அத்தியாயம் - 1
பூனாவின் புகழ்பெற்ற நிறுவனத்தின் மேனேஜர் அறையில் நின்று கொண்டிருந்தாள் அவள். அலைபேசி அழைப்பை பேசிமுடித்துவிட்டு தன் முன் நின்றவளிடம் பார்வையைத் திருப்பினார் அவர்.
“தான்வி நீங்க எடுத்த முடிவுல உறுதியா இருக்கீங்களா? கொஞ்சம் ரீ கன்சீடர் பண்ணலாமே? யூ ஆர் தி பெஸ்ட் எம்பிளாய்”
“சார் பிளீஸ் எனக்கு இங்க ஒர்க் பண்ண விருப்பம் இல்ல. ரீசன் என்னனு உங்களுக்கே தெரியும். அப்கோர்ஸ் என்னோட முடிவு கோலை தனமானது தான் பட் ஐ கான்ட் சார் ஐ நீட் சம் பிரேக்.”
“சரி தான்வி நான் எம் டி கிட்ட பேசி உங்களுக்கு லீவ் வேணும்னா அரேஜ் பண்ணி கொடுக்குறேன்”
“நோ சார் பிளீஸ்”
“ஒகே இதுக்கப்புறம் உங்களோட விருப்பம்”
“தாங்க்யூ சார்” என்றவள் வெளியே வந்து தனது பொருட்களைப் பேக் செய்திட ஆரம்பித்தாள். அப்பொழுது அவள் முன் வந்து நின்றான் உடன் பணியாற்றும் மகேஷ்.
“தான்வி நிஜமாவே போறியா?
அவனிடம் பதில் ஏதும் கூறாமல் நகர்ந்தவள் சில அடிகளைக் கடந்த பின் திரும்பி பார்த்தாள்
“மிஸ்டர் மகேஷ் இனி எந்தப் பொண்ணுகிட்டையும் காதல்ன்ற வார்த்தைய சொல்லி ஏமாத்தாதீங்க அட்லீஸ்ட் நீங்க இப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுகிட்டையாவது உண்மையா இருங்க”
“தான்வி சாரி, எங்க வீட்டுல உன்னை யாருக்குமே புடிக்கல அவங்க எதிர்ப்ப மீறி என்னால எப்படி?” என்றவன் மேற்கொண்டு பேசுவதற்குள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்திருந்தாள் தான்வி.
செல்லும் அவளை வெறித்திருந்த மகேஷ் என்பவன் தலையைக் குழுக்கியபடி தன் வேலையைப் பார்த்திட சென்றுவிட்டான்.
தான்வி செல்வதைத் தடுக்க முடியாமல் பார்த்திருந்தனர் அவளுடன் பணி செய்தவர்கள். அவர்களது பார்வை அவளைக் கொல்லாமல் கொன்றது.
வாசல் தாண்ட இருந்தவளை அவள் பின்னே கேட்ட குரல் தடுத்தது. அந்த நிறுவனத்தில் சேர்ந்ததில் இருந்து தன்னிடம் உண்மையான நட்புடனும் அன்புடனும் பழகிய அவளது ஒரே தோழி அதுவும் தமிழ் தெரிந்த தோழி. அவளை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள்.
“தான்வி நீ பண்றது சரினு தோணுதா? அந்த மகேஷ் தைாியமா வேலைக்கு வரான் நீ ஏன்டி போகனும்?”
“அவன் என்னை ஏமாத்திட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கப் போறதால நான் இந்த வேலையவிட்டு போறதா நினைக்காத, எப்போ அவன் என்ன ஏமாத்திட்டு இருக்கானு தெரிஞ்சதோ அப்போவே என் காதல் அழிஞ்சு போச்சு. இப்போ அவன் மேல எனக்குக் கோபம் வெறுப்பு காதல்னு எந்த உணர்வும் இல்ல. இதுலையே புரிஞ்சுக்கோ அவன் இப்போ எனக்கு யாருனு?”
