• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் -27

S.JO

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
80
79
18
Paris
அத்தியாயம் 27

நீரஜா அறக்க பறக்க ஓடி வந்தாள். மலேசியாவில் ஒரு தனியார் மருத்துவனை. ஒரே மலேசியர் மையமாக இருந்தது. ரிசப்சனில் மலாய் மொழியில் என்னவோ கேட்டாள். அந்த பணிப்பெண் காட்டிய திசையில் ஓடியவள் மூச்சு வாங்கியவளாக நின்றாள். நோயாளிகள் அமரும் பெஞ்சில் நிலா அமர்ந்திருந்தாள். அவளருகில் சென்றாள்.

''என்னடி? நீ என்னமோ மயங்கி விழுந்திட்டதாகவும், மூச்சு பேச்சு இல்லாம இருந்ததாகவும், ஆம்புலன்சில இங்கே கூட்டிட்டு போயிட்டதாகவும் சொன்னாங்க. நானும் தலை தெறிக்க ஓடிவர்றேன். நீ என்னடான்னா அப்படி எதுவும் நடந்ததற்கான அறிகுறியே இல்லாம சாவகாசமா உட்கார்ந்திருக்கே.''

''பச்..நீயும் புரியாம பேசாதே..! மயங்கி போய் விழுந்தது என்னமோ உண்மைதான்..! மயங்கினா பேசமாட்டாங்கதானே! மூச்சு இருந்திச்சு. அதான் என்னை இங்கே கொண்டு வந்துட்டாங்க'' என்றாள் சலிப்புடன்.

''சரி கொண்டு வந்துட்டாங்க! என்ன பிராப்ளம்...?'' என்றாள், தோழியின் அருகில் அமர்ந்து ஹேண்ட்பேக்கை எடுத்து விசிறியபடி.

''யாருக்குத்தெரியும்? நாலைந்து நர்ஸ் வந்தாங்க..கையைபிடிச்சாங்க, கண்ணை திறந்து பார்த்தாங்க, நாக்கை நீட்டுன்னாங்க. அப்புறம் டாக்டர் வரும் வரை வெயிட் பண்ணுங்கன்னு போயிட்டாங்க! இவ்வளவும் அவங்க பேசிய மலாய் மொழியையும் அவங்க அரை குறை ஆங்கிலத்தையும் வைச்சு புரிஞ்சுகிட்டேன்...''

''செக் பண்ண நர்சுங்ககிட்டே கேட்டுருக்கலாமே?''

''எந்த மொழியில கேட்டுருக்கலாம்ங்கிறே? அவங்களுக்கு அவங்க தாய் மொழி மட்டும்தான் ஒழுங்கா தெரியும் போலிருக்கு! அந்த மொழி எனக்கு தெரியாதுன்னு அவங்களுக்கு தெரியாதது வேற விஷயம்...''

''சரிடி...! டாக்டர் வரட்டும்! ஆமா உனக்கு என்ன? காலையில சாப்பிடாததா? இல்லை வேலை பளுவா? எதுக்கு மயங்கி விழுற அளவுக்கு போனே?''

''ஏய் மயங்கி விழுறதுக்கு நான் போகலை...அதுதான் என்கிட்டே வந்தது.''

''என்ன கடிக்கிறியா?''

''இல்லைடியம்மா...! எனக்கே என் உடம்புக்கு என்னவென்றே தெரியாமல் மண்டையை பிய்ச்சுகிட்டிருக்கேன். நீ வந்து கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு மறுபடியும் மயக்கம் போட வைச்சுடுவே போலிருக்கு.'' நிலா சலிப்போடு சொன்னாள்.

''சரிடி...! காலேஜ் படிக்கும் போது இருந்தமாதிரி ஒரு வேளை சிலிம்மா இருக்குறது அழகுன்னு நினைச்சுட்டு சாப்பிடாம இருந்திட்டியோன்னு, அதனால மயக்கம் வந்ததோ..'' என்று தொடங்கிய நீரஜாவைத் தடுத்தாள் மற்றவள்.

''கொஞ்சம் சும்மா இருக்கியா? சிலிம்..ஃபிலிம்னு..புலம்பிகிட்டு..''

