அழகி
கேட்கலாமா வேண்டாமா!? என வெகுவாக யோசித்து இறுதியில் கேட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்திருந்தார் அழகி. ஆனால், அவர் கேட்கும் அவசியமே இன்றி அன்று தியா அவரிடம் அனைத்தையும் சொல்லிவிடுவதாக முடிவெடுத்திருந்தாள்.
வீட்டுத் தோட்டத்தின் கல்மேடை ஒன்றில் அமர்ந்து மகளிடம் எப்படி ஆரம்பிப்பது என்ற அலசலில் ஈடுபட்டிருந்தவரை, "ம்மா" என்ற மகளின் குரல் கலைத்தது.
"என்னடா?"
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
மகளை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தவர், "உட்காரு" என்று சொல்ல, அவருக்கு எதிரில் அமர்ந்த தியா, "நான் ஷ்யாமை டிவோர்ஸ் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கேன்" என்றாள்.
தாயாய் ஆழ்மனம் அதிர்ந்தாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் மகளின் முகத்தை ஆராய்ந்தார் அழகி. சிறு வருத்தமேதும் தெரிகிறதா என்று தேடிப் பார்த்தவருக்கு அது கிடைக்கவில்லை. கோபம், விரக்தி, வேதனை, கண்ணீர் என எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் மிகவும் இயல்பாக விவாகரத்து என்று சொன்னதை மனதிற்குள் குறித்துக் கொண்டவர் மகளின் முகம் பார்த்து ஏன் என்ற ஒற்றைக் கேள்வி தான் கேட்டார்.
"எனக்கு ஷ்யாம் கூட செட் ஆகும்னு தோனல மா.. கல்யாணம் முடிஞ்ச ஆறே மாசத்துல நான் இப்படி சொல்றது உனக்கு ரொம்ப ஷாக்கிங்கா தான் இருக்கும்.. என்னுடைய முடிவு தப்புன்னு கூட நீ நினைக்கலாம். பட், என்னால அங்கே இருக்க முடியல" என்றவளுக்கு ஷ்யாமுடன் மனம் ஒத்துப்போகாமல் சண்டையிட்ட தருணங்கள் நினைவில் தோன்றின.
முதல் இரண்டு மாதங்கள் புதுமணத் தம்பதிகளாய் உல்லாசமாகவும் உற்சாகவும் வாழத்தான் செய்தார்கள். அதை இல்லையென்று சொல்லிவிட முடியாது தான். அதன் பிறகு தான் சாயத்தோற்றம் சரிந்து மாயத்தோற்றம் மறைய ஆரம்பித்தது.
திருமணமான இரண்டாவது மாதத்தில் எதார்த்தமாகக் கேட்பது போல, "தியா இந்த பீரோ உங்க அம்மா எங்கே வாங்கினாங்க? என்ன ரேட் வரும்?" என்று ஷ்யாம் கேட்க, இயல்பாகவே கடையின் பெயரையும் விலையையும் சொன்னாள் தியா.
"நல்லா தான் இருக்கு.. ஆனால், கட்டிலைப் போல இதையும் தேக்கில் செய்திருக்கலாம்.. இல்லையா தியா?" என்று கேட்க, புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தவள் அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் நகர்ந்துவிட்டாள்.
மீண்டும் ஓர்நாள் கட்டிலில் படுத்திருக்கும் போது, "ஏன் தியா இது ஒரிஜினல் தேக்கு தானா?" என்று சந்தேகமாய் கேட்டான்.
"ஏன்?"
"இல்ல நாங்க ஷர்மிக்கு தேக்கில் செஞ்சு தான் கொடுத்தோம்.. அதுமாதிரி இல்லையே குவாலிட்டி"
"ஒரிஜினல் தேக்கு தான். நான் தான் ஆர்டர் கொடுத்துட்டு வந்தேன்"
அவனது கேள்விகள் மனதை உறுத்தினாலும் எரிச்சலோடு பதில் கொடுத்துவிட்டுத் தான் நகர்ந்தாள் தியா.
