• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு 8

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 8

"க்கா! நீயே இப்படி அழுதேன்னா தாத்தாவை யார் பார்த்துப்பாங்க?" என தன் தோளில் சாந்திருந்தவளை கனிவாய் பார்த்து வைத்தான் கிருஷ்ணன்.

இன்னும் பதினைந்து நிமிடங்களில் அவனுக்கான அழைப்பு வந்துவிடும். முதல் முறையாய் தன் உயிர் உறவான இரண்டு ஜீவன்களை விட்டு தனியே வெகுதூரம் செல்ல இருக்கிறான்.

கண்ணீர் கண்களை நிறைக்க தயாராய் இருந்தாலும் இழுத்துக் கட்டி அதை தன் தாத்தாவிடமும் சகோதரி லதாவிடமும் மறைத்து நின்றான் கிருஷ்ணன்.

"லதாம்மா! என்ன டா நீ? கிளம்பும் போது இப்படி அழுதா அவன் அங்க போய் எப்படி நிம்மதியா இருப்பான்? நீ தானே தைரியம் சொல்லணும்?" என்று கண்ணபிரான் கேட்க, கண்களை துடைத்த லதாவும்,

"பத்திரமா போய்ட்டு வா கிருஷ். நான் தாத்தாவை பார்த்துக்குறேன்!" என்றாள் தம்பியிடம்.

"தாத்தாவோட உன்னையும் நீ தான் பார்த்துக்கணும் க்கா!" என்றவன் குரல் ஒரு மாதிரியாய் வர, கலங்கிய கண்களோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் லதா.

எப்படி அவளிடம் என்னவென்று கூற என தெரியவில்லை. ஆனால் நிச்சயம் கண்ணன் சரி இல்லை. அக்காவின் திருமண வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை என இத்தனை நாட்களில் நன்றாய் தெரிந்தது அவனுக்கு.

சரி செய்ய தயாராய் இருந்தாலும் லதா பிரச்சனையை கூற முன் வராத போது என்ன செய்திட முடியும். இதோ இங்கிருக்கும் இந்த ஒவ்வொருவரையும் நம்பி அவன் கிளம்பி இருக்க,

"யசோ! தாத்தாவோட அக்காவையும் கொஞ்சம் பார்த்துக்கோ. கஷ்டமான பொறுப்பு தான். ஆனா நான் உன்னை தான் கேட்பேன்!" என்று உரிமையாய் கூறினான் யசோதாவிடம்.

"நீங்க சொல்லனுமா த்தான்? லீவ்க்கு நீங்க வரும் போது பாருங்க... ஜீன்ஸ் டிஷர்ட்ன்னு தாத்தாக்கு இளமை திரும்பி இருக்கும்" என்று யசோதா புன்னகைக்க,

"அப்போ அக்கா?" என்றான் சிறு மென்னகை கொண்டு.

"அவங்களுக்கு என்ன? சொல்ல முடியாது நீங்க வரும் போது ஒரு பேபிக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் தாய்மாமாவா பர்சேஸ் பண்ணிட்டு வர வேண்டியது இருக்கும்!" என்று சொல்லி லதாவை பார்த்து கண்ணடிக்க, தலை தாழ்ந்து கொண்டாள் லதா.

"நீ சொன்னது நடந்தா நிச்சயமா உனக்கும் தனி ஸ்பெஷல் கிப்ட் இருக்கு!" என்று கூறியவன், அவனுக்கான அழைப்பு செய்தி வரவும் தாத்தாவிடம் திரும்பினான்.

"தனியா இருந்துப்பிங்க தானே தாத்தா?" என்று கேட்டவன் கேட்ட மாத்திரத்தில் அவரை அணைத்துக் கொள்ள, கண் கலங்கியவரும் சுதாரித்து,

"ஏன் நான் இருக்க மாட்டேனா? போடா! அதான் கிளம்பிட்ட இல்ல?" என்று சொல்ல,

"வரேன் க்கா!" என்று சொல்லி, கண்ண பிரான், யசோதா அனைவரிடமும் விடைபெற்று உள்நோக்கி நடக்க, கையசைத்து நின்றனர் மற்றவர்கள்.

