அத்தியாயம் - 10
அழைப்பு ஏற்கப்பட்டதும் “ஹலோ” என்றாள். எதிர்புறம் “யாரு?” என்று கேள்வி கேட்கப்பட்டது.
“நான் சிராஜ் ஃபிரண்ட் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” என்றாள் தான்வி
“என்ன விஷயம்” என நேராக பாயிண்ட் எடுத்து பேச “ஒரு உதவி வேணும்” என்றாள்.
“என்ன உதவி முதல நீங்க யாருனு சொல்லுங்க”
“என்னோட பேரு தான்வி நான் ஒரு ரினோவேர்சன் ஒர்க்குக்காக இங்க நாழிகை குறிஞ்சி வந்துருக்கேன் இங்க பழனி பக்கத்துல ரிசர்வ் பாரஸ்ட் ஏரியா பக்கம்”
எதிர்புறம் பேசிக் கொண்டிருந்த திகழிற்கு அவள் யார் என்பது புரிந்துவிட்டது. “ஏய் வீட்டுல இருந்து வெளிய வா நான் வெளிய தான் இருக்கேன்” என்றான்.
“என்ன வெளியவா?” என யோசித்தபடி வந்து பார்க்க காதில் வைத்திருந்த கைபேசியை எடுத்து அவள் புறம் ஆட்டிக் காண்பித்தான் திகழ்.
“இவன் தான் சிராஜ் பிரண்டா என்னடா இது என் விதி இப்படி விளையாடுது கடவுளே இவன் மேல நல்ல அபிப்ராயம் வராம தான் எதுவும் சொல்லமா சிராஜ்கிட்ட உதவி கேட்டேன்” என புலம்பியபடி அவன் அருகே சென்றாள்.
தான்வி முதன்முதலாக அவளை காப்பாற்றிய போது அவன் மீது பெரும் மரியாதையும் நம்பிக்கையும் தோன்றியது. அதன் பொருட்டே மறுநாள் அவனை பார்த்து புன்னகைத்தாள். ஆனால் அவன் அன்று பேசிய வார்த்தையும் விதமும் அவளது தன்மானத்தை சீண்டி பார்ப்பதாக மாறிவிட்டது.
அதனால், தானே சென்று அவனிடம் உதவி கேட்கவும் தயக்கம் அதேநேரம் ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி பேசி நடந்து கொள்ளும் அவனது குணமும் நம்பிக்கையின்மையை தோற்றுவித்தது.
“நீ சிராஜ் பிரண்டா?”
“ஆமா”
“எப்படி பழக்கம்”
“டிரெயின்ல மீட் பண்ணினோம்”
“ஓ அந்த பொண்ணு நீ தானா?” என்றவன் “என்ன உதவி உனக்கு தேவைப்படுது வெளியில தான நான் இருக்கேன் அதைவிட்டுட்டு அவன்கிட்ட போன் பண்ணி பேசி இருக்க பாவமே தனியா ராத்திரியில தங்கியிருக்கியேனு துணைக்கு நாமளும் இருக்கலாமேனு இங்க நான் கொட்டுர பனியிலையும் வெயில்லையும் கிடந்து கஷ்டப்படுறேன் நான் உனக்கு மனுசனா தெரியல இல்ல” என்றான்.
“எப்படி தெரியும் எப்போ பாரு பேய் மாதிரி கத்திக்கிட்டே இருந்தால் எப்படி தைரியமும் நம்பிக்கையும் வரும்” என தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
“வாய் திறந்து பதில் பேசு எங்கிட்ட பேச இவ்வளவு தயங்குற ரயில்ல அவன் கூட அவ்வளவு நேரம் கதை அளந்துகிட்டே வந்துருக்க என்ன பார்த்த பேய் பிசாசு மாதிரியா தெரியுது?”
அவன் தன்னை பேயா எனக் கேட்டதும் தான்விக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவனது முறைப்பு கடுமையாகவும் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“என்ன உதவி வேணும்?”
“கொஞ்சம் நம்பிக்கை வை தான்வி இவன் உதவி பண்ணினால் சரி இல்ல துரோகம் பண்ணினாலும் சரி எதுவந்தாலும் பார்த்துக்கலாம் முயற்சி பண்ணாம விட்டால் ஆதிரை விதார்த் சாவுக்கு நியாயம் கிடைக்காது” என்று சிந்தித்தவள் பெரிய மூச்சை இழுத்துவிட்டு அவன் முகத்தை பார்த்தாள்.
“கொஞ்சம் வீட்டுக்குள்ள வாங்க”
அவன் கேள்வியாக புருவத்தை உயர்த்த சுற்றி பார்த்து இவள் தயங்கினாள். திகழ் அமைதியாக அவளை கடந்து வீட்டை நோக்கி நடந்தான்.