இதுமாதிரியான சம்பவங்கள் சிலவற்றுடன் அவளது மணவாழ்க்கையின் நான்கு மாத பக்கங்கள் புரட்டப்பட்டிருக்க, அன்று அவனது தங்கை வழி விஷேசத்திற்கு செல்கையில் பட்டுப்புடவை உடுத்தி நகைகள் அணிந்து கிளம்பிக் கொண்டிருந்தவள் ஷ்யாமின் அளவிடும் பார்வையைக் கண்ணாடி வழி உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.
"என்ன பார்க்குறீங்க?"
"நிஜமா உங்க அம்மா உனக்கு அறுபது பவுன் நகை தான் போட்டாங்களா!?"
அவனது கேள்விக்கு பதிலளிக்காமல் கைகளைக் கட்டிக் கொண்டு அவனையே அழுத்தமாகப் பார்த்தபடி அவள் நிற்க, அவளது கழுத்திலிருந்த நகைகள் மீதிருந்த பார்வையை சற்றே உயர்த்தி அவளது கண்களைப் பார்த்தவன் அந்த பார்வையின் வீரியத்தில் திணறினான்.
"இல்ல தியா.. எல்லாமே ரொம்ப சிம்பிளா சின்னதா இருக்கே.. ஷர்மி எல்லாம் ஒரு ஆரம் அண்ட் நெக்லஸ் செட்டே பதினைஞ்சு பவுனுக்கு வாங்கினா.. அது மட்டும் போட்டாலே போதும்.. அப்படி இருக்கும்.. அந்த மாதிரி கிராண்டா எதுவும் இல்லையே உன்கிட்ட.. அதான் கேட்டேன்"
"எனக்கு கழுத்தை அடைச்சிட்டுப் போடுற நகைகள் மீது இன்ட்ரெஸ்ட் இல்ல.. அண்ட் ஜுவல்ஸ் எனக்காக என் அம்மா எனக்குப் பிடிச்ச மாதிரி வாங்கிக் கொடுத்தது.. இதில நீங்க கேள்வி கேட்க எதுவும் இல்ல.. நான் எத்தனை பவுனில் எத்தனை செட் நகை கொண்டு வந்திருக்கேன்னு உங்க கிட்ட காட்டணுமா என்ன? உங்கள் தங்கைக்கு நீங்க சீர் செய்தால் அது உங்களுடைய விஷயம். இனியும் நீங்க செய்தாலும் நான் கேட்கப் போறது இல்ல.. அதே போல, எனக்கு செய்வதும் செய்யாமல் இருப்பதும் என் அம்மாவின் இஷ்டம். அதை நான் யாருக்கும் கடை பரப்பிக் காட்ட முடியாது.. அதுக்கான அவசியமும் இல்ல.. இதென்ன நூதன வரதட்சணை முறையா? கல்யாணம் பேசும் போது எதையும் செய்ய வேணாம்னு சொன்னீங்களே.. இப்போ என்ன வரிசையா கேள்வி கேட்குறீங்க.. பொண்டாட்டி கொண்டு வருவதில் சாப்பிடணும்னு உங்களுக்குத் தலைவிதி இல்லையே ஷ்யாம்.. நல்லா சம்பாதிக்கிறீங்க.. பின்னே ஏன் என் அம்மா கிட்ட தட்டை நீட்டுறீங்க?"
நக்கலாய் அவள் வினவிய விதத்தில் ஷ்யாமின் முகம் கறுத்தது. அதைத் திருப்தியாகப் பார்த்தவள் அங்கிருந்து அதே நக்கல் புன்னகையுடன் அகல, அன்றிலிருந்தே இருவரும் முகம் கொடுத்துப் பேசிக் கொள்வது குறைவாகிவிட்டது. பிச்சைக்காரன் என்று சொல்லாமல் சொல்லிவிட்ட மனைவியின் மீது கடும் கோபத்தில் இருந்தான் ஷ்யாம்.