நீலகண்டன் வெளிப்படையாய் சோர்ந்து போயிருக்க, யசோதாவின் பேச்சுக்களை கேட்கும் மனநிலை இல்லை என்பதை உணர்ந்து யசோதாவும் அமைதியாய் வந்தாள்.

ஏர்போட்டின் வாசலுக்கு வந்த நேரம் யசோதா மீண்டும் மீண்டும் பார்த்து உறுதி செய்தவள், "மாமா அங்க பாருங்க.. அது தான் ஜீவிதா!" என்று சொல்ல, பெயரைக் கேட்ட லதாவும் சட்டென யசோதா கைகள் நீண்ட பக்கம் பார்வையை கொண்டு சென்றாள்.

ஒரு நிமிடம் மூச்சைடைத்து விட்டது கண்ணபிரானுக்கு. திரும்பி லதாவை பார்த்த நேரம் அவளுமே அவரைப் பார்க்க,

"ஓஹ் அந்த பொண்ணா!" என்று வேகமாய் கூறியவர்,

"விசா போன் பன்றா! தேடுறா போல. கிளம்பலாமா?" என அதே வேகத்தோடு பேச்சை மாற்றி காருக்கு அழைத்து வந்த பின்னும் கூட அடிக்கடி லதாவைப் பார்த்து வைக்க, அதில் உறுதியாய் தெரிந்தது அந்த ஜீவிதா யார் என்று.

இடையை தாண்டிய குர்த்தியும் ஜீன்ஸ் பேண்டும் என கண்ணாடி அணிந்திருந்த அந்த பெண் இவர்களுக்கு தொலைவில் இருந்த ஒரு ஆட்டோவில் ஏறி செல்வது வரை லதா கவனிக்கவும் மறக்கவில்லை.

நீல கண்டனை இரு நாட்கள் தங்களோடு தங்க அழைத்தபோதும் அவர் மறுத்துவிட, லதாவும் யசோதாவும் தினமும் வந்து பார்த்துக் கொள்வதாய் கூறி அவரை வீட்டினில் விட்டுவிட்டு தங்களின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

இரவு உணவிற்கு தான் வீடு வந்திருந்தான் கண்ணன். கண்ணபிரான், விசாலாட்சி, கண்ணன் என அனைவரும் அமர்ந்து சாப்பிட, லதா பிறகு சாப்பிடுவதாய் சொல்லி மறுத்து அவர்களுக்கு பரிமாற, யசோதாவும் வந்து அண்ணனின் அருகே அமர்ந்தாள்.

"நீ மட்டும் தனியா சாப்பிடுவியா? கண்ணா பக்கத்துல இருந்து சாப்பிடு லதா!" என மீண்டுமாய் விசாலாட்சி கூற, கண்ணன் அப்போதுமே லதாவை கண்டுகொள்ளவில்லை.

கண்ணன் இத்தனை நாட்களிலும் இப்படி தான் பழகி இருந்தான். லதா என்ற ஒருத்தி தன் அருகில், தன் அறையில், தனக்கென இருப்பதாய் அவன் நினைக்கவே இல்லை.

அவள் வருவது போவது என எதிலும் தலையிடவில்லை. அவள் அந்த வீட்டில் இருப்பதே அவன் கண்களுக்கு தெரியாதது போல தான் நடந்து கொண்டான்.

விசாலாட்சி தினமும் கணவனிடம் இதை பேசி பேசி அவர் தனியாய் வருந்த, இன்று அந்த ஜீவிதாவை பார்த்ததை கூறினால் மனைவி அதற்கும் தனியாய் புலம்புவார் என மூச்சுவிடவில்லை கண்ணபிரான்.

