• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் 42 - முற்றும்

S.JO

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
80
79
18
Paris
அத்தியாயம் 42

அடுத்த நாள், சிதம்பரம் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது, குழந்தைகளுக்கு பேர் சூட்டும் விழா...உறவினர்கள் தொழிதிபர்களுக்கு ஃபோன் மூலம் அழைப்பு விடப்பட்டு அவர்களும் வந்திருந்தனர்.

அக்ஷயின் பெற்றோர்கள், நீரஜா, அவளின் குடும்பம், என்று அந்த மாளிகை நிறைந்திருந்தது. கீர்த்தியைக் காணாது அக்ஷய் வாசலை பார்ப்பதும் வந்திருப்பவர்களோடு பேசுவதுமாக இருந்தான்.

''நிலா...என்ன பேர் செலக்ட் பண்ணி வைச்சிருக்கே..'' நீரஜா குழந்தைகளை கொஞ்சியபடி கேட்டாள்.

''ம்..பையனுக்கு அஸ்வந்...பொண்ணுக்கு அவந்திகா...''

''வாவ்...யாரோட செலக்ஷன்...?''

"பையனோடது பூஜா செலக்ட் பண்ணா..பொண்ணோடது அக்ஷய் செலக்ட் பண்ணார்..'' என்றாள் சந்தோஷமாக.

''சூப்பர்ப் பேரு தான் போ..அக்ஷய்-அஸ்வந், அக்ஷய்-அவந்திகா, அக்ஷய்-நிலா, ம்...உன் வீட்டுக்காரருக்கு..நல்ல டேஸ்டுடி...'' அவள் சொல்ல அங்கு வந்த அக்ஷய்,

''ரொம்ப தாங்ஸ்'' என்றான். நீரஜா சங்கடமாக உணர சட்டென்று எழுந்து நின்றாள். அவன் பட்ட வேதனைகளை நிலாவின் வாய் மூலம் கேட்டதுக்கு பின் அவன் மேல் அவளுக்கு மரியாதை கூடியிருந்தது. தான் கூட புரியாமல் அவனை திட்டியிருக்குறோம் என்பதை நினைத்து வருந்தினாள்.

''அட உட்காருங்க...நான் ஒண்ணும் அவ்வளவு கிழவன் இல்லையே..'' அவன் சொல்ல பெண்கள் இருவரும் புரியாமல் விழித்தனர்

''அதாம்மா..என்னைக்கண்டதும் எழுந்து மரியாதை எல்லாம் தர்றா உன் பிரண்டு! என்னை பார்த்தா வயசான தாத்தா மாதிரியா இருக்கு...'' அவன் வேண்டும் என்று வயோதிபர் போல நடுங்கும் தொனியில் கேட்க, பெண்கள் இருவருக்கும் சிரிப்பு தான் வந்தது.

''நிலா உன்னையும் நம்ம குழந்தைங்களையும் பத்திரமாக என்கிட்டே தந்த உன் பிரண்டுக்கு நான் ஏதாச்சும் கைமாறு செய்யணுமுன்னு துடிச்சிட்டிருக்கேன்..அவங்களுக்கு நான் ஒரு பரிசு தரலாமுன்னு இருக்கேன்...குழந்தைங்க பேர் சூட்டி முடிஞ்சதும் நடத்திவைக்குறேன்...மறுக்காம வாங்கிப்பாங்களான்னு கேளு...'' என்றவாறு என்ன பரிசு என்று அவன் சொன்னதும் நிலாவுக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம், கணவனை கண்கள் நிறைந்த காதலுடன் பார்த்தாள். நீரஜாவுக்கோ பேச்சு எழவில்லை.

''நிலா..உன் பிரண்டுக்கு புடிக்கலைன்னா கம்பல் பண்ணாத..முதல்லே...'' அவன் தொடர முற்பட பின்னால் இருந்து இரு கரம் அவனை தூக்கி சுத்தியது அது யாரு என்று புரிய அக்ஷய்க்கு சந்தோஷம் தாளவில்லை.

