• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு தென்றலும்! 34

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 34

ஆர்யன் அழைப்பை துண்டிக்கும் வரை அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை அனன்யா.

ஆர்யன் திருமணம் தொடர்பாய் பேசியதை மட்டும் தான் அவள் கேட்டிருந்தாள். அன்னை செய்து வைத்த எதுவும் அறியவில்லை.

"அனு!" என அவள் கையைப் பிடித்த அரவிந்த்தை அனன்யா கேள்வியாய் பார்க்க,

"போதுமா? மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சாம்" என புன்னகையுடன் அரவிந்த் சொல்ல, இன்னும் அழுத்தமாய் அவனைக் கண்டாள் அனன்யா.

"ப்ச்! என்ன நடந்திருந்தாலும் ஓகே! இப்ப நம்ம ப்ரோப்லேம் சால்வ் ஆச்சு இல்ல? அங்கேயும் எந்த பிரச்சனையும் இல்ல. கொஞ்சம் சிரியேன்!" என அரவிந்த் அவளிடம் மறைக்க தான் முயன்றான்.

கனகாவின் மேல் அத்தனை ஆதங்கம் அவனுக்குமே! ஆதங்கம் தான். அதை கோபம் என்று சொல்லி முடித்துவிட முடியாதே! அப்படி ஒரு வீட்டில் அனன்யாவை திருமணமே செய்து கொடுத்திருந்தால் அனுவின் நிலை?

நினைக்கவே மனம் பதறியது அரவிந்த்திற்கே! இதை என்னவென்று அவளிடம் கூறுவான்?

அவனைப் பார்த்தபடியே மீண்டும் தந்தைக்கு அனன்யா அழைக்க, இம்முறை அழைப்பு சென்றதோடு அன்பரசன் எடுத்துவிட்டார்.

"ப்பா! அம்மா என்ன பண்ணினாங்க?" என தான் எடுத்ததும் கேட்டாள் அனன்யா.

அரவிந்த் மறைக்க முயலும் பொழுதே பெரியதாய் ஏதோ நிகழ்ந்திருக்கிறது என புரிய, அதை அவனிடம் கேட்காமல் தந்தைக்கு அழைத்து கேட்டும் விட்டால்.

"அனு! எப்படி இருக்க டா?" என்ற அன்பரசன் குரல் கரகரப்பாய் வர, கேட்டவள் மனம் துணுக்குற்றது.

"ப்பா! நீங்க ஓகே தானே? எங்க இருக்கீங்க? கால் என்னாச்சு?" என அதன்பின் வேகமாய் கேட்க,

"அனு! மாமாக்கு ஒண்ணுமில்ல. எதுக்கு இவ்வளவு பதறுற?" என்று அரவிந்த் கூறுவது அன்பரசனுக்குமே கேட்டது.

"அரவிந்த் இருக்கானா அனு?" என கேட்ட அன்பரசன்,

"உன் கூடவே இருக்கட்டும். உனக்கு அவன் தான் சரி. எனக்கும் அரவிந்த்தை நல்லா தெரியும் அனு. அவன் திகழ் வளர்ப்பு. சரியா தான் இருப்பான்!" என்றெல்லாம் சொல்ல, என்னவோ அடிவயிற்றில் இருந்து கேவல் வெளிவந்தது அனன்யாவிற்கு.

"ப்ச்! அனு!" என கண்டிப்புடன் அழைத்த அரவிந்த்,

"பேசு!" என சைகை செய்ய,

"நீங்க ஓகே தானே ப்பா?" என்றாள்.

"எனக்கு எதுவுமில்ல அனு. என்னாகிடும்? இன்னும் எவ்வளவு பார்க்கணும் நான்? உன்னை அப்படி விட்டுட்டு போய்டுவேனா?" என்றவர்,

"உன் அம்மா தான்... அவளை எல்லாம் என்னனு சொல்ல? மனுஷ ஜென்மத்துல கூட சேர்க்க முடியாது. எந்த அம்மாவும் புள்ளையை இப்படி தள்ளிவிட நினைக்க மாட்டா!" என்றெல்லாம் சொல்ல, மௌனமாய் கேட்டு நின்றாள் அனன்யா.

