட்சி.

முடிந்த நேரங்களில் தானே கொண்டு விடும் பழக்கத்தையும் நேரத்தையும் என கண்ணன் பார்த்து அவள் உடன் இருக்கும் நேரத்தையும் அதிகரிக்க செய்தான்.

கூடவே குடும்பத்துடன் அதிகமாய் நெருங்கி இருந்தான். இது தற்போது வந்த மாற்றம் அன்றி ஏற்கனவே கலகலப்பனாவன் தான். இடையில் வந்த மாற்றம் தான் திருமணமான புதிதில் இருந்த கண்ணன்.

காதல் என்பதை தாண்டி லதாவின் மேல் அன்பு அதிகம் கண்ணனுக்கு. அதை தன் செயலில் அவன் காட்டிக் கொண்டிருக்க,

"இதெல்லாம் ஓவர். இப்படி எல்லாம் உடனே சேஞ்ச் ஆக கூடாது!" என்று லதாவே கிண்டல் செய்ய,

"அண்ணி! இதான் பழைய அண்ணா! இப்படி தான் முன்னாடி எங்ககிட்ட இருந்தாங்க. இப்ப உங்களால தான் மறுபடியும் இப்படி கிடைச்சிருக்காங்க!" என்றாள் யசோதா.

"என்னவோ! ஆனா ஒண்ணு மட்டும்!" என்று லதா கூற, விசாலாட்சி, கண்ணபிரான், யசோதாவோடு கண்ணனும் என்ன என அவளைப் பார்க்க,

"இப்படியே எப்பவும் இருங்க. மாறிடாம. இதுதான் உங்களுக்கு நல்லாருக்கு!" என்றதில் அனைவருக்குமே திருப்தி.

"இப்படியேவா இருக்கணும்?" காதருகில் வந்து சொல்லிவிட்டு கண்ணன் சென்றுவிட, விழி விரிந்து பார்த்தவள் சுற்றி இருந்தவர்களை பார்த்தாள்.

அனைவருமே கவனித்தும் கவனியாதவர்களாய் ஒவ்வொரு வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களாய் அமர்ந்திருக்க, திரும்பிப் பார்த்து கணவனை முறைக்க, அவன் புருவம் உயர்த்தி கண் சிமிட்டி செய்த சேட்டையில் திரும்பிக் கொண்டாள் லதா.

இருவரும் இந்த உறவினை ஏற்று இணைந்து நண்பர்களாகி அனைத்தையும் பகிர்ந்து உறவுக்குள் கூடி வாழ்வில் மகிழ்ச்சி கொண்டிருந்தாலும் கணவன் மனைவியாய் இன்னும் அவர்களுக்குள்ளான வாழ்வு அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை.

அதை தான் சொல்லி செல்கிறான் என தெளிவாய் புரிந்தது லதாவிற்கு.

வேண்டாம் வேண்டும் என்று எதுவும் சொல்லாமல் தானாய் நிகழும் காலத்திற்காக இருவருமே அதைப் பற்றி இதுவரை பேசிக் கொள்ளவில்லை.

அவன் கட்டாயத்திற்கு என அவளுக்கு இந்த திருமணம் போல இனி எதுவும் வேண்டாம் என்ற எண்ணத்தில் கேள்வியாய் கூட இதைப் பற்றி பேசி இருக்கவில்லை.

ஆண் அவனே கேளாமல் தான் என்ன பேச என்பதை போல இருவருமே ஒருவரை ஒருவர் ரசித்து தவித்து தனித்து தங்களுக்குள் தங்களை காதலிக்க துவங்கி இருக்க, அந்த விஷயம் பெரிதாய் தெரியவில்லை என்று தான் லதா நினைத்திருந்தாள்.

இத்தனை நாட்கள் கழித்து இன்று அவனே அதுவும் இத்தனை பேர் இருக்கையில் இப்படி சொல்லி செல்ல, அதற்கே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க துவங்கியது லதாவிற்கு.

"சித்தி சித்தப்பா ஒரு சின்ன பொண்ணுனு பக்கத்துல வச்சுட்டு என்ன பேச்சு பேசுறீங்க நீங்க?" இரவு அறைக்குள் வந்த லதா வந்ததும் கணவனை கேட்க,

"ஓஹ் அப்ப யாருமில்லாத நேரமா கேட்ருக்கணுமா லதா?" என்று அதையும் காதருகில் வந்து புன்னகைத்து கண்ணன் கேட்க, திகைத்தவள் அப்பொழுது தான் தானே இதை கேட்டிருக்க கூடாதோ என்று சிந்தித்தாள்.

"இல்ல இல்ல. அப்படி சட்டுனு கேட்டுட்டீங்க?" என்றவள் உளறளில் இதழ் மடித்து சிரித்தவன்,

"இதுவே லேட்னு உனக்கு புரியுதா?" என்றான் சோஃபாவின் பின் சென்று நின்று சாய்ந்தபடி.