''டாக்டர் வர்றார்..வா என்னவென்று கேட்டுடலாம்'' நீரஜா எழுந்து கொள்ள,

''அவரும் மலாய் மொழியில் கலாய்த்தார் என்றால் குரல் வளையை கடிச்சு வைச்சுடுவேன்னு சொல்லு..'' நிலா திட்டியவாறே பின் தொடர்ந்தாள்.

டாக்டர் யுவான் சாங் சைனீஸ் அண்ட் மலேசிய கலப்பு என தெரிந்தது. பெண்கள் இருவரையும் பார்த்து மரியாதை கொடுத்தவராக எடுத்த எடுப்பிலேயே மலாய் மொழியில் பேச நிலா எரித்துவிடுவது போல தோழியை பார்த்தாள்.

''இண்டர்நாஷனல் மொழியை தவிர மத்தது எல்லாம் தெரிஞ்சு வைச்சிருப்பாங்க போலிருக்கு.'' என்றாள் பற்களுக்கு இடையில். நீரஜா அவளை அடக்கியவாறே டாக்டரிடம் பேசிவிட்டு எழ அவரும் இருவருக்கும் கை குலுக்கினார்.

''எதுக்குடி கைகுலுக்குறார்.'' என தோழியின் காதை கடித்தாள்.

''வெளியே வா சொல்றேன்.'' என்றபடி வெளியேறினாள்.

''ஏன்டி வியாதியோடு வர்றவங்களுக்கு இப்படித்தான் உங்க மலேசியாவில் கை குலுக்கி விஷ் பண்ணி மேலே அனுப்புவாங்களா?'' என எரிச்சலோடு கேட்ட நிலாவை,

''ச்சீ உளறாதே! அவர் எதுக்கு உன்னை விஷ் பண்ணினார்னு தெரிஞ்சாகணும் அவ்வளவு தானே?'' புன்னகையோடு பார்த்தாள் நீரஜா.

''பின்னே? நாந்தானே மயங்கி விழுந்தேன். என்னமோ நீ விழுந்தமாதிரி தெரிஞ்சுக்கணுமான்னு கேட்குறே?" நிலா முறைக்க,

''அய்யோ இருடி! முதல்லே என் கூட வெளியில வா'' என அவளை அழைத்துக் கொண்டு போனாள்.

''டாக்ஸி" என்றாள். அது வர ஏறிக்கொண்டவளாக ''ஏதாவது ஸ்வீட் கடைக்கு போ" என்றாள் மலாய் மொழியில். பின் தோழியின் பக்கம் திரும்பியவளாய்,

''அப்புறம்?'' என்றாள்.

''என்னடி நான் கதையா சொல்லிகிட்டிருந்தேன்..? என்ன தான் சொன்னார் அந்த சைனீஸ்?''

''அவர் சைனீஸ்காரன் இல்லே மலேசியன்.''

''ஆமா! எனக்கு இது ரொம்ப அவசியம்..நீ விசயத்தை சொல்லு..ஏதாவது ஏடாகூடமான வியாதின்னா பட்டென்று போய்ச்சேர்ந்திடுறேன்...''

''ஏய்..என்ன பேசுறே நிலா? வாயிலேயே போடணும்..''

''இந்த உலகத்திலே என்ன இருக்குங்கிறே? எங்கு பார்த்தாலும் வன்முறை..அழிவு களவு, சூது. இது தவிர வேறு என்ன இருக்கு?''

''அதுக்கும் உனக்கும் என்னடி சம்பந்தம்? முதல்லே உன் விஷயத்துக்கு வா....இந்த உலகத்திலே என்ன இருக்குன்னு கேட்டே இல்லே? உனக்குன்னு ஒரு ஜீவன் வரப்போகுது. அதுக்காக நீ வாழணும் இல்லையா?'' என்றாள் கனிவாக தோழியைப் பார்த்து.

''என்ன சொல்றே?'' நெற்றி சுருங்க கேட்டாள் நிலா.

நீரஜாவோ முகத்தில் மகிழ்ச்சி பொங்க, ''ம்....உன் வயிற்றுக்குள்ளே ஒரு குட்டி நிலா உதயமாகிவிட்டது என்று சொல்கிறேன்.''

''வாட்...'' நிலா கூவியபடி நம்பாமல் சட்டென்று தனது வயிற்றில் கைவைத்தாள்.