"நான் இருக்கேன் அனு உனக்கு. அடுத்த மாசம் உங்க கல்யாணம். உனக்கு சந்தோசம் தானே அனு?" என்று அவரும் கேட்க, இப்பொழுது அவரிடமும் என்ன நடந்தது என கேட்கும் தைரியம் இல்லை அனன்யாவிற்கு.

"என்ன அனு பண்ற! சரியா பேசு" அரவிந்த் சொல்லவும் அனன்யா அசையாமல் நிற்க, அரவிந்த் போனை வாங்கிக் கொண்டான்.

"மாமா!" என அரவிந்த் அழைக்கவுமே,

"அரவிந்தா!" என்ற அன்பரசன் மனைவியின் செயலை எண்ணி அரவிந்த்திடம் பேச தயங்க,

"எப்படி இருக்கிங்க மாமா? ஹாஸ்பிடல் மதியம் போனதா அனு சொன்னா. இப்ப ஓகேவா? டாக்டர் என்ன சொன்னாங்க?" என மற்றதை எதையும் கேட்காமல் அவன் பேச, அன்பரசனாலும் அப்போதைக்கு அவனிடம் வேறு எதையும் பேசிட முடியவில்லை.

"எல்லாம் நல்லபடியா நடக்கும் அரவிந்த். அனுவை பார்த்துக்கோ!" என்று சொல்லி வைத்துவிட்டார்.

அவர் வருத்தம் புரிந்தவனும் அலைபேசியை வைத்துவிட்டு, "இப்ப எதுக்கு மாமாக்கு கால் பண்ணின? அதான் அவங்க நல்லா இருக்காங்கனு ஆர்யா மாமா சொன்னாங்கனு சொன்னேன்ல! ஏன் அவங்களையும் பேசி டென்ஷன் பண்ற நீ? முதல்ல இப்ப எதுக்கு இப்படி இருக்க? யாருக்கும் எதுவும் இல்ல அனு!" என அனன்யாவிடம் கூறினான் அரவிந்த்.

"இன்னும் சொல்ல வேண்டியதை சொல்லல நீங்க. அப்பாக்கு உடம்பு சரி இல்லை. அதை பார்க்க போன அண்ணி கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட்டு வந்திருக்காங்கனா? ஏதோ என்கிட்ட மறைக்குறிங்க தானே? அப்பா நல்லா தான் பேசுறாங்க. அப்பாக்கு ஒண்ணுமில்லனு புரியுது. ஆனா மனுஷ ஜென்மம் கூட இல்லைனு அம்மாவை அப்பா சொல்றாங்க. அப்ப அம்மா என்ன பண்ணினாங்க? ஏதோ பண்ணிருக்காங்க. உங்களுக்கு தெரியும் ஆனா சொல்ல மாட்டேன்றிங்க. ஆர்யாண்ணாகிட்ட ஸ்பீக்கர் போடாம நீங்க பேசினது எனக்கு தெரிய கூடாதுன்னு தானே?" என மொத்தமாய் அவள் பேச,

இப்பொழுதே இவ்வளவு பேசுபவள் தான் கூறாவிட்டால் அவள் மனம் இன்னும் என்னவெல்லாம் நினைத்து கற்பனை கொள்ளுமோ என ஆயாசம் ஆனான் அரவிந்த்.

"நமக்கு கல்யாணம். அதுல சந்தோஷம் இல்லையா அனு உனக்கு?" என அரவிந்த் கேட்க,

"டைவேர்ட் பண்றீங்க த்தான் என்னை நீங்க. எனக்கு இதைவிட பெரிய சந்தோஷம் எதுவுமே இல்லை தான். ஆனா என்னவோ பெருசா நடந்திருக்கு. அப்பா கோபம் வந்து கல்யாணம் பண்ணி வைக்க வரை வந்திருக்காங்க!" என சொல்லியவள், அரவிந்த்தை சொல் என்பதாய் பார்க்க,

"அனுமா!" என்றவன் அழைப்பில்,

"போங்க த்தான்! நான் அண்ணிகிட்ட கேட்டுக்குறேன் என அவள் போனை எடுக்க செல்ல,

"ப்ச்! இரு டி! நானே சொல்றேன்" என்றவன் மெதுவாய் நடந்ததை கூறினான்.