நாட்கள் அப்படியே நகர, என்றும் இல்லாத உற்சாகத்தோடு வீடு சேர்ந்தவன் தியாவிற்கு பிடிக்குமென பால்கோவா வாங்கி வந்திருந்தான். ஆனால், அன்றைக்கு பார்த்து அவளுக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்க, அவள் வீடு வர இரவு பத்தை நெருங்கியிருந்தது. தியா மென்பொருள் துறையில் பணிபுரிபவள். அங்கே இதெல்லாம் சகஜம் தான் என்றாலும் கூட அவனுக்கு அவள் தேவைப்பட்ட நேரத்தில் அவள் இல்லை என்பதே பெரிய நஞ்சாகி நெஞ்சில் சேர, அதை அந்த நேரம் காட்ட முடியாமல் அமைதியாக இருக்க வேண்டிய சூழல் வேறு அதை ஆழ்மனதின் அடி ஆழத்தில் புதைக்கச் செய்தது.
நேரம் கடந்து வந்ததில் சோர்வு அவளது முகத்தில் அப்பியிருந்தது. அங்கே நின்றிருந்த ஷ்யாமின் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் அலைபேசியை உயிர்ப்பித்து அலுவலக நண்பனும் அவர்கள் குழுவின் தலைமையுமான நிரஞ்சனுக்கு அழைத்து அவள் வீடு சேர்ந்த செய்தியை அவனுடன் பகிர்ந்தவள், மேலும் சில விஷயங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, அவள் பின்னோடு வந்த ஷ்யாமோ, "யார் ஃபோன்ல?" என்றான்.
"நிரஞ்சன்.. டீம் லீடர்" என்று மட்டும் சொன்னவள் அவனிடம் பேசும் பொறுமையும் மனமும் இல்லாமல் தூங்கிவிட்டாள்.
அவனது ஆழ்மன நஞ்சு தன்னை விட அதிக வலுவுள்ள நஞ்சான சந்தேகத்தை இருகரம் கொண்டு துணைக்கு அழைத்துக் கொள்ள, ஷ்யாமின் மனம் தான் நிலையில்லாமல் தவித்தது. இப்போதே அவளை எழுப்பி சண்டையிடும் வேகம் இருந்தாலும், அவளது தேவை இருக்கும் இந்த நேரத்தில் அவளுடனான வாக்குவாதம் நல்லதல்ல என்று சொன்ன வியாபார மூளையின் அறிவுரையை மதித்து அமைதி காத்தான் அவன்.
மறுநாள் காலை அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவள் ஷ்யாமை நோக்கி, "ஆஃபீஸ் போகலயா?" என்று கேட்க,
"இல்ல.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும் தியா" என்றான் ஷ்யாம்.
"என்ன விஷயம்?"
"நம்ம ஸ்டாக் ஸ்டோர் பண்ணி வைக்கிற குட் டௌன் ரென்ட்டுக்கு தானே எடுத்திருந்தோம்.. அதை காலி பண்ண சொல்றாங்க.. ஒன் வீக்கா அதைப் பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்.. நல்ல இடம் எதுவும் சிக்கல.. இடம் அமைஞ்சா ரென்ட் அதிகம் சொல்றான்.. ரென்ட்டுக்கு போய் அவ்ளோ காசு செலவழிச்சா நம்ம பிஸினெஸ் டல் அடிக்கும்"
"சோ?"
"உங்க அம்மா வீட்டு மாடி பெர்ஃபெக்ட்டா சூட் ஆகும்.. நீ கொஞ்சம் அத்தை கிட்ட கேட்டு பார்க்கிறியா? அத்தை ஓகே சொல்லிட்டா ரென்ட் செலவும் மிச்சம்"
மிகவும் எளிதாக அவன் சொன்ன விதத்தில் அவனை அருவருக்கத்தக்க ஜந்துவைப் பார்ப்பதைப் போல் பார்த்து வைத்தாள் தியா.