“அப்புறம் ஏன்டி போற? நான் முன்னாடியே உன்னை வார்ன் பண்ணின்னேன் நீ தான் என் பேச்ச கேட்காம அவனை நம்பின இப்போ….”
“தப்புப் பண்ணிட்டேன் தான் ஒத்துக்கிறேன். ஆனால் என்னைப் புரிஞ்சுக்கோ என்னால இங்க இருக்குறவங்களோட அனுதாப பார்வைய ஏத்துக்க முடியாம தான் போறேன். யாருக்கு வேணும் இந்த அனுதாபம். சின்ன வயசுல இருந்து நிறைய அனுதாப பார்வைகள சந்திச்சு சலிச்சு போய்ட்டேன்டி விட்ரு பிளீஸ்”
“சரி நான் இதுக்குமேல உன் முடிவுல குறுக்க நிக்கல ஆனால் இந்த வேலையவிட்டுட்ட அடுத்து என்ன பண்ணப் போற?”
“ஆல்ரெடி ஒரு கம்பெனி பார்த்தாச்சுடி இரண்டு வாரத்துக்குள்ள ஜாயின் பண்ணனும்”
“ஓ.. எந்தப் பிளேஸ்டி உன் ஹாஸ்டல்ல இருந்து பக்கமா? இல்லனா துாரமா?”
“ தமிழ்நாடு போறேன்டி. நான் பூனே வரைக்கும் வந்தது மகேஷ்காக இதுக்கப்புறம் எனக்கு இங்க என்ன வேலை. அதுமட்டும் இல்லாம என் ஊரு எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? அவனுக்காக இங்க அட்ஜஸ் பண்ணிக்கிட்டேன். இனிமே நோ அட்ஜஸ்மெண்ட் எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கப்போறேன்”
“சூப்பர்டி ஆல்திபெஸ்ட் யூவர் நியூ சேப்டர் இன் யூர் லைஃப். உனக்கு எப்போ என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்ன கான்டேக்ட் பண்ணு”
“தாங்க்ஸ்டி கண்டிப்பா” என்றவள் அவளிடமிருந்து விடைபெற்றாள்.
பூனேவிலிருந்து சென்னை செல்லும் ரயிலில் அமர்ந்திருந்தாள் தான்வி. காதல் தோல்வியினால் ஏற்பட்ட மனதின் கசப்பு ஒருபுறம் இருந்தாலும் தன் சொந்த ஊருக்கு செல்வதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தாள்.
இரயில் புறப்பட ஆரம்பித்தது. தான்வியின் அருகே எதிரே அமர்ந்திருந்த தாத்தா அவரது அருகில் அமர்ந்திருந்த ஓர் இளைஞனிடம் “எங்க போற தம்பி?” என கேட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கே இருப்பதால் அவர்கள் பேசும் மொழியை அவளால் நன்றான புரிந்து கொள்ள முடியும் ஆனால் சரளமாகப் பேச இயலாது.
தாத்தாவின் கேள்விக்கு அழகாக புன்னகைத்தவன் “அப்பாவ பார்க்க தமிழ்நாட்டுக்கு போறேன்” என்றான்
“தமிழ்நாட்டுக்கு? அங்க வேலைக்கு எதுவும் போயி இருக்காரா?”
“ஆமா அங்க ஒரு கம்பேனியில வேலை பார்க்குறார்.”
மேலும் அந்த தாத்தா அவனைப் பற்றி கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கப் பதில் அளிக்கத் துவங்கினான்.
அதில் இருந்து அந்த இளைஞன் மலைகிராமத்தை சேர்ந்தவன் என்பதும் அவன் சிறு வயதாக இருக்கும் போதே அவனது தந்தை தமிழ்நாட்டிற்கு வேலைக்குச் சென்றிருப்பதாகவும் தற்போது தான் படித்து முடித்து வேலைக்கு செல்லும் நிலையில் இருப்பதால் தந்தையைத் தனது ஊருக்கே அழைத்துவர வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு செல்வதையும் அறிந்து கொண்டாள்
அவன் மலைகிராமத்தை சேர்ந்தவன் என்று கூறியவுடன் அந்தத் தாத்தா அவனைவிட்டு நகர்ந்து அமர்ந்தார். அவரது செயல் தான்விக்குக் கோபத்தை உண்டுபண்ணியது.