பேச்சச்சு போனவள் வழி தெரியாத பிள்ளையாய் அவனுக்கு முதுகு காட்டி நிற்க, "உனக்கு சுத்தமா அந்த பக்கமா உன் மைண்ட் போகவே இல்லை இல்ல!" என்ற கேள்வியில் அவள் தலை தன்னைப் போல ஆமாம் என ஆடியது.

"ம்ம்! தினமும் நீ பக்கத்துல வந்து ஏதாவது சொல்லி சிரிக்கும் போதெல்லாம் மூச்சடக்கி கொஞ்சமும் நீ என்ன சொன்னனு தெரியாம தலையை ஆட்டி என்னை நானே மறைச்சு வைக்காம அப்பவே உன்கிட்ட.... அட்லீஸ்ட் பேசியாச்சும் இருந்தா இவ்வளவு டியூப்லைட்டா இருந்திருக்க மாட்டல்ல?" என்றவன் பேச்சில் தான் தன்னைப் போல அவனும் சாதாரணமாய் இருக்கிறான் என்று நினைத்தது எத்தனை தவறு என புரிந்தது லதாவிற்கு.

ஆனால் ஒன்றை லதா ஒத்துக் கொள்ள முடியவில்லை. காலையில் அவன் சொல்லி சென்ற பின் அவள் மனதின் திசை மாறி இருந்ததை தான். அவனே தானே கலைத்துவிட்டது.

"என்ன பதிலை காணும்?"

"நான் கேட்டதே தப்பு. நான் தூங்க போறேன் போங்க!" என்றவள் முகம் மாறாமல் இருக்க போராடி அதை அவனுக்கு காட்டாமல் இருக்க திண்டாடினாள்.

"தப்பா? இது தான் லதா தும்மறதுக்கு சரியான நேரம்!" என்ற பதிலும் அவன் குரலும் அவளுக்கு குளிரை பரப்பியது.

"என்ன நீங்க? சாதாரணமா பேசுங்க முதல்ல?" லதா சொல்ல,

"நான் சாதாரணமா பேசலைன்னு உனக்கு புரியுது தானே? புரியனும்னு தான் நான் பேசினதும்!" என்றவனை,

'அவ்வா!' என வாயில் கைவைக்காத குறையாய் நினைத்தாலும் திரும்பிப் பார்க்கும் தைரியம் எல்லாம் இல்லை.

அலைபேசி சத்தம் எழுப்ப, "ப்ச்!" என்று கண்ணன் சலித்துக் கொள்ள, "ஹப்பா!" என்றொரு பெருமூச்சு அவளுக்கு.

சத்தமிட்டு சிரித்துவிட்டான் கண்ணன் அவள் செயலில். அதில் அவனை திரும்பி முறைத்தவள் தன் தலையில் தானே தட்டிக் கொள்ள, பால்கனிக்கு சென்று நின்றபடி அலைபேசியில் பேசி வந்தவன் அதை லதாவிடமும் கூறினான்.

"என்ன?" என அவள் அதிர,

"எதுக்கு இவ்வளவு ஷாக்?" என சாதாரணமாய் சொல்லி அவளருகில் அமர்ந்தான்.

"இதெல்லாம் எதுவும் வேண்டாம். என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? அதான் நானே சொல்றேன் இல்ல? என்ன பிரச்சனை உங்களுக்கு?"

"இது தான் பிரச்சனை. இது சால்வ் ஆனா தான் எனக்கு என்மேல முதல்ல கான்பிடென்ஸ் வரும்!"

"என்னங்க நீங்க?"

"லதா ப்ளீஸ்! எவ்வளவு ஸ்மூத்தா நம்ம பாண்டிங் இருக்க வேண்டியது? ஆனா எவ்வளவு மன கஷ்டம்? எல்லாம் யாரால? அவ ஒருத்தியால. அவளை எப்படி சும்மா விட முடியும்?"

"அதுக்காக பத்து நாள்ல மொத்த பணத்தையும் கேட்டா அவ என்ன பண்ணுவாங்க? அவ மேரேஜ் டைம் வேற!" என்றாள் அவனுக்கு புரிய வைக்க வேண்டி.

"அது என் ப்ரோப்லேம் இல்ல லதா. லாயர்கிட்ட பேசி லாயர் அவகிட்ட பேசி இருக்காங்க. ஆனா அவ என்கிட்ட தான் பேசனும்னு சொல்லி இருக்கா. அவகிட்ட பேச எனக்கு இனி எதுவும் இல்ல"

"ஆனா அவங்க அம்மா...."

"அதுக்காக தான் இதை கோர்ட் கேஸ்னு இல்லாமல் பேசி முடிக்க டைம் கேட்ருக்காங்க. என்கிட்ட பேச முடியலைனதும் வேற வழி இல்லாம லையார்கிட்ட சொல்லி இருக்கா அந்த அமௌன்ட்டை அப்படியே தர்றதா!"