"அட்லாஸ்ட் எதுவும் ஆகல. ஆர்யா மாமா பேசினதால போலீஸ் அத்தையை விட்டுட்டு போய்ட்டாங்களாம்!" என முடிக்க, தரையில் மண்டியிட்டவள் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

"டேய் அனு!" என அவளருகிலேயே அமர்ந்துவிட்டான் அவனும்.

"ஒண்ணுமில்ல அனு! இதை அப்படியே விடு. எதுவும் நினைச்சு மனசை வருத்திட்டு இருக்காத" அரவிந்த் சொல்ல,

"ஏன் அம்மா இப்படி இருக்காங்க அர்வித்தான்? நான் அவங்க பொண்ணு தானே? எப்படி இப்படி பண்ண முடிஞ்சது அவங்களுக்கு?" என எங்கோ பார்த்து அவள் பேச,

"ப்ச்! அத்தையை தெரியாதா உனக்கு? அவங்க ஒண்ணு நினைச்சு செஞ்சது இப்படி அவங்களுக்கே திரும்பி இருக்கு. தெரியாம போய் மாட்டி இருப்பாங்க. விடேன்!" என்றான் அப்போதும் அரவிந்த்.

"தெரியாமவா? அப்பா அன்னைக்கு நான் இருக்கும் போதே சொன்னாங்க அவன் டாக்டர் இல்ல அந்த பேமிலி வேண்டாம்னு. அப்பவும் போய் பணம் வாங்கி இருக்காங்க. அதுவும் என்னை கல்யாணம் பண்ணி வைக்குறதா சொல்லி. என் மேல கொஞ்சம் கூடவா அவங்களுக்கு பாசம் இல்ல?" என்றாள் கண்கள் கலங்கி.

"இப்ப என்ன பண்ணலாம்ன்ற? இருந்து அழுதா எல்லாம் ஆச்சா?" என கேட்டவன்,

"அத்தைக்கு மத்த எல்லாத்தையும் விட உன்னை ஒரு பணக்கார இடத்துல ஒப்படைக்கணும். அதுவும் திகழ் அக்காவை விட உயர்ந்த இடத்துல. நீ எவ்வளவு யோசிச்சாலும் இது தான் உண்மை. அக்காக்கு ஈக்வலா நீ இருக்கனும். அவ்வளவு தான் அவங்களுக்கு. அந்த பணம் எப்படி வந்ததுன்னு எல்லாம் அவங்க யோசிக்கல. தெரியாம பண்ணிட்டாங்க. இப்ப புரிஞ்சிருக்கும். ப்ச்! விடேன் டி!" என்றான்.

"போங்க த்தான். நீங்க சொல்றது உண்மை தான். அப்படி பார்த்தாலும் திகழ் அண்ணிக்கு இருக்குற மதிப்பு மரியாதை எல்லாம் வேணும்னு நினைக்க வேண்டாமா? அந்த அந்தஸ்து மட்டும் போதுமா? இது என்ன மாதிரியான எண்ணம்? இது என்னை எங்க கொண்டு போய் நிறுத்தும்?" என பேசியவள்,

"ஏன் த்தான்? ஒருவேளை ஃபியூச்சர்ல நானும் என் அம்மா மாதிரி ஆகிடுவேனோ?" என கேட்க,

"ஹே பைத்தியம்! என்ன உலறிட்டு இருக்க நீ? இப்ப என்ன பண்ணனும்ன்ற?" என்றான் அவள் முகம் தன்னைப் பார்க்க நிமிர்த்தி.