"அங்கே ஒரு ஃபேமிலி வாடகைக்கு இருக்காங்க.. தெரியும் தானே ஷ்யாம்?"
"காலி பண்ண சொன்னா பண்ணிட்டுப் போறாங்க.. வேணும்னா அவங்க வேற வீடு பார்க்கிறதுக்கு ஒரு மாதம் டைம் கொடுக்கலாம்"
"ஊஃப்.. இதைப் பத்தி நான் இப்போ பேச முடியாது.. ஆஃபீஸ் முடிஞ்சதும் வந்து பேசுறேன்" என்றவள் அவனிடம் சொல்லிக்கொள்ளக் கூடத் தோன்றாமல் கிளம்பிவிட்டாள்.
அன்று மாலை மீண்டும் ஷ்யாம் அதே பேச்சை எடுத்தான்.
"லுக் ஷ்யாம்.. அவங்க வாடகைக்கு இருந்தாலும் கிட்டத்தட்ட பத்து வருஷமா இருக்கதால எங்க ஃபேமிலி மெம்பர் மாதிரி தான். திடீர்னு அவங்கள காலி பண்ண சொல்ல முடியாது. அண்ட் அம்மாக்கு அந்த வாடகை பணம் முக்கியம்.. என்ன தான் நான் கொடுத்தாலும் என் அம்மா அதை விரும்ப மாட்டாங்க.. சிலரை மாதிரி அடுத்தவங்க உழைப்பில் வந்தவரை லாபம்னு வாழாமல் சுயமா நிற்கணும்னு நினைக்கிற ஆள் என் அம்மா.. அவங்க சேவிங்க்ஸ் எல்லாத்தையும் போட்டு என் கல்யாணத்துக்கு நிறைய பண்ணிட்டாங்க.. சோ, இது சரிவராது.. இதைப் பத்தி இனிமேல் பேசாதீங்க "
ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாய் அவள் உச்சரித்த விதத்தில் இனி இது பற்றி பேசாதே என்கிற எச்சரிக்கை தொனி தெரிய, விட்டுப் பிடிப்போம் என்று அமைதியானான் அவன்.
அடுத்த வந்த தினங்களில் அவ்வப்போது அவள் சம்மதிக்காததை ஒரு குறையாகச் சொல்லிக் காட்டுபவனிடம் கோபம் வந்தாலும் வெளிக்காட்டாமல் பொறுத்துப் போனாள் தியா. அவளது பொறுமை எல்லை கடக்கும் தினம் சீக்கிரத்தில் வந்தது.
"நீ இந்த வேலைக்குப் போறது எனக்குப் பிடிக்கல தியா.. க்விட் பண்ணிடு.. வேற ஜாப் பார்த்துக்கலாம்"
"என்ன திடீர்னு?"
"அதான் பிடிக்கலைன்னு சொல்றேன்ல"
"உங்களுக்குப் பிடிக்கலைன்னு நான் என்னுடைய கெரியரை ஸ்பாயில் பண்ணிக்க முடியாது ஷ்யாம்.. இப்போ தான் புரோமோஷன் கிடைச்சிருக்கு வேற.. நைட் பகல் பார்க்காம வொர்க் பண்ணி இந்த ஸ்டேஜ்க்கு வர்றதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன்னு எனக்குத் தான் தெரியும்.. சிம்பிளா க்விட் பண்ண சொல்றீங்க"
"நினைச்சேன்.. நீ நைட் பகல் வொர்க் பண்ணி ரொம்ப கஷ்டப்பட்டு தான் புரோமோஷன் வாங்கிருப்பன்னு.. யார் கூட வொர்க்? அந்த நிரஞ்சனா?"