''படவா...இது தான் சர்ப்ரைசா? எனக்கு பேச்சே வரமாட்டேங்குது...உன்னோட ரெண்டு குழந்தைங்களை பார்த்ததும்...காட் இஸ் கிரேட்டுப்பா...''கீர்த்திவாசன் நெகிழ்ச்சியுடன் நண்பனை கட்டியணைத்தான்.

''ம்..இது மட்டுமல்ல தோழா இன்னும் ஒரு சர்ப்ரைஸ் தரப்போறேன்...நீ மாட்டேன்னு சொன்னேன்னு வை..மவனே குரல் வளையை கடிச்சு குதறிட்டுத்தான் மறுவேலை...'' அக்ஷய் செல்லமாக மிரட்ட,

''என்னடா...என் உயிரைக்கேட்டாலே தருவேன்..உனக்கு இல்லாததா? சொல்லு நான் என்ன செய்யணும்..'' என்றான் மற்றவன்.

''ம்..இதோ இது நீரஜா..நிலாவோட பிரண்டு..இவங்க இல்லைன்னா நிலாவையோ என் குழந்தைகளையோ நான் மீண்டும் பார்த்திருப்பேனா என்று தெரியாது..'' என்றவன் நடந்ததை சுருக்கமாக சொன்னான். சொல்லி முடித்ததும் கீர்த்திவாசன் நீரஜாவைப்பார்த்து,

''ரொம்ப நன்றி மேடம்...இவன் பட்ட கஷ்டம் எல்லாம் இந்தக்குழந்தைங்களை பார்க்கும் போது பெரிசாத் தெரியலை.. உங்களுக்குத்தான் நாங்க ரொம்ப கடமைபட்டிருக்கோம்..'' அவன் நா தழுதழுக்க கூற நீரஜா நெளிந்தாள்.

''கீர்த்தி..உனக்கு இவங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?'' அக்ஷய் கேட்டதும் கீர்த்தி திடுக்கிட்டு நண்பனை பார்த்தவனாக,

''என்னடா? இதுதான் அடுத்த சர்ப்ரைசா? என்னைப்பத்தி எல்லாம்..சொல்லி..'' என்றவனை இடைமறித்தான் மற்றவன்,

''எல்லாம் சொல்லிட்டேன்...ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசுங்க...அப்புறம் உங்க முடிவை சொல்லுங்க..நிலா நீ வாம்மா..நாம விழாவுக்கு ரெடியாவோம்..அவங்க பேசிக்கட்டும்...'' அக்ஷய் சொல்லிவிட்டுப் போக,

நிலா தோழியின் தோளைத் தட்டி,

"பேசுங்க ஒரு நல்ல முடிவெடுங்க" என்று அவள் காதினுள் முணுமுணுத்து விட்டுப் போனாள்.

***

கீழே விழா தொடங்கியது முறையாக வந்து இருவீட்டாரும் குழந்தைகளின் காதில் பேரை உச்சரித்துவிட்டு தொட்டிலில் போட்டனர். நீரஜாவும், கீர்த்தியும் இணைந்து வந்து இரு குழந்தைகளையும் தூக்கி பேரை உச்சரித்தனர் அதன் மூலம் தங்கள் சம்மதத்தை தெரியபடுத்தியதும் அக்ஷய் விசிலடித்தான். அடுத்த மூகூர்த்தத்தில் கீர்த்திக்கும், நீரஜாவுக்கும் கல்யாணம் நடந்தேறியது.

''டேய் கீர்த்தி என் பையனுக்கு ஒரு பொண்ணை சீக்கிரம் பெத்துக்கொடு...'' அக்ஷய் சொல்ல அங்கு சிரிப்பலை பரவியது. இரு குடும்பமும் அடுத்த பிளைட்டில் லண்டன் பயணமானது.

அவன் நிலவு அவனோடு இணைந்து கொண்டது

முற்றும்​
 
  • Like
Reactions: Vathani