• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு 7

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 7

நீண்ட நேரம் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த லதா பின் சுத்தமாய் உறக்கம் கண்களை எட்டாது என தெரிந்த நொடி எழுந்து அறையில் இருந்து வெளிவந்துவிட்டாள்.

மனம் முழுதும் குழப்பம் சூழ்ந்திருக்க, எதையும் யோசிக்கவும் முடியவில்லை. யோசித்து பயனும் இல்லை எனும் நிலை.

ஆகப்பெரும் கவலை இப்பொழுது அவளுக்கு அவள் கணவன் தான். கணவன் மட்டும் தான்.

கணவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றால் கூட என்றோ ஒரு நாள் பிடித்தம் வரும் என்று காத்திருக்கலாம். இன்னொரு பெண்ணை பிடித்து இன்னமும் அவளோடு பேசிக் கொண்டிருப்பவனை நினைத்து கவலை கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அந்த பெண்ணோடு அலைபேசியில் அவன் பேசியது. இரவு அதே பெண்ணின் பெயரில் பணம் சென்ற செய்தி என வெகுவாய் குழம்பி சோர்ந்து போனாள்.

"இங்க என்ன பண்றீங்க அண்ணி? தூங்கலையா?" என்று யசோதா வர,

"தூக்கம் வர்ல யசோ! நீ தூங்கல?" என்று லதா கேட்க,

"தண்ணி வேணும். அதுக்காக தான் வந்தேன்!" என்றாள் யசோதா.

"இரு நான் கொண்டு வர்றேன்!" என்று லதா சென்று எடுத்து வர,

"நானும் கம்பெனி கொடுக்கவா அண்ணி? இல்ல டிஸ்டர்ப்பா இருக்கும்னா நான் கிளம்பிடுறேன்!" என்று லதா கேட்கவும்

"அதெல்லாம் இல்லை யசோ. சும்மா தான் யோசிச்சுட்டு இருந்தேன். உட்காரு" என்றாள் லதா.

"அண்ணா தூங்கிட்டாங்களா?"

"ம்ம்!"

"எதாவது பிரச்சனையா அண்ணி? உங்களுக்குள்ள?" என்ற யசோதா தயங்கியே கேட்க,

"அதெல்லாம் ஒண்ணுமில்ல!" என்றால் லதா சாதாரணமாகவே.

'இவளிடம் கேட்கலாமா?' என்றொரு எண்ணம் வேறு லதாவிற்குள். ஆனாலும் என்னவென்று எப்படி என்று யோசித்து அமைதியாகி இருந்தாள்.

இந்த நேரத்தில் தனியே அண்ணியை விட்டுவிட்ட அண்ணனை எண்ணி குழப்பமாய் யசோதா ஒருபுறமும் சிந்தித்து இருந்தாள்.

"உங்க அத்தை விசாலாட்சி.. அவங்க உங்க அப்பாவோட தங்கச்சி தானே?" என்று ஆரம்பித்து வைத்தாள் லதா.

"ஆமா அண்ணி! அப்பாவோட சொந்த தங்கச்சி. அத்தைனு கூப்பிடுவோம். ஆனா அவங்க தான் எங்களுக்கு அம்மா. ரொம்ப நல்லவங்க!" என்றாள் யசோதா.

சிறிதாய் ஒரு குற்ற உணர்வு லதாவிற்கு. கண்ணன் கோபமாய் பேசியதில் தானும் தேவை இல்லாமல் விசாலாட்சியை இழுத்து பேசி இருக்க கூடாதோ என்று.

ஆனாலும் அவர் செய்தது எப்படி சரி ஆகும் என்று உடனே தோன்றாமல் இல்லை. தேவைக்காக தான் இந்த திருமணம் என்றாலும் அப்படி என்ன தன் கனவு என்று சொல்லிய பின்பும் அதை தூக்கி போட சொல்லிய அந்த திமிர் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை விசாலாட்சியை பற்றி நினைக்கையில்.