கூசாமல் அவன் கேட்ட கேள்வியை அவளது மனம் கிரகித்துக் கொள்ளவே அவளுக்கு சற்று நேரம் பிடித்தது. அவளது உயர்வை எத்தனை இலகுவாக அசிங்கப்படுத்தி விட்டான்!? உள்ளம் கொதித்தது. ஆனால், அவள் அழகியின் வளர்ப்பு அல்லவா? அழுது வடியும் வேலையெல்லாம் செய்யாமல் அடுத்தது என்ன என்று யோசிக்க ஆரம்பித்திருந்தாள். அவள் அலுவலகத்தில் விடுமுறை சொல்லிவிட்டு வீட்டிலிருக்க, ஷ்யாம் அவள் வேலையை விட்டுவிட்டாள் என்று நினைத்துக் கொண்டான்.
அவளுக்கு யோசிக்க சற்று நேரம் தேவைப்பட்டது. நிதானமாகவும் அதேசமயம் தெளிவாகவும் அவள் எடுத்த முடிவு தான் விவாகரத்து. முடிவெடுத்த பின் சிறிதும் யோசிக்காமல் ஷ்யாமை அழைத்து விவரத்தைக் கூறியவள் அவளது அன்னையின் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
ஒருநாள் முழுதும் அழகி எதுவும் கேட்காமல் இருந்தாலும் அவளைத் தொடர்ந்து வந்த வண்டியில் இருந்து கட்டில், மெத்தை என இதர சீர்வரிசைகள் இறங்க, இது தான் என உணர்ந்து கொண்டார்.
தியா சொல்லி முடித்துவிட்டு அன்னையின் முகத்தைப் பார்க்க, அது எப்போதும் போல அமைதியாகவே இருந்தது. அவள் எதிர்பார்த்தது தான்.
"என்மேல தப்பா மா?"
மகளின் கேள்வியில் அவளது கன்னத்தைத் தட்டியவர், "நான் உன்னை அப்படி வளர்க்கவில்லை டா" என்றவர் மெதுவாகப் புன்னகைத்தாலும் தாய் மனம் மகளின் வாழ்க்கையை எண்ணி வருத்தம் கொண்டது தான் நிஜம். என்ன இருந்தாலும் அன்னை அல்லவா!?
"வருத்தமா இல்லையா தியா மா?" என்று அவர் வருத்தம் இழையோடிய குரலில் கேட்க,
"கல்யாணம் ஒருவரின் நிறை குறைகளைப் பகிர்ந்து இணையின் மகிழ்வில் தானும் மகிழ்ந்து, ஒருவர் துன்பத்தில் மற்றவர் வருந்தி, ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பது தானேம்மா? அதனால் தானே துணைவன் துணைவி அப்படியெல்லாம் சொல்றாங்க.. அடிப்படை லாஜிக்கே எங்க வாழ்க்கையில் இல்லை.. என் ஏற்றத்தைக் கண்டு பொறாமை பட்டு அதற்கு தப்பான சாயம் பூசும் ஒருவன் எப்படிம்மா என் கூட வாழ்நாள் முழுவதும் துணையாக இருக்க முடியும்? அதிக சுயநலம் வேறு.. நம் வீட்டின் மேல கண் வேறு.. மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சும் அட்டையாய் இருக்க ஆசைப்படுகிறான். ஆறு மாசத்துக்கே மூச்சு முட்டுது.. இப்போவும் என் கல்யாண வாழ்க்கையில் தோத்துட்ட ஃபீல் எனக்கு வரலைம்மா.. என் காலைப் பிடித்து கீழே இழுக்கிற ஒருத்தனை உதைச்சு தள்ளிட்டு உங்க முன்னாடி நிற்கிற உணர்வு தான்.. அப்படி இருக்கும் போது எனக்கு வருத்தம் இருக்குமா?" என்றாள் தியா.
"உங்களுக்கு வருத்தமா மா?"