"இதெல்லாம் தேவை இல்லாத வேண்டாத எண்ணம் அனு. இத்தனை வருஷம் உன்னை பார்த்து வளர்ந்தவன். எனக்கு தெரியும் அனு எப்படினு. நாள் குறிச்சது எல்லாம் இருக்கட்டும். நீ சொல்லு. கல்யாணம் பண்ணிக்கலாமா? மெண்டல்லி நீ ஓகேனா தான் இப்ப நம்ம கல்யாணம்" அரவிந்த் சொல்ல,

"ப்ளீஸ் த்தான். என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க. எனக்கு பயமா இருக்கு. நான் உங்க கூடவே இருந்துடுறேன். நான் தப்பு பண்ணினா நாலு அடி அடிச்சு கூட சொல்லுங்க கேட்டுக்குறேன்" என அனன்யாவும் பயத்தில் தான் அவனை நெருங்கி நின்று பேசினாள் வேகமாய்.

"நான் தப்பு பண்ணினா நீயும் கூட என்னை அடிக்கலாம். ஆனா இப்பவே பண்ணிடுவேன் போல. இவ்ளோ நெருங்கி வந்தா நான் என்ன பண்ண?" என்றவன் சொல் சில நொடிகளுக்கு பிறகே அவள் காதில் நுழைந்து புரிய,

"த்தான்?" என கண்கள் விரிய அவள் அழைக்க,

"பண்ணவா அனு? அடி கூட வாங்கிக்குறேன். நான் ரெடி" என்றவன் மொத்தமாய் அந்த நினைப்பில் இருந்து அவளை வெளியேற்றி இருந்தான்.

கொஞ்சமும் யோசிக்கவில்லை அனன்யா. அவன் தோளில் சட்டென்று சாய்ந்து கொண்டாள் அந்த நொடி.

"எனக்காக தான் பேசுறீங்க இல்ல? எனக்கு தெரியும்!" அனன்யா சொல்ல,

"வேறென்ன தெரியும்?" என்றான் அவன் வழக்கமாய் அவள் கன்னத்தை வலிக்க பிடித்து இழுத்து.

"எல்லாமே தெரியும். அர்வி அத்தான் இல்லைனா நான் என்ன ஆவேன்னு தான் தெரியல!"

"அர்வி பைத்தியம்!" என சொல்லி அவள் தலையோடு தன் கன்னம் சாய்த்தவன் முகத்தில் மென்னகை.

"முப்பதே நாள்ல கல்யாணம்!" அரவிந்த் சொல்ல,

"நானெல்லாம் கல்யாணத்துக்கு தான் ஊருக்கு வருவேன் த்தான். அப்பவும் நீங்க தான் என் கூட வீட்டுக்கு வரணும். நான் தனியா எல்லாம் போக மாட்டேன்" என அனன்யாவும் பட்டியலிட்டாள் இப்பொழுதே.

"அதெல்லாம் பார்த்துக்கலாம். முதல்ல லீவ் அப்பிளை பண்ணு. டேட் நியாபகம் இருக்குல்ல? மேரேஜ்க்கு ஃபோர் டேஸ் முன்னாடில இருந்து மினிமம் டுவெண்ட்டி டேஸ் கேளு. அதுக்கு மேல உனக்கு வேணும்னா உன் சாய்ஸ் தான்"

"ஆமால்ல! ம்ம் நாளைக்கே அப்பிளை பண்றேன் த்தான்!" என அவள் சொல்லவும் தன் முகம் சாய்த்து அரவிந்த் அவள் முகம் பார்த்தவன்,

"அப்போ ரெடியா அனு?" என்றான் முகம் கொள்ளா புன்னகை கொண்டு. கேட்டவள் முகமும் பளிச்சிட்டு மின்னியது அந்த நொடி.

"மை காட்! ஓகே! இன்னும் முப்பதே நாள்" என்றவன் அவள் கன்னம் பிடிக்க,

"ஆவுன்னா பிடிச்சி இழுக்குறீங்க. வலிக்குதுத்தான்!" அனன்யா.

"வேற என்ன பண்ணுவேன். என்ன பண்ண முடியும். ச்சோ! நமக்கு கல்யாணமாம்!" என மீண்டுமாய் கன்னம் கிள்ளினான்.

"ஓகே! புரிஞ்சிடுச்சு. நான் கிளம்புறேன்!" என்றவள் முகம் சிவந்தாலும் காட்டிக் கொள்ளாமல் கிளம்பப் பார்க்க, புரிந்தவனும் தலைகோதி சிரித்துக் கொண்டான்.

தொடரும்..