"அத்தைக்கு அண்ணன்னா உயிரு. தீஷா அண்ணியை விட அண்ணாவை தான் அத்தைக்கு ரொம்ப பிடிக்கும்!" என்று யசோதா தொடர, கவனத்தை அவளிடம் கொண்டு வந்தாள் லதா.

"மாமாவும் ரொம்ப ஸாஃப்ட். தீஷா அண்ணி இருக்குற வரை ரொம்ப ஜாலியா இருக்கும் வீடு. அவங்க மேரேஜ்க்கு அப்புறம் கொஞ்சம் அமைதியான பீல் எனக்கு. அப்புறம் இப்ப நீங்க வந்திருக்கிங்க!" என்றாள் புன்னகைத்து.

"அண்ணாவும் இவ்வளவு அமைதி எல்லாம் இல்லை. இப்ப கொஞ்ச நாளா தான்!" என்றதும்,

"கொஞ்ச நாளா ன்னா?" என கேட்டுவிட்டாள் லதா.

"கொஞ்ச நாளான்னா.. சரியா சொல்ல தெரில. ஒரு ஒன்னு ரெண்டு வருஷமா. அதுக்கு முன்னாடி எல்லாம் என்னோட தீஷா அண்ணியோடனு ஜாலியா தான் பேசுவாங்க. அப்புறம் இப்ப என்னவோ அவங்க ஆபிஸ் ஒர்க்னு ஒரு மெச்சுடுரிட்டி வந்துடுச்சு போல!" என்று சொல்ல,

'அப்ப தான் அந்த ஜீவிதா வந்திருப்பாளோ?' என்று தானாய் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.

"அதுவும் இப்ப ரீசண்டா ஒன்னு ரெண்டு மாசமா ரொம்ப சைலன்ட். என்னன்னா என்னனு தான் பேசுறாங்க. பழைய கண்ணா ண்ணாவை ரொம்ப மிஸ் பண்றேன்!" என்றும் யசோதா சொல்ல,

'தங்கைக்கு கூட நேரம் செலவிடாமல் அப்படி என்ன அழுத்தம்?' என்று நினைத்த லதா,

"இனி கொஞ்சம் கொஞ்சமா பழைய அண்ணாவை கொண்டு வந்திடாலாம் ஓகே?" என்று கேட்டு யசோதா முகத்தில் மலர்ச்சியை கொண்டு வந்திருந்தாள்.

சொல்லியது என்னவோ எளிதான வார்த்தை தான். ஆனால் மனமோ 'உன்னையே அவன் ஏற்பதாய் தெரியவில்லை. இதை நீ சொல்கிறாயா?' என கேட்காமல் இல்லை.

அடுத்த நாள் காலை எழுந்த கையோடு, "எத்தனை மணிக்கு கிளம்பனும்?" என்று கேட்ட கணவனானவனை முடிந்த மட்டும் முறைத்து லதா நிற்க,

"எனக்கு என் வீட்டுக்கு போகணும். நீ என்ன நினைக்குறனு எல்லாம் யோசிச்சு யோசிச்சு என்னால பேச முடியாது. நான் ரெடியாகி வர்றேன். கூட வர்றதா இருந்தா உன் விருப்பம்" என்று சொல்லி அவன் கிளம்ப தயாராக, அத்தனை அத்தனை எரிச்சல் அவன் பேச்சினில் லதாவிற்கு.

"என்ன வாழ்க்கை இது?" என மூன்றே நாட்களில் முன்னூறு முறை நினைக்க வைத்துவிட்டான்.

லதா வெளியே வரும் பொழுது யசோதா, கிருஷணன் என நீலகண்டனோடு பேசியபடி சாப்பிட அமர்ந்திருக்க,

"உன்னை யாரு க்கா சமையல் எல்லாம் செய்ய சொன்னது? ஆச்சி வருவாங்கனு சொன்னேன்ல? போதாதுக்கு விடியும் முன்ன எல்லாருக்கும் முன்னாடி எழுந்து செஞ்சு வச்சாச்சு!" என்று கிருஷ்ணன் முறைக்க,

"அதிக சந்தோசம், அதிக கோபம், அதிக குழப்பம், அதிக கவலை... இப்படி எது வந்தாலும் தூக்கம் வராதாம் கிருஷ்! எனக்கும் தூக்கம் வர்ல. அதான் சீக்கிரமே எழுந்துட்டேன். என்ன பண்றதுனு தெரில. சரி சமைக்கலாம்னு தோணிச்சு!" என்று எடுத்து வைக்க,

"அது சரி! அப்ப இதுல நீங்க எந்த கேட்டகரி?" என்றாள் யசோதா.