"கல்யாணம் ஒண்ணு மட்டும் தான் வாழ்க்கை இல்லைன்னு எனக்கும் நல்லா தெரியும் தியா.. ஆனால், எனக்கு அடுத்து உனக்கான துணை யாராவது இருக்கணும்னு எதிர்பார்க்கிற சாதாரண அம்மாவாக தான் இந்த விஷயத்தில் என் மனசு யோசிக்குது. அதுக்காக எல்லாம் உன்னை ஷ்யாம் கூட சேர்ந்து வாழுன்னு நான் சொல்லப் போறது இல்ல.. ஆனால், நீ எந்த முடிவெடுத்தாலும் நான் உன் கூட இருப்பேன்"
"நீங்க சொன்னாலும் நான் கேட்கப் போறது இல்ல" என்று குறும்பாகக் கூறியவள் அழகியின் கன்னத்தில் இச்சென்ற சப்தத்துடன் முத்தமிட்டு, "தேங்க்ஸ் மா" என்றாள்.
அவளது வார்த்தையில் தெரிந்த நிறைவில் அழகி இதமாகப் புன்னகைத்தார்.
****ஐந்து வருடங்கள் கழித்து****
"வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை" என்ற செய்தி தொலைக்காட்சியில் தலைப்புச் செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, அந்த சம்பவம் ஒருவாரம் வரையில் அனைத்து சமூக வலைதளங்களிலும் பேசும் பொருளாக்கப்பட்டது. அலைபேசியில் தொடர்ந்து வந்த பதிவுகளைப் பார்த்துக் கொண்டவரது இதயமெங்கும் வலி இருந்தாலும் இதழ்கள் என்னவோ வெறுப்புடன் கூடிய கேலி புன்னகையையே சுமந்திருந்தது.
"தற்கொலை தீர்வல்ல.. இறப்பிற்கு விவாகரத்து மேல்.. திருமணம் ஒன்றே வாழ்வல்ல" இப்படி பல தரப்பட்ட வாசகங்கள் இணையத்தில் உலாவ, ஒரு பெண்ணின் உயிர் மீது எழுதப்பட்ட வாசகமாய் தான் அழகியின் கண்களுக்கு அவை தெரிந்தன. ஏனெனில் தியா விவாகரத்து பெற்று வீட்டில் இருந்த காலங்களில் இந்த சமூகம் அவளை எப்படி பார்த்தது என்று அவருக்குத் தெரியுமே..! பொறுமை காத்துப் பிழைத்துக் கொள்ளச் சொன்ன உறவுகள் அல்லவா ஏராளமாக அவர்களைச் சுற்றி இருந்தார்கள். போதாத குறைக்கு பிள்ளைக்கு புத்தி சொல்லி பிழைக்க வைக்கும் வழியை விட்டுவிட்டு வீட்டில் இருத்தி சோறு போடுகிறாள் என்று அவரை ஏசியவர்களும் அதிகம் அல்லவா? இதோ அந்த பெண்ணின் இறப்பிற்காக 'உச்' கொட்டும் இதே சமூகம் இந்த விஷயத்தை இரண்டொரு நாட்களில் மறந்து தன் வீட்டுப் பெண்களுக்கு 'புத்திசாலித்தனமா பிழைக்கப் பார்' என்ற அறிவுரையை வழங்கத்தானே போகிறது!? வாழ்க்கை வாழ்வதற்கு என்பது அவர்களுக்குப் புரிய இன்னும் எத்தனை மரணங்கள் தேவைப்படுமோ?
மனம் கடத்திய வலியோடு அலைபேசியில் தெரிந்த அந்த பெண்ணின் முகத்தைக் கைகள் கொண்டு தடவிய அழகியின் கண்களில் கண்ணீரின் சாயல்.
அழகியின் இதழ்கள், 'வாழ்ந்திருக்க வேண்டிய பெண்' என சன்னமாக முணுமுணுத்துக் கொண்டன.
அந்த பெண்ணைப் பற்றிய அவரது சிந்தனை, "ம்மா" என்ற துள்ளலான அழைப்பொலியில் கலைய, அங்கே தன் எட்டுமாதக் குழந்தையைத் தோளில் சுமந்தபடி அவளது கணவன் மகேஷுடன் புன்னகை சுமந்த இதழ்களுடன் நின்றிருந்தாள் தியா.
***
நன்றி.