அவனை தொடர்ந்து வீட்டிற்குள் வந்தவள் அவனை தன் அறைக்கு அழைத்துச் சென்று ரகசிய அறையை காண்பித்தாள்.
உள்ளே சென்றவன் ஏதோ ஒன்று புரிய தொடங்க வேகமாக அங்கிருந்த கணினியை பரிசோதித்தான். ஆதாரங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டான். அவன் மேற்கு மலையின் புறம் சென்றபோதே அங்கு நடப்பதை தெரிந்து கொண்டான்.
அங்கு நடப்பதை குறித்து அவன் அனுப்பிய ஆதாரங்கள் அனைத்தும் போதவில்லை என திகழனுக்கு உதவும் அவனது தோழன் கூறிவிட்டான். சரியான ஆதாரங்கள் தற்போது கிடைத்துவிட்டது.
அவனை வித்தியாசமாக பார்த்த தான்வி தனக்கு தெரிந்ததை சொல்ல தயங்கினாள்.
ஆதாரங்கள் அனைத்தும் தற்போது வேறொரு செய்தியையும் சேர்த்தே சொல்ல அப்படி மட்டும் இருக்க கூடாது என்று வேண்டிக் கொண்டான்.
தனது பயத்தை வளரவிடக் கூடாது என்பதால் தான்வியிடம் “இந்த ரூம் ஆதிரை யூஸ் பண்ணியதா?” எனக் கேட்டுவிட்டான். ஏனென்றால் ஆதாரங்கள் அனைத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகள் ஐந்து வருடங்களுக்கு முன்பு சேகரிக்கப்பட்டது என்பதை உணர்த்தியது.
அவனது கேள்வியில் பயந்து போனாள் தான்வி. இவனும் அந்த மணிவண்ணனின் கூட்டாக தான் இருக்க வேண்டும். தானே ஆதாரங்கள் அனைத்தையும் அவர்களுக்கு சுலபமாக காட்டி கொடுத்துவிட்டோமே என்று வருத்தப்பட்டாள்.
அவன் பதில் வராததால் திரும்பி பார்க்க அவளது உறைந்த நிலையை கண்டு சலிப்படைந்தான். வாசல் கதவை சென்று சாத்தியவன் “உனக்கு வேற என்னை உண்மை தெரியும்னு சொல்லு? பிளீஸ் ஆதிரையோட சாவுக்கு காரணம் இந்த அறைனு மட்டும் சொல்லிடாத” என கெஞ்சினான்.
அவளது தலை அனிச்சையாக மேலும் கீழும் ஆடவும் உடைந்து போய் அழுதிட ஆரம்பித்தான்.
எப்பொழுதும் கம்பீரமாகவும் திமீராகவும் இருக்கும் அவனை அழுது பார்க்கும் பொழுது தான்வியின் உள்ளத்தில் இரக்கம் பிறந்தது.
அருகில் சென்று அவனது தாேள் தொட்டவள் “என்னாச்சு?” என்று கேட்டாள். அவன் தனது போனின் வால்ப்பேப்பரை காட்ட அதில் ஆதிரையுடன் அவன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது.
அவளுக்கு அந்த புகைப்படத்தில் இருந்த பெண் யார் என்று தெரியவில்லை. ஆதிரையை பற்றி வெறும் செவி வழிக்கேட்டது மட்டுமே கேள்வியாக அவன் முகம் பார்த்தாள்.
“இது ஆதிரை என் அக்கா” என்றவன் “உனக்கு வேற என்ன உண்மை தெரியும் பிளீஸ் சொல்லு?” என்றான்.
அவளும் தனக்கு தெரிந்து உண்மையை பற்றி அவனிடம் ஒன்றுவிடாமல் கூற அவனுள் ஆத்திரம் பொங்கியது. ஆனால் அவசரப்படவில்லை. நிதனமாக அவ்விடத்திலே அமர்ந்தவன் என்ன செய்வது என்று யோசித்தான்.
ஆதாரங்கள் அனைத்தையும் தனது நண்பனுக்கு அனுப்பி வைத்தவன் தங்களது டிப்பாட்மெண்ட்டின் மேல் அதிகாரிகளுக்கு நேரடியாகவும் மீடியாவிற்கும் அனுப்பி வைத்துவிட்டான்.
மீடியாவிற்கு கிடைத்ததும் விஷயம் காட்டு தீ போல் வேகமாக பரவ ஆரம்பித்தது. மேலும் தான்வியை அழைத்துக் கொண்டு பூமிகாவிடம் சென்றவன் அவளிடம் தான் யார் என்பதை பற்றி கூறினான்.
உடனே அவனது காலில் வேகமாக விழுந்தாள். பதறி போய் அவளை தூக்கி நிறுத்தினான் திகழ்.