''நீ கன்சீவ் ஆகியிருக்கே..! டாக்டர் கன்பஃர்ம் பண்ணிட்டார்...! எவ்வளவு ஸ்வீட்டான சேதி தெரியுமா? அதான் ஸ்வீட் கடைக்கு போகச் சொன்னேன்.'' நீரஜா சொல்ல நிலா பிரம்மை பிடித்துப்போய் டாக்ஸியில் உட்கார்ந்திருந்தாள். ஏனோ அக்ஷயின் சிரித்த முகம் வந்துவிட்டு போனது.

''ஒரு நாளிலேயே சாத்தியமாகுமா?'' மனது நினைத்ததை உதடு சொல்லிக் கொண்டது.

''என்னடி ஒரு நாளில சாத்தியமாகுமான்னு கேட்கிறே?'' எதிரே நீரஜா அவளையே பார்த்தபடி கேட்க, நிலா தன் எண்ண ஓட்டத்திலிருந்து முழுவதும் மீளாமல்,

''ஒ...ஒண்ணுமில்லை..'' என்றவள் முகம் வியர்த்து போயிருந்தது. இதய ஓட்டம் பலமடங்கானது போலிருந்தது. பார்வைகள் நிலைகுத்தி நிற்க, முகம் பிரம்மையில் உறைந்து போக உதடு இறுகியது. மனசோ ''நீ தப்பு பண்ணிட்டே!'' என சாடியது.

''ஏய் இந்த விஷயத்தை முதல்லே அக்ஷய்க்கு தெரியப்படுத்தணும்! இதற்கு அப்புறமாவது உன்னை கூட்டிட்டு போக சான்ஸ் இருக்கு.'' என்றாள் நீரஜா சந்தோஷமும் அக்கறையுமாக.

''டூ லேட்...'' என நிலாவின் உதடு முணுமுணுக்க,

''எதுக்குடி?''

''இந்நேரம் என்னை அவர் தலை முழுகி இருப்பார்.'' என்றவள் கலங்கிய விழிகளை மறைக்க குனிந்தாள்.

''அந்தளவுக்கு போகக்கூடியவனா?'' மற்றவள் கோபமாக கத்தினாள். அவளது கத்தலை நிலாவின் செவிகள் உள் வாங்கியதாக தெரியவில்லை. நீரஜாவே தொடர்ந்தாள்.

''அது எப்படி? நீ உயிரோடு இருக்கும் போது தலை முழுகலாம்...அந்த ராஸ்கலை நீ சும்மா விட்டுட்டு வந்திருக்க கூடாது. அங்கேயே இருந்து அவனுக்கு பாடம் புகட்டியிருக்கணும்..'' தோழி கத்திக்கொண்டிருக்க நிலாவோ எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியாமல் தடுமாற்றத்துடன் இருந்தாள்.

''இங்கே இருந்துகிட்டே கோர்ட்டிலே வழக்கு போடலாம். அவனது மானத்தை வாங்கிட்டுத்தான் விடணும்...'' ஆவேசமாக நீரஜா சொல்லிக்கொண்டிருந்தாள்.

''.........''

''கண்டிப்பா உனக்கு நியாயம் கிடைக்கும்டி.''

''எப்படி கிடைக்கும்? பாவம் செய்த எனக்கு எப்படி கிடைக்கும்? தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்லவன் வாழ்க்கையை பாழாக்கியவளுக்கு எப்படி கிடைக்கும்?'' நிலாவின் மனச்சாட்சி அவளை கேட்க, தன் விதியை நொந்தபடி முகத்தை மூடியபடி குலுங்கினாள்,

''என்னடி இது? டாக்சியில...இதபார் எதுக்கு அழறே? முதல்லே உன் பேரன்ட்ஸ்சுக்கு தகவல் கொடுக்கணும்.'' தோழி சொன்னதும் நிலா சடாரென்று அவளை நிமிர்ந்து பார்த்து,