திருமணத்தின் பின் இத்தனை நாட்களில் இருந்த அழுத்தம் எல்லாம் மொத்தமாய் மேலேழுந்து இதயத்தில் வலியை கொடுக்க, அதை வாய்விட்டு கூறி அழுதிடவோ தனக்கு ஆறுதல் கூறவோ யாரும் இல்லை என்பதை உணர்ந்து என்றும் போல அந்த இரவும் மொட்டைமாடியின் ஒரு புறத்தில் மனம் கனக்க நின்றிருந்தாள் லதா.

"அண்ணி!" என்ற சத்தம் கேட்டு தன்னை முயன்று சாதாரணம் போல கொண்டு வந்தவள் திரும்பிப் பார்க்க,

"இங்க என்ன அண்ணி பண்றீங்க? மணி பார்த்திங்களா பதினோரு மணி தாண்டிருச்சு!" யசோதா சொல்லியபடி லதா அருகே வந்தவள்,

"அண்ணாகிட்ட சொல்லிட்டு வரலையா? எங்கனு கேட்டா தெரிலைனு சொல்றாங்க!" என்றும் சொல்ல, லதா அமைதியாய் நின்றாள்.

இந்த நேரத்தில் இந்த வீட்டிற்கு வந்த முதல் நாள் கொண்டு இங்கே தான் இருக்கிறாள். இதுவரை தேட வேண்டியவன் என்றுமே தேடியதில்லை என்பதை எப்படி அவளிடம் சொல்லிட முடியும்?

"நீ என்ன பண்ற இந்நேரத்துல? தூங்கலையா?" என்று பதிலுக்கு லதா கேட்க,

"தூக்கம் வர்ல அண்ணி! அதோட நீங்க இப்படி பீல் பண்ணிட்டு நிப்பிங்களோனு தோணுச்சு. அதான் உங்களை தேடி வந்தேன்" என்றதும் லதா கேள்வியாய் பார்க்க,

"அதான் அத்தான் சொல்லிட்டு போனாங்களே! கிருஷ் அத்தானை நினச்சு தானே பீல் பண்ணிட்டு இருக்கீங்க?" என்றாள் யசோதா.

"அதெல்லாம் இல்லை யசோ! சும்மா தான்!" என வேடிக்கை பார்ப்பதை போல திரும்பிக் கொண்டவள் மனதில் முழு குழப்பமும் பயமும் மட்டும் தான்.

"என்ன அண்ணி வேற எதாவது ப்ரோப்லேமா?" லதாவின் தோற்றம் கண்டு யசோதா கேட்க,

"ம்ம்ம்! இல்லனு சொல்ல முடியாது... சரியாகிடும்.. ஆகிடனும்..!" என்றாள் தனக்குத் தானே சேர்த்து.

"என்னனு சொல்லுங்க அண்ணி. நான் ஹெல்ப் பண்றேன்!" யசோதா சொல்ல, லதா மிக சிறியதாய் ஒரு புன்னகையை கொடுக்க, யசோதா புரியாமல் பார்த்தாள்.

"என்னாச்சு அண்ணி?"

"உன்னால முடியும் யசோ.. ஆனா நீ செய்வியா தெரியலையே!" என்று சொல்ல,

"என்ன அண்ணி? நான் உங்களுக்காக செய்ய மாட்டேனா? ஏன் இப்படி பிரிச்சு பேசுறீங்க?" என்ற யசோதாவிற்கு அத்தனை கவலையாகிவிட்டது லதாவின் பேச்சில்.

"உங்க அண்ணான்னா உனக்கு ரொம்ப பிடிக்குமா யசோ?" என்று லதா கேட்க, சம்மந்தமே இல்லாமல் இப்பொழுது எதற்கு இந்த கேள்வி என்று தான் தோன்றியது யசோதாவிற்கு.

"ரொம்ப பிடிக்கும் அண்ணி. ஏன் கேட்குறீங்க? நான் உங்களுக்கு என்ன பண்ணனும் அதை சொல்லுங்களேன்!" என்றாள் கெஞ்சல் போல.

"உங்க அண்ணாக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?" என்று சட்டென கேட்டுவிட, அந்த கேள்வியின் அர்த்தம் புரிந்த யசோதாவோ அதிர்ந்து தான் நின்றாள் அண்ணி என்ற வார்த்தையோடு.