"வேற என்ன? தாத்தாவை விட்டுட்டு நான் கிளம்பணுமே இன்னைக்கு." என்று கூறி,

"எப்ப கிளம்புறோம்?" என்றாள் பொதுவாய்.

"அண்ணா என்ன சொன்னாங்க அண்ணி?" என்ற யசோதாவிற்கு,

"அவங்க எதுவும் சொல்லலையே!" என்று லதா கூற, நீல கண்டனோடு கிருஷ்ணனுமெ கேள்வியாய் பார்த்தனர் லதாவை.

இங்கிருந்த வரைக்கும் தான் பார்த்த வரைக்குமே என கண்ணன் லதா இருவரும் அன்னியோன்யமாய் என்ன சிறுசிறு சாதாரண வார்த்தைகளை கூட பேசி பார்க்கவில்லையே.

கண்ணன் அங்கே லதாவின் அறையிலேயே தான் இருக்கிறான் அவ்வபோது வெளிவருவதை தவிர்த்து. லதா இரவு தூங்க சென்றதோடு சரி.

இப்பொழுது இருவருமே அருகே இருக்கும் யசோதாவை நினைத்து மௌனம் காக்க,

"ரொம்ப கவலையா இருந்தா சொல்லுங்க அண்ணி.. தாத்தாவை நம்மோடயே கடத்திட்டு போயிடுவோம். அத்தான் வேற இன்னும் கொஞ்ச நாள்ல பறந்துடுவாரு. நமக்கு ஈசி தான் கடத்துறது!" என்று சொல்லி யசோதா புன்னகைக்க,

"பாப்பா! அடிக்கடி என்னை டேமேஜ் பண்ண பாக்குற நீ?" என்று விரல் நீட்டி முறைத்தான் கிருஷ்ணன்.

"ஆமா! உங்களுக்கு தாத்தா வேண்டாம் தானே? அதானே விட்டுட்டு போறீங்க?" என்று கேட்க, நிஜமாய் அந்த கேள்வி அவனை வருத்திவிட்டது.

அவனின் அமைதியோடு கவலையும் அவன் முகத்தினில் தெரிந்திட, "நடிக்குறான் பாப்பா! நம்பாத!" என்று நீலகண்டன் சொல்ல,

"தாத்தா! இதெல்லாம் டூ மச்..!" என்ற கிருஷ்ணன்,

"உன்கூட சேர்ந்து தான் இப்படி ஆகிட்டாரு. நான் லேசா வருத்தப்பட்டா கூட ஆறுதல் சொல்ல ஓடி வர்ற ஆளு எங்க தாத்தா. என்ன பண்ணி வச்சிருக்க நீ?" என்று யசோதாவிடம் கேட்க,

"அவளை ஏன் டா கேட்குற? அவ சொல்றதும் உண்மை தானே?" என யசோதாவிற்கே பரிந்து வந்தார் நீலகண்டன்.

மொத்தத்தில் லதா கேட்ட விஷயம் கிடப்பில் போடப்பட்டு விட, இப்பொழுது தெளிவாய் லதாவிற்கு தெரிந்துவிட்டது கண்ணன் சொல்வது தான் இங்கே சபை ஏறும் என்று.

காலை உணவை லதா எடுத்து வைக்க, அவளுக்கு உதவிக் கொண்டு யசோதாவும் பேசிக் கொண்டிருந்தாள்.