''நீரஜா உன்னை கை எடுத்து கும்புடுறேன். உனக்கு பாரமா இருந்தா சொல், நான் வேறு எங்காவது போயிடுறேன். ஆனா என்னை பத்தி எந்த தகவலும் என்னை பெத்தவங்களுக்கு சொல்லிடாதே! ப்ளீஸ்...என்னால அவங்க விஷம் குடிச்சு சாவு முனை வரை போனவங்க. அவங்க சந்தோசத்துக்காக கல்யாணம் பண்ணகிட்டவ நான். இது நாள் வரை நான் சந்தோசமா லண்டனிலே இருக்குறேன் என்று நினைச்சு கொண்டிருக்காங்களோ? இல்லை அக்ஷய் என்ன சொல்லி வைச்சிருக்காரோ? அவங்களும் என்னை தலை முழுகிட்டாங்களோ? என்னவென்று தெரியாது..! மறுபடியும் அவங்க நிம்மதியை கெடுக்கும் விதமாக நான் போய் நிற்கலை..! என்னால அவங்களுக்கு ஏதும் ஆகக்கூடாது'' என மறுபடியும் அழத்தொடங்க டாக்சி டிரைவர் இவர்களை திரும்பிப் பார்க்க, நீரஜா சுதாரித்தாள்.

''ஆல் ரைட்...நான் எதுவும் பேசலை...நீ அழாதே.. டிரைவர் நம்மையே பார்க்குறான்...'' அவள் சொல்ல நிலா மூக்கை உறிஞ்சியவளாக அடக்கி கொண்டாள். இருந்தும் கண்ணீர் வழிந்தோடியது.

பெற்றவர்கள் நிம்மதி கெடக்கூடாது என யோசித்தவள், அவளை கட்டியவன் நிம்மதி இழந்து போனான் என்பதை நினைக்க மறந்து போனாள். பெற்றவர்களுக்கு ஏதும் ஆகக்கூடாது என அவர்களை பற்றியே நினைத்தவள் அங்கே ஒருத்தன் தன்னால் பைத்தியமாகிக் கொண்டிருக்கிறான் என்பதை எண்ணி பார்க்க மறந்து போனாள். பெற்றவர்களுக்கு பாரமாக இருக்க கூடாது என்று எண்ணியவள் அங்கு ஒருத்தன் தன்னையே மறந்து போனான் என்பதை சிந்திக்க மறந்து போனாள். அவனது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு பக்கம் மட்டுமே யோசித்து சட்டென்று எடுத்த முடிவால் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று தெரியாமல் பேசினாள்.

''இந்தா இந்த ஹார்லிக்சை குடி..'' வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அவளுக்கு ஹார்லிக்ஸ் கலந்து எடுத்து வந்தாள் நீரஜா.

''வேணாம்...''

''பேசாம குடி...ரொம்ப சோர்வா இருக்கே..இனிமே நீ வேலைக்கு போக வேண்டாம்.''

''என்ன சொல்றே நீரு?'' அதிர்ந்து போய் தோழியைப் பார்த்தாள்.

''இந்த மாதிரி நேரத்தில வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்வாங்க. அதனால நீ ரெஸ்ட் எடுத்துக்கோ.'' அக்கறையுடன் கூறினாள் நீரஜா.

''இ...இல்லை நீரு..'' நிலா தயங்கியபடி கூற,

''நான் சொன்னா கேளுடி..! ப்ளீஸ்....உன்னோட வாழ்க்கைக்கு ஒரு பிடிமானம் கிடைச்சிருக்கு. அதை உன்னோட பிடிவாதத்தால கெடுத்துடாதே.'' கண்டிப்புடன் சொன்ன தோழியை,

''அதுக்கு இல்லை.! உனக்கு பாரமா இருக்க...'' தடுமாற்றத்துடன் பார்த்தாள் நிலா.

''ஆமா உன்னோட அம்பது கிலோவை நாந்தானே என் முதுகில தூக்கிட்டு திரியுறேன். நீ பாரமா இருக்க. யாருடி இவ..? இத பாரு உன் குழந்தை தான் உனக்கு எல்லாமே...! அது உனக்கு முழுசா வேணும் என்றால் நான் சொல்றபடி கேளு..! குழந்தை பிறக்கட்டும். அதுக்கு அப்புறம் பார் என்ன பண்றேன்னு.''