அந்த இளைஞனோ சிறு புன்னகையோடு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
“சே எங்க போனாலும் இந்தப் பாகுபாடு குறையவே செய்யாது போல” என்று எண்ணியவள் தானாகவே அந்த இளைஞனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.
அவன் முதலில் சங்கடம் கொண்டாலும் சிறிது நேரத்தில் சகஜமாகப் பேசிட ஆரம்பித்தான். இருவரும் சிறிது நேரத்தில் நண்பர்கள் ஆகிவிட்டனர். தங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்
“அப்புறம் சிராஜ் சென்னை போனதும் என்ன பிளான்?”
“சென்னையில எங்க வேலன் சார் பையன் திகழ்கூடத் தங்கிட்டு அப்புறம் இரண்டு பேரும் சேர்ந்து மதுரை போறோம்”
“வேலன் சார் உங்க அப்பாவோட சூப்பரவைசர் இல்ல?”
“ஆமா”
அவர்களது பயணம் முடிவுக்கு வந்த நேரம் புன்னகையோடு இருவரும் விடைபெற்று சென்றனர்
தான்வி ஒருபுறம் செல்ல அவளுக்கு மறுபுறம் சிராஜால் திகழ் என அழைக்கப்பட்ட திகழ்முகிலன் தன் கையில் உள்ள கைகடிகாரத்தில் நேரத்தை சோதித்தபடி ஓடிவந்தான்.
சிராஜை பார்த்ததும் கட்டிக் கொண்டவன் அவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தான்.
சிராஜ் தான்வியைப் பற்றி அவனிடம் கூறி அவள் சென்ற திசையைக் கை காட்டினான். திகழ் எட்டி எட்டி பார்க்க அவள் முகம் தெரியவில்லை அத்தோடு அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டான்.
“முகம் தெரியலடா, போய்டாங்க போல, நீ வா நாம போலாம்”
“ஆமா உனக்கு டிரெயினிங் முடிஞ்சதுல எந்த ஊருல டியூட்டி”
“சொல்றேன்டா இப்போவே எல்லாத்தையும் சொல்லனுமா வா பொறுமையா பேசிக்கலாம்” என்றவன் முன்னோக்கி நடக்க சிராஜ் அவனைப் பின்தொடர்ந்தான்
ஒருவாரம் கழிந்த பின்னான ஒரு நாளில் தான்வி வேலை செய்யும் நிறுவனத்தில் காலை நேரமே மிகவும் பரபரப்பாக இருந்தது.
எம் டி யின் அறையில் மேனேஜர் தலை குனிந்து நின்று கொண்டிருந்தார்.
“நான் சொன்ன வேலை என்னாச்சு மிஸ்டர்?”
“சார் அங்க ஏற்கனவே நடந்த இன்சிடன்டால அங்க போறதுக்கு ஸ்டாஃவ்ஸ் எல்லாரும் பயப்படுறாங்க சார் யாரும் சம்மதிக்கவே மாட்றாங்க”
“சம்பளம் இன்கிரிமெண்ட் இப்படி எதாவது குடுத்து ஒத்துக்க வை”
“டிரை பண்ணிட்டேன் சார் நோ யூஸ்”
“அப்போ வேலையவிட்டு துாக்கு”
“அதுக்கும் தயாரா தான் சார் இருக்காங்க. எல்லாரையும் வேலையவிட்டு துாக்க முடியாதே சார். நமக்குத் தான் லாஸ் ஆகும்”
தலையைக் கீறி யோசித்தவர் “பிரசர்ஸ் எத்தனை பேரு ஜாயின் ஆகி இருக்காங்க” என்று கேட்டார்.