“அந்தாளு என் அண்ணன் உயிரை மட்டும் இல்லாம உங்க அக்காவோட உயிரையும் சேர்த்தே எடுத்துட்டாரு.என் அண்ணனை காதலிச்சதை தவிர ஆதிரை அண்ணி வேற எந்த தப்பும் பண்ணல உங்க அக்கா சாவுக்கு என் அண்ணனும் ஒரு வகையில காரணம் ஆகிட்டான் அவன் சார்பா நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றாள் பூமிகா.
பின் அவளிடமும் வாக்குமூலங்கள் வாங்கியவன் அதனையும் அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பி வைத்தான்.
லோக்கல் ஏரியா போலீஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகள் பிஸ்னஸ்மேன்கள் ஊர் தலைவர் அவருக்கு துணையாக இருந்த கையாட்கள் என இந்த சட்ட விரோதத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். அனைத்து விஷயமும் தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஆதிரையின் குடும்பமும் விதார்த்தின் தாய் மற்றும் தங்கையும் தான் பெரிதும் உடைந்து போயினர். ஆதிரை மற்றும் விதார்த் கொல்லபட்ட செய்தியும் அதற்கு காரணமானவர்களை பற்றியும் அடுத்தடுத்து தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
நரபலியும் நடந்து இருப்பது தெரிந்ததும் நாடே ஸ்தம்பித்தது. மேலும் உண்மையை திகழ்முகிலனிடம் சொல்ல முயன்ற மகேந்திரன் என்பவரையும் கொலை செய்தது தெரிய வந்தது.
குற்றத்தில் ஈடுபட்டோருக்கு சிறை தண்டனையும் நரபலியை மேற் கொண்டோருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. மேலும் ஆதிரை விதார்த் மகேந்திரன் மூவரின் கொலைக்கு மூலக்காரணமான மணிவண்ணனுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தான்வியின் எம்.டியும் கைது செய்யப்பட்டு அபராதமும் சேர்த்தே விதிக்கப்பட பணத்தை கட்ட முடியாமல் நிறுவனத்தை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஏரிகரை வீடுகளை அரசாங்கம் கையகப்படுத்தி அதனை ரிசர்வ் பாரஸ்ட் ரேஞ்சர்கள் மற்றும் அவர்களது சேவை கட்டுப்பாட்டு அறையாக மாற்றப்பட்டது.
சில மாதங்களுக்கு பிறகு
கிராம மக்கள் ஊர் தலைவரின் செயலால் அதிர்ச்சி அடைந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் மூடநம்பிக்கை மாறுவதாக இல்லை.
ஊரில் யாருக்கு காய்ச்சல் தலைவலி என்றாலும் இன்னமும் விதார்த்தின் தாயை அழைத்து திருநீர் போட்டுவிடுங்கள் என்று கூறினர்.
அவனது ஆன்மா தான் தங்களது குழந்தைகளை பிடித்துவிட்டது என்றும் அவர்களது ரத்த சாெந்தம் திருநீறு பூசினால் நோய் குணமாகிவிடும் என்று கூறி அவர்களது மனதை புண்படுத்தினர்.
இதற்கு முன்பும் ஐந்து வருடங்களாக இது தொடர்ந்தாலும் பொறுத்துக் கொண்டிருந்த விதார்த்தின் தாயால் அதற்கு மேலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அழைத்துச் செல்ல வந்த அனைவரையும் திட்டி அனுப்பினாள். நாளுக்கு நாள் அவருக்கு மன அழுத்தம் அதிகமானது.
விதார்த்தின் வீட்டில் தான் தங்கியருந்தாள் தான்வி. உறவுகள் இன்றி வளர்ந்த அவளுக்கு அவரது நிலை வருத்தத்தை உண்டாக்கியது. அவரை தாயாகவும் பூமிகாவை தங்கையாகவும் ஏற்றுக் கொண்டாள். அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றுவிட்டாள்.
அங்கேயே ஒரு வீடு எடுத்து தங்கியவள் தொலை தூர கல்வி மூலம் பூமிகாவை படிக்க வைத்தாள்.
மாதங்கள் உருண்டோடியது ஒரு காலை நேரம் அவர்களது வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டது.
பூமிகா சென்று கதவை திறந்தாள். வெளியே திகழ் முகிலன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள் பூமிகா.
“உள்ள வாங்க சார்” என்றவள் சமையல் அறையில் இருந்த அவளது அம்மாவை கூப்பிட்டாள். அவர் வந்து இவரை உபசரிக்கவும் குளியல் அறையில் இருந்து தான்வி வெளியே வரவும் சரியாக இருந்தது.