நீலகண்டன் தான் தன் வயது பாதியாய் குறைந்தது போல யசோதாவுடன் பேசி கதையளக்க, கிருஷ்ணனும் கேட்டபடி அமர்ந்திருந்த நேரம் அங்கே வந்தான் கண்ணன்.

"வாங்க மாமா!" என்று கிருஷ்ணன் அழைக்க,

"வா ண்ணா! இன்னைக்கு அண்ணி சமையல். எப்படி இருக்குன்னு சொல்லு!" என்று அழைத்தாள் யசோதா.

"வாங்க!" என்று அழைத்த நீலகண்டனும் கண்ணனை ஆராயும் பார்வையோடு அவர்களை கவனிக்க ஆயத்தமானார்.

"நீ இன்னும் கிளம்பலையா யசோ?" என்று கேட்டு தன் முடிவை உறுதிபடுத்த ஆரம்பித்தான் கண்ணன்.

"இப்பவேவா? ஈவினிங் கிளம்பலாம்னு தாத்தா சொன்னாங்களே!" யசோதா சொல்ல,

யசோதாவிடம் இருந்து பார்வையை நிலகண்டனிடம் திருப்பியவன்,

"லேப்டாப்ல கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சு கொடுக்கணும்!" என்று சொல்ல, நிலகண்டன் பதில் கூறாமல் பார்த்து வைத்தார்.

"எதாவது முக்கியமான வேலையா இருக்கும். இல்லைனா இன்னைக்கே முடிக்கனும் சொல்ல மாட்டாங்க இல்ல!" என்று கிருஷ்ணனும் கூற,

"நீ சாப்பிட்டு போய் ரெடியாகு யசோ!" என்றாள் லதா.

இப்பொழுது இன்னும் தெளிவாகி இருந்தது தாத்தாவிற்கும் பேரனுக்கும் கண்ணன் லதா உறவில் இருக்கும் விரிசல்.

"வேற எதாவது பிரச்சனையா ப்பா?" சாப்பிட்டு கண்ணன் எழுந்து கொள்ளவுள் சட்டென கேட்டுவிட்டார் நீலகண்டன்.

"தாத்தா?" என்று கிருஷ்ணன் அழைக்க,

"இரு டா! என்னவோ கொஞ்சம் அவர் முகத்துல எதுவோ திருப்தியா இல்லாத பாவம் தெரியுது. நம்ம வீட்டுக்கு வந்தவரை நாம தான கவனிக்கணும்?" என்று பேரனை அதட்டிவிட்டு,

"இங்க எதுவும் உங்களுக்கு பிடிக்கலையோ?" என்றும் கேட்க, யசோதா, லதா இருவரும் பார்த்துக் கொண்டு தான் நின்றனர்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல தாத்தா. கொஞ்சம் தலைவலி. நேத்தே கம்பெனில ஒரு பிரச்சனை. சரியாகிட்டு தான்.. இருந்தாலும் அத்தை தனியா பாத்துட்டு இருக்காங்களே.. அந்த டென்ஷன் தான்!" என்றவன் நிச்சயமாய் உளறி தான் வைத்தான்.

"கம்பெனி முக்கியம் தான். கட்டினவளும் முக்கியம் தான்!" என்ற பெரியவருக்கு மறைத்து பேசவெல்லாம் தெரியவில்லை.

தனக்கு தெரிந்த விதத்தில் கூறிவிட்டு எழுந்து கொள்ள, அதை உணர்ந்த மற்றவர்களும் கண்ணனின் முகம் பார்க்க, சட்டென நிமிர்ந்து அவரை பார்த்திருந்த கண்ணன், அவர் சென்றதும் தானுமாய் அறைக்குள் சென்றுவிட்டான் வேகமாய்.

இதோ நாட்கள் கடந்து நகர்ந்து சுழன்று கிருஷ்ணன் இன்று தன் கனவை நோக்கி செல்ல விமான நிலையம் வந்திருக்க, உடன் அவன் சொந்தமான நீலகண்டன், லதாவோடு யசோதாவும் வந்திருந்தாள் லதா அழைப்பின் பெயரில் கண்ணபிரானுடன்.