“நாழு பேர் சார்”
“அவங்கள்ல ஒருத்தர அனுப்புவோம்”
“ஆனா சார் அவங்க எப்படி சார் இந்த வேலைய ஹேண்டில் பண்ண முடியும் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம எப்படிக் கொடுக்க முடியும்”
“நமக்கு வேலை முடியனும் அது பெர்ஃபெக்டா இருக்கனும்னு அவசியம் இல்ல. நிறைய பிராஃவிட் வருது இழக்க முடியாது சோ அவங்கள வர சொல்லு”
“சரி சார்” என்றவர் அந்த நான்கு நபரையும் உள்ளே அழைத்தார். அவர்களுள் தான்வியும் இருந்தாள்.
“ஹெேலா எவ்ரிஒன் நம்ம கம்பெனிக்கு புதுசா ஒரு புராஜெக்ட் வந்துருக்கு பழனி மலை ரிசர்வ் ஃபாரஸ்ட்க்கு பக்கத்துல ஓர் இடம் ஏரியோட அமைஞ்ச ஒரு வுட் ஹவுஸ் அதோட ரினோவெர்சன் வொர்க் உங்கள்ல ஒருத்தருக்கு ஆபர் பண்ணலாம்னு இருக்கேன். உங்களுக்கு இதுல விருப்பமா?”
அதில் இருவர் மறுத்துவிட மற்ற இருவரை பார்த்தார் அவர். தான்வியும் அருகில் இருந்தவனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“சரி ஒன்னும் பிரச்சனை இல்ல யோசிச்சு உங்க முடிவ சொல்லுங்க இப்போ போய் உங்க வேலைய பாருங்க”
தான்வியோடு போட்டியிட இருந்தவன் ஏற்கனவே பணியாற்றும் ஒருவரின் பரிந்துரையிலே அந்த கம்பெனியின் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சிபெற்றான்.
அவன் அந்த நபரிடம் சென்று தனக்கு கிடைத்த வாய்ப்பை பற்றி கூறவும் அவரோ அதிர்ந்து போனார். உடனே அப்பணியில் உள்ள விவகாரத்தை எடுத்துரைக்கவும் போக வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டான்.
இறுதியாக தான்வி அந்த வாய்ப்பிற்குத் தேர்வானாள்.
எம் டி அவளிடம் “இந்த வாரமே நீங்க அங்க புறப்பட வேண்டும் தான்வி” என்றவர் அவள் செல்வதற்கான ஏற்படுகளை ஏற்கனவே செய்துவிட்டதாகத் தெரிவித்தார். பின் தன் கைகளில் இருந்த டிக்கெட்டை கொடுத்து அனுப்பினார்.
தன் கையில் இருந்த டிக்கெட்டில் டெஸ்டினேசன் என்ற இடத்தில் பழனி என்று இருந்தது.
பழனி ரிசவர்வ் ஃபாரஸ்ட் அருகே ஏரியோடு அமைந்த அழகிய கிராமம் நாழிகை குறிஞ்சி (கற்பனை கிராமம்)
மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வேலைகளைப் பார்த்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஏரியை நோக்கி சில வண்டிகளில் பொருட்கள் ஏற்றி செல்வதை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்
கூட்டத்தில் இருந்த ஒருவர் “இந்த வண்டியெல்லாம் அந்த மரவீட்டுக்கு போற மாதிரி இருக்கு” என்றார்
மற்றொருவரோ “ஆமா அங்க தான் போகுது திரும்ப அங்க இருந்த வீடுகளை மேம்படுத்த வேலைகள் நடக்கப் போகுதாம் போன வாரமே சிலர் வந்து பார்த்துட்டு போனாங்க” என்றார்
“என்ன மாதிரி விஷயங்கள் நடக்க போகுதோ? ஏற்கனவே நடந்ததை ஜீரணிக்க முடியல இப்போ மறுபடியும் முதல இருந்தே ஆரம்பமாகுதே”
“நாம என்ன பண்ணமுடியும் நல்லதே நடக்கனும்னு கடவுள வேண்டிக்க வேண்டியது தான்”
“ஆமா ஆமா” இப்படியாக ஆளுக்கு ஒன்றை கூறியபடி அனைவரும் கலைந்து சென்றனர்.