"இன்னைக்கு ஏர்போர்ட்ல பார்த்த ஜீவிதா யாரு?" என்ற லதா,

"உன் பிரண்ட்டா?" என்றும் கேட்டவள் குரலில் கிண்டலும் தொணித்ததோ?

'அப்போ யசோதாவுக்கு ஏதோ தெரியும் போல!' காலையில் ஏர்போர்ட்டில் ஜீவிதாவை யசோதா காட்டியபோதே லதா நினைத்தது இது தான்.

"அண்ணி! ஜீவிதா... அண்ணாவோட... பிரண்ட்..." லதாவிற்கு தெரியுமா? தான் எதுவும் சொல்லி தேவை இல்லாத குழப்பம் வருமா? சொல்லவா வேண்டாமா? என பல கேள்விகளோடு தான் இந்த பதிலை கூறி இருந்தாள் யசோதா.

"பிரண்ட்?" என்று கேட்டு லதா கொடுத்த அந்த புன்னகையே லதா இதை நம்பவில்லை என்பதை காண்பிக்க, செய்வதறியாமல் நின்றுவிட்டாள் யசோதா.

"தாத்தா வீட்டுல சொன்னியே யசோ! என் அண்ணா ரெண்டு வருஷமா சரி இல்லைனு... அது எதனாலனும் சொல்லி இருக்கலாம்... ஆனா சொல்ல கூடாதுன்னு தானே சொல்லல? இனி எப்படி நான் அதை உன்கிட்ட கேட்க?"


தன் மனதின் அழுத்தம் ஆதங்கம் எல்லாம் ஒரு கட்டத்தில் கோபமாய் ஒன்று சேர்ந்திருக்க, தனக்கென யாருமே இல்லாத இந்த நேரமும் சேர்ந்து அவளை வதைத்திருக்க, எதிர்பாராமல் வந்து பேச்சுக் கொடுத்தவளை வார்த்தைகளால் காயப்படுத்தினாள் லதா.

"என்ன அண்ணி இப்படிலாம் பேசுறீங்க!" என்ற யசோதா கண்களில் கண்ணீர் கட்டிவிட்டது.

"ப்ச்!" என்று தன்னை தானே நிதானத்திற்கு கொண்டு வர திரும்பிக் கொண்ட லதா,

"சாரி யாசோ! நீ கிளம்பு. கீழ போ. நான் வேற ஏதோ டென்ஷன்ல என்னவோ பேசிட்டேன்!" என்றவள் நகர,

"அண்ணி ஒரு நிமிஷம்!" என நிறுத்தினாள் யசோதா.

"இல்ல யசோ! நீ போ! ப்ச்... வேண்டாம் நான் போறேன்... இதை இப்படியே விடு. எல்லாம் சரியாகும்..." என்று லதா நகர,

"அண்ணி ப்ளீஸ்!" என்று லதாவின் கைகளை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள் யசோதா.

"இப்படிலாம் பேசாதீங்க. என்னை ரெண்டு அடி அடிச்சு கூட கேளுங்க... ஆனா இப்படி யாரோ மாதிரி பேசாதீங்க. அண்ணனும் நீங்களும் தானே எனக்கு எல்லாம்?" என்று கேட்டவளை கவலையாய் பார்த்த லதா, அணைத்துக் கொண்டாள்.

என்ன செய்து வைத்திருக்கிறேன் என தன் மீதே இப்பொழுது கோபமும் வர, ஆறுதலாய் யசோதாவை தட்டிக் கொடுக்க, லதாவிடம் இருந்து பிரிந்து அவள் முகம் பார்த்தாள் யசோதா.

"ஜீவிதா அண்ணா லவ் பண்ணின பொண்ணு!" கலங்கிய கண்களோடு யசோதா கூற,


'லவ் பண்ற பொண்ணு!' என்று தனக்குள் தோன்றுவதை தடுக்க முடியவில்லை லதாவிற்கு.