அவர்கள் தங்கியிருப்பது ஒரு படுக்கை அறை சமையல் அறை மற்றும் ஒரு ஹால் அதனை ஒட்டிய பாத்ரூம் என்று இருந்தது.
சுடிதார் டாப்பை அணிந்திருந்தவள் பேண்டை அணியாமல் அதற்கு பதில் இடுப்பிலிருந்து முட்டிக்கு கீழ் வரை துண்டு ஒன்றை கட்டியிருந்தாள்.
பெண்கள் மூவர்மட்டுமே தங்கியிருப்பதால் அவள் எப்பொழுதும் இப்படியே செய்வாள். காலிங் பெல் சத்தத்தை கேட்ட பொழுது கூட அடிக்கடி மளிகை சாமான் கடன் கேட்டு வரும் பக்கத்து வீட்டு அக்கா என்றே நினைத்தாள்.
அவன் முன்பு இவ்வாறு நிற்பது அவமானமாக போய்விட வேகமாக அறைக்குள் சென்று மறைந்தாள்.
சிறிது நேரத்தில் பூமிகாவும் அவளது அம்மாவும் சமையல் அறையில் இருந்து டீ மற்றும் பிஸ்கட்டுகளை எடுத்து வந்து கொடுத்தனர்.
மறுக்காமல் வாங்கி கொண்டான். அவன் குடித்து முடித்ததும் “என்ன விஷயம் தம்பி திடீர்னு இத்தனை மாசத்துக்கு அப்புறம் வந்து இருக்கீங்க?” எனக் கேட்டார்.
“அது உங்க கணவருக்கு நாளைக்கு தூக்குமா மனசு கேக்கல உங்க வாழ்க்கைய வீணடிச்சதா நீங்க நினைச்சுருந்தா மன்னிப்பு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்”
“அவன் எனக்கு புருசன் இல்லனு எப்பவோ முடிவு பண்ணிட்டேன் தம்பி அவன் கட்டுன தாலிய கூட அப்பவே கழட்டி எறிஞ்சுட்டேன். பாவி தம்பி அந்தாளு. அவன் என்ன ஆனாலும் எங்களுக்கு கவலை இல்லை. நீங்க உண்மையில என் வாழ்க்கையையும் என் பொண்ணு வாழ்க்கையையும் காப்பாத்தி கொடுத்து இருக்கீங்க மன்னிப்பு கேட்டு உங்க அக்கா சாவுக்கும் என் புள்ள சாவுக்கும் அர்த்தம் இல்லாம பண்ணிடாதீங்க” என்று கூறி அழுதார்.
அவரது மனதில் இருந்த ரணம் இன்றளவும் ஆறாமல் அப்படியே தான் இருந்தது. “வேற எதுவும் விஷயமாபா?” என கேட்டவரிடம் இல்லை என்று கூறியவன் அங்கிருந்து விடை பெற்று சென்றான்.
அவன் செல்லும் வரை அறையிலே இருந்த தான்வி அதன்பிறகு வெளியே வந்து தாயை சமாதனம் செய்துவிட்டு வேலைக்கு புறப்பட்டாள்.
அவளது வீட்டின் தெரு முனையில் மறைந்து நின்றிருந்த திகழ் தான்வி தன்னை கடந்து செல்லவும் பின்னே ஓடினான்.
தன்பின்னே திடீரென அரவம் உணரவும் வேகமாக திரும்பினாள் தான்வி. அவனை அவ்விடத்தில் கண்டதும் அதிர்ந்தவள் விருவிருவென நடந்திட ஆரம்பித்தாள்.
“ஏய் நில்லு எதுக்கு இப்போ என்னை வேணும்னே அவாய்ட் பண்ற?”
“வேணும்னே அவாய்ட் பண்ற அளவுக்கு நமக்குள்ள எதுவும் இல்ல சார்”
“ஏய் என்ன கொழுப்பா அங்க என் அம்மா என்னோட கல்யாண பேச்சு எடுக்கவும் உங்க மருமகளை கூட்டிட்டு வரேனு சொல்லி உன்னை பார்க்க வந்தால் நீ என்ன அப்போ போலவே இப்பையும் மெட்டு பண்ற”
“மருமகளா?” என்று அவனை முறைத்துப் பார்த்துவிட்டு விருவிருவென சென்றுவிட்டாள்.
“அடகடவுளே இவக்கிட்ட கொஞ்சம் ஓவரா தான் ஆட்டிடியூட் காட்டிட்டமோ? இனி எத்தனை மாசம் பின்னாடியே சுத்த விடப் போறாளோ?” என்று புலம்பியபடி “ஏய் குள்ள கத்திரிக்காய் நில்லு” என்று கத்தியபடி அவள் பின்னே ஓடினான் திகழ்முகிலன்.
முற்றும்