"சரினு விட வேண்டியது தானே?"

"என்ன லதா ஈசியா சொல்ற? அவ விருப்பப்படி விட்டு அவ எப்ப குடுத்தாலும் வாங்கிக்க நான் என்ன பிச்சையா கேட்குறேன். நீ சொன்ன மாதிரி அவ அம்மாக்காக இதை நான் கேஸ் பைல் பண்ணல. ஆனா அவ இஷ்டத்துக்கு எல்லாம் அமௌன்ட் தர முடியாது. எனக்கு டென் டேஸ்ல வேணும்!" என்றான் முகத்தை இறுக்கமாய் வைத்து.

அதற்குமேல் என்ன சொல்வதென லதா அமைதியாக,

"ரொம்ப யோசிக்குற!" என்றான் அவள் முகம் பார்த்து.

"சரியா தப்பானு யோசிக்குறேன்"

"ம்ம் யோசிச்சு சொல்லு. நீ சொல்றதை நான் பண்றேன்!" என்றான் அசையாமல் பார்த்து.

"நிஜமாவா?" என்று லதா சந்தேகமாய் பார்த்து கேட்க,

"ம்ம்!" என்றவன் பார்வை அவள் முகத்தை விட்டு அசையவில்லை இன்னமும்.

யோசித்தபடி இருந்தவள் கண்ணத்தில் விழுந்த அழுத்தம் அவளை மொத்தமாய் மறக்க வைக்க போதுமானதாய் இருந்தது.

"இப்படி முத்தத்துக்கே ஸ்டன் ஆகி நிக்கிறோம். இத்தனை நாளா!" என்றவன்,

"இன்னொன்னு!" என்று சொல்லி அவள் சுதாரிக்க கூட நேரமில்லாத நிலையில் மற்றொரு கண்ணத்தில் இன்னும் சில நொடி அழுத்தம் கொடுத்து முத்தமாய் கொடுத்திருக்க, என்ன பேசினோம் என்பதோடு எங்கே இருக்கிறோம் என்று கேட்கும் நிலை லதாவிற்கு.

"இது ஆரம்பமா இருக்கட்டும் ஸ்வீட் கேர்ள்! இனி தினமும் கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சிக்கலாம்!" என்றவன் இன்னமும் சுயநிலை வராதவளை தன் அருகில் சாய்த்து தட்டிக் கொடுக்க, முற்றிலும் மறந்து போன நிலை அவளது.

*****************************

"ஆமா கிருஷ்ணா. தாத்தா கூட அவங்க போயிருக்காங்க. நீ என்ன பண்ற?" லதா அலைபேசியில் கேட்க,

"சாப்பிட போறேன் க்கா. இப்ப தான் முடிஞ்சது ஆபீஸ்!" என்றான் கிருஷ்ணன்.

"நாங்களும் இப்ப தான் சமைக்குறோம்!" என்று லதா சொல்லவும்,

"ஓஹ்! ரமா ஆச்சி இருக்காங்களா?" என்றான்.

"இல்ல டா. ஆச்சியோட பொண்ணுக்கு பிரசவம். அங்க போயிருக்காங்க! நானும் யசோவும் தான் பார்த்துட்டு இருக்கோம்!" என்று லதா கூற, கூர்மையாய் அவன் பதிலுக்கு காத்து அமைதியாய் நின்றாள் யசோதா.

யசோதா, கண்ணன், லதா மூவரும் நீலகண்டன் வீட்டிற்கு வந்திருந்தனர்.

"சரி க்கா. அப்போ பாருங்க நான் அப்புறமா பண்றேன்!" என்று சொல்லி அவன் வைத்துவிட, இங்கே லதா அலைபேசியை காதில் இருந்து எடுக்கவுமே புரிந்து கொண்டவள் மனம் இன்னும் கணமானது.

மூன்று மாதங்கள் கடந்துவிட்டது கிருஷ்ணன் யசோதா பேசி. அன்று யசோதா கோபமாய் வைத்தபின் இதுவரை அவளுக்கு கிருஷ்ணன் அழைக்கவே இல்லை.

அவ்வபோது லதா பேசும் போது அருகில் இருந்தாலும் ஒரு வார்த்தை இவளைப் பற்றி அவன் கேட்காததில் நாளுக்கு நாள் அவன் மேல் அத்தனை கோபம் கூட கூடவே அவனை தேடவும் ஆரம்பித்தது அவள் மனம்.

ஆனாலும் அவனிடம் அவள் பேசவில்லை. அத்தனை கோபம். அவ்வளவு பேசினானே! அவனுக்கு தெரியாதா தன்னை? ஆனாலும் தவிர்க்கிறான் தானே? என்று நினைக்கையில் கண்ணீரும் சேர்ந்து தான் வரும்.

தொடரும் நிலா..