''என்ன பண்ணப்போறே?'' கண்களில் கலக்கத்துடன் கேட்டவளிடம்,

''ஆகா...அது இப்ப சொல்லப்படாது...! நீ ரெஸ்ட் எடுத்துக்கோ..! பக்கத்து பிளாட் ஆன்டியிடம் உனக்கு எப்படி சாப்பாடு கொடுக்கணும்? என்ன பண்ணணும்? என்று கேட்டு ஒரு லிஸ்ட் எடுத்துட்டு வர்றேன்.'' என்று கூறி விட்டு போனாள் நீரஜா.
போகும் தோழியை கண்கள் கலங்க பார்த்தாள் நிலா.

தன் வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள்? எத்தனை சுழற்சி அடித்துவிட்டது? என எண்ணினாள். தனிக்கட்டைதானே எப்படியும் பிழைத்துக்கொள்வேன்...இனி என்ன இருக்கு அனுபவிப்பதற்கு, வாழுறதுக்கு? என்று வெறுத்து போய் இருந்தவளுக்கு தான் தாயாகப்போவது அறிந்ததும் அவளுக்கும் வாழவேண்டும் என்ற எண்ணம் வேரூன்றியது.

அதுமட்டுமல்லாது அக்ஷயை பார்க்க வேண்டும் போல் தோன்றியது. சிரிப்புடன் கூடிய அவன் குரல் எப்போதும் காதினுள் ஒலித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. ஒரு வாரம் அவன் கூட இருந்து இருக்கிறாள். ஒன்றாக சாப்பிட்டு தூங்கி இருக்கிறாள். அப்பொழுது எல்லாம் வராத எதுவோ ஒன்று இப்பொழுது அவள் மனதில் தோற்றுவித்தது. அந்த உணர்வு என்ன என்று தெரியாமல் தவித்தாள்.

''அவசரப்பட்டு வந்தது சரியா? இல்லாவிடில் வராமல் இருந்திருந்தால் சரியாக இருந்திருக்குமா? எப்படி இருந்திருக்கும்? என்னைப்பற்றி தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டவன். ஏமாற்றி செய்து வைத்துவிட்டீர்களே என்று அவன் புலம்பவா? இல்லை நானும் மனச்சாட்சியை கொன்றுவிட்டு வாழவா? ஒரு வேளை அவனிடம் பக்குவமாக எடுத்து சொல்லி புரிய வைச்சிருக்கலாமோ? மன்னித்திருப்பானோ? இல்லை நிதமும் வார்த்தையாலே சாகடிச்சுருப்பானோ?'' அவள் கேட்க

''ச்சீ...அக்ஷய் அப்படிபட்டவன் இல்லை'' மனசு வாதாடியது.

''சொல்லியிருக்கலாம்..புரிய வைச்சிருக்க வேண்டும்..எல்லாத்தையும் தவற விட்டுட்டேனோ? எப்படி எடுத்துக்கொண்டிருப்பானோ? அதான் பல பேரை பார்த்தேனே. பெண்கள் மட்டும் கற்புக்கு அரசியாக இருக்க வேண்டும், நாங்கள் அல்ல என கூறும் ஆண்கள் தானே..!'"

''ச்சே அது போலத்தான் அவனும். எல்லாம் ஒரே குளத்திலே ஊறிய மட்டைகள் தான். இவனை போய் பெரிய தியாகி என்று பேசி போகாத ஊருக்கு வழி தேடுகிறேன் பாரு..! வேண்டாம்..எனக்கென்ன குறை? இதுவரை எப்படியோ பிடிப்பு இல்லாமல் வாழ்ந்துவிட்டேன். இனியாவது வாழ ஒரு பிடிப்பு இருக்கு...'' தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.

''என்னோட காயம்பட்ட மனதுக்கு இதமாக வந்த என் உயிரே! உன் வரவை ஆசையோடு எதிர்பாக்கிறேன்...நொந்து, வெந்து போன என் மனதுக்கு ஆறுதலாக நீயாவது இருப்பாயா? சிதைந்து போன என் வாழ்க்கைக்கு ஆண்டவன் கொடுத்த பரிசு நீ...! உனக்காக இனி வாழ்வேன் வா..! நீ ஆணோ? பெண்ணோ? எது வென்றாலும் எனக்கு சந்தோஷம் தான் வா..! இந்த உலகத்திலே சிறந்த பிள்ளையாக வளர்க்கிறேன் வா...!'' என தனது வயிற்றை தடவியவாறே முனங்கிக் கொண்டிருந்தாள்